Tuesday, December 6, 2016

ஜெயலலிதாவுக்கு பிடித்தமான யானைகள்

jeya6


யானைகளின் மனதையும் அறிந்தவராக முதல்வர் ஜெயலலிதா திகழ்ந்தார். ஆண்டுதோறும் யானைகளுக்கு புத்துணர்வு முகாம் நடத்த உத்தரவிட்டார். யானைகள் தனக்கு மிகவும் பிடித்தமானவை என்பது குறித்து ஜெயலலிதாவே கூறியதாவது:
நீரும் நெருப்பும் திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக முதுமலை காட்டுக்குச் சென்றிருந்தேன். அந்தப் படத்தில் எம்ஜிஆர் கதாநாயகன். நாங்கள் இருவரும் நடித்த ஒரு காதல் காட்சியில் நிறைய யானைகள் இடம் பெற்றன. முதுமலைக் காட்டில் மரங்களை வீழ்த்துவது, அந்த மரங்களை வெட்டும் இடத்துக்கு கொண்டு சேர்ப்பது, வெட்டிய மரத் துண்டுகளை வரிசையாக அடுக்கி வைப்பது, பின்னர் அவற்றை லாரிகளில் ஏற்றுவது போன்ற பணிகளுக்காக யானைகள் பயன்படுத்தப்பட்டன.
அந்த யானைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, நன்றாகப் பழக்கப்படுத்தப்பட்டு மிகவும் சாதுவாக இருந்தன. அங்கே அவற்றில் மிகப்பெரிய யானை ஒன்று என் கவனத்தை ஈர்த்தது.
அந்த யானை குறித்து பாகன் சொன்னவை:
அந்தப் பாகனுக்கு மிகவும் அழகான இளம் மனைவி இருந்தாளாம். ஆனால், அவள் மிகவும் முன் கோபியாம். அண்மையில் பாகனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே ஏதோ மனப் பூசல் ஏற்பட, இருவருக்கும் இடையே வாய்ச்சண்டை வலுத்தது. இதனால், கோபம் அடைந்த பாகனின் மனைவி வீட்டைவிட்டு வெளியேறி, தனது பிறந்த வீட்டுக்குச் சென்றுவிட்டாள். அவளைச் சமாதானம் செய்வதற்காக எத்தனையோ முறை அங்கு சென்று பாகன் அவளைத் தன்னுடன் திரும்பி வருமாறு மன்றாடிக் கேட்டுக் கொண்ட போதிலும், அந்தப் பெண் பிடிவாதமாக வர மறுத்துவிட்டாள். இதனால், சோகத்துடன் பாகன் இருந்து வந்துள்ளான்.
ஓர் இரவு எப்படியோ அந்த யானை, பூட்டப்பட்டிருந்த சங்கிலியை அறுத்துக் கொண்டு, யாருக்கும் தெரியாமல், 15 மைல் தொலைவில் இருக்கும் பாகனின் மனைவி ஊருக்குப் புறப்பட்டுவிட்டது. நேராக அந்த ஊருக்குச் சென்று, பாகன் மனைவி இருக்கும் வீட்டை உடைத்து, அவன் மனைவியைத் தூக்கிக் கொண்டு வந்துவிட்டதாம்.
யானை என்பது அதிசயப் பிறவி. விலங்குகளில் ராஜா யானைதான் என்று குறிப்பிட்டார் ஜெயலலிதா.
குருவாயூர் உள்ளிட்ட பல கோயில்களுக்கு யானைகளை முதல்வர் ஜெயலலிதா தானமாக வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனியொரு பெண்ணாகக் களம் இறங்கி வெற்றி மேல் வெற்றி குவித்த ஜெயலலிதா

