Friday, June 30, 2017

மொழி கடந்த ரசனை: மழையே தீயைக் கொண்டு வந்தால்...

எஸ். எஸ். வாசன்
அமர்பிரேம்

திரைப்படங்களில் அன்பு, காதல் போன்ற உணர்வுகளை அழுத்தமாக வெளிப்படுத்தும் கதாபாத்திரங்கள் பெரும்பாலும் உயர்குடி மக்களாகவோ அல்லது உயர்ந்த பண்புகளை உடைய ஏழைகளாகவோ மட்டும் இருப்பார்கள். பொதுவான இந்தத் திரை மரபை உடைத்துக்கொண்டு முரடன், அடிமட்ட அசடு, விலைமாதர் போன்றவர்களின் உள்ளத்தில் ஊற்றெடுக்கும் தூய்மையான அன்பு, காதல் ஆகிய உணர்வுகளை யதார்த்த நடைமுறைகளின் வரம்புகளை மையமாக கொண்ட கதையம்சத்துடன் படமாக எடுப்பது கத்தி மேல் நடக்கும் உத்திக்கு ஒப்பானது. இந்தச் சவாலான முயற்சியின் முழு வெற்றியாக விளங்குகிறது ‘அமர்பிரேம்’(அமரத்துவக் காதல்) என்ற இந்திப் படம்.
அன்பு மறுக்கப்பட்ட ஒரு சிறுவனுக்கும் அருகில் இருந்த விலைமாதுவுக்கும் இடையில் அரும்பிய தாய்-மகன் உறவை ‘ஹிங்க் கச்சோரி’ என்ற பெயரில் வங்காளச் சிறுகதை எழுத்தாளர் விபூதி பூஷண் எழுதினார். அந்தக் கதை அம்மொழியில் ‘நிஷி பத்மா’ (இரவுப் பூக்கள்) என்ற பெயரில் திரைப்படமாக வெளிவந்தது. இந்தியாவின் சிறந்த குணச்சித்திர நடிகர்களில் ஒருவரான உத்தம் குமார், வங்காள நடிகை சபீதா சட்டர்ஜி நடித்த இப்படத்தின் திரைக்கதையை எழுதி இயக்கியவர் அரவிந்த முகர்ஜி என்பவர். இந்திப் படத்தின் திரைக்கதையை இவரே எழுதிய போதும் சில மாற்றங்களுடன் அதை இயக்கியவர் சக்தி சாமந்தா. ரமேஷ் பந்த் என்பவர் வசனம் எழுதினார். இப்படத்துக்கு இசை அமைத்த ஆர்.டி. பர்மன் இவரின் மெட்டுக்களுக்கு கருத்தாழம் மிகுந்த பாடல்களை இயற்றிய ஆனந்த பக்ஷி எனப் பலரும் ஒன்றிணைந்து படத்தை வெற்றிப் படமாக்கினார்கள்.

எல்லாவற்றையும்விட கதாபாத்திரமாக தோன்றுவதுடன் நில்லாமல் அந்தக் கதாபாத்திரமாகவே வாழ்ந்த ராஜேஷ் கன்னா, ஷர்மிளா தாகூர் ஆகியோரின் மிகை இல்லாத, அளவான கச்சிதமான உடல் மொழி, வசன உச்சரிப்பு ஆகிய நடிகர்களின் வெளிப்பாட்டுத் திறமைகள் இந்தியாவின் ஒப்பற்ற ஒரு திரைப்படமாக இதை ஆக்கின.

‘மேற்கத்திய இசையின் அடிப்படையில் மட்டுமே திரைப்பாடல்களுக்கு இசை அமைக்க இவருக்குத் தெரியும்’ என்ற கருத்து நிலவிய சூழலில் இப்படத்தின் மூன்று சிறந்த பாடல்களை பைரவி, தோடி, கலாவதி ஆகிய மூன்று முக்கிய இந்துஸ்தானி ராகங்களில் மெட்டமைத்து ஆர்.டி.பர்மன் தனது பாரம்பரிய இசை ஞானத்தை நிரூபித்தார்.

