Monday, April 24, 2017

“தமிழகம் முழுவதும் நாளை கடைகள் அடைக்கப்படும்” த.வெள்ளையன் அறிவிப்பு


“முழு அடைப்புக்கு வணிகர் சங்கங்களின் பேரவை ஆதரவு தெரிவிக்கும் என்றும், தமிழகம் முழுவதும் நாளை கடைகள் அடைக்கப்படும்” என்றும் த.வெள்ளையன் அறிவித்தார்.
ஏப்ரல் 24, 03:00 AM

சென்னை,

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

அரசியல் நோக்கம் எதுவும் இல்லாமல் கடந்த 3-ந்தேதி, விவசாயிகள் நடத்திய பொது வேலை நிறுத்த போராட்டத்துக்கு எங்களின் பேரவை தார்மீக ஆதரவை தந்தது. எனவே 25-ந்தேதி அரசியல் கட்சிகள் சார்பில் அறிவிக்கப்பட்ட முழு அடைப்பு போராட்டத்தில் பங்கேற்க போவதில்லை என்று முடிவெடுத்தோம்.

எனினும் டெல்லியில் தமிழக விவசாயிகள் நடத்தி வரும் தொடர் போராட்டத்தை எண்ணி, பொது நலன் கருதி 25-ந்தேதி (நாளை) தமிழகம் முழுவதும் நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்தில் பங்கேற்பது என்று முடிவு எடுத்திருக்கிறோம். இதனை நாங்கள் ஒரு கவுரவ பிரச்சினையாக நினைக்கவில்லை. எங்கள் நோக்கம் விவசாயிகள் நலம் பெறவேண்டும் என்பது தான். ஏனென்றால் எங்கள் பேரவை அரசியலுக்கு அப்பாற்பட்டது.

தீவுத்திடலில் மாநில மாநாடு

முழு அடைப்பு போராட்டத்தில் தமிழகம் முழுவதும் எங்கள் பேரவையை சேர்ந்த 60 லட்சம் வணிகர்கள் பங்கேற்க உள்ளனர். 65 லட்சம் கடைகள் மூடப்பட உள்ளது. அதேநேரம் 25-ந்தேதி மாநிலம் முழுவதும் தலைநகரங்களில் எமது பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெ றும். மே 5-ந்தேதி சென்னை தீவுத்திடலில் வணிகர் சங்கங்களின் மாநில மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் உலக வர்த்தக ஒப்பந்தத்துக்கு எதிராக முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். அதேநேரம் சில்லரை வணிகம், சிறு மற்றும் சுய தொழில்கள் பாதிக்காத வகையிலும் சிறப்பு தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பேட்டியின்போது வணிகர் சங்கங்களின் பேரவை துணைத்தலைவர் பெருமாள், மாவட்ட தலைவர் சவுந்தரராஜன், இளைஞரணி செயலாளர் பி.எல்.ஆல்வின் ஆகியோர் உடனிருந்தனர்.
எச்–1 பி’ விசா கட்டுப்பாடுகளால் இந்தியர்களுக்கு பாதிப்பு


‘எச்–1 பி’ விசா கட்டுப்பாடுகளால் இந்தியர்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் குறித்து அமெரிக்க நிதி மந்திரியிடம் அருண் ஜெட்லி பிரச்சினை எழுப்பினார்.
ஏப்ரல் 24, 04:30 AM

புதுடெல்லி,

‘எச்–1 பி’ விசா கட்டுப்பாடுகளால் இந்தியர்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் குறித்து அமெரிக்க நிதி மந்திரியிடம் அருண் ஜெட்லி பிரச்சினை எழுப்பினார்.‘எச்–1 பி’ விசா

அமெரிக்காவில் தங்கி வேலை செய்வதற்காக வழங்கப்படுகிற ‘எச்–1 பி’ விசாக்களை இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், குறிப்பாக டாடா, இன்போசிஸ், காக்னிஸன்ட் போன்ற நிறுவனங்கள்தான் அதிக எண்ணிக்கையில் பெற்று வந்துள்ளன.

