Tuesday, February 7, 2017

இந்தியாவில் 60 சதவிகித போலி வக்கீல்கள்!


சட்டக் கல்வியைக் கூட சரியாக முடிக்காத ஏராளமானோர் போலி பட்டங்களைப் பெற்று நாட்டில் பல நீதிமன்றங்களிலும் பணியாற்றி வருவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இச்சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றமும் கவலை தெரிவித்து இருந்தது.

இதனால் வக்கீல் சங்கமான இந்திய பார்கவுன்சில், போலி வழக்கறிஞர்களை கண்டறியும் செயலில் இறங்கியது. அதன்படி மாநில அளவில் 60 சதவிகித போலி வழக்கறிஞர்கள் செயல்படுவதாக கூறப்பட்டுள்ளது. அதன்படி இந்தியாவிலுள்ள 20 லட்சம் வழக்கறிஞர்களில், 12 லட்சம் பேர் போலியான நபர்கள் என அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக வட மாநிலங்களில்தான் போலியான வழக்கறிஞர்கள் அதிகமாக செயல்படுவதாகவும், இவர்களால் ஏராளமான ஏழை எளிய பொதுமக்கள் ஏமாற்றப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து எல்லா வழக்கறிஞர்களும் தங்கள் படிப்பு சான்றிதழ், பட்டம் பெற்ற சான்றிதழ் உள்ளிட்ட ஆதாரங்களை தங்கள் மாவட்ட வக்கீல் சங்கத்தில் சரிபார்க்க ஒப்படைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. பின்னர் மாவட்ட சங்கத்தினர், தேசிய பார் கவுன்சிலுக்கு அனுப்பி வைப்பார்கள். இதன் பின்னரே நாட்டிலுள்ள போலி வழக்கறிஞர்களின் எண்ணிக்கை துல்லியமாக தெரியவரும்.

Monday, February 6, 2017

தமிழகத்தில் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை: நடிகர் ஆனந்த் ராஜ்

andaraj
சென்னை: அதிமுக சட்டப்பேரவைக்குழுத் தலைவராக கட்சியின் பொதுச் செயலாளரான வி.கே.சசிகலா ஞாயிற்றுக்கிழமை ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து அவர் தமிழக முதல்வராக பதவி ஏற்க இருப்பது குறித்து தமிழகத்தில் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை என்று நடிகர் ஆனந்த் ராஜ் கூறியுள்ளார்.

ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுகவில் இருந்து வெளியேறிய நடிகர் ஆனந்த் ராஜ், அதிமுக சட்டப்பேரவைக்குழுத் தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் பன்னீசெல்வம் தலைமையில் நல்ல ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அதிமுக தற்போது எடுத்துள்ள இந்த முடிவு எதற்கு என்று தெரியவில்லை. எதற்காக இந்த அவசரம் என்றும் புரியவில்லை. யாருக்காக இந்த அவசரம் என்பது மக்களுக்கு புரியவில்லை.
காலாண்டு பரிட்சை எழுதிய பள்ளி மாணவர்களிடம் தமிழகத்தின் முதல்வர் யார் என்றால் 'அம்மா' என்று சொல்லி இருப்பார்கள். அரையாண்டு பரிட்சை எழுதிய மாணவர்களிடம் அதே கேள்வியை கேட்டால் ஓபிஎஸ் என்று சொல்லி இருப்பார்கள். முழு ஆண்டு பரிட்சையில் தமிழக முதல்வர் யார் என்றால் இனிதான் மாணவர்கள் படிக்க வேண்டும்.