குறிப்பிட்டுச் சொல்லத்தக்க சிறப்புடைய ‘அமர் பிரேம்’ படத்தின் மூன்று பாடல்களில் ‘சிங்காரி கோயி பட்கே தோ சாவன் உஸ்ஸே புஜாயே’ என்று தொடங்கும் பாடல், விரக்தி, சோகம், ஆற்றாமை, கோபம் ஆகிய பல உணர்வுகளை எளிய வரிகளில் ஒருசேர வெளிப்படுத்தும் பைரவி ராகத்தில் அமைந்த இனிய பாடல்.

பொருள்:
திடுமென எழும் தீப்பொறியை
சடுதியில் வரும் மழை அணைத்துவிடும்
மழையே தீயை கொண்டுவந்தால்
அதை யார் அணைக்க முடியும் - யாரால் இயலும்
இலையுதிர் காலத்தில் உதிரும் இலைகளை
வசந்த காலம் மீண்டும் புதுப்பிக்கும்
வசந்த காலத்திலேயே உதிர்ந்து நிற்கும் தோட்டத்தை
எவரால் மலரச்செய்ய முடியும்
என்னிடம் கேட்காதே எப்படி என் கனவு இல்லம் இடிந்து போயிற்று என்பதைப் பற்றி
அதில் உலகத்தின் பங்கு எதுவும் இல்லை
அந்தக் கதை என் சொந்தக் கதை
(உள்ளத்தில்) எதிரி கோடாரியைப் பாய்ச்சினால்
மனம் ஆறுதல் பெற நண்பர்கள் உடன் இருப்பர்
நெருங்கிய நண்பர்களே உள்ளத்தைக் காயப்படுத்தினால்
எவர் என்ன செய்ய முடியும்.
என்ன ஆகிறது என எனக்குத் தெரியவில்லை
என்ன செய்கிறேன் என்பதும் அறியேன்
சூறாவளியை எதிர்கொள்ள எந்தச் சக்தியாலும்
இயலாது என்பதை ஏற்றுக்கொள்கிறேன்
இயற்கையின் குற்றம் அல்ல அது
(எனில்) வேறு எதோ சக்தியுடைய குற்றம்
கடலில் செல்லும் படகு தடுமாறினால்
படகோட்டி (எப்படியாவது) கரை சேர்த்திடுவான்
படகோட்டியே படகை கவிழ்த்துவிட்டால் - அதில்
பயணம் செய்பவரை எவர் காப்பாற்றுவார்
ஓ.. யார் காப்பாற்றுவார்.

ஹூக்ளி நதிக்கரை போன்ற ஸ்டுடியோ செட்டில் படமாக்கப்பட்ட இப்பாடலை இயக்குநர் சாமந்தா கல்கத்தாவின் ஹூக்ளி நதி மீது உள்ள ஹவுரா பாலத்தில்தான் படமாக்க விரும்பினார். ஆனால், கூட்டத்தைக் கட்டுப்படுத்த எங்களால் முடியாது எனக் காவல் துறையினர் தடுத்துவிட்டனர்.
திருப்பதி மலைப்பாதை வழியாக ஏழுமலையானை தரிசிக்க 2400 படி ஏறி வந்த காளை

2017-06-30@ 02:54:19

திருமலை: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க காளை ஒன்று மலைப்பாதை வழியாக 2400 படிக்கட்டுகள் ஏறி வந்த சம்பவம் பக்தர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பதி வாரிமெட்டு மலைப்பாதை வழியாக திடீரென ஒரு காளை மாடு பக்தர்களுடன் படிக்கட்டுகளில் ஏறி வந்து கொண்டிருந்தது. தங்களுடன் மாடு வருவதை பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். ஆனால், அந்த காளை யாரையும் கவனிக்காமல் ேவக வேகமாக 2400 படிக்கட்டுகளை ஏறி திருமலை வந்தடைந்தது. அப்போது, ஏழுமலையானை தரிசனம் செய்ய இந்த காளை வந்ததாக கருதி பக்தர்கள் அதனை தொட்டு வணங்கினர். மேலும், சிலர் அதற்கு குங்குமம் வைத்து வழிபட்டனர்.

