Tuesday, December 27, 2016

Official caught ‘paying bribe’ to RTI activist

THE HINDU 

This case was something new even for the Anti-Corruption Bureau sleuths who routinely trap government officials taking bribe. On Friday, a government official was caught paying a bribe to an Right to Information (RTI) activist to not dig into a particular case.

Honnappa, a shirastedar in Devanahalli Taluk Office was caught by ACB sleuths when he was allegedly paying a bribe of Rs. 50,000 to the RTI activist who had tipped off the sleuths.

The activist, while going through certain land documents, had turned suspicious about an entry for a 19-acre land parcel that it was DC converted, for non-agricultural purposes. He soon applied under the RTI Act for relevant documents. While the DC office replied that the said survey number was not converted, the local tahsildar office replied that the documents were missing. Intrigued, the activist started digging further, when Mr. Honnappa contacted him. “The shirastedar contacted the RTI activist and offered him a bribe of Rs. 50,000 for not to dig into the matter further. The activist pretended to accept the offer, but contacted us and organised for a trap,” said M.A. Saleem, IGP, ACB. Officials said that while Mr. Honnappa has been arrested and investigations will be done into the particular land transactions which he tried to hush up.

“A shirastedar alone is unlikely to carry out a forgery of land conversion document. Other officials are likely to be involved in the case. We will probe into the case and register a separate case if any fraud is revealed,” said a senior ACB official.

மிஸ்டர் ராம மோகன ராவ்!- விளாசும் தமிழிசை 


தமிழகத்தில் மக்கள் பாதுகாப்பற்ற நிலையை உணர்கின்றனர் என ராம மோகன ராவ் கூறியதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்பும், வரவேற்பும் தெரிவித்துள்ளனர்.

"என்னை சிலர் குறிவைத்துள்ளனர். எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதா இருந்தால் தலைமைச் செயலகத்தில் வருமான வரித்துறையினர் நுழைய முடியுமா. தமிழகத்தில் மக்கள் பாதுகாப்பற்ற நிலையை உணர்கின்றனர்" என தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் கூறியிருந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், ராம மோகன ராவின் குற்றச்சாட்டு குறித்து கருத்து தெரிவித்துள்ள பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், 'தமிழக மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என சொல்ல ராம மோகன ராவ் யார்? அதற்கு அவருக்கு உரிமையில்லை. பாதுகாப்பு இல்லாத இடத்தில் அமர்ந்திருந்தால், உயிருக்கு ஆபத்து வரதான் செய்யும். துப்பாக்கியை வைத்திருந்தாலே, துணை ராணுவம் சுட்டுவிடுவார்களா? பதவியில் இல்லாத போதே, ராம மோகன ராவ் இப்படி பேசுகிறார்' எனக் கூறியுள்ளார்.

ஆனால், ராம மோகன ராவுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் ஆதரவு தெரிவித்துள்ளார். "ஜெயலலிதா இருந்திருந்தால் நுழைந்திருக்க முடியாது என ராவ் சொல்வது சரியே. யாரை மிரட்ட பா.ஜ.க. அரசு முயற்சிக்கிறது. ராம மோகன ராவ் மற்றும் அ.தி.மு.க.வின் கேள்விகளுக்கு மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்' எனக்கூறியுள்ளார்.

சசிகலாவை ஏன் சந்தித்தார் ஓ.பி.எஸ்?! -7 நாள் மௌனத்தின் பின்னணி 

vikatan.com

பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துவிட்டு வந்த பிறகு, கார்டன் பக்கமே தலைகாட்டாத முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று சசிகலாவை சந்தித்துப் பேசினார். ' பொதுக்குழுவில் ஏதேனும் எதிர்ப்புகள் கிளம்புமா என்பது குறித்துத்தான் தீவிர ஆலோசனைகள் நடந்தன' என்கின்றனர் கார்டன் வட்டாரத்தில்.