ஜனநாயகத்தில் யாரும் அரசியலுக்கு வரலாம். அதனை யாரும் தடுக்க முடியாது. ஆனால், முதல்வர் பொறுப்பு மக்கள் தரும் பொறுப்பு. அந்த உரிமை மக்களுக்கே உள்ளது. அதனை நிதானமாக சிந்தித்து செயல்படுவது அவசியம். தானாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
இன்று அம்மாவின் ஆன்மா சென்னை கடற்கரையில் உறங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால், தொடர்ந்து சென்னை கடற்கரைக்கு சோதனை வந்துகொண்டுதான் இருக்கிறது. இதையெல்லாம் பார்க்கும்போது, அம்மா நமக்காக ஏதோ சொல்ல வருவதுபோல் தெரிகிறது. ஜனநாயக முறைப்படி மக்கள் தேர்ந்தெடுத்து ஒருவரை முதல்வராக கொண்டு வந்தால் அவரை முதல்வராக ஏற்றுக் கொள்ளலாம். அதுபோன்று மறுதேர்தல் வந்து அதில் சசிகலா மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டால் என்னுடைய முதல்வரும் சசிகலாதான்.
சொத்துக் குவிப்பு வழக்கு மீண்டும் வந்து சசிகலா தண்டிக்கப்படும் போது, மீண்டும் ஓபிஎஸ்தான் முதல்வராக பதவியேற்பார்.

தமிழகத்தில் தற்போது நடந்து கொண்டிருக்கும் சூழ்நிலையை மத்திய அரசு மிக கவனமாக கவனிக்கும் என்று நினைக்கிறேன். ஆளுநர், பலம் வாய்ந்த எதிர்க்கட்சியின் செயல் தலைவராக உள்ள ஸ்டாலின் இதனை நல்ல முறையில் கையாள வேண்டும் என்றும் விரும்புகிறேன் என்று ஆனந்த் ராஜ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் வரலாறை நினைத்து மு.க.ஸ்டாலின் வேதனை

MK Stalin
ஒரு ஓட்டுக்கு, மூன்று முதல்வர்களைச் சந்தித்த வரலாறு தமிழகத்தையே சேரும் என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வேதனை தெரிவித்தார்.

திருச்சி விமான நிலையத்தில் இன்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், 'ஒரு ஓட்டுக்கு, மூன்று முதல்வர்களைச் சந்தித்த வரலாறு தமிழகத்தையே சேரும். சொத்துக் குவிப்பு மேல்முறையீடு வழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பு வர உள்ளது. அதன்பிறகு, பன்னீர்செல்வம் மீண்டும் தமிழக முதல்வராவார். முதல்வர் பதவிக்கு நடக்கும் போட்டி கேலிக்கூத்தாக உள்ளது. அதிமுக உள்ளாட்சி தேர்தலை தொடர்ந்து, தள்ளிவைக்க எடுக்கும் நடவடிக்கை, அதன் பயத்தை காட்டுகிறது' என்றார்.

இதனிடையே, திருவாரூரில் இன்று செய்தியாளர்களிம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மக்களின் கருத்துகளுக்கு நேர்மாறாக அதிமுக எம்எல்ஏக்கள் செயல்பட்டுள்ளனர் என்றார்.

மேலும், நந்தினி வழக்கில் காவல்துறையினர் அலட்சியமாக செயல்பட்டதாக அவர் குற்றம்சாட்டினார்.

சசிகலாவுக்கு, டி.ராஜேந்தர் சரமாரி கேள்வி!


தமிழக முதல்வராக பதவியேற்க உள்ள அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு, லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை ஆயிரம்விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா, 75 நாள் சிகிச்சைக்கு பின்னர் கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி உயிரிழந்தார். அன்று இரவே முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றுக் கொண்டார். புதிய அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.

பின்னர், நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலாவை தேர்ந்தெடுப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் சசிகலா, அதிமுக பொதுச் செயலாளராக பதவியேற்றுக் கொண்டார்.

இதனிடையே, அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. அப்போது, அ.தி.மு.க சட்டப்பேரவை தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால், முதல்வராக சசிகலா பதவியேற்பது உறுதியானது. இதையடுத்து, முதல்வர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தார். இதன் கடிதத்தை ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு அனுப்பி வைத்தார். அவரது ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொள்வதாக ஆளுநர் இன்று அறிவித்தார். சசிகலா முதல்வராக பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு எழுந்து வருகிறது.

இந்த நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய லட்சிய தி.மு.க தலைவர் டி.ராஜேந்தர், அவசர அவசரமாக சசிகலா முதல்வராவதற்கான அவசியம் என்ன என கேள்வி எழுப்பினார்.

சசிகலா மீது சிலர் வெறுப்பு கொள்ளும் நிலை இருக்கிறது என்றும், ஜனநாயகத்திற்கு விரோதமாக சசிகலா முதல்வராவதை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றும் கூறினார்.