இந்நிலையில் பக்தர்கள் கூட்டத்துடன் வந்த காளையை பாதுகாவலர்கள் பார்த்து, கோசாலை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த அதிகாரிகள் அந்த காளை மாட்டை திருமலையில் உள்ள கோசாலைக்கு அழைத்துச் சென்று சிறப்பு பூஜை செய்து அங்கு அடைத்து வைத்தனர்.

'வீட்டுக்குப் போனா சோத்துல கைவைக்க முடியாது!" - துப்புரவுப் பெண்களின் வாழ்க்கை #LifeOfScavengers

எம்.புண்ணியமூர்த்தி


மல்லிகா, லெட்சுமி இருவரின் வாழ்க்கையும் குப்பைகளுக்கு இடையே நகர்கிறது. அகற்ற அகற்ற சேர்ந்துகொண்டே இருக்கும் குப்பைகள். கோயம்புத்தூர் கலெக்டர் ஆபீஸ் வலதுபுறச் சாலையின் தூய்மைக்கு மல்லிகாவும், இடதுபுறச் சாலையின் தூய்மைக்கு லெட்சுமியும் பொறுப்பு. ஆம்... இருவரும் துப்புரவுப் பணியாளர்கள்.



'குப்பை அள்ளுறவன் கூட' என்று உரையாடல்களில் பலரும் இந்த விளிம்புநிலை மக்களைக் குறிப்பிட்டுப் பேசுவதுண்டு. ஆனால், அவர்களின் வாழ்க்கைச் சூழலைப் பற்றி யாரும் சிந்தித்திருக்கமாட்டார்கள். குப்பைத்தொட்டிகளைக் கடக்கும்போது 'ச்சீ... என்னா நாத்தம்' என்று மூக்கைப் பொத்திக்கொண்டு போகவும், துப்புரவுப் பணியாளர்களை ஏளனமாகக் கடந்துபோகவும்தான் நாம் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறோம். உண்மையில் அவர்களின் வேலை பற்றி அறிய நேர்ந்திருந்தால், எந்தக் குப்பையையும் எறியும் முன், அதை அப்புறப்படுத்தப்போகும் ஒரு ஜோடிக் கைகளைப் பற்றி மனம் ஒருமுறை சிந்தித்து, குப்பைகளை முறையாகத் தொட்டிகளில் சேர்ப்பிக்கும் பழக்கம் நம்மைப் பற்றிக்கொள்ளலாம். அப்படி ஒரு முயற்சியாக, மல்லிகா, லெட்சுமியிடம் பேசுவோம்.

அதிகாலை 6 மணி. மல்லிகாவையும், லெட்சுமியையும் கலெக்டர் ஆபிஸ் சாலையில் சந்தித்தோம். துடைப்பத்தால் குப்பைகளை வேகவேகமாக இழுத்துக்கொண்டிருந்தார்கள். சரக் சரெக் எனச் சத்தம் எழுப்பிய துடைப்பம், புழுதியைக் கிளறிவிட்டபடி இருந்தது.

“நல்லா வெச்சாங்க கண்ணு எனக்கு மல்லிகான்னு பேரு. பேரு மட்டும்தான் மணக்குது'' என்று அதிரும் சிரிப்போடு ஆரம்பிக்கிறார் மல்லிகா. “எங்கப்பாவும் அம்மாவும் கார்ப்பரேஷன்ல குப்பை கூட்டிக்கிட்டு இருந்தாங்க. பொறந்ததுல இருந்தே நாத்தத்தோட புழங்குனதால, கல்யாணத்துக்கு அப்புறமாச்சும் இதுல இருந்து வெலகி வாழலாம்னு நெனச்சேன். ஆனா அதுக்கும் வாய்க்கல. எனக்குப் பார்த்த மாப்பிள்ளை நாகராஜும் கார்ப்பரேஷன்ல குப்பைதான் கூட்டிக்கிட்டு இருந்தாரு. சரி அதுதான் வாழ்க்கையினு வாக்கப்பட்டேன். ஆனா கல்யாணம் ஆன கொஞ்சநாள்லயே, 'குடும்பச் சூழ்நிலை சரியில்ல, நீயும் வேலைக்கு வா’ன்னு என் புருஷன் கூப்பிட்டாரு.

