Wednesday, May 3, 2017

கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம்' : மே 7 ல் திருக்கல்யாண அறுசுவை விருந்து

பதிவு செய்த நாள் 03 மே
2017

00:42 மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் முத்திரை பதிக்கும் முக்கிய நிகழ்வான, மீனாட்சி சொக்கர் திருக்கல்யாணம், மே 7 ல் காலை 8:35 மணிக்கு மேல் காலை 8:59 மணிக்குள்ளும், திருக்கல்யாண அறுசுவை விருந்து சேதுபதி மேல்நிலைப்பள்ளியிலும் நடக்கிறது.

பழமுதிர்சோலை திருவருள் முருகன் பக்த சபை டிரஸ்ட் தலைவர் பி.என்.விவேகானந்தன் கூறியதாவது:மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தை முன்னிட்டு, 17 ஆண்டுகளாக டிரஸ்ட் சார்பில் திருக்கல்யாண விருந்து வழங்கப்பட்டு வருகிறது. பத்தாண்டுகள் மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்திலும், ஏழு ஆண்டுகளாக வடக்கு வெளி வீதி சேதுபதி மேல்நிலைப்பள்ளியிலும் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருந்து, தமிழ்நாடு உணவு பாதுகாப்பு சட்டப்படி, அதற்குரிய கட்டணம் செலுத்தி அனுமதி பெற்று நடத்தப்படுகிறது.இந்தாண்டு, மே 7 ல் காலை 8:00 மணி முதல் மாலை வரை ஒரு லட்சம் பக்தர்களுக்கு சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் திருக்கல்யாண அறுசுவை விருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கல்கண்டு சாதம்,

சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல், வடை, சாம்பார் சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம், உருளை கிழங்கு கறி, பச்சடி, ஊறுகாய், தண்ணீர் பாக்கெட்டுகள் ஆகியவை பாக்குத்தட்டில் வைத்து வழங்கப்படும். பரவை, மாட்டுத்தாவணி காய்கறி வியாபாரிகள் சார்பில் விருந்துக்கு தேவையான காய்கறிகள், டிரஸ்ட் உறுப்பினர்கள், பக்தர்கள் சார்பில் அரிசி மூடைகள், கீழமாசி வீதி வியாபாரிகள், பக்தர்கள் சார்பில் மளிகை, எண்ணெய், நெய் வழங்கவுள்ளனர்.

சேவையில் பங்கேற்கலாம் : விருந்து உபசரிப்பில் பங்கேற்க விரும்புவோர் மே 5 காலை 10:00 மணி முதல் மே 6 மாலை வரை சேதுபதி பள்ளியில் பொருட்களை கொடுத்து ரசீது பெற்று கொள்ளலாம். மே 6 மதியம் 2:00 மணி முதல் காய்கறிகள் வெட்டும் பணி துவங்குகிறது.
இச்சேவையில் இணைய விரும்புவோர் சேதுபதி பள்ளிக்கு காய்கறிகள் வெட்டும் அரிவாள்மனை அல்லது கத்தியுடன் நேரில் வந்து சேவையாற்றலாம். மே 6 மாலையில் மாப்பிள்ளை அழைப்பு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார். தொடர்புக்கு 0452- 234 5601.
தென்காசியில் கனமழை

பதிவு செய்த நாள் 02 மே
2017
23:44

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், தென்காசி சுற்று வட்டாரத்தில், நேற்று கனமழை பெய்தது. தென் மாவட்டங்களில், நேற்று வெயிலின் அளவு குறைந்திருந்தது. மாலையில், நெல்லையில் லேசான மழை பெய்தது. தென்காசி, குற்றாலம், செங்கோட்டை பகுதிகளில், நேற்று மாலை, 5:30 மணிக்கு துவங்கி, 40 நிமிடங்களுக்கும் மேலாக கனமழை பெய்தது.
விஜய் மல்லையாவுக்கு வலை லண்டன் விரைந்த அதிகாரிகள்

பதிவு செய்த நாள் 02 மே
2017
22:54

புதுடில்லி:பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவை, இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் லண்டனுக்கு விரைந்து உள்ளனர்.

