Tuesday, May 2, 2017

ஜூன் முதல் எல்.இ.டி., பல்பு அரசு அலுவலகத்தில் கட்டாயம் 

அரசு அலுவலகங்களில், எல்.இ.டி., பல்பு பயன்படுத்துவதை, ஜூன் மாதம் முதல் கட்டாயமாக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
இந்தியாவில், மின் தேவை அதிகம் உள்ள மாநிலங்களில், தமிழகம் முன்னணியில் உள்ளது.

இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:

இந்தியாவில், மின் தேவை அதிகம் உள்ள மாநிலங்களில், தமிழகம் முன்னணியில் உள்ளது. ஆனால், தமிழகத்தில், குறைந்த எண்ணிக்கையில் தான், எல்.இ.டி., பல்புகள் பயன்பாடு உள்ளது.

மார்ச் முதல், செப்., வரை, மின் தேவை அதிகம் இருக்கிறது. இதனால், தொடர்ந்து அதிக மின் உற்பத்தி செய்ய வேண்டியுள்ளது. எல்.இ.டி., பல்பு பயன்படுத்தினால், இப்பிரச்னையின் தீவிரம் குறையும்.
எனவே, ஜூன் மாதம் முதல், அரசு அலுவலகங்களில், எல்.இ.டி., பல்பு கட்டாயமாக்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து, அரசு உயரதிகாரி மூலம், அனைத்து துறைக்கும் கடிதம் எழுதப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

முறைகேடு?

மத்திய அரசு, 'எனர்ஜி எபிசியன்ட்' என்ற நிறுவனம் மூலம், குறைந்த விலையில், எல்.இ.டி., பல்புகளை விற்கிறது. இந்நிறுவனம் இதுவரை, 23 கோடி பல்புகளை விற்றுள்ளது. தற்போது, மின் வாரிய, மின் கட்டண மையங்களுக்கு அருகில், இந்நிறுவனம், எல்.இ.டி., பல்புகளை விற்கிறது. தமிழகத்தில், எல்.இ.டி., பல்பு வாங்குவதில், முறைகேட்டை தடுக்க, அரசு, மத்திய நிறுவனத்திடம் இருந்து வாங்க வேண்டும் என்ற வலியுறுத்தல் எழுந்துள்ளது.

- நமது நிருபர் -

Monday, May 1, 2017

தொடர் தோல்விகள்... தடுமாறும் ஆம் ஆத்மி...!

கே.பாலசுப்பிரமணி


அரசியல் அரங்கில் அசுர வளர்ச்சி பெற்ற ஆம் ஆத்மி கட்சி, அதே வேகத்தில் இப்போது சரிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. டெல்லியைப் போல பஞ்சாப்பில் ஆட்சியைப் பிடித்துவிடும் எதிர்பார்ப்பில் அரவிந்த் கெஜ்ரிவால் இருந்தார். ஆனால், பஞ்சாப் தேர்தலில் படு தோல்வி அடைந்தது ஆம் ஆத்மி கட்சி. எனினும், அங்கு 20 இடங்களைப் பிடித்து எதிர்கட்சி அந்தஸ்தைத் தக்க வைத்துள்ளது.

இடைத்தேர்தல் தோல்வி

இதன் தொடர்ச்சியாக, டெல்லியில் ரஜோவ்ரி தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி படுதோல்வி அடைந்தது. பி.ஜே.பி வெற்றி பெற்றது. இப்போது நடந்து முடிந்த டெல்லி உள்ளாட்சித் தேர்தலில் பி.ஜே.பி அபார வெற்றி பெற்றிருக்கிறது. டெல்லியில் ஆளும் கட்சியாக இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் கட்சி வெறும் 48 வார்டுகளில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது.

2015-ல் நடைபெற்ற டெல்லி சட்டமன்றத் தேர்தலில் டெல்லி மக்களால் பெரிதும் விரும்பப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால், 2 ஆண்டுகளுக்குள் மக்களின் நம்பிக்கையை இழந்திருக்கிறார். உள்ளாட்சித் தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் தோல்விக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன.