jeya4

ஆணாதிக்கம் நிறைந்த அரசியலில் தனியொரு பெண்ணாகக் களம் இறங்கி, சாமானியத் தொண்டர்கள் நிறைந்த அதிமுகவுக்கு வெற்றி மேல் வெற்றி பெற்றுத் தந்தவர் ஜெயலலிதா.
அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு, அந்தக் கட்சியைத் தொடர்ந்து இரண்டு முறை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியவர் ஜெயலலிதா. கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவர்களையும், தொண்டர்களையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த அரசியல் வித்தகர். "அம்மா என்ன சொன்னாலும் சரி...அம்மா எடுக்கும் முடிவு சரியாகத்தான் இருக்கும்' என்று கட்சியின் அனைத்து நிர்வாகிகளும் அவருக்குப் பின்னால் அணி திரண்டு நிற்கும் அளவுக்குக் கட்சியை தனது விரல் அசைவில் வைத்திருந்தவர்.
தவறுகளையும் திருத்தத் தயங்காதவர்: கடந்த 2001, பேரவைத் தேர்தலுக்கான அதிமுக அறிக்கை தயாரிப்பின் போது கட்சிக்குள் ஒரு விவாதம் எழுந்தது. விவசாயத் தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு தொடர்பாக பிரச்னை எழுப்பப்பட்டது. ஆண் தொழிலாளர்களுக்கு இணையாக பெண் தொழிலாளர்களுக்கும் கூலியை வழங்குவோம் என்ற அறிவிப்பை தேர்தல் அறிக்கையில் வெளியிடலாம் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.
ஆனால், இந்தக் கருத்தை அதிமுக நிர்வாகிகள் சிலர் மறுத்து, அது கிராமத்தில் சரியாக எடுபடாது என்றனர். இதுகுறித்து நேரடியாக விசாரித்து, அதன் உண்மை நிலையை அறிந்து அந்த அறிவிப்பை வெளியிடாமல் கைவிட்டார் ஜெயலலிதா.
கட்சியினரைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தாலும், அவர்கள் ஏதேனும் கருத்தைக் கூறினால் அதுதொடர்பாக மறுப்பு ஏதும் தெரிவிக்காமல் அதன் உண்மை நிலையை ஆய்ந்து அறிந்து அதைச் செயல்படுத்தத் தயங்காதவர்.
அதிமுக என்னும் பேரியக்கத்தைக் கட்டிக் காத்து அந்தக் கட்சியை எம்.ஜி.ஆருக்குப் பிறகு உயிர்ப்புடன் வைத்திருந்தவர் ஜெயலலிதா.
அவரது தலைமையில் அதிமுக குவித்த வெற்றி வரலாறுகள்:
1991 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் அதிமுக 168 இடங்களில் போட்டியிட்டு, 164 இடங்களில் வென்று ஆட்சியில் அமர்ந்தது.
1998 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 18 இடங்களில் வென்று, மத்தியில் வாஜ்பாய் தலைமையில் அமைந்த பாஜக கூட்டணி அரசில் அதிமுக அங்கம் வகித்தது.
2001 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 132 இடங்களில் வென்று அதிமுக ஆட்சியில் அமர்ந்தது.
2011 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் பொதுத் தேர்தலில் 150 இடங்களில் வென்று, ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்றார்.
தனித்து வெற்றி: 2011 ஆம் ஆண்டு செப்டம்பர்-அக்டோபர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், அனைத்து மாநகராட்சிகளிலும் அதிமுக வெற்றி பெற்றது.
2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தமிழகம்- புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் ஜெயலலிதாவின் தலைமையில் தனித்துப் போட்டியிட்ட அதிமுக, 37-இல் வென்று வரலாற்றுச் சாதனை படைத்தது. மேலும், மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சி என்ற பெருமையையும் பெற்றது.
2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை பொதுத் தேர்தலில், மொத்தமுள்ள 234 தொகுதிகளில் அதிமுக 227-இல் நேரடியாகவும், 7-இல் கூட்டணியில் இருந்த மற்ற கட்சிகள் அதிமுகவின் இரட்டை இல்லைச் சின்னத்திலும் போட்டியிட்டு 134 தொகுதிகளில் வென்று ஆட்சியைத் தக்கவைத்தது.
தமிழகத்தில் 1984 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆளுங்கட்சி மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்தது 2016-இல்தான்.
மேலும், 2016 ஜூன் மாதம் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் 4 உறுப்பினர்களை அனுப்பியதன் மூலம், நாடாளுமன்றத்தில் அதிமுகவின் பலம் 50 ( மக்களவையில் 37, மாநிலங்களவையில் 13) ஆக உயர்ந்தது. இது தமிழகத்தில் எந்த ஒரு கட்சியும் செய்யாத சாதனை.
இது மட்டுமன்றி, 2011 சட்டப்பேரவைத் தேர்தல், 2011 உள்ளாட்சித் தேர்தல், 2014 மக்களவைத் தேர்தல், 2016 சட்டப்பேரவைத் தேர்தல் எனத் தொடர்ச்சியாக 4 தேர்தல்களில் பெரும்பாலும் தனித்து நின்று ஜெயலலிதா தலைமையில் அதிமுக வெற்றிவாகை சூடியது.

