Saturday, July 1, 2017

Train News

ரயில்வே ஸ்டேஷனில் எஸ்கலேட்டர் ரெடி:விரைவில் திறப்பதால் பயணிகள் குஷி!

பதிவு செய்த நாள்

01ஜூலை
2017 
01:14

கோவை;கோவை ரயில்வே ஸ்டேஷனில், 1ஏ பிளாட்பார்ம் செல்வதற்காக பொருத்தப்பட்டுள்ள இரண்டு எஸ்கலேட்டர்கள், நாளை முதல் பயன்பாட்டு வருவதால் பயணிகள் 'குஷி' அடைந்துள்ளனர்.
கோவை ரயில்வே ஸ்டேஷனில் தினமும் நின்று செல்லும், 72 ரயில்களில், 20 ஆயிரத்திற்கும் அதிகமான பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனால், இங்குள்ள பிரதான நுழைவாயில், மிகவும் குறுகலாக இருப்பதுடன், செங்குத்தான படிகளைக் கொண்டதாக உள்ளது. இதனால், வயதானவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகளுடன் வருவோர், நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள், பிளாட்பார்ம் செல்வது மிகப்பெரும் கஷ்டமாகவுள்ளது.
இவர்கள் அனைவரும், பிளாட்பார்ம்களுக்கு எளிதில் செல்லும் வகையில் இரண்டு 'லிப்ட்'கள் நிறுவுதல், ஸ்டேஷன் நுழைவாயிலில் இருந்து, 1ஏ பிளாட்பார்மிற்கு பயணிகள் செல்ல ஏதுவாக இரு எஸ்கலேட்டர்கள் அமைத்தல் போன்ற பணிகள் கடந்தாண்டு அக்., முதலே நடந்து வருகின்றன. இதில், 'லிப்ட்'கள் அமைக்கும் பணி முடிந்தபாடில்லை.ஆனால், 1.5 கோடி ரூபாய் மதிப்பில் இரு எஸ்கலேட்டர்கள் பொருத்தப்பட்டு, தற்போது கட்டுமான பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டன. நாளை முதல் இந்த எஸ்கலேட்டர்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ளதால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதற்கான சோதனை ஓட்டம் நேற்று நடந்தது.இதுகுறித்து, ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில்,'ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பில் பொருத்தப்பட்டுள்ள இவ்விரு எஸ்கலேட்டர்களை மத்திய ரயில்வே அமைச்சர் துவக்கிவைக்கிறார். பணிகள் முழுமையடைந்து உள்ளதால், தற்போது சோதனை ஓட்டம் நடத்தி சரி பார்த்துள்ளோம்; இரு எஸ்கலேட்டர்களும் சிறப்பாக இயங்குகின்றன,' என்றார்.
ஏற்கனவே, இங்குள்ள இரண்டாவது சுரங்கப்பாதையில் பொருத்தப்பட்டுள்ள எஸ்கலேட்டர்கள், பெரும்பாலும் இயங்குவதே இல்லை; அதேபோல, இதையும் பெயருக்குத் துவக்கி விட்டு, சில நாட்களில் நிறுத்தி விடக்கூடாது என்பதே கோவை மக்களின் கோரிக்கை.

President Election

ஜனாதிபதி தேர்தலில் ஓட்டளிப்பது எப்படி : எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுக்கு விளக்க கடிதம்

பதிவு செய்த நாள்

01ஜூலை
2017 
01:22

சென்னை: ''ஜனாதிபதி தேர்தலில், எப்படி ஓட்டளிக்க வேண்டும் என்பதை விளக்கி, எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் எம்.பி.,க்களுக்கு, கடிதம் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது,'' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.