'பப்ளிக்குல எல்லார் முன்னாடியும் எப்படிங்க குப்பை கூட்டுறது...'னு ஆரம்பத்துல நான் கூச்சப்பட்டேன். 'நானும் துணைக்கு வர்றேன்'னு சொல்லி கொஞ்ச காலம் அவரும் என்கூட வந்து, என்னைக் குப்பைக் கூட்டுறதுக்குப் பழக்கினாரு. ஆனாலும் எங்க சொந்தக்காரங்க யாராச்சும் வந்தா ஒளிஞ்சிக்குவேன். நரகலை எல்லாம் அப்புறப்படுத்தவேண்டி வரும்போது வீட்டுல போய் சோத்துல கைவைக்க முடியாது. அப்போதான் எங்கம்மாவும், அப்பாவும், என் புருஷனும் படுற கஷ்டம் புரிஞ்சு கலங்கிட்டேன். அவங்க அதெல்லாம் பண்ணினது எனக்காகத்தானேனு நெனச்சப்போ, அப்போ ஏன் அதை நாமளும் செய்யக்கூடாதுனு மனசு பக்குவப்பட்டுச்சு.

அடுத்து வந்த நாள்கள்ல எல்லாம் குனிஞ்ச தலை நிமிராம கூட்ட ஆரம்பிச்சேன். வர்றவங்க போறவங்க எல்லாரும் என்னையே கேவலமா பார்க்குறமாதிரி நெனச்சுட்டு இருந்த எனக்கு நாளாக நாளாகத்தான் புரிஞ்சது, யாரும் நம்மளை மனுஷனாவெல்லாம் மதிக்கிறதில்ல, நம்மளைக் கண்டுக்கிறதுக்கெல்லாம் அவுங்களுக்கு நேரம்மில்லைன்னு. அவமானத்தைவிட அது பெரிய வலியா இருந்துச்சு. காலப்போக்குல வெட்கம், கூச்சம் எல்லாமே அத்துப்போச்சி'' என்றார் விரக்தியுடன்.



லெட்சுமி பேசும்போது, “என் கணவர் இறந்து ஆறு வருஷம் ஆகுது. அதுக்கு முந்தி நான் இந்த வேலை பார்த்ததே இல்லை. குடும்பத்தைக் காப்பாத்துறதுக்காக திடீர்னு ரோட்டுக்கு வரவெச்சிடுச்சு விதி. புதுசா படும்போதுதான் அது கஷ்டம். பழகிட்டா அது வாழ்க்கை. ஆனா, டிப் டாப்பா டிரெஸு பண்ணிக்கிட்டு சென்டெல்லாம் அடிச்சிக்கிட்டு மணக்க மணக்கப் போற பொண்ணுங்களைப் பார்க்கும்போது, மனசுல எங்கேயோ ஒரு மூலையில ஏக்கமா இருக்கும். எங்களுக்கு இல்லைன்னாலும் எங்க பிள்ளைகளுக்காவது இந்த நாத்த வாழ்க்கையிலிருந்து விடுதலை கிடைச்சு, அவங்க இப்படி ஜம்முனு உடுத்திட்டுப் போற வேலைக்குப் போகணும்னு வேண்டிக்குவோம்.

சிலர் எங்களை ரொம்ப கீழ்த்தரமா நடத்தும்போது, அவங்க பொறந்த மாதிரி நாங்களும் ஒருத்தி வயித்துல இருந்துதானே பொறந்து வந்திருக்கோம், நாங்களும் மனுஷங்கதானேனு ஆதங்கமா இருக்கும். ஆனா எங்ககிட்ட நடந்துக்குற முறையில முன்னவிட இப்போ சனங்களோட மனசு முன்னேறிட்டே வருது. இனியும் மாறினா நல்லாயிருக்கும்'' என்கிறார் காலத்தின் மீது நம்பிக்கை வைத்து.

இருவரும் மீண்டும் கூட்ட ஆரம்பிக்க, 'சரக் சரக்' சத்தம் புழுதி கிளப்புகிறது.
பெருங்களத்தூரில் ரயில்வே சுரங்க நடை பாதைப்பணி ஆய்வு

By DIN | Published on : 30th June 2017 04:54 AM

பெருங்களத்தூரில் ரூ 3.6 கோடியில் நடைபெற்று வரும் ரயில்வே சுரங்கநடை பாதைப் பணிகளை வியாழக்கிழமை ஆய்வு செய்த ஸ்ரீ 'பெரும்புதூர் மக்களவை உறுப்பினர் கே.என்.ராமச்சந்திரன்.