தமிழகத்தை கலங்க வைத்த டிசம்பர்

தமிழகத்தை கலங்க வைத்த டிசம்பர்
தமிழகத்தைப் பொறுத்த வரை டிசம்பர் மாதம் இழப்பை ஏற்படுத்தும் மாதமாகவே அமைந்துள்ளது.
1972, டிசம்பர், 25- சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் ராஜாஜி காலமானார்.
1973, டிசம்பர், 24- தி.க. தலைவர் ஈ.வே.ரா., காலமானார்
1987, டிசம்பர், 24- முதல்வர் எம்.ஜி.ஆர்., காலமானார்.
2004, டிசம்பர், 26- சுனாமி எனும் பேரலை தாக்கி தமிழகத்தில் பல உயிர்கள் பலியாயின
2015, டிசம்பர், 1- சென்னை, கடலூர் பகுதிகளில் பெருமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இறந்தனர்.
2016, டிசம்பர், 5- முதல்வர் ஜெயலலிதா காலமானார்.

ஜெயித்துக்காட்டிய ஜெ.,



அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும்,அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே''
என்ற பாரதியார் வரிகளுக்கு ஏற்ப வாழ்ந்து காட்டியவர் தான் ஜெயலலிதா. அசாத்திய துணிச்சலுடன் சினிமா, அரசியல் என பல துறைகளிலும் தடம் பதித்தார். காலத்தை வென்று காவியம் படைத்த இவர், தமிழக வரலாற்றில் தனக்கென தனி இடம் பிடித்தார். தமிழக முதல்வராக ஆறு முறை பதவி வகித்தவர்; இந்தியாவின் நீண்டகாலம் பதவி வகித்த பெண் முதல்வர்களில் 2வது நபர்; 29 ஆண்டுகளாக அ.தி.மு.க., வின் பொதுச்செயலர்; தமிழகத்தின் முதல் பெண் எதிர்க்கட்சி தலைவர், சினிமாவிலும் வெற்றிக்கொடி நாட்டியவர்; ஏழு மொழிகளில் சரளமாக பேசத் தெரிந்தவர்; திருமணமாகாத பெண் தலைவர்; தைரியமான பெண்மணி; 'அம்மா' என அவரது ஆதரவாளர்களால் அழைக்கப்படுபவர் என பல சாதனைகளை கொண்டிருந்தவர் முதல்வர் ஜெயலலிதா. கர்நாடகாவின் மைசூருவில், 1948 பிப்., 24ல் ஜெயலலிதா பிறந்தார். ஜெயலலிதா இரண்டு வயதிலேயே தன் தந்தை ஜெயராமை இழந்தார். பின் அவரின் அம்மா மற்றும் தாய்வழி தாத்தா--பாட்டி வாழ்ந்த பெங்களூருவுக்குச் சென்றார். இங்கு தங்கியிருந்த குறுகிய காலத்தில், சில ஆண்டுகள், 'பிஷப் காட்டன் பெண்கள் உயர்நிலை பள்ளியில்' பயின்றார். ஜெயலலிதா, மூன்று வயதில் இருந்தே பரதநாட்டியத்திலும், கர்நாடக இசையிலும் பயிற்சி பெற்றார். மோகினி ஆட்டம், கதக், மணிபுரி ஆகிய பாரம்பரிய நாட்டியங்களிலும் நன்கு தேர்ச்சி பெற்றவர். பரத நாட்டியக் கலையில் நுாற்றுக்கணக்கான நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். வெள்ளித் திரையில் அவரது தாய்க்கு நடிக்க வாய்ப்புக் கிடைத்ததால், சென்னை சென்றார். ஜெயலலிதா சென்னையிலுள்ள, 'சர்ச் பார்க் ப்ரேசென்டேஷன் கான்வென்ட்டில்' மெட்ரிக்குலேஷன் படிப்பை நிறைவு செய்தார். பள்ளி இறுதி வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்றதால், உயர்கல்வி படிக்க மத்திய அரசின் ஸ்காலர்ஷிப் கிடைத்தது. ஆனால் குடும்ப சூழல் காரணமாக சினிமாத் துறையில் நுழைய நேரிட்டது. 15 வயதிலேயே நடிக்கத் தொடங்கினார். அரசியல் அமர்க்களம் தமிழக முதல்வராக இருந்த, எம்.ஜி.ஆரின் வழிகாட்டுதல்படி, 1982ல் அ.