வங்கிகளில் வாங்கிய, 9,000 கோடி ரூபாய் கடனை திருப்ப செலுத்தாதது தொடர்பாக, பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா மீது, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறையினர் பல்வேறு வழக்குகளை தொடர்ந்துள்ளனர். இந்த நிலையில், பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு தப்பிச் சென்ற மல்லையாவை, நாடு கடத்தி, தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என, பிரிட்டன் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

அதன்படி, மல்லையா, சமீபத்தில் லண்டனில் கைது செய்யப்பட்டு, ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளான். நாடு கடத்துவது தொடர்பான வழக்கு, வரும், 17ல் விசாரணைக்கு வருகிறது. பிரிட்டன் சட்டங்களின்படி, ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட் வரை முறையீடு செய்வதற்கு வாய்ப்புகள் உள்ளன. அதனால், உடனடியாக, மல்லையாவை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான சாத்தியம் இல்லை.

லண்டனில் நடக்கும் இந்த வழக்குகளில், சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை, வாதியாக இல்லை. அதே நேரத்தில், பிரிட்டன் அரசுக்கு, இந்த வழக்கின் முக்கியத்துவம் குறித்து விளக்குவதுடன், தேவையான ஆதாரங்களையும் அளிக்க முடியும்.

அதன்படி, மல்லையா மீதான வழக்கின் தீவிரம் குறித்தும், அவனை உடனே இந்தியாவுக்கு அழைத்து வர வேண்டிய அவசியம் குறித்தும் பிரிட்டன் அதிகாரிகளிடம் விளக்குவதற்காக, நான்கு பேர் அடங்கிய குழு, லண்டன் சென்றுள்ளது.

சி.பி.ஐ., கூடுதல் இயக்குனர் ராகேஷ் அஸ்தானா தலைமையிலான இந்த, நால்வர் குழுவில், அமலாக்கத் துறை அதிகாரிகள், இருவரும் அடங்குவர். 'மல்லையா மீதான வழக்கில், மத்திய அரசு மிகவும் தீவிரமாக இருப்பதை, பிரிட்டனுக்கு உணர்த்துவதற்கு இந்தப் பயணம் உதவும்' என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளுக்கு பிடிவாரண்ட் நீதிபதி கர்ணன் உத்தரவு

பதிவு செய்த நாள்
மே 02,2017 21:10

கோல்கட்டா: சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளுக்கு ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி கர்ணன் உத்தரவிட்டுள்ளார்.

நேரில் ஆஜராகததால் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் 8 பேருக்கு ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறி உள்ளார்.

'நீதிபதி கர்ணன், எவ்வித நிர்வாக மற்றும் நீதித் துறை நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது' என, சுப்ரீம் கோர்ட்உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை நீக்க வேண்டும் என்ற நீதிபதி கர்ணனின் கோரிக்கையை, சுப்ரீம் கோர்ட் ஏற்க மறுத்தது.இதற்கிடையே, இந்த வழக்கு, நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தலைமை நீதிபதி, ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான, ஏழு நீதிபதிகள் அடங்கிய அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவு:

நீதிபதி கர்ணனின் மனநலம் குறித்து, வரும், 4ல், கோல்கட்டா அரசு மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் குழு பரிசோதனை செய்ய வேண்டும். இந்த பரிசோதனையில் நீதிபதி கர்ணன் பங்கேற்பதை, மாநில போலீஸ் டி.ஜி.பி., உறுதி செய்ய வேண்டும். அதற்காக போலீஸ் அதிகாரிகள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்திருந்தனர்.