அந்த நிறுவனங்கள்தான் அதிக எண்ணிக்கையிலான விசாக்களுக்கு விண்ணப்பிக்கின்றன. இதனால் குலுக்கலில் அதிக எண்கள் இடம்பெற வேண்டிய நிலை ஏற்படுகிறது; இதனால் அவர்களுக்கே கூடுதல் விசாக்கள் கிடைக்கின்றன என்று கடந்த வாரம் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் நடந்த ஒரு கூட்டத்தின்போது, டிரம்ப் நிர்வாகத்தில் பணியாற்றுகிற மூத்த அதிகாரி ஒருவர் குற்றம் சாட்டினார்.ஏன் இந்த குற்றச்சாட்டு?

குறிப்பிட்ட நிறுவனங்களை மட்டுமே குற்றம் சாட்டுவது ஏன் என்ற கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில், ‘‘இந்த கம்பெனிகள் எச்–1 பி விசாதாரர்களுக்கு ஆண்டுக்கு 60 ஆயிரம் டாலர்களில் இருந்து 65 ஆயிரம் டாலர் வரையில் (சுமார் ரூ.39 லட்சம் முதல் ரூ.42¼ லட்சம் வரையில்) வழங்குகின்றன. அதே நேரத்தில் இங்கு சிலிக்கான் வேலியில் உள்ள சாப்ட்வேர் என்ஜினீயரின் ஆண்டு சம்பளம் 1½ லட்சம் டாலர் (சுமார் ரூ.97½ லட்சம்) ஆகும்’’ என கூறினார்.

அது மட்டுமின்றி இத்தகைய நிறுவனங்கள் ஆற்றல் வாய்ந்த பணியாளர்களை அமர்த்துவதும் இல்லை. ஆனால் அதிக அளவில் ‘எச்–1 பி’ விசாக்களை பெற்று விடுகின்றன என அவர் குறிப்பிட்டார்.விசா கட்டுப்பாடுகள்

இந்த நிலையில் ‘‘அமெரிக்க பொருட்களையே வாங்குவோம், அமெரிக்கர்களையே வேலைகளில் அமர்த்துவோம்’’ என்ற தனது தேர்தல் பிரசார கோ‌ஷத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் செயல்பட தொடங்கி உள்ளார்.

அந்த வகையில் ‘எச்–1 பி’ விசா வழங்குவதில் புதிய கட்டுப்பாடுகளை விதிப்பதற்கான நிர்வாக உத்தரவில் அவர் கடந்த சில தினங்களுக்கு முன் கையெழுத்து போட்டார். இதன் காரணமாக மிகவும் திறமை வாய்ந்தவர்களுக்கும், அதிகபட்ச சம்பளம் பெறுகிறவர்களுக்கும் மட்டுமே ‘எச்–1 பி’ விசா வழங்கும் நிலை உருவாகி உள்ளது. எனவே இது இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துவதாக அமைந்திருப்பதாக கருதப்படுகிறது.அருண் ஜெட்லி பிரச்சினை எழுப்பினார்

இந்த நிலையில் வாஷிங்டனில் நேற்று முன்தினம் உலக வங்கி, சர்வதேச நிதியம் ஆகியவற்றின் கலந்தாலோசனை கூட்டத்தின்போது, அமெரிக்க நிதி மந்திரி ஸ்டீவன் மனுசின்னை மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி சந்தித்து பேசினார்.

அப்போது அவர் இந்திய, அமெரிக்க உறவுகளில் கடந்த சில ஆண்டுகளாக ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து எடுத்துரைத்தார். இந்தியாவின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து விளக்கினார். ‘எச்–1 பி’ விசா வழங்குவதில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் எழுகிற பிரச்சினைகள் குறித்து அவர் கேள்வி எழுப்பினார்.நிதி அமைச்சகம் அறிக்கை

இதுபற்றி டெல்லியில் மத்திய நிதி அமைச்சகம் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டது.

அதில், ‘‘அமெரிக்க நிதி மந்திரி ஸ்டீவன் மனுசின்னிடம், இந்தியாவின் திறமை வாய்ந்த பணியாளர்களுக்கு ‘எச்–1 பி’ விசா வழங்குவது பற்றிய பிரச்சினையை நிதி மந்திரி அருண்ஜெட்லி எழுப்பினார். அத்துடன் அமெரிக்க பொருளாதாரத்தில் இந்திய நிறுவனங்களும், பணியாளர்களும் செய்து வருகிற பங்களிப்பு பற்றியும் விளக்கினார்’’ என கூறப்பட்டுள்ளது.
இன்று கடும் வெயில் கொளுத்தும் வெளியே நடமாடுவதை தவிர்க்கும்படி வானிலை ஆய்வு மையம் வேண்டுகோள்