தி.மு.க., வின் அடிப்படை உறுப்பினராக சேர்ந்தார். 1983ல் கொள்கை பரப்புச் செயலரானார். 1983ல் நடந்த திருச்செந்துார் இடைத்தேர்தலில், பிரசார பொறுப்பை ஏற்றார். முதல் பணியை வெற்றிகரமாக முடித்து, வேட்பாளரை வெற்றி பெற வைத்தார். இதையடுத்து, 1984ல் முதன்முறையாக ராஜ்யசபா எம்.பி., ஆனார். 1989ல் போடி சட்டசபை தொகுதியில் வெற்றி பெற்று, கடந்த 1987ல் எம்.ஜி.ஆர்., மறைவுக்குப் பின், ஜெ., அணி மற்றும் ஜானகி அணி என அ.தி.மு.க., இரண்டாக பிளவுபட்டது. இதன் விளைவாக, தேர்தல் கமிஷனால் 'இரட்டை இலை' சின்னம் முடக்கப்பட்டது. 1989ல் நடந்த சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க., அணி, 'சேவல்' சின்னத்தில் தனித்து போட்டியிட்டது. 27 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது. போடி தொகுதியில் வெற்றி பெற்ற ஜெயலலிதா முதல் பெண் எதிர்க்கட்சி தலைவரானார். 1989 பிப்ரவரியில், அ.தி.மு.க., மீண்டும் ஒன்றிணைந்தது. ஜெயலலிதா பொதுச்செயலரானார். 'இரட்டை இலை' சின்னம் மீட்கப்பட்டது. தமிழக சட்டசபைக்கு நடந்த மருங்காபுரி, மதுரை கிழக்கு, பெரணமல்லுார் ஆகிய இடைத் தேர்தல்களில் அ.தி.மு.க.,வுக்கு வெற்றி தேடித் தந்தார். முதன்முறை முதல்வர்
1991ல் நடந்த சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில், அ.தி.மு.க, கூட்டணி, 225 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஜெயலலிதா பர்கூர் மற்றும் காங்கேயம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். இதையடுத்து முதன்முறையாக தமிழகத்தின் முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றார். தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப் பட்ட தமிழத்தின் முதல் பெண் முதல்வர், இளம் முதல்வர், 43, என்ற பெருமையை பெற்றார்.
அதே ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலிலும்,

அ.தி.மு.க., கூட்டணியை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள, 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வைத்து சாதனை படைத்தார். 1996 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., தோல்வி அடைந்தது. 168 இடங்களில் போட்டியிட்ட, அ.தி.மு.க., வெறும் நான்கு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. பின், 1998 லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணி 30 தொகுதிகளில் வெற்றியடைந்தது. இதற்கு ஜெயலலிதா பெரும் பங்கு வகித்தார். 2001ல் நடந்த சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணி, 234 தொகுதிகளில், 195 தொகுதிகளை கைப்பற்றி மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. ஜெயலலிதா இரண்டாவது முறையாக முதல்வரானார். 2006 தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணி 68இட ங்களை மட்டுமே கைப்பற்றியது. இதையடுத்து எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்றார்.



