Saturday, July 1, 2017

சொத்து முடக்கம்


மருத்துவ கல்லூரி சீட்டு மூலம் 91 கோடி பணம் பரிமாற்றம் வேந்தர் மூவிஸ் மதனின் 6.35 கோடி சொத்து முடக்கம்

2017-07-01@ 01:54:54

சென்னை: எஸ்ஆர்எம் மருத்துவ கல்லூரிக்கு மருத்துவ சீட்டு மூலம் 91 கோடி ரூபாய் பணம் பரிமாற்றம் செய்யப்பட்ட விவகாரத்தில் வேந்தர் மூவிஸ் மதனின் 6.35 கோடி மதிப்புள்ள அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை நேற்று முடக்கியது. எஸ்ஆர்எம் மருத்துவ கல்லூரி மோசடி வழக்கில் வேந்தர் மூவிஸ் உரிமையாளர் மதன் கடந்த ஆண்டு மே 27ம் தேதி மாயமானார். 179 நாட்களுக்கு பிறகு கடந்த நவம்பர் 21ம் தேதி திருப்பூரில் அவரது காதலி வர்ஷா வீட்டில் பதுங்கியிருந்தபோது மத்திய குற்றப்பிரிவு போலீசார் மதனை கைது செய்தனர். பின்னர் போலீசார் மதனை 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தினர். அதைதொடர்ந்து மதனுடன் நெருக்கமாக இருந்த இந்திய ஜனநாயக கட்சி நிர்வாகிகள் மற்றும் சினிமா தயாரிப்பாளர்களான அம்மா கிரியேஷன்ஸ் சிவா, பாலகுரு, பைனான்சியர் ராம் மற்றும் ராம் குமார், எஸ்ஆர்எம் பல்கலைக்கழக பதிவாளர் உள்ளிட்டோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். மேலும், எஸ்ஆர்எம் பல்கலைக்கழக வேந்தர் பச்சமுத்துவின் மகன்கள் ரவி பச்சமுத்து, சத்தியநாராயணன் ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து மதன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் 10 கோடி சொந்த ஜாமீனில் மதன் சில நாட்களுக்கு முன் வெளியே வந்தார்.எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக மருத்துவ சீட்டு விவகாரத்தில் 91 கோடி பணம் வருமான வரித்துறையிடம் எந்தவித கணக்கும் காட்டாமல் பரிமாற்றம் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் 91 கோடி பணம் பரிமாற்றம் செய்யப்பட்டது குறித்து அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து ஏராளமான ஆவணங்களை சேகரித்தனர். பின்னர், பணம் பரிமாற்றம் செய்யப்பட்டது தொடர்பாக வேந்தர் மூவிஸ் மதனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.  அதன்படி சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் மதன் அனைத்து ஆவணங்களுடன் கடந்த மே 22,  23ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது மருத்துவ சீட்டு விவகாரத்தில் ஒவ்வொரு மாணவர்களிடமும் 50 லட்சம் முதல் 1.5 கோடி வரை பணம் வசூலித்தது தெரியவந்தது. 

இதுபோல் 133 மாணவர்களிடம் வசூலிக்கப்பட்ட ₹91 கோடி பணம் மதன் வங்கி கணக்கு மற்றும் சட்டவிரோதமாக எஸ்ஆர்எம் பல்கலைக்கழக வேந்தர் பச்சமுத்து மற்றும் பல்கலைக்கழக வங்கி கணக்குகளுக்கு பரிமாற்றம் செய்யப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டது.  இந்த பணத்திற்கான முறையான வருமான வரி செலுத்தப்படவில்லை. இதன் மூலம் மத்திய அரசுக்கு வரி ஏய்ப்பு செய்ததும் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மே 23ம் தேதி விசாரணை முடிவில் வேந்தர் மூவிஸ் மதனை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது ெசய்தனர். இந்நிலையில் 91 கோடி பணத்தை சட்ட விரோதமான பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டது தொடர்பாக வேந்தர் மூவிஸ் மதனுக்கு சொந்தமான சென்னை வடபழனி கானாப்பா நாயுடு தெருவில் உள்ள அடுக்குமாடி வீடு, சாலிகிராமம் என்.எஸ்.கே. சாலையில் உள்ள நிலம் மற்றும் கேரளாவில் உள்ள இரண்டு அசையா சொத்துக்கள் என மொத்தம் 6.35 கோடி மதிப்புள்ள சொத்துக்களை நேற்று அமலாக்கத்துறை முடக்கியது.

ஆகாயம் ஆளும் இண்டிகோ

விகடன்

ஆகாயம் ஆளும் இண்டிகோ... அதை அண்ணாந்து பார்க்கும் ஏர் இந்தியா!