 தாம்பரத்தை அடுத்த பெருங்களத்தூரில் நடைபெற்று வரும் ரயில்வே சுரங்க நடை பாதைப்பணிகளை ஸ்ரீபெரும்புதூர் மக்களவை உறுப்பினர் கே.என்.ராமச்சந்திரன் வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.
பெருங்களத்தூர், பீர்க்கன்கரணை பேரூராட்சிகளையும், ஜிஎஸ்டி சாலையையும் இணைக்கும் ரயில்வே மேம்பாலப்பணி நடைபெற்று வருகிறது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஜிஎஸ்டி சாலையில் அமைக்க இருக்கும் மேம்பாலப்பணிகளை விரைவில் தொடங்க உள்ளது. ரயில்வே துறை, மாநில நெடுஞ்சாலைத்துறை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இணைந்து மேற்கொள்ளும் பெருங்களத்தூர் மேம்பாலப்பணி விரைவில் நிறைவேற்றப்பட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பீர்க்கன்கரணை பொதுமக்கள் பயன்படுத்தி வந்த ரயில்வே கேட் மேம்பாலப்பணிக்காக மூடப்பட்டுவிட்டதால் பொதுமக்கள் ரயில்வே தண்டவாளத்தைக் கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் அப்பகுதியில் அடிக்கடி நிகழும் ரயில் விபத்து காரணமாக பலர் உயிரிழக்க நேரிடுகிறது. ஆகவே பொதுமக்கள் எளிதில் ரயில்வே நடைமேடைக்குச் செல்லவும், ரயில் தண்டவாளத்தைக் கடந்து ஜிஎஸ்டி சாலைக்குச் செல்லவும் சுரங்க நடை பாதை அமைக்க வேண்டும் என்று பீர்க்கன்கரணை பேரூராட்சி சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பொதுமக்களின் கோரிக்கை ரயில்வே நிர்வாகம் ஏற்று ரூ3.6 கோடி செலவில் சுரங்கநடை பாதை அமைக்க முன் வந்துள்ளது. சுமார் 100 அடி நீளம்,10 அடி உயரம்,18 அடி அகல சுரங்க நடைபாதை அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

சுரங்க நடைபாதை பணிகள் குறித்து ரயில்வே கோட்டப் பொறியாளர் எஸ்.சீனிவாசன் மக்களவை உறுப்பினர் கே.என்.ராமச்சந்திரனிடம் விவரித்தார்.

ரயில் மேம்பாலப்பணி, நெடுஞ்சாலைத்துறை மேற்கொள்ளும் பணிகளை விரைந்து நிறைவேற்றித்தர வேண்டும்என்று பீர்க்கன்கரணை பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை ஸ்ரீ பெரும்புதூர் மக்களவை உறுப்பினர் கே.என்.ராமச்சந்திரனிடம் அளித்தனர்.
ஜூலை 1 முதல் சினிமா டிக்கெட் விலை எவ்வளவு?

By எழில் | Published on : 29th June 2017 03:17 PM

சரக்கு-சேவை வரியை (ஜிஎஸ்டி) ஜூலை 1-ஆம் தேதி முதல் அமல்படுத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இது சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய வரிச் சீர்திருத்தமாகக் கருதப்படுகிறது. சரக்கு மற்றும் சேவை வரியின் (Goods and Services Tax) சுருக்கமே ஜிஎஸ்டி. இதுவரை நடைமுறையில் உள்ள மத்திய கலால் வரி, சேவை வரி, மதிப்புக் கூட்டு வரி மற்றும் உள்ளூர் வரிகள் ஆகிய பல்வேறு வரிகளுக்கு மாற்றாக, நாடு முழுவதும் ஒரே சீரான வரியை விதிப்பதற்காக, சரக்கு-சேவை வரிச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி விதிப்பில், சினிமாவுக்கு 28 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சினிமா டிக்கெட் விலை உயரும் நிலை உருவாகியுள்ளது. இந்த வரி விதிப்புக்குத் திரைத் துறையினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