டெல்லியில் கடந்த 20-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். காவிரி மேலாண்மை வாரியம், முல்லைப் பெரியாறு, அத்திக்கடவு-அவிநாசி திட்டம், கச்சத்தீவு விவகாரம் உள்பட 29 முக்கியக் கோரிக்கைகள் குறித்து பிரதமரிடம் மனு அளித்தார். 'விரைவில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக' பிரதமர் உறுதியளித்தார். ஆனால், பிரதமருடனான சந்திப்பை வேறுவிதமாக கவனித்தது கார்டன் வட்டாரம். 'தம்பிதுரையைப் புறக்கணித்தது; பிரதமருடன் தனிப்பட்ட முறையில் விவாதித்தது' என ஓ.பி.எஸ்ஸின் நடவடிக்கைகளை, மன்னார்குடி உறவுகள் அவ்வளவு எளிதாகக் கடந்து செல்லவில்லை. அதற்கேற்ப, அடுத்தடுத்து நடந்த வருமான வரிச் சோதனைகள், கார்டன் சந்தேகத்தை உறுதிப்படுத்தியது.

சேகர் ரெட்டி மீது கை வைத்தபோது, 'ஓ.பி.எஸ் வசமாக சிக்குவார்' என்றுதான் மன்னார்குடி தரப்பில் நினைத்தார்கள். ஆனால், ராம மோகன ராவை வளைத்த பிறகு, ஆட்டத்தின் சீரியஸை உணர்ந்து கொண்டார்கள். தலைமைச் செயலகத்திற்குள் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது குறித்து, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உடனடியாக அறிக்கை வெளியிட்டார். ஆனால், தற்போது வரையில் ஓ.பி.எஸ்ஸிடம் இருந்து எந்த அறிக்கையும் வெளிவரவில்லை. 'எதிர்ப்பைப் பதிவு செய்யுங்கள்' எனத் தெரிவித்தவர்களுக்கும், முதல்வர் எந்த சிக்னலையும் காட்டவில்லை. 'அப்படியானால், ஓ.பி.எஸ் சொல்லித்தான் மத்திய அரசு ஆதிக்கம் செலுத்துகிறதா' என மன்னார்குடி உறவுகள் கொந்தளித்தார்கள். 'இனியும் ஓ.பி.எஸ் பதவியில் நீடித்தால், நம்மை முழுவதுமாக துடைத்துவிடுவார்கள்' என அஞ்சித்தான், முதல்வர் பதவிக்கு சசிகலாவைக் கொண்டு வரும் முயற்சிகள் தொடங்கியுள்ளன என்கின்றனர் கார்டன் வட்டாரத்தில்.

"பொதுக்குழுவில் ஒருமனதாகத் தேர்வு செய்யப்படும் வரையில், சசிகலா மனதிற்குள் சிறு கலக்கம் இருந்து கொண்டுதான் இருக்கிறது. பிரதமரை சந்தித்துவிட்டு வந்த பின்னர், மரியாதை நிமித்தமாகக்கூட சசிகலாவை சந்திக்க ஓ.பி.எஸ் செல்லவில்லை. 'இப்படியே நீங்கள் தனித்திருந்தால், தொண்டர்கள் மத்தியில் வேறு மாதிரியான தோற்றம் தென்படும். பொதுக்குழு பற்றி விவாதிக்க வேண்டியிருக்கிறது. அந்த அடிப்படையிலாவது வாருங்கள்' என தலைமைச் செயலகத்தில் இருந்த ஓ.பி.எஸ்ஸுக்குத் தெரிவிக்கப்பட, கார்டன் விரைந்தார்" என விவரித்த அ.தி.மு.க தலைமைக் கழக நிர்வாகி ஒருவர், " மன்னார்குடி உறவுகளிடம் சரண்டர் ஆகும் முடிவில் பன்னீர்செல்வம் இல்லை. பிரச்னை இல்லாமல் பொதுச் செயலாளரை தேர்வு செய்வது குறித்துத்தான் ஓ.பி.எஸ்ஸிடம் விவாதித்திருக்கிறார்கள். அவர்களிடம் பேசியவர், 'தேனி மாவட்டத்து நிர்வாகிகளிடம் இதுபற்றிச் சொல்லிவிட்டேன். நல்லபடியாகவே பொதுக்குழு நடக்கும்' எனத் தெரிவித்தார். முதலமைச்சர் பதவி பற்றியோ, ரெய்டு பற்றியோ விவாதம் நடக்கவில்லை. பொதுக்குழுவில் எதிர்ப்பு கிளம்புமா என முதலமைச்சர் என்ற முறையில் அவரிடம் பேசியிருக்கிறார்கள்.

