Tuesday, December 6, 2016

ஜெயலலிதா இறப்பு அறிக்கை - முழு விபரம்


ஜெயலலிதா இறப்பு அறிக்கை - முழு விபரம்


தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அகால மரணத்தையடுத்து அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் 12 மணியளவில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அவ்வறிக்கையின் தமிழ் சாரம் இது:

தமிழக முதல்வர் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா இன்று (5.12.16) இரவு 11.30 மணி அளவில் இயற்கை எய்தினார் என்பதை சொல்லவியலா துயரத்தோடு பகிர்ந்துகொள்கிறோம்.

மாண்புமிகு புரட்சித்தலைவி செல்வி ஜெயலலிதா காய்ச்சல், நீர்ப்போக்கு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு 22.9.2016 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மாண்புமிகு முதல்வருக்கு தொடர்ந்து அளிக்கப்பட்ட பல்நோக்கு சிகிச்சை காரணமாக அவரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. வாய் வழியே உணவு எடுத்துக்கொள்ளும் அளவிற்கு உடல்நிலை சீரடைந்து வந்தது. இதனடிப்படையில் மாண்புமிகு முதல்வர் மேம்படுத்தப்பட்ட தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து உயர் சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டார். அங்கே எங்களின் மருத்துவ நிபுணர் குழு அவரின் உடல்நிலையை தீவிரமாக கண்காணித்து வந்தது.

இந்நிலையில், திடீரென டிசம்பர் 4, 2016-ல் துரதிர்ஷ்டவசமாக மாண்புமிகு முதல்வர் இதய துடிப்பு முடக்கத்தால் பாதிக்கப்பட்டார். அருகிலேயே தீவிர சிகிச்சைப் பிரிவு மருத்துவர் இருந்ததால், முதல்வருக்கு உடனே சர்வதேச அளவில் மிகவும் மேம்படுத்தப்பட்ட முறையான எக்மோ முறையில் சிகிச்சையளிக்கப்பட்டது. அவரின் உயிரைக் காப்பாற்ற முடிந்த அளவில் முயற்சி செய்து சிறந்த சிகிச்சை முறைகள் பின்பற்றப்பட்டன. ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று (5.12.2016) இரவு 11.30 மணியளவில் அவர் உயிரிழந்தார்.

அப்போலோ குழுமத்தின் ஒவ்வொரு உறுப்பினரும், ஊழியரும், மருத்துவரும் தங்களால் இயன்ற அளவிற்கு மாண்புமிகு முதல்வரை அக்கறையாக பார்த்துக்கொண்டார்கள். நவீன சிகிச்சை முறைகளையும், தொழில்நுட்பங்களையும் கொண்டு மாண்புமிகு முதல்வரை ஆற்றுப்படுத்த ஓய்வின்றி உழைத்தோம். இந்திய தேசத்திற்கும், தமிழக மக்களுக்கும் நேர்ந்த இந்த அளவுகடந்த துயரத்தில் நாங்களும் கனத்த இதயத்தோடு பங்கெடுத்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் இறப்பு சான்றிதழ்







முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் செப்டம்பர் 22-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவர், டிசம்பர் 5ம் தேதி இரவு 11.30 மணியளவில் மரணம் அடைந்தார். பொது மக்களின் அஞ்சலிக்காக அவரது உடல் ராஜாஜி அரங்கத்தில் இன்று வைக்கப்பட்டுள்ளது. நீண்ட வரிசையில் இருந்து பொது மக்கள் ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

சென்னை மாநகராட்சி இணையதளத்தில் ஜெயலலிதாவின் இறப்பு சான்றிதழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் அவரது குடும்ப விவரங்கள் மற்றும் முகவரி, இறப்பு நேரம் உள்ளிட்ட விவரங்கள் உள்ளன. அந்த சான்றிதழில் சென்னை மாநகராட்சி சுகாதார அலுவலர் (பொறுப்பு) டாக்டர் செந்தில்நாதன் கையெழுத்திட்டுள்ளார். இந்த சான்றிதழ் 6-ம் தேதி வழங்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மறைந்தார் ஜெயலலிதா! இரும்பு மனுஷியை இழந்தது தமிழகம்



தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைந்தார்..!

அப்போலோ மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 68. டிசம்பர்5-ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு மருத்துவர்களின் தீவிர சிகிச்சை பலனின்றி ஜெயலலிதா காலமானதாக அப்போலோ மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா செப்டம்பர் மாதம் 22-ம் தேதி இரவு திடீர் உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் என்று சொல்லி அனுமதிக்கப்பட்டவர் நுரையீரல் பிரச்னை, சுவாசக் கோளாறு, நோய்த் தொற்று என பல உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை குணமடையவேண்டி தமிழகம் முழுக்க அ.தி.மு.க. தொண்டர்கள் பல்வேறு வழிபாடுகளை நடத்தி வந்தனர்.

ஜெயலலிதா உடல்நிலை தேறிவருவதாக அப்போலோ மருத்துவர்கள் சொல்லிவந்த நிலையில், டிசம்பர் 4-ம் தேதி திடீரென அவருக்கு இதய முடக்கம் ஏற்பட்டதாகச் சொன்னார்கள். இதைத் தொடர்ந்து ஜெயலலிதா தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டதாகவும் தகவல் தெரிவித்தார்கள். இந்நிலையில் தொடர் தீவிர சிகிச்சை பலனளிக்காமல் டிசம்பர் 5-ந் தேதி இரவு 11:30 மணிக்கு காலமானார் ஜெயலலிதா.

தமிழகம் கடந்து உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மத்தியிலும் இந்திய அரசியல் அரங்கிலும் இந்தச் செய்தி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஜெயலலிதா மறைவு, தமிழர்களுக்கு மட்டுமல்லாது உலகம் முழுக்கவே அதிர்வலைகளை உண்டாக்கியிருக்கிறது.



திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவரங்கத்தை பூர்வீகமாகக் கொண்ட ஜெயலலிதா, 1948-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி கர்நாடக மாநிலம், மேல்கோட்டை எனும் கிராமத்தில் பிறந்தவர். பள்ளி செல்லும் பிராயத்திலேயே நடிக்கத் தொடங்கி, தமிழர்களின் அபிமான நடிகையாக தடம் பதித்தார். அவர் மனதுக்குப் பிடித்துதான் நடிப்புத் தொழிலை தேர்ந்தெடுத்தார் என்று சொல்வதற்கில்லை... ஆனால், அதில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து கொண்டார். தன் முழு உழைப்பையும் கொட்டினார். ஆம், இதுதான் அவர் இயல்பே! எதையும் அவரால் அரை மனதுடன் செய்ய முடியாது. இதை அவர் ஒரு நேர்காணலிலும் பகிர்ந்திருக்கிறார்.

இதனால்தான் தமிழ் மொழி மட்டுமல்லாது தெலுங்கு, கன்னட மொழி சினிமாக்களிலும் முத்திரைப் பதித்து 120-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் முன்னணிக் கதாபாத்திரங்களில், அவரால் நடிக்க முடிந்தது.



அரசியல் அரங்கில் அ.தி.மு.க உறுப்பினராக அடியெடுத்து வைத்த ஜெ. 1984-ஆம் ஆண்டு முதல் 1989-ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிலும், அவர் மிளிர்ந்தார். அவரது பேச்சாற்றலை மூத்த ஊடகவியலாளர் குஷ்வந்த் சிங் பாராட்டி இருக்கிறார். தன் தாய் சந்தியாவுக்கு அடுத்து இந்திரா காந்தியை ஜெயா மிகவும் நேசித்தார். தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் இறப்புக்குப் பின்னர் அவரது அரசியல் வாரிசாக தொண்டர்களால் தேர்வு செய்யப்பட்டவர் ஜெயலலிதா. அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, இறக்கும்வரை அக்கட்சியின் நிரந்தரப் பொதுச்செயலாளராக இருந்தார்.



1989-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுக்குக் கிடைத்த எதிர்க்கட்சி அந்தஸ்தின் மூலம் தமிழகத்தின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவரானார். 1991 தேர்தலில் வெற்றி பெற்று, முதல் முறையாக முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதேபோல, 2001, 2011 மற்றும் 2016 ஆண்டு தேர்தல்களில் வெற்றி பெற்று தமிழக முதல்வராக தேர்வானார். 2001-’06 காலகட்டத்தில் டான்சி வழக்கு காரணமாக முதல்வர் பதவியிலிருந்து விலக நேர்ந்தது. மேல் முறையீட்டில் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு மீண்டும் முதல்வரானார். அதே போல் 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, சிறை செல்ல நேர்ந்ததால், முதல்வர் பதவியை இழந்தார். பின்னர் அதிலிருந்து விடுவிக்கப்பட்டதால், 2015 மே மாதம், மீண்டும் தமிழக முதல்வரானார்.

2016 தேர்தலில் மீண்டும் தமிழக முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழக அரசியலில், எம்.ஜி.ஆர் காலத்துக்குப் பின்னர், ஒரு தலைவர் தொடர்ச்சியாக இருமுறை ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது என்றால், அது ஜெயலலிதாதான்! தன்னம்பிக்கையும், மிகுந்த துணிச்சலும் கொண்ட ஜெயலலிதா தமிழகத்தின் முதல்வராக 6 முறை பதவி வகித்தவர். தற்போது முதல்வராக இருக்கும்போதே மரணமடைந்துள்ளார்.

‘புரட்சித் தலைவி’ என்றும், ‘அம்மா’ என்றும் அ.தி.மு.க-வினரால் கொண்டாடப்படும் செல்வி. ஜெ.ஜெயலலிதா உயிரிழந்தது அ.தி.மு.க. தொண்டர்களுக்கு நிச்சயம் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவர்களின் துக்கத்தில் விகடனும் பங்கெடுக்கிறான்.


ஜெயலலிதாவின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்!

இனி ஜெயலலிதாவை எப்போதெல்லாம் மிஸ் செய்வோம் தெரியுமா?

ஜெயலலிதா
ஒற்றை ஆள், எத்தனை அவதூறுகளை தாங்க முடியும்? எவ்வளவு பகடிகளை புறந்தள்ள முடியும்? எத்தனை விமர்சனங்களை எதிர்கொள்ள முடியும்? எவ்வளவு பாரத்தை சுமக்க முடியும்? முடியும் நீங்கள் ஜெயலலிதாவாக இருந்தால்...! சந்தேகமே இல்லை. இந்திய அரசியலின் இரும்புப் பெண்மணிதான் இவர். தன் ஆளுமையால் தமிழகம் தொடங்கி உலகளாவிய அரசியல்வாதிகள் வரை அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர். கண்டிப்பாய் இது ஈடு செய்ய முடியாத இழப்புதான். இந்த இழப்பினால் நேர்ந்த வெற்றிடத்தை இனி நிறைய தருணங்களில் நாம் உணரத்தான் போகிறோம்.

பொதுக்குழு கூட்டங்கள்:

தமிழகத்தின் மிகப்பெரிய கட்சியின் தலைவர் தான். கூப்பிட்ட குரலுக்கு ஓடி வர ஆயிரம் பேர் இருக்கிறார்கள்தான். ஆனாலும் தீராத் தனிமையில்தான் உழன்றார் ஜெ. 'நான் யாரையும் சார்ந்திருந்ததில்லை. அதற்கான கொடுப்பினை எனக்கு கடைசி வரை இல்லை. இதுதான் என் விதி, என் தலையெழுத்து' - இது 2013-ல் நடந்த கட்சி பொதுக்குழு கூட்டத்தில் ஜெ. நெகிழ்ந்து சொன்ன வார்த்தைகள். தன் தலைமையில் நடக்கும் கூட்டத்திலேயே தான் மனதளவில் தனியாள்தான் என்பதை உருக்கமாக வெளிப்படுத்திய தலைவர் ஜெயலலிதாவாக மட்டுமே இருக்கும். அவருக்கு யாருமில்லை என்ற எண்ணம்தான் 'உங்களுக்கு நாங்க இருக்கோம்' என கோடிக்கணக்கான பேரை அவர் பின்னால் திரள வைத்தது. இனி யார் இருக்கிறார்கள் அவர்களை வழிநடத்த?