மேலும், சசிகலா முதல்வராவதை ஜெயலலிதாவின் ஆன்மாகூட ஏற்காது என்றும் டி.ராஜேந்தர் தெரிவித்தார்.

படம்: ஜெரோம்

பன்னீர்செல்வத்தின் ராஜினாமாவை ஏற்றார் ஆளுநர்!

Panneersevam

அதிமுக எம்.எல்.ஏக்கள். கூட்டத்தில், சசிகலா அதிமுக சட்டமன்றக் கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து முதல்வர் பன்னீர்செல்வம், ஆளுநருக்கு ராஜினாமா கடிதம் அனுப்பியிருந்தார். இந்நிலையில், பன்னீர்செல்வத்தின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்வதாக ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று அறிவித்துள்ளார். மேலும், சசிகலா முதல்வராக பதவி ஏற்கும் வரை பன்னீர்செல்வம் முதல்வர் பதவியில் நீடிப்பார் என்றும், அதுவரை அமைச்சரவையை தொடர வேண்டும் என்றும் ஆளுநர் கோரிக்கை விடுத்துள்ளார்.

எண்கணித அடிப்படையில் புதிய அமைச்சர்கள்? - சசிகலா வியூகம்!


தமிழ்நாட்டில் ஒருவழியாக, சசிகலா தலைமையில் புதிய அமைச்சரவை வரும் 9-ம் தேதி பதவியேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு வசதியாக, முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். சொந்த காரணங்களுக்காக தான் பதவி விலகுவதாக தனது ராஜினாமா கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக ஆளுநர் பொறுப்பு வகிக்கும் வித்யாசாகர் ராவ், டெல்லி சென்றுள்ளார். அவர் இன்று மாலை சென்னை திரும்புகிறார். சென்னை ஆளுநர் மாளிகையில், இன்று இரவோ அல்லது நாளை காலையே முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அ.தி.மு.க சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள வி.கே. சசிகலா ஆகியோர் ஆளுநரைச் சந்திக்க உள்ளனர். அப்போது, ஆளுநரிடம் புதிய அரசு அமைக்க தனக்கு அழைப்பு விடுமாறு சசிகலா கேட்டுக் கொள்வார். ஆளுநர் அழைப்பு விடுத்ததும், பதவியேற்கவுள்ள அமைச்சர்களின் பட்டியல் வழங்கப்படும் என்று அ.தி.மு.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க வெற்றிபெற்று மீண்டும் அவரது தலைமையில் ஆட்சி அமைந்தபோது, ஜெயலலிதா முதல்வராகவும், 32 அமைச்சர்களும் பொறுப்பேற்றனர். ஆனால், அதன் பின்னர் எஸ்.பி சண்முகநாதன் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டு, புதிய அமைச்சராக மாஃபா.பாண்டியராஜன் அமைச்சரானார். ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, டிசம்பர் 5-ம் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்ததும், டிசம்பர் 6-ம் தேதி அதிகாலை ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதே அமைச்சரவை பதவியேற்றுக் கொண்டது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது என்னென்ன துறைகளை எந்தெந்த அமைச்சர்கள் வகித்து வந்தார்களோ, அவர்கள் அனைவரும் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தனர். ஜெயலலிதா வகித்த துறைகளுடன் நிதித்துறையையும் ஓ.பன்னீர் செல்வம் வகித்தார்.

தற்போது சசிகலா தலைமையில் அமையவிருக்கும் புதிய அமைச்சரவையிலும் தற்போதுள்ள அனைத்து அமைச்சர்களும் இடம்பெறுவார்கள் என்று கார்டனுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சில அமைச்சர்களின் துறைகளில் மாற்றம் செய்யப்படலாம் என்று தெரிகிறது.

எண்கணித ஜோதிடத்தில் நம்பிக்கை கொண்ட சசி!