3வது முறையாக முதல்வர்:




எதிர்க்கட்சியாக இருந்த போது, அப்போதைய தி.மு.க. ஆட்சியை எதிர்த்து தொடர் போராட்டம், ஆர்ப்பாட்டம், அறிக்கைகள் மூலம் ஜெயலலிதா கட்சியை வழி நடத்தினார். கோவை, திருச்சி, மதுரை ஆகிய பிரமாண்ட பொதுக்கூட்டங்களை நடத்தினார். இதன் பின், 2011ல் நடந்த சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணி 203 இடங்களை கைப்பற்றி சரித்திர வெற்றி பெற்றது. அ.தி.மு.க., மட்டும் தனியாக, 150 தொகுதிகளை கைப்பற்றியது. இதையடுத்து, 2011, மே 16ல் மூன்றாவது முறையாக தமிழக முதல்வராக பதவியேற்றார். இந்த ஆட்சிக் காலத்தில் நடந்த திருச்சி மேற்கு, சங்கரன்கோவில் மற்றும் புதுக்ேகாட்டை, ஏற்காடு, ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பெற்றது. 2014 லோக்சபா தேர்தலில் தனியாக போட்டியிட்ட, 39 தொகுதிகளில், 37 இடங்களில் அ.தி.மு.க.,வை வெற்றி பெற வைத்தார். தடைகளை மீறி... கடந்த, 2014 செப்., 27ல் சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு, கர்நாடக சிறப்புநீதிமன்றத்தால் நான்கு ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதையடுத்து முதல்வர் பதவியை இழந்தார். 22 நாட்களுக்குப் பின் ஜாமினில் வெளிவந்தார்.தீர்ப்பை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில்மேல்முறையீடு செய்தார். 2015 மே 11ல் கர்நாடக ஐகோர்ட் இவரை விடுதலை செய்து தீர்ப்புவழங்கியது. இதையடுத்து மே 23ல் முதல்வராக பதவியேற்றார். 2016 சட்டசபை தேர்தலில் 227 இடங்களில்அ.தி.மு.க., தனித்து போட்டியிட்டது.இதில் 134 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தார். எம்.ஜி.ஆர்., க்குப்பின் தொடர்ந்து இரண்டாவது முறையாக முதல்வராக
பதவியேற்று சாதித்தார்.



கடந்து வந்த பாதை





1948: மைசூருவில் பிப்., 24ம் தேதி பிறந்தார்.
1961: 'எபிஸில்' என்ற ஆங்கில படம் மூலமாக திரையுலகுக்கு அறிமுகமானார்.
1964: கன்னட படத்தில் அறிமுகம்
1965: வெண்ணிற ஆடை என்ற படத்தின் மூலம் தமிழ் படங்களில் அறிமுகம்
1965: தெலுங்கு படத்தில் அறிமுகம்
1968: இந்தி படத்தில் அறிமுகம்
1982: எம்.ஜி.ஆர்., துவக்கிய அ.தி.மு.க., வில் உறுப்பினரானார்.
* 'பெண்ணின் பெருமை' என்ற தலைப்பில் முதன்முறையாக கட்சித் கூட்டத்தில் உரை.
1983: திருச்செந்துார் இடைத்தேர்தலில் அ.தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து முதன்முறையாக



தேர்தல் பிரசாரம்.





1983: கொள்கை பரப்பு செயலராக எம்.ஜி.ஆரால் நியமனம்.
1984 - 89: ராஜ்யசபா எம்.பி.,
1984: சட்டசபை தேர்தலில் எம்.ஜி.ஆர்., வெளிநாட்டில் சிகிச்சை. ஜெ., வின் சூறாவளி சுற்றுப்
பயணத்தால் அ.தி.மு.க., வெற்றி.
1987: எம்.ஜி.ஆர்., மறைவுக்குப் பின் அ.தி.மு.க., இரண்டாக பிரிவு. இரட்டை இலை சின்னம் முடக்கம்.
1989: சட்டசபை தேர்தலில் வெற்றி. முதல் பெண் எதிர்க்கட்சி தலைவரானார்.
* அ.தி.மு.க., மீண்டும் ஒன்றானது. இரட்டை சிலை சின்னம் மீண்டும் ஒதுக்கீடு. ஜெ., பொதுச் செயலர் ஆனார்.
1991: முதல் முறையாக தமிழக முதல்வர். தேர்தல் மூலம் வெற்றி பெற்ற முதல் பெண் முதல்வர், இளம் முதல்வர் என்ற பெருமை பெற்றார்.
1991: லோக்சபா தேர்தலில் இவரது தலைமையிலான கூட்டணி 39 இடங்களிலும் வெற்றி.
1996: எதிர்க்கட்சி தலைவர்
2001: 2வது முறையாக தமிழக முதல்வர்.
2002 : 3வது முறையாக தமிழக முதல்வர்.
2006: எதிர்க்கட்சி தலைவர்
2011: 4வது முறையாக தமிழக முதல்வர்.
2014: செப்., : சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை.
2015 மே: விடுதலை
2015 மே: 5வது முறையாக தமிழக முதல்வர்.
2016 : 6வது முறையாக தமிழக முதல்வர்.