சினிமா:

எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் என மூவேந்தர்கள் சினிமா ராஜ்ஜியத்தை கட்டியாண்ட காலம். வெண்ணிற ஆடை படத்தில் துறுதுறு பெண்ணாய் அறிமுகமாகிறார் ஜெ. அப்போது யாருக்கும் தெரியாது அடுத்த ஐம்பது ஆண்டுகள் சினிமாவுலகை மட்டுமல்ல, மொத்தத் தமிழகத்தையும் ஆளப் போகும் ராணி அவர் என. சினிமாவில் அவரின் இடம் சும்மா கிடைத்துவிடவில்லை. ஆண்டுக்கு சராசரியாய் பத்து படங்கள். 1968-ல் மட்டும் 21 படங்கள். இது பட்டி தொட்டி எல்லாம் கல்லா கட்டிய ஹீரோக்களுக்கே கஷ்டம்தான். வேகம், அதிவேகம் எல்லாம் தாண்டி மின்னல் வேக உழைப்பு. பெரும்பாலும் சில்வர் ஜுப்ளி படங்கள். தொடவே முடியாத ரெக்கார்ட் இது. ஜெ. தமிழ் சினிமாவின் சகாப்தம்.



சட்டமன்றம்:

எதிர்க்கட்சி ஆட்களால் சூழப்பட்ட அரங்கில் தனியொரு ஆளாக உங்களால் தைரியமாக செயலாற்ற முடியுமா? ஜெ.வால் முடியும். அந்த கெத்துதான் அவரின் சொத்து. 'நீங்கள் கஷ்டப்பட்டு காவலர்களை அனுப்பி, அவர்கள் பகீரத பிரயத்தனத்துக்குப் பின் கூச்சலிடும் எதிர்க்கட்சியினரை வெளியே தூக்கிச் செல்வார்கள். ஆனால் அவர்களை வெளியே அனுப்ப எனக்கு 'கச்சத்தீவு, மதுவிலக்கு' என இரு வார்த்தைகள் போதும். உங்கள் வேலையை நான் சிம்பிளாக்குகிறேன்' என நகையாடுவதாகட்டும், 'நான் இருக்கும் வரை இந்த இயக்கம் தமிழர் வாழ்வு செழிக்க பாடுபடும்' என கம்பீரக் குரலில் உரக்கச் சொன்னதாகட்டும் ஜெ. ஜெ.தான். அவரில்லாத சட்டமன்றம் எதிரி இல்லாத போர்க்களம் போல. இதை பரம வைரியான தி.மு.கவே ஒப்புக்கொள்ளும்.

தேர்தல் பிரசாரம்:

2011 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக தென் தமிழகத்தில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது அ.தி.மு.க. 'இந்தக் கூட்டமே வெற்றிக்கூட்டமாகிவிடுமோ' என ஆளுங்கட்சி தரப்பில் அத்தனை நெருக்கடிகள். அத்தனையையும் தாண்டி திரண்டார்கள் லட்சக்கணக்கான மக்கள். மேடையில் தோன்றிய ஜெ. கக்கிய அனல் வார்த்தைகள் ஒவ்வொன்றுக்கும் ஆர்ப்பரித்தது மக்கள் கூட்டம். அது இந்தத் தலைமுறை பார்த்திராத எழுச்சி. 2014. மக்களவை தேர்தல் சமயம். மொத்த இந்தியாவும் மோடி மந்திரம் உச்சரித்துக் கொண்டிருந்தன. ஒற்றையாளாய் களத்தில் நின்று 'மோடியா இந்த லேடியா என பார்த்துவிடுவோம்' என வாளைச் சுழற்றினார். 'செய்வீர்களா நீங்கள் செய்வீர்களா?' - காற்றில் இன்னமும் இருக்கிறது இந்த கர்ஜனை. விழுந்தன ஓட்டுகள். பின் நிகழ்ந்தது வரலாறு. இத்தனை ஆவேசமாக களமாடும் தலைவரை இனி தமிழகக் களம் காணுமா?

துணிச்சல் முடிவுகள்:

அரசியலுக்கென சில வரைமுறைகள் உண்டு. தலைவர்களுக்கே உண்டான சில தயக்கங்கள் உண்டு. ஆனால் ஜெ. விஷயத்தில் இவை செல்லுபடியாகாது. ஒற்றை முடிவை எடுத்து மொத்த தமிழகத்தையும் அதிரடிக்க அவருக்கு இரண்டு நிமிடங்கள் போதும். இதற்கு சாட்சியாய் வரலாறு முழுக்க விரவியிருக்கின்றன சம்பவங்கள். உண்மைதான். அவற்றில் சில சம்பவங்களின் மேல் கடுமையான விமர்சனங்கள் எல்லாருக்கும் உண்டு. ஆனால் எதற்கும் துணிந்தவர் என்ற அடையாளத்தை கடைசிவரை ஜெ. விட்டுத்தரவே இல்லை. மீடியாக்கள் சித்தரிக்கும் 'அதிரடி' என்ற வார்த்தைக்கு ஆல்டைம் சொந்தக்காரர் இவர். இப்படியான 'அதிரடிகள்' இனி தமிழக மக்கள் காணக் கிடைப்பது சந்தேகமே.



தனியே தன்னந்தனியே:

இந்திய அளவில் செல்வாக்கு இருக்கும் ஒரு தலைவரை சுற்றி கண்ணுக்குத் தெரிந்த அதிகார வட்டம் ஒன்று இருக்கத்தான் செய்யும். அதுதான் இயற்கை. ஆனால் ஜெ. எப்போதுமே தனித்துதான் இருந்தார் 'மனதளவில்'. டெல்லியோ, தமிழகமோ அவர் எடுப்பதுதான் முடிவு. 'வாழ்க்கையில் எது நடந்தாலும் நானே தனியாக அதை சந்தித்து, தனியாகவே முடிவு செய்து வந்திருக்கிறேன்' என தன் கட்சிப் பொதுக்குழுவில் அவர் பேசிய வார்த்தைகளே சாட்சி. ஆட்சி, அதிகாரம், வசதி என அத்தனை இருந்தும் மனதளவில் தனிமைப்பட்ட தலைவரை இனி வரும் தலைமுறையினருக்கு அதிசயமாக இருக்கும்!

