Sunday, June 4, 2017

'பேச்சால் கவர்ந்த கலைஞர்': எஸ்.வி.சேகர் வாழ்த்து



பேச்சாற்றலால் மக்களைக் கவர முடியும் என அண்ணாதுரைக்குப் பிறகு நிரூபித்து காட்டியவர் கலைஞர் கருணாநிதி என எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதியின் 94-வது பிறந்தநாளை ஒட்டி எஸ்.வி.சேகர் தி இந்து தமிழ் இணையதளத்துக்காக அளித்த பிரத்யேக வாழ்த்துச் செய்தியில், "எனக்கு 80-களிலிருந்தே எனக்கு கருணாநிதியுடன் பழக்கம். ராம நாராயணன் படங்களில் நடித்த போது அதன் வெற்றி விழாக்களில் அவரை சந்தித்திருக்கிறேன்.

பிராமண எதிர்ப்பு, பிராமணீய எதிர்ப்பு ஆகியவற்றால் கொள்கைரீதியாக நான் அவரை ஏற்றுக்கொண்டதில்லை. எல்லாவற்றையும் தாண்டி, பேச்சினால் மக்களைக் கவர முடியும் என அண்ணாதுரைக்குப் பிறகு நிரூபித்து காட்டியவர் கலைஞர் அவர்கள்.

அவரது மகன் ஸ்டாலின், அவரது குடும்பத்தினர் என பலருடன் எனக்கு நட்பு ஏற்பட்டது. அப்படிப் பழகும்போது, தனிப்பட்ட முறையில் நட்புக்கு பெரிய மரியாதை கொடுக்கக்கூடிய மனிதர் என்பது தெரிந்தது. ஒருவருக்கு மாற்றுக் கருத்து இருந்தாலும் ஏற்றுக்கொள்ளக் கூடியவர். அற்புதமான நகைச்சுவை உணர்வு உள்ளவர். ஒரே வரியில் நகைச்சுவையாக பதிலளிக்கக் கூடியவர்.

ஒருமுறை நான் அவரது வீட்டுக்கு போன போது, என்ன போன வார ஏதோ நூல் வெளியிட்டீர்களாமே என்று கேட்டார். நான் எனது பூணூலை காட்டி, நான் தினமும் தான் நூலை வெளியே இட்டுருக்கிறேன் என்றேன். அதை அவர் சிரித்து ரசித்தார்.

எனது மகன் திருமணம், எங்களின் 60வது திருமணம் என என் குடும்ப நிகழ்ச்சிகளுக்கு முடிந்தவரை தவறாமல் வந்துவிடுவார். அவருக்கு நம்பிக்கை இல்லையென்றாலும், அட்சதை தட்டை நீட்டும்போது கைநிறையை அட்சதையை எடுத்துப் போட்டு ஆசிர்வாதம் செய்வார்.

என் மனைவி, எப்போதும் அவருக்குதான் ஓட்டுப் போடுவேன் என்பார். காரணம், கலைஞர் முதல்வராக இருந்தபோதும் நம் அழைப்பை மதித்து வந்துவிட்டு செல்கிறார் என்பார். இதுதான் எதிராளியையும் மாற்றக்கூடியதில் வல்லவர் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

அதே போல, சட்டமன்றத்தில் நான் பேசும்போது, "வீர வாஞ்சிநாதனுக்கு மணிமண்டம் கட்ட வேண்டும் என காமராஜர் அடிக்கல் நாட்டியிருந்தார். அந்த அடிக்கல், குற்றாலம் பக்கத்தில் இருக்கும் வண்ணாந்துறை என்ற இடத்தில் துணி துவைக்கும் கல் போல பயன்படுத்தப்படுகிறது. 30 வருடங்கள் ஆகிவிட்டது. மணி மண்டபம் கட்ட வேண்டும்" என சொன்னேன். அதற்கு, "நமது சட்டமன்ற வாஞ்சிநாதன் கேட்கிறார்" என என்னைக் குறிப்பிட்டு கலைஞர் சொன்னார். அப்போது அதிமுக கட்சிக்கும் எனக்கும் சில பிரச்சினைகள் இருந்தது. இருந்தாலும் ஒரு எம்.எல்.ஏவாக என் கடமையை செய்ய வேண்டும் என நான் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அதற்கு சட்டமன்ற வாஞ்சிநாதன் என கலைஞர் குறிப்பிட்டார்.

கலைஞருக்கு இப்போது உடல்நலம் குன்றியதாக கேள்விப்பட்டேன். அதிலிருந்து மீண்டு வந்துகொண்டிருக்கிறார் 94 வயது வரை வாழ்ந்து, இப்படி நோய்வாய்ப்பட்டு மீண்டுவருவது மிகப்பெரிய விஷயம்.

கலைஞர் தலைமையின் கீழ் கிடைத்த பயிற்சி ஸ்டாலினுக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும்.
ஒரு வாழைப்பழத்தை ஒரு ஆள் சாப்பிட முடியாது: கேரளத்தைக் கலக்கும் புதிய ரக வாழை
கா.சு.வேலாயுதன்



ஒரு நேந்திரன் வாழைப் பழத்தை ஒருவர் சாப்பிட்டாலே மூச்சு முட்டும். அந்தச் சராசரி அளவு நேந்திரன் வாழைகளைத் தூக்கி சாப்பிடும் அளவுக்கு மெகா சைஸ் நேந்திரன் வாழைகளைத் தற்போது கேரளத்து விவசாயிகள் பயிரிட்டுக் கலக்கிக்கொண்டிருக்கிறார்கள்.

புதிய வகை

பொதுவாக ரஸ்தாளி, பூவன், நாடன், விருப்பாச்சி, கற்பூரவல்லி, கதளி, மலை, நேந்திரன் எனப் பலவகை வாழைகள் பயிரிடப்படுகின்றன. இதில் கிடைப்பதிலேயே பெரிய அளவில் இருப்பது நேந்திரன் வாழை. அது கேரளாவில் சிப்ஸ் போடுவதற்கு பரவலாகப் பயன்படுகிறது. அங்கு நேந்திரன் வாழைக்கான தேவை அதிகம் இருப்பதால், தமிழக விவசாயிகள் நேந்திரன் வாழையைப் பயிரிட்டுக் கேரளத்துக்கு அனுப்பிவருகிறார்கள்.

இப்போது அந்த நேந்திரன் வாழைகளைப்போல் மூன்று மடங்கு பெரிய அளவில் புதிய வாழை ரகம் ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது திருவனந்தபுரம் வாழை ஆராய்ச்சி மையம். இதைப் பாலக்காடு மாவட்டம் உள்படக் கேரளத்தின் பல்வேறு மாவட்ட விவசாயிகளும் வாங்கிப் பயன்படுத்திவருகிறார்கள்.

பெரிய அளவு காய்கள்

இது குறித்து அட்டப்பாடியில் இந்த வாழையைப் பயிரிட்டுள்ள விவசாயி ராதாகிருஷ்ணன் பகிர்ந்து கொண்டது:

“நேந்திரன் வாழைமரம் 15 அடி முதல் 20 அடிவரை உயரம் வளரக்கூடியது. 10 முதல் 12 சீப்புகள் வரும். அதில் ஒரு சீப்பில் 12 முதல் 18 காய்கள்வரை காய்க்கும். இப்போது திருவனந்தபுரம் வாழை ஆராய்ச்சி மையம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வாழை ரகம், நேந்திரன் வகையைச் சேர்ந்தது என்றாலும் காய் குண்டு குண்டாக உள்ளது. ஒரு குலை 30 கிலோ முதல் 40 கிலோவரை வருகிறது. ஒரு வாழைப்பழம் எனத் தனியாக எடுத்தால் அரை கிலோ முதல் முக்கால் கிலோ எடை வருகிறது. ஐந்து அல்லது ஆறு சீப்பு மட்டுமே காய்க்கிறது. ஒரு சீப்பில் 11 முதல் 13 வாழைக்காய்கள் காய்க்கின்றன. முற்றிய இந்த வாழைக்காயைப் பயன்படுத்திச் சிப்ஸ் போட்டால் அது பப்படம் போல் பெரிய சைஸில் இருக்கிறது. காயும் பழுத்த பின்பு சுவையாக உள்ளது. இந்த ரகத்தின் ஒரு முழு வாழைப்பழத்தை ஓர் ஆளால் சாப்பிட முடியாது.

