Tuesday, January 3, 2017

என்னருமை தோழியே..!


பல நாட்கள் என்னிடம் நீங்கள் கூறியிருந்த சேதிகளை இதுவே அம்மாவின் நியதிகள் என்று பறைசாற்ற போகின்றேன்..

இன்னுயிர் தோழியே....

அன்றொரு நாள் உங்கள் வாழ்க்கை சரிதத்தை இயற்ற நான் அனுமதிகோரி நின்றபோது நீங்கள், ‘‘அதற்கான நேரம் வரும்.. நீதான் அதை எழுதுவாய்..'' என்றீர்கள்.
இதோ அந்த நேரமும் அமைந்துவிட்டது.
ஆனால்.. வாசிக்கத்தான் நீங்கள் இல்லை!

நான் கோரிய அனுமதியை அன்றே வழங்கியிருந்தால், யாரும் அறிந்திராத உங்களது மென்மையான இதயத்தினை உமக்குள் நீங்கள் ஒளிந்திருந்த.. குதூகல கோமளத்தின் சிறப்புகளை உங்கள் பார்வையிலேயே வெளிக் கொணர்ந்திருப்பேனே...!
இப்போது கூறினால் என்னாகும்?
இரும்புக்குள் ஏது மென்மை என்றல்லவோ கேட்பார்கள்?

உங்களைப் பற்றிச் சொல்கின்ற இந்த புதியவன் யார் என்கிற வினாக்களும் எழுமே...
அரசியலுக்காக உங்களைச் சுற்றியவர்கள், பொருளுக்காக உங்களைச் சுற்றியவர்கள் இன்னும் பதவி, புகழ் மற்றும் விருதுகளுக்காக உங்களைச் சுற்றியவர்களையெல்லாம் கடந்து, ‘உங்கள் மன நிம்மதிக்காகவும், ஆன்மிகத் தேடலுக்காகவும் நீங்கள் ஏற்படுத்திக்கொண்ட நட்பு நான்’ என்று என்னை நானே அறிமுகப்படுத்திக்கொள்ளும் இந்த வாய்ப்பும் நீங்கள் எனக்கு நல்கியதுதான்.
என்னருமைத் தோழியே..!

அரண்மனை அறிந்தாய், அரியணை அறிந்தாய். உன்னுள் ஒருபுறம் இருந்ததை நினைத்திட மறந்தாய். வருகின்ற வழக்குகளைத் தீர்த்து முடித்தாய். உன்மனதின் வருத்தங்களைத் தீர்க்க மறுத்தாய்.. மகள், சகோதரி, மாணவி, நாட்டியத் தாரகை, பாடகி, நடிகை, எழுத்தாளர், விமர்சகர், தலைவி, முதல்வர், அம்மா ஆகிய நிலைகளையெல்லாம் கடந்து ஏமாற்றங்களும் சோகங்களும் நிறைந்த தனிமையில் மட்டும் நீங்கள் வெளிப்படுத்திய அந்த அம்மு என்கிற குறிஞ்சி மலரைப் பற்றிப் பேச விழைகிறேன்.

உமது நினைவுகளுக்குப் பல்லாண்டு பாடுகிறேன்.

(மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுடன் நல்ல நட்பு பாராட்டியவரும், மனம் விட்டுப் பேசிச் சிரித்துப் பழகக் கூடிய வெகு சிலரில் ஒருவராகவும் இருந்தவரின் மனதில் நிலைத்த நினைவுகள் நமது நாளிதழில் பதிவு செய்யப்படவிருக்கின்றன. இரும்புப் பெண்மணி என வர்ணிக்கப்படும் ஜெயலலிதாவுடனான அவருடைய நேரடி சந்திப்புகள், இதுவரை இந்த உலகம் கண்டிராத ஒரு ஜெயலலிதாவை உங்களுக்கு அனுபவபூர்வமாக அறிமுகப்படுத்தும் என்பது நிச்சயம்)
(நாளை முதல் சந்திப்புகள் தொடரும்)

விவாதம்: திரைப்பட நாயகிகள் வெறும் பண்டமா?

பிருந்தா சீனிவாசன்
நயன்தாரா | கோப்பு படம்

பெண்களைப் பண்டமாக்கிக் காட்சிப்படுத்துவது தமிழ்த் திரைப்படங்களுக்குப் புதிதில்லை. அந்த வழக்கத்தையொட்டித் திருவாய் மலர்ந்திருக்கிறார் திரைப்பட இயக்குநர் சுராஜ். இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘கத்தி சண்டை’ படத்தைத் தொடர்ந்து இணையதளம் ஒன்றுக்கு இவர் அளித்த பேட்டியில் “நாயகிகள் முழுமையாக உடையணிந்து நடிப்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது. பணம் கொடுத்துத் திரையரங்குக்கு வருகிறவர்கள் நடிகைகளைக் கவர்ச்சியாகப் பார்க்கத்தான் விரும்புவார்கள்” என்று சொல்லியிருக்கிறார். அதோடு, “ஆடை வடிவமைப்பாளர், முட்டிவரை மூடியபடி இருக்கிற உடையைக் கொண்டுவந்தால் அவற்றை நான் ஆங்காங்கே கத்தரித்துவிடச் சொல்வேன். கோடிக் கணக்கில் சம்பளம் வாங்குவது இதற்காகத்தான் என்று சொல்வேன்” என்றும் முத்துக்களை உதிர்த்திருக்கிறார்.
வேண்டாமா சமூகப் பொறுப்பு?
திரைப்படங்களில் பெண் களைச் சதைப் பிண்டமாகக் காட்சிப் படுத்து வது கண்டிக்கத்தக்து என்றால் அவர்கள் அப்படி நடிப்பதுதான் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு என்று அதை நியாயப்படுத்துவது ஆணாதிக்கத்தின் உச்சம். தன்னுடைய பேச்சுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அனைத்து நடிகைகளிடமும் மன்னிப்பு கேட்பதாகச் சொல்லியிருக்கிறார் சுராஜ். ஒரு பெண்ணைத் தரக்குறைவாகப் பேசிவிட்டு, மன்னிப்பு கேட்பதாலேயே எல்லாமே நேர்செய்யப்பட்டுவிட்டது என்று நினைக்கிற மனோபாவத்தின் வெளிப்பாடுதான் இதுபோன்ற மலிவான பேச்சும் அதைத் தொடரும் மன்னிப்பும். பொதுமக்களிடம் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும் திரைப்படம் போன்ற துறைகளில் பணியாற்றுகிறவர்கள் குறைந்தபட்ச சமூகப் பொறுப்புடன் இயங்க வேண்டும் என்பதை சுராஜைப் போன்ற இயக்குநர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
எது உங்கள் தேர்வு?
நடிகைகளைப் பற்றி தரக்குறை வாகப் பேசியிருக்கும் இயக்குநர் சுராஜின் கருத்து வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று நடிகைகள் தமன்னாவும் நயன்தாராவும் தெரிவித்திருகிறார்கள்.
“நடிகைகளின் ஆடை குறித்த இயக்குநர் சுராஜின் கருத்து கோபமூட்டுவதாக மட்டுமல்ல காயப்படுத்து வதாகவும் இருக்கிறது. நடிகைகள் என்றால் ஆடை களைகிறவர்கள் மட்டும்தானா?” என்று கேட்கிற தமன்னாவின் கேள்விக்குப் பின்னால் இருக்கிற நியாயத்தைப் புறந்தள்ளிவிட முடியாது. “நான் கவர்ச்சியாக நடித்திருக்கிறேன்தான். ஆனால் அது எனக்கு சவுகரியமாகவும் என்னுடைய விருப்பத் தேர்வாகவும் இருக்க வேண்டும்” என்று சொல்லியிருக்கிறார் நயன்தாரா.
ஒரு நடிகை தான் எந்தவிதமான ஆடையணிந்து நடிக்க வேண்டும் என்று முடிவுசெய்வது அவரது தனிப்பட்ட விருப்பம் என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. அந்த வகையில் நயன்தாராவின் கருத்தும் ஏற்றுக்கொள்ளத் தக்கதே. ஆனால் இப்படியொரு கருத்தை அவர் எந்தச் சூழலில் சொல்கிறார் என்பது வேறொரு கேள்வியை எழுப்புகிறது.
தான் நேரடியாகச் சம்பந்தப்பட்ட அல்லது தனக்கு நேரவிருக்கிற சம்பவங்களுக்கு மட்டுமே கொதித்தெழுவதும், அப்போது வந்து அறம் பேசுவதும் ஏற்புடையதா?
பெண்களுக்கு மரியாதை தருவதைப் பற்றியும் பெண்களின் முன்னேற்றம் குறித்தும் வெளிவந்த ‘பிங்க்’, ‘தங்கல்’ திரைப்படங்களைச் சுட்டிக்காட்டி கருத்து தெரிவித்திருக்கிறார் நயன்தாரா. ஆனால் அவரேதான் தனக்கு சவுகரியமான ஆடை குறித்தும் விருப்பத் தேர்வு குறித்தும் சொல்கிறார். அவர் குறிப்பிடுகிற சவுகரியத்துக்கும் விருப்பத் தேர்வுக்கும் சமூகப் பொறுப்பு என்பது தேவையில்லையா? தன்னைப் போன்ற சக நடிகை விமர்சனத்துக்குள்ளாவதைப் பொறுத்துக்கொள்ள முடியாத அக்கறையோடு பேசுகிற, பெண்ணிய கருத்துக்களைச் சொல்கிற நயன்தாராவின் பெண்ணிய மதிப்பீடு என்ன? இயக்குநரின் அநாகரிகப் பேச்சுக்கு எதிராகத் துணிச்சலுடன் தன் கண்டனத்தைத் தெரிவிக்கும் நயன்தாரா, பெண்ணை ஒரு போகப் பொருளாகப் பார்க்கக் கூடாது என்றும் சொல்லியிருக்கிறார். ஆனால், அவரே பல படங்களில் போகப் பொருளாகக் காட்சிப்படுத்தப்பட்டபோது ஏன் மறுக்கவோ எதிர்த்துக் குரல்கொடுக்கவோ இல்லை என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது.