 எம்.குமரேசன்

நேற்று பிறந்தவனெல்லாம் இன்றைக்கு `என்னை மிரட்டுறியா?' எனக் கேட்பதுபோல் இருக்கிறது ஏர் இந்தியா - இண்டிகோ கதை!

இந்தியாவின் முதல் விமான நிறுவனம் Air India. `டாடா ஏர்லைன்ஸ்' என்ற பெயரில் 1946-ம் ஆண்டு தொடங்கப்பட்டு, பிறகு 1953-ம் ஆண்டு தேசியமயமாக்கப்பட்டது. 1994-ம் ஆண்டு நரசிம்மராவ் ஆட்சிக்காலத்தில் பொருளாதாரத் தாராளமயமாக்கத்தால் தனியார் விமான நிறுவனங்களும் இந்தியச் சந்தைக்குள் நுழைந்தன. தனியார் நிறுவனங்கள் தந்த போட்டியை Air India நிறுவனத்தால் சமாளிக்க முடியவில்லை. தற்போது வரை ஏர் இந்தியாவுக்கு 60 ஆயிரம் கோடி  ரூபாய் கடன் இருக்கிறது. இதில், வங்கிக்கடன் 52 ஆயிரம் கோடி ரூபாய். பெட்ரோல் வாங்கிய வகையில் விமானக் கட்டுப்பாட்டு ஆணையத்துக்கு 8 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பாக்கி வைத்திருக்கிறது. 

அரசு வழங்கும் 30 ஆயிரம் கோடி ரூபாய் மானியத்தில்தான் Air India நிறுவனம் இயங்கிவருகிறது. இரு நாள்களுக்கு முன், ஏர் இந்தியாவை தனியார்வசம் ஒப்படைக்க மத்திய அமைச்சரவை முடிவுசெய்தது. அதன்படி, அந்த விமான நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்ட மத்திய அரசின் பங்குகள் திரும்பப்பெறப்பட உள்ளன. இந்த நிறுவனத்துக்கு உள்ள சொத்துகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்கப்படவிருக்கிறது.

ஏர் இந்தியாவை வாங்க டாடா நிறுவனமும் இண்டிகோ நிறுவனமும் ஆர்வம்காட்டியுள்ளன. இண்டிகோ நிறுவனத் தலைவர் ஆதித்யா கோஷ் நிதியமைச்சகத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில், `ஏர் இந்தியாவின் சர்வதேச மார்க்கங்களையும், குறைந்த கட்டணச் சேவையான `ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' மார்க்கங்களையும் வாங்க ஆர்வம்' எனத் தெரிவித்துள்ளார். ஒருவேளை இது சாத்தியமற்றதாக இருந்தால், Air India நிறுவனத்தையே வாங்கிக்கொள்ள இண்டிகோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 

சரி... Air India நிறுவனத்தையே வாங்கும் அளவுக்கு வளர்ந்து நிற்கும் இண்டிகோ நிறுவனத்தின் பின்னணி என்னவென்று ஆராய்ந்தால், கடந்த 2006-ம் ஆண்டுதான் இந்த நிறுவனமே தொடங்கப்பட்டுள்ளது. `இன்டர்குளோப் என்டர்பிரைசஸ்' தலைவர் ராகுல் பாட்டியா, அமெரிக்கத் தொழிலதிபர்  Caelum Investments ரகேஷ் கங்வால் ஆகியோர் இணைந்து இந்த நிறுவனத்தைத் தொடங்கினர். 

2006-ம் ஆண்டு ஆகஸ்ட் 4-ம் தேதி டெல்லியிலிருந்து இம்பாலுக்கு இண்டிகோவின் முதல் விமானம் கவுஹாத்தி வழியாகப் பறந்தது. இரு பெரிய நகரங்களுக்கு இடையே உள்ள குட்டி நகரங்களை இணைத்தே இண்டிகோ இந்தியச் சந்தையை வசப்படுத்தத் தொடங்கியது. கட்டணமும் குறைவு.  உள்நாட்டில் சேவை வழங்கி ஐந்து ஆண்டுகள் கழித்துத்தான் இண்டிகோவுக்கு சர்வதேச மார்கத்தில் விமானங்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டது. 2010-ம் ஆண்டு ஏர் இந்தியாவைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு உள்நாட்டுச் சந்தையில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது. இண்டிகோவின் உள்நாட்டுச் சந்தை அப்போது 17.3 சதவிகிதமாக இருந்தது. முதல் இடத்தில் விஜய்மல்லையாவின் கிங் ஃபிஷர், அடுத்த இடத்தில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனங்கள் இருந்தன.