சொந்தமாக வளர்க்க வேண்டும்

எனக்கு இரண்டு வாழைக் கன்றுகள் மட்டுமே கிடைத்தன. ஒரு கன்று ரூ. 30-க்கு வாங்கி வந்தேன். எனக்கு முன்னதாக அட்டப்பாடி அகழி பகுதியில் உள்ள சம்பார்கோடு கிராமத்தில் மாத்யூ என்பவர் பயிரிட்டிருந்தார். அவர் ஒரு விளைச்சலும் எடுத்துவிட்டு, தற்போது அதில் வந்த பக்கக் கன்றுகளைப் பயன்படுத்திப் புதிதாக இரண்டாவது விதைப்பும் செய்திருக்கிறார். நேந்திரன் வாழையைவிட இதில் சத்து அதிகம் என்று ஆராய்ச்சி நிலையத்தினர் அறிமுகப்படுத்தி வருகின்றனர். ஆனால், போதுமான எண்ணிக்கையில் இவை கிடைப்பதில்லை. நாமே இரண்டு வாழைக் கன்றுகள் வாங்கிவந்து நட்டுவைத்து, பக்கக்கன்றுகள் மூலம் விதைக்கு எடுக்க வேண்டும்!”.
ஃபிரிட்ஜில் வைக்கக்கூடாத 28 பழங்கள், காய்கறிகள், உணவுகள்!

நமது நிருபர்

நோய்கள் அத்தனைக்கும் ஒரே ஒரு காரணம்தான் இருக்க முடியும்... தவறான வாழ்க்கை முறை. அதற்கு ஒரே ஒரு சிகிச்சைதான் இருக்க முடியும், அது சீரான, ஒழுங்கான உணவு முறை. உண்ணும் உணவில் கவனமில்லாமல் இருப்பதுதான் பல நோய்களுக்கு அடிப்படை. நாம் பல்பொருள் அங்காடியில் வாங்கும் பல பொருள்களை நாள்பட உபயோகிக்க என்று ஃபிரிட்ஜில் வைத்துப் பாதுகாக்கிறோம். ஆனால், எந்தப் பொருள்களை வைக்க வேண்டும், எத்தனை நாள்கள் வரை வைத்திருக்கலாம் என்பதை அறியாமல், அந்தப் பொருளையும் கெடுத்து, அதன் மூலம் நம் உடல்நலனையும் கெடுத்துக்கொள்கிறோம். நம் வீட்டு ஃபிரிட்ஜில் வைக்கவே வைக்கக் கூடாத பழங்கள், காய்கறிகள், உணவுகள் பட்டியல் இங்கே...



வாழைப்பழம்

ஃபிரிட்ஜில் வைக்கக்கூடாதது வாழைப்பழம். ஃபிரிட்ஜில் இருந்து வெளியாகும் அதிகப்படியான குளிரும் இருளும் வாழைப்பழத்தின் சத்தைக் கெடுப்பதோடு, அழுகவும் செய்துவிடும். திறந்த, உலர்ந்த இடங்களில் வாழைப்பழத்தை வைத்திருப்பதே நல்லது.



தேன்

இயற்கையிலேயே கெட்டுப்போகாத தன்மை கொண்ட தேனும் ஃபிரிட்ஜில் வைக்கக்கூடாத ஒரு பொருள்தான். சாதாரண தட்பவெப்பநிலையில் இறுக மூடி வைத்தாலே தேன் அதன் சத்துக்களை பாதுகாத்து வைத்துக்கொள்ளக்கூடியது. ஆனால், ஃபிரிட்ஜில் குளிர்ந்த சூழலில் வைத்திருக்கும்போது அது தனது நிலையை மாற்றிக்கொண்டு, மணல்போலக் கடினமாகவும், சுவை மாறியும் போய்விடும். ஏறக்குறைய உபயோகிக்க முடியாத அளவுக்கு தேன் மாறிவிடும்.



அவகேடோ

அவகேடோ பழத்தையும் ஃபிரிட்ஜில் வைக்கவே கூடாது. கடைகளில் வாங்கும்போது பழுக்காத நிலையில் இருக்கும் இந்தப் பழம், ஃபிரிட்ஜில் வைத்தால், பழுக்கவே பழுக்காது. மேலும், அதன் சுவையும் மாறிவிடக்கூடும்.



சிட்ரஸ் பழங்கள்

ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் வகைப் பழங்களும் ஃபிரிட்ஜில் வைக்கத் தோதானவை அல்ல. சாதாரண வெப்பநிலையே இந்தப் பழங்களைப் பழுக்கச் செய்துவிடும். அதிகக் குளிரான சூழல், இந்தப் பழங்களின் சிட்ரஸ் அமிலத்தை பாதித்து, சுவையை மாற்றிவிடும். மேலும், அதன் தோலை பாதித்து பளபளப்பையும் மங்கச் செய்துவிடும்.

ஸ்டோன் வகை பழங்கள்

ப்ளம், பீச், ஆஃப்ரிகாட், நெக்டாரின் போன்ற மேல்நாட்டு ஸ்டோன் வகைப் பழங்களுக்கும் ஃபிரிட்ஜ் ஒத்து வராது. வாங்கும்போது அதிகம் பழுக்காதநிலையில் இருக்கும் இவற்றுக்கு சாதாரணச் சூழல்தான் ஏற்றது. குளிரில் வைத்திருந்தால் அதிகம் பழுக்காது; சுவை கூடாமல் போய்விடும்.



மூலிகைகள்

மூலிகைகளையும் கீரைகளையும் ஃபிரிட்ஜில் வைத்து வீணடிக்கக் கூடாது, ஏனென்றால், அவற்றின் சத்துகள் குறைந்துபோய்விடும். சாதாரணச் சூழலில், நீர் நிறைந்த பாத்திரத்தில் இவற்றின் தண்டுப் பகுதியை நீரில் மூழ்கி இருக்குமாறு வைத்திருந்தாலே போதும், தளதளவென்று உலர்ந்து போகாமல் இருக்கும்.

பெர்ரி வகைப் பழங்கள்

சாதாரண தட்பவெப்பத்திலேயே நல்லநிலையில் இருக்கும் இந்தப் பழங்கள் நல்ல சுவையைத் தரக்கூடியவை. அதிக நேரம் குளிரில் வைக்கப்பட்டால், இதன் சுவையும் கெட்டு வடிவமும் மாறிவிடும்.



வெங்காயம்

ஃபிரிட்ஜில் வைக்கவே கூடாதது வெங்காயம். குளிரில் தானும் கெட்டு ஃபிரிட்ஜையும் கெட்ட நாற்றம் உள்ளதாக மாற்றிவிடும். மேலும், ஃபிரிட்ஜில் இருக்கும் எல்லா உணவுகளையும் வெங்காய மணம் மணக்கும்படி மாற்றிவிடும். உலர்ந்த சூழலே வெங்காயத்துக்கு ஏற்றது. பேப்பர் பைகளில் வெங்காயத்தைப் போட்டு வைத்திருப்பதே போதுமானது. அதிக வெப்பமில்லாத இருண்ட சூழலில், வெங்காயத்தை வைத்திருக்க வேண்டும். அதே நேரத்தில் உருளைக்கிழங்குக்கு அருகே வைக்கக்கூடாது. உருளைக்கிழங்கில் இருந்து வெளியாகும் வாயுவும் ஈரப்பதமும் வெங்காயத்தை அழுகச் செய்துவிடும். கவனம்!