நீங்க என்ன சொல்றீங்க?

பெண்களின் கண்ணியத்துக்கு எதிரான செயல்களைச் செய்கிறவர் இயக்குநரோ, நடிகையோ யாராக இருந்தாலும் அவர்கள் செய்வது சரியா? அவர்களுக்குச் சமூகப் பொறுப்பு தேவையில்லையா? ‘பொழுதுபோக்கு’ என்ற போர்வையில் பெண்களைக் காட்சிப் பொருளாக்குவதும் பண்டமாக்குவதும் நியாயமா? திரைப்படங்கள் என்பவை பார்த்துவிட்டுக் கடந்து செல்ல மட்டுமே என்று நினைக்காமல் அவற்றை வாழ்வின் அங்கமாகவே பார்க்கிற இளைஞர்கள் நிறைந்திருக்கிற இந்தச் சமூகத்துக்குத் திரைப்படங்கள் வழியாக நாம் சொல்ல நினைப்பது என்ன?
தோழிகளே, இந்த விஷயத்தில் உங்கள் கருத்து என்ன? அனுபவம் என்ன? எங்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள், விவாதிக்கலாம்.
Published: January 2, 2017 08:53 ISTUpdated: January 2, 2017 08:54 IST

என்னருமை தோழி..!- 2

ஜெயலலிதாவுடன் கட்டுரையாளர் நரசிம்மன்.
உங்களது திரைப்பட வாழ்க்கை வெண்ணிற ஆடையில் துவங்கிய போதே, நமது நட்புக்கு கட்டியம் கூறப்பட்டு விட்டது போலும். நீங்கள் மிகவும் விரும்பி நடித்த நகைச்சுவை படங்களுக்கு வசனங்களை எழுதிய ‘சித்ராலயா’ கோபுவின் ஏழு வயது மகன் நரசிம்மனாக உங்களை முதலில் சந்தித்தேன்.

உங்கள் அரசியல் ஆசான் கொணர்ந்த சத்துணவுத் திட்டத்தை பற்றி ஆராய்ச்சி புத்தகம் எழுதுவதற்காக, அப்போது அத்திட்டத்தின் செயல்பாட்டுத் தலைவராக இருந்த உங்களை பேட்டி காண குருநானக் கல்லூரி மாணவனாக வந்து சந்திக்கையில் உங்கள் அறிமுகம் கிடைத்தது. அதன்பின் உமது அறுபதாவது பிறந்த நாளில் மீண்டும் நமது நட்பு துளிர்விட்டது. இறுதிவரையில் அந்த நட்பு தொடர்ந்தது அல்லவா!

எனது எழுத்துகளாலோ, பத்திரிகை தொழிலாலோ நான் திரைப்படக் குடும் பத்தை சேர்ந்தவன் என்பதாலோ, நீங்கள் எனக்கு இந்த அங்கீகாரத்தினை தரவில்லை. ஆன்மீகம் அல்லவோ நம்மை ஒன்று சேர்த் தது! தாங்கள் எந்த நட்பையும் தொடர்ந்தது கிடையாது, என்பதையும் நான் அறிவேன்.

தங்களிடம் உள்ள நெருக்கத்தை ஒரு எழுத்தாளர் சுய விளம்பரம் செய்து, ‘நான் ஜெயலலிதாவின் மனசாட்சி’ என்று கூறிய தால், அந்த நட்பையே முறித்து கொண்டதை நான் அறிவேன்!

ஆனால், என்னிடம் கொண்ட நட்பை மட்டும் கடைசிவரை நீடிக்க செய்தீர்கள். அது நான் செய்த பெரும் பாக்கியம்தான்!

என்னை தங்களின் நிழல் நண்பன் என்று தாங்கள் பெருமையுடன் கூறியது என் செவிகளில் இன்னும் ரீங்கரிக்கின்றது. ‘நரசிம்மன்’ என்ற என் பெயர் தங்களது குலக்கடவுளை நினைக்கச் செய்வதுபோல் உள்ளது என்று புன்னகையுடன் கூறுவீர்களே!

ஆணின் விலா எலும்பை உடைத்து முதல் பெண்ணை உருவாக்கினான் இறைவன் என்பது ஒரு நம்பிக்கை. ஆனால் நாங்கள் கண்கூடாக கண்டது, தன்னை எதிர்த்த அத்தனை ஆண்களின் விலா எலும்பு களையும் உடைத்து நொறுக்கி, அவற்றை நூலில் கோர்த்து, பட்டாபிஷேக மாலையாக அணிந்து, தமிழக சிம்மாசனத்தில் இறுதிவரை கோலோச்சியது உமது கம்பீரத் தலைமை அல்லவா..!

தங்களது விலா எலும்புகளை காத்து கொள்வதற்காகவே உங்கள் முன்பாகப் பல ஆண்கள் குனிந்து கும்பிடு போட்டு நின்றனர். உங்களுக்கெதிராக வேட்டிகள் மட்டுமா வரிந்து கட்டின..? வடநாட்டு பைஜாமா குர்தாக்களும், ஆடம்பர கோட் சூட்களும், கூலிப்படை லுங்கிகளும் கூடத்தான் அணி திரண்டன.

உங்களுக்கு நினைவிருக்கிறதா?

டெல்லி மேல் சபையில் நீங்கள் ஆற்றிய உரைகளை திரட்டி புத்தகமாக செய்து அதனை மேற்பார்வையிடும் பணியினை எனக்கு தந்தீர்களே. அந்த பணி நிறை வடைந்து, நீங்கள் அதற்குரிய சன்மானத்தை எனக்கு தர முற்பட்டபோது, உம்மை பற்றி ஒரு புத்தகம் எழுத அனுமதி தந்தால் அதுவே எனக்கு பெரும் சன்மானம் என்று நான் கேட்டேன். அப்போது நீங்கள் சிரித்தபடியே வாக்கு தந்தீர்கள் - ‘உரிய நேரம் வரும்... அப்போது வாய்ப்பு உனக்குத்தான்’ என்றீர்களே. அந்த உரிமையை இப்போது, இப்படி எடுத்து கொள்ளும் நிலை வரும் என்று கனவிலும் நான் நினைத்ததில்லை.

ஒரு நாள் நான் தங்களை பற்றி எழுத வேண்டும் என்கிற எண்ணத்தில்தான் என் னுடன் அடிக்கடி சந்திப்பினை ஏற்படுத்திக் கொண்டீர்களோ என்று இப்போது யோசிக்கிறேன்.

சரி... அதில் எந்த சந்திப்பில் இருந்து துவக்குவது? தமிழகத்தையும் அதன் மக்களையும் நீங்கள் பரிதவிக்க வைத்த அந்த 75 நாட்களில் இருந்தே துவங்குகிறேன்.