சுப்ரீம் கோர்ட் உத்தரவு குறித்து, கோல்கட்டாவில் நிருபர்களிடம், நீதிபதி கர்ணன் கூறியதாவது: என்னை கட்டாயப்படுத்தி மருத்துவப் பரிசோதனை செய்தால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்து செல்ல முயன்றால், போலீஸ், டி.ஜி.பி.,யை சஸ்பெண்ட் செய்வேன்.

அதற்கு முன்னதாக, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி உள்ளிட்ட, ஏழு நீதிபதிகளுக்கு, டில்லியில் உள்ள மருத்துவமனையில் மனநல மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும். அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்வதற்கான ஏற்பாடுகளை, டில்லி போலீஸ் டி.ஜி.பி., செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். இந்நிலையில் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் 8 பேருக்கு ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்துள்ளதாக கர்ணன் கூறி உள்ளார்.

Tuesday, May 2, 2017

உலக பாஸ்வேர்ட் தினம் மே 4: உங்களுடைய கடவுச்சொல் பத்திரமா?

எஸ்.எஸ்.லெனின்

இணைய வணிகம், ஃபேஸ்புக், இமெயில் என நமது அன்றாட பயன்பாட்டில் உள்ளவற்றின் கடவுச்சொற்களை (பாஸ்வேர்ட்) கடைசியாக எப்போது மாற்றினோம்?
கடவுச்சொல்லின் பயன்பாட்டைப் பரிசீலித்துத் திடமானதாக அவற்றை மாற்ற ‘உலகப் பாஸ்வேர்டு தினம்’ வாயிலாக அறைகூவல் விடுக்கிறார்கள் இணைய முன்னோடிகள். காரணம் விளையாட்டான அடையாளத் திருட்டில் தொடங்கி விவகாரமான அந்தரங்கப் பதிவுகள் கசிவதுரை அண்மைக்காலமாகக் கேள்விப்படும் செய்திகள் பலவற்றின் பின்னணியில் கடவுச்சொல் பராமரிப்பின் அலட்சியமே உறைந்திருக்கிறது.
நல்ல கடவுச்சொல் என்பது
இன்றைய இணைய உலகத்தின் உச்சபட்ச கறுப்பு வணிகத்தில் ஒன்று பயன்பாட்டாளர்களிடமிருந்து கடவுச்சொல்லைத் திருடுவது. தமது அடையாளங்களை மறைத்துக்கொண்டு பிறரது அடையாளங்களைத் திருடி பணம் பார்க்க முடியும் என்பதால் இணைய உலகில் பிஷ்ஷிங் (Phishing), விஷ்ஷிங் (Vhishing), ஹேக்கிங் (Hacking) என விதவிதமான திருடர்கள் புறப்பட்டுள்ளனர். இந்நிலையில், நமது தகவல்கள், ஆவணங்கள், பதிவுகள், சமூகத் தொடர்புக்கான சாவியாக இருக்கும் நமது பாஸ்வேர்டுகளை பாதுகாப்பது எப்படி?
முதன்முதலில் கடவுச்சொல்லைப் பதிவிட வேண்டும் என்கிற நிலை வந்தபோது ‘Password’, ‘123456’ என்பவையாகவே பெரும்பாலோர் பதிவிட்டனர். இன்றும்கூடச் செல்லப் பிராணி, பிடித்த பிரபலங்களின் பெயர்களைக் கடவுச்சொல்லாகக் குறிப்பிடுபவர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள். ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களின் பகிர்வுகள் வாயிலாக உலகில் எவர் வேண்டுமானாலும் இந்தத் தகவல்களை அறிந்துகொள்ள முடியும் என்பதால், அவற்றைத் தவிர்ப்பதே நல்லது. மாறாக, எவராலும் கண்டுபிடிக்க முடியாத கடினமான கடவுச்சொல்லை உருவாக்குகிறேன் பேர்வழி எனப் பிற்பாடு அவற்றை நினைவுகூர்வதில் தடுமாறித் தவித்தவர்கள் அதிகம்.