இது குறித்து, அவர் கூறியதாவது: தமிழகத்தில், ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. ஜனாதிபதி தேர்தலில் ஓட்டளிக்கும் எம்.எல்.ஏ.,க்களுக்கு, இளஞ்சிவப்பு நிறத்திலும்; எம்.பி.,க்களுக்கு, பச்சை நிறத்திலும், ஓட்டுச்சீட்டு வழங்கப்படும்.
தமிழக எம்.எல்.ஏ.,க்கள், வேறு மாநிலங்களில் ஓட்டளிக்க விரும்பினாலோ, எம்.பி.,க்கள் சென்னையில் ஓட்டளிக்க விரும்பினாலோ, வரும், 6ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். வாக்காளர் பட்டியல், தேர்தல் கமிஷன் தயார் செய்து அனுப்பும்.
வாக்காளர் பட்டியல் வந்த பின், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் எம்.பி.,க்களுக்கு, 'பூத் சிலிப்' வழங்கப்படும். அவர்கள் ஓட்டளிக்கும் போது, ஓட்டுச்சீட்டின் மேல் பகுதியில், பூத் சிலிப் எண்ணை குறிப்பிட வேண்டும்.
ஜனாதிபதி தேர்தலில், எப்படி ஓட்டளிக்க வேண்டும் என்பதை விளக்கி, எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் எம்.பி.,க்களுக்கு, கடிதம் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது; விரைவில் அனுப்பப்படும். 
தேர்தலுக்கான ஓட்டுப் பெட்டி, டில்லியில் இருந்து, 13ம் தேதி சென்னை வரும். கூடுதலாக, இரண்டு பெட்டிகள், தயார் நிலையில் வைத்துள்ளோம்.
ஜனாதிபதி தேர்தலில் ஓட்டளிப்பவர்கள், தாங்கள் ஓட்டளிக்க விரும்பும் வேட்பாளர் பெயருக்கு நேராக, 1 என்ற இலக்கத்தை எழுத வேண்டும். ஒன்று என்ற இலக்கத்தை, ஒரே ஒரு வேட்பாளரின் பெயருக்கு நேராக மட்டும் குறிக்க வேண்டும்.
அடுத்து மற்ற வேட்பாளர்களுக்கு, விருப்ப வரிசைப்படி, அவர்களின் பெயருக்கு நேராக, 2, 3 என, இலக்க எண்களை எழுத வேண்டும். தேர்தல் அதிகாரிகள் வழங்கும் பேனாவை கொண்டே, தங்களுடைய ஓட்டை பதிவு 
செய்ய வேண்டும். வேறு பேனாவை பயன்படுத்தக் கூடாது. எந்த வேட்பாளரின் பெயருக்கு நேராகவும், ஒரு இலக்கத்திற்கு மேல் குறிக்கக் கூடாது. ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்களின் பெயர்களுக்கு நேராக, ஒரே இலக்கத்தை குறிக்கக் கூடாது.
இவ்வாறு ராஜேஷ் லக்கானி கூறினார்.

தேசிய கீதம்

தேசிய கீதம் பாடும் போது எழுந்து நிற்க விதிவிலக்கு

பதிவு செய்த நாள்

01ஜூலை
2017 
01:10

பத்து வகை மாற்று திறனாளி மாணவர்கள், தேசிய கீதத்தின்போது எழுந்து நிற்க விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, பள்ளி, கல்லுாரிகளுக்கு, தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. பொது இடங்கள், அரசு நிகழ்ச்சிகள், பள்ளி, கல்லுாரி போன்ற கல்வி நிறுவனங்கள், திரையரங்குகள் உள்ளிட்டவற்றில், தினமும் தேசிய கீதம் ஒலிக்கப்படும். அப்போது, அங்கு கூடியிருப்போர், தேசிய கீதத்துக்கு மரியாதை செலுத்தும் வண்ணம், எழுந்து நிற்பது வழக்கம்.

இந்நிலையில், மாற்று திறனாளிகள் மற்றும் நோய்களால் பாதிக்கப்பட்ட இயல்பு நிலையில் இல்லாதவர்களால், எழுந்து நிற்க முடியாத நிலை உள்ளது. இது குறித்து, உச்ச நீதிமன்றம் சில விதிமுறைகளை வழங்கியுள்ளது. அதன்படி, 'ஆட்டிசம்' பாதிக்கப்பட்டோர், பெருமூளை வாத பாதிப்புள்ளோர், கண் பார்வை குறைந்தோர், செவி கேட்புத்திறன் குறைந்தோர், வாய் பேச முடியாதோர், அறிவுசார் குறை கொண்டோர், மனநலம் பாதிக்கப்பட்டோர், பல விதங்களில் உடல் பாதிப்புக்கு ஆளானோர், சதை பிடிப்பு கொண்டோர், தொழுநோய் சிகிச்சை பெற்றவர்கள் என, 10 வகை மாற்று திறனாளிகள், தேசிய கீதத்தின் போது, எழுந்து நிற்க விதிவிலக்கு அளிக்கப்பட்டு
உள்ளது.