உங்களது போராட்ட குணமும் சிங்க முகத்தானின் கருணையும் உங்களை மீண்டும் எங்களிடம் சேர்த்து விடும் என்று உறுதியுடன் நம்பினேன். உடல்நலம் குன்றி அப்போலோவில் அனுமதிக்கப்பட்டீர்கள் என்ற செய்தி வந்ததும், சாதாரண காய்ச்சல் தானே என கவலையை விட்டொழித்தேன். ஆனால் நவராத்திரி கொலு துவங்கும் நாள் சிவராத்திரியாக மாறியது எனக்கு.

தாங்கள் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வந்ததும் பதைபதைத்து போய் காந்தி ஜெயந்தியன்று அப்பல்லோ மருத்துவ மனைக்கு ஓடி வந்தேன். உங்களது நெருங்கிய நண்பன் என்று நீங்கள் அளித் திருந்த உரிமை அங்கே எனக்கு வழிவிட்டது. மற்றவர்களைப்பற்றி நான் அறியேன்! எனக்கு எவ்வித தடைகளும் இல்லை.

கலங்கிய கண்களுடன் இருந்த உங்கள் தோழி சசிகலா அவர்கள் என்னை வரவேற்று நிலைமையை விவரித்தார். கிருமி ஒன்று உமது சுவாசப்பையில் ஆட்டம் போட்டு, அங்கங்களை செயலிழக்க வைக்க முயல் வதாக கண்களில் நீருடன் சொன்னார். ‘‘அக்காவின் ஆன்மீக நண்பர் நீங்கள்... உங்கள் பிரார்த்தனையின் மீது எப்போதுமே அவருக்கு நம்பிக்கை உண்டு. சீரிய சிங்கம் என்று அவர் வழிபடும் நரசிம்மரிடம், என் அக்காவை மீட்டுத் தரும்படி பிரார்த்தனை செய்யுங்கள்’’ என்றார்.

மகாராணியாக ஒய்யார நடை நடக்கும் தாங்கள் கிழிந்த நாராக கிடக்கிறீர்கள் என்பதை அறிந்தபோது துயரத்தில் கண்கள் குளமாயின. தாங்கள் குணமாகி வீடு திரும்புவது திண்ணம் என்று நான்கூற, சசிகலா அவர்கள் நம்பிக்கையுடன் கேட்டுக் கொண்டார். அதன் பிறகு அவ்வப்போது அப்பல்லோ வந்து நீங்கள் பக்தியுடன் உச்சரிக்கும் நரசிம்ம துதியை கூறி வந்தேன். அக்டோபர் 15 பூரண நிலவன்று உமக்காக ஆலயங்களில் தீபங்கள் ஏற்றப்பட்டன. உங்களுக்காக எனது வேண்டுதலும் தொடர்ந்தது.

நவம்பர் நான்கு, வெள்ளிக்கிழமை அலுவலக பணியில் இருந்தேன். இரவு மணி எட்டு நல்ல செய்தியை நல்கினார், உமது உதவியாளர் பூங்குன்றன். ‘அம்மா உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்’ என்றார். அம்மா உணவகங்கள் மூலம் கோடிக்கணக்கான மக்களுக்கு உணவளித்த நீங்கள் சிறிது சிறிதாக தயிர் அன்னத்தை சிரமத்துடன் உட்கொண்டதாக அறிந்தபோது எனக்கு பெரும் நம்பிக்கை ஏற்பட்டது.

மருத்துவமனை வந்து சசிகலா அவர் களிடம் எனது மகிழ்ச்சியைத் தெரிவித்தேன். உங்கள் சிகிச்சை தொடரவிருந்த இரண்டாம் மாடியறை எண் 2035-ல் மருத்துவ ஏற்பாடுகள் நடைபெறுவதையும் கண்டேன். எனதருமை தோழி மீண்டு விட்டார் என்கிற மனநிறை வுடன் இல்லம் திரும்பினேன். அதன்பிறகு, மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்த தாங்கள், நவம்பர் 12 சனியன்று தனியறைக்கு மாறியதாக பூங்குன்றன் வாயிலாகத் தெரிந்து கொண்டேன். நீங்கள் போயஸ் தோட்டத்திற்கு திரும்பும் நாளுக்காக காத்திருந்தேன்.

என்னருமை தோழி..!

அந்த

நம்பிக்கை எல்லாம் பொய்த்துப் போய், அந்தக் கொடுஞ்செய்தி வந்தபோது, இனி உங்களை நேரில் பார்த்துப் பேச வழியில்லை என்று உணர்ந்தபோது... என் நினைவில் வந்தது உங்கள் அறுபதாம் பிறந்த நாளையொட்டி நான் உங்களுக்கு விடுத்த முன்னெச்சரிக்கையும் அதைத்தொடர்ந்து நடந்த அதிர்ச்சிகரமான நிகழ்வுகளும்தான்.

அதிலும் மரணம் குறித்து நீங்கள் தெரிவித்த அந்தக் கருத்து...!

- தொடர்வேன்...

தொடர்புக்கு: narasimhan.ta@thehindu.co.in

தனது அறுபதாவது பிறந்தநாளையொட்டி திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்த ஜெயலலிதா, கோயில் யானைக்குப் பழங்கள் கொடுக்கிறார்.

Published: January 3, 2017 07:57 ISTU

என்னருமை தோழி..!


என்னருமை தோழி..!

2011-ம் ஆண்டில் நடைபெற்ற எனது தந்தை சித்ராலயா கோபுவின் சதாபிஷேகத்திற்கு உங்களை அழைக்க நான் வந்தபோது, எண்பதாம் வயதில் அடியெடுத்து வைப்பது எத்தனை உன்னதமான விஷயம் என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்த நீங்கள், ‘’எனக்கு எண்பதாம் வயது வரும்போது எப்படி கொண்டாடப் போகிறேனோ...” என்று கற்பனையில் ஆழ்ந்தீர்களே... எப்படி அதற்குள் புறப்பட்டு விட முடிவெடுத்தீர்கள்?

வழக்கம்போல், தாங்கள் எடுத்த அதிரடி முடிவா இது?காவலர்கள் நடத்திய ‘அரெஸ்ட்’களின் போதெல்லாம் நெஞ் சுரத்துடன் தலையுயர்த்தி நடந்த நீங்கள், ‘கார்டியாக் அரெஸ்ட்’டுக்கு மட்டும் ஏன் தலை சாய்த்து விட்டீர்கள்..?

எம்.ஜி.ஆர் மரணத்தின்போது அவர் உடலின் அருகில் உங்களுக்கு இடம் தர மறுத்தவர்கள், இப்போது ராணுவ மரியாதையுடன், அவருக்கு அருகிலேயே உங்களுக்கு நிரந்தர இடம் தந்திருக்கிறார்கள். ‘முகம் துடைக்கும் கைகுட்டையையே கையில் வைத்திராமல் பின்னால் அமர்ந்திருப்பவரிடம் தரும் நாசுக்கினை கொண்ட தாங்கள், தங்கள் திருமுகத்தினை சுற்றி அந்த வெள்ளை துணிக் கட்டுடன் மக்கள் முன்பாக எப்படி உறங்கி கிடந்தீர்கள்..?’

பத்திரிகைகளில் வெளிவரும் தங்கள் புகைப்படங்களில் துளியும் பொலிவு குறையாமல் தோன்றவேண்டும் என்பதில் நீங்கள் எத்தனை கவனமாக இருப்பீர்கள்! ஒருமுறை, என்னுடன் வந்திருந்த பத்திரிகை புகைப்படக்காரர் ஒருவர், நின்று பேசிக் கொண்டிருந்த தங்களை, முழங்காலிட்டு அமர்ந்தபடி படமெடுத்தார். அதை சட்டென்று கவனித்து முகம் சிவந்த நீங்கள் அவரைக் கண்டிக்கவில்லையா?

‘இப்படி ‘லோ ஆங்கிளில்’ படமெடுக் காதீர்கள்! நான் சினிமாத் துறையிலிருந்து வந்தவள். கேமரா கோணங்கள் நன்கு தெரியும். அமர்ந்த நிலையில் படமெடுத்தால் எனது நாசி துவாரங்கள் படத்தில் தெரியும். அது நன்றாக இருக்காது’ என்று உங்களின் எதிர்ப்பினை காட்டினீர்களே.