2012-ம் ஆண்டு 50 விமானங்களுடன் உள்நாட்டுச் சந்தையில் முதல் இடத்தில் இருந்த ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தைப் பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தைப் பிடித்தது இண்டிகோ. தற்போது உள்நாட்டுச் சந்தையில் 41.2 சதவிகிதத்தை இண்டிகோ தக்கவைத்திருக்கிறது. இரண்டாவது இடத்திலுள்ள ஜெட் ஏர்வேஸ் உள்நாட்டுச் சந்தை மதிப்பு வெறும் 17 சதவிகிதம்தான். மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் இது. ஒரு மாதத்தில் இண்டிகோ விமானங்களில் 35 லட்சம் பேர் பறந்தால், ஜெட் ஏர்வேஸில் 13 லட்சம் பேர்தான் பறக்கின்றனர்.

பணமதிப்பு அறிந்து நடப்பது, குறித்த நேரம், வாடிக்கையாளர்கள் மனம் கோணாமல் நடப்பது இண்டிகோவின் வெற்றிக்கு முக்கியக் காரணங்கள். குறைந்த கட்டணத்தில் நிறைவான சேவை அளிக்கும் நிறுவனமாக இதை வாடிக்கையாளர்கள் பார்க்கின்றனர். இண்டிகோவைப் பொறுத்தவரை, 180 இருக்கைகள்கொண்ட விமானங்களைத்தான் இயக்குகிறது. முதல் வகுப்பு, பிசினஸ் வகுப்பு டிக்கெட்டுகள் எல்லாம் கிடையாது. பெரும்பாலான சேவைகளில் உணவும் வழங்கப்படாது. தற்போது இந்தியாவின் 48 நகரங்களுக்கும் 7 சர்வதேச மார்க்கங்களிலும் இண்டிகோ விமான சேவை வழங்குகிறது. 

தொடங்கிய பத்து ஆண்டுகளில் வாடிக்கையாளர் சேவை, நற்மதிப்பு போன்றவற்றால் உள்நாட்டு விமானச் சந்தையில் இண்டிகோ `மோனோபொலி ' ஆகியிருக்கிறது. ஏர் இந்தியாவோ நிர்வாகக் குளறுபடிகளால் பாரம்பர்யத்தை இழந்து விற்பனைக்கு வந்து நிற்கிறது.

அலுவலக இடமாற்றம்

ஓய்வூதிய அலுவலக முகவரி மாற்றம்

2017-07-01@ 04:50:38

சென்னை: சென்னையில் உள்ள கருவூலம் மற்றும் கணக்கு துறை ஆணையர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கருவூலக் கணக்கு துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்ற ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் தற்போதுள்ள ஈ.வெ.கி. சம்பத் மாளிகை, டிபிஜ வளாகம், கல்லூரி சாலை, சென்னை-06 என்ற முகவரியில் இருந்து ஒருங்கிணைந்த நிதித்துறை அலுவலகக் கட்டிடம் (தரைத்தளம்), 571, அண்ணா சாலை, நந்தனம், கால்நடை மருத்துவமனை வளாகம், சென்னை-35 என்ற புதிய முகவரியில் நாளை மறுதினம் (3ம் தேதி) முதல் இயங்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தக்காளி விலை கிடு கிடு உயர்வு

தக்காளி விலை ரூ.100 : டில்லியில் 'கிடுகிடு' உயர்வு

பதிவு செய்த நாள்

30ஜூன்
2017 
23:46

புதுடில்லி: வட மாநிலங்களில், கடும் கோடைக்குப் பின் கொட்டித் தீர்க்கும் கனமழை காரணமாக, வரத்து குறைவு காரணமாக, டில்லியில் ஒரு கிலோ தக்காளி, 100 ரூபாயாக உயர்ந்துள்ளது.

டில்லியில், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த, அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக உள்ளார். இவ்வார துவக்கத்தில், டில்லியில் சில்லரை விற்பனை கடைகளில், ஒரு கிலோ தக்காளி, 40 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வரத்து குறைந்ததால், தக்காளியின் விலை, 80 ரூபாய் வரை உயர்ந்தது. இரு தினங்களில், 100 ரூபாய் வரை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

ஆசாத்பூர் காய்கறி மண்டி வியாபாரிகள் கூறியதாவது: தக்காளி விளையும் ஹரியானா, ராஜஸ்தான், பஞ்சாப் போன்ற மாநிலங்களில், கடும் கோடைக்குப் பின், தற்போது கனமழை பெய்து வருகிறது. இதனால், தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. டில்லியில் விற்பனை செய்யப்படும் தக்காளி ஹரியானா மாநிலத்தில் இருந்து வருகிறது. தினமும், 100 லாரிகள் வருவதற்கு பதில், 60 லாரிகளே வருவதால் தக்காளியின் விலை உயர்ந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

சித்தா ஆயுர்வேத படிப்பு விண்ணப்பம்

சித்தா, ஆயுர்வேத படிப்புக்கு விண்ணப்பம் எப்போது?