பிரெட்

பிரெட் போன்ற பேக்கரி பொருள்களும் ஃபிரிட்ஜுக்கு ஆகவே ஆகாதவை. சாதாரண தட்பவெப்பத்தில் சுவையும் மெதுவான தன்மையும் அதிகம் கொண்ட பிரெட், அதிகமான குளிரில் விறைத்துப் போய்விடும். இதனால் சுவையும் கெட்டு, கெட்டித்துவிடும். ஆகவே இருளான, அதிக வெப்பமில்லாத சமையலறை அலமாரிகளிலேயே டிபன் பாக்ஸ்களில் மூடிவைத்தே பிரெட்டைப் பாதுகாத்துவைக்கலாம்.



மிளகாய்

சிவப்பு, பச்சை, மஞ்சள் என எந்த மிளகாயையும் ஃபிரிட்ஜில் வைக்கக்கூடாது. ஃபிரிட்ஜின் அதிகக் குளிர் இவற்றை அழுகச் செய்துவிடும். சாதாரணச் சூழலில் பேப்பர் பைகளில் வைப்பதே போதுமானது.

குளிர்ச்சி தரக்கூடிய காய்கள்

பரங்கிக்காய், சுரைக்காய் போன்ற குளிர்ச்சியை தரக்கூடிய காய் வகைகளையும் ஃபிரிட்ஜில் வைக்க வேண்டாம். அவற்றின் இயற்கையான நீர்ச்சத்து மாறி, சுவை மாறிவிடக்கூடும்.



எண்ணெய்

எந்த எண்ணெயும் ஃபிரிட்ஜில் வைக்க கூடியவை அல்ல. குளிரில் எல்லா வகை எண்ணெயும் உறைந்து போய், கடினமாகி கலங்கிவிடும். இதனால் எண்ணெயின் சுவையும் சத்தும் கெட்டுவிடும். சாதாரணச் சூழலே எண்ணெய்க்கு உகந்தது. உதாரணமாக, ஃபிளாக்ஸ் விதை எண்ணெய் ஃபிரிட்ஜில் வைக்கப்பட்டால், உறைந்துவிடு; சீக்கிரமே கெட்டும் போய்விடும்.

நீர்ச்சத்து மிகுந்த காய்கனிகள்

பூசணி, தர்பூசணி உள்ளிட்ட நீர்ச்சத்து மிக்க காய்கறிகளையும் பழங்களையும்கூட ஃபிரிட்ஜில் வைக்க வேண்டாம். ஃபிரிட்ஜில் வைக்கப்படும் இந்த வகை காய்கனிகள் குளிரால் உடைந்து குழைந்துவிடும். ஆனால், இவ்வகை காய்கனிகளை நறுக்கி, நான்கு அல்லது ஐந்து நாட்கள் வரை ஃபிரிட்ஜில் வைத்துப் பாதுகாக்கலாம்.



ஊறுகாய்

மசாலா சேர்க்கப்படாத, காயவைக்கப்பட்ட ஊறுகாய் எதையும் ஃபிரிட்ஜில் வைக்கக்கூடாது. உலர்ந்த, காற்றோட்டமான இடத்திலேயே ஊறுகாய் கெடாமலும், சுவை பாதிக்காமலும் இருக்கும்.

பூண்டு

`காயக் காயத்தான் பூண்டின் சுவை கூடும்’ என்பார்கள். அதனால் திறந்தவெளியில் பூண்டை வைத்திருப்பதே நல்லது. ஃபிரிட்ஜில் வைக்கப்பட்டால், பூண்டின் சுவை கெட்டு, அதன் நீண்டகால பலனும் பாதிக்கப்படும்.



சில்லி சாஸ்

வினிகர், மிளகாய் சாஸ் போன்ற உணவுக்கு சுவையூட்டும் பொருள்களைச் சாதாரண சூழலில் அடுப்படியில் பாட்டில்களில் பாதுகாத்து வைப்பதே சிறந்தது. தரமான சாஸ்கள் பல நாள்கள் வரை கெடாமல் இருக்கக்கூடியவை. இதனால் இவற்றை ஃபிரிட்ஜில் வைக்கவேண்டிய அவசியம் இல்லை. பாக்டீரியா போன்ற நுண்ணியிரிகளால் கெடாமல் சாஸ்களைப் பாதுகாக்க, அடிக்கடி பாட்டில்களைச் சுத்தப்படுத்தி வைத்துக்கொள்ளலாம். ஃபிரிட்ஜில் வைக்கப்படும் சில்லி சாஸின் சுவையும் காரமும் குறைந்துவிடும் என்பதே உண்மை.

மசாலா பொருட்கள்

மிளகாய், மிளகு, மல்லி போன்ற மசாலா தூள்கள் எதையும் ஃபிரிட்ஜில் வைக்கவேண்டிய அவசியம் இல்லை.



காபி

காபி தூள் அல்லது காபி கொட்டை இவற்றை ஃபிரிட்ஜில் வைக்க வேண்டியதில்லை. காற்று புகாத பாட்டிலில் வைத்திருந்தாலே போதுமானது. ஃபிரிட்ஜில் இருந்து வெளியாகும் ஈரப்பதம் காபித் தூளை பாதித்து, கெட்டுப்போகச் செய்துவிடும்.

சாலட் அலங்கரிக்கும் க்ரீம்கள்

காய் மற்றும் கனிகளை கொண்டு செய்யப்படும் சாலடுகளுக்கு அலங்கரிக்கவும், சுவையூட்டவும் பயன்படும் எந்த வித க்ரீம்களையும் ஃபிரிட்ஜில் வைக்க வேண்டாம். `இனிப்புத் தயிர்’ எனப்படும் யோகர்ட் உள்ளிட்ட க்ரீம்கள், ஃபிரிட்ஜில் நீர்த்துப்போய் கெட்டுவிடும்.

நட்ஸ்

முந்திரி, பாதாம், பிஸ்தா, வால்நட் போன்ற எந்த உலர்க்கொட்டைகளும் ஃபிரிட்ஜில் வைக்கத் தேவையில்லாத பொருட்கள். குளிர்ந்த ஈரப்பதம் இந்த வகை நட்ஸ்களின் உள்ளிருக்கும் எண்ணெய்ப் பொருள்களைப் பாதித்து, கெட்டுவிடச் செய்துவிடும். மேலும் ஃபிரிட்ஜில் இருக்கும் வேறு பொருள்களின் வாசத்தால் மாறிவிடும். காற்றுப்புகாத பாத்திரங்களில் மூடி வைத்தாலே இவை கெடாமல் இருக்கும். ஒருவேளை அதிகமான அளவில் நட்ஸ்களைப் பாதுகாக்க ஃபிரிட்ஜில் வைக்க வேண்டி வந்தால், அவற்றை உபயோகிக்கும் முன்னர் பாத்திரத்தில் வைத்து வறுத்த பிறகே உபயோகிக்க வேண்டும்.

உலர்பழங்கள்

திராட்சை, அத்தி, பேரீச்சை போன்ற உலர்பழங்களுக்கும் ஃபிரிட்ஜில் இடமில்லைதான். உலர்ந்த பழங்கள் அதன் உலர்ந்த தன்மைக்காகவே விரும்பப்படுகின்றன. அந்தத் தன்மையை ஃபிரிட்ஜின் குளிர் காற்று பாதித்துவிடும்.

தானிய வகைகள்

தானிய வகைகள் சாதாரணச் சூழலில் வைக்கப்படவேண்டியவை. ஈரப்பதமான சூழல் அவற்றைக் கெட்டுப்போகச் செய்துவிடும்.

ஜாம்கள்

பழங்களால் செய்யப்பட்ட ஜாம்களை ஃபிரிட்ஜில் வைக்கவேண்டியது இல்லை. ஜாம்களைப் பாதுகாக்க அதனுள் சேர்க்கப்படும் பொருள்கள் அதிகக் குளிரால் உறைந்து, சுவை மாறிவிடுகின்றன.



உருளைக்கிழங்கு

மண்ணில் விளைந்து, ஈரம் போகக் காய்ந்து நம்மிடையே வரும் உருளைக்கிழங்கு காய்ந்து இருப்பதே நல்லது. இது, ஈரத்தில் முளைத்துவிடும் தன்மை கொண்டது. சாதாரணச் சூழலில் பேப்பர் பைகளில் சுற்றிவைப்பதே உருளைக்கு நல்லது. பிளாஸ்டிக் பைகளில் சுற்றிவைத்தால், உருளைக்கிழங்கின் ஈரப்பதத்தால் சீக்கிரமே கெட்டுவிடும் ஆபத்து உண்டு.