சசிகலாவைப் பொறுத்தவரை ஜோதிடம் மற்றும் எண் கணித ஆரூடத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர். ஒரு கட்டட பூமி பூஜை என்றாலே கார்டனின் ஆஸ்தான ஜோதிடர்களை வரவழைத்து, அவர்கள் சொல்லும் நாள் மற்றம் நேரத்திலேயே ஆரம்பிப்பாராம். ஜெயலலிதா உயிரோடு இருந்தபோதும் இதே நிலைதான். தற்போது ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், இரண்டு மாதம் கழித்து, முதல்வராக பதவியேற்க இருப்பதும் ஜோதிடர்களின் கணிப்பின் அடிப்படையிலேயே என்கின்றனர் கார்டன் தரப்பினர். மேலும், ஓ.பன்னீர் செல்வத்திற்கு அவர், முந்தைய ஆட்சியின் போது வகித்த நிதித்துறையே மீண்டும் வழங்கப்படும் என்று தெரிகிறது. தற்போது எஸ்.பி. வேலுமணி வகித்துவரும் நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை, கோபி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், மூத்த நிர்வாகியுமான கே.ஏ. செங்கோட்டையனுக்கு வழங்கப்படும் என்று தெரிகிறது. இதேபோல் தஞ்சாவூரில் இருந்து அண்மையில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ரங்கசாமிக்கும் அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தவிர, கரூர் தொகுதியில் இருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள செந்தில்பாலாஜிக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுமா என்பதில் இருவேறு கருத்துகள் உள்ளன. அவர், ஜெயலலிதாவால் ஓரங்கட்டப்பட்டவர். அவரை மீண்டும் அமைச்சரவையில் சேர்ப்பதால் தேவையற்ற சர்ச்சை ஏற்படும் என்று சசிகலா கருதுவதாகவும் தெரிகிறது. என்றாலும் எண் கணித அடிப்படையில் செங்கோட்டையன் தவிர மேலும் 2 அல்லது 3 பேருக்கு அமைச்சர் பதவி அளிக்கப்படலாம் என்று தெரிகிறது. 

இதன்மூலம் சசிகலா தலைமையில் அமையவிருக்கும் புதிய அமைச்சரவையில் அவரையும் சேர்த்து 36 பேர் இடம்பெறுவார்கள் என்று கார்டனுக்கு நெருக்கமான அ.தி.மு.க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த எண்ணிக்கை 9 என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயலலிதா இருந்தபோது நடைபெற்ற பதவியேற்பு நடைமுறையைப் பின்பற்றி, சசிகலா முதல்வராக முதலில் தனியாகப் பதவியேற்ற பின்னர், அமைச்சர்கள் அனைவரும் இரண்டு அல்லது மூன்று குழுக்களாகச் சேர்ந்து பதவியேற்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அநேகமாக ஆளுநர் மாளிகையில் வரும் 9-ம் தேதி பதவியேற்பு விழா இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-சி. வெங்கட சேது

'முதலில் உங்கள் செல்வாக்கை நிரூபியுங்கள்!'  - சசிகலா தூதுவரிடம் கடுகடுத்த பா.ஜ.க.


#VikatanExclusive



கார்டன் வட்டாரத்தை பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது அந்நிய செலாவணி மோசடி வழக்கு. மன்னார்குடி உறவுகள் மீதான வழக்குகளை துரிதப்படுத்தத் தொடங்கிவிட்டது மத்திய அரசு. ' மத்திய அரசிடம் நெருங்குவதற்கு கார்டன் தரப்பினர் கடும் முயற்சி மேற்கொண்டுள்ளனர். அவர்களுடைய எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை' என்கின்றனர் பா.ஜ.க வட்டாரத்தில்.