வெளிமாநிலங்களில் கவனம்

அதில் முதன்மையானது, டெல்லியில் கவனம் செலுத்துவதை விட்டு விட்டு பஞ்சாப், கோவா என்று அரவிந்த் கெஜ்ரிவால் வெளிமாநிலங்களில் ஆட்சியைப்பிடிக்க குறிவைத்ததுதான் காரணம் என்கிறார்கள். மோடிக்கு எதிரான நபராக அரவிந்த் கெஜ்ரிவாலை அவரது கட்சியினர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். டெல்லியைத் தவிர்த்து பிற மாநிலங்களில் கால்பதிக்க நினைக்கிறது. ஆனால், கட்சியில் பிரபலமானவர் என்று பார்த்தால் அரவிந்த் கெஜ்ரிவால் மட்டுமே. அவரை டெல்லி மக்கள் தங்கள் முதல்வராகப் பார்த்தார்கள். ஆனால், டெல்லி மீது கவனம் செலுத்துவதை அரவிந்த் கெஜ்ரிவால் குறைத்துக் கொண்டார். அதனால்தான் இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மிக்கு மக்கள் பாடம் புகட்டி உள்ளனர்.

அதே போல உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தின்போது ஆளும் கட்சியின் சாதனைகளைச் சொல்லாமல், பி.ஜே.பி-யை விமர்சனம் செய்வதிலேயே நேரத்தை செலவிட்டனர். ஆட்சியின் சாதனைகளை எடுத்துச் சொல்ல தவறி விட்டனர். இதுவும் தோல்விக்கு முக்கிய காரணமாகும்.

கெஜ்ரிவால் மீது அதிருப்தி

2015 தேர்தலில் ஊழலுக்கு எதிரான நிலையை ஆம் ஆத்மி கையில்
எடுத்தது. அது டெல்லி மக்களிடமும் எடுபட்டதால் வெற்றி பெற்றது. ஆனால், உள்ளாட்சித் தேர்தலில் அது போல இந்த முறை எந்த ஒரு விஷயத்தையும் கையில் எடுக்கவில்லை. தேர்தல் ஆணையத்தையும், வாக்குப்பதிவு இயந்திரத்தில் பி.ஜே.பி முறைகேடு செய்கிறது என்றும் சொன்னார்கள். இது மக்களிடம் எடுபடவில்லை.

டெல்லியில் உள்ளாட்சி தேர்தல்தான் நடந்தது என்ற போதிலும், இந்தத் தேர்தலில் கூட பி.ஜே.பி சார்பில் மோடியைத்தான் முன்னிறுத்தினர். ஆனால் மோடிக்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவாலை குறிப்பிடுகின்றனர். முதல்வராக இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் எந்த துறையையும் வைத்துக் கொள்ளவில்லை. இலாகா இல்லாத முதல்வராகத்தான் இருக்கிறார். ஆட்சியில் இரண்டாவது இடத்தில் இருக்கும் நபர்தான் ஆட்சியை கவனித்து வருகிறார். இது மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.
ஆம் ஆத்மி எம்.எல்.ஏ-க்கள் தலைவர் கெஜ்ரிவால் மீது கடும் அதிருப்தியில் இருப்பதாக கடந்த ஒரு மாதமாகவே செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. எம்.எல்.ஏ- வேத் பிகராஷ் என்பவர் பி.ஜே.பி-யில் சேர்ந்ததும் பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது. ஆம் ஆத்மியின் மூத்த தலைவராகக் கருதப்படும் குமார் விஸ்வாஸ் டெல்லி உள்ளாட்சித் தேர்தலில் பிரசாரம் செய்யவில்லை. இது தவிர தமது கட்சி ஊழலில் திளைப்பதாக ஒரு பரபரப்பு வீடியோவையும் இவர் வெளியிட்டார். இதுவும் ஆம் ஆத்மிக்கு எதிராக முடிந்தது. டெல்லி உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்த நிலையில் ஆம் ஆத்மி-யில் தலைவர் பொறுப்பில் மாற்றம் வர வேண்டும் என்றும் குமார் விஸ்வாஸ் பேசி இருக்கிறார்.

சுயபரிசோதனை அவசியம்

அடுத்தடுத்த தோல்விகளால் கலங்கிப் போயிருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் இன்று பேசுகையில், " கடந்த இரண்டு நாட்களாக பல தன்னார்வலர்கள், வாக்காளர்களிடம் பேசினேன். இதன் மூலம் ஒரு உண்மைத் தெளிவாகத்தெரிகிறது. ஆம். நாம் தவறு செய்து விட்டோம். தவறுகள் குறித்து நமக்கு நாமே சுய ஆய்வு செய்து கொண்டு தவறுகளை சரி செய்ய வேண்டும். வாக்காளர்களுக்கும், தன்னார்வலர்களுக்கும் நாம் கடன்பட்டிருக்கிறோம். இப்போதைக்கு நமக்கு செயல்தான் முக்கியம். நொண்டிசாக்குகள் முக்கியமல்ல"என்றார்.