கட்சியைப் பொறுத்தவரையில், சசிகலா முன்னிறுத்தப்படுவதில், அவருக்கு எந்தவிதத் தயக்கமும் இல்லை. ஆனால், முதலமைச்சர் பதவிக்கு முன்னிறுத்தப்படுவதை, அவருடைய ஆதரவாளர்கள் ஏற்கவில்லை. 'பெரும்பான்மை எம்.எல்.ஏக்களின் ஆதரவு ஓ.பி.எஸ்ஸுக்கு உள்ளதாக என்பதை ஆளுநர் உறுதி செய்ய வேண்டும்' என ஸ்டாலின் கருத்து தெரிவித்ததில், சசிகலாவுக்கு உடன்பாடில்லை. அப்படி ஒருவேளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தாலும், ஓ.பி.எஸ்ஸுக்கு ஆதரவாகத்தான் எம்.எல்.ஏக்கள் வாக்களிப்பார்கள். வாக்கெடுப்பில் தோற்றுவிட்டால், ஆட்சி கலையும் என்பதையும் அமைச்சர்கள் உணர்ந்தே இருக்கிறார்கள். எனவே,' முதலமைச்சர் பதவியில் இருந்து ஓ.பி.எஸ் தானாக விலகி, சசிகலாவுக்கு இடம் கொடுக்க வேண்டும்' என்று அமைச்சர்கள் வலியுறுத்தி வந்தார்கள். வருமான வரித்துறை சோதனை தொடங்கியதும், சசிகலாவை முன்னிறுத்திய அமைச்சர்களும் அடங்கிப் போனார்கள். கட்சியின் செய்தித் தொடர்பாளர்கள்தான் இது குறித்துப் பேசி வருகின்றனர். சட்டரீதியாக ஓ.பி.எஸ் பக்கம் அனைத்தும் தெளிவாக இருப்பதால், அதிகாரத்தை விட்டுக் கொடுக்கும் முடிவில் அவர் இல்லை" என்றார் விரிவாகவே.

" டெல்லி சென்று பிரதமரை சந்திப்பதற்கு முதல்நாள் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்தார் ஓ.பி.எஸ். அவரிடம் பேசிய ஆளுநர், ' உங்களைத் தவிர, முதலமைச்சர் பதவிக்கு வேறு யார் முன்னிறுத்தப்பட்டாலும் அதை ஏற்க மாட்டேன். நம்பிக்கை வாக்கெடுப்பிலும் நீங்கள்தான் வெற்றி பெறுவீர்கள். உங்களுக்கு எதிரான சூழல் வந்தாலும், அ.தி.மு.கவுக்கு அடுத்து மெஜாரிட்டியாக இருக்கும் தி.மு.கவுக்கு வாய்ப்பை வழங்குவோம்' என உறுதியாகத் தெரிவித்தார். இதைக் கேட்டு உற்சாகத்தோடு டெல்லி கிளம்பினார். முதல்வர் மனதைக் கரைய வைக்கும் வகையில் சீனியர்கள் சிலர் கோட்டையிலேயே அவரை சந்தித்துப் பேசியுள்ளனர். அவர்களிடம் பேசும் ஓ.பி.எஸ், 'நான் இப்போது அமர்ந்திருக்கும் பதவி என்பது அவர்கள் கொடுத்த வாய்ப்புதான். அவர்களுக்கு எதிராக ஒருநாளும் செயல்பட மாட்டேன்' எனத் தெரிவித்திருக்கிறார். சீனியர்களும் குழப்பத்தோடுதான் நடப்பவற்றைக் கவனித்து வருகிறனர்" என்கிறார் அ.தி.மு.க நிர்வாகி ஒருவர்.

