Friday, March 3, 2017

‘‘ஜெயலலிதா மரணத்தில் குற்றவாளிகளை நெருங்கிவிட்டோம்’’, என்று முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் பரபரப்பு பேட்டி அளித்தார்.

மார்ச் 03, 05:53 AM


‘‘ஜெயலலிதா மரணத்தில் குற்றவாளிகளை நெருங்கிவிட்டோம்’’; முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன்


சென்னை,

ஓ.பன்னீர்செல்வம் அணியின் மூத்த தலைவரும், முன்னாள் சபாநாயகருமான பி.எச்.பாண்டியன் சென்னை அடையாறில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

தள்ளிவிடப்பட்டார்

‘ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் 22–ந்தேதி வீட்டிலேயே கீழே தள்ளிவிடப்பட்டு அங்கிருந்து ஆம்புலன்சு மூலம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டார்’, என்று அப்பல்லோ ஆஸ்பத்திரியின் ‘டிஸ்சார்ஜ்’ அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதை நான் சொல்லவில்லை. போயஸ் கார்டனில் இருந்து அப்பல்லோ ஆஸ்பத்திரியை ‘1066’ என்ற எண்ணில் போலீஸ் துணை சூப்பிரண்டு ஒருவர் தொடர்புகொண்டு ‘ஆம்புலன்சு அனுப்புங்கள்’ என்று கேட்டு இருக்கிறார்.

கண்காணிப்பு கேமராக்கள் அகற்றம்

இந்த காட்சிகள் அனைத்தும் கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருக்கும். போயஸ் கார்டனிலேயே கண்காணிப்பு கேமரா இருக்கிறது. அங்கே இருந்து அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரும் வரையிலும் கண்காணிப்பு கேமராவில் பதிவான பதிவுகளை வெளியிடவேண்டும். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வெளியிட்டால்தான் ஜெயலலிதா எப்படி கொண்டு செல்லப்பட்டார்?, எந்த வேனில் அவர் சென்றார்? என்ற முழுமையான உண்மைகளை தெரிந்துகொள்ளமுடியும்.

அப்பல்லோ ஆஸ்பத்திரியில் இருந்த 27 கண்காணிப்பு கேமராக்கள் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட பிறகு அகற்றப்படுகிறது. இந்த கேமராக்களை அகற்றுவதற்கு உத்தரவு போட சொன்ன அதிகாரி யார்? யார் இந்த உத்தரவு போட்டது? என்பதையும் தெரிவிக்கவேண்டும்.

இயற்கையாக உயிரை நிறுத்த...

2016–ம் ஆண்டு மே மாதம் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்து வந்தவர் பிரபல டாக்டர் சாந்தாராம். அவர், துணை வேந்தராக எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தில் பணியாற்றியவர். அவர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கும்போது ஒரு கருத்தை சொன்னார். அப்போது, ‘‘நீங்கள் போயஸ் கார்டனில் பெறுகின்ற சிகிச்சைகள் ஒரு ‘ஸ்ட்ரோக்’ (பக்கவாதத்தை) உங்களுக்கு வரவழைக்கும்’’, என்று கூறினார்.

ஆனால் மறுநாளில் இருந்து அந்த டாக்டரை போயஸ் கார்டனில் நுழைய விடவில்லை. அவரை வெளியேற்றிவிட்டனர். இதற்கும் பதில் வேண்டும்.

சென்னை ஐகோர்ட்டில் போடப்பட்ட வழக்கில் அப்பல்லோ ஆஸ்பத்திரி ஒரு பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்திருக்கிறது. அதில், ‘கடந்த 5–ந்தேதி ஜெயலலிதாவுக்கு இயற்கையாக உயிரை நிறுத்துவதற்கு மருத்துவ முடிவு எடுக்கப்பட்டது’, என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதற்கு அனுமதி வழங்கியது யார்? இதுவரை வழங்கப்பட்டு வந்த சிகிச்சையை நிறுத்த சொன்னது யார்? இது ஒரு புரியாத புதிராகவே இருக்கிறது.

சிங்கப்பூர் ஆஸ்பத்திரிக்கு செல்லாதது ஏன்?

2015–ம் ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் மத்திய அரசு ரகசியமாக ஒரு கடிதத்தை அனுப்புகிறது. அதில், ‘ஜெயலலிதாவை சிகிச்சைக்காக சென்னையில் இருந்து சிங்கப்பூர் செயின்ட் எலிசபெத் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வதற்கு சென்னை விமான நிலையத்தில் பாரா ஆம்புலன்சு ஹெலிகாப்டர் வந்து இறங்கியிருக்கிறது’, என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

ஆனால் ஜெயலலிதா சிங்கப்பூர் செயின்ட் எலிசபெத் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்படவில்லை. இதை தடுத்தது யார்? இந்த முடிவை எடுத்தது யார்? எய்ம்ஸ் மருத்துவர்கள் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்ததாக மருத்துவ அறிக்கை மூலம் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். ஏனென்றால் எய்ம்ஸ் அறிக்கை இதுவரை வரவில்லை.