- நமது நிருபர் -

வெளிநாடு வாழ் இந்தியர்கள்

வெளிநாடுவாழ் இந்தியர்களை பாதுகாக்க புதிய இணையதளம்

பதிவு செய்த நாள்

01ஜூலை
2017 
00:33

சிவகங்கை, வெளிநாடு வாழ் இந்தியர்களை பாதுகாக்க புதிய இணையதளத்தை மத்திய அரசு துவங்கியுள்ளது.
வேலை, தொழில் செய்ய, கல்வி கற்க போன்றவைக்காக கோடிக்கணக்கான இந்தியர்கள் சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, சவுதிஅரேபியா, துபாய் உள்ளிட்ட நாடுகளில் வசிக்கின்றனர். 
போலி ஏஜன்ட்கள் மூலம் வெளிநாடுகளுக்கு செல்வது, கொத்தடிமையாக இருப்பது, பணி செய்யும் இடங்களில் பிரச்னை, மீனவர்களை சிறைப்பிடிப்பு, ஆவணங்களை தொலைத்தல், உள்நாட்டு போர் போன்ற காரணங்களால் பாதிக்கப்படுகின்றனர். சிலசமயங்களில் வெளிநாடுகளில் கொலையான மற்றும் இறந்தோரின் உடல்களை இந்தியா கொண்டு வருவதற்கு உறவினர்கள் சிரமப்படுகின்றனர். 
மேலும் அவர்கள் கலெக்டர் அலுவலகங்கள் மூலம் மனு கொடுத்து நடவடிக்கை எடுப்பதற்கும் தாமதம் ஏற்படுகிறது. இதனை தடுக்கும் வகையில் வெளியுறவுத்துறை அமைச்சகம் 
www.madad.gov.in என்ற புதிய இணையதளத்தை துவங்கியுள்ளது. இதில் வெளிநாடுகளில் வசிப்போர், தாங்கள் பாதிக்கப்படும்போது அங்கிருந்த படியே புகார் தெரிவிக்கலாம். 

மேலும் வெளிநாடுகளில் மாயமான, இறந்துபோன உறவினர்கள் குறித்தும் தெரிவிக்கலாம். இந்த புகார் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு, சம்பந்தப்பட்டோருக்கு தகவல் தெரிவிக்கப்படும்.

தலையங்கம்

தலையங்கம்

விற்பனைக்கு வருகிறார் ‘மகாராஜா’

மத்திய அரசாங்கம், மாநில அரசுகள் என இரு அரசுகளுக்கும் சொந்தமான பல பொதுத்துறை நிறுவனங்கள் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி, மக்களின் வரிப்பணத்தை விழுங்கிக்கொண்டிருக்கின்றன.

ஜூலை 01, 03:00 AM

மத்திய அரசாங்கம், மாநில அரசுகள் என இரு அரசுகளுக்கும் சொந்தமான பல பொதுத்துறை நிறுவனங்கள் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி, மக்களின் வரிப்பணத்தை விழுங்கிக்கொண்டிருக்கின்றன. ஒன்று இந்த நஷ்டத்தை சரிக்கட்டவேண்டும் அல்லது லாபகரமாக இயங்காவிட்டால், அதன் பங்குகளை தனியாருக்கு விற்று நஷ்டத்திலிருந்து தப்பித்துக்கொள்வதுதான் சாலச்சிறந்தது என்று நிபுணர்கள் கூறத்தொடங்கிவிட்டனர். பா.ஜ.க. அரசாங்கமும் இத்தகைய துணிச்சலான நடவடிக்கைகளை எடுக்கத்தொடங்கிவிட்டது. அத்தகைய ஒரு முடிவாக தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கிவரும் ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்றுவிடுவது என்ற வரவேற்கத்தக்க முடிவு மந்திரிசபை கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. ஏர் இந்தியா நிறுவனம் ஒரு ‘மகாராஜா’ வரவேற்பதுபோல வர்த்தக சின்னத்தைக்கொண்டதாகும். லாபத்தில் இயங்கும்வரைதான் அவர் மகாராஜாவாக இருக்கமுடியுமே தவிர, நஷ்டத்தில் இயங்கும்போது நிச்சயமாக மகாராஜாவாக இருக்க முடியாது.