சவால்:

சவால்கள் ஜெ.விற்கு மிகவும் பிடிக்கும். அவர் இறுதியாக வீற்றிருந்த இதே ராஜாஜி ஹாலில்தான் எம்.ஜி.ஆர் மறைவின்போது அவமானப்படுத்தப்பட்டார். உள்ளே நுழையக்கூட அனுமதி மறுத்தார்கள். அவமானம் அவருக்கு வைராக்கியத்தைக் கற்றுக்கொடுத்தது. வைராக்கியம் அவரை சவால்களை சந்திக்கக் கற்றுக்கொடுத்தது. பின் நிகழ்ந்ததெல்லாம் வரலாறு. 'ஆடம்பரச் செலவுகள் செய்வார்' என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியபோது நகைகளைத் துறந்தவர்தான். அதன்பின் இறுதிக்காலத்தில்தான் தொண்டர்களின் விருப்பத்திற்கேற்ப சின்னதாக நகை அணியத் தொடங்கினார். இப்படி எக்கச்சக்க வைராக்கிய நிகழ்வுகள் அவர் சுயசரிதை எங்கும் கொட்டிக் கிடக்கின்றன. ​​​​​​​



இந்திய அரசியல் அரங்கு:

1991-ல் தேசிய அளவில் கிடைக்கப் பெற்ற முக்கியத்துவம். அவரின் இறுதிக்காலம் வரை இம்மிக் குறையவில்லை. தேசியக் கட்சிகள் தேடி வந்து கூட்டணி வைப்பதாகட்டும், மூன்றாம் அணி அமைக்க வேண்டும் என பிற மாநிலக் கட்சிகள் கைகோர்ப்பதாகட்டும், ஜெ.வின் முக்கியத்துவம் நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டே இருந்தது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 2014 தேர்தலின்போது மூன்றாம் அணியின் பிரதமர் வேட்பாளராகவே பார்க்கப்பட்டார் ஜெ. தமிழகம் போன்றே பிற மாநிலங்களிலும் முடிவுகள் வந்திருந்தால் எதிர்ப்பார்க்காத மாற்றங்கள் நிகழ்ந்திருக்கக் கூடும். இந்திய அரசியலில் இவரின் வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது.

நேர்காணல்கள்:

ஜெ. அரசியலுக்கு வந்தபின் நிறைய பேட்டிகள் அளிப்பதில்லை. அதுவே அவர் கொடுக்கும் ஒவ்வொரு பேட்டியையும் ஸ்பெஷலாக்கியது. 'எனக்கு நாரி கான்ட்ராக்டர் மேல் க்ரஷ் இருந்தது' என கன்னம் சிவக்கக் கூறியது, ஆ ஜா ஷனம் பாடலை மெல்லிய குரலில் பாடியது என சிமி கேர்வாலுடனான நேர்காணல் அவரின் மென்மையான பக்கத்தைக் காட்டியது. அதே சமயம், 'எனக்கு உங்களோடு பேசியதில் சுத்தமாக மகிழ்ச்சியே இல்லை' என கரன் தாப்பரிடம் சிடுசிடுத்துவிட்டு மைக்கை வீசிவிட்டுப் போன நேர்காணல் அவரின் கோப முகத்தை காட்டியது. ஒளிவு மறைவில்லாமல் தோன்றியவற்றை பேசும் அவரின் நேர்காணல்களை இனி எக்காலத்திலும் பார்க்க வாய்ப்பில்லை.​​​​​​​



சர்வதேச தொடர்புகள்:

ஜெ.வின் மொழி வளமை அசாத்தியமானது. தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் என எல்லா மொழிகளிலும் சிக்ஸர் அடிக்கும் தில் லேடி. எதிர்கருத்துக்களை வலுவாக வைப்பார் ஜெ. ஆனால், அதையும் குறுக்கிடாமல் கேட்பார்கள் எதிராளி. இந்த ஆளுமைதான் சர்வதேச தலைவர்களையும் அவரைத் தேடி வர வைத்தது. உலகத்தின் பெரியண்ணனான அமெரிக்காவின் வெளியுறவுத்துறை மந்திரியையே இந்தியாவின் தென்கோடி தமிழகத்தில் கால் வைக்கச் செய்தது அவரின் ஆளுமைதான்!

இத்தனையையும் தாண்டி அவர் வெற்றிடத்தை உணர்வதற்கு ஒரு பெரிய காரணம் இருக்கிறது. ஏனென்றால்... அவர் ஜெயலலிதா! இவரைப் போல முன்னரும் ஒருவர் இல்லை... இனியும் ஒருவர் இருக்கப் போவது இல்லை!

ஜெயலலிதாவின் முதல் படமான வெண்ணிற ஆடையில் அவரின் முதல் வசனம், 'கடவுளே நீ எங்க இருக்க? எப்படி இருக்க? ஏன் இருக்க?' என்பதுதான். 51 ஆண்டுகள் கழித்து இந்தக் கேள்விகளுக்கு விடை தேடிச் சென்றிருக்கிறார்

-நித்திஷ்

VIKATAN,...... இவற்றைச் செய்யும் துணிச்சல் ஜெயலலிதாவிடம் மட்டுமே இருந்தது!

இவற்றைச் செய்யும் துணிச்சல் ஜெயலலிதாவிடம் மட்டுமே இருந்தது! 