வர்தா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை அளவிடுவதற்காக மத்திய அரசின் நிபுணர்கள் இன்று சென்னை வந்துள்ளனர். அதேநேரம், தமிழக அரசியலில் புயல் சின்னத்தை உருவாக்கும் வகையில் வருமான வரித்துறையினர் ஆலோசித்து வருகின்றனர். புயல் கரையைக் கடக்கும் வரையில் கார்டன் வட்டாரத்தின் பதற்றம் நீடித்துக் கொண்டே இருக்கும்.


அரசியல் சாசனத்தின் மீதான தாக்குதல்! ராம மோகன ராவ் ஆவேசம்


வருமான வரித்துறை சோதனை குறித்து தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் விளக்கம் அளித்து வருகிறார்.

தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வீடு, அலுவலகம் மற்றும் அவரது மகன் விவேக், உறவினர்கள் வீடுகளில் கடந்த வாரம் வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் பல லட்சம் மதிப்பிலான ரூபாய், தங்கம் மற்றும் சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ராம மோகன ராவை தமிழக அரசு சஸ்பெண்ட் செய்தது.

இந்நிலையில் உடல்நலக் குறைவால் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன நிலையில், சென்னை அண்ணா நகரில் உள்ள வீட்டில் ராம மோகன ராவ் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது, நான் மனம் திறந்து பேச விரும்புகிறேன். சில முக்கிய தகவல்களை சொல்ல விரும்புகிறேன். எனக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, அ.தி.மு.க எம்.பி எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வருமான வரித்துறை சோதனை மூலம் தலைமைச் செயலகத்தை காப்பாற்ற அரசு தவறிவிட்டது. இந்த சோதனை அரசியல் சாசனத்தின் மீதான தாக்குதல். வருமான வரித்துறையினர் சோதனையின் போது வீட்டுக்காவலில் வைக்கப்பட்டேன். தலைமைச் செயலாளரை வீட்டுக்காவலில் வைக்கப்பட்டது அரசியல் சட்ட விரோதம்.

எனது மகன் விவேக் தனியாகத்தான் வசித்து வருகிறார். எனது மகனுக்கும், தமிழக அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை. வருமான வரித்துறையினர் சர்ச் வாரன்ட்டில் எனது பெயர் இல்லை. என் மகனுக்கான வாரன்ட்டை வைத்து என் வீட்டுக்கு வந்தது ஏன்? என் மகனுக்கான வாரன்ட்டை வைத்து தலைமைச் செயலகம் சென்றது ஏன்? எந்த ஆவணத்தையும் வருமான வரித்துறையினர் எடுத்துச் செல்லவில்லை. மகள், மனைவிக்கு சொந்தமான 45 சவரன் நகைகளே இருந்தன. ரூ.1,12,320 லட்சம் மட்டுமே வருமான வரித்துறையினர் எடுத்துச் சென்றனர். தேடுதலுக்கான வாரன்ட்டில் எனது மகன் பெயர் மட்டுமே இருந்தது. வெள்ளியாலான சாமி சிலைகளை மட்டுமே வருமான வரித்துறையினர் எடுத்துச் சென்றனர். எனது மகனுக்கான வாரன்ட்டை வைத்து தலைமைச் செயலகம் சென்றது ஏன், ஜெயலலிதா இருந்தால் தலைமைச் செயலகத்தில் வருமான வரித்துறையினர் நுழைய முடியுமா.

ஜெயலலிதாவிடம் பலமுறை பயிற்சி பெற்றிருக்கிறேன். துணை ராணுப்படையினருக்கு எனது அறையில் என்ன வேலை. தமிழகத்தில் மக்கள் பாதுகாப்பற்ற நிலையை உணர்கின்றனர். மாநில அரசுக்கும் அதிகாரிகளுக்கும் எந்த மரியாதையும் இல்லை.