குற்றவாளிகளை நெருங்கிவிட்டோம்

ஜெயலலிதா ஆஸ்பத்திரிக்கு வந்தபோது, இசட் பிரிவு பாதுகாப்பு படையினரை ஆஸ்பத்திரிக்கு உள்ளே வரவிடாமல் யார் தடுத்தது என்பது தெரியவேண்டும்.

நாங்கள் கூறுவது வதந்திகளோ, சந்தேகங்களோ இல்லை. உண்மை. ஜெயலலிதா மரண விவகாரத்தில் நாங்கள் குற்றவாளிகளை நெருங்கிவிட்டோம். இதைத்தவிர வேறு எதையும் இப்போது சொல்லமுடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

அனுமதி கொடுத்தது யார்?

முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதா சிகிச்சை பெறும்போது, பல விதமான சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. இந்த எல்லா சிகிச்சைகளையும் மேற்கொள்ள அனுமதியை கொடுத்தது யார்?

ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், ‘ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார், தோசை சாப்பிட்டார்’ என்றெல்லாம் கூறினார்கள். ‘இசட்’ பிரிவு பாதுகாப்பில் உள்ள ஜெயலலிதா அதுவும் முதல்–அமைச்சராக இருக்கக்கூடிய சூழ்நிலையில், அவருக்கு கொடுக்கப்படும் உணவு வகைகள் அனைத்தும் ‘பாரன்சிக் லேப்’புக்கு எடுத்துச்சென்று ஆய்வு செய்து, அதற்கு பின்பு தான் அவருக்கு கொடுக்கப்பட வேண்டும். அந்த ஆய்வு அறிக்கையை வெளியிட வேண்டும்.

கன்னத்தில் 4 ஓட்டைகள்

ஜெயலலிதாவின் கன்னத்தில் 4 ஓட்டைகள் இருந்தன. அந்த ஓட்டைகளுக்கு ஆஸ்பத்திரி கொடுத்த விளக்கம், ‘பிளாஸ்டர்’ ஒட்டப்பட்டதால் அதன் காரணமாக ‘ஸ்கின் பீலிங்’ ஏற்பட்டிருக்கிறது, என்பது ஆகும்.

ஆனால் ‘எம்பாமிங்’ செய்த டாக்டரோ அதை நான் பார்க்கவே இல்லையே என்று கூறியிருக்கிறார். அந்தவகையில் ஜெயலலிதாவின் கன்னத்தில் இருந்த 4 ஓட்டைகளுக்கு காரணம் என்ன? என்ன சிகிச்சை வழங்கப்பட்டது? என்பதை யாரும் வெளிக்கொண்டு வரவில்லை.

என்னென்ன கையெழுத்துகள் வாங்கப்பட்டன?

கடந்த ஆண்டு டிசம்பர் 4–ந்தேதி மாலை 4.30 மணிக்கு ஜெயலலிதா மரணம் அடைந்திருக்கிறார். அதன் பிறகு இரவு 9.30 மணியில் இருந்து மறுநாள் இரவு 9.30 மணி வரை அவருக்கு ‘எக்மோ’ கருவி பொருத்தப்பட்டு இருக்கிறது. இதில் மர்மங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து எந்த பதிலும் இல்லை. அதை நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும்.

அதுமட்டுமல்ல, இடைத்தேர்தல் நடத்தப்பட்ட போது அதற்குரிய படிவம்–ஏ மற்றும் படிவம்–பி ஆகிய அங்கீகார சான்றிதழ்களில் ஜெயலலிதா கைரேகை வைக்கப்பட்டு இருக்கிறது. அந்த சமயத்தில் இருந்த டாக்டர் பாலாஜி என்பவர் விசாரிக்கப்பட வேண்டும். அப்படி அவர் விசாரிக்கப்பட்டால் தான் மேற்கொண்டு என்னென்ன கையெழுத்துகள் அங்கு வாங்கப்பட்டது? என்பது நாட்டு மக்களுக்கு தெரியவரும்.

மர்ம முடிச்சுகள்

‘பிசியோதெரபிஸ்ட்’ என்பதை பொறுத்தவரை, அப்பல்லோ ஆஸ்பத்திரி உலக தரமான ஆஸ்பத்திரி ஆகும். அப்படி இருக்கும் போது எதற்காக சிங்கப்பூரில் இருந்து ‘பிசியோதெரபிஸ்ட்’ வரவழைக்கப்பட வேண்டும்? அதற்கு அனுமதி அளித்தது யார்? எதற்காக இவையெல்லாம் நடந்தது? போன்ற சந்தேகங்கள் உள்ளன. இந்த மர்ம முடிச்சுகளுக்கு தகுந்த பதில்கள் கிடைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மார்ச் 03, 02:00 AM
மாணவர்கள் ‘நீட்’ தேர்வுக்கு தயாராக இல்லை