இன்று 111 டிகிரி வரை கடும் வெயில் கொளுத்தும் எனவும் பொதுமக்கள் வெளியே நடமாடுவதை தவிர்க்கும்படி வானிலை ஆய்வு மையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஏப்ரல் 24, 05:30 AM

சென்னை,

தமிழக உள்மாவட்டங்களில் இன்று 111 டிகிரி வரை வெயில் கொளுத்தும் எனவும், பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியே நடமாடுவதை தவிர்க்கவேண்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அனல்காற்று

தமிழகத்தில் கோடைகாலம் முன்கூட்டியே தொடங்கிவிட்ட நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. குறிப்பாக வேலூர், சேலம், திருச்சி, நாகப்பட்டினம், மதுரை, கரூர், கடலூர் மற்றும் சென்னை மீனம்பாக்கம், திருப்பத்தூர், பரங்கிப்பேட்டை, பாளையங்கோட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக அனல் காற்று வீசியது. அதன் தாக்கத்தால் வெப்பநிலையும் 100 டிகிரியை தாண்டி காணப்பட்டது. இரவு நேரங்களில் கூட வெப்பம் குறையாமல் இருந்தது. இதனால் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடந்தனர். தொடர்ந்து இந்த பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்தாலும் அனல்காற்று வீசுவதும் தொடர்கிறது.

வரும் 4-ந் தேதி அக்னிநட்சத்திரம் என்கிற கத்திரிவெயில் தொடங்கவிருக்கும் நிலையில் மீண்டும் வெப்பக்காற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளதா? என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகளிடம் நிருபர்கள் நேற்று கேள்வி எழுப்பினர். அதற்கு அவர்கள் அளித்த பதில் வருமாறு:-

வெப்பம் அதிகரிக்கும்

தமிழக உள்மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலையே காணப்படும். சென்னையில் அதிகபட்சமாக 38 செல்சியஸ் குறைந்த பட்சம் 29 செல்சியஸ் வெப்பம் பதிவாகும். சென்னையில் மழைக்கு வாய்ப்பு இல்லை.

உள்மாவட்டங்களான வேலூர், தர்மபுரி, நாமக்கல், மதுரை, சேலம், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் 41 முதல் 44 செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும். இயல்பைவிட 2 முதல் 3 செல்சியஸ் வரை வெப்பம் அதிகமாக பதிவாகும். அடுத்த 24 மணி நேரத்தில் (அதாவது இன்று) அதிகபட்சமாக 111 டிகிரி வரை வெப்பம் பதிவாகலாம். எனவே பகல்நேரங்களில் பொதுமக்கள் வெளியே நடமாடுவதை தவிர்க்கலாம். அதே நேரம் சேலம், தர்மபுரி, நாமக்கல், வேலூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் மட்டும் லேசான மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது.

மழை அளவு

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-

கோபிசெட்டிபாளையம் மற்றும் பவானி தலா 5 செ.மீ., ஏற்காடு 4 செ.மீ., குமாரபாளையம், பெண்ணுகொண்டாபுரம் மற்றும் ஈரோடு தலா 3 செ.மீ., பெருந்துறை, போச்சம்பள்ளி, ஊத்தங்கரை தலா 2 செ.மீ., கரூர், சத்தியமங்கலம், மணப்பாறை, சோழவந்தான், பர்கூர் தலா 1 செ.மீ. மழை பெய்துள்ளது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
ஓ.பன்னீர்செல்வத்துக்காக நிதி அமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்க தயார்’ அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி



ஜெயலலிதாவின் அரசு தொடர ஓ.பன்னீர்செல்வத்துக்காக நிதி அமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்க தயாராக இருக்கிறேன் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
ஏப்ரல் 24, 05:15 AM
சென்னை,