எனது உயிருக்கு ஆபத்து

துப்பாக்கி முனையில் நுழைந்து என் வீட்டில் சோதனை செய்தனர். என்னை சிலர் குறிவைத்துள்ளனர். எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. சேகர் ரெட்டியுடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. தமிழகத்தில் தலைமைச் செயலாளருக்கே பாதுகாப்பு இல்லை. ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் தமிழகத்தில் எந்த பாதுகாப்பும் இல்லை. தமிழகத்தில் கடந்த 7 மாதத்தில் நிர்வாக ரீதியாக எந்த தவறும் நடக்கவில்லை. ஜெயலலிதா வழிநடத்துதலின் பேரில் 7 மாதமும் செயல்பட்டேன். நான்தான் இன்னும் தலைமைச் செயலாளராக உள்ளேன். தமிழக அரசு பணியிடை மாற்றம் உத்தரவை தர தயங்குகிறது. 32 ஆண்டு அனுபவம் உள்ள அரசு அதிகாரியை இப்படித்தான் நடத்துவதா. மக்களுக்கு எல்லாம் தெரியும். நான் மக்களுக்காகவே தொடர்ந்து பணியாற்றுவேன் என்று கூறினார்.

படம்: ஆ.முத்துக்குமார்

முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தைக் கண்காணிக்கும் ஏ.பன்னீர்செல்வம்'?

vikatan.com

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தைக் கண்காணிக்கவும் அரசு டெண்டர்கள் உள்ளிட்ட நிர்வாக விஷயங்களை இறுதி செய்யவும் சசிகலாவின் ஏற்பாட்டின்படி முதல்வரின் சிறப்புப் பணி அலுவலராக முன்னாள் ஐ.ஏ.எஸ்.அதிகாரி ஏ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்கவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. பன்னீர்செல்வத்தைக் கண்காணிக்க இன்னொரு பன்னீர்செல்வமா என்று பரபரப்பாகப் பேசத் தொடங்கியுள்ளனர் கோட்டை வட்டாரத்தில்.

இவர், செய்தி மக்கள் தொடர்புத் துறையில் பி.ஆர்.ஓ.வாக பணியைத் தொடங்கி ஐ.ஏ.எஸ். அதிகாரியாகப் பதவி பெற்று ஓய்வுப் பெற்றார்.நடராஜனுக்கு மிக நெருக்கமானவர்.அதனால் சசிகலாவின் பரிந்துரையின்பேரில் கடந்த 2011ம் ஆண்டு ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. அரசு பதவியேற்றதும், அரசின் சிறப்புத் திட்ட அமலாக்கப் பிரிவில் சிறப்பு அலுவலர் அந்தஸ்தில் நியமிக்கப்பட்டார்.