என்னருமை தோழி..!

அப்படிப்பட்ட உங்களை ராஜாஜி அரங்கில் இப்படியா பார்க்க வேண்டும்?

உங்களுக்கு அணிவிக்கப்பட்டிருந்த மெரூன் கரை போட்ட பச்சை சேலை எனக்கு பழைய நினைவுகளை உண்டு பண்ணியது. அறுபதாவது வயதில் ஒரு கோயிலுக்கு அதே போன்ற சேலையில்தான் வந்திருந்தீர்கள். வெகுகாலமாகவே உங்களுக்குப் பிடித்தது பசுமை நிறம்!

அதுபோலவே, உங்கள் தாய் சந்தி யாவுக்குப் பிடித்த மாம்பழ நிறத்தில், பசுமை கரை போட்ட மற்றொரு பட்டு சேலையை பொக்கிஷமாக வைத்திருந்தீர்கள். உங்கள் இல்லத்தில் நடந்த ஒரு பூஜைக்கு நான் வந்தபோதும் அதைத்தான் அணிந்திருந் தீர்கள்.

உங்களைப் பாதித்த மரணங்களில் ராஜீவ் காந்தி மரணமும் ஒன்று. ராஜீவ் காந்தியின் சிதறுண்ட உடலின் படங் களைக் கண்டு எத்தனை முறை வேதனைப் பட்டிருக்கிறீர்கள். ‘இப்படி செய்து விட்டார்களே!' என்று கொதிப்போடு சொல்லியிருக்கிறீர்கள். அந்த படங்களை, ஒரு கட்டத்துக்குப் பிறகும் மீண்டும் மீண்டும் வெளியிட்ட பத்திரிகைகளையும் சினந்தி ருக்கிறீர்கள். ‘அரசியலுக்கு வந்தால் எல்லா அவமானங்களுக்கும் தயாராக வேண்டும். ஆனால் ஒருவர் அமரராகிவிட்ட பிறகுமா அவரை அவமானப்படுத்துவது?’ என்றீர்கள்.

மரணத்தைப் பற்றி நீங்கள் பேசிய முக்கியமான இன்னொரு தருணமும் எனக்கு பளிச்சென்று நினைவில் இருக்கிறது. எங்களது மூத்த பத்திரிக்கையாளர் ஜெயந்த். தங்களது சித்தி மகளின் மரண செய்தியை அறிந்ததும், அதை என்னிடம் சொல்லி, உங்களுக்குத் தெரிவிக்கச் சொன்னார். உறவினர்கள் எவருடனும் தொடர்பில்லாமல் இருந்த உங்களுக்கு சித்தி மகளின் மரணச் செய்தி வந்தடையாமலும் போயிருக்கலாம் என்பதால், நான் அதை உடனே உங்களுக்குத் தெரிவித்தேன். அதற்கு தங்களது பதில் என்னை உலுக்கி விட்டது!

‘‘ஆம்... நீங்கள் குறிப்பிட்ட அந்த சித்தியின் மகள் சிறுவயது தொட்டு எனக்கு மிக நெருங்கியவள். ஆனால், இவ்வளவு காலம் அவர்களை எல்லாம் இடையில் பிரிந்து இருந்துவிட்டு, எனது பிற்பகுதி (’ட்விலைட்’ என்ற வார்த்தையை அப்போது பயன்படுத்தினீர்கள்!) காலத்தில், எதற்கு பழைய நினைவுகளை எழுப்பி மனதைப் பாரமாக்கிகொள்ள வேண்டும்?’’ என்றீர்களே!

‘‘மரணம் குறித்து எனக்கு அனுதாபம் உண்டு. பயம் கிடையாது. என்றாவது ஒருநாள் அது வரத்தான் போகிறது. ஆனால், அது என்னை என் தாயுடன் இணைத்து வைக்கும் ஒரு நல்ல முடிவாகவே இருக்கும்..’’ என்றும் நீங்கள் சொன்னபோது உங்களது மனச்சுமையை என்னால் உணர்ந்துகொள்ள முடிந்தது.

2008-ம் வருடம், பிப்ரவரி மாதம்... தங்களுக்கு 60 வயது நிறைவு... அந்த வருடம் நிகழ்ந்த ஒரு நிகழ்வுதான், என் மீதான உங்கள் நம்பிக்கையை அதிகப்படுத்தியது. கிரகங்களின் பிரயாணத்தை கவனிப்பதில் எப்போதுமே ஒரு சுவாரஸ்யம் எனக்கு. அந்த வருடத்தின் துவக்கத்தில், சில கிரகங் களின் அமைப்பு ஒருவித கலக்கத்தை உண்டுபண்ணியது. அந்த இரண்டாண்டு காலங்களில், அகவை அறுபதைக் கொண் டாடும் இந்தியத் தலைவர்களில் ஒருவர் விண்ணிலிருந்து வீழ்ந்து மடியக் கூடும் என்பதாக கிரகங்களின் சஞ்சாரங்கள் மூலம் அறிந்து கொண்டேன்.

அப்போதுதான் அறுபது வயதான தங்களுக்கு, ‘வான் வழிப் பயணங்களைச் சிறிது காலம் தவிருங்கள்’ என்று ஒரு கடிதத்தை பிப்ரவரி 18, திங்கள்கிழமை அன்று அனுப்பினேன். கடிதம் உங்களை அடைந்ததா அல்லது அதைப் படித்து அலட்சியப்படுத்தி விட்டீர்களா என்று அப்போது நான் அறியேன்.

பிப்ரவரி 22 ஆம் தேதி வெள்ளிக்கிழமை, தாங்கள் திருக்கடையூர் செல்வதற்காக எட்டு இருக்கைகள் கொண்ட விமானத்தில் திருச்சி வரை செல்லக் கிளம்பிவிட்டீர்கள். கேள்விப்பட்டபோது, என்னால் பிரார்த் தனையை தவிர வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை.

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில், இன்ஜினில் கோளாறு ஏற்பட்டு, தாங்கள் திரும்பிச் சென்னைக்கே வந்து விட்டீர்கள். நீங்கள் செல்ல இருந்த மற்றொரு விமானம் 40 நிமிடங்கள் தாமதம் ஆகும் எனத் தெரிந்தது. காத்திருக்க விருப்ப மின்றியோ என்னவோ... தரை வழி மார்க்கமாக காரிலேயே திருக்கடையூர் சென்றீர்கள். அந்த சம்பவத்தை நானும் மறந்தேவிட்டேன்.

அடுத்த மாதம் மார்ச் 7, வெள்ளிக் கிழமை... எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அந்த அழைப்புதான் உங்களுடன் நான் ஒரு புதிய ஆன்மீகப் பயணத்தைத் துவங்குவதற்கான கட்டியத்தைக் கூறியது.

- தொடர்வேன்...

தொடர்புக்கு: narasimhan.ta@thehindu.co.in



யாகாவார் ஆயினும்...

By பழ. நெடுமாறன் | Published on : 03rd January 2017 01:06 AM |

மேய்ப்பவன் சிறிது அயர்ந்தால் வெள்ளாடுகள் வேலியைத் தாண்டி வயலுக்குள் புகுந்து பயிர்களை மேய்ந்துவிடும். இப்போது தமிழகத்தில் இதுதான் நடந்துள்ளது.