இது தவிர வரப்போகும் நாட்களில் கெஜ்ரிவால் மற்றும் ஒரு பின்னடைவைச் சந்திக்கக் கூடும் என்று சொல்கிறார்கள். ஆம் ஆத்மியின் டெல்லி எம்.எல்.ஏ-க்கள் 21 பேர் மீது ஆதாயம் தரும் இன்னொரு பதவி வகிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவர்களை பதவி நீக்கம் செய்யும்படி குடியரசுதலைவருக்கு பி.ஜே.பி வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்தச் சூழலில் 21 எம்.எல்.ஏ-க்கள் குறித்து கருத்துக்கள் சொல்லும்படி தேர்தல் ஆணையத்துக்கு குடியரசு தலைவர் கடிதம் எழுதி உள்ளார். குடியரசுத் தலைவரின் கடிதம் மீது மே 15-ம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அடுத்தடுத்த சரிவுகளில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் மீளுவாரா?

ஹவாலா பணம் 50 லட்சம் சிக்கியது - டி.டி.வி.தினகரனுக்கு மேலும் சிக்கல்

டெல்லியில் கைதான ஹவாலா ஏஜென்ட் நரேஷிடம் இருந்து 50 லட்ச ரூபாய் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனால் டி.டி.வி.தினகரனுக்கு மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

t.t.v.dinakaran raid
இரட்டை இலை சின்னம் லஞ்சம் தொடர்பான வழக்கில் ஹவாலா ஏஜென்ட் நரேஷ் என்பவரை கடந்த இருதினங்களுக்கு முன்னர் டெல்லியில் காவல்துறையினர் கைது செய்தனர். அவர் கைதைத் தொடர்ந்து டி.டி.வி.தினகரனிடம் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. ஏப்ரல் 18-ம் தேதி, டெல்லியில் உள்ள ஹோட்டலில் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரை காவல்துறையினர் கைதுசெய்ததோடு, அவரிடமிருந்து 1.3 கோடி ரூபாய் பணத்தைக் கைப்பற்றினர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், இரட்டை இலைச் சின்னம் பெற, தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க, டி.டி.வி.தினகரன் பணம் கொடுத்ததாகத் தெரிவித்தார். இதையடுத்து, டி.டி.வி.தினகரனை காவல்துறையினர் கைதுசெய்தனர். டி.டி.வி.தினகரனை ஐந்து நாள் காவலில் எடுத்த டெல்லி காவல்துறையினர் சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். சென்னை ராஜ்பவனில் உள்ள மத்திய அரசு விடுதி மற்றும் அடையாரில் உள்ள தினகரனுடைய வீட்டில் வைத்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.

இதற்கு இடையில் டெல்லியில் ஹவாலா ஏஜெண்ட எனக் கூறப்படும் நரேஷ் இரு தினங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டார். அவரிடம் தீவிரமாக விசாரணை நடைபெற்றது. தற்போது அவரிடம் இருந்து ஹவாலாப் பணம் 50 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தரகர் சுகேஷிடம் கொடுப்பதற்காக  அந்தப் பணம் கொண்டு வரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கனிமொழி முதல் விஜயபாஸ்கர் வரை... ஆள்பவர்களுக்கு வந்த சிக்கலும் ஆண்டவன் தரிசனமும்!

எஸ்.கிருபாகரன்




நாட்டு மக்களின் வழக்குகளை தீர்த்துவைக்கவேண்டியவர்கள் அரசியல்வாதிகள். ஆனால் அவர்களே வழக்குகளுக்கு ஆளாகி கோவில் கோவிலாக ஏறி இறங்கவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது தமிழகத்தில் கடந்த பல வருடங்களாக.

அரசியல்வாதிகள் தங்களின் பிரச்னைகளுக்கென பிரத்யேக கோவில்களில் வழிபாடு செய்வதுண்டு. மறைந்த ஜெயலலிதாவுக்கு ராசியாக கோட்டூர்புரம் வரசித்தி விநாயகர் கோவில், சைதாப்பேட்டை குறுங்காலீஸ்வரர் என பல கோவில்கள் சொல்லப்பட்டாலும் தலைமைச் செயலகத்தின் வெளியே உள்ள கோட்டை நாகாத்தம்மன் அவரது நம்பிக்கைக்குரிய கோவில். அலுவலகத்தை விட்டு வெளியேறும்போது அவரது வாகனம் சில நிமிடங்கள் கோவில் வாசலில் நிற்கும். அர்ச்சகர் சிறப்பு பூஜை செய்து ஆரத்தி தட்டு அவர் இருக்கும் இடத்திற்கே போகும். வண்டியிலிருந்தபடியே அதைத் தொட்டு வணங்குவார். பின்னர் கார் புறப்படும். அரிதான சில சந்தரப்பங்களில்தான் அவர் இறங்கிவந்து வணங்கியிருக்கிறார். சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பதவியிழப்புக்கு முன் இறுதியாக தலைமைச்செயலகம் வந்து திரும்பியபோது வழக்கமாக வாகனத்திலிருந்தபடியே கும்பிடும் ஜெயலலிதா, முதன்முறையாக அன்றுதான் தன் ஷூவை கழற்றிவிட்டு வணங்கினார்.