அ.தி.மு.கவின் புதிய பொதுச் செயலாளர் சசிகலா மற்றும் அவரது அக்கா வனிதாமணியின் மகன் டி.டி.வி.தினகரன் ஆகியோர் மீது, 1996ம் ஆண்டில் அந்நிய செலாவணி மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளை சென்னை, எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் விசாரித்து வந்தது. கடந்த ஆண்டு மே மாதம் 18ம் தேதி, இந்த வழக்கில் இருந்து சசிகலாவையும் தினகரனையும் விடுவித்தது நீதிமன்றம். இதனை எதிர்த்து, மத்திய அமலாக்கப் பிரிவு உதவி இயக்குநர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில், ' வெளிநாட்டில் இருந்து சுசிலா என்பவரது பெயருக்கு வந்த 19 லட்சத்து 91 ஆயிரத்து 610 அமெரிக்க டாலரை, சித்ரா என்பவருக்குக் கடனாகக் கொடுத்துள்ளார். இந்தப் பணத்தில் 3 கோடி 52 லட்சத்தை சசிகலாவுக்கு கடனாக கொடுத்துள்ளார். 25 காசோலைகளில் 2 காசோலைகளை வி.என்.சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு கொடுத்துள்ளார். மீதமுள்ள காசோலைகள் எந்த பெயரும் குறிப்பிடாமல் கொடுக்கப்பட்டுள்ளன. சசிகலாவுக்கு வந்துள்ள பெரும் தொகை, முறையான அனுமதியின்றி வந்துள்ளது. எனவே, இவர் மீதான குற்றச்சாட்டுக்கு போதிய முகாந்திரம் உள்ளது' எனக் குறிப்பிட்டிருந்தார். அதேபோல், தினகரன் விடுவிக்கப்பட்டதை எதிர்த்தும் அமலாக்கத் துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதியரசர் சொக்கலிங்கம், பணப் பரிமாற்றம் நடைபெற்றதாக கூறப்படும் நிறுவனங்களின் அன்றாட நிர்வாகத்தில் சசிகலா உள்ளிட்டோர் பங்கெடுத்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. இதனால் சசிகலா, தினகரன் ஆகியோர் அந்நிய செலாவணி வழக்கை எதிர்கொள்ள வேண்டும். சசிகலா தன்னை விடுவிக்கக் கோரி தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. சசிகலா, தினகரனை விடுவித்து எழும்பூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது' என உத்தரவிட்டார்.

" நடராசன் மீதான லெக்சஸ் கார் இறக்குமதி வழக்கு வேகம் பிடித்துள்ளது. ஜெயலலிதா உயிரோடு இந்த சமயத்தில் அந்நிய செலாவணி மோசடி வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதைக் கொண்டாடினார் சசிகலா. தினகரன், சுதாகரன் மீதான வழக்குகளும் நெருக்க ஆரம்பித்துவிட்டன. மன்னார்குடி உறவுகளை குறிவைத்து, மத்திய அரசு வலுவாக இறங்கி அடிக்க ஆரம்பித்துவிட்டதை அதிர்ச்சியோடு கவனிக்கிறார் சசிகலாவின் கணவர் நடராசன். ' மோடி நல்லவர்' என பகிரங்கமாக பேசினாலும், மத்திய அரசின் பார்வை கார்டன் பக்கம் திரும்பவில்லை" என விவரித்த பா.ஜ.க நிர்வாகி ஒருவர், " தமிழகத்தில் தாங்கள் நினைத்தப்படி எதுவும் நடக்கவில்லை என்ற ஆதங்கம் மன்னார்குடி உறவுகளுக்கு ஏற்பட்டிருக்கிறது. பன்னீர்செல்வத்திற்கு பிரதமர் அலுவலகம் கொடுக்கும் முக்கியத்துவதை அவர்கள் ரசிக்கவில்லை. ' காங்கிரஸ் பக்கம் நாங்கள் செல்லவில்லை. குடியரசுத் தலைவர் தேர்தலில் உங்களுக்கு ஆதரவு கொடுக்கிறோம். நீங்கள் சொல்வதைக் கேட்கிறோம்' என டெல்லி லாபி மூலம் பா.ஜ.க தலைமைக்கு வேண்டியவர்களிடம் பேசியுள்ளனர் கார்டன் தரப்பினர். இதற்காக அனுப்பப்பட்ட தூதுவரிடம் பேசிய பா.ஜ.க அகில இந்திய நிர்வாகி ஒருவர், ' குடியரசுத் தலைவர் தேர்தலை நாங்கள் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. நாங்கள் நிறுத்தும் வேட்பாளரை நீங்கள் எதிர்த்தால், தி.மு.க எங்களுக்கு ஆதரவு கொடுக்கும். உங்களிடம் மொத்தமாக 5 சதவீத வாக்குகள் இருக்கின்றன. தி.மு.கவிடம் ஒன்றரை சதவீத வாக்குகள் உள்ளன. நவீன் பட்நாயக், நிதிஷ் குமார், சந்திரசேகர ராவ், ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோர் எங்கள் வேட்பாளருக்கு ஆதரவு கொடுப்பார்கள். நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பலத்தோடு பா.ஜ.க இருக்கிறது.