மணல் கொள்ளையில் தொடர்புடைய சேகர் ரெட்டி என்பவர் வீட்டில் நடைபெற்ற வருமானவரி சோதனையில் தங்கக் கட்டிகள், கட்டு கட்டாகப் பணம் மற்றும் ஆவணங்கள் கிடைத்திருக்கின்றன. அந்த ஆதாரங்களின் அடிப்படையில் தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த இராம்மோகன்ராவ் வீட்டிலும், தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறையிலும் வருமானவரி அதிகாரிகள் சோதனை யிட்டிருக்கிறார்கள்.
மேலும் அவரது மகன் வீடு மற்றும் அவரது கூட்டாளிகள் சிலரின் வீடுகள், அலுவலகங்கள் ஆகியவற்றில் சோதனை நடத்தப்பட்டு பல இலட்சம் ரூபாய் மதிப்பிற்குப் புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள், பல கோடி ரொக்கம், தங்க நகைகள், தங்க கட்டிகள், சொத்து ஆவணங்கள், அரசு டெண்டர் பணிகளை முறைகேடாகப் பெற்றதற்கான ஆவணங்கள் ஆகியவை சிக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தனது வீட்டிலும், அலுவலகத்திலும் சோதனை செய்யப்பட்டது தவறு என இராம் மோகன் ராவ் கருதினால் அவர் சட்டரீதியான பரிகாரம் தேடியிருக்க வேண்டுமே தவிர, செய்தியாளர் கூட்டத்தைக் கூட்டி ஆத்திரமாக வார்த்தைகளை அள்ளிக் கொட்டியிருப்பது அவர் வகித்தப் பதவிக்கு அழகல்ல.
மறைந்த முதல்வரின் அனுமதியுடன் தான் செயல்பட்டதாக அவர் பெயரை தேவையே இல்லாமல் இழுத்துப் பேசியிருப்பது எந்த விதத்திலும் அவர் வகித்தப் பதவிக்குப் பொருத்தமற்றதாகும். சட்டத்திற்குப் புறம்பான முறையில் செயற்பட்டவர்களுடன் அவருக்கு தொடர்பு இருந்ததா இல்லையா என்பதுதான் இப்போதுள்ள கேள்வியாகும்.
இதற்குரிய பதிலை அளிக்காமல் யாருடைய பெயரையும் இழுத்து அவர் பேசினாலும் அதனால் பயன் இல்லை என்பதை அவர் கொஞ்சமும் உணரவில்லை.

செய்தியாளர்களிடம் அவர் கூறியவற்றில் சில செய்திகளை மறுநாளே மறுத்துமிருக்கிறார். தலைமை செயலாளராகப் பொறுப்பு வகித்தவர், முன்பின் யோசிக்காமலும் விளைவுகளைப் பற்றிச் சிந்திக்காமலும் வார்த்தைகளைக் கொட்டியிருப்பது அப்பதவிக்கு அவர் தகுதியற்றவர் என்பதையே காட்டுகிறது.
ஆட்சிகள் மாறலாம். அமைச்சர்கள் மாறலாம். ஆனால், அரசு என்பது தலைமைச் செயலாளரை மையமாக வைத்துத்தான் செயல்படுகிறது.
அவரின் கீழ் உள்ள அனைத்து அதிகாரிகளின் செயல்பாட்டிற்கும் வழிகாட்டியாகத் திகழ்ந்து நிர்வாகத்தைச் செம்மையாக நடத்த வேண்டிய பெரும் பொறுப்பு தலைமைச் செயலாளரின் தோள்களிலேயே சுமத்தப்பட்டிருக்கிறது.

தலைமைச் செயலாளர் வீட்டிலும், அலுவலகத்திலும் வருமான வரி அதிகாரிகள் சோதனை போட வேண்டுமானால் மத்திய நிதியமைச்சரின் ஒப்புதலில்லாமல் சோதனை போட முடியாது. மாநில அரசிற்கும் இந்த நடவடிக்கை குறித்துத் தெரியாமல் இருந்திருக்க முடியாது. இவற்றையெல்லாம் அவர் சிறிதும் எண்ணிப்பார்க்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

மிகமிகப் பொறுப்பு வாய்ந்த ஒரு தலைமைப் பதவியில் இருந்தவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்படுமானால் அவர் அதை அதற்குரிய தீர்ப்பாயம் அல்லது உயர்நீதிமன்றம் ஆகிய எதிலாவது முறையிட்டுப் பரிகாரம் காணவேண்டும். தான் ஒரு நேர்மையாளன் என்பதை நிரூபித்திருக்க வேண்டும். இவ்வாறு சட்டரீதியில் செயல்பட பல வழிகள் இருக்கும்போது அதற்கு மாறாக செயல்பட்டிருப்பது ஏன்? இவ்வாறு பொறுப்பற்ற வகையில் செய்தியாளர்கள் முன் வார்த்தைகளை அள்ளிக்கொட்டியதற்காகவே அவர் மீது அரசு நடவடிக்கை எடுக்கலாம்.

சிவில் நிர்வாகத்தில் கட்டுப்பாடு, நேர்மை மற்றும் அரசியல் நடுநிலைமை ஆகியவற்றைக் கட்டிக்காப்பதற்காக மத்திய சிவில் நிர்வாக விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. அவற்றை அரசு ஊழியர்கள் மதித்துப் பின்பற்றியாக வேண்டும். அரசு ஊழியர்கள் மீது குற்றச்சாட்டுகள் எழுமானால் விசாரணை நடத்தி அவர்களுக்குத் தண்டனை விதிப்பதற்கான வழிமுறைகள் இவ்விதிகளில் கூறப்பட்டுள்ளன.

மேலும் ஐ.ஏ,எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்காக அகில இந்திய அளவில் சங்கமும் அதற்கு மாநிலங்களில் கிளைகளும் உள்ளன. அதிகாரிகள் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க தனிதீர்ப்பாயங்கள் உள்ளன. இவற்றின் தீர்ப்புக்கெதிராக உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவற்றில் முறையிட உரிமை உண்டு.

மேலும், மத்திய சிவில் நிர்வாக விதிகளின்படி, அரசியலுக்கு அப்பாற்பட்டவர்களாக நடுநிலையுடன் அதிகாரிகள் செயல்படவேண்டும் எனக் குறிப்பிடும் (ஈ) பிரிவு தெளிவாகப் பின்வருமாறு கூறுகிறது:
"அரசு ஊழியர்களாக இருப்பவர்கள் ஊடகங்களிலோ அல்லது பத்திரிகைகளிலோ புனைப்பெயராலோ, தன்னுடைய பெயராலோ அல்லது மற்றொருவர் பெயராலோ மத்திய - மாநில அரசுகள் குறித்து எத்தகைய விமர்சனமும் செய்யக்கூடாது. மேலும் மத்திய-மாநில அரசுகளுக்கிடையே உள்ள உறவுக்குப் பாதிப்பு ஏற்படும் வகையிலும் எதுவும் கூறக்கூடாது' எனத் தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது.

தலைமைச் செயலாளர் பொறுப்பு வகித்த ஒருவர் இந்த விதிமுறைகளை அறியாமல் இருக்க முடியாது. அப்படியிருந்தும் பத்திரிகையாளர்களைக் கூட்டி அவர் வெளியிட்டிருக்கும் கருத்துக்கள், மேலே கண்ட விதிமுறைகளை அப்பட்டமாக மீறியதாகும்.

யாருடைய தூண்டுதலால் அவர் இவ்வாறு செய்தார், அல்லது யாரை மிரட்டுவதற்காக இவ்வாறு அறைகூவல் விடுத்தார் என்று எழுந்துள்ள கேள்விகளுக்கு விடைகாணப்பட வேண்டியது அவசியமாகும்.
மறைந்த முதல்வரின் சாவில் சந்தேகங்கள் இருப்பதாக அரசியல் தலைவர்களில் சிலர் குற்றம் சாட்டியுள்ளனர். இக்கேள்விக்குப் பதில் அளிக்க வேண்டிய பொறுப்பு மத்திய, மாநில அரசுகள் மற்றும் அப்பல்லோ மருத்துவமனை, தில்லி எய்ம்ஸ் மருத்துவர்கள், இலண்டன் மருத்துவர் ஆகியோரைச் சாரும்.

ஆனால், உயர்நீதிமன்றத்தில் யாரோ ஒருவர் தாக்கல் செய்த பொதுநல மனுவை விடுமுறைக் கால நீதிபதிகளான இருவர் விசாரித்துள்ளனர். அவர்களில் ஒருவரான நீதிபதி எஸ். வைத்தியநாதன் மத்திய, மாநில அரசுகள் மற்றும் சிகிச்சை அளித்த மருத்துவர்கள் ஆகியோருக்கு முன்னறிவிப்புக் கொடுத்து அவர்களின் பதில்களைப் பெற்று பிறகு இருதரப்பு வழக்கறிஞர்களின் வாதங்களையும் கேட்டு தனது கருத்தையோ தீர்ப்பையோ வழங்கியிருக்க வேண்டும்.

பொதுநல வழக்குகளை அனுமதிப்பது சம்பந்தமாக உச்சநீதிமன்றம் வழிகாட்டும் விதிமுறைகளை வகுத்துள்ளது. அவ்விதிமுறைகளை நீதிபதி வைத்தியநாதன் அப்பட்டமாக மீறியிருக்கிறார்.