அப்போது,தலைமைச் செயலக வட்டாரத்தில் அதிகார மையமாக விளங்கினார்.அரசில்,அதிகாரிகள் மாற்றம், அமைச்சர்கள் மாற்றம், அரசு டெண்டர்களை முடிவு செய்வது என்று எல்லா விதத்திலும் அதிகமாகத் தலையிடுகிறார் என்று பன்னீர்செல்வத்தின் மீது கடுமையான குற்றச் சாட்டு எழுந்தது.அது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்திற்கும் சென்றது.கோபத்தின் உச்சிக்கே சென்ற ஜெயலலிதா நேரில் அழைத்துக் கடுமையாக எச்சரித்து, சிறப்பு அலுவலர் பொறுப்பில் இருந்தும் நீக்கினார்.அதனால் ஏ.பன்னீர்செல்வம் கடந்த சில ஆண்டுகளாக தமிழக அரசு நிர்வாகத்தில் தலையிடாமல் இருந்துவந்தார்.இப்போது நிலைமை தலைகீழாக மாறிப்போனதால் மீண்டும் ஏ.பன்னீர்செல்வத்தின் நடமாட்டம் போயஸ் கார்டனிலும்,அவ்வப்போது கோட்டை வட்டாரத்திலும் வலுவாக இருக்கிறது என்கிறார்கள் அ.தி.மு.க.வினர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க.வின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில்,"எங்க சி.எம். இருக்கும்வரையில் அவரின் கண்ணில் படாமல் இருந்துவந்த ஏ.பன்னீர்செல்வம் இப்போது மீண்டும் ஆட ஆரம்பித்துள்ளார்.அரசின் நிர்வாக விஷயங்களில் ஓவராக நுழைகிறார் என்பதால்தான் அம்மா அவரை விரட்டியடித்தார்.அதை இப்போது யார் செய்ய முடியும்.எல்லாமே எம்.என்.,டி.டி.வி. முடிவுபடிதான் நடக்கிறது.அதைச் உத்தரவாக்கிச் செயல்படுத்தும் இடத்தில் சசிகலா இருக்கிறார்.இப்போது ராம மோகன ராவும் ரெய்டில் சிக்கி இருக்கிறார்.அதனால் டெண்டர் உள்ளிட்ட அரசு விஷயங்களில் சிறப்பு ஆலோசகருக்கு உதவியாக ஏ.பன்னீர்செல்வம் அமர்த்தப்பட்டுள்ளார்.ஓ.எஸ்.டி. என்ற பதவி அவருக்கு அளிக்கப்படவுள்ளது. இதன் மூலம் முதல்வருக்கு நெருக்கமாக இருக்கமுடியும்.அவருக்கு சசிகலாவின் கருத்துக்களை மிக எளிதாகக் கொண்டு செல்லமுடியும்.தான் அருகில் இல்லாவிட்டாலும் தனது நம்பிக்கைக்குரிய நபர் முதல்வரின் நிழலாக அவரைப் பின் தொடரவேண்டும் என்பதால் சசிகலா இந்த 'மூவ்' வைத்துள்ளார்.இவர் கார்டனில் இருந்துகொண்டே எல்லா விஷயங்களையும் கமுக்கமாக மேற்கொள்வதில் நிபுணர்.இவரின் வீட்டிலிலும் அமைச்சர்கள்,தொழிலதிபர்கள் முகாமிடத் தொடங்குவார்கள்.ஒரு புதிய அதிகார மையமாக வலம் வருவார்." என்றார்.

'அதுவும் நாங்கதான்... இதுவும் நாங்கதான்!' - ராம மோகன ராவ் மகனுக்கான மாஸ்டர் ப்ளான்

vikatan.com

வருமானவரித் துறை அண்மையில் நடத்திய ரெய்டில் பிடிபட்ட முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் மற்றும் அவரது மகன் விவேக் இருவரும் மேலும் பல மோசடிகளில் ஈடுபட்டிருப்பது தற்போது அம்பலமாகி வருகிறது. இந்த மோசடியில் ராம மோகன ராவின் உதவியாளர் என்று கருதப்படும் பாஸ்கர் கனுமூரி என்பவரது பங்கும் இருப்பதாகத் தெரிகிறது.