கெட்ச்சப்

கெட்ச்சப் எனும் சுவையூட்டும் கூழ்கள் தற்போது எல்லா வீட்டிலும் காணப்படுகின்றன. இனிப்பு, புளிப்பு மற்றும் காரச் சுவைகளில் வரும் இந்த வகை கெட்ச்சப்-ஐ ஃபிரிட்ஜில் வைக்க வேண்டாம். ஒரு மாதம் வரை சாதாரணச் சூழலிலேயே கெடாமல் இருக்கக் கூடியது கெட்ச்சப். ஃபிரிட்ஜில் வைத்தால், இறுகிவிடும்.



தக்காளி

அதிகக் குளிர் தக்காளியின் பளபளப்பையும் சுவையும் பாதிக்கக்கூடியது. காற்றுப்புகக்கூடிய சாதாரணச் சூழலிலேயே தக்காளி சில நாள் வரை கெடாமல் இருக்கும். ஃபிரிட்ஜில் வைக்கும் தக்காளி பழுப்பதே இல்லை. எனவே, தக்காளியின் சுவையை அதிகம் பெற ஃபிரிட்ஜில் வைக்க வேண்டாம்.

நிலக்கடலை வெண்ணெய்

நிலக்கடைலையால் செய்யப்பட்ட வெண்ணெய் தற்போது சுவையூட்டியாகப் பயன்பட்டு வருகிறது. இதுவும் ஃபிரிட்ஜில் வைக்கவேண்டிய அவசியமில்லாத பொருளே.



மீன்

மீனையோ, பேக் செய்யப்பட்ட மீன்களின் இறைச்சியையும் ஃபிரிட்ஜில் பொதுவான இடத்தில் வைக்க வேண்டாம். மீன் நாற்றம் மற்ற பொருள்களுக்கும் பரவி அவற்றின் தன்மையைப் பாழடித்துவிடும். ஃபிரிட்ஜில் மீனை வைப்பதற்கென்றே ஓர் இடம் இருக்கும். அதில் வைக்கலாம்.
கொழுப்பைக் குறைக்க தேங்காய்; இளமை நீட்டிக்க கொப்பரை; உடலுக்கு ஊட்டமளிக்க நீராபானம்!
எம்.மரிய பெல்சின்

‘தேங்காய் தின்னது ஒருத்தன், தெண்டங்கட்டுனது ஒருத்தன்', `தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறிகட்டுமாம்' - தென்னை பற்றிய பழமொழிகள் இவை.

`தென்னங்கீற்றும் தென்றல் காற்றும் கைகுலுக்கும் காலமடி...' - 1984-ல் வெளிவந்த முடிவல்ல ஆரம்பம் படத்தின் பாடல் வரி இது. மனதுக்கு இதம் தரும் இந்தப் பாடல் வரி இன்றும் நெஞ்சில் நிழலாடுகிறது.



தென்னை... இதன் தாவரவியல் பெயர் கோக்கஸ் நியூசிஃபெறா (Cocos nucifera L.). இந்தியா மற்றும் இலங்கை போன்ற வெப்ப மண்டல நிலப்பரப்பில் வளரக்கூடிய தென்னையில் அனைத்து உறுப்புகளும் பயன்தரக்கூடியவை. சங்க நூல்களில் தென்னை மரத்தை தெங்கு என்றும், தாழை என்றும் அழைத்திருக்கிறார்கள். தென்னிந்தியா குறிப்பாக தென் தமிழ்நாடு மற்றும் கேரள மாநில மக்களின் சமையலில் தேங்காய் முக்கிய இடம்பிடிக்கிறது.

இளநீர்

தென்னை மரத்தில் பூ பூத்து வளர்ந்த நிலையில் கிடைப்பது இளநீர். செவ்விளநீர், பச்சை இளநீர், சிவப்புநிற இளநீர் என வேறுபாடுகள் இருந்தாலும் இந்தோனேஷியா, இந்தியா, இலங்கை, ஜமைக்கா, பிரேசில் மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளில் கிடைக்கும் இளநீரே சிறந்தவை. பொட்டாசியம், சோடியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக இதில் உள்ள புரதம் தாய்ப்பாலில் உள்ள புரதத்துக்கு இணையானது.



இன்றைக்கு நம்மில் பெரும்பாலோரின் காலை உணவாக இளநீர் இருக்கிறது என்றால் அது மிகையாகாது. இதில் அமிலத்தன்மை இருப்பதால் காலையில் வெறும் வயிற்றில் உண்பது ஏற்புடையதல்ல; உண்டால் வயிற்றில் புண்ணை உருவாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனாலும், இளநீருக்கு நிறைய மருத்துவக்குணங்கள் உள்ளன. குறிப்பாக வாதம், பித்தம், கபம் போன்றவற்றை போக்கக்கூடியது; வெப்பத்தைத் தணிக்கக்கூடியது. வளரும் குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு, இளநீர் சிறந்ததொரு டானிக்காகச் செயல்படுகிறது.

உடலில் நீர்ச்சத்து குறையும்போது, இளநீரை உட்கொள்வதன்மூலம் நிவாரணம் கிடைக்கிறது. குறிப்பாக அவசர நிலையில் நரம்புகளின்மூலம் இளநீர் செலுத்தப்படுவதுண்டு. காலரா நோயாளிகளுக்கு, இளநீரின் வழுவழுப்புத்தன்மையும் உப்புத்தன்மையும் மிகவும் நல்லது. அம்மைநோய், வயிற்றுப்போக்கு காலங்களில் இளநீர் நல்ல மருந்தாகச் செயல்படும். மேலும், சிறுநீரகத்தை சுத்திகரிப்பதோடு விந்து எண்ணிக்கையை அதிகரிக்கச்செய்யும் இது ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவுக்கு சிறந்த மாற்றுப்பொருளாகும். ரத்தத்தில் கலந்துள்ள நச்சுப்பொருள்களை அகற்றும் திறன் படைத்தது இளநீர்.

தேங்காய்

தென்னையின் பழமே தேங்காய். இதைத் தெங்கம்பழம் என்றும் சொல்வார்கள். கெட்டியாக இருப்பதால் தேங்காய் என்றே அழைக்கிறார்கள். தேங்காயில் உள்ள ஃபேட்டி ஆசிட் (Fatty Acid) உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கக்கூடியது. உடல் எடையையும் குறைக்கிறது என சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. குறிப்பாக Medium Chain Fatty Acid தேங்காயில் அதிகம் இருப்பதால் அது உடலில் உள்ள கொழுப்பைக் கரைக்கிறது.



புரதம், மாவு, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட தாதுப்பொருள்கள், வைட்டமின் சி, அனைத்துவகை `பி' காம்ப்ளக்ஸ் சத்துகள், நார்ச்சத்துகள் உள்ளிட்ட உடல் இயக்கத்துக்குத் தேவையான அனைத்து சத்துகளும் தேங்காயில் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. தேங்காய்ப்பாலில் காரத்தன்மை உள்ளதால் அதிக அமிலம் காரணமாக ஏற்படும் வயிற்றுப்புண்ணுக்கு தேங்காய்ப்பால் அருமையான மருந்தாகச் செயல்படுகிறது. தேங்காயை அரைத்து அதனுடன் நாட்டுச்சர்க்கரைச் சேர்த்துச் சாப்பிட்டால் ஆண்மைச் சக்தி அதிகரிப்பதோடு வயிற்றுப்பூச்சிகள் நீங்கும்.

கொப்பரை

தேங்காய் அளவுக்கு மீறி முற்றியிருந்தால் அதன் உள்ளே இருக்கும் நீர் முற்றிலும் வற்றிவிடும். இத்தகைய முற்றிய தேங்காயே கொப்பரை எனப்படும். நீர் முழுவதும் வற்றாத தேங்காயை வெயிலில் உலர்த்தி கொப்பரை ஆக்குவதும் உண்டு. அதிலிருந்தே எண்ணெய் எடுக்கப்படுகிறது. முற்றிய தேங்காய் ஆண்மையை பெருக்குவதோடு அதில் உள்ள வைட்டமின் இ முதுமையைத் தாமதப்படுத்த உதவும். தைராய்டு சுரப்பியின் செயல்பாடுகளை ஊக்கப்படுத்துகிறது.