நீதிமன்றத்தில் அவர் பகிரங்கமாக பேசிய முறை நீதித்துறை இதுவரை சந்தித்திராத ஒன்றாகும். மறைந்த முதலமைச்சரின் சாவில் தனக்கே பல சந்தேகங்கள் இருப்பதாகவும் அவர் உயிரோடு இருக்கும் போதும் இறந்த பின்னரும் எத்தகைய உண்மையையும் வெளியில் சொல்லவில்லை என்று கூறிவிட்டு, "இந்த வழக்கு பொதுநல வழக்காக இருப்பதால் தலைமை நீதிபதி தலைமையில் உள்ள அமர்வுதான் விசாரிக்க வேண்டும். ஒருவேளை இந்த வழக்கை நானே விசாரித்தால் கண்டிப்பாக ஜெயலலிதாவின் உடலைத் தோண்டி எடுத்துப் பரிசோதனை செய்ய உத்தரவிடுவேன்' என்று கூறியிருப்பது அவர் வகிக்கும் பதவியின் மாண்பையும் பெருமையையும் சிதைப்பதாகும்.

அதுமட்டுமல்ல "மறைந்த முதல்வரின் உடலைத் தோண்டி எடுத்து, சோதனைச் செய்ய உத்தரவிடுவேன்' என்று கூறியிருப்பது, மறைந்த முதல்வருக்கு இழைக்கப்படும் அவமதிப்பு என்பதைச் சற்றும் உணராமல் பேசியிருக்கிறார். மறைந்த முதல்வரை மதித்துப்போற்றும் மக்களின் உள்ளங்களில் இது எவ்வளவு வேதனையையும், கொதிப்பையும் ஏற்படுத்தியிருக்கும் என்பதைக்கூட அவர் எண்ணிப்பார்க்கவில்லை.
நீதிபதியான இவருக்கு ஒரு கருத்து இருக்கலாம். ஆனால், சொந்தக் கருத்துகளை வெளியிடுவதற்கு ஏற்ற இடம் நீதிமன்றம் அல்ல. சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் நடுநிலை தவறாமல் நின்று நீதியை நிலைநிறுத்த வேண்டியவர் இப்படி தடுமாறலாமா? கடும் சொற்களை வாரிக்கொட்டலாமா? மனம் போன போக்கில் பேசலாமா? இத்தகைய கருத்தோட்டம் கொண்டவர், அந்த வழக்கில் தீர்ப்பளிக்க நேர்ந்தால் முடிவு எப்படி இருக்கும் என்பது அம்பலமாகியிருக்கிறது.

மறைந்த முதலமைச்சரின் சாவில் மர்மம் இருக்கிறது என்று சொன்னால் அதை சட்ட வரம்பிற்கு உட்பட்டு முழுமையாக விசாரித்து உண்மையை கண்டறியவேண்டுமே தவிர மனம் போன போக்கில் எல்லாம் நீதிபதியாக இருக்கக்கூடியவரே பேசக்கூடாது.

தலைமைச் செயலாளர் பொறுப்பு வகித்தவர், தன்மீது எழுந்துள்ள புகாருக்கு உரிய இடத்தில் முறையிட்டு தனது நேர்மையை நிலைநாட்டவேண்டுமே தவிர பகிரங்கமாக எடுத்தேன், கவிழ்த்தேன் என்ற முறையில் பேசுவது மிகமிகப் பொறுப்பற்றதாகும்.

இராம்மோகன்ராவ், நீதிபதி வைத்தியநாதன் ஆகிய இருவரும் வள்ளுவர் கூறிய "யாகாவாராயினும் நாகாக்க' என்ற அறிவுரையை மதிக்காமல் பேசியிருக்கிறார்கள். இத்தகையப் போக்கு நிர்வாகத்திற்கும், நீதித்துறைக்கும் பெருங்கேடு விளைவிப்பதாகும்.

கட்டுரையாளர்:
தலைவர், உலகத் தமிழர் பேரமைப்பு.

Monday, January 2, 2017

நியூ இயர் தீர்மானம் எடுத்திருந்தா நிச்சயம் இந்த ஏழுல ஒண்ணை எடுத்திருப்பீங்க!


நாடு இருக்குற நிலைமையில, நாலா பக்கம் பிரச்னையிலயும், நம்மாளுங்க நியூ இயர் தீர்மானங்கள் எடுக்காம இருக்குறது இல்ல. வழக்கமா புத்தாண்டுல என்ன மாதிரி சபதங்கள் எடுப்பாங்க, அது எப்படி முடியும்-னு பாப்போமா.

1. பட்ஜெட் :

பொதுவா இந்த மாதிரி நியூ இயர் தீர்மானங்கள புது குடும்பஸ்தர்கள் தான் எடுப்பாங்க. 'மச்சான், இன்னையிலேர்ந்து, நான் செலவு பண்ற ஒவ்வொரு ரூபாயும் கணக்குல வெச்சிருக்க போறேன். 50 பைசாவுக்கு பாக்கு வாங்குனா கூட என்னோட கணக்கு நோட்டுல அத எழுதி வைக்கப் போறேன்’னு இன்னைக்கு பாக்கு 15 பாக்கெட், 15*0.50 = 7.50 ரூபாய்ன்னு கணக்கு எழுத ஆரம்பிச்சிருப்பாங்க. அப்படியே பொங்கல் லீவுக்கு ஊருக்கு போயிட்டு வர்றப்ப தாத்தா பாட்டி கிட்ட வாங்குன காச கணக்குல கொண்டு வர மாட்டாங்க.... இப்படியே வரவு எழுதுறதுல கோட்ட விடுவாங்க. அடுத்து 50 பைசா தேன் மிட்டாய், பாக்கு எல்லாம் எழுதுறதுல பிரச்னையா இருக்கு. இனிமே 5 ரூபாய்க்கு மேல செய்யுற செலவு எழுதுனா போதும்னு ஆரம்பிச்சு பட்ஜெட் நோட், ஒரு மாசத்துல எங்க இருக்குன்னு எழுதுவனுக்கே தெரியாது. என்னோட பட்ஜெட் நோட் எங்கடான்னு நம்மகிட்டயே வந்து கேட்டு சீன் வேற போடுவாங்க பாருங்க.

2. தம்முக்கு தம் கட்டு :

இப்படி ஒரு நியூ இயர் தீர்மானம் இல்லாத, நியூ இயரே கிடையாதுதானே? இனிமே ஒரு நாளைக்கு 3 சிகரெட்டுக்கு மேல பிடிக்க மாட்டேன்-னு சபதம். கேட்டா ஜாஸ்தி செலவாகுதுடான்னு வருத்தம். சரி இப்ப ஒரு நாளைக்கு எத்தனை சிகரெட் பிடிக்கிறேன்னு கேட்டா ஒரு பாக்கெட்ம்பாங்க. இந்த மூணு சிகரெட்ட எப்ப எல்லாம் பிடிக்கணும்னு ஒரு நோட்டு போட்டு, நாலு மணி நேர டீம் டிஸ்கஷன் வேற நடக்கும். மூணாவது நாளே நாலாவது சிகரெட்டுக்கு போய் இருப்பான். கேட்டா, அது என் காசுல இல்ல மச்சின்னு தன்னிலை விளக்கம் வேற வரும். அதோட அகில உலக குழப்பமும் வரும். நாம நம்ம காசுல 3 சிகரெட்டுன்னு சபதம் எடுத்தோமா இல்ல, ஒரு நாளக்கு 3 சிகரெட்டுன்னு எடுத்தோமான்னு யோசிப்பாங்க.

சரி இன்னையிலேர்ந்து நம்ம காசுல 3 சிகரெட்டுன்னு கணக்கு வெச்சிப்பானுங்க. ஆனா ஒவ்வொரு குரூப்லயும், தம்ம மட்டும் பாக்கெட் பாக்கெட்டா சப்ளை பண்றதுக்குன்னே ஒருத்தன் பொறந்து வருவான். அவனுக்கு சோப் வாங்கிக் குடுக்குறதுல ஆரம்பிச்சு, துணி துவச்சு கொடுக்குறது வரைக்கும், இவன் செய்வான். இதுவும் ஒரு வாரத்துக்கு தான். அப்புறம் போடா என்னோட சபதத்தை அடுத்த வருஷத்துக்கு தள்ளி வைக்கறேன்னு ஒரு மறு அறிக்கை வெளியாகும். இல்ல வழக்கம் போல 42 பல்லையும் காட்டுவான்.





