Tuesday, April 25, 2017

தலையங்கம்
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டீர்களா?ஏப்ரல் 25, 02:00 AM

மத்திய அரசாங்கத்தை யார் ஆட்சி செய்யப்போகிறார்கள் என்பதை நிர்ணயிக்க பாராளுமன்ற தேர்தலும், மாநிலங்களில் யார் ஆட்சி செய்யப்போகிறார்கள் என்பதை நிர்ணயிக்க சட்டசபை தேர்தல்களும், பஞ்சாயத்து முதல் மாநகராட்சி வரை உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களும், 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கிறது. தேர்தல் நடக்கும்போது கட்சிகள் சார்பிலும், சுயேச்சையாகவும் வேட்பாளர்கள் நிறுத்தப்படுகிறார்கள். தேர்தலில் யார் வெற்றிப்பெறப்போகிறார்கள்? என்பதை அந்த வேட்பாளரும், அவர் கட்சியும் அளிக்கும் வாக்குறுதிகள்தான் பெரும்பாலும் நிர்ணயிக்கும். பல நேரங்களில், தேர்தல் வாக்குறுதிகளை நம்பி ஓட்டுப்போடும் மக்கள், அந்ததேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்றால், அதற்காக யாரிடம் போய்ச்சொல்ல என்று தெரியாமல் திகைக்கிறார்கள்.

இந்தநிலையில், சமீபத்தில் டெல்லியில், ‘‘தேர்தல் விவகாரங்கள் தொடர்பான பொருளாதார சீர்திருத்தங்கள்’’ என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில், சுப்ரீம் கோர்ட்டு தலைமைநீதிபதி ஜே.எஸ்.கேஹர் மிகவும் வரவேற்கத்தக்க ஒரு கருத்தை குறிப்பிட்டார். ‘‘தேர்தலின்போது வாக்காளர்களிடம், தங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று கோரி வெளியிடும் தேர்தல் வாக்குறுதிகளுக்கு, அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும் பொறுப்பேற்கவேண்டும். தேர்தல் வாக்குறுதிகளை தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் நிறைவேற்றவேண்டும் என்பது தொடர்பாக தேர்தல் சீர்திருத்தங்கள் வேண்டும்’’ என்று அவர் கூறியிருக்கிறார். இப்போதெல்லாம் அரசியல் கட்சிகள் வெளியிடும் தேர்தல் வாக்குறுதிகள் வெறும் காகிதத்துண்டுபோல் ஆகிவிட்டது. பொதுமக்களும் தங்களிடம் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்பதையே மறந்துவிடுகிறார்கள்.

பொதுவாக, மத்திய–மாநில அரசுகள் தேர்தல் நேரத்தில் கொடுக்கப்படும் பல வாக்குறுதிகள் முதலில் சிலகாலம் ‘ஜெட்’ வேகத்தில் நிறைவேற்றப்படுகின்றன. அதன்பின்பு, நத்தை வேகமாகி விடுகிறது. 2016–ம் ஆண்டு ஜெயலலிதா வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கைகளில் முதல் நாளிலேயே சில அறிவிப்புகளை நிறைவேற்றினார். தமிழக ஆறுகளை இணைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும். கச்சத்தீவை மீட்டெடுத்து பாரம்பரிய மீன்பிடி இடங்களில் மீன்பிடி உரிமையை நிலைநாட்டிட தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களுக்கு வழங்கப்படும் லேப்–டாப்புடன், கட்டணமில்லா இணையதள இணைப்பு வசதியும் வழங்கப்படும், பொங்கல் திருநாளுக்கு ரூ.500 மதிப்பில் கோ–ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் இருந்து கைத்தறித்துணிகள் வாங்கிக்கொள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கூப்பன் வழங்கப்படும். தொடக்கப்பள்ளி குழந்தைகளுக்கு சத்துணவு திட்டத்தின்கீழ் காலை சிற்றுண்டி வழங்கப்படும். அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் செல்போன் விலையின்றி வழங்கப்படும், ஊழல் தடுப்பு அமைப்பான ‘லோக் ஆயுக்தா’ அமைப்பு ஏற்படுத்தப்படும் என்பது உள்பட பல வாக்குறுதிகள் இன்னும் நிலுவையில் உள்ளன. இன்னும் 4 ஆண்டுகள் அ.தி.மு.க. ஆட்சி இருக்கிறது என்று கூறலாம். ஆனால், இந்ததேர்தல் வாக்குறுதிகள் எல்லாம் நிறைவேற்றும்வகையில், ஒரு வரைவு திட்டம் அரசு சார்பில் வகுக்கப்படவேண்டும். இதுபோல, 2014–ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில், ‘ஒரே இந்தியா–உன்னத இந்தியா, அனைவரோடும் இணைவோம், அனைவரும் முன்னேறுவோம்’ என்ற தலைப்பில் பா.ஜ.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், இன்னும் பல வாக்குறுதிகள் தொடக்கத்தை காணாமல் இருக்கின்றன. சாத்தியக்கூறுகள் அடிப்படையில், ‘நதிகள் இணைப்புத்திட்டம்’ செயல்படுத்தப்படும், கடலோர நகரங்களில், கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்பது உள்பட ஏராளமான அறிவிப்புகள் இன்னும் மத்திய அரசாங்கத்தின் நிலுவையில் உள்ளன.

தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி, கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்களை கடலோர பகுதிகளில் அமைப்பதற்கான முயற்சிகள் தொடங்கப்பட்டிருந்தால், 1,076 கி.மீ. நீளமுள்ள தமிழக கடலோரபகுதிகளில் பல நகர்ப்புறங்கள் பயனடைந்திருக்கும். இப்போதுள்ள கடும் வறட்சியில் நிச்சயமாக இத்தகைய நிலையங்கள் கைகொடுத்து இருக்கும். எனவே, மத்திய–மாநில அரசுகள் உடனடியாக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். நிறைவேற்றவில்லையென்றால், மக்களிடம் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...