பதிவு செய்த நாள்

01ஜூலை
2017 
00:41

'அரசு அனுமதி கிடைத்ததும், சித்தா, ஆயுர்வேத படிப்பு களுக்கான விண்ணப்ப வினியோகம் துவங்கும்' என, மாணவர் சேர்க்கை குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, 'நீட்' தேர்வு அடிப்படையில் நடைபெற உள்ளது. ஆனால், சித்தா உள்ளிட்ட இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கு, இந்தாண்டு, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. 'நீட்' தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள், தேர்வு எழுதாதவர்கள், இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு உள்ளது. அதனால், இதற்கான விண்ணப்ப வினியோகம் எப்போது துவங்கும் என்ற எதிர்பார்ப்பு, மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இது குறித்து, மாணவர் சேர்க்கை குழு அதிகாரிகள் கூறியதாவது: இந்திய மருத்துவ முறை படிப்புகள் உள்ள கல்லுாரிகளுக்கு, ஆயுஷ் அமைச்சகம் அனுமதி வழங்குகிறது. இதுவரை, அனுமதி பெற்ற கல்லுாரிகள் பட்டியலை வெளியிடவில்லை. இருப்பினும், விண்ணப்ப வினியோகம் குறித்த அறிவிக்கை, தயார் நிலையில் உள்ளது. அரசின் அனுமதி கிடைத்ததும், 
வினியோகம் துவங்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

சுகாதாரத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'தற்போதைய சூழலில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை முடிந்த பிறகே, இந்திய மருத்துவ முறை படிப்புக்கான விண்ணப்ப வினியோகம் துவங்கும்' என்றார்.

- நமது நிருபர் -

குழந்தை கடத்தல்

திருப்பதியில் காணாமல் போன குழந்தை மீட்பு : கடத்திய கள்ளக்காதல் ஜோடி போலீசில் சரண்

பதிவு செய்த நாள்

01ஜூலை
2017 
00:14

ராசிபுரம்: திருப்பதியில் காணாமல் போன ஆண் குழந்தையை, கடத்திய கள்ளக்காதல் ஜோடி நாமக்கல் அருகே, போலீஸ் ஸ்டேஷனில், குழந்தையுடன் சரணடைந்தது.

ஆந்திர மாநிலம், ஆண்டாபுரம் மாவட்டம், உருவகொண்டாவை சேர்ந்த கூலித்தொழிலாளி வெங்கடேசா, 35. இவர், கடந்த, 14ம் தேதி திருப்பதிக்கு தன் குடும்பத்துடன் சென்றார். 
இவருடைய, ஒன்பது மாத ஆண் குழந்தை சென்னகேசவலு, கோவில் வளாகத்தில் தவழ்ந்து விளையாடிய போது மாயமானது. இது குறித்து, வெங்கடேசா, திருமலை போலீசில் புகார் செய்தார். 15, தனிப்படை அமைத்து, குழந்தையை தேடி வந்தனர்.கடந்த, 14ம் தேதி திருமலையில் இருந்த வீடியோ கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில், வாலிபர் ஒருவர் குழந்தையை துாக்கிச் சென்றது தெரிந்தது. 

வீடியோ பதிவு : மேலும், பல்வேறு வீடியோ பதிவில், அந்த நபர் சுடிதார் போட்ட பெண்ணுடன் வந்ததும், தொடர்ந்து குழந்தையை துணியால் மூடி, துாக்கிச் சென்றதும் தெரிந்தது. இதையடுத்து, அந்த வீடியோ பதிவுகள், 'டிவி' மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டன.
இந்நிலையில், நேற்று காலை, 11:00 மணிக்கு, நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே, பேளுக்குறிச்சி போலீஸ் ஸ்டேஷனுக்கு, குழந்தையுடன் வந்த தம்பதி சரண் அடைந்தனர். போலீசார் விசாரணையில், ராசிபுரம் அடுத்த, சிங்களாந்தபுரத்தைச் சேர்ந்த கட்டட மேஸ்திரி அசோக், 24, அவரது கள்ளக்காதலி தங்காயி, 24, என்பது தெரிந்தது. கடந்த, 14ல் திருப்பதி சென்ற போது, அங்கு தவழ்ந்து விளையாடிக்கொண்டிருந்த ஆண் குழந்தையை, துாக்கி வந்ததாக, போலீசாரிடம் தெரிவித்தனர். பின், குழந்தையை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