3. நானே சமைச்சி சாப்டு காச மிச்சப்படுத்துறேன்:

தமிழ்நாட்டுல அப்பா, அம்மாவ விட்டு தனியா வாழ்க்கை நடத்துற பெரும்பாலான பேச்சுலர் அழகிகள் மற்றும் அழகன்களின் ஆஸ்தான பிரச்னை "நல்ல சோறு". இனிமே இந்த பாய்கடையில வேக வெச்ச முட்டைய 10 ரூபாய்க்கு ஒண்ணு வாங்காம , நானே சமைச்சு சாப்பிடப் போறேன்னு ஒரு சபதம் எடுப்பானுங்க பாருங்க. அப்ப ஆம்பள கண்ணகியவே நேர்ல பாக்குற மாதிரி இருக்கும். சட்டசபையக் கூட்டி, தீர்மானம் போட்டு, ஆளுக்கு ஆயிரக் கணக்குல இன்வெஸ்ட் எல்லாம் பண்ணி, அடுப்ப பத்த வெச்சதுக்கப்பறம்தான் தெரியும்.. சமைக்கத் தெரியும்னு சவடால் விட்டவனுக்கு, சாம்பார் கூட வெக்கத் தெரியாதுன்னு. பசங்க தான் இந்த கதின்னா, பொண்ணுங்க அதுக்கும் மேல. என்னடி சாம்பார்ல, சாத்துக்குடி எல்லாம் பிழியறன்னு கத்துற சத்தம் எல்லாம் கேட்கும். இந்த லட்சணத்துல சமைச்சு.. சாப்டு.. காச மிச்சப்படுத்தி....

4. நானும் ஜிம்முக்கு போறேன் ஜிம்முக்குப் போறேன்..:

யாரோ ஒருத்தன் "என்னடா உடம்ப இப்படி வெச்சிருக்கே. உனக்கு என்ன வயசாகுது.. உன் வயசுல என்னோட ஃபோட்டோவ பாரு’ன்னு அவன் அஞ்சரைப் பேக்ல இருக்கற ஒரு ஃபோட்டோவை காட்டுவான். பார்த்துவிட்டு, பொங்கி எழு மனோகரா கணக்காக "நானும் 19 கிலோ வெயிட்டை கொறச்சி, ஃபிட்டாக போறேன்’னு இவன் ஜிம்முக்கு போவான். அங்க போனா, மாத கட்டணம் ரூ.1,000, வருட கட்டணம் ரூ.10,500 மட்டுமேன்னு போர்ட் இருக்கும். எப்படியாச்சும் காச மொத்தமா கட்டுனாலாவது டெய்லி ஜிம்முக்கு போவோம்னு, வீட்டு வாடகை கூட கொடுக்காம மொத்தத்தையும் கட்டிடுவாங்க. அதுக்கு அப்புறம் தான கூத்தே இருக்கு. அடுத்த மாசம் ஆஃபீஸ்ல, கரெக்ட்டா நைட் ஷிப்ட் போடுவாங்க. ஒரு மாசம் பூரா போச்சா. அதுக்கு அடுத்த மாசம் நமக்கே பழகிடும். இதுக்கு எல்லாம் நடுவுல அவன் ஜிம்முக்கு போக, கம்பெனிக்கு ஒரு அடிமைய பிடிப்பான், அவனையும் ஜிம் ஃபீஸ் எல்லாம் கட்டவெப்பான். அந்த அடிமை "என்னடா 10,500 ரூபாய் கட்டி வீணாக்கிட்டியே’ன்னு கேட்டா..., ‘அடிக்கடி ஜிம்முக்கு போனா என்னாகும் தெரியுமா?’னு அவன் காதுல ரகசியம் சொல்லி அவனையே பயமுறுத்துவான். இந்த மேட்டர்ல ஜிம்முக்கு பதிலா ஸ்போக்கன் இங்கிலீஷ் / ஹிந்தி / டாலி / சைக்கிளிங் / மராத்தான் /கீபோர்ட் க்ளாஸ்னு எதை வேணா போட்டுக்கோங்க!

5. நான் வெஜ் :

இந்த வருஷத்தோட, இந்த அசைவத்த விடப் போறேன்னு ஜனவரி 01-ம் தேதி இதுக்குன்னே சபரிமலைக்கு மால போடுவாய்ங்க. ஏன்டா, விடுறேன்னு கேட்டா, வழக்கம் போல காசு, ரெண்டாவது ஹெல்த்-ன்னு க்ளிஷே டயலாக் வரும். சரி பய திருந்துறான்னு சீண்டாம இருப்போம். அவனும் மலைக்குப் போய்ட்டு வந்து ஒரு ரெண்டு வாரம் சத்தம் காட்டாம, சரணம் ஐயப்பான்னுகிட்டு இருப்பான். ஒருநாள், ஒரு நல்ல ரெஸ்டாரண்டுல அசைவத்தை டேஸ்ட் பண்ண முடியாதுன்னு நெனைக்கறப்பதான், சபதம் சலனத்துக்கு உள்ளாகும். சரி சாப்பிடுறதுன்னு முடிவு பண்ணிட்டு " அறிந்தும் அறியாமலும், தெரிந்தும்......" சொல்லிட்டு வேட்டிய மடிச்சி கட்டிட்டு ராஜ்கிரண் தம்பியா மாறி வருவான் பாருங்க..... அதுக்கப்புறம் என்ன, வழக்கம் போல டெய்லி ராத்திரி 11.30 மணிக்கு கூட சில்லி பீஃப் ரெண்ட பார்சல் வாங்கி ரூமுக்கு வந்தாச்சும் சாப்டுட்டு தான் படுப்பாரு. டெய்லி பில்லுல 120 ரூபாய் எகிறும்.



6. சரக்கு, உன் மேல கிறுக்கு :

‘யப்போவ்வ்வ்... இன்னையோட இந்தக் குடிய விட்டுடணும்’-ன்னு மாசத்துல ஒருநாளாவாது சொல்லாத குடிகாரனுகளே இருக்க முடியாது. அப்படி இருக்குற குடிகாரனுங்க, ஏதோ ஒரு வேகத்துல இனி குடிக்க மாட்டேன்னு சபதம் எடுத்துட்டு, டிசம்பர் 31-ம் தேதி ராத்திரிய கடக்குற அழக பாக்கணுமே. என்ன படம் பாக்குறோம்ன்னே தெரியாம டிவி முன்னாடி உட்கார்ந்திருப்பாய்ங்க. என்ன சாப்பிடுறோம்னு தெரியாம, கெடைக்கிறத எல்லாம் உள்ள தள்ளுவாய்ங்க.

இப்டி பல கட்ட மனப் போராட்டத்துக்கு அப்புறம், ஒருத்தன் மச்சி " ஃபுல்லோட உனக்காக வெயிட் பண்றோம் வாடான்னு ஒரு வாட்ஸ் அப், உடனே நெட்டை ஆஃப் பண்ணிடுவான். அடுத்தவன் ஃபோனே பண்ணிடுவான். என்ன பிராண்ட் சரக்கு, என்ன சைட் டிஷ் இருக்கு, எத்தன பேருன்னு டீட்டெயில் வாசிப்பான். டேய் நான் குடிக்கிறத விட்றேன்டான்னு நியூ இயர் தீர்மானங்கள்-னு சொல்லுவோம்.

அப்ப தான் அந்த லா பாயிண்ட நம்ம ஃப்ரெண்ட் சொல்லுவான். "டேய் இன்னக்கி டிசம்பர் 31, அடுத்த வருஷத்துல இருந்துதானேடா நீ குடிக்க மாட்ட. இப்ப வா, உன் வாழ்கையோட லாஸ்ட் குடியா இது இருக்கட்டும் "-னு ஒரு பொறி தட்டுவான். என்ன கருமமோ இந்தக் குடிகாரனுங்க வாழ்க்கைல அந்த லாஸ்ட் குடிய மட்டும், யாராலயும் நிர்ணயிக்க முடியல.

7. எடுடா டைரிய எழுதுடா கதைய!

