Monday, April 24, 2017

ஓ.பன்னீர்செல்வத்துக்காக நிதி அமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்க தயார்’ அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி



ஜெயலலிதாவின் அரசு தொடர ஓ.பன்னீர்செல்வத்துக்காக நிதி அமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்க தயாராக இருக்கிறேன் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
ஏப்ரல் 24, 05:15 AM
சென்னை,

சென்னை சேத்துப்படடு ஏரியை அமைச்சர் ஜெயக்குமார் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது நிருபர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சேத்துப்பட்டு ஏரி அமைந்துள்ள 17 ஏக்கர் நிலத்தையும் மக்கள் பயன்பாட்டுக்கு சுற்றுலா தலமாகவும், சுற்றுச்சூழல் மாசுபட்டுவிடக்கூடாது என்பதற்காகவும் ரூ.43 கோடியில் பிரத்தியேக திட்டம் செய்யப்பட்டது. மாதத்துக்கு சுமார் 13 ஆயிரம் பேர் இங்கு வந்து செல்கிறார்கள். இப்போது இங்கு ரூ.6 கோடி செலவில் 2-ம் கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. அதை ஆய்வு செய்ய வந்தேன். குழந்தைகளுக்கு கடல்வாழ் உயிரினங் களை பற்றி தெரிய வேண்டும். அதை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து நிருபர்கள் அவரிடம் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

ஆதாயத்துக்காக பேசுகிறார்

கேள்வி:- தற்போது நடக்கும் ஆட்சி மோடியின் பினாமி ஆட்சி என்று தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு வைத்துள்ளார். அதுபற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்:- அது தவறு. கடந்த 17 ஆண்டுகளாக தமிழகத்தின் உரிமைகளை தி.மு.க. அடகு வைத்தது. மத்தியில் இவர்கள் கூட்டணியில் ஆட்சி இருந்த போது தமிழகத்துக்கு இவர்கள் என்ன செய்தார்கள்? அவர்கள் அப்போது நினைத்து இருந்தால் பல்வேறு வகையான தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு தீர்வு கண்டு இருக்கலாம். அன்று தீர்வு காண தவறியவர்கள் இன்று இதை பற்றி பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. அரசியல் ஆதாயத்துக்காக பேசுகிறார். அதில் உண்மை இல்லை.

கேள்வி:- எம்.எல்.ஏ.க்கள் செந்தில் பாலாஜி, கனகராஜ் உண்ணாவிரதம் இருப்போம் என்று சொல்கிறார்கள். ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த போது இதுபோன்ற சூழல் நடக்கவில்லை. எம்.எல்.ஏ.க்கள் தன்னிச்சையாக முடிவு எடுப்பதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்:- 123 எம்.எல்.ஏ.க்களும் ஜெயலலிதா ஆட்சி தொடரவேண்டும் என்று தான் செயல்படுகிறார்கள். மக்களின் கோரிக்கைகள், பிரச்சினைகள் சில இடங்களில் இருக்கலாம். முதல்-அமைச்சர் கவனத்துக்கு கொண்டு வரும்போது நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் எந்த பிரச்சினையும் இல்லை.

தி.மு.க. ஆட்சிக்கு வராது

கேள்வி:- எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி அனைத்து எம்.எல்.ஏ.க்களும் சட்டமன்றத்தை கூட்டி முதல்-அமைச்சரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார். அதுபற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்:- இது அவருடைய கருத்தாக இருக்கலாம். எங்கள் பக்கம் இருக்கும் 123 எம்.எல்.ஏ.க்களும் ஜெயலலிதாவின் ஆட்சி தொடர வேண்டும் என்று தான் நினைக்கிறார்கள். எல்லோரும் ஒற்றுமையாக இருக்கிறோம்.

கேள்வி:- துரைமுருகன் 6 மாதத்தில் அ.தி.மு.க. ஆட்சி கலையும் என்றும், மீண்டும் தேர்தல் வரும் என்றும் கூறி வருகிறார். அதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்:- பூனை கண் மூடிவிட்டால் உலகமே இருண்டு போய்விட்டது என்று பழமொழி சொல்வார்கள். அதை போல அவர்கள் பகல் கனவு கண்டு கொண்டு இருக்கிறார்கள். தூக்கத்தில் இருக்கும் தி.மு.க.வினரை தட்டி எழுப்புவதற்காக இந்த கருத்தை சொல்கிறார். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மக்களின் எல்லா தேவைகளையும் நிறைவேற்றி வருகிறது. 6 மாதம் என்ன? 60 ஆண்டுகள் ஆனாலும் தி.மு.க. ஆட்சிக்கு வராது. தேர்தலை எப்போது சந்தித்தாலும் நாங்கள் தான் வெற்றி பெறுவோம்.

தயாராக இருக்கிறேன்

கேள்வி:- ஓ.பன்னீர்செல்வம் உங்கள் வசம் இருக்கும் நிதி அமைச்சர் பதவியை கேட்பதால் தான் நீங்கள் அவரை பற்றி கருத்து கூறுவதாக பேசப்படுகிறது?