பாஸ்கர் கனுமூரி, ஆந்திராவை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ‘பத்மாவதி ஹாஸ்பிடாலிட்டி’ நிறுவனத்தின் இயக்குநர். இந்த நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளாக தமிழக அரசு மருத்துவமனைகளில் சுகாதார மேம்பாட்டு வசதிகளைப் பராமரித்து வருகிறது. இது, தமிழக அரசின் ‘தமிழ்நாடு டூரிஸம்’ சுற்றுலா நிறுவனத்துடனும் கான்ட்ராக்ட் அடிப்படையில் இயங்கி வருகிறது. பாஸ்கர் ஸ்வான் என்டர்பிரைஸஸ் என்னும் தனியார் நிறுவனத்திலும் பங்குதாரராக இருக்கிறார். ஸ்வான் நிறுவனத்தின் இயக்குநர், ராம மோகன ராவின் மகன் விவேக் ஆவார். விவேக்கும், பாஸ்கர் கனுமூரியும் நெருங்கிய நண்பர்கள் என்றும் தெரிகிறது. இதனடிப்படையில் அரசின் கான்ட்ராக்ட்டில் கிடைக்கும் வருமானத்தைத் தங்களுக்குள்ளேயே சுழற்சி முறையில் லாபம் ஈட்டி மகனும் தந்தையும் மோசடி செய்திருக்கிறார்கள். இதன்மூலம், 300 கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு கான்ட்ராக்ட்டை தன் வசப்படுத்த விவேக் மோசடி செய்துள்ளது அம்பலமாகியுள்ளது.அதற்கான ஆவணங்களும் கிடைத்திருப்பதாக வருமானவரித் துறை செய்தி வெளியிட்டுள்ளது.

இதன்மூலம், பாஸ்கர் யார்... ராம மோகன ராவின் உதவியாளரா அல்லது அவரது பினாமியா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

மேலும் தென்னக ரயில்வே, பெல் நிறுவனம், வெங்கடேஸ்வரா கால்நடைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பெரு நிறுவனங்களுடன் இவர்கள் கான்ட்ராக்ட் ஒப்பந்தம் செய்துள்ளனர். குறிப்பாக ராம மோகன ராவின் மகன் விவேக்குக்கு பெங்களூருவில் உள்ள பிரபல சொகுசு ரியல் எஸ்டேட் ஒன்றிலும் பங்கு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

விவேக் வருமானவரித் துறையின் விசாரணையில் இருக்கிறார்.விசாரணை தொடக்கத்திலேயே, தாங்கள் 5 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக ஒப்புக்கொண்டார் விவேக். மேலும் சேகர் ரெட்டிக்கான வங்கி சிபாரிசுகளுக்காக கடிதம் கொடுத்து மோசடி செய்தது,ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த காலகட்டத்தில் அவசர அவசரமாக பல எண்ணிக்கையிலான கோப்புகள் கையெழுத்தானது என்று பல குற்றச்சாட்டுகள் ராம மோகன ராவ் மீது தற்போது எழுந்துள்ளது.

இதில் மற்றொரு முக்கிய திருப்பமாக தமிழக மருத்துவ கல்வித் துறையுடனான 400 கோடி ரூபாய் மதிப்பிலான காண்ட்ராக்டையும் பத்மாவதி ஹாஸ்பிடாலிட்டி நிறுவனம் பெற்றுள்ளது. இந்த நிறுவனம் 2006 தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. நிறுவனத்தின் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார் அதன் இயக்குநர் பாஸ்கர்.

ஆனால் காண்ட்ராக்ட் கையெழுத்தாவதற்கு அத்தாட்சியாக இருந்த சீனுவாச ராவ் என்பவர் பத்மாவதி நிறுவனத்தின் அருகிலேயே ஒரு போக்குவரத்து நிறுவனம் நடத்தி வருகிறார் என்று பல தகவல்களை வெளியிட்டு வருகிறது வருமான வரித்துறை.

ராம மோகன ராவ் வீட்டில் கடந்த டிச 21-ம் தேதி நடத்தப்பட்ட வருமான வரிச் சோதனையில் 30 லட்சம் அளவிலான புது ரூபாய் நோட்டுகளும். 5 கிலோ அளவிலான கணக்கில் வராத தங்கக் கட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Sunday, December 25, 2016

ராவ் மகனின் ரூ. 1700 கோடி துபாய் ஹோட்டலில் முக்கிய தமிழக அரசியல் தலைவருக்குத் தொடர்பு?

Oneindia Tamil

சென்னை: வருமான வரி சோதனைக்குள்ளாகி பதவியை இழந்துள்ள ராமமோகன ராவின் மகன் விவேக்குக்கு துபாயில் ரூ. 1700 கோடி மதிப்பிலான ஹோட்டல் உள்ளதாக பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அதில் தமிழகத்தைச் சேர்ந்த முக்கிய அரசியல் புள்ளிக்கு முக்கியத் தொடர்பு இருப்பதும் தெரிய வந்துள்ளதாம்.