ஜெயலலிதா
எம்.ஜி.ஆர் ஆரம்பித்த அ.தி.மு.க-வில் ஜெயலலிதா இணைந்தபோது, தமிழக அரசியலில் பெண்கள் என்ற பதமே பெரிய அளவில் மக்களுக்கு பரிச்சயம் இல்லாதது. அ.தி.மு.க-வில் நுழைந்து, தமிழக அரசியலில் வலிமை மிகுந்த முதல்பெண் என்ற பெருமையை ஜெயலலிதா பெற்றார். சினிமாவில், அரசியலில், ஆட்சிப் பதவியில் என பல துறைகளிலும் முன்னோடியாக இருந்த 'முதல் பெண்' என்ற எண்ணற்ற சாதனைகளைத் தக்க வைத்துக் கொண்டவர்.

தமிழ், ஆங்கிலம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி என ஜெயலலிதா, நடிகையாக இருந்த காலத்திலேயே பன்மொழிப் புலமையைப் பெற்றிருந்தார். அந்தக் காலத்திலே சரளமாக ஆங்கிலம் பேசக்கூடிய ஒரே சினிமா நடிகையாக ஜெயலலிதா திகழ்ந்தார். எம்.ஜி.ஆர் இறந்த பிறகு, அ.தி.மு.க இரண்டாக பிளவுபட்டது. இதையடுத்து 1989-ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க வெற்றி பெற்றது. ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க, 27 இடங்களைக் கைப்பற்றியது. இதன்மூலம் தமிழகத்தின் முதல் பெண் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழக சட்டமன்றத்துக்குள் முதல்முறையாக எதிர்க்கட்சித் தலைவராக நுழைந்தார். ஜெயலலிதா எதிர்க்கட்சி தலைவரான சில மாதங்களில், அ.தி.மு.க ஒன்றிணைந்தது. அப்போது முதல் அ.தி.மு.கவை வழி நடத்தி வரும், ஜெயலலிதா, எம்.ஜி.ஆருக்குப் பின்னர் அவரது அரசியல் வாரிசு தான்தான் என்பதை தொண்டர்கள் மூலம் நிரூபித்தார்.



1991-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க அமோக வெற்றிபெற்று, ஆட்சியைக் கைப்பற்றியது. தமிழகத்தில் ஜனநாயக முறையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றார். ஜெயலலிதா முதல்வராக இருந்த 1991-96 காலகட்டத்தில், ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கான 'தொட்டில் குழந்தை திட்டம்', அனைத்து மகளிர் காவல்நிலையம், காவல்துறையில் பெண்களுக்கு 30 சதவிகித இடஒதுக்கீடு, கல்வி, வேலைவாய்ப்பில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 69 சதவீத ஒதுக்கீடு என இந்தியாவுக்கே முன்னோடியாகத் திகழும் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களையும், பெண்களுக்கான மாபெரும் திட்டங்களையும் ஜெயலலிதா தொடங்கி வைத்து, மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக விளங்கினார்.



கடந்த 30 வருடங்களாக இந்தியாவின் சக்திவாய்ந்த பெண்களில் ஒருவராகத் திகழ்ந்த ஜெயலலிதா, தென் இந்தியாவின் வலிமை மிகுந்த பெண்களில் ஒருவராக விளங்கினார். கோடிக்கணக்கானத் தொண்டர்களை உறுப்பினர்களாகக் கொண்ட அ.தி.மு.க என்னும் மிகப்பெரிய கட்சியின் பொதுச் செயலாளராக 26 வருடங்களுக்கும்மேல் இருந்துள்ளார். ஜெயலலிதாவின் ஆளுமை, கட்சித் தொண்டர்கள் மட்டுமல்லாது, ஒட்டுமொத்த தமிழக மக்களிடமும் மிகுந்த பிரமிப்பை ஏற்படுத்தியிருந்தது. தமிழகத்தில் 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், எந்தக் கட்சியுடன் கூட்டணி வைக்காமல், அனைத்து 39 தொகுதிகளிலும் தனித்து நின்று, அ.தி.மு.க 37 மக்களவைத் தொகுதியைக் கைப்பற்றியது. தமிழக நாடாளுமன்றத் தேர்தல் வரலாற்றில், முதல் முறையாகும்.

37 தொகுதிகளை அ.தி.மு.க பிடிப்பதற்கு, ஜெயலலிதாவின் மக்களைக் கவரும், தேர்தல் பிரசாரம் மிகவும் முக்கியக் காரணமாக அமைந்தது. அதன் பின்னர் 2016-ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில், அனைத்து 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில், அ.தி.மு.க-வை முதல்முறையாக களமிறங்கச் செய்து, தனித்து நின்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது, ஜெயலலிதாவின் அரசியல் சாதுர்யத்திற்கு மிகப்பெரும் சான்றாகத் திகழ்கிறது.



32 ஆண்டுகளுக்குப் பின்னர், அதாவது எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது, 1984-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, ஆட்சியில் இருந்த ஒரு கட்சியே மீண்டும் ஆட்சியைப் பிடித்த பெருமையை ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க பெற்று மேலும் சாதனையைப் படைத்தது.

எண்ணற்ற சாதனைகளை தன்னகத்தே கொண்டுத் திகழ்ந்த, சாமான்ய மக்களும், சாதாரண தொண்டனும் அ.தி.மு.க-வில் எந்தநிலையையும் எட்டவைத்து, அவர்களுக்கான பதவி அங்கீகாரத்தை அளித்த சாதனை மிக்கத் தலைவி முதல்வர் ஜெயலலிதா. இத்தகைய பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி, லட்சக்கணக்கான பெண்களுக்கு அரசியல் முன்னோடியாக விளங்கிய ஜெயலலிதா என்றும் மகத்தான மாண்புமிக்க தலைவர் இன்று கோடிக்கணக்கான தொண்டர்களையும், தமிழக மக்களையும் மீளாத்துயரில் ஆழ்த்தி விட்டு, இப்பூவுலக வாழ்வில் இருந்து மீண்டு விட்டார்!