சுத்தமான தேங்காய் எண்ணெயில் புரதச்சத்து நிறைந்திருப்பதால், வாரம் ஒருநாள் தேங்காய் எண்ணெயை தலையில் தேய்த்து, ஊற வைத்து குளித்து வந்தால் பெண்களின் கூந்தல் வேர்க்கால்கள் பலமடைவதோடு, பொடுகுத்தொல்லை நீங்கும். முகம் பொலிவுப் பெற உதவும். கேரளத்துப்பெண்கள் தலைமுடிக்கு தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவதோடு அன்றாட சமையலிலும் தேங்காய் எண்ணெயையே பயன்படுத்துகின்றனர்.



நீரா பானம்

இவைதவிர நீரா என்ற பானம் தயாரிக்கப்படுகிறது. நீரா என்பது பதநீருக்கும் கள்ளுக்கும் இடைப்பட்ட ஒரு பானம். இது மலராத தென்னம்பாளையில் இருந்து உற்பத்தி செய்யப்படும் ஒரு பானம். ஆல்கஹால் இல்லாததால் உடல்நலனுக்கு ஊட்டமளிக்கும் நல்லதொரு பானமாகும்.

தென்னையில் இருந்து இன்னும் ஏராளமான பொருள்கள் ரிக்கப்படுகின்றன. தென்னை விசிறி, குடிசை போட பயன்படும் தென்னை ஓலையால் பின்னப்படும் கிடுகு, தென்னை மட்டை, தேங்காய் ஓடு, தேங்காய் நார்க்கழிவு என தென்னையின் பல பாகங்களும் பல வழிகளில் மனிதனுக்குப் பயன்பட்டு வருகின்றன.
ஓட்டு எந்திரம்... ஓட்டை எந்திரமா?

தி.முருகன், ஓவியம்: ஹாசிப்கான்

எளிய மக்களின் கைகளில் இருந்து இன்னமும் பிடுங்காமல், நம் ஜனநாயகம் விட்டு வைத்திருக்கும் ஒரே ஆயுதம் ஓட்டு. அதற்குத்தான் அத்தனை அரசியல்வாதிகளும் அஞ்சி நடுங்குகிறார்கள். ஆட்சிகள் மலர்வதும், நாற்காலிகள் கவிழ்வதும், அதிகாரத் திமிரோடு பேசுகிறவர்கள் அடுத்த தேர்தலில் அடையாளம் இல்லாமல் போவதும், இந்த ஆயுதத்தின் வலிமையை உலகுக்கு உணர்த்துகிறது. ஆனால், ஓர் இயந்திரத்தில், மோசடி செய்து ஓட்டு வாங்கிவிட முடியும் என்றால், மக்களைத் தேடி அரசியல்வாதிகள் ஏன் வர வேண்டும்?

‘நீ எனக்கு ஓட்டுப் போடாவிட்டாலும் பரவாயில்லை; உன் ஓட்டை எனக்கு விழுந்ததாக மாற்றிக்கொள்ள முடியும்’ என்று ஒரு மோசமான அரசியல்வாதி தீர்மானித்தால் என்ன ஆவது?



‘மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில், முறைகேடும் மோசடியும் நடக்கிறது’ என எழுந்த குற்றச்சாட்டு, இந்தியா முழுக்கப் பரபரப்பு ஏற்படுத்தியிருக்கிறது. மகாராஷ்டிரா உள்ளாட்சித் தேர்தலிலும், உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலிலும், டெல்லி மாநகராட்சித் தேர்தலிலும் பி.ஜே.பி பெற்ற வெற்றிகளை அசைத்துப் பார்க்கின்றன இந்தக் குற்றச்சாட்டுகள். இந்தியா முழுவதிலுமிருந்து 42 கட்சிகளின் பிரதிநிதிகளைக் கூப்பிட்டுத் தேர்தல் ஆணையம் கூட்டம் நடத்தும் அளவுக்கு இந்தப் பிரச்னை சீரியஸ் ஆகியிருக்கிறது. கடைசியில், ‘‘உங்களுக்கு வாய்ப்பு தருகிறோம். முறைகேடு செய்யமுடியும் என்பதை நிரூபித்துக் காட்டுங்கள்” என சவால் விட்டிருக்கிறார், தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி.

ஜூன் 3-ம் நாள் இதற்கான தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ‘‘பல நிபந்தனைகளோடு தரப்படும் இந்த வாய்ப்பு வெளிப்படையானது இல்லை’’ என ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டுகிறது.

இந்தியத் தேர்தல்களில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறிமுகமாகி 23 ஆண்டுகள் ஆகிவிட்டன. 107 சட்டமன்றத் தேர்தல்களையும், மூன்று நாடாளுமன்றத் தேர்தல்களையும் இந்த இயந்திரங்களை வைத்து நடத்தியிருக்கிறார்கள். ஒரு புதிய தொழில்நுட்பம் அறிமுகம் ஆகும்போது, அதுகுறித்த சந்தேகங்களும் வதந்திகளும் எழுவது இயல்புதான். ஆனால், இந்த இயந்திரங்கள் மீதான நம்பகத்தன்மை, ஆரம்பத்தைவிட இப்போதுதான் அதிகம் கேள்விக்குள்ளாகியிருக்கிறது. கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலின்போதே, ‘எந்தச் சின்னத்துக்கு ஓட்டுப் போடுவதற்காக அழுத்தினாலும், பி.ஜே.பி-க்கே ஓட்டு விழுகிறது’ எனக் குற்றச்சாட்டு எழுந்தது. உ.பி சட்டமன்றத் தேர்தல் முடிந்ததுமே, ‘தேர்தலை ரத்து செய்துவிட்டு, வாக்குச்சீட்டுகளை வைத்துப் புதிதாகத் தேர்தல் நடத்த வேண்டும்’ எனத் தேர்தல் ஆணையத்துக்குக் கடிதம் எழுதினார், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி. மகாராஷ்டிராவில், வாக்குப்பதிவு இயந்திரம் போன்ற பொம்மை ஒன்றை சடலம் போல வைத்து, சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்று எரிக்கும் போராட்டம் நடத்தினார்கள் அங்குள்ள எதிர்க்கட்சியினர். மும்பை மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர், ‘‘நான் வாங்கியது ஜீரோ ஓட்டு. என் ஓட்டை எனக்குத்தான் செலுத்தினேன். என் குடும்பமும் எனக்கே வாக்களித்தது. அதெல்லாம் எங்கே போயின?” எனப் பரபரப்புக் குற்றச்சாட்டு கிளப்பி, அது வாட்ஸ்அப் வைரல் ஆனது. ``பஞ்சாப் சட்டமன்றத் தேர்தல் தோல்விக்கும், டெல்லி மாநகராட்சித் தேர்தல் தோல்விக்கும் இயந்திர மோசடியே காரணம்'' எனச் சொன்னார், ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால். எல்லாவற்றுக்கும் க்ளைமாக்ஸாக ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ சௌரவ் பரத்வாஜ், ‘வாக்குப்பதிவு இயந்திரத்தில் எப்படியெல்லாம் மோசடி செய்ய முடியும்’ என டெல்லி சட்டமன்றத்திலேயே, ஒரு மாதிரி இயந்திரத்தை வைத்து டெமோ செய்து காண்பித்தார்.

இந்தக் குற்றச்சாட்டுகளில், எந்த அளவு உண்மை இருக்கிறது? சிலவற்றைப் பொய் என்று தேர்தல் ஆணையம் நிராகரித்தாலும், இன்னும் சில மர்மங்களாகவே நீடிக்கின்றன.