இதுதவிர சேகர் ரெட்டி, கரூர் அன்புநாதன், பரஸ்மால் லோதா ஆகியோரின் பெயர்களும் இதில் அடிபடுகின்றன. இதுதொடர்பான விசாரணையை தற்போது அமலாக்கப் பிரிவு முடுக்கி விட்டுள்ளது.

தமிழகத்திற்கு மிகப் பெரிய அசிங்கமாக, கேவலமாக வந்து சேர்ந்துள்ளார் ராமமோகன ராவ். அவரும் அவரது கூட்டாளிகள் சேகர் ரெட்டி உள்ளிட்டோரும் அடித்த பணக் கொள்ளை அனைவரையும் அதிர வைத்துள்ளது. சேகர் ரெட்டியை தூக்கிய கையோடு ராமமோகன ராவின் வீடுகள், தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறை, அவரது மகன் விவேக்கின் வீடு, அலுவலகம், உறவினர்கள் வீடுகள், அலுவலகங்கள், வழக்கறிஞர் அமலநாதன் என யாரையும் விடாமல் சோதனையிட்டது வருமான வரித்துறை.



தற்போது சேகர் ரெட்டி கைதாகி சிறைக்குப் போய் விட்டார். இந்த நிலையில் தற்போது ராமமோகன ராவ் மீதான பிடியை இறுக்க ஆரம்பித்துள்ளது வருமான வரித்துறை. ராவ் மற்றும் அவரது மகன் விவேக், வழக்கறிஞர் அமலநாதன் ஆகியோரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை வருமான வரித்துறையினர் ஆய்வு செய்து வந்தனர்.

சோதனைகளில் மொத்தம் 900 கிலோ எடை கொண்ட ஆவணங்கள் சிக்கின. இந்த ஆவணங்களை 80 பேர் கொண்ட குழு தொடர்ந்து ஆய்வு செய்து வந்தது. இன்று வரை ஆய்வு தொடர்ந்தது. இன்றுடன் ஆய்வு முடிவடைந்தது. இதில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.





குறிப்பாக விவேக்குக்கு ரூ. 1700 கோடி மதிப்பில் துபாயில் மிகப் பெரிய ஹோட்டல் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த ஹோட்டல் தொழிலில் ராவ் மகனுக்கு மட்டும் தொடர்பு உள்ளதா அல்லது அரசியல் தலைவர்கள், பிற அதிகாரிகள், வேறு பலருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்த விசாரணையை அமலாக்கப் பிரிவு தொடங்கியுள்ளதாம்.

மேலும் இந்த ஹோட்டலில் தமிழக அரசியல் புள்ளி ஒருவருக்கு இதில் முக்கியத் தொடர்பு உள்ளதும் தெரிய வந்துள்ளதாம். மேலும் கடந்த சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு சிக்கிய கரூர் அன்புநாதனுக்கும் இதில் தொடர்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது. அதேபோல சேகர் ரெட்டி, அவருக்கு பணத்தை மாற்றித் தர உதவிய கொல்கத்தாவைச் சேர்ந்த பரஸ்மால் லோதா ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதும் தெரிய வந்துள்ளது.





அரசியல் புள்ளி, ராமமோகன ராவ், அவரது மகன், சேகர் ரெட்டி, அன்புநாதன் உள்ளிட்டோர் இந்த ஹோட்டலில் பங்குதாரர்களாக உள்ளனரா என்பது குறித்து விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளதாம். இவர்களின் நெட்வொர்க்கை கண்டுபிடிக்கவும் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளதாம்.

விரைவில் இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்து வழக்குப் பதிவு செய்து ராமமோகன ராவ், விவேக் உள்ளிட்டோரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிகிறது.

NEWS TODAY 08.06.2026