1932–ம் ஆண்டில் தொழில் அதிபர் ஜே.ஆர்.டி. டாட்டா தொடங்கிய டாட்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்தை மத்திய அரசாங்கம் வாங்கியபிறகுதான், முதலில் இந்தியன் ஏர்லைன்ஸ், ஏர் இந்தியா நிறுவனமாக பரிணமித்து, பின்பு ‘ஏர் இந்தியா’ என்று ஒரே நிறுவனமாக இணைக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு விமான பயணத்தில் 14 சதவீதமும், வெளிநாட்டுக்கு செல்லும் பயணத்தில் 17 சதவீதமும் ஏர் இந்தியா விமானங்கள் மூலம்தான் நடந்துவருகிறது. ஏர் இந்தியா நிறுவனத்தின் சேவை தனியார் விமான சர்வீஸ் சேவையைவிட நிச்சயமாக உயர்ந்தது. தனியார் விமான சேவையில் ஒரு குறிப்பிட்ட விமானத்தில் போதிய அளவு பயணிகள் இல்லையென்றால், அந்த விமான சேவையை அன்று மட்டும் ரத்து செய்துவிட்டு, அதில் செல்ல டிக்கெட் எடுத்த பயணிகளை அடுத்த விமானத்தில் ஏற்றி அனுப்பிவிடுவார்கள். ஆனால், ஏர் இந்தியா விமானத்தில் ரத்து என்பதற்கே இடமில்லை. ஒரு பயணிதான் வருவதாக இருந்தாலும் விமானம் செல்லும். எனவே, பயணிகளுக்கு உறுதியான சேவை கிடைத்துவந்தது. இப்போது தனியாருக்கு விற்க முடிவெடுத்துள்ள நிலையில், இந்த உறுதியான சேவை குறித்து மத்திய அரசாங்கம் என்ன சொல்லப்போகிறது?.

தற்போது இந்த நிறுவனத்தின் கடன் ரூ.52 ஆயிரம் கோடியாகும். இனிமேலும் இந்த நஷ்டத்தை தாங்கமுடியாது என்றநிலையில், மத்திய அமைச்சரவைக்கூட்டம் இதுகுறித்து விவாதித்து ஏர் இந்தியா நிறுவனத்தையும், அதன் 5 துணை நிறுவனங்களையும் தனியாருக்கு விற்றுவிடுவது என்று முடிவு எடுத்தது. எவ்வாறு இந்த பங்குகளை விற்கலாம்?, 100 சதவீத பங்குகளையும் விற்றுவிடலாமா?, 75 சதவீத பங்குகளை விற்றுவிடலாமா?, அல்லது 51 சதவீத பங்குகளை மட்டும் விற்றுவிடலாமா? என்பது பற்றி முடிவு எடுக்க நிதி மந்திரி அருண் ஜெட்லி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இப்போதுள்ள சூழ்நிலையில், இண்டிகோ விமான நிறுவனம் ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்குவதற்கான விருப்பத்தை தெரிவித்துள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்திற்கு தற்போது 118 விமானங்கள் இருக்கின்றன. 41 நாடுகளுக்கும், உள்நாட்டில் 72 நகரங்களுக்கும் ஏர் இந்தியா விமானம் சென்றுவருகிறது. மத்திய அரசாங்கம் எடுத்துள்ள இந்த முடிவு நிச்சயமாக வரவேற்கத்தக்க ஒன்றாகும். எவ்வளவு ஆண்டுகள்தான் ஒரு நிறுவனம் நஷ்டத்தில் இயங்கும்?, எவ்வளவு காலம்தான் மக்களின் வரிப்பணத்தில் இருந்து அந்த நஷ்டத்தை ஈடுகட்டமுடியும்? என்பதையெல்லாம் கண்டிப்பாக யோசிக்கவேண்டும். இதுபோல, மத்திய அரசுக்கு சொந்தமான 277 பொதுத்துறை நிறுவனங்களிலும், தமிழக அரசுக்கு சொந்தமான 11 பொதுத்துறை நிறுவனங்களிலும் எந்தெந்த நிறுவனங்கள் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்குகிறதோ?, அந்த நிறுவனங்களை தனியாருக்கு விற்றுவிட்டு, அதில் கிடைக்கும் தொகையை மக்களுக்கான வளர்ச்சித்திட்டங்களுக்கு பயன்படுத்துவதில் அரசு அக்கறை காட்டவேண்டும்.