தமிழ்நாட்டில் நேற்று பிளஸ்–2 தேர்வு தொடங்கியுள்ளது. 8 லட்சத்து 98 ஆயிரத்து 763 மாணவர்கள் தேர்வு எழுதி வருகிறார்கள். மருத்துவக் கல்லூரிகளில் சேரவிரும்பும் மாணவர்கள் இப்போது ‘நீட்’ நுழைவுத்தேர்வு சர்ச்சையால் குழம்பிக் கொண்டு இருக்கிறார்கள். தனியார் மற்றும் நிகர் நிலை பல்கலைக்கழகங்களின் மருத்துவ மாணவர்களின் சேர்க்கை கடந்த ஆண்டு முதலே ‘தேசிய அளவிலான தகுதிகாண் நுழைவுத்தேர்வு’ என்று கூறப்படும் ‘நீட்’ மூலமே நடக்கிறது. அரசு மருத்துவக்கல்லூரிகளுக்கு கடந்த ஆண்டு மட்டும் ‘நீட்’ தேர்விலிருந்து விலக்கு அளித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த ஆண்டும் தமிழக மாணவர்களுக்கு ‘நீட்’ தேர்விலிருந்து விலக்கு அளிப்பதற்காக தமிழக சட்டசபையில் ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டு, தமிழக கவர்னரின் கையெழுத்தைப் பெற்று, இப்போது ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி, ‘நீட்’ தேர்வு நடத்தப்படுவதால், ஜனாதிபதி ஒப்புதல் கொடுப்பார் என்பதை சந்தேகத்திற்கு இடமில்லாமல், முழுமையாக எதிர்பார்க்க முடியாது. அப்படியே கொடுத்தாலும், உச்சநீதிமன்றம் அதற்கு என்ன சொல்லப்போகிறது? என்பதும் பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது.

இந்தநிலையில், ‘நீட்’ தேர்வுக்காக மாணவர்கள் இணையதளம் மூலமாக விண்ணப்பங்களை அனுப்பும் கடைசிநாள் கடந்த 1–ந்தேதியோடு முடிவடைந்து விட்டது. ஒரு வேளை ‘நீட்’ தேர்வில் கலந்துகொள்வதிலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு கிடைக்கவில்லை என்றால், ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் மட்டும் இந்தத்தேர்வில் கலந்துகொள்ள முடியுமே தவிர, மற்றவர்களால் நிச்சயமாக முடியாது. தமிழ்நாட்டிலுள்ள கல்வித்தரத்தில் விண்ணப்பித்த எல்லோருமே ‘நீட்’ தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறுவார்கள் என்று சொல்லிவிட முடியாது. ஏனென்றால், கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் இருந்து ‘நீட்’ தேர்வில் கலந்து கொண்டவர்கள் 41.9 சதவீதம் பேர்தான் தேர்வு ஆகியிருக்கிறார்கள். ‘நீட்’ தேர்வு என்பது சி.பி.எஸ்.இ. எனும் மத்திய கல்வித்திட்டத்திலுள்ள 11–வது, 12–வது வகுப்பு பாடங்களின் அடிப்படையில்தான் கேள்விகளை கொண்டதாக இருக்கும்.

தமிழக அரசின் மாநில கல்வித் திட்ட மாணவர்களின் கல்வித்தரம் அந்தளவுக்கு நிச்சயமாக இருக்காது. அப்படியென்றால், தமிழக மாணவர்களுக்கு கண்டிப்பாக சிறப்பு பயிற்சி வேண்டும். பள்ளிக்கல்வி அமைச்சராக மாபா.பாண்டியராஜன் இருந்தபோது இணையதளம் மூலம் சிறப்புபயிற்சி நடத்தப்படும் என்று சொல்லியிருந்தார். ஆனால், அப்படி எந்தவகுப்பும் நடத்தப்படவில்லை என்று அதிகாரிகள் இப்போது கூறுகிறார்கள். ஆக, ‘நீட்’ தேர்வுபற்றி எந்தவிதமான ஏற்பாடும் இல்லாதநிலையில், மாணவர்கள் தவித்துக் கொண்டு இருக்கும் போது, இப்போது கல்வி அமைச்சராக பொறுப்பேற்று இருக்கும் செங்கோட்டையனிடம், ‘நீட் தேர்வு இந்த ஆண்டு நடக்கும் என்று பரவலாக பேசப்படுகிறதே’ என்று நிருபர்கள் கேட்டதற்கு, ‘மாணவர்கள் எல்லோருமே இதற்கு தயார்நிலையில்தான் இருக்கிறார்கள். ‘நீட்’ தேர்வு தொடர்பாக எந்த முடிவு வந்தாலும் அதற்காக தங்களை தயார் படுத்தியுள்ளனர்’ என்று கூறியிருக்கிறார். இது, மாணவர்களின் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக கல்வித்திட்டத்தின்கீழ் பயின்ற எந்தமாணவர்களும் இப்போது ‘நீட்’ தேர்வுக்கு தயாராக அதற்குரிய தரத்துடன் இல்லை. இதற்காக தனியார் நடத்தும் சிறப்பு பயிற்சி வகுப்புகளில் கட்டணம் செலுத்தி படிக்கும்நிலையிலும் மாணவர்கள் இல்லை. எனவே, அரசு இப்போது செய்ய வேண்டியது மத்திய அரசாங்கம் ஒப்புதல் தருமா?, தராதா? என்பதை உடனடியாக உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும். சந்தேகமிருந்தால், பிளஸ்–2 தேர்வு முடிந்தவுடன் அந்தந்த பள்ளிக்கூடங்களிலிருந்து ‘நீட்’ தேர்வுக்கு விண்ணப்பம் செலுத்தியவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகளை நடத்தவேண்டும். ‘நீட்’ தேர்வுக்கான விண்ணப்பம் அனுப்புவதற்கான கடைசி தேதியையும் தமிழக மாணவர்களுக்கு நீட்டிப்புச் செய்ய கோரிக்கை விடுப்பதற்கு வாய்ப்பிருக்கிறதா? என்பதையும் தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும். ‘நீட்’ தேர்வு நடந்து, அதில் கலந்து கொள்ள தகுதியில்லாத நிலை மாணவர்களுக்கு ஏற்பட்டால் அதற்கு அவர்கள் பொறுப்பல்ல.