ஜெயலலிதா நேசித்த 5 பெண்கள்! #jayalalithaa

ஜெயலலிதா

ஒரு பெண்ணின் எல்லைகள் இவைதான் என வகுத்திருந்தவற்றைத் தகர்த்தெறிந்து சாதனை படைத்தவர் ஜெயலலிதா. அவரின் மறைவுக்குக் கட்சி பேதமின்றிப் பலரும் கண்ணீர் சிந்துவதற்கு முக்கியக் காரணம், Ôஒரு பெண்ணான நாம் இதைச் செய்யலாமா?Õ என்று எந்த இடத்திலும் தாழ்வு மனப்பான்மையை வெளிப்படுத்திக் கொள்ளாமல், தன் ஆளுமையை வளர்த்துக்கொண்டு நிகரில்லாத தலைமையாக விளங்கியதே! பல தலைவர்களோடு கைகோத்து தேர்தல் களத்தைச் சந்தித்து வெற்றி, தோல்விகளைப் பார்த்தவர். எப்போதும் தன் ஆளுமையைச் சரித்துக் கொள்ளாதவர்.
இத்தகைய பண்புகளைக் கொண்டிருந்த ஜெயலலிதா, தன் வாழ்க்கையில் நேசித்த பெண்களில் ஐந்து பேர் முக்கியமானவர்கள்.



அன்னை சந்தியா:
தன்னுடைய சிறுவயதிலேயே அப்பாவை இழந்த ஜெயலலிதாவுக்கு அம்மாவாக மட்டுமல்லாமல் சிறந்த தோழியாகவும் இருந்தவர் சந்தியா. ஜெயலலிதாவின் ஒவ்வோர் அசைவையும் அன்போடு கவனித்து வழிநடத்தியவர். அதேபோல, அம்மாவின் அரவணைப்பை எப்போதும் விரும்பும் பெண்ணாக இருந்தார் ஜெயலலிதா. சென்னை, சர்ச் பார்க் கான்வென்ட்டில் தான் படிக்க வந்ததைப் பற்றி குறிப்பிடும்போது, “பல ஆண்டுகள் அம்மாவைப் பிரிந்து பெங்களூரில் இருந்த எனக்கு, சென்னையில் அம்மாவுடன் இருந்து படிக்கும் வாய்ப்பாக அமைந்தது” என உற்சாகமானார்.
ஒரு நிகழ்ச்சிக்குச் செல்லவேண்டுமானால், என்ன உடை உடுத்திச் செல்வது என்பதில்கூட அம்மாதான் உதவ வேண்டும். பள்ளிக்குச் செல்லும்போது அடம்பிடித்தவர், பின்னாளில் நடிக்கச் செல்லும்போது, இன்றைக்கு லீவு போட்டுவிடவா என அடம்பிடிப்பாராம். அப்போதும் செல்லக் கோபத்துடன் கடிந்துகொண்டு, அனுப்பி வைப்பது அம்மாதான். பள்ளிக்கோ, நடிக்கவோ எங்கு சென்றுவிட்டு வீட்டுக்குத் திரும்பினாலும், வீட்டில் இருந்து அம்மா வரவேற்க வேண்டும் என்பதில் கறாராக இருப்பராம் ஜெயலலிதா. இவரின் மனதை நன்கறிந்த அம்மா, தான் வெளியே எங்கு சென்றிருந்தாலும் ஜெயலலிதா வீட்டுக்கு வரும் நேரத்துக்குத் தவறாமல் ஆஜராகிவிடுவார்.

ஜெயலலிதாவிடம் அவர் மிகவும் கடுமையாக நடந்துகொண்ட ஒரே விஷயம், பரதநாட்டியம் பழகுவதற்குத்தான். நாட்டியம் கற்றுக்கொடுக்க வரும் குருவிடம், தலை வலிக்கிறது... வயிறு வலிக்கிறது... என ஏதேனும் ஒரு காரணம் சொல்லி அனுப்பிவிடுவார். இந்த விஷயம் அம்மாவுக்குத் தெரிந்ததும் கண்டிப்போடு, உனக்கு என்னவானாலும் சரி, பரதநாட்டிய வகுப்புக்குச் சென்றே ஆகவேண்டும் என வற்புறுத்துவாராம். அந்த நடனம்தான் சினிமா வாழ்க்கைக்கு கை கொடுத்தது என்பார் ஜெயலலிதா. ‘பத்திரிகைகளில் வரும் எதிர்மறைச் செய்திகளைத் தலைக்குள் ஏற்றிக்கொள்ளாதே’ என்று ஆறுதல்படுத்திய அம்மாவையே தன்னுடைய குரு, சிநேகிதி, வழிகாட்டி என்பார் ஜெயலலிதா.



கேத்ரின் சைமன்:
ஜெயலலிதாவின் ஆங்கிலத் திறன் எல்லோரையும் வியக்க வைக்கக்கூடியது. சின்ன இடறல் கூட இல்லாமல் ஆங்கிலத்தில் உரையாற்றுவார் என்பதற்கு மாநிலங்களவையில் அவர் நிகழ்த்திய பேச்சுக்களே உதாரணம். ஜெயலலிதாவின் இநந்த் திறமைக்கு, அவரின் ஆசிரியர்களே காரணம். அவர்களில் முதன்மையானவர், கேத்ரின் சைமன். சென்னை சர்ச் பார்க் கான்வென்ட்டில் ஜெயலலிதா படிக்கும்போது, அவரிடம் அன்புகொண்டு தனிக்கவனம் எடுத்துக்கொண்டவர். மாணவர்களோடு நட்புறவுடன் பழகி, அவர்களைப் பண்படுத்தும் குணம்கொண்டவர் கேத்ரின் சைமன். சில மாதங்களுக்கு முன் கேத்ரின் இறந்தபோது, ‘தன் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் என் ஆசிரியர்’ என நெகிழ்வோடு குறிப்பிட்டார் ஜெயலலிதா.