* அசாம் மாநிலத்தின் ஜோர்ஹட் நாடாளுமன்றத் தொகுதியில் 2014 தேர்தலின்போது, அனைத்துக்கட்சிப் பிரதிநிதிகள் முன்பாக வாக்குப்பதிவு இயந்திரத்தை இயக்கிக் காண்பித்தனர் தேர்தல் அதிகாரிகள். வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் வைக்கப்பட்ட அந்த இயந்திரத்தில், எந்த பட்டனை அழுத்தினாலும், பி.ஜே.பி-க்கே ஓட்டு விழுவதாகக் காண்பித்தது. அப்போது மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தது காங்கிரஸ். அந்தக் கட்சிப் பிரதிநிதிகள், ‘அசாம் மாநிலத்தில் பயன்படுத்தப்படும் அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களையும் சோதிக்க வேண்டும்’ எனப் புகார் செய்தனர். ‘சில இயந்திரங்களில் மட்டும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. அவற்றைப் பயன்படுத்த மாட்டோம்’ எனத் தேர்தல் ஆணையம் சொன்னது. ஜோர்ஹட் தொகுதியில், அதற்குமுன்பு ஆறு தேர்தல்களில் தொடர்ச்சியாக வென்றிருந்த காங்கிரஸ், அம்முறை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்றது.

* மகாராஷ்டிரா மாநிலத்தின் யெரவாடா என்ற வார்டில், மொத்தம் 33,289 ஓட்டுகள் பதிவாகி இருந்தன. ஆனால், எண்ணும்போது 43,324 ஓட்டுகள் பதிவாகியிருப்பதாகச் சொன்னார்கள். தோல்வி அடைந்த 15 வேட்பாளர்களும் எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டம் நடத்தினர். ‘தேர்தல் அதிகாரி கூட்டும்போது தவறு செய்துவிட்டார்’ என்று காரணம் சொன்னது, மாநிலத் தேர்தல் ஆணையம். ‘‘ஜெயித்தவர்களைத் தோற்றவர்களாக அறிவித்து ஆளுங்கட்சிக்குச் சாதகமாக அதிகாரிகள் நடந்துகொள்ள வாக்குப்பதிவு இயந்திரமே காரணமாக இருந்தது’’ என்கின்றனர் எதிர்க்கட்சியினர்.

* கடந்த 2014-ம் ஆண்டு, மகாராஷ்டிராவின் பர்வாட்டி சட்டமன்றத் தொகுதித் தேர்தலில், போட்டியிட்டுத் தோற்றவர் காங்கிரஸ் வேட்பாளரான அபய் சாஜெத். குறிப்பிட்ட ஒரு வாக்குச்சாவடியில் இருந்த இயந்திரங்களில், மோசடி நடந்ததாக மும்பை உயர் நீதிமன்றத்தில், வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கை ஏற்று, குறிப்பிட்ட அந்த இயந்திரங்களை ஹைதராபாத் மத்திய தடயவியல் பரிசோதனை மையத்துக்கு அனுப்ப உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம். இந்தியாவிலேயே தடயவியல் பரிசோதனைக்காக வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பப்பட்டு இருப்பது இதுவே முதல் முறை. ‘ரிமோட் மூலம் இவற்றை யாராவது இயக்க முடியுமா? முடிவுகளை மாற்றும்விதமாக, கூடுதலாக ஏதாவது மெமரி சிப் உள்ளே இருக்கிறதா?’ என்பவை உள்ளிட்ட ஒன்பது கேள்விகளை நீதிமன்றம் எழுப்பி, பரிசோதித்து பதில் தருமாறு கேட்டிருக்கிறது.

* உத்தரகாண்ட் உயர் நீதிமன்றத்திலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பற்றிய வழக்கு இருக்கிறது. விகாஸ் நகர், முசௌரி, ராஜ்பூர் ரோடு, பெல் ராணிபூர், ராய்பூர், பிரதாப் நகர் மற்றும் ஹரித்வார் ரூரல் ஆகிய ஏழு சட்டமன்றத் தொகுதிகளில், தோற்ற காங்கிரஸ் வேட்பாளர்கள் வழக்கு போட்டிருக்கிறார்கள். இந்த எல்லா தொகுதிகளிலும் ஜெயித்தவர்கள், பி.ஜே.பி-யினர். ‘வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடந்தது’ எனப் போடப்பட்ட இந்த வழக்குகளை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம், ‘ஒரு நீதிபதியின் முன்னிலையில், 48 மணி நேரத்துக்குள் இந்தத் தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்களை சீல் செய்து, பாதுகாப்பாக வைக்க வேண்டும்’ என உத்தரவிட்டுள்ளது. தேர்தல் வழக்குக்காக வாக்குப்பதிவு இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்படுவது இதுவே முதல்முறை. ‘‘இந்த உத்தரவால், தேர்தல் ஆணையம் பதற்றமாகி இருக்கிறது. இதைத் தடுக்க அவர்கள் எவ்வளவோ முயன்றனர்’’ என வெளிப்படையாகச் சொல்லி இருந்தார், காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங்.

* மத்தியப் பிரதேச மாநிலம் அடெர் தொகுதியில், கடந்த ஏப்ரல் மாதம் இடைத் தேர்தல் நடந்தது. இங்கும் வாக்குப்பதிவு இயந்திரத்தை அதிகாரிகள் ‘டெமோ’ செய்து காண்பிக்கும்போது, எல்லா ஓட்டுகளும் பி.ஜே.பி-க்கே விழுவதாக சர்ச்சை கிளம்பியது. தேர்தல் ஆணையம் உடனே களத்தில் இறங்கி 19 அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்தது; சிலரை இடமாற்றம் செய்தது. தீவிர விசாரணை செய்துவிட்டு, ‘டெமோ சமயத்தில், நான்கு ஓட்டுகள் போடப்பட்டன. அவற்றில் ஒன்றே ஒன்றுதான் பி.ஜே.பி-க்கு விழுந்தது’ என விளக்கம் கொடுத்தது. தேர்தலில், காங்கிரஸ் ஜெயித்ததால், சர்ச்சை பெரிதாகவில்லை.

* ராஜஸ்தான் மாநிலம் டோல்பூர் இடைத்தேர்தலிலும் இதேபோன்ற குற்றச்சாட்டு எழுந்தது. ‘10 வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டிருந்தது. அதனால் வந்த பிரச்னை இது. அவற்றை அகற்றிவிட்டோம்’ எனத் தேர்தல் ஆணையம் சொன்னது.

வாக்குப்பதிவு இயந்திரம் என்பது இரண்டு பகுதிகளைக் கொண்டது. வாக்காளர்கள் வாக்களிப்பது ஒரு பகுதியில்; இன்னொரு பகுதியானது, வாக்குச்சாவடி அலுவலர் கட்டுப்பாட்டில் இருக்கும். அதில் அவர் ஒப்புதல் கொடுத்தால்தான், ஒருவர் ஓட்டு போட முடியும். இந்த வாக்குப்பதிவு இயந்திரங்களின் உள் கட்டமைப்பு யாருக்கும் தெரியாமலே இருந்தது. ஆனால், ஹைதராபாத்தைச் சேர்ந்த கம்ப்யூட்டர் வல்லுநர் ஹரிபிரசாத் என்பவர் மட்டுமே அவற்றின் படங்களை வெளியிட்டு இருந்தார்.

‘‘இந்த இயந்திரங்களின் பெரும்பாலான பாகங்கள் வெளிநாடுகளில் இருந்து வாங்கப்பட்டாலும், மத்திய அரசின் இரண்டு பொதுத்துறை நிறுவனங்கள்தான் இவற்றை உருவாக்குகின்றன. 94 சுற்றுகளில், இவை பாதுகாப்பு தர பரிசோதனைகளை முடித்து வருகின்றன. இவற்றின் புரோகிராமை ஒருமுறை எழுதினால், யாராலும் படிக்கவும் முடியாது; மாற்றவும் முடியாது. வயர்லெஸ், ப்ளூடூத், வைஃபை என எந்த சிக்னல் மூலமும் இதன் செயல்பாட்டில் குறுக்கீடு செய்ய முடியாது. மற்ற நாடுகளில், வாக்குப்பதிவு இயந்திரங்களை இணையதளம் மூலம் இணைத்திருக்கிறார்கள். அதனால், அவற்றில் குறுக்கீடு செய்து மோசடியில் ஈடுபடுவது சாத்தியம். நம் இயந்திரங்கள் இயங்க இணைய வசதி தேவையில்லை. எனவே, இவை உச்சபட்ச பாதுகாப்பானவை’’ என்பது தேர்தல் ஆணையத்தின் வாதம்.