Thursday, March 2, 2017


பலே பலன்கள்... இல்லை பக்க விளைவுகள்.. வீட்டிலேயே வளர்க்கலாம் கொசு விரட்டும் செடிகள்..!vikatan.com

நம் அன்றாடங்களைத் தொல்லையில்லாமல் கழிக்க மிக அவசியமானது நல்ல தூக்கம். அந்த நல்ல தூக்கத்துக்கு இன்றைய காலகட்டத்தில் எது அவசியமோ இல்லையோ, நல்ல வேப்பரைசர் (Vaporizer - கொசுவிரட்டி) அவசியமாகிவிட்டது. தினம் தினம் மாறுகிற சூழலுக்கு நாம் பழகிவிட்டதைப்போல், நம்மைக் கடித்து உயிர்வாழ்கிற கொசுவும் பழகிவிடுகிறது. விளைவு, விதவிதமாக, கலர்க் கலராக சாயம் பூசப்பட்ட ரசாயனங்களின் அணிவகுப்பு! நம்மை திருப்திப்படுத்துவதாக உத்தரவாதம் கொடுக்கும் பலவிதமான கொசுவிரட்டிகள்... ஆனால், எதிலும் பலனில்லை என சலித்துக்கொள்பவர்கள்தான் இங்கே ஏராளம்! இவற்றை விரட்டும் குட்டிக் குட்டிச் செடி வகைகள் உண்டு. அவற்றை எளிதாக நம் வீட்டு குறைந்த இடத்தில், பால்கனியிலேயே வளர்க்கலாம். பக்க விளைவுகள் இல்லை... பலன்கள் ஏராளம்... வீட்டிலேயே வளர்க்கக்கூடிய கொசுவிரட்டும் செடிகள் இங்கே...



காட்டுத்துளசி

நிறைய மருத்துவக் குணங்களைக் கொண்டிருக்கும் காட்டுத்துளசி எல்லா இடங்களிலும் வளரக்கூடியது. கொசுவையும், சிறு பூச்சிகளையும் விரட்டும் தன்மைகொண்டது. இதன் சாறு, பூச்சி விரட்டிக்குப் பயன்படுத்தப்படும் டீட்டைவிடப் (DEET-Diethyltoluamide) பலமடங்கு சக்தி வாய்ந்தது. காட்டுத்துளசியின் வாசம் இருக்கும் இடத்தில் கொசு அண்டவே அண்டாது.



ஓமம் (Basil)

ஓமத்தின் விதை சமையலுக்கு நல்ல நறுமணத்தைத் தரக்கூடியது. ஓம இலைகளில் இருக்கும் வாசனை, கொசுக்களை விரட்டி நமக்கு நல்ல தூக்கத்தைத் தரும். இதை வளர்க்க சின்ன மண்பாண்டம் போதும். கொசு அந்தக் கோட்டைத் தாண்டி உள்ளே வரவே வராது.

புதினா

பெயரைக் கேட்டதுமே புத்துணர்ச்சிதான், எல்லோருக்கும் பிடித்த பிரியாணியின் பெயரை ஞாபகப்படுத்துவது தவிர்க்க முடியாதது. அதேபோல்தான் இதன் வாசனையால் அவை நம் அருகே வராமல் இருப்பதும் தவிர்க்க முடியாதது. சின்ன தொட்டியில் நட்டு, ஜன்னல் ஓரத்தில் வைத்தால் போதும். சீக்கிரம் வளர்ந்துவிடும். கொசுக்கள் உள்ளே வராது.