இந்திராகாந்தி:
1984-ம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக ஜெயலலிதா நியமிக்கப்பட்டபோது, நாடாளுமன்றத்தில் ஆங்கிலத்திலும், சக எம்.பி-க்களிடம் இந்தியிலும் பேசி அசரவைத்தார். இந்த மொழியாற்றல் இந்திரா காந்தியின் நட்பு கிடைக்க வழிசெய்தது. இயல்பாகவே இந்திரா காந்தியின் மீது ஈர்ப்பும் பிரமிப்பும் உள்ள ஜெயலலிதா, இந்திரா காந்தியுடன் நெருக்கமானார். அது எந்தளவுக்கு என்றால், ஜெயலலிதா, தனக்கு ஒரு நெருக்கடி வந்தபோது, “அம்மா... எனத் தொடங்கித் தன் நிலையை விளக்கி, உதவுமாறு கடிதம் எழுதியபோது... இந்திரா காந்தி, டெல்லியிலிருந்து தனக்கு நம்பிக்கையானவர்களை அனுப்பி ஆறுதலும் உதவியும் செய்யவைத்தார். நம்பிக்கை தரும் இளம் அரசியல் தலைவர் என ஜெயலலிதா மீது இந்திரா காந்திக்கும் அன்பு இருந்தது. அதனால்தான் யூகோஸ்லேவியா நாட்டு அதிபருக்குத் தரப்பட்ட விருந்துக்கு ஜெயலலிதாவை அழைத்திருந்தார். அந்த விருந்தில் கலந்துகொண்டவர்கள் மொத்தம் 16 பேர்தான் எனும்போதே, இதன் முக்கியத்துவத்தை உணர முடியும். ஒவ்வொரு நாட்டு அதிபரிடமும் ஜெயலலிதாவை அறிமுகம் செய்துவைத்தார் இந்திரா காந்தி. தன் அரசியல் வாழ்வைப் பிரகாசிக்கவைக்கப் பெரிதும் உதவுவார் என நம்பிக்கையோடு இருந்த ஜெயலலிதாவுக்கு இந்திரா காந்தியின் படுகொலை பெரும் இடியாக விழுந்தது.



மனோரமா:
‘ஆச்சி’ என்று திரை உலகினரால் அன்போடு அழைக்கப்பட்ட மனோரமாவும் ஜெயலலிதாவும் திரைப்படங்களில் நடிக்கும்போதிருந்தே நல்ல தோழிகள். பல திரைப்படங்களில் இணைந்து நடித்ததன் மூலம் நட்பு இன்னும் வலுப்பட்டது. தனிப்பட்ட வாழ்வில் ஏற்றம், சரிவு ஏற்படும்போதெல்லாம் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்தனர். ஜெயலலிதா அரசியலுக்கு வந்தபிறகு, மனோரமா அவருக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்தார். மனோரமா இறந்தபோது, ஜெயலலிதா சிறுதாவூரில் இருந்தார். பரபரப்பான அரசியல் சூழல்நிலவிய நேரம் அது. ஆனாலும் அங்கிருந்து வந்து அஞ்சலி செலுத்தினார். ‘தன் அம்மாவுக்குப் பிறகு, தன்னை Ôஅம்முÕ என பாசத்தோடு அழைக்கும் மனோரமா, தனக்கு மூத்த சகோதரி என நினைவுகூர்ந்தார்.



சசிகலா:
ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரியாகக் கருதப்படுவர் சசிகலா. தமிழ்நாடு அரசின் செய்தித் துறையில் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்த நடராசனின் மனைவி. வீடியோ கேசட் வாடகைக்கு விடும் கடையை நடத்தி வந்தவர். ஜெயலலிதா அறிமுகமான சிறிது காலத்திலேயே அவரின் நம்பிக்கைக்கு உரியவராக மாறினார். எம்.ஜி.ஆர் இறந்த பிறகு, ஜெயலலிதாவுக்கு உறுதுணையாக இருந்தார். பின்னாட்களில் போயஸ் கார்டனிலேயே குடியேறும் அளவுக்கு இவரின் நட்பு வளர்ந்தது. இவரின் சகோதரி மகன் சுதாகரனை ஜெயலலிதா வளர்ப்பு மகனாக தத்தெடுத்து பிரமாண்ட திருமணம் செய்து வைத்தார். ஜெயலலிதாவின் நிழலாக தொடரும் அளவுக்கு அவரின் நம்பிக்கையைப் பெற்றவர். வெற்றியிலும் தோல்வியிலும் கூடவே இருக்கும் இவர்களின் நட்பில், சில நேரங்களில் உரசல்கள் வந்தபோதிலும், இன்று, ஜெயலலிதாவின் உடல் அருகே கலங்கி நிற்கும் வரை உடன் இருப்பவர்

VIKATAN NEWS

எல்லோருக்கும்

எல்லோருக்கும் ஏதோ ஒரு காரணத்தால் ஜெயலலிதாவைப் பிடித்திருப்பது ஏன்?


நடு வீட்டில் அலங்கரிக்கப்பட்டிருந்த பூத உடலை, மயானத்துக்கு தூக்கிச் செல்லும் அந்த நொடியில், அதுவரை அடக்கி வைத்திருந்த துக்கம் பீறிட்டு வெளிப்படும். அத்தனை சொந்தமும் வெடித்து அழும். கலங்காத மனமும் கலங்கும்.

அப்போலோவில் இருந்து போயஸ்கார்டனுக்கு ஆம்புலன்ஸ் புறப்பட்டதும், ‛முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பூத உடல்...’ என செய்தி சேனல்கள் உச்சரித்த நொடியிலேயே, அதிமுக அல்லாதவர்களின் கண்களிலும் கண்ணீர். அப்போது டிவிகளில் ஒளிபரப்பான ஜெயலலிதாவின் சிரித்த முகம் ரொம்பவே வாட்டியது. இதைப் பார்க்க முடியாது வெளிய வந்த பக்கத்து வீட்டுக்காரர், 'இத்தனைக்கும் ஜெயலலிதாவை எனக்குப் பிடிக்காது. செத்துட்டாங்கன்னு தெரிஞ்சதும் ஏனோ கலங்குது' என்றார்

அவரைப் போலவே, ‛ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும்...’ என பலரும் கலங்கினர். ‛பள்ளியைமுடித்து வெளியே வந்ததும்தான் கண்டிப்பான ஆசிரியர்கள் மீதான மரியாதை துளிர்விடத் துவங்குகிறது’ என நண்பர் ஒருவர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். யோசித்துப் பார்த்தால், ஆதரவாளர்களை விட எதிர்ப்பாளர்களே ரொம்பவும் ஆதங்கப்படுகின்றனர். உண்மை அது. ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்தவர்கள்தான் இன்று கலங்கி நிற்பது விநோத முரண்.