Friday, June 30, 2017

'முதுமையில் தனிமை' ஓர் ஆய்வு: வயதானவர்களுக்காக எந்த நாடும் இல்லை - இரண்டில் ஒருவர் தனிமையில்!

பிடிஐ


100 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டில் ஒவ்வொரு விநாடியும் மூத்த குடிமக்கள் தனிமையில் வாடுகிறார்கள். கிட்டத்தட்ட ஒவ்வொரு இரண்டாவது மூத்த குடிமகனுக்கும் தனிமையிலிருந்து தப்பமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக ''மாறும் தேவைகள் மற்றும் இந்தியாவில் முதியோர் உரிமைகள்'' என்ற புதிய ஆய்வு தெரிவிக்கிறது.

இந்தியா முழுவதும் 15 ஆயிரம் மூத்த குடிமக்களிடம் அகர்வால் ஃபவுண்டேஷன் ஆய்வு மேற்கொண்டது. அதன் அடிப்படையில் 47.49 சதவீதம் மூத்த குடிமக்கள் தனிமையில் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

நகரத்தில் அதிகம்

நகர்ப்புறத்தில் இந்நிலை மிகவும் மோசமாக உள்ளது. இங்குதான் 5000த்திற்கு 3,205 மூத்த குடிமக்கள் தனிமைத் துயரில் வாடுகிறார்கள்.
நகர்ப்புறப் பகுதிகளில் 64.1 சதவீதம் மூத்த குடிமக்கள் குடும்பத்தைவிட்டு பிரிந்து வாழ்வது கண்டறியப்பட்டுள்ளது. அதே சமயம் கிராமப் புறங்களில் 39.19 சதவீதம் (10 ஆயிரத்திற்கு 3919 கிராமப் பகுதியச் சார்ந்த மூத்த குடிமக்கள்) தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என ஆய்வு தெரிவிக்கிறது.

தனிமைக்குக் காரணம் யார்?

ஆனால் வயதான காலத்தில் இத்தகைய தனிமையின் கொடுமையை அனுபவிக்கும் நிலைக்குத் தள்ளிய காரணங்கள் என்ன? என்ற கோணத்திலும் ஆய்வு சென்றது.
இந்த கணக்கெடுப்பின்படி பதிலளித்தவர்களில் பெரும்பாலானவர்கள், தனிமையிலோ அல்லது துணையுடனோ வாழ்ந்து வருபவர்கள். மற்றவர்களுக்காக இப்படி இருப்பவர்கள்.
குடும்பத்தினரோடு பேச்சுவார்த்தையே இல்லாத நிலையில் இருப்பவர்கள் 27.3 சதவீதம். ஆரோக்கிய குறைபாடு உள்ளவர்கள் 19.06 சதவீதம். தனிமையை எதிர்கொள்ளவேண்டியநிலை மற்றும் சமூக நல்லுறவுக்கும், பரிவர்த்தனைக்கும் வாய்ப்பின்றி இருப்பவர்கள் 12 சதவீத மூத்தக்குடிமக்கள்.
36.78 சதவீதம் மூத்தக்குடிமக்கள் தனித்து வாழவோ அல்லது மனைவியுடன் தனிமையில் வாழும் நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்படுவதாகவோ தெரிவித்துள்ளார்கள்.

மனநல ஆலோசனைகள்

இந்தியாவில் ஒவ்வொரு ஐந்தாவது முதியவருக்கும் சில வகை மனநல ஆலோசனைகள் எவ்வாறு தேவைப்படுமென ஆய்வு தெரிவிக்கிறது.
ஆய்வின்போது பதிலளித்த 15,000 மூத்தக் குடிமக்கள் மொத்தத்திலும் 2,955 பேர் தங்கள் உறவினர்களிடமிருந்தோ அல்லது நண்பர்களிடமிருந்தோ ஆலோசனையை நாடியுள்ளனர். ஆனால் அதன்பிறகு மேலும் உளவியல் சிக்கல்களுக்கு தள்ளப்பட்டுள்ளதாக அந்த ஆய்வு வெளிப்படுத்துகிறது.