பதில்:- அவருக்கு இந்த பதவி வேண்டும் என்றால், நான் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஒப்புதலோடு ஜெயலலிதாவின் ஆட்சி தொடர, கட்சியின் நலன் கருதி நான் வகிக்கும் எல்லா துறைகளையும் விட்டுக்கொடுக்க தயாராக இருக்கிறேன்.

கேள்வி:- கட்சியின் நலன் கருதி நிதி அமைச்சர் பதவியை விட்டுக்கொடுப்பது போல், முதல்-அமைச்சர் பதவியையும் விட்டுக்கொடுப்பீர்களா?

பதில்:- ஜெயலலிதாவின் ஆட்சி தொடர வேண்டும் என்று கட்சியின் மூத்த நிர்வாகிகள், முன்னோடிகள், தொண்டர்கள் என எல்லோரும் விரும்புகிறார்கள். அதற்கு யாராவது ஒருவர் தியாகம் செய்ய வேண்டும். நீங்கள் என்னிடத்தில் நிதி அமைச்சர் பதவியை விட்டுக்கொடுப்பீர்களா என்று கேட்டீர்கள். அதனால் என் கருத்தை சொன்னேன்.

அமைச்சரவை பட்டியல்

கேள்வி:- பேச்சுவார்த்தைக்கு பிறகு அமைச்சரவை பட்டியலில் மாற்றம் இருக்குமா?

பதில்:- வெளியில் அவர்கள் எதையும் பேச வேண்டாம். தலைமை கழகத்துக்கு பேச்சுவார்த்தைக்கு வரட்டும். கோரிக்கைகளை பேசி தான் தீர்க்க முடியும்.

கேள்வி:- பேச்சுவார்த்தை பல கட்டங்களாக நடைபெறுமா?

பதில்:- நாளை (இன்று) உட்கார்ந்து பேசினால் தான் தெரியும்.

கேள்வி:- அ.தி.மு.க. தலைமை கழகத்தில் இருக்கும் சசிகலா, டி.டி.வி.தினகரன் படங்களை அகற்ற வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் அணியினர் கூறியதாக தெரியவருகிறது. அதுதொடர்பாக நடவடிக்கை எதுவும் எடுக்கப்படுகிறதா?

பதில்:- அதிகாரபூர்வமாக எந்த தகவலும் இதுவரை எனக்கு தெரியவில்லை. அவர்கள் தினமும் ஒரு கோரிக்கைகளை வைக்கிறார்கள்.

நான் நம்புகிறேன்

கேள்வி:- கோடைக்காலம் தொடங்கி இருப்பதால் ஏரிகள், குளங்கள் வறண்டு வருகிறது. அதை தடுப்பதற்கும், அதில் இருக்கும் மீன்களை காப்பாற்றுவதற்கும் எதுவும் நடவடிக்கை எடுக்கப்படுமா? அமைச்சர் செல்லூர் ராஜூ தெர்மாகோல் ‘சீட்’ அமைத்தது போல நீங்கள் எதுவும் நடவடிக்கை எடுப்பீர்களா?

பதில்:- இயற்கை ஒரு பெரிய வரபிரசாதம். அதை அனுசரித்து போகும் அளவுக்கு எல்லா உயிரினங்களுக்கும் ஆற்றல் உள்ளது. அதனால் மீன்களுக்கு பாதிப்பு இருக்காது. தமிழ்நாட்டில் 27 லட்சம் குளங்கள், 38 ஆயிரம் ஏரிகள் இதற்கு தண்ணீர் விட முடியுமா? இயற்கை தான் அதற்கு வழி செய்ய வேண்டும். கோடை மழை கைகொடுக்கும் என்று நான் நம்புகிறேன். மழையை தான் நம்பி இருக்கிறோம். ஏரிகளில் நீர் இருப்பு குறையாமல் இருக்கவும் வழிவகை செய்யப்படும்.

நியாயமில்லை

கேள்வி:- இரட்டை இலையை மீட்பதற்காக பணம் கொடுத்ததாக டெல்லி போலீசில் டி.டி.வி.தினகரன் ஆஜராகி இருக்கிறார். இது பற்றிய உங்கள் கருத்து என்ன?

பதில்:- யாருடைய நிர்ப்பந்தத்தின் பேரில் அல்லாமல், நாங்களாகவே கட்சியின் அடிமட்ட தொண்டர்கள், கிளை செயலாளர்கள், பிரதிநிதிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள், பொதுமக்கள் ஆகியோர் டி.டி.வி.தினகரன் மற்றும் அவரை சார்ந்த குடும்பத்தினரை ஒதுக்கி வைத்துவிட்டு ஆட்சியையும், கட்சியையும் வழிநடத்த வேண்டும் என்ற அவர்களின் கருத்தின் அடிப்படையில் அவர் ஒதுக்கப்பட்டார். அவர் சம்பந்தமாக எந்த வித கருத்தையும் எங்களிடம் கேட்பதில் நியாயமில்லை.

இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

No comments:

Post a Comment

Three-Day Absence During COVID Lockdown Not Justification For Compulsory Retirement; Kerala HC Reinstates Railway Employee With Full Benefits

Three-Day Absence During COVID Lockdown Not Justification For Compulsory Retirement; Kerala HC Reinstates Railway Employee With Full Benefit...