தனக்குச் சுலபமானதாக, பிறர் ஊகிக்கக் கடினமானதாக இருப்பதே நல்ல கடவுச்சொல்லுக்கு இலக்கணம். இந்தப் பாஸ்வேர்டையும் குறிப்பிட்ட கால இடைவெளியில் மாற்றுவது முக்கியம். குறிப்பாகத் தனிப்பட்ட உபயோகத்திற்கான கணினி அல்லாது பொது இடங்களில் மற்றும் அலுவலகம் மற்றும் நண்பர்களின் கணினிகளில் பாஸ்வேர்டை உள்ளிடுபவர்கள், முடிந்தவரை உடனுக்குடன் அவற்றை மாற்றி விடுவது நல்லது.
மாற்றம் தேவை
முதலாவதாக, இமெயில், ஃபேஸ்புக், வங்கி உபயோகம் என அனைத்துக்கும் ஒரே கடவுச்சொல்லை உபயோகிக்கக் கூடாது. அதிகப்படியான பாஸ்வேர்டுகளை உபயோகிப்பவர்கள் குழப்பங்களைத் தவிர்க்க இணையத்தில் கிடைக்கும் பாஸ்வேர்ட் மேனேஜர்கள் உதவியை நாடலாம்.
பல அடுக்கு அரண்கள்
பாதுகாப்புக்கு எனப் பாஸ்வேர்டினை மட்டும் நம்பியிருக்காது, உடன் கிடைக்கும் பல அடுக்கு அரண்கள் உபயோகத்தையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இதற்குச் செட்டிங்க்ஸ் உதவியுடன் நமது உள் நுழைகை, கடைசியாகப் பயன்படுத்தியது, பணப் பரிவர்த்தனை உள்ளிட்ட ஒவ்வொரு சிறு நகர்வையும் நமக்குத் தெரிவிக்கச் செய்யுமாறு கட்டமைத்துக் கொள்ளலாம். வங்கிப் பரிவர்த்தனைக்கான ‘ஒன் டைம் பாஸ்வேர்டு’ உபயோகத்தை இமெயில் மற்றும் சமூக ஊடகப் பயன்பாடுகளுக்கும் உதவுமாறு செய்யலாம்.
இணையத் திருட்டைத் தடுக்கப் படிக்கலாம்!
பல்வேறு இணையக் கணக்குகளை உடைத்து அவற்றின் கடவுச்சொல்லைக் கைப்பற்றும் ‘கிரிமினல் ஹேக்கர்ஸ்’ எல்லா நாடுகளிலும் உண்டு. அவர்கள் கையாளும் அதே தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு இணையப் பாதுகாப்பை உறுதி செய்பவர்கள் ‘எத்திக்கல் ஹேக்கர்ஸ்’. பிரபல நிறுவனங்கள் பலவும் தங்களது இணையப் பாதுகாப்பின் ஓட்டைகளை அறிந்துகொள்ள எத்திக்கல் ஹேக்கர்ஸை பணிக்கு அமர்த்துகின்றன. பகுதி நேரமாகத் தங்களது திறமையைக் காட்டுபவர்களுக்கு ஆச்சரியமூட்டும் சன்மானங்களை வழங்குகின்றன. இணையப்பெருவெளியின் ஜேம்ஸ்பாண்டுகளாக வலம் வரும் பெருமையும் சேர்ந்துகொள்வதால், இளம்வயதினர் மத்தியில் எத்திக்கல் ஹேக்கர்ஸ் தொடர்பாகப் படிக்க ஆர்வம் அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் `தகவல் பாதுகாப்புத் துறை வல்லுநர்கள்’ என்ற பெயரில் எத்திக்கல் ஹேக்கர்ஸ் பணியமர்த்தப்படுகின்றனர். அரசின் பாதுகாப்புத்துறை, தடய அறிவியல் துறை ஆகியவற்றுடன் வங்கி மற்றும் காப்பீட்டு துறைகள், ஐ.டி. நிறுவனங்கள் ஆகியவை இந்த வேலை வாய்ப்புகளை வழங்குகின்றன. கணினி அறிவியல் மற்றும் பொறியியல் சார்ந்த படிப்புகள் பலவற்றிலும் எத்திக்கல் ஹேக்கிங் தனித் தாளாகவே பயிற்றுவிக்கப்படுகிறது.
எங்கே படிக்கலாம்?