மாரிகோல்டு

கண்களைக் கவரும் மலர்களைக் கொண்ட இந்தச் செடி அழகுக்காக மட்டும் வளர்க்கப்படுவதில்லை. இந்தச் செடியை வீட்டுத் தோட்டத்தைச் சுற்றி நட்டுவைத்தால் கொசுவிடம் இருந்து நம்மைப் பாதுகாகாக்கலாம்; அதோடு, இந்த மாரிகோல்டு செடியால் மற்ற செடிகளுக்கும் பாதுகாப்பு. இந்தச் செடி இருக்கிற இடத்தில் செடிகளை அழிக்கும் பூச்சிகளும் அண்டாது. `என் தங்கம்’ என்று இந்தச் செடியை தாராளமாக சொல்லிக் கொள்ளலாம்.

லாவெண்டர் (Lavender)

பெயரைக் கேட்டதுமே மனதில் ஒட்டிக்கொள்வது இதன் நிறம் மட்டுமல்ல... லாவெண்டரின் மணமும்தான். லாவெண்டர் மணம் கொசுக்களை அண்ட விடாது, அதனால்தான் கொசு கடிக்காமல் இருக்க, நாம் பூசிக்கொள்ளும் நிறைய தோல் பூச்சுக்கள், லாவெண்டர் மணத்தில் இருக்கின்றன. இந்தியாவில் இது வளரும். செடிகளுக்கான பொட்டிக்கில், லாவெண்டர் செடி கிடைக்கும்.

சிட்ரோசம்

ஐந்து அல்லது ஆறு அடி வரை வளரக்கூடியது சிட்ரோசம் செடி. இதன் நறுமணம் கொசுவை விரட்டப் பயன்படும், காரணம் இதிலிருந்து எடுக்கப்படும் `சிட்ரோனெல்லா' (Citronella) எனும் ரசாயனம் சிறந்த கொசுவிரட்டி. இந்தத் தாவரத்திலிருந்து கிடைக்கும் மெழுகை ஏற்றினாலும், அதன் வாசத்துக்குக் கொசுக்கள் அண்டாது. இந்த சிட்ரோசம் வணீகரீதியாகவும் பயன்படுகிறது.



கற்பூரவல்லி

சாதாரணமாக எல்லாச் சூழலிலும் வளரக்கூடியது. நிறைய இடமோ, பொருள் செலவோ பிடிக்காத இந்த செடியின் வாசமும், இலைச் சாறும் கொசுவுக்குப் பிடிக்காது. 10 அடி தூரம் தாண்டியும் இந்தச் செடியின் மணம் மணக்கக்கூடியது.

ரோஸ்மேரி

அழகிய செந்நீல நிறப் பூக்கள்கொண்ட இந்தச் செடியின் மணம், தெய்விக உணர்வைத் தருகிற ஒன்று. அதோடு, நம்மிடம் இருந்து கொசுவைத் தள்ளியே வைத்திருக்கும்; குழந்தைகளுக்கு கொசுக்கள் தாக்காமல் நல்ல பாதுகாப்பு அரணாகவும் செயல்படும்.

செவ்வந்தி

சிறந்த பூச்சிவிரட்டியாக இருக்கும். பயிர்கள் போன்றவை தாக்காமல் இருக்க, செவ்வந்தி ஓரங்களில் நட்டு வைத்தால் பூச்சிகள் இந்த செடியை தாக்கும். பயிர்கள் பாதுகாக்கப்படும்.செவ்வந்தி, மற்றச் செடிகளுக்குப் பாதுகாவலனாக இருக்கும்; கொசுக்களையும் விரட்டும்.



வீனஸ் ஃப்லைட்ராப் (Venus Flytrap)

இது, பூச்சிகளை உண்ணும் தாவரம்; கொசுக்களையும் உண்டு செரிக்கும். ஆனால், குழந்தைகள் இருக்கிற வீட்டில் இந்தச் செடியை வளர்ப்பதைத் தவிர்க்கலாம்.

வீட்டில் இருக்கிற கொஞ்சமே கொஞ்ச இடத்திலும் இந்தச் செடிகளை வளர்த்து கொசுவை விரட்ட முடியும் என்கிறபோது அதையும் செய்து பார்ப்பதில் தவறில்லை. இயற்கையை நோக்கி நம் பார்வை திரும்பி இருக்கும் இந்த நேரத்தில், செடி வளர்ப்பும் பயனுள்ளதே. டெங்கு, பன்றிக்காய்ச்சல் என்று பயமுறுத்தும் நோய்கள் பல இவற்றில் இருந்து பரவுகிறவைதான். நினைவில் இருக்கட்டும்!

- கோ.ப.இலக்கியா (மாணவப் பத்திரிகையாளர்)

கோடை வெப்பம் கடுமையாக இருக்கும்: பொதுமக்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்குமாறு ஆட்சியர்களுக்கு உத்தரவு

ச.கார்த்திகேயன்

வருவாய் நிர்வாக ஆணையர் தகவல்

வரும் கோடைகாலத்தில் வெப்பம் அதிகமாக இருக்கும் என்று இந் திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதுகுறித்து பொதுமக்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்குமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர் களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ள தாக வருவாய் நிர்வாக ஆணை யர் கொ.சத்யகோபால் தெரி வித்துள்ளார்.