இந்த இயந்திரங்கள் தொடர்பாக உலகப் புகழ்பெற்ற இன்ஜினீயர்களும் அறிவியலாளர்களும் இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு ஒரு திறந்த மடல் அனுப்பியுள்ளார்கள். அவர்களில், அமெரிக்காவின் ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழக கம்ப்யூட்டர் அறிவியல் பேராசிரியர் பூர்வி வோராவும் ஒருவர். ‘‘இதுவும் ஓர் இயந்திரம். எந்த இயந்திரத்திலும் முறைகேடு செய்வது சாத்தியம். எந்த ஒரு கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் அல்லது ஹார்டுவேரிலும், யாருடைய கவனத்துக்கும் வராமலே மாற்றங்கள் செய்ய முடியும். இணையதள இணைப்பு இல்லை என்றாலும், குடோனில் இருக்கும்போதே அதில் மாற்றங்கள் செய்வது சாத்தியம். இதில் இருக்கும் பிரச்னைகளை நாங்கள் சொல்கிறோம். இதையெல்லாம் தீர்த்து, 100 சதவிகிதம் நம்பகத்தன்மையை உறுதி செய்ய வேண்டும்’’ என்கிறார் அவர்.

கடந்த 2009-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், காங்கிரஸ் வென்றபோது, பி.ஜே.பி இதே குற்றச்சாட்டைச் சொன்னது. இப்போது பி.ஜே.பி-யை நோக்கி எல்லாக் கட்சிகளின் விரல்களும் நீள்கின்றன. வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்திருந்தால், 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தோற்றிருக்க முடியாது; சமீபத்திய பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் ஜெயித்திருக்கவும் முடியாது.

‘இதுவரை மோசடி நடக்கவில்லை’ என்பதற்கும், ‘மோசடியே செய்ய முடியாது’ என்பதற்கும் வித்தியாசங்கள் உள்ளன. ‘இப்படி நடந்தால் என்ன ஆவது?’ என்ற கேள்விக்கு நியாயமான பதிலைத் தேர்தல் ஆணையம் தர வேண்டும்.

அரசியல்வாதிகள், தங்கள் தோல்வி பற்றிய ஆத்ம பரிசோதனையை அரசியல்ரீதியாகச் செய்ய வேண்டுமே தவிர, டெக்னாலஜிமீது பழிபோட்டுத் தப்பிக்கக் கூடாது.



ஹைதராபாத்தைச் சேர்ந்த கம்ப்யூட்டர் வல்லுநர் ஹரிபிரசாத். ‘மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி செய்ய முடியும்’ என்று முதலில் குரல் எழுப்பியவர் இவர்தான். கடந்த 2009-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி டெல்லி பிரஸ் கிளப்பில் இதற்கான ‘டெமோ’வை அவர் செய்து காட்டினார். ரிமோட் மூலம் அதைக் கட்டுப்படுத்தி, எந்த பட்டனை அழுத்தினாலும் ஒரே வேட்பாளருக்கு ஓட்டு விழுவது மாதிரி செய்து காட்டினார். அமெரிக்காவைச் சேர்ந்த அலெக்ஸ் ஹால்டெமேன், நெதர்லாந்தைச் சேர்ந்த ராப் காங்ரேய்ப் ஆகியோர் அவருக்கு உதவினர். ‘Citizens for Verifiability, Transparency and Accountability in Elections’ என்ற அமைப்பின் மூலமாகச் செயல்பட்டு வந்த ஹரிபிரசாத், ‘‘யாரோ ஓர் அரசியல்வாதி பணம் செலவழித்து சில ஹேக்கர்களை ஏற்பாடு செய்தால், இந்தியாவின் தலையெழுத்தே மாறிவிடும். சிலர் நினைத்தால், ஒரு தேர்தல் முடிவையே மாற்றிவிடலாம் என்ற நிலை எவ்வளவு பயங்கரமானது! இதன் தொழில்நுட்பத்தை இன்னும் வலுவாக்க வேண்டும்’’ என அக்கறையோடு சொன்னார்.

ஆனால், தேர்தல் ஆணையம், இயந்திரத்தின் பாதுகாப்பு குறித்து விவாதிப்பதை விட்டுவிட்டு, `ஹரிபிரசாத் எங்கிருந்து அந்த இயந்திரத்தை எடுத்தார்?' என்று சீரியஸாக ஆராயத் தொடங்கியது. மும்பை மாநகராட்சி குடோன் ஒன்றிலிருந்து அதை எடுத்தார் என்பது தெரியவே ஐந்து மாதங்கள் ஆகின. வாக்குப்பதிவு இயந்திரத்தைத் திருடியதாக ஹரிபிரசாத் கைது செய்யப்பட்டார். ‘‘தேர்தல் இல்லாத நாட்களில் இந்த இயந்திரங்கள் சீல் செய்து வைக்கப்படுவதில்லை. குடோன் பாதுகாப்புக்கும் சாதாரண காவலாளிகள்தான். யாரும் உள்ளே புகுந்து எந்த மோசடியும் செய்யலாம். நான் ஓர் அதிகாரிபோல நடித்து அங்கு போனதும், குடோனைத் திறந்து என்னிடம் இதைக் கொடுத்தார்கள்’’ என வாக்குமூலம் கொடுத்தார் அவர்.

அவரது சொந்தத் தொழிலை முடக்கும் அளவுக்குப் போனது போலீஸ். கோர்ட்டுக்கும் ஸ்டேஷனுக்கும் அலையவிட்டு நிம்மதியைக் கெடுத்தார்கள். ‘‘உங்கள் டெக்னாலஜியைப் பயன்படுத்தி என்னை ஜெயிக்க வைத்தால், கோடிகளில் கொண்டுவந்து கொட்டுகிறோம் என சில அரசியல்வாதிகள் என்னிடம் பேரம் பேசினார்கள். ஆனால், எனக்கு தேசநலன்தான் முக்கியம்’’ என்றெல்லாம் சொன்னார் ஹரிபிரசாத்.

மேலை நாடுகளில், இதுபோன்ற டெக்னாலஜி ஹேக்கர்களை மதிக்கிறார்கள். ஹரிபிரசாத்தோடு இணைந்து இந்திய வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்த அலெக்ஸ் ஹால்டெமேன் ஏற்கெனவே, 'அமெரிக்க வாக்குப்பதிவு இயந்திரத்திலும், முறைகேடு செய்து முடிவை மாற்றிக் காட்ட முடியும்' என நிரூபித்திருந்தார். உடனே அவரை, தேர்தல் சீர்திருத்தங்களுக்கான ஆலோசகராக கலிஃபோர்னியா மாகாண அரசு நியமித்தது. இங்கே ஹரிபிரசாத்? ‘நமக்கு ஏன் வம்பு’ என ஒதுங்கி வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

ஓட்டு சொல்லும் சீட்டு!