பொறியியல் பட்டம் அல்லது எம்.எஸ்சி. கணிதம் அல்லது எம்.சி.ஏ. முடித்தவர்கள், எம்.இ., ஐ.டி. படிப்பில் எத்திக்கல் ஹேக்கிங் பிரிவில் சேர்ந்து படிக்கலாம். ஏ.ஐ.சி.டி.இ. அனுமதி பெற்ற பல்வேறு பொறியியல் கல்லூரிகளில் இவை பயிற்றுவிக்கப்படுகின்றன. அலகாபாத் ஐ.ஐ.டி., காஜியாபாத் ஐ.எம்.டி., மும்பை மற்றும் சண்டிகரில் இயங்கும் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஃபர்மேஷன் செக்யூரிட்டி, புது டெல்லியில் செயல்படும் எத்திக்கல் ஹேக்கிங் டிரெய்னிங் இன்ஸ்டிடியூட், எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம், இந்திராகாந்தி திறந்த நிலை பல்கலைக்கழகம் உள்ளிட்டவை எத்திக்கல் ஹேக்கிங்குக்கு எனத் தனியாகப் பல்வேறு வகை படிப்புகளை வழங்குகின்றன.
இவை தவிர்த்து எத்திக்கல் ஹேக்கிங்கில் பட்டயம், சான்றிதழ் படிப்புகளையும் ஏராளமான நிறுவனங்கள் வழங்குகின்றன. கொல்கத்தாவில் செயல்படும் `இந்தியன் ஸ்கூல் ஆஃப் எத்திக்கல் ஹேக்கிங்’ பல்வேறு நடைமுறை பயிற்சி வகுப்புகளுடன் கூடிய படிப்புகளை வழங்குகிறது. இதுபோன்ற நிறுவனங்கள் ஆன்லைனிலும் பயிற்சி வகுப்புகளை வழங்குகின்றன. கோடைகால பயிற்சி வகுப்புகளும் உண்டு.
கூடுதல் தகவல்களுக்கு: https://www.isoeh.com/index.html
சட்ட நுணுக்கம்
இணையப் பயன்பாடுகள் அதிகரித்து வரும் இந்தியாவில், அவற்றின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு இதர நாடுகளைவிட மிகவும் குறைவு. இதனால் பாதிப்புக்குள்ளாவோரின் எண்ணிக்கை இங்கு மிகவும் அதிகம். நம் நாட்டில் அடையாளத் திருட்டில் ஈடுபடுவோர் மீது 3 ஆண்டு சிறை, 1 லட்சம் ரூபாய் அபராதம் எனத் தண்டனை கிடைக்கத் தகவல் தொழில்நுட்பச் சட்டம் 66சி மற்றும் 66டி ஆகியவை வழி செய்கின்றன. ஆனால் அடையாளத் திருட்டில் ஈடுபடுவோர் நவீனத் தொழில்நுட்பம் உதவியுடன் தங்களது அடையாளங்களை மறைத்துக்கொண்டு குற்றச் செயல்களில் ஈடுபடுவதாலும், நிழலுலகத் தொடர்பின் மூலம் வெளிநாடுகளில் இருந்தபடி குற்றங்களை நிகழ்த்துவதாலும் எளிதில் சிக்குவதில்லை. எனவே நமது பாதுகாப்பை நாமாக உறுதி செய்துகொள்வதே உசிதமானது.
அடையாளத் திருட்டைத் தவிர்க்க
1. உங்களது கணினி, ஸ்மார்ட் போன்களில் உரிய ஆண்ட்டி வைரஸ் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை நிறுவுவது.
2. சமூக வலைத்தளங்களில் தனிப்பட்ட தகவல்களை முடிந்தவரை தவிர்ப்பது. சாட் மற்றும் நட்பு வட்டாரத்தினரின் உரையாடல்களில் எச்சரிக்கை பேணுவது.
3. வலை வீசும் குப்பை மெயில்களை அவ்வப்போது அடையாளங்கண்டு அழிப்பது.
4. சந்தேகத்துக்கு இடமான இணையத் தளங்கள், மெயில்கள், வங்கி பெயரிலான அழைப்புகளைத் தவிர்ப்பது.
5. பொது இடங்களில் கிடைக்கும் வைஃபை இணைய இணைப்புகள் வைரஸ் மற்றும் மனித ஊடுருவலுக்கு வாய்ப்பளிக்கும் என்பதால் அவற்றைத் தவிர்க்கலாம்.
மாற்றத்துக்கான நாள்
உலகமெங்கும் பாஸ்வேர்டு உபயோகம் குறித்த விழிப்புணர்வை உருவாக்கும் நோக்கத்துடன், உலகப் பாஸ்வேர்டு தினம் மே மாதத்தின் முதல் வியாழன் (நடப்பாண்டு மே-4) அன்று கடைபிடிக்கப்படுகிறது. அன்றைய தினம் அது குறித்த விழிப்புணர்வினைப் பரப்புவதோடு, இணையப் பயனர்கள் நேரம் ஒதுக்கித் தமது பாஸ்வேர்டுகளை புதிதாகச் சீரமைத்துக் கொள்கிறார்கள்.