கடந்த 2011 ம் ஆண்டு ஜெயலலிதாவால் போயஸ்கார்டனில் இருந்து சசிகலா வெளியேற்றப்பட்டபோது தி.நகர் சிவன் விஷ்ணு கோவிலின் அருகே உள்ள அகஸ்தியர் கோவிலுக்கு பூஜை செய்தார். ஆச்சர்யமாக அடுத்த சில நாட்களில் அவர் போயஸ் கார்டனுக்கு அழைக்கப்பட்டார்.



அரசியல் அரங்கில் விஜயகாந்த் இறங்குமுகம் கண்ட நேரத்தில் அவர் சென்றது, நெல்லை மாவட்டம் விஜயாபதிக்கு அருகிலுள்ள விஸ்வாமித்திரர் கோவிலுக்கு. கோபத்தை குறைக்கும் சக்தி மிக்கதாக சொல்லப்படும் அந்த கோவிலுக்கு மனைவி பிரேமலதாவுடன் வந்து சுமார் 1 மணிநேரத்திற்கு மேலாக சிறப்பு வழிபாடு நடத்திச் சென்றார்

ஆன்மிக நகரான காஞ்சியில் கால்வைத்தாலே புண்ணியம் என்பார்கள். திரும்பிய திசையெல்லாம் கோவிகள் நிறைந்த காஞ்சிபுரத்தில் பாவ விமோசனம், ஆயுள் நீட்டிப்பு, ஆரோக்கியம், தொழில் வளர்ச்சி என ஒவ்வொரு வேண்டுதல்களுக்கும் தனித்தனிக் கோவில்கள் உள்ளன. இத்தனை கோவில்கள் இருந்தாலும் அரசியல்வாதிகள் அதிகமாக வருவது காஞ்சிபுரம் காந்தி வீதியில் உள்ள வழக்கறுத்தீஸ்வரர் கோவிலுக்குத்தான். அதிமுக, திமுக, பாஜக காங்கிரஸ் என கட்சிமாச்சர்யமின்றி அத்தனை பேரும் இந்தக் கோவிலுக்கு படையெடுக்கக் காரணம், இங்கு பூஜை செய்தால் வழக்குகளில் இருந்து விடுபடலாம் என்ற ஐதீகம்தான்.

இதனால் பல்வேறு அரசியல் பிரபலங்களும் சத்தமின்றி வந்து செல்லும் இந்தகோவிலுக்கு சமீபத்தில் வந்தவர் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். முனிவர்களுக்கும், தேவர்களுக்கும் இடையே ஒருமுறை வேதம் தொடர்பாக கருத்து வேறுபாடு எழுந்தது. இது தொடர்பான உண்மைத் தன்மையை அறிய, இருதரப்பும் காஞ்சிபுரத்தில் விசேஷமாக சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். அவர்களுடைய வழிபாட்டில் மகிழ்ந்த இறைவன், அவர்கள் முன் தோன்றி, அவர்கள் பிரச்னையை கேட்டு இருவரும் ஏற்றுக்கொள்ளும்படியான ஒரு தீர்வை சொல்லிப் பிரச்னையை தீர்த்து வைத்தாராம். இறைவனே நேரில் வந்து வழக்கை தீர்த்து வைத்ததால், இக்கோவிலில் உள்ள இறைவன், 'வழக்கறுத்தீஸ்வரர்' என அழைக்கப்படுகிறார்.

அக்காலத்தில் கொடுக்கல் வாங்கலில் பிரச்னை எழுந்தால் பாதிக்கப்பட்டவர்கள் எதிர்தரப்பை இங்கு அழைத்துவந்து சத்தியம் செய்யச் சொல்வார்கள். பொய் சத்தியம் செய்தால் செய்தவர் குடும்பம் அழிந்துவிடும் என்பதால் ஏமாற்றியவர் உண்மையை ஒப்புக்கொண்டே ஆகவேண்டும். இதனால் எந்த வழக்கும் இந்த கோவிலுக்குள் வந்தால் தீர்ந்துவிடும் என்பது பெரும் நம்பிக்கை. இதனாலேயே இக்கோவிலில் வழக்குகளில் சிக்கி நிம்மதி இழந்தவர்கள் வழக்குகளிலிருந்து விடுபட சிறப்பு பூஜை செய்வார்கள்.