முன்னதாக, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலசந்திரனிடம் கேட்டபோது, “தமிழகத்தை பொறுத்தவரை, வரும் கோடை யில் அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ப 0.5 டிகிரி செல்சியஸ் முதல் 1 டிகிரி செல்சியஸ் வரை இயல்பை விட வெப்பம் அதிகரிக்கும். உள் மாவட்டங்களான திருச்சி, தருமபுரி, வேலூர் போன்ற இடங்களில் அதிக வெப்பநிலை பதிவாக வாய்ப்புள்ளது” என்றார்.

இதுதொடர்பாக தமிழக அரசு மேற்கொண்டு வரும் முன்னெச் சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, வருவாய் நிர்வாக ஆணையர் கொ.சத்யகோபாலிடம் கேட்ட போது, “அந்தந்த மாவட்டங்களில், நிலவும் வெப்பநிலைக்கு ஏற்ப, மக்கள் என்ன செய்ய வேண்டும் ? என்ன செய்யக்கூடாது? என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு, அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தர விடப்பட்டுள்ளது” என்றார்.

கடந்த இரு ஆண்டுகளாக கோடை காலத்தில், வெப்பம் அதிகரிப்பது தொடர்பாக சென்னை வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவன முன்னாள் பேராசிரியர் எஸ்.ஜனகராஜனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

மக்கள்தொகை பெருக்கத் தால், வளர்ச்சி என்ற பெயரில் நாடு முழுவதும் பசுமை அழிக்கப் படுகிறது. வானளாவிய கட்டிடங் கள் கட்டப்படுகின்றன. சூரியனிட மிருந்து வரும் வெப்பக் கதிர்களை மரங்கள் உள்வாங்கிக்கொண்டு, பிரதிபலிக்காது. ஆனால் கட்டிடங்கள் பிரதிபலிக்கும். இதனால் வெப்பம், வழக்கத்தை விட 1 அல்லது 2 டிகிரி செல்சியஸ் அதிகமாகிறது. பருவநிலை மாற்றத்தால் வெப்பம் அதிகரிப்பது உண்மை. வெப்பம் அதிகரிப்பதால், வெப்பக் காற்று வீசுதல், அதனால் ஏற்படும் உடல்நலக் குறைவு, நீர்நிலைகள் வற்றி நிலம் வறண்டு போதல், குடிநீர் தட்டுப்பாடு போன்ற அபாயங்ள் ஏற்பட வாய்ப்புள்ளது.  இவ்வாறு அவர் கூறினார்.

என்ன செய்ய வேண்டும்?

வெப்பம் அதிகரித்தால் பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும் என்று கடந்த ஆண்டு, தமிழக அரசு வழங்கிய அறிவுரைகள் வருமாறு: வெப்ப அலையின் தாக்கத்திலிருந்து தங்களை காத்துக்கொள்ள, அவசிய தேவைகள் இன்றி வெயிலில் செல்ல வேண்டாம். குறிப்பாக பகல் 12 முதல் மாலை 3 மணி வரை வெயிலில் செல்வதை தவிர்க்கவும். அந்த நேரத்தில் அதிக அளவில் களைப்படைய வைக்கும் பணிகளை செய்ய வேண்டாம். நன்கு தண்ணீர் பருக வேண்டும். காற்றோட்டமான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்.

குழந்தைகள் மற்றும் செல்லப் பிராணிகளை பார்க்கிங் செய்துள்ள வாகனங்களில் விட்டுச் செல்ல வேண்டாம். தவிர்க்க இயலாத சூழ்நிலைகளில் வெளியே செல்ல நேரும்போது, உடன் குடிநீர் எடுத்துச் செல்ல வேண்டும். கழுத்து மற்றும் கை கால்களை சிறிது ஈரமான துணியினால் மூடி செல்ல வேண்டும். தொப்பி அல்லது குடை எடுத்துச் செல்லலாம். டீ, காபி போன்ற பானங்களை தவிர்த்து மோர், கஞ்சி மற்றும் பழச்சாறு போன்ற பானங்களை அருந்தலாம். கால்நடைகளை நிழலான இடங்களில் தங்க வைத்து, தேவையான தண்ணீர் வழங்க வேண்டும்.

மார்ச் 31க்குள் ஆதார் இணைப்பு : எல்லா வங்கி கணக்குகளுக்கும் நெட் பேங்கிங் வசதி கட்டாயம் !!