சந்தேகம் சரியா 33: வலிப்பு வந்தவருக்குச் சாவியைக் கொடுப்பது சரியா?

டாக்டர் கு. கணேசன்

வலிப்பு ஏற்பட்டவருக்குக் கையில் சாவி போன்ற ஏதாவது ஓர் இரும்புப் பொருளைக் கொடுத்தால் உடனே வலிப்பு நின்றுவிடும் என்று கூறுகிறார்கள். இப்படிச் சொல்வது சரியா?
சரியில்லை.

சாவி போன்ற இரும்புப் பொருளை வலிப்பு வந்தவர்களுக்குக் கொடுத்தால் வலிப்பு நிற்கும் என்று சொல்வதற்கு எவ்வித மருத்துவ ஆதாரமும் இல்லை.
இது ஒரு மூட நம்பிக்கை. திரைப்படங்களிலும் தொலைக்காட்சி நாடகங்களிலும் இதுபோன்ற காட்சிகளைக் காண்பிப்பதால், இந்த நம்பிக்கை மக்களின் பொதுப்புத்தியில் பதிந்துவிட்டது. பொதுவாக, வலிப்பு சில நிமிடங்களுக்குள் தானாகவே நின்றுவிடும். அருகில் உள்ளவர்கள் இரும்புப் பொருளை எடுத்துக் கொடுப்பதற்கும் சில நிமிடங்கள் ஆகுமல்லவா?
இயற்கையாக உடலில் வலிப்பு நிற்பதற்கும் இவர்கள் இரும்புப் பொருளை வலிப்பு வந்தவருக்குக் கொடுப்பதற்கும் நேரம் சரியாக இருக்கும். காக்கை உட்காரப் பனம் பழம் விழுந்த கதைதான். மற்றபடி, வலிப்பு நிற்பதற்கும் கையில் சாவியைக் கொடுப்பதற்கும் தொடர்பில்லை. இதைப் புரிந்துகொள்ள  வேண்டுமானால், வலிப்பு எப்படி ஏற்படுகிறது என்பதைக் கொஞ்சம் தெரிந்துகொள்ள வேண்டும்.