பல வருடங்களாக இந்த கோவில் மக்களால் வணங்கப்பட்டுவந்தாலும் வெகு பிரபலமடைந்தது 2000 ஆம் ஆண்டு இறுதியில்தான். ஜெயலலிதா மற்றும் சசிகலா மீதான டான்சி வழக்கின் தீர்ப்பு வெளியாக இருந்த சமயம் அதிலிருந்து விடுபட ஜெயலலிதா சார்பாக சசிகலா இங்கு வந்துபோனார். அதன்பிறகு 2014 ம் ஆண்டு ஜெயலலிதா மற்றும், சசிகலா மீதான சொத்துக்குவிப்பு இறுதிகட்டத்தை எட்டியநிலையில் காஞ்சிபுரம் வந்த சசிகலா சொந்தக் கட்சியினருக்கும் கூட தெரியாமல் பூஜை செய்துவிட்டுச் சென்றார்.

பெங்களூரில் இதே வழக்கு சூடுபிடித்த சமயம் விடிந்தும் விடியாத ஒரு காலை நேரத்தில் நேரத்தில் வந்திறங்கிய ஓ.பிஎஸ் மற்றும் செங்கோட்டையன் ஜெயலலிதா பெயரில் அபிஷேகம் மற்றும் பூஜை செய்த பின் அவருக்கு சிறப்பு பிரசாதம் மற்றும் ஒரு மாலையையும் பெற்றுச் சென்றார்கள்.



அதன்பின் ஒருமுறை ஜெயலலிதாவின் சார்பாக சசிகலாவே நேரடியாக வந்து சென்றிருக்கிறார் இந்த கோவிலுக்கு. இதன்பின்னர்தான் 'சரித்திரம் முக்கியத்துவம் வாய்ந்த' குமாரசாமி தீர்ப்பு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு அதிமுக சார்பில் வழக்கின் ஒவ்வொரு கட்டத்திலும் ஜெயலலிதா சார்பில் யாராவது இங்கு வருவது சகஜமானது.

கடந்த 2011 ம் ஆண்டு 2ஜி வழக்கில் திஹாரில் அடைக்கப்பட்டார் திமுக எம்.பி கனிமொழி. அவர் ஜாமீனில் வருவதற்காக இக்கோவில் பற்றி கேள்விப்பட்ட ராஜாத்தியம்மாள் வசந்தி ஸ்டான்லி எம்.பி யை ரகசியமாக இங்கு அனுப்பி பூஜை செய்யவைத்தார். அடுத்த சில வாரங்களில் கனிமொழிக்கு ஐாமீன் கிடைக்க, பூஜையின் பலனால்தான் கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்ததாக தகவல் பரவியது. இதனால் கனிமொழி தரப்பில் நன்றி பூஜையும் நடத்தப்பட்டது அடுத்தவாரம்.

கடந்த 2015 டிசம்பர் மாதம் பீப் பாடல் சர்ச்சையால் பிரச்னைக்குள்ளான நடிகர் சிம்பு மீது காவல்துறை வழக்கு போடவிருப்பதாக தகவல் பரவியபோது பதறியடித்து இந்த கோவிலுக்கு ஓடி வந்தார் அவரது தந்தை டி.ராஜேந்தர்.

கடந்த தேர்தலுக்கு முந்தைய தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டு எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்ற தேமுதிக விஜயகாந்த், கொஞ்சநாளில் ஜெயலலிதாவுடன் கோபப் பார்வைக்கு ஆளானார். இதனால் தங்கள் மீதும் தங்கள் தலைவர் மீதும் வழக்கு பாய்ந்துவிடக்கூடாது என்ற பீதியில் வழக்கறுத்தீஸ்வரரைத்தான் வணங்கிச் சென்றனர் அவரது நிர்வாகிகள்.

முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ப.சிதம்பரத்துக்கும், தலைமைக்கும் கொஞ்சம் முரண்பாடு எழுந்து அவரிடமிருந்து உள்துறை பிடுங்கப்பட்டபோது தலைமைக்கும் அவருக்குமான பிணக்குத் தீர அவரது மகன் கார்த்திக் சிதம்பரம் வழக்கறுத்தீஸ்வரர் கோவிலுக்கு குடும்பத்துடன் வந்துசென்றார்.