ஜிஎஸ்டி கவுன்சிலின் 16-வது கூட்டம் தில்லியில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் சமீபத்தில் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில், இன்சுலின் மருந்து, நூறு ரூபாய் வரையிலான சினிமா டிக்கெட் உள்ளிட்ட 66 பொருள்களுக்கான சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. கமல் உள்ளிட்ட திரையுலகினரின் கோரிக்கையை ஏற்று ரூ.100 மற்றும் அதற்கு குறைவான சினிமா டிக்கெட்டுகளுக்கான ஜிஎஸ்டி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. 100 ரூபாய்க்குக் கூடுதலான சினிமா டிக்கெட்டுக்கான வரி 28 சதவீதமாகத் தொடரும்.

இந்நிலையில் ஜிஎஸ்டியால் ஜூலை 1 முதல் தமிழகத் திரையரங்குகளில் டிக்கெட் கட்டணம் உயரவுள்ளது. டிக்கெட் விலை + 28% ஜிஎஸ்டி. அதாவது இனி ரூ. 120 டிக்கெட் ரூ. 153.60 ஆக விற்கப்படும். திரையரங்குகள் இந்தக் கட்டணத்தை ரூ. 150 என்றும்கூட மாற்றிக்கொள்ளலாம்.

டிக்கெட் கட்டண உயர்வு குறித்த முடிவு சென்னையில் நடைபெற்ற திரையரங்கு உரிமையாளர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

ரூ. 100-க்குக் குறைவாக உள்ள டிக்கெட்டுகளுக்கு ஜிஎஸ்டி 18% என அறிவிக்கப்பட்டுள்ளதால் தமிழகத்தின் ரூ.120 டிக்கெட்டுகள் தற்போது ரூ.100 ஆகக் குறைக்கப்படுமா என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பதிலாக, ரூ. 120 டிக்கெட்டுகள் இனி ரூ. 153.60-க்கு விற்கப்பட்டால் திரையரங்குகளில் ரசிகர்களின் வருகை மிகவும் குறையும் என்றும் அஞ்சப்படுகிறது. சில திரையங்குகளில் ரூ. 100-க்கும் டிக்கெட்டுகள் விற்கப்படுகின்றன. அவை இனி ரூ. 120-க்கு விற்கப்படும்.

மேலும் தற்போது திரையரங்குகள் 30% நகராட்சி வரி செலுத்திவருகிறது. அவை ரத்தானால் மட்டுமே இந்த விலைக்கு டிக்கெட்டுகள் விற்கமுடியும் என்று திரையரங்கு அதிபர்கள் கூறியுள்ளார்கள். ஆனால் ஆந்திரா, கேரளா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களில் நகராட்சி வரி ரத்து செய்யப்பட்டுள்ளது. அதுபோல தமிழகத்திலும் ரத்து செய்யப்படவேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.

UGC

உப்பு... இறைவனை உணர்த்தும் ஓர் அடையாளம் - எப்படி? 

மு.ஹரி காமராஜ்

உப்பு உணவில் மட்டுமல்ல, நமது ஆன்மிக வாழ்விலும் முக்கியமானது. விதையும் இல்லாமல் மண்ணுமில்லாமல் கடலில் தோன்றும் இந்த 'அதிசய விளைச்சலை' வியக்காத ஞானியரே இல்லை. நீரில் தோன்றி, நீரிலேயே கரைந்து போகும் உப்பு ஜீவாத்மாவைப் போன்றது. கடலே பரமாத்மா. 'சமுத்திரமணி', 'நீர்ப்படிகம்', 'கடல் தங்கம்', 'பூமிகற்பம்', 'சமுத்திர ஸ்வர்ணம்', 'வருண புஷ்பம்’, 'சமுத்திரக்கனி', 'ஜலமாணிக்கம்' என்றெல்லாம் உப்பு போற்றப்படுகிறது.