வலிப்பு ஏற்படும் விதம்
மூளை, நரம்பு செல்களில் தகவல் பரிமாற்றம் செய்வதற்கு அந்த செல்களுக்கிடையில் இயல்பாகவே மிகச் சிறிய அளவில் மின்சாரம் உற்பத்தியாகிறது. ஏதாவது ஒரு காரணத்தால் மூளையில் உண்டாகிற அதீத அழுத்தத்தால் இந்த மின்சாரம் அபரிமிதமாக உற்பத்தியாகி, ஒரு மின்புயல் போல் கிளம்புகிறது. அது நரம்புகள் வழியாக உடல் உறுப்புகளுக்குக் கடத்தப்படுகிறது. அப்போது உறுப்புகளின் இயக்கம் மாறுபட்டு, கை, கால்கள் உதறத் தொடங்குகின்றன. இதைத்தான் 'வலிப்பு' என்கிறோம்.

பூமியின் உள்அடுக்குகளில் உண்டாகிற அதிகப்படியான அதிர்வுகள் நிலநடுக்கத்தை ஏற்படுத்துவதைப் போல, மூளையில் உண்டாகிற மின்அதிர்வுகள் வலிப்புக்குக் காரணமாகின்றன.

என்ன காரணம்?
தலையில் அடிபடுதல், பிறவியிலேயே மூளை வளர்ச்சிக் குறைபாடு, மூளையில் கட்டி, ரத்தக்கசிவு, ரத்தம் உறைதல், கிருமித் தொற்று, புழுத் தொல்லை, மூளைக் காய்ச்சல், மூளை உறை அழற்சிக் காய்ச்சல், டெட்டனஸ் போன்றவை வலிப்பு வருவதற்கு முக்கியமான காரணங்கள். உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, சிறுநீரகக் கோளாறு போன்றவையும் வலிப்பு வருவதைத் தூண்டக்கூடியவையே.

பரம்பரையாகவும் வலிப்பு வரலாம். கர்ப்பிணிகளுக்கு ரத்தக்கொதிப்பு இருந்தால், பிரசவக் காலத்தில் வலிப்பு வருவதுண்டு. பக்கவாதம், மூளையில் ஏற்படும் ரத்தக் குழாய் மாற்றங்கள், அல்சைமர் நோய், ரத்தத்தில் தட்டணுக்கள், சோடியம் அளவு குறைதல் போன்ற காரணங்களால் வயதானவர்களுக்கு வலிப்பு ஏற்படக்கூடும். சிலருக்கு மன உளைச்சல் காரணமாக ‘பொய் வலிப்பு’ (Pseudo seizure) வருவதும் உண்டு.

குழந்தைகளுக்கு வலிப்பு!
குழந்தைகளுக்குக் காய்ச்சல் காரணமாக வலிப்பு வருவதுதான் அதிகம். பெரும்பாலும் ஆறு மாதம் முதல் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்குச் சாதாரணக் காய்ச்சலாக இருந்தால்கூட, உடலின் வெப்பம் திடீரென அதிகரித்தால் வலிப்பு வரும் சாத்தியம் அதிகம். சூடம் சாப்பிட்ட குழந்தைக்கு வலிப்பு வருவதுண்டு.