வங்கிகளில் எல்லா கணக்குகளிலும் நெட் பேங்கிங் வசதி கட்டாயமாக்கப்பட வேண்டும் என்றும், மார்ச் 31ம் தேதிக்குள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றும் வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. புழக்கத்தில் இருந்த ரூ.1000, ரூ.500 வாபஸ் பெற்ற பிறகு கடும் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது. இதை சமாளிக்கவும், கருப்பு பணம்

உருவாவதை தடுக்கவும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை அதிகரிக்கும் முயற்சியில் மத்திய அரசு தீவிரம் காட்டியது. இந்த முயற்சியில் ‘பீம் ஆப்’ என ஒரு ஆப்ஸ் உருவாக்கப்பட்டது. அதே போல், பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இந்நிலையில், வங்கிகளுக்கு மத்திய அரசு அனுப்பிய சுற்றறிக்கையில், ‘‘அனைத்து வங்கி கணக்குகளிலும் மார்ச் 31ம் தேதிக்குள் ஆதார் எண் இணைக்கப்பட வேண்டும். அதே போல், எல்லா கணக்குகளுக்கும் கட்டாயமாக நெட்பேங்கிங் வசதி ஏற்படுத்தப்பட வேண்டும்’’ என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், ‘‘இந்த நடவடிக்கையானது டிஜிட்டல் பரிவர்த்தனையை மேலும் அதிகரிக்கச் செய்யும். அத்துடன் பணபரிமாற்றங்கள் விரைவாக நடக்கும். ஆன்லைன் பரிமாற்றத்திற்கு ஏராளமான புதிய வாடிக்கையாளர்கள் உருவாவதற்கும் வழி ஏற்படும்’’ என்று தெரிவித்தார். வங்கி அதிகாரிகள் கூறுகையில், ‘‘தற்போது வங்கிகளில் செயல்படும் கணக்குகளில் 35 சதவீத கணக்குகள் ஆதாருடன் இணைக்கப்படாமல் உள்ளது. அவற்றை ஆன்லைன் சேவைக்கு மாற்றுவதில் சிக்கல் உள்ளது. எனவே, ஆதார் இணைப்பு வேகப்படுத்தப்படுகிறது’’ என்றனர்.

ஜெயலலிதா அபராதம் செலுத்த வேண்டுமா? வேண்டாமா?
சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக சிறப்பு நீதிமன்றத்தால் முதல் குற்றவாளியாக தீர்ப்பு வழங்கப்பட்ட ஜெயலலிதாவிற்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையும் 100 கோடி ரூபாய் அபரதாமும் விதிக்கப்பட்டது. ஆனால் உச்சநீதிமன்றத்தால் இந்த தீர்ப்பு உறுதிசெய்யப்பட்டபோது ஜெயலலிதா உயிரோடு இல்லை. எனவே அவருக்கு வழங்கப்பட்ட தண்டனை ரத்து செய்யப்பட்டது. அதேபோல் ஜெயலலிதா செலுத்த வேண்டிய 100 கோடி ரூபாய்

அபராதமும் செலுத்த வேண்டியதில்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது. தீர்ப்பு வெளியான அதே தினத்தில் நாம் நமது மின்னம்பலம் இதழில் இது குறித்து மிகத் தெளிவாக குறிப்பிட்டிருந்தோம்.

ஆனால் இந்த 100 கோடி ரூபாய் அபராத விஷயத்தில் இன்றுவரை பயங்கர குழப்பம் நீடிக்கிறது. இன்று வரை பல செய்தி ஊடங்கள் ஜெயலலிதாவின் சொத்துக்களை முடக்கி அந்த அபராதம் பறிமுதல் செய்யப்படும் என்னும் விதமான செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதற்கு ஒரு படி மேலே போய் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், “நான் கடன் வாங்கி அத்தை செலுத்த வேண்டிய 100 கோடி அபராதத்தை நான் செலுத்துவேன்” என்று கூறினார். இந்நிலையில் தந்தி தொலைக்காட்சிக்காக அதன் தலைமை செய்தி ஆசிரியர் ரங்கராஜ் பாண்டே தீபக்கை தொடர்பு கொண்டு, “ஜெயலலிதாவிற்கு விதிக்கப்பட்ட 100 கோடி ரூபாய் அபராதத்தை செலுத்த வேண்டியதில்லை என்பதுதான் தீர்ப்பு. ஆனால் நீங்களோ கடன் வாங்கியாவது அந்த அபராதத்தை செலுத்துவேன் என்று கூறிவருகின்றீர்களே என்ன விஷயம்?” என்று கேள்வி எழுப்பினார். இதற்கு தீபக்,“நீங்கள் கூறுவது உண்மையென்றால் எனக்கு மிக்க மகிழ்ச்சி. குற்றமற்ற எங்கள் அத்தையை நீங்கள் அனைவரும் சேர்ந்து குற்றவாளியாக்கி தண்டனைக்கு ஆளாக்கிவிட்டீர்கள். ஆகவே அவர் சொத்தை முடக்கி அபராத்தை பறிமுதல் செய்வது என் அத்தை ஜெயலலிதாவிற்கு அவமானம். அதனால் அப்படி கூறினேன்” என்றார்.