‘வாக்குப்பதிவு இயந்திரங்கள், மோசடி செய்ய முடியாத அளவுக்குப் பாதுகாப்பானவை இல்லை’ எனக் கடந்த 2012-ம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றம் சொன்னது. இதைத் தொடர்ந்து, ‘அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களிலும், வாக்குப்பதிவு ஒப்புதல் சீட்டு இயந்திரத்தை வரும் 2019-ம் ஆண்டுக்குள் பொருத்த வேண்டும்’ என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Voter-Verified Paper Audit Trials (VVPAT) எனும் இந்த வாக்குப்பதிவு ஒப்புதல் சீட்டு இயந்திரம் இருந்தால், ஒருவர் ஓட்டு போட்டதும், 'யாருக்கு ஓட்டு போட்டார்?' என ஒரு பிரின்ட் ஸ்லிப் வந்துவிடும். ஏதாவது வித்தியாசம் இருந்தால், தேர்தல் அதிகாரியிடம் புகார் செய்யலாம். ‘ஏதாவது சந்தேகம் வந்து மறு வாக்கு எண்ணிக்கை நடத்தும்போது, இந்தத் துண்டுச்சீட்டுகளை எண்ண வேண்டும்’ எனப் பல கட்சிகள் கோரிக்கை வைத்திருக்கின்றன.
வாக்கிங் சென்றால் மூளைக்கு நல்லதாம்...!
இரா. குருபிரசாத்

தொப்பையைக் குறைப்பதில் ஆரம்பித்து, சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் வரை பல நோய்களுக்கு வாக்கிங் பரிந்துரைக்கப்படுகிறது.




இப்படி பல்வேறு நோய்களில் இருந்து விடுவிக்கும் நடைபயிற்சியால், மேலும் ஒரு பலன் குறித்து ஆய்வில் தெரியவந்துள்ளது. கனடா நாட்டைச் சேர்ந்தவர்கள் நடத்திய ஆய்வில், வாக்கிங் செல்வதால், மூளை இயக்கம் சீரடைவதாக தெரியவந்துள்ளது. மூளை பாதிப்பு உள்ளவர்களை வைத்து, வாரத்துக்கு மூன்று மணி நேரம் வீதம், ஆறு மாதத்துக்கு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

முடிவில், அவர்களின் மூளை இயக்கத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. தற்போது நடத்தப்பட்ட ஆய்வு சிறிய அளவிலானதுதான். விரைவில் இது குறித்து விரிவான ஆய்வு நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.
தினமும் ஒரு முட்டை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள்?

செ.சங்கீதா

பரபரப்புக்குப் பஞ்சமில்லாதது காலை வேளை. பள்ளிக்கும் அலுவலகத்துக்கும் கிளம்பும் அவசரத்தில் காலை உணவு தயாரிப்பதே பெரும்பாடு. அப்படியே தயாரித்தாலும், அதைச் சரியாகச் சாப்பிடாமல் ஓடுவதே பலரின் இயல்பு. தவிர்க்கக் கூடாதது காலை உணவு என்பதை மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள். அதிலும் காலை உணவில் கண்டிப்பாக ஒரு சத்தான ஆகாரமும் சேர்ந்திருக்கவேண்டியது அவசியம். அதற்கு முட்டையைச் சேர்த்துக்கொண்டால் போதும்... நம் உடலுக்கான முழு ஆற்றலுக்கும் உத்தரவாதம். முட்டை உணவுகள் எளிதில் செய்துவிடக்கூடியவை. சரி... காலை உணவில் தினமும் ஒரு முட்டை சேர்த்துக்கொண்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? பார்க்கலாம்...



பலன்கள்...

உலகளவில் பல நூறு ஆண்டுகளாக மனிதர்கள் சாப்பிடும் சத்தான உணவுகளில் ஒன்று முட்டை. நிறையப் பேருக்குப் பிடித்த உணவும்கூட. இதில் உடலுக்குத் தேவையான நிறைய சத்துகள் அடங்கியுள்ளன. அவை...

புரதச்சத்து: ஒரு முட்டையில், நம் உடலால் எளிதில் எடுத்துக்கொள்ளக்கூடிய அதிகத் தரமான புரதச்சத்து சுமார் ஆறு கிராம் இருக்கிறது.
வைட்டமின் டி: இதன் மஞ்சள் கருவில் வைட்டமின் டி உள்ளது. அது, நம் எலும்புகளுக்கும் பற்களுக்கும் வலிமை சேர்க்கும்.
ஆன்டிஆக்ஸிடன்ட்: இதிலிருக்கும் லூடின் (Lutein) மற்றும் சியாங்தின் கண் நோய்கள் வராமல், கண் புரை ஏற்படாமல் தடுக்கும்.

முட்டை, உடல் எடையைக் குறைப்பதற்கும் உதவி செய்யும். நம் அன்றாட உணவில் தாராளமாகச் சேர்த்துக்கொள்ளலாம்..



இதய நோய் வருமா?

`முட்டை நல்ல உணவல்ல’ என்று தி அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் (The American Heart Association - AHA) அறிவித்தது. `இதன் மஞ்சள் கருவிலிருக்கும் அதிகபட்சக் கொழுப்பால் இதய நோய்கள் வரக்கூடும்’ என்று காரணமும் சொல்லப்பட்டது. ஆனால், பிறகு வந்த ஆராய்ச்சிகளோ `அப்படி எந்த ஆபத்தும் இதனால் ஏற்படாது’ என்றன. வாரம் ஆறு முட்டைகளைச் சாப்பிடுபவர்களின் ரத்த அளவு ஒரே நிலையில்தான் இருக்கும் என்பதும் கண்டறியப்பட்டது.

எத்தனை சாப்பிடலாம்?

தி அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன், நமக்கு தினமும் 300 மில்லி கிராம் வரை கொழுப்புச்சத்து தேவை என்கிறது. அந்தளவில் 62 சதவிகிதம் வரை ஒரு முட்டை ஈடுகட்டுகிறது. நம் உடலுக்குக் கெட்ட கொழுப்புகளால்தான் பிரச்னை ஏற்படும். ஆனால், முட்டையிலோ நல்ல கொழுப்புகள்தான் நிறைந்துள்ளன. அதனால் எவ்விதமான கோளாறுகளும் முட்டையால் ஏற்படாது.

இதன் அளவு ஒவ்வொருவர் உடல்வாகுக்கு ஏற்ப மாறுபடும். உடல் உழைப்புள்ள நபர்களுக்கு வேறுவிதமான உணவு முறை தேவைப்படும். உடல் உழைப்பு அதிகம் உள்ளவர்கள், கடுமையான உடற்பயிற்சி செய்பவர்கள் ஒரு நாளைக்கு முட்டையின் ஆறு வெள்ளைக் கருவையும் இரண்டு மஞ்சள் கருவையும் கொண்ட உணவுகளைச் சாப்பிடலாம். இதனால் சதைகள் நன்கு வலுப்பெறும். உடல் உழைப்பு அதிகம் இல்லாதவர்கள் நாள் ஒன்றுக்கு ஒன்று என்ற விதத்தில் சாப்பிட்டாலே போதும். மற்ற உணவுகளில் இருந்தும் கொழுப்புச்சத்துகள் கிடைப்பதால், இதனை அவரவர் தேவைக்கேற்பதான் சாப்பிட வேண்டும்.



எச்சரிக்கை!

சர்க்கரைநோய் இருப்பவர்கள் முட்டை சாப்பிடுவதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சர்க்கரைநோய் உள்ளவர்களுக்கு இதனால் இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.

எதனுடன் சாப்பிடலாம்?

முட்டையுடன் கோதுமை பிரெட் மற்றும் காய்கறிகள்தான் சத்தான கூட்டணி. இறைச்சி, சீஸ், வெள்ளை பிரெட் ஆகியவற்றை இதனுடன் சாப்பிடும்போது சுவையாகத்தான் இருக்கும். ஆனால், முட்டையுடன் சாச்சுரேடட் கொழுப்பு நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவது சிறந்ததல்ல. இதன் வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிட்டாலே போதுமானது. மஞ்சள் கருவை நீக்கிய ஆம்லேட், அவித்த முட்டையாகவும் சாப்பிடலாம். ஆரோக்கியமான இதயத்துக்கு தரமான புரதச்சத்தும் அவசியம். எனவே, முட்டை சாப்பிடுவதை நிறுத்த வேண்டாம். தினமும் ஒரு முட்டை, நல்ல உணவு, முறையான உடற்பயிற்சி என்று வாழ்ந்தால், மகிழ்ச்சியான வாழ்வை நிச்சயம் பெறலாம்.

Section of Anna University PhD scholars excluded from convocation

Section of Anna University PhD scholars excluded from convocation Scholars who completed their viva after this date will be awarded degrees ...