இப்படி அரசியல்வாதிகளால் அதகளப்படும் வழக்கறுத்தீஸ்வரர் கோவிலுக்கு நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு சத்தமின்றி அமைச்சர் விஜயபாஸ்கர் வந்துசென்றதாக சொல்கிறார்கள். அதிகம் வெளியே தெரியாதபடி ரகசியம் காக்கப்பட்ட இந்த பயணம் பற்றி உள்ளுர்ப் பிரமுகர்கள் ஒருசிலருக்குதான் தெரியும் என்கிறார்கள்.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் பணப் பட்டுவாடா செய்தது குறித்த புகாரில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தியது, பணப் பட்டுவாடா குறித்து மற்ற அமைச்சர்களின் பெயர்களை வெளிப்படையாக எழுதிவைத்ததால் கட்சிக்குள்ளும் எழுந்த பிரச்னை இப்படி சமீபகாலமாக மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கும் அமைச்சர் விஜயபாஸ்கர் பிரச்னைகளில் இருந்து விடுபட கோவிலுக்கு வந்ததாக சொல்கிறார்கள்.
விஜயபாஸ்கரின் வருகை இப்போது இப்போது பிரச்னைக்குள்ளாகியிருக்கிறது. ஆகம விதிப்படி கோவிலின் கருவறை பூட்டப்பட்டபின் அது மறுதினம் உரிய நேரத்தில்தான் திறக்கப்படவேண்டும். ஆனால் அன்றைய தினம் கோவிலின் கருவறை பூட்டப்பட்டபின் தாமதமாக வந்த அமைச்சர் தரப்பு, பூஜை முடிந்து வீட்டுக்கே சென்றுவிட்ட அர்ச்சகரை திரும்ப வரவழைத்து கோவிலை திறந்து பூஜை செய்ததாக சொல்லப்படுகிறது. இது ஆன்மிகவாதிகளிடையே கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.



அமைச்சரின் கோவில் விசிட் பற்றி அறிந்த ஒருவர், “கட்சிக்குள்ளும் தனிப்பட்ட தனது அரசியல் வாழ்க்கையிலும் பல நெருக்கடிக்குள்ளாகியிருக்கிறார் அமைச்சர் விஜயபாஸ்கர். இதனால் மனநிம்மதி தேடி வந்தார். தான் வரும் தகவலை வெகு ரகசியமாக வைத்திருந்தவர் தனக்கு நம்பகமான ஓரிருவருக்கு மட்டுமே தகவல் சொல்லி பூஜைக்கு ஏற்பாடு செய்யச் சொன்னார். அன்றைய தினம் 6 மணிக்கு இறுதி பூஜை நடந்தபோது அது முடியும் தருவாயில் அவர் வந்தார். பூஜை முடிந்ததும் கிளம்பிச் சென்றார். நீங்கள் சொல்வதுபோல் பூட்டப்பட்ட கருவறையை திறக்கச் சொல்லி பூஜை செய்தார் என்பது அபத்தம். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது சசிகலாவே ஒரு முறை தாமதமாக வந்ததால் 4 மணிநேரம் அவர் காத்திருக்கநேர்ந்தது. யாருக்காகவும் ஆகம விதிகளை மீறமாட்டார்கள் அர்ச்சகர்கள். அங்கிருந்த பக்தர்களோடு பக்தராகத்தான் அமைச்சர் அமர்ந்து பூஜையில் கலந்துகொண்டார்” என மறுத்தார்.



 தமிழக பிரபலங்களால் பிரபலமடைந்த வழக்கறுத்தீஸ்வரருக்கு உள்ளூர் தாண்டியும் 'பக்தர்கள்' உண்டு. மும்பையில் அடுக்கு மாடி குடியிருப்பு கட்டடம் கட்டுவதில் நடந்த ஆதர்ஷ் ஊழல் வழக்கில் சிக்கி, பதவியை இழந்த மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் அசோக் சவான், வழக்கறுத்தீஸ்வரர் கோவிலுக்கு வந்திருக்கிறார்.

மக்களுக்காக பாடுபடுவதாகக் கூறி அதிகாரப் பதவிகளுக்கு வருபவர்கள், மக்கள் நலனை மறந்து தங்கள் நலனை பார்க்க ஆரம்பித்துவிடுகிறார்கள். மக்கள் பணத்தை சுரண்டும் அந்த அதிகார வர்க்கமும் பாதிக்கப்பட்ட மக்களும் நீதி கேட்டு தனக்கு முன் ஒரே வரிசையில் பழத் தட்டுடன் நிற்பதைப் பார்க்கும்போது நீதிமான் வழக்கறுத்தீஸ்வரருக்கு நீதி வழங்குவதில் கொஞ்சம் தடுமாற்றம் இருக்கவே செய்யும்!
3000 ரூபாய் கொடுத்து உதவிய ஆட்டோ டிரைவர் - நெகிழும் பெண்!