சைவ சமயத்தில், 'ஸ்பரிச தீட்சை' என்று ஒன்று நடைபெறும். அதாவது குருவானவர், சிஷ்யரின் தலையைத் தொட்டு மந்திர முறைகளைச் சொல்லிக் கொடுப்பார். அப்போது குரு, சிஷ்யர் ஆகிய இருவரின் உப்புத்தன்மை விகிதமும் சரியான அளவில் ஒன்றாகி வரும்போது அந்த சிஷ்யர் மிகச்சிறந்த மாணவராக விளங்குவார் என்பது ஐதீகம்.

உடலில் சேரும் உப்பே நமது அனைத்து குணநலன்களையும் தீர்மானிக்கிறது என்பது சீனர்களின் நம்பிக்கை. கடலில் நீராடுவது சகல தோஷங்களையும் நீக்கும் என்பது நம்பிக்கை.

உப்பு, கடவுளை உணர்த்தும் ஓர் அடையாளம் என்பது இந்துக்களின் நம்பிக்கை. சங்கும் முத்தும் பிறப்பது உப்பால்தான். கடவுளர்க்கே அதிகம் படைக்கப்படுவதும் அதனால்தான்.

கடலில் இருந்து தோன்றிய மகாலட்சுமியின் அம்சமாக 'உப்பு' சொல்லப்படுவதால்தான், `உப்பைச் சிந்தக் கூடாது’ என்று நம் முன்னோர்கள் சொல்லிவைத்தனர். `உப்பைக் காலில் மிதிக்கக் கூடாது’ என்றும் சொல்வார்கள்.



வீட்டில், 'திருஷ்டி', 'துர்சக்திகள் தொல்லை' ஏதாவது இருந்தால், உப்பு நீரைப் பாத்திரத்தில் இட்டு, வீட்டின் மையத்தில் இருக்குமாறு வைத்து மூன்று நாள்கள் கழிந்த பிறகு கால்படாத இடத்திலோ நீர் நிலைகளிலோ ஊற்றிவிடுவது தமிழர்களின் நெடுநாளைய வழக்கம்.

இன்றும் திருஷ்டி கழிக்க, உப்பு சுற்றிப்போடுவது நாம் காணக்கூடிய நடைமுறையே. உப்பு துர்சக்திகளை, கெட்ட அதிர்வுகளை விரட்டும் ஆற்றல்கொண்டது.

`உப்பைக் கடனாகக் கொடுக்கக் கூடாது’ என்பது இன்றும் உள்ள வழக்கம். உப்பைக் கொடுத்தால், அந்த இடத்திலிருந்து மகாலட்சுமி நீங்கிவிடுவாள் என்பது ஐதீகம். உப்பை விற்கக் கூடாது என்று முன்னர் வழக்கத்தில் இருந்ததும் இதனால்தான்.

உப்பை மண்பானை அல்லது பீங்கான் ஜாடியில் போட்டு வைப்பதே நல்லது. அப்படித்தான் வைத்தும் இருந்தோம். மண்பானைக்கு 'ஸ்வர்ண பாத்திரம்' என்றே ஒரு பொருள் உண்டு. அதனாலேயே ஸ்வர்ணத்தின் அதிபதியான மகாலட்சுமி மண் பானையில் உப்பு வடிவில் இருக்கிறாள் என்றும் சொல்வார்கள்.



பிறந்த குழந்தைக்குச் சர்க்கரை, உப்புத் தண்ணீர் ஊற்றுவது தொடங்கி, இறந்த உடலைப் பக்குவப்படுத்துவது வரை மனித வாழ்வில் உப்பு பெரும்பங்கு எடுத்துக்கொள்கிறது. எதிரிகளை அடங்கிப்போகச் செய்ய, உப்பால் கணபதி செய்து வழிபடுவது ஒரு வழக்கமாக உள்ளது. பித்ருக்களின் வழிபாட்டின்போது உப்பில்லாமல் அவர்களுக்கு உணவு படைப்பது வழக்கம்.

காரணம், உப்பில்லாத உணவை வெறுத்து அவர்கள் பூமியை விட்டுவிட்டு மேலே சென்றுவிடுவார்கள் என்பது நம்பிக்கை. முக்கியமாக, அமாவாசையன்று கடற்கரையில் நீராடி, தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். இதுவும் உப்புக்காற்றுபட்டு அது நமது உடல் மற்றும் மனநிலையை மேம்படுத்தவே என்றும் கூறப்படுகிறது.