என்ன செய்ய வேண்டும்?
ஒருவருக்கு வலிப்பு வந்துவிட்டது என்றால், அருகில் உள்ளவர்கள் சாவியைத் தேடி நேரத்தை வீணாக்குவதைவிடக் கீழ்க்கண்டவற்றைப் பின்பற்றலாம்:
# அவரை ஒரு பக்கமாகச் சாய்த்துப் படுக்க வையுங்கள்.
# சட்டை பொத்தான், இடுப்பு பெல்ட், கழுத்து 'டை' போன்றவற்றைத் தளர்த்தி, நன்கு சுவாசிப்பதற்கு வழிவகை செய்யுங்கள்.
# மின்விசிறி / கைவிசிறி மூலம் நல்ல காற்றோட்டம் கிடைக்க வழி செய்யுங்கள்.
# அருகில் காயத்தை ஏற்படுத்தும் கூர்மையான பொருட்கள் இருந்தால் அப்புறப்படுத்துங்கள்.
# மூக்குக் கண்ணாடி, செயற்கை பல் செட்டை அகற்றிவிடுங்கள்.
# உமிழ்நீர் வழிந்தால் துடைத்துவிடுங்கள்.
# ஒருவருக்கு வலிப்பு ஐந்து நிமிடங்களுக்கு மேல் நீடிப்பது ஆபத்து. உடனே அருகில் உள்ள மருத்துவமனையில் அவசரச் சிகிச்சையை அளிக்க வேண்டியது அவசியம்.

என்ன செய்யக்கூடாது?
# அவரைச் சுற்றிக் கூட்டம் கூட அனுமதிக்காதீர்கள்.
# வலிப்பு வரும்போது அவருடைய கை, கால்களை அழுத்திப் பிடித்து வலிப்பைக் கட்டுப்படுத்த முயற்சிக்கக் கூடாது.
# வலிப்பு நின்று, நினைவு திரும்பும்வரை அவருக்குக் குடிக்கவோ, சாப்பிடவோ எதுவும் தரக் கூடாது.
# முழு நினைவு வந்ததை உறுதி செய்து கொண்டு (இதற்கு அவர் பெயரைச் சொல்லச் சொல்லலாம்) தண்ணீரைப் பருகச் செய்யலாம்.
# மூக்கில் வெங்காயச் சாற்றை ஊத்துவதும் கூடாது.
அக்னி நட்சத்திரம் 4-ந்தேதி தொடங்குகிறது. 25 நாட்கள் வெயில் வாட்டி வதைக்கும். 
 
சென்னை,

தமிழகத்தில் தற்போது வெயில் கடுமையாக இருக்கிறது. வடகிழக்கு பருவமழை பொய்த்து போனதாலும், தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாலும் தமிழகத்தில் வறட்சி, குடிநீர் தட்டுப்பாடு தலைவிரித்து ஆடுகிறது. கோடைமழை வெயிலின் தாக்கத்தை குறைக்கும் என்று எதிர்பார்த்திருந்த பொதுமக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இந்த நிலையில், அக்னி நட்சத்திரம் எனப்படும் ‘கத்திரி வெயில்’ வருகிற 4-ந்தேதி (வியாழக்கிழமை) தொடங்குகிறது. 28-ந்தேதி அக்னி நட்சத்திரம் முடிகிறது. இந்த 25 நாட்களும் வெயில் வாட்டி வதைக்கும். அனல் காற்று வீசும்.

இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-

அனல்காற்று

அக்னி நட்சத்திரம் 4-ந்தேதி தொடங்குகிறது. அக்னி நட்சத்திர நாட்களில் அனல் காற்று அதிகமாக வீசும். மேற்கு மற்றும் தென்மேற்கு திசையில் இருந்து அனல்காற்று வீசத்தொடங்கும். இப்போது உள்ள நிலவரப்படி, கடல் பகுதி, நிலப்பகுதிகளில் இருந்து காற்று அதிக அளவில் வீசுகிறது. இன்னும் 2 நாட்களில் அனல் காற்று வீசுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும். கடலோர மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும்.

மழை அளவு

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-

நெல்லை மாவட்டம் செங்கோட்டை 2 செ.மீ., கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், நீலகிரி மாவட்டம் கேத்தி, கோவை மாவட்டம் வால்பாறை ஆகிய இடங்களில் தலா 1 செ.மீ. மழை பெய்து உள்ளது.

NEWS TODAY 04.06.2026