 மேலும் அவரிடம், “ஜெயலலிதா செலுத்த வேண்டிய அபராதத்தை நீங்கள் எப்படி செலுத்துவீர்கள்?” என்ற கேள்விக்கு, “அத்தையின் போயஸ் தோட்டம் உள்ளிட்ட ஆறு விதமான சொத்துக்களுக்கு. நானும், தீபாவும் மட்டுமே வாரிசு. எனவே அந்த சொத்துகளை கொண்டு அபராதத்தை செலுத்துவேன். அதற்கு ஆறு மாத கால அவகாசம் எனக்கு வேண்டும்” என்று தீபக் கூறினார். இந்நிலையில் இந்த விஷயத்தை தந்தி தொலைக்காட்சி மத்திய அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் சோலி சொராப்ஜியிடம் கூறி கருத்துக் கேட்டனர். “முதலில் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும். ஜெயலலிதா இறந்துவிட்டதால் அபராதத் தொகையை செலுத்த வேண்டியதில்லை. அதையும் மீறி ஒருவர் அந்த 100 கோடி ரூபாயை செலுத்துகிறேன் என்றால் நல்ல விஷயம்தான். அரசின் கஜானா நிறையும். அப்படி அபராதம் செலுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்தால் கால அவகாசம் கிடையாது. உச்ச நீதிமன்றம் கால அவகாசம் எதுவும் கொடுக்கவில்லை. உடனே அபராதத்தை செலுத்த வேண்டும்” என்று கூறினார். இதே பிரச்னையை இந்த வழக்கில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லோர்தாவிடம் முன் வைத்த போது, “முதல் குற்றவாளியான ஜெயலலிதா இறந்துவிட்டதால் அவருக்கு வழங்கப்பட்ட தண்டனையும், அபராதமும் ரத்தாகிறது. அதனால் ஏற்கெனவே முடக்கப்பட்ட அவருடைய சொத்துகள் எதுவும் பறிமுதல் செய்யப்பட மாட்டாது. ஜெயலலிதாவிற்காக யாரும் அபராதம் செலுத்தத் தேவையில்லை” என்று கூறினார்.

http://www.sstaweb.in/2017/03/blog-post_94.html

தனியார் வங்கிகளில் பணம் டெபாசிட் செய்தாலும் கட்டணம்

By DIN  |   Published on : 02nd March 2017 05:23 AM 
மாதத்துக்கு 4 முறைக்கு மேல் பணம் டெபாசிட் செய்தாலோ அல்லது பணத்தை எடுத்தாலோ குறைந்தப்பட்சம் ரூ.150-ஐ கட்டணமாக தனியார் வங்கிகள் வசூலிக்கத் தொடங்கியுள்ளன.
இதுதொடர்பாக ஹெச்.டி.எஃப்.சி. வங்கி வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
சேமிப்புக் கணக்கு மற்றும் ஊதியக் கணக்குகளுக்கு இந்த கட்டணம் வசூலிப்பு பொருந்தும். சொந்த வங்கிக்குள்ளேயே பிறரது கணக்கு அனுப்பப்படும் பணத்தின் உச்சவரம்பு ரூ.25 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மிகவும் குறைந்தபட்ச இருப்புத் தொகையுடைய சாதாரண சேமிப்பு கணக்குகளுக்கு மாதத்துக்கு 4 முறை இலவசமாக பணத்தை திரும்ப எடுத்துக் கொள்ளலாம். பணத்தை டெபாசிட் செய்வதற்கு எந்த கட்டணமும் கிடையாது என்று அந்த அறிவிப்பில் ஹெச்.டி.எஃப்.சி. வங்கி தெரிவித்துள்ளது.
இதேபோல், ஐசிஐசிஐ, ஆக்சிஸ் ஆகிய தனியார் வங்கிகளும் 4 முறைக்கு மேல் பணத்தை டெபாசிட் செய்தாலும், திரும்ப எடுத்தாலும் கட்டணம் வசூலிக்கத் தொடங்கியுள்ளன.
ஐசிஐசிஐ வங்கியைப் பொறுத்தமட்டில், நவம்பர் மாதம் 8-ஆம் தேதிக்கு முன்பு அமலில் இருந்த கட்டண வசூலிப்பு நடைமுறை பின்பற்றப்படுகிறது. தேவைப்பட்டால், கட்டணம் அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆக்சிஸ் வங்கியைப் பொறுத்தமட்டில், முதல் 5 ரொக்க பரிவர்த்தனைகள் அல்லது ரூ.10 லட்சத்தை ரொக்கமாக டெபாசிட் செய்தல் அல்லது திருப்பி எடுத்தல் இலவசமாகும். அதன்பிறகு ஆயிரம் ரூபாய்க்கு ரூ. 5 அல்லது ரூ.150-ல், எந்தத் தொகை அதிகமாக உள்ளதோ, அந்தத் தொகை பிடித்தம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுத் துறை வங்கிகளும் இந்த நடைமுறையை பின்பற்றத் தொடங்கியுள்ளனவா? என்பது தெரியவில்லை. இதுகுறித்து பொதுத் துறை வங்கி மூத்த அதிகாரி ஒருவரை தொடர்பு கொண்டு கேட்டபோது, அரசிடம் இருந்து இதுதொடர்பாக எந்த உத்தரவும் வரவில்லை என்று பதிலளித்தார்.

NEWS TODAY 31.01.2026