நாமக்கல் எஸ்.பி., அருளரசு, ஆந்திரா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தனிப்படை போலீசார் பேளுக்குறிச்சி வந்து குழந்தையை பெற்றுக்கொண்டனர். அசோக், தங்காயி ஜோடியை கைது செய்து, ஆந்திரா மாநிலத்துக்கு அழைத்து சென்றனர். அவர்கள் மீது வழக்குபதிவு செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று மாலை, திருமலை போலீசார், குழந்தை சென்னகேசலுவை திருமலைக்குகொண்டு வந்து, குழந்தையின் பெற்றோரிடம் 
ஒப்படைத்தனர்.

கள்ளத்தொடர்பு : இது குறித்து, போலீசார் கூறியதாவது: குழந்தை கடத்தப்பட்ட சம்பவத்தில், 'வீடியோ புட்டேஜ்' சமூக வலைதளங்களில் வெளியானது. அதை பார்த்த கள்ளக்காதல் ஜோடி, போலீசில் குழந்தையை ஒப்படைத்து, சரணடைந்தனர். திருமணமாகாத அசோக்குக்கு, கட்டட வேலைக்கு செல்லும் போது, தங்காயி உடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.அந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி, இரு பெண் குழந்தைகள் உள்ளன. கணவர், குழந்தைகளை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்த அவர், கடந்த, ஒன்றரை ஆண்டாக, சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களில், அசோக்குடன் வேலை செய்து வந்தார். தற்போது, சொந்த ஊருக்கு வர திட்டமிட்டதால், 'குழந்தையுடன் சென்றால் தான், தம்பதியாக ஊரில் ஏற்றுக் கொள்வர்' என, முடிவு செய்து, திருப்பதி கோவிலுக்கு சென்று, அங்கிருந்து குழந்தையை கடத்தி வந்துள்ளனர். திருப்பதி குழந்தை திருட்டு குறித்து வேகமாக தகவல் பரவியதால், போலீசாருக்கு பயந்து குழந்தையை ஒப்படைத்துள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Doctors News

அரசு மருத்துவமனைக்கு புதிய டீன் யார் போட்டி போடும் டாக்டர்கள்

பதிவு செய்த நாள்

01ஜூலை
2017 
01:07

மதுரை, மதுரை அரசு மருத்துவமனையில் டீன் வைரமுத்து ராஜூ ஓய்வு பெற்றதையொட்டி பிரிவு உபசார விழா நடந்தது. புற்றுநோய் அறுவை சிகிச்சை துறை தலைவர் ரமேஷ் வரவேற்றார்.
டீன் பேசியதாவது: மூளைச்சாவு அடைந்தவர்களிடம் உறுப்புகளை தானம் பெற்று நோயாளிகளுக்கு பொருத்தும் அறுவை சிகிச்சையை இம்மருத்துவமனையில் செய்துள்ளதன் மூலம், சென்னை அரசு மருத்துவமனைகள் மட்டுமே இச்சிகிச்சையை செய்ய முடியும் என்ற நிலை மாறியுள்ளது. இங்குள்ள எம்.பி.பி.எஸ்., இடங்களின் எண்ணிக்கையை 150லிருந்து 250ஆக அதிகரிக்கும் அளவுக்கு கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. அதற்கேற்றவாறு பேராசிரியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
அரசின் சிறந்த டாக்டர்கள் விருது பெற்ற காந்திமதிநாதன், விஸ்வநாத பிரபு, யோகவதி கவுரவிக்கப்பட்டனர். தலைமை இ.எஸ்.ஐ., மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் கபாலீஸ்வரி,டாக்டர்கள் செந்தில், புகழேந்தி, வசந்தமாலை, விஜயலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
புதிய டீன் யார்
டீன் பதவி பெற டாக்டர்கள் சிலருக்கு இடையே போட்டி 
நிலவுகிறது. இதற்கிடையே பொறுப்பு டீனாக பொது அறுவை சிகிச்சை துறை தலைவர் மருதுபாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் இரண்டாவது பெரிய மருத்துவமனையாக திகழும் இம்மருத்துவமனைக்கு விரைவில் நிரந்தர டீன் ஒருவரை நியமிப்பதே சிக்கலின்றி நிர்வாகத்தை நடத்த 
உதவும்.

NEWS TODAY 31.01.2026