உப்பைத் தலையில் வைத்து ஆசீர்வதித்து, மந்திரங்கள் சொன்னால் நோய்கள் விலகும் என்பது சாக்த வழிபாட்டில் வழக்கமாக உள்ளது. உப்பையும் மிளகையும் கோயிலின் பலிபீடத்தில் போட்டு வழிபடுவதை நாம் பல கோயில்களில் பார்த்திருப்போம். முக்கியமாக, அம்மன் கோயில்களில் இது சகஜம். உப்பையும் மிளகையும் பலிபீடத்தில் போட்டு வழிபட்டால் எதிரிகள் ஒழிந்துவிடுவார்கள் என்பதும் சில பகுதி மக்களின் நம்பிக்கையாக இருந்துவருகிறது.

உப்பும் மிளகையும் கொட் டி வழிபடுவதை மரு, வீக்கம் போன்றவை நீங்க கொட்டுவதாகவும் சிலர் சொல்வார்கள். ஆனால், உண்மையில் நம்மை எதிர்நோக்கி வரும் துன்பங்கள் யாவும் உப்பைப்போல கரைந்துவிட வேண்டும் என்பதற்கே கொட்டப்படுகிறது.

விடியல் நேரத்தில் இரு கைகளிலும் உப்பை வைத்துக்கொண்டு 'ஸ்மரம் யோநிம் லக்ஷ்மீம்' என்ற ஆதி சங்கரரின் சௌபாக்ய மந்திரத்தை 16 முறை உச்சரித்து, அந்த உப்பைச் சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும். இப்படியே 48 நாள்கள் கழித்து, மொத்த உப்பையும் நீர்நிலைகளில் போட்டுவிட வேண்டும் என்று சமயப் பெரியோர்களால் சொல்லப்படுவது உண்டு.

வடமொழியில் உப்பை `லவணம்’ என்பார்கள். இந்த லவணத்தைக் கொண்டு செய்யப்படும் பிரார்த்தனைகள், வடமாநிலங்களில் அநேகம் உண்டு. லட்சுமியின் அருள்வேண்டி பலவிதங்களில் லவண பூஜைகள் அதிகாலைகளில் நடைபெற்று வருகின்றன.

`ஓம் க்ருணி சூர்ய ஆதித்யோம்: மம சௌக்யம் தேகிமே ஸதா' என்று வேண்டியபடி உப்பை வைத்து சூரியனை வணங்கும் பழக்கம் இன்றும் உள்ளது.

உப்பு, நெகட்டிவ் எனர்ஜியை வெளியேற்றும் சக்திகொண்டது. கையில் உப்பை வைத்துக்கொண்டிருக்கும்போது பாசிட்டிவ் எனர்ஜி அதிகரிப்பதாகச் சொல்கிறார்கள். கிராமங்களில் 'உப்பு மந்திரம்' என்று வேடிக்கையாக ஒன்றைச் சொல்வதுண்டு.

உப்பைக் கையில் வைத்துக்கொண்டு நாம் யாரைப் பார்க்க நினைக்கிறோமோ, அவர்களை எண்ணி தியானித்து வீசி வேண்டினால், அவர்கள் வேண்டுதல் தொடங்கிய 7 நாள்களுக்குள் அவர்கள் உங்களைக் காண வந்துவிடுவார்கள் என்று நம்பிக்கை.

 இதைத்தான் டெலிபதி, ஈ.எஸ்.பி பவர் என்றெல்லாம் சொல்கிறோம். ஆக, உப்பு என்பது மருத்துவம், ஆன்மிகம், நம்பிக்கை என்று எல்லா விஷயங்களிலும் நம் வாழ்க்கையில் கலந்து, ஒன்றோடு ஒன்றாகவே இருந்துவருகிறது. இனி, `உப்புக்குப் பெறாத விஷயம்’ என்று எதையுமே சொல்லாதீர்கள். ஏனென்றால், கடல் பரமாத்மா, உப்பு ஜீவாத்மா.

NEWS TODAY 31.01.2026