ராஜாஜி - பெரியார் இருவரும் கொள்கை ரீதியாக கடைசி வரை முட்டிக் கொண்டவர்கள். ஆனால் ராஜாஜி இறந்தபோது பெரியார் கலங்கி அழுதார். இன்று ஜெயலலிதா விட்டுச் சென்ற வெற்றிடம் கருணாநிதிக்கே கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கும். குறைந்தபட்சம், தனக்கு நிகரான ஒரே எதிரியும் இனி இல்லை என்றாவது நினைத்திருப்பார். எதிரியை பட்டவர்த்தனமாக வெற்றியாளன் என அறிவிக்க, மரணம் தேவைப்படுகிறது.

ஜெயகாந்தனை ஒருவன் ஆழ்ந்து படித்திருக்கவே மாட்டான். ஏன் அவரைப் பிடிக்கும் என கேட்டால் ‛அவர் சிங்கம் மாதிரி, அந்த ஆளுமை, அந்த திமிர், மீசையை முறுக்கி விடுறது’ என அடுக்குவான். அதேபோலத்தான் இன்று. ஜெயலலிதா இறந்ததும் எல்லோரும் இப்போது அந்த ஆக்ருதியைத்தான் பேசுகிறோம். நேற்று வரை திமிர் என்று சொன்னவன் இன்று மிடுக்கு என்கிறான். அகம்பாவம் என்றவன் இன்று போர்க்குணம் என்கிறான். அவரது ஆணவம் கம்பீரமாகப் பார்க்கப்படுகிறது. ‛இரும்பு மனுஷி’ என பெருமையாக சொல்கிறார்கள். இத்தனை நாள் ”இவ்வளவு திமிரா” என கோவப்பட்டவர்கள் எல்லாம், இனிமேல் இப்படியொரு பெண்ணை பார்க்க முடியுமா என ஏங்குகிறார்கள்.

சில சமயங்களில் நிசப்தம் பயங்கரமானது. ஓயாது அடம் பிடிக்கும் குழந்தை, கொஞ்ச நேரம் அமைதியாக தூங்கினால், எதாவது சேட்டை பண்ண மாட்டானா என மனம் ஏங்கும் இல்லையா? ஜெயலலிதாவை இத்தனை நாள் எதிர்த்தவர்கள் இன்று அந்த மனநிலையில்தான் இருக்கின்றனர். ‛ஜெயலலிதா முதல்வரா இருந்ததால் எனக்கு எந்த பலனுமே இல்லை. ஆனா, அவங்க இல்லைன்னதும் தமிழ்நாடு அநாதை மாதிரி ஆயிடுச்சேன்ற நினைப்பு வந்திருச்சு. தார்மீக பலம் இல்லாத பயம் வந்திருச்சு’ என்பதே அரசியல் வாடையே இல்லாதவரின் கருத்து. கிட்டத்தட்ட, 75 நாட்கள் மனதை தயார்படுத்தியே, இப்படியொரு சூழல் எனில், பட்டென செப்டம்பர் 23-ம் தேதியே இறந்து விட்டதாக அறிவித்திருந்தால், என்ன ஆயிருக்கும்?

‛ஆணவக்காரி’ என திட்டிய பெண்கள் கூட, இன்று இமயம் சரிந்து விட்டதாகவே உணர்கின்றனர். , ‛அவங்க என்னுடைய ரோல் மாடல்டா. அவங்க. உங்களை எல்லாம் காலில் போட்டிருந்தாடா’ என உள்ளூர பெருமை கொண்டிருந்த பெண்கள், இந்த மரணத்தை பெண்மையின் மரணமாகப் பார்க்கின்றனர்.

பிரிவினால்தானே பிரியத்தின் மொழியைப் பேச முடியும். இவ்வளவு பேருக்கு ஜெயலலிதாவைப்பிடிக்கும் என்பதே ஆச்சரியம்தான். ரத்த சொந்தம் யாரும் இல்லாததும், இந்த பரிதாப காட்சிகளும் காரணமாக இருக்கலாம். சொந்தமே இல்லாமல் இப்போது தனியாக இருப்பதைப் பார்த்தால் அவ்வளவு திமிர் இல்லாவிடில், பொதுவாழ்க்கையை எப்படி சமாளித்திருக்க முடியும் என்ற எண்ணம் எழுகிறது.

‛ஜெயலலிதாவைச் சுற்றி நிற்கும் யார் முகத்திலும் துக்கம் இல்லை. கோரம்தான் இருக்கிறது. இவர்களுக்கு நடுவில் இந்த அம்மா எப்படி சாந்தமாக இருந்திருக்க முடியும்? அப்ப இந்த அம்மா இத்தனை நாள் இந்த வலி எல்லாம் பொறுத்திட்டுதான் இருந்திருக்கு’ என்பது ஒரு ர.ர.வின் கேள்வி.

எது எப்படியோ, அவர் மரணம் புனிதத்தன்மையை ஏற்படுத்தி விட்டுச் சென்று விட்டது. தன் மீதான விமர்சனத்துக்கு முற்றப்புள்ளி வைக்க ஜெயலலிதாவுக்கு மரணம் தேவைப்பட்டிருக்கிறது. என்ன செய்தால் என்னை விமர்சிப்பதை நிறுத்துவீர்கள் என்ற கேள்வி அவரைத் துரத்திக் கொண்டே இருந்திருக்கும் அல்லவா? மரணம்தான் அதன் பதில். அது அவருக்கு கடைசி வரைக்கும் தெரியவே இல்லை.

சமூக வலைதளத்தில் ஒருவர் இப்படி எழுதியிருக்கிறார். “ எல்லோருக்கும் ஏதோ ஒரு காரணத்தால் அவரைப் பிடித்தேதான் இருந்தது.! ”

NEWS TODAY 31.01.2026