6 முறை முதல்வர்





1) 1991 ஜூன் 24 முதல் 1996 மே 12 வரை
2) 2001 மே 14 முதல் செப்., 21 வரை
3) 2002 மார்ச் 2 முதல் 2006 மே 12 வரை
4) 2011 மே 16 முதல் 2014 செப்., 27 வரை
5) 2015 மே 23 முதல் - 2016 மே 22
6) 2016 மே 23 முதல் நேற்று வரை

எதிர்க்கட்சித்தலைவர்


1989 பிப்., 9 முதல் டிச., 12 வரை
2006 மே 29 முதல், 2011, மே 13 வரை



ராஜ்யசபா எம்.பி.,





1984 ஏப்., 3 முதல் 1989 ஜன., 28 வரை எம்.எல்.ஏ.,
1) 1989 ஜன., 27 முதல், 1991 ஜன., 30 வரை
2) 1991 ஜூன் 24 முதல், 1996 மே 12 வரை
3) 2002 மார்ச் 2 முதல், 2006 மே 11 வரை
4) 2006 மே 11 முதல், 2011 மே 13 வரை
5) 2011 மே 14 முதல், 2014 செப்., 27 வரை
6) 2015 ஜூன் 27 முதல், 2016 மே 18
7) 2016 மே, 19 முதல்



04.தேர்தல் களத்தில்





ஆண்டு தொகுதி முடிவு வித்தியாசம்
1989 போடி வெற்றி 28,731
1991 பர்கூர் வெற்றி 37,215
1991 காங்கேயம் வெற்றி 33,291
1996 பர்கூர் தோல்வி 8,366
2002 ஆண்டிபட்டி வெற்றி (இடைத்தேர்தல்) 41,201
2006 ஆண்டிபட்டி வெற்றி 25,186
2011 ஸ்ரீரங்கம் வெற்றி 41,848
2015 ஆர்.கே.நகர் வெற்றி (இடைத்தேர்தல்) 1,41,062
2016 ஆர்.கே.நகர்., வெற்றி 39,545
2001 தேர்தலில் நான்கு தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்தார். அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன.

2வது இடம் இந்தியாவில் பதவி வகித்த பெண் முதல்வர்களில் நீண்டகாலம் பதவியில் இருந்தவர்களின் பட்டியலில் ௨வது இடத்தில் ஜெயலலிதா உள்ளார். இவர், நேற்றுடன் சேர்த்து 5,௨௪4 நாட்கள் தமிழக முதல்வராக இருந்தார். முதலிடத்தில் டில்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் (5,504) உள்ளார். ஜெயலலிதா முதலிடம் பெற வாய்ப்பிருந்தது. ஆனால் காலம் கைகொடுக்கவில்லை.

குருவை மிஞ்சினார்: ஜெயலலிதாவின் அரசியல் ஆசான் எம்.ஜி.ஆர்., கூட தனித்து போட்டியிட தயங்கினார். ஆனால், 2014ல் நடந்த லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., தனித்து போட்டியிடும் என்ற துணிச்சலான முடிவை எடுத்தார் ஜெயலலிதா. புதுச்சேரி சேர்த்து மொத்தம் 40 இடங்களில் போட்டியிட்டு, 37 இடங்களில் வென்ற அ.தி.முக., லோக்சபாவில் மூன்றாவது பெரிய கட்சி என்ற அந்தஸ்தை பெற்றது.