சென்னை சேத்துப்படடு ஏரியை அமைச்சர் ஜெயக்குமார் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது நிருபர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சேத்துப்பட்டு ஏரி அமைந்துள்ள 17 ஏக்கர் நிலத்தையும் மக்கள் பயன்பாட்டுக்கு சுற்றுலா தலமாகவும், சுற்றுச்சூழல் மாசுபட்டுவிடக்கூடாது என்பதற்காகவும் ரூ.43 கோடியில் பிரத்தியேக திட்டம் செய்யப்பட்டது. மாதத்துக்கு சுமார் 13 ஆயிரம் பேர் இங்கு வந்து செல்கிறார்கள். இப்போது இங்கு ரூ.6 கோடி செலவில் 2-ம் கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. அதை ஆய்வு செய்ய வந்தேன். குழந்தைகளுக்கு கடல்வாழ் உயிரினங் களை பற்றி தெரிய வேண்டும். அதை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து நிருபர்கள் அவரிடம் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

ஆதாயத்துக்காக பேசுகிறார்

கேள்வி:- தற்போது நடக்கும் ஆட்சி மோடியின் பினாமி ஆட்சி என்று தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு வைத்துள்ளார். அதுபற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்:- அது தவறு. கடந்த 17 ஆண்டுகளாக தமிழகத்தின் உரிமைகளை தி.மு.க. அடகு வைத்தது. மத்தியில் இவர்கள் கூட்டணியில் ஆட்சி இருந்த போது தமிழகத்துக்கு இவர்கள் என்ன செய்தார்கள்? அவர்கள் அப்போது நினைத்து இருந்தால் பல்வேறு வகையான தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு தீர்வு கண்டு இருக்கலாம். அன்று தீர்வு காண தவறியவர்கள் இன்று இதை பற்றி பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. அரசியல் ஆதாயத்துக்காக பேசுகிறார். அதில் உண்மை இல்லை.

கேள்வி:- எம்.எல்.ஏ.க்கள் செந்தில் பாலாஜி, கனகராஜ் உண்ணாவிரதம் இருப்போம் என்று சொல்கிறார்கள். ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த போது இதுபோன்ற சூழல் நடக்கவில்லை. எம்.எல்.ஏ.க்கள் தன்னிச்சையாக முடிவு எடுப்பதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்:- 123 எம்.எல்.ஏ.க்களும் ஜெயலலிதா ஆட்சி தொடரவேண்டும் என்று தான் செயல்படுகிறார்கள். மக்களின் கோரிக்கைகள், பிரச்சினைகள் சில இடங்களில் இருக்கலாம். முதல்-அமைச்சர் கவனத்துக்கு கொண்டு வரும்போது நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் எந்த பிரச்சினையும் இல்லை.

தி.மு.க. ஆட்சிக்கு வராது

கேள்வி:- எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி அனைத்து எம்.எல்.ஏ.க்களும் சட்டமன்றத்தை கூட்டி முதல்-அமைச்சரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார். அதுபற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்:- இது அவருடைய கருத்தாக இருக்கலாம். எங்கள் பக்கம் இருக்கும் 123 எம்.எல்.ஏ.க்களும் ஜெயலலிதாவின் ஆட்சி தொடர வேண்டும் என்று தான் நினைக்கிறார்கள். எல்லோரும் ஒற்றுமையாக இருக்கிறோம்.

கேள்வி:- துரைமுருகன் 6 மாதத்தில் அ.தி.மு.க. ஆட்சி கலையும் என்றும், மீண்டும் தேர்தல் வரும் என்றும் கூறி வருகிறார். அதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்:- பூனை கண் மூடிவிட்டால் உலகமே இருண்டு போய்விட்டது என்று பழமொழி சொல்வார்கள். அதை போல அவர்கள் பகல் கனவு கண்டு கொண்டு இருக்கிறார்கள். தூக்கத்தில் இருக்கும் தி.மு.க.வினரை தட்டி எழுப்புவதற்காக இந்த கருத்தை சொல்கிறார். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மக்களின் எல்லா தேவைகளையும் நிறைவேற்றி வருகிறது. 6 மாதம் என்ன? 60 ஆண்டுகள் ஆனாலும் தி.மு.க. ஆட்சிக்கு வராது. தேர்தலை எப்போது சந்தித்தாலும் நாங்கள் தான் வெற்றி பெறுவோம்.

தயாராக இருக்கிறேன்

கேள்வி:- ஓ.பன்னீர்செல்வம் உங்கள் வசம் இருக்கும் நிதி அமைச்சர் பதவியை கேட்பதால் தான் நீங்கள் அவரை பற்றி கருத்து கூறுவதாக பேசப்படுகிறது?