ஷோபனா எம்.ஆர்




இன்றைய பரபரப்பான சூழ்நிலையில், தெரிந்தவர் எதிரில் வந்தாலே, “நல்லா இருக்கீங்களா?” என்று கேட்க நேரம் இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறோம். அப்படி இருக்கும்போது, ஓர் அவசரத் தேவையின்போது, யார் என்றே தெரியாத ஒருவர் உதவுவது எவ்வளவு பெரிய விஷயம்! அப்படி ஒரு நெகிழ்ச்சியான அனுபவத்தை ஆட்டோ டிரைவர் மூலமாகப் பெற்றிருக்கிறார் பெங்களூரைச் சேர்ந்த பாடகி வரிஜாஸ்ரீ வேணுகோபால்.


'நான் யார்... எங்கே இருக்கிறேன், என்ன வேலை பார்க்கிறேன் என்கிற எந்தவிதத் தகவலும் தெரியாமலே, என் அவசரமான சூழ்நிலையில் ஒரு ஆட்டோ ஓட்டுநர் 3000 ரூபாய் கொடுத்து உதவினார்' என்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவுசெய்துள்ளார் வரிஜாஸ்ரீ வேணுகோபால். அந்த போஸ்டுக்கு 'வாவ் வாட் ய மேன்' 'யூ லக்கி பேபி', என்று கமென்டுகள் நிறைய வரிஜாவின் போஸ்ட் அதிக ஷேர் செய்யப்பட்டது.

’அட! இது நல்ல விஷயமா இருக்கே’ என்று தொலைபேசியில் அவருடன் பேசினோம். நடந்த நிகழ்வைப் பற்றி கேட்கும்போதே நெகிழ்ந்து போனார் வரிஜாஶ்ரீ.

”நான் பெங்களூர்வாசி. பாடகியான நான் இத்தாலியில் ஒரு மியூசிக் ஷோ பண்ணப்போறேன். அதுக்கான விசா இன்டர்வியூ ஏப்ரல் 11-ம் தேதி ஹைதராபாத்தில் நடந்தது. விசா இன்டர்வியூவுக்கு 5000 ரூபாய் ஆகும்னும், கிரெடிட், டெபிட் கார்டுகளை ஏத்துக்க மாட்டாங்கன்னும் தெரியும். கையில 2000 மட்டும்தான் இருந்தது. சரி ஏடிஎம்ல எடுத்துக்கிடலாம்னு கிளம்பிட்டேன். என்கிட்ட இருந்த பணத்தை வைச்சுக்கிட்டு ஹைதரபாத் போய்ட்டேன். அங்கிருந்து நேரா விசா ஆபீஸுக்கு கிளம்பினேன். டாக்சி பிடிக்கவும் நேரம் இல்லாம கிடைச்ச ஆட்டோவில் ஏறினேன். போற வழியில் பத்து, பதினைஞ்சு ஏ.டி.ஏம் மையங்களில் முயற்சி பண்ணினேன். எங்கேயும் வொர்க் ஆகலை. நொந்துபோய், ‘ஸ்வைப் மிஷின்' இருக்கும் கடைகளில் ஏறி இறங்கி, ‘எனக்கு அவசரமா 3000 ரூபாய் ’ஸ்வைப்’ பண்ணிக் கொடுங்க’ன்னு கேட்டேன். ஆனா, யாரும் உதவ முன்வரலை. இதையெல்லாம் பார்த்துட்டு இருந்த நான் டிராவல் பண்ணின ஆட்டோ டிரைவர், “என்கிட்ட 3000 ரூபாய் இருக்கு. உங்க விசா இன்டர்வியூவை நல்லபடியா முடிங்க. உங்க ஹோட்டலுக்கு திரும்பின பிறகு பணத்தைக் கொடுங்க'னு சொல்லி உதவினார். அதுக்கு அப்புறம், விசா இன்டர்வியூவை முடிச்சுட்டு அவருக்கு பணத்தைத் திருப்பிக் கொடுத்தேன். அவர் பேர் பாபா. இந்த உலகம் இன்னமும் உயிர்ப்போடு இருக்க இதுபோன்ற மனிதர்கள்தான் காரணம். கைமாறு எதையும் எதிர்பார்க்காமல் சமயத்தில் உதவின அவருக்கு நன்றி சொல்லவே அவரோடு செல்ஃபி எடுத்து, ஃபேஸ்புக்ல ஷேர் பண்ணிக்கிட்டேன்.” என்று நெகிழ்கிறார் வரிஜாஸ்ரீ.