இத்தகைய பாதிப்புள்ளானவர்களில், நகர்ப்புற முதியவர்கள் (63.86 சதவீதம்) கிராமப்புறப் பகுதிகளைவிட (36.14 சதவீதம்) மனோதத்துவ ஆலோசனைகள் அதிகம் தேவைப்படுபவர்களாக உள்ளனர்.

இந்தியாவின் 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் 300 மாவட்டங்களில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் மூத்தக் குடிமக்களின் அவலநிலையை புள்ளிவிவரங்களோடு அறியமுடிந்தது.

பகலிலும் மோட்டார் சைக்கிள்களில் விளக்கு எரிவது ஏன்?


சமீபத்தில் நண்பர் ஒருவர் புதிதாக இரு சக்கர வாகனம் ஒன்றை வாங்கினார். மறுநாள் வீட்டிலிருந்து புறப்பட்டு அலுவலகம் செல்வதற்குள் குறைந்தது பத்து பேருக்காவது அவர் நின்று விளக்கம் அளிக்க வேண்டியதாயிற்று. பகலிலும் முகப்பு விளக்கு எரிந்தபடியே இருந்ததுதான் பிரச்சினை.

இதனால் மிகவும் சலிப்படைந்த அவர் மறுநாள் காலை முதல் வேலையாக வாகனத்தை வாங்கிய விற்பனையகத்துக்குச் சென்று விசாரித்த போதுதான், புதிதாக வரும் இருசக்கர வாகனங்கள் அனைத்திலும் இத்தகைய தொழில்நுட்பம் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என்ற அரசு உத்தரவு அவருக்கு புரிந்தது.பகலில் விளக்கு எரிவதால் பேட்டரியின் ஆயூள் காலம் குறையாது, எரிபொருளும் வீணாகாது என விற்பனையகத்தில் விளக்கம் அளித்திருக்கிறார்கள்.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு தயாரான அனைத்து இருசக்கர வாகனங்களிலும் இம்முறை கட்டாயமாக பின்பற்றப்படுகிறது. ஏஹெச்ஓ (All time Headlight On / Automatic Headlight On) எனப்படும் தானியங்கி முகப்பு விளக்கு ஒளிரும் நுட்பம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் வாகனத்தை ஸ்டார்ட் செய்தவுடன் முகப்பு விளக்கு ஒளி உமிழும். இதை அணைக்க வாகன ஓட்டி நினைத்தாலும் முடியாது. இரவு நேரங்களில் முகப்பு விளக்கு வெளிச்சத்தை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ மட்டும்தான் முடியும். அதற்கான ஸ்விட்ச் மட்டுமே இருக்கும்.
சாலை பாதுகாப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றம் நியமித்த குழ அளித்த பரிந்துரையின்படிதான் இந்த தொழில்நுட்பத்தை கட்டாயம் செயல்படுத்த வேண்டும் என்ற உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் 2003-ம் ஆண்டிலிருந்தே இது நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
சாலை விபத்துகளில் அதிக உயிரிழப்பு நிகழ்வது இரு சக்கர வாகனங்களால்தான். 2014-ம் ஆண்டில் மட்டும் 32,524 பேர் உயிரிழந்துள்ளனர். 1.27 லட்சம் பேர் காயமடைந்துள்ளனர்.

அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் முகப்பு விளக்கு ஒளிர்வதால் சாலை விபத்துகள் குறையும் என நிபுணர் குழு பரிந்துரைத்தது. இதன் அடிப்படையில் ஏஹெச்ஓ தொழில்நுட்பம் பின்பற்றப்படுவதாக வாகன தயாரிப்பாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

இனிமேல் இரு சக்கர வாகனங்களில் பகலில் விளக்கு எரிந்தால் கைகளால் சமிக்ஞை செய்து அவருக்கு உதவுவதாக நினைத்து செயல்பட வேண்டாம். விபத்தை தவிர்க்கவே விளக்கு எரிகிறது என்பது உணர்ந்து கொள்வதோடு இது கட்டாயம் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

NEWS TODAY 31.01.2026