பதில்:- அவருக்கு இந்த பதவி வேண்டும் என்றால், நான் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஒப்புதலோடு ஜெயலலிதாவின் ஆட்சி தொடர, கட்சியின் நலன் கருதி நான் வகிக்கும் எல்லா துறைகளையும் விட்டுக்கொடுக்க தயாராக இருக்கிறேன்.

கேள்வி:- கட்சியின் நலன் கருதி நிதி அமைச்சர் பதவியை விட்டுக்கொடுப்பது போல், முதல்-அமைச்சர் பதவியையும் விட்டுக்கொடுப்பீர்களா?

பதில்:- ஜெயலலிதாவின் ஆட்சி தொடர வேண்டும் என்று கட்சியின் மூத்த நிர்வாகிகள், முன்னோடிகள், தொண்டர்கள் என எல்லோரும் விரும்புகிறார்கள். அதற்கு யாராவது ஒருவர் தியாகம் செய்ய வேண்டும். நீங்கள் என்னிடத்தில் நிதி அமைச்சர் பதவியை விட்டுக்கொடுப்பீர்களா என்று கேட்டீர்கள். அதனால் என் கருத்தை சொன்னேன்.

அமைச்சரவை பட்டியல்

கேள்வி:- பேச்சுவார்த்தைக்கு பிறகு அமைச்சரவை பட்டியலில் மாற்றம் இருக்குமா?

பதில்:- வெளியில் அவர்கள் எதையும் பேச வேண்டாம். தலைமை கழகத்துக்கு பேச்சுவார்த்தைக்கு வரட்டும். கோரிக்கைகளை பேசி தான் தீர்க்க முடியும்.

கேள்வி:- பேச்சுவார்த்தை பல கட்டங்களாக நடைபெறுமா?

பதில்:- நாளை (இன்று) உட்கார்ந்து பேசினால் தான் தெரியும்.

கேள்வி:- அ.தி.மு.க. தலைமை கழகத்தில் இருக்கும் சசிகலா, டி.டி.வி.தினகரன் படங்களை அகற்ற வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் அணியினர் கூறியதாக தெரியவருகிறது. அதுதொடர்பாக நடவடிக்கை எதுவும் எடுக்கப்படுகிறதா?

பதில்:- அதிகாரபூர்வமாக எந்த தகவலும் இதுவரை எனக்கு தெரியவில்லை. அவர்கள் தினமும் ஒரு கோரிக்கைகளை வைக்கிறார்கள்.

நான் நம்புகிறேன்

கேள்வி:- கோடைக்காலம் தொடங்கி இருப்பதால் ஏரிகள், குளங்கள் வறண்டு வருகிறது. அதை தடுப்பதற்கும், அதில் இருக்கும் மீன்களை காப்பாற்றுவதற்கும் எதுவும் நடவடிக்கை எடுக்கப்படுமா? அமைச்சர் செல்லூர் ராஜூ தெர்மாகோல் ‘சீட்’ அமைத்தது போல நீங்கள் எதுவும் நடவடிக்கை எடுப்பீர்களா?

பதில்:- இயற்கை ஒரு பெரிய வரபிரசாதம். அதை அனுசரித்து போகும் அளவுக்கு எல்லா உயிரினங்களுக்கும் ஆற்றல் உள்ளது. அதனால் மீன்களுக்கு பாதிப்பு இருக்காது. தமிழ்நாட்டில் 27 லட்சம் குளங்கள், 38 ஆயிரம் ஏரிகள் இதற்கு தண்ணீர் விட முடியுமா? இயற்கை தான் அதற்கு வழி செய்ய வேண்டும். கோடை மழை கைகொடுக்கும் என்று நான் நம்புகிறேன். மழையை தான் நம்பி இருக்கிறோம். ஏரிகளில் நீர் இருப்பு குறையாமல் இருக்கவும் வழிவகை செய்யப்படும்.

நியாயமில்லை

கேள்வி:- இரட்டை இலையை மீட்பதற்காக பணம் கொடுத்ததாக டெல்லி போலீசில் டி.டி.வி.தினகரன் ஆஜராகி இருக்கிறார். இது பற்றிய உங்கள் கருத்து என்ன?