நீங்கள் செய்வீர்களா... பிரசாரத்தின் போது மக்களிடம் கேள்வி கேட்டு அவர்களிடம் இருந்தே பதிலை பெறும் புது 'டிரெண்டை' ஜெயலலிதா பிரசாரத்தில் அறிமுகம் செய்தார். 'நீங்கள் செய்வீர்களா' என இவர், கேட்க, மக்களும் 'செய்வோம்' என ஓட்டுகளை தவறாமல் அளிக்க, வெற்றி மேல் வெற்றி பெற்றார்.

ஜெ., மறைவுக்கு மத்திய அரசு ஒரு நாள் துக்கம்


புதுடில்லி: முதல்வர் ஜெ., காலமானதை தொடர்ந்து, இன்று ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதேபோல், இன்று ஒரு நாள் கர்நாடகாவிலும், துக்கம் அனுசரிக்கப்படும் என அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 7 நாள் அனுசரிக்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது. 3 நாள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வி டுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பீஹார், கேரளா, புதுச்சேரியில் ஒரு நாள் விடுமுறை வழங்கப்படும் என அந்தந்த மாநில அரசுகள் அறிவித்துள்ளன.

ஜெயலலிதாவின் உடல் எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் மாலை 4.30 மணிக்கு நல்லடக்கம்

சென்னை,



முதல் அமைச்சராக இருந்த ஜெயலலிதாவின் உடல் எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் மாலை 4.30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும் என தகவல் தெரிவிக்கின்றது.

இன்றிலிருந்து 7 நாட்களுக்கு அரசு துக்கம் அனுசரிக்கப்படும். தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்படும். அவரது உடல் காலை 4.30 மணிக்கு ராஜாஜி அரங்கில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும்.

அதன்பின் இன்று மாலை முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இதனை அடுத்து அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ராஜாஜி மண்டபத்தில் ஜெயலலிதாவின் உடல் வைக்கப்பட்டது: பொதுமக்கள் அஞ்சலி

சென்னை,


பொதுமக்கள் அஞ்சலிக்காக முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் உடல் ராஜாஜி மண்டபத்தில் வைக்கப்பட்டு உள்ளது


முதல்–அமைச்சர் ஜெயலலிதா நேற்று இரவு 11.30 மணி அளவில் மரணம் அடைந்தார். இதையொட்டி அப்பல்லோ ஆஸ்பத்திரி முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இதுபற்றி அறிந்த அ.தி.மு.க. தொண்டர்கள் ஆஸ்பத்திரியில் திரளாக குவிந்தனர்.இதனிடையே ஆஸ்பத்திரியில் இருந்து ஜெயலலிதா உடல் வாகனத்தில் ஏற்றப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த தொண்டர்கள் ஜெயலலிதாவின் உடலை பார்த்து கதறி அழுதனர்.


பின்னர் ஜெயலலிதா உடல் போயஸ் கார்டனில் உள்ள அவருடைய இல்லத்துக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது. அங்கு இறுதிச்சடங்குகள் நடைபெற்றது. அதன்பிறகு பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக ஜெயலலிதாவின் உடல் ராஜாஜி மண்டபத்திற்கு காலை 5.50 மணியளவில் போயஸ் கார்டனில் இருந்து எடுத்துச்செல்லப்பட்டது.


ஆயுதம் தாங்கிய போலீஸ் வாகனங்களுடன் ஜெயலலிதா உடல் எடுத்துச்செல்லப்பட்டது. ஜெயலலிதா வழக்கமாக கோட்டைக்கு செல்லும் கடற்கரை சாலை வழியாகவே அவரது உடல் எடுத்துச்செல்லப்பட்டது. காலை 6.10 மணியளவில் அவாது உடல் ராஜாஜி அரங்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.


ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அதிகாலை முதலே பொதுமக்கள் அதிமுக தொண்டர்கள் ராஜாஜி அரங்கில் குவிந்துள்ளனர். இன்னும் மக்கள் கூட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், ராஜாஜி அரங்கில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.

NEWS TODAY 31.01.2026