பொதுக் கருத்தின் அடிப்படையில்தான் ஜனாதிபதியை தேர்வு செய்வோம். தற்போது எதிரணிகள் ஆளுக்கொன்றாக சிதறிக் கிடக்கிறது. எந்த வகையிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வேட்பாளர்களை நிறுத்த மாட்டார்கள். எங்களுக்குத் தேவை, 2019-ம் ஆண்டில் மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்பதுதான். அதற்குத் தேவை, 1998 மற்றும் 99-ம் ஆண்டில் வாஜ்பாய்க்குக் கிடைத்த வெற்றிக் கூட்டணி, பிரதமர் மோடிக்கும் அமைய வேண்டும். இதையொட்டித்தான் அகில இந்திய தலைமை மாநிலங்களில் அரசியல் செய்து வருகிறது. தமிழ்நாட்டில் எங்களுடைய முதல் தேர்வாக தி.மு.க இருக்கிறது. அதனால்தான், பணமதிப்பு நீக்க நடவடிக்கையை கருணாநிதி வரவேற்றதையும் பாராட்டினார் மோடி. அவரது உடல்நிலை குறித்துப் பிரதமர் அக்கறையோடு விசாரிக்கிறார். ஸ்டாலினிடம் நல்ல அணுகுமுறையில் இருக்குமாறு ஆளுநருக்குத் தெரிவித்திருக்கிறோம். அதனால்தான், ஸ்டாலினுக்கும் கருணாநிதிக்கும் பொங்கல் வாழ்த்து சொன்னார் ஆளுநர். தி.மு.க ஒரு பலமான கட்சியாக இருக்கிறது.

'சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸால்தான் தி.மு.க தோற்றது' என பா.ஜ.க நிர்வாகிகள் சொன்னதை தி.மு.க நிர்வாகிகள் ஏற்றுக் கொண்டார்கள். சரக்கு சேவை வரி மசோதாவை அ.தி.மு.க எதிர்த்தபோதும், தி.மு.க எங்களை ஆதரித்தது. 2014 மற்றும் 2016-ம் ஆண்டு தேர்தல்களில் அ.தி.மு.க எங்களை ஏமாற்றிவிட்டது. இப்போது நீங்களே பல பிரிவுகளாக சிதறிக் கிடக்கிறீர்கள். தற்போதுள்ள சூழலில், அ.தி.மு.கவில் எந்த அணிக்கு, நாங்கள் ஆதரவாக செயல்படுவது? உங்களை நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றால், உள்ளாட்சித் தேர்தலை நடத்தி செல்வாக்கு இருக்கிறது என்பதை நிரூபித்துக் காட்டுங்கள். 'நாங்கள்தான் பலத்தோடு இருக்கிறோம்' என்பதைக் காட்டுங்கள். ' உள்ளாட்சி தேர்தலை நீங்கள் புறக்கணிக்கக் காரணமே, தனி அணியாக தீபா நிற்பதால்தான்' என எங்களுக்கு அறிக்கை வந்துள்ளது. நீங்கள் இன்னமும் காங்கிரஸைக் கழட்டிவிடவில்லை என்பதைத்தான் நாங்கள் நம்புகிறோம்' என எச்சரிக்கும்விதமாகவே பேசியிருக்கிறார். பிரதமரை நெருங்க வேண்டும் என்ற கார்டனின் முயற்சிகள் கைகூடவில்லை" என விவரித்து முடித்தார் அவர்.

லெக்சஸ் வழக்கு, பெரா வழக்கு, சொத்துக்குவிப்பு வழக்கு என கடந்த காலங்களில் ஆடிய ஆட்டத்திற்கான வினைகளை ஒவ்வொன்றாக அனுபவிக்கின்றனர் மன்னார்குடி உறவுகள். சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பை பதற்றத்தோடு எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறார் அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலா.

-ஆ.விஜயானந்த்

Section of Anna University PhD scholars excluded from convocation

Section of Anna University PhD scholars excluded from convocation Scholars who completed their viva after this date will be awarded degrees ...