பதில்:- யாருடைய நிர்ப்பந்தத்தின் பேரில் அல்லாமல், நாங்களாகவே கட்சியின் அடிமட்ட தொண்டர்கள், கிளை செயலாளர்கள், பிரதிநிதிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள், பொதுமக்கள் ஆகியோர் டி.டி.வி.தினகரன் மற்றும் அவரை சார்ந்த குடும்பத்தினரை ஒதுக்கி வைத்துவிட்டு ஆட்சியையும், கட்சியையும் வழிநடத்த வேண்டும் என்ற அவர்களின் கருத்தின் அடிப்படையில் அவர் ஒதுக்கப்பட்டார். அவர் சம்பந்தமாக எந்த வித கருத்தையும் எங்களிடம் கேட்பதில் நியாயமில்லை.

இவ்வாறு அவர் பதில் அளித்தார்.
ரெயில் டிக்கெட் கட்டண சலுகை பெறுவதற்கு மூத்த குடிமக்கள் வயது வரம்பு 70 ஆக உயர்கிறது?


ரெயில் டிக்கெட் கட்டண சலுகை பெறுவதற்கு மூத்த குடிமக்கள் வயது வரம்பை 70 ஆக உயர்த்த ரெயில்வே அமைச்சகம் பரிசீலிக்கிறது.
ஏப்ரல் 24, 04:45 AM

புதுடெல்லி

ரெயில் டிக்கெட் கட்டண சலுகை பெறுவதற்கு மூத்த குடிமக்கள் வயது வரம்பை 70 ஆக உயர்த்த ரெயில்வே அமைச்சகம் பரிசீலிக்கிறது.ரெயில்வேக்கு இழப்பு

இந்திய ரெயில்வே அமைச்சகம், பயணிகள் ரெயில்களை இயக்குவதில் ஆண்டுக்கு ரூ.34 ஆயிரம் கோடி இழப்பை சந்தித்து வருகிறது. இந்த இழப்பில், ரெயில் பயணிகளுக்கு வழங்கப்பட்டு வருகிற 53 பிரிவிலான மானியங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஏறத்தாழ ஆண்டுக்கு ரூ.1,500 கோடி சலுகை கட்டண வகையில் இழப்பு ஏற்படுகிறது.

மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள், மாணவர்கள், ராணுவ வீரர்கள் என பல தரப்பினருக்கும் ரெயில் பயண கட்டணத்தில் சலுகை வழங்கப்பட்டு வருகிறது.வயது வரம்பு உயர்த்த பரிசீலனை

இந்த சலுகைகளை குறைப்பதற்கான வழிவகைகளை ரெயில்வே அமைச்சகம் பரிசீலித்து வருகிறது. இது தொடர்பான தகவல்கள் கசிந்துள்ளன.

தற்போது பொதுமக்களில் பெண்களுக்கு 58 வயது, ஆண்களுக்கு 60 வயது முடிந்திருந்தால் அவர்கள் மூத்த குடிமக்களுக்கான ரெயில் கட்டண சலுகையை பெற முடிகிறது. ஆண்களுக்கு கட்டணத்தில் 40 சதவீதமும், பெண்களுக்கு 50 சதவீதமும் வழங்கப்பட்டு வருகிறது.

இனி மூத்த குடிமக்களுக்கான வயது வரம்பை 70 ஆக்கி விடலாம் என ரெயில்வே அமைச்சகம் கருதுகிறது. இது தொடர்பாக பரிசீலித்தும் வருகிறது. அது மட்டுமின்றி, மூத்த குடிமக்களுக்கு வழங்கக்கூடிய சலுகையினால் ரெயில்வேக்கு ஏற்படுகிற நிதிச்சுமையை பகிர்ந்து கொள்ளுமாறு மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் வழங்கல் துறையிடம் கேட்கவும் ரெயில்வே அமைச்சகம் திட்டமிட்டு வருகிறது.அதிகாரி தகவல்

இதுபற்றி ரெயில்வே அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர், ‘‘ஏற்கனவே பயணிகள் ரெயில் கட்டணத்தில் மானியம் வழங்கப்படுகிறது. ராணுவத்தினருக்கான பயண கட்டண சலுகையை பாதுகாப்பு அமைச்சகமும், மூத்த குடிமக்களுக்காக கட்டண சலுகையை சமூக நீதி அல்லது பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகமும், மாணவர்களுக்கான கட்டண சலுகையை மனிதவள மேம்பாட்டு அமைச்சகமும் ஏற்க செய்ய வேண்டும். இதுபற்றி பரிசீலிக்கப்படுகிறது’’ என்று கூறினார்.