இந்த சம்பவத்தை, வரிஜாஸ்ரீ ஃபேஸ்புக்கில் பதிவிட, அது காட்டு தீப்போல் பரவி, பலரது உள்ளங்களையும் நெகிழ வைத்திருக்கிறது. மேலும், 7 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் அதனை ஷேர் செய்தியிருக்கிறார்கள். ”முதல்ல, இது வைரலாகும்னு நான் நினைக்கலை. ஆனா, இதைப் படிக்கும் நாலு பேருக்குள்ள மாற்றம் வந்தாலும் சந்தோஷமே. நாம இக்கட்டான சூழ்நிலையில இருக்கிறப்ப நமக்கு அறிமுகமில்லாதவங்க உதவி செய்வாங்க. அவங்க எல்லாரும் நமக்கு கடவுள்தான். எனக்கு பாபா மாதிரி”, என்று மகிழ்ச்சியாக கூறுகிறார் வரிஜாஸ்ரீ. இவர் கூறிய வார்த்தைகள் சாத்தியமானால், இந்த உலகம் அன்பாலானதாகிவிடும்.

சாலையை தெறிக்கவிட்ட தனியார் பேருந்துகள்: டிரைவர்கள் அதிரடி கைது

கோவை-பொள்ளாச்சி நெடுஞ்சாலையில் போட்டிப்போட்டுக் கொண்டு அதிவேகமாக பேருந்தை இயக்கிய ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
arrested
கோவை-பொள்ளாச்சி நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்றும் வரும் நிலையில், இரண்டு தனியார் பேருந்துகள் அந்த சாலையில் அதிவேகமாக பயணிக்கும் வீடியோ காட்சிகள் நேற்று வெளியானது. இரண்டு பேருந்துகளும் போட்டிப்போட்டுக் கொண்டு பேருந்தை இயக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களிலும் பகிரப்பட்டது.

இதையடுத்து பேருந்தை அதிவேகமாக இயக்கிய ஓட்டுநர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட தனியார் பெருந்து ஓட்டுநர் நாகராஜ், வைரமுத்து மீது அதிவேகத்தில் வாகனத்தை ஓட்டியது, பொது மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இவர்களின் ஓட்டுநர் உரிமமும் ரத்து செய்யப்பட்டுள்ளன
தேர்வு எழுத வந்த இடத்தில் தாயான விழுப்புரம் பெண்!

ஜெ.முருகன்


கார்த்திக்.சி


ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத வந்த இடத்தில் பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்ககப்பட்ட அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.




தமிழக அரசின் ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான தகுதித் தேர்வு நேற்று தொடங்கியது. இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு நேற்று நடந்த நிலையில் இன்று பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு நடைபெற்று வருகிறது. சுமார் 7 லட்சம் பேர் கலந்து கொண்டு எழுதும் இந்தத் தேர்வில் தேர்சி பெறுபவர்களைக் கொண்டு சுமார் 1000 ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும். இன்று காலை விழுப்புரம் இராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில், விழுப்புரம் மாவட்டம் சின்ன எடையார் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தி என்ற பெண் திருமணம் முடிந்ததும் மணக்கோலத்திலேயே தகுதித் தேர்வில் கலந்து கொண்டார்.



அதேபோல விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியத்ததையடுத்த நூரோலை கிராமத்தைச் சேர்ந்த அந்தோணிராஜின் மனைவி நோயம் ரோஸ்மேரி (வயது 24), நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையிலும் தேர்வு எழுத வந்துள்ளார். அவர் தியாகதுருகம் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில் கலந்து கொண்டு ஆசிரியர் தகுதித் தேர்வெழுதினார். தேர்வு தொடங்கிய 15 நிமிடத்தில் நோயம் ரோஸ்மேரிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனே அங்கிருந்த தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர் சசிகலா தேவி 108 ஆம்புலன்ஸைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க, சிறிது நேரத்தில் அருகில் உள்ள சுகாதார மையத்துக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு அழகிய பெண் குழந்தைப் பிறந்தது. தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளனர்.

தமிழகம் முழுவதும் நடைபெற்ற இத்தேர்வில் பார்வையற்ற ஆசிரியர்களும் ஆர்வத்துடன் கலந்துக்கொண்டு தேர்வெழுதினர்.




படம் : தே.சிலம்பரசன்.

NEWS TODAY 31.01.2026