இந்த வருஷத்துல இருந்து ஒழுங்கா டைரி எழுதணும். பின்னால நாம படிச்சுப் பார்க்கறப்ப நல்லா இருக்கும்னு தோணும். ஒரு நல்ல டிசைன் டைரி, பார்த்து பார்த்து ஒரு புது பேனா வாங்கிட்டு வந்து வெப்பாங்க. டைரி மேல பேனாவை க்ராஸா வெச்சு ஒரு ஃபோட்டோ எடுத்து ட்விட்டர்லயோ, இன்ஸ்டாலயோ போட்டுக்குவாங்க. மொத நாள் எழுத்துல கொண்டாட்டம் இருக்கும். ரெண்டாவது நாள் கொஞ்சம் கம்மியாகி பாதிதான் எழுதுவோம். அப்பறமா ‘எல்லாத்தையும் எழுதணுமா? ப்ச்.. எதுக்கு?’னு தோணி, ‘Gone office. Hectic Day. Target Kills'ன்னு குட்டி நோட்ஸோட முடியும் .பத்து நாள் ஒரு மாதிரி எழுதி அதுக்கப்பறம் அக்கா பொண்ணோ, அண்ணன் பையனோ எடுத்து கிறுக்கத்தான் அந்த டைரி யூஸ் ஆகும்! இதையெல்லாம் எப்பயோ சொல்லிட்டார்ல நம்ம சுஜாதா!




2

தூக்கம் தொலைத்தவர்கள் கவனத்துக்கு! நலம் நல்லது - 40 #DailyHealthDose

தூக்கம்

உலகின் மிக உன்னதமான இயந்திரம் மூளை! அதன் தங்கு தடையில்லா செயல்பாட்டுக்கு ஆழ்ந்த தூக்கம் அவசியத் தேவை. உற்சாகமாகச் சிந்திக்க, நினைவாற்றல் மிளிர, நோய் இல்லாமல் வாழ, உடல் இயக்கத்துக்கு அவசியமான சுரப்புகளையெல்லாம் தேவையான அளவில் சுரப்பதற்குத் தூண்ட... மேலும் பல செயல்பாடுகளுக்கு தினசரி 6 முதல் 7 மணி நேரத் தூக்கம் அவசியம், கட்டாயம். அதிலும் கும்மிருட்டில் தூங்க வேண்டும்.

அது என்ன கும்மிருட்டு உறக்கம்? நள்ளிரவு வரை படுக்கையறை டி.வி-யில் கிரிக்கெட் மேட்சோ, படமோ பார்த்துக்கொண்டே அசந்து தூங்குவதற்குப் பெயர் தூக்கம் அல்ல. `விடி விளக்கு வெளிச்சம்கூட இல்லாத இருட்டில் நடைபெறும் தூக்கத்தில்தான் உடல் இயக்கங்களுக்கு நல்லது செய்யும் மெலடோனின் சுரக்கும். சின்ன வெளிச்சத்திலும் அந்தச் சுரப்பு குறைந்துவிடும்’ என்கிறது நவீன விஞ்ஞானம். இந்த மெலடோனின் சுரப்புதான் நம் உடல் இயந்திரத்தை இரவில் சர்வீஸ் செய்து, மறுநாள் ஓட்டத்துக்குத் தயார்நிலையில் வைக்கிறது; புற்றுநோய் போன்ற பல நோய்கள் வராமல் தடுக்கிறது. பகல் வெளிச்சத்தில் 10 மணி நேரம் தூங்கினால்கூட மெலடோனின் சுரக்காது. அதனால்தான் அந்தக் காலத்திலேயே சித்தர் தேரையர், `பகலுறக்கஞ் செய்யோம்’ எனப் பாடியிருக்கிறார்.



ஏன் தூங்க வேண்டும்?

ஒருவர், தினமும் நைட் ஷிஃப்ட் வேலை பார்ப்பவராக இருப்பார்; இன்னொருவர், நள்ளிரவில்தான் வீட்டுக்கு வருபவராக இருப்பார்; மற்றவர், சரியான நேரத்தில் வீட்டுக்கு வருபவராக இருந்தாலும், தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுப்பவராக இருப்பார். இந்த மூவருக்குமே மெலடோனின் சுரப்பில் பிரச்னை இருக்கும் வாய்ப்புகள் அதிகம்.

தூக்கமின்மை, முதலில் வாய்வுத் தொல்லையை ஏற்படுத்தும். பிறகு, உயர் ரத்த அழுத்தத்தை உண்டாக்கும். அதனைத் தொடர்ந்து நரம்புத் தளர்ச்சி வரும். இறுதியாக, மன உளைச்சலை ஏற்படுத்தி, மன நோயில் கொண்டுபோய் தள்ளிவிடும். சட்டையைக் கிழித்துக்கொண்டு, கல்லெடுத்து அடிப்பவர்கள், மனநல காப்பகங்களில் இருப்பவர்கள் மட்டும் அல்ல... நம்மில் ஐந்தில் ஒருவர் மனநோயாளியாகத்தான் இருக்கிறோம். உறக்கம் இல்லாமல், மன மகிழ்ச்சி இல்லாமல், எது மகிழ்ச்சி என அறியாமல், எதற்கும் சிரிக்காமல், எதிலும் நிறைவுகொள்ளாமல் பலரும் மன நோயாளியாகத்தான் இருக்கிறோம். இதற்கு, சரியான உறக்கம் இன்மையே முக்கியக் காரணம்.



வரும்போது தூங்கிக்கொள்ளலாம் என்பதும் உடலுக்கு நல்லதல்ல. தூக்கம் இல்லாத மூளையின் ரத்த நாளங்கள் வலுவிழக்கும். உறக்கத்துக்கென மெனக்கெட வேண்டும். இரவு உணவை பரோட்டாவில் ஆரம்பித்து, ஃபலூடாவில் முடிக்கும் பழக்கம் உறக்கத்துக்கு எதிரி. நன்றாக வீசிப்புரட்ட, ஜவ்வாக இழுத்த இழுப்புக்கெல்லாம் வர, அதிக அளவில் மாவில் குளூட்டன் சேர்க்கப்படுகிறது. இந்த குளூட்டன் சிலருக்கு அஜீரணத்தையும், சிலருக்கு குடல் புற்றுநோயையும் ஏற்படுத்திவிடும். குளூட்டன் ஜீரணத்தைத் தாமதப்படுத்துவதால், கண்டிப்பாக உறக்கம் கெடும். எனவே, இரவில் எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவுகளையே சாப்பிட வேண்டும்.



நல்ல தூக்கம் வேண்டுமா?

* இரவுகளில் கொஞ்சம் பழத்துண்டுகள், கம்பங்குருணை அரிசியில் வெங்காயம், மோர் சேர்த்துப் பிசைந்த சாதம் சாப்பிடலாம். கடைசி உருண்டையைச் சாப்பிடும்போதே, உறக்கம் கண்ணைச் சுழற்றிக்கொண்டு வரும்.

* பணி இடங்களில் இருந்து தாமதமாக வீடு திரும்புவோர், இரவு உணவை வேலை பார்க்கும் இடத்திலேயே 8 மணிக்குள் சாப்பிட்டுவிடுவது நல்லது. தூங்குவதற்கு முன் பழம் மட்டும் சாப்பிட்டுவிட்டுப் படுக்கலாம். தூக்கத்துக்கும் உடல்நலத்துக்கும் இது மிகவும் நல்லது.

* ஆழ்ந்த தூக்கம் கிடைப்பதற்கு, தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டியது அவசியம். `மொட்டை மாடியில் நடக்கிறேன்... வீட்டு வேலை செய்கிறேன்’ என்றெல்லாம் காரணங்கள் சொல்லாமல், தினமும் 45 நிமிடங்களுக்கு மித வேக நடை நடப்பது, தூக்கத்தைச் சீர்ப்படுத்தும்; மனதை ஒருநிலைப்படுத்தி தூங்கவைக்கும்.

* கசகசா பால், சாதிக்காய்த் தூள் போட்ட பால், அமுக்கராக்கிழங்குப் பொடி, மாதுளம்பழம் இவையெல்லாம் தூக்கம் வரவழைக்கும் இயற்கை உணவுகள் அல்ல... மருந்துகள்!

வீட்டில், வாழ்க்கைத்துணை, குழந்தைகளிடம் நீடித்து நிலைத்திருக்கும் அன்பு, செல்ல அரவணைப்பு எல்லாமே மன அமைதியைத் தரும்; நல்ல தூக்கத்தையும் தரும். இதை மனதில் கொள்வோம். நல்ல தூக்கத்தால் மட்டுமே உண்மையிலேயே இரவை `குட்நைட்’ ஆக்க முடியும்!

NEWS TODAY 31.01.2026