எனவே இதுதொடர்பாக விரைவில் முடிவு எடுத்து அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெண்கள் நிம்மதியாக வாழ முடியாதா?'

பதிவு செய்த நாள்23ஏப்
2017
23:16

புதுடில்லி: 'காதலிக்கும்படி எவரையும் கட்டாயப்படுத்தக் கூடாது. இந்த நாட்டில், பெண்கள் நிம்மதியாக வாழ முடியாதா' என, சுப்ரீம் கோர்ட் வேதனை தெரிவித்துள்ளது.

காதலிக்க கட்டாயப்படுத்தியதால், ஹிமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த, 16 வயது மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில் தற்கொலைக்கு துாண்டியதற்காக, ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து, அந்தப் பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்தவன், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளான்.

இந்த வழக்கை விசாரித்த, நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு கூறியதாவது:
இந்த நாட்டில் பெண்கள் நிம்மதியாக வாழ முடியாதா? காதலிக்கும்படி, யாரையும் எவரும் வற்புறுத்தவோ, கட்டாயப்படுத்தவோ கூடாது. காதலிக்கும்படி, சிறுமியர், மாணவியர் துன்புறுத்தப்படுவது வேதனை அளிக்கிறது. தான் யாரை காதலிக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் உரிமை பெண்களுக்கு உள்ளது.இவ்வாறு கேள்வி எழுப்பிய அமர்வு, தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது.
அந்தஸ்துக்கு ஏற்ப ஜீவனாம்சம் : சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு
பதிவு செய்த நாள்24ஏப்  2017 02:16




புதுடில்லி: 'விவாகரத்து பெறும் போது, மனைவிக்கு அளிக்கப்படும் ஜீவனாம்ச தொகை, கணவன், மனைவி ஆகிய இருவரின் அந்தஸ்துக்கு பொருந்தும் வகையில் இருக்க வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.

கடந்த, 1995ல் திருமணமாகி, 2012ல், விவாகரத்து பெற்ற தம்பதி தொடர்பான வழக்கை, சமீபத்தில், கோல்கட்டா ஐகோர்ட் விசாரித்தது. விவாகரத்து பெற்ற கணவனின் மாதச் சம்பளம், 63,500 ரூபாயிலிருந்து, 95 ஆயிரம் ரூபாயாக அதிகரித்திருந்தது. அதே சமயம், விவாகரத்து பெற்ற கணவன், வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து, அவள் மூலம், ஒரு குழந்தைக்கு தந்தையாகி உள்ளார்.

கணவனின் சம்பளம் அதிகரித்து உள்ளதால், பெண்ணுக்கு அளிக்கப்பட்டு வந்த ஜீவனாம்ச தொகையை, 16 ஆயிரம் ரூபாயில் இருந்து, 23 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி, கோல்கட்டா ஐகோர்ட் உத்தரவிட்டது.இதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில், கணவன் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், ஆர்.பானுமதி, எம்.எம்.சந்தனகவுடர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:மனைவியிடம் இருந்து விவாகரத்து பெறும் கணவன், இருதரப்பின் அந்தஸ்துக்கு பொருந்தும் வகையில், ஜீவனாம்சம் அளிக்க வேண்டும். இந்த சந்தர்ப்பத்தில், ஜீவனாம்சம் அளிப்பவரின் நிதி நிலைமையையும் கருத்தில் கொள்ள வேண்டும். ஜீவனாம்ச வழக்கில், கணவன், மனைவி ஆகிய இருவரது நிகழ்கால சூழ்நிலையை பொறுத்தே, ஜீவனாம்ச தொகை அமையும்.

இந்த வழக்கில், கணவனுக்கு சம்பளம் உயர்ந்துள்ள போதிலும், அவருக்கு வேறு பெண்ணுடன் திருமணமாகி, குழந்தை பிறந்துள்ளது. இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு, அவர் ஜீவனாம்சம் அளிக்க வேண்டும். அதனால், கோல்கட்டா ஐகோர்ட் கூறிய ஜீவனாம்ச தொகை, 23 ஆயிரம் ரூபாயில் இருந்து, 20 ஆயிரம் ரூபாயாக குறைக்கப்படுகிறது. இவ்வாறு சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.

NEWS TODAY 02.01.2026