Sunday, July 2, 2017

பட்டப்பகலில் பெண்ணிடம் நகை பறிப்பு

By DIN  |   Published on : 02nd July 2017 05:36 AM  
சென்னை ஜெ.ஜெ.நகரில் பட்டப்பகலில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் நகை பறித்துச் சென்றனர்.
சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்தவர் சுமித்ரா ( 39). இவர் செல்லிடப்பேசி கடை வைத்துள்ளார். இவரது மகள் ஜெ.ஜெ.நகர் கிழக்குப் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார். வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் சுமித்ரா, தனது மகளை பள்ளியில் இருந்து வீட்டுக்கு அழைத்து வந்து கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 இளைஞர்கள், அவர் அணிந்திருந்த தங்க சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர். இது குறித்து தகவல் அறிந்த ஜெ.ஜெ.நகர் போலீஸார், சம்பவம் நடந்த சாலையில் உள்ள ஒரு கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில் கொள்ளையர்கள் நகையை பறித்த காட்சிகள் தெளிவாக பதிவாகி இருந்தன. இதை வைத்து போலீஸார் கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.
ஏர் இந்தியாவுக்கு டாட்டா!

By ஆசிரியர் | Published on : 30th June 2017 03:31 AM


ஏர் இந்தியாவை தனியார்மயமாக்குவது என்கிற முடிவு குறித்த தொடர் நடவடிக்கைகளை எடுப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது.\

1991-இல் உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் கொள்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டதன் தொடர்ச்சியாக அதுவரை பொதுத்துறைகள் மட்டுமே செயல்பட்டுவந்தது போய் அதனுடன் போட்டிபோட தனியார் துறைக்கும் அனுமதி வழங்கப்பட்டது. தனியார் துறையின் செயல்திறமையுடன் போட்டிபோடும்போது அரசின் பொதுத்துறை மேம்பாடு அடையும் என்று கூறப்பட்டது. ஆனால் அரசுத்துறைகள் தனியார் துறையின் தீமைகளை எல்லாம் கிரகித்துக்கொண்டன என்பதும், தனியார் துறை அரசுத்துறைக்கு நியாயமாக கிடைத்திருக்க வேண்டிய வருவாயை எல்லாம் விழுங்கி லாபம் சம்பாதித்தது என்பதும்தான் நிதர்சன உண்மை. இதற்கு இந்திய விமானத் துறை ஓர் எடுத்துக்காட்டு.

1950-இல் நீதிபதி ஜி.எஸ். ராஜத்யக்ஷா தலைமையில் விமானப் போக்குவரத்து விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் 372 பக்க அறிக்கையில் 'விமானப்போக்குவரத்து என்பது மிக அதிகமான தொழில்நுட்பத்துடன் கூடிய தனித்தன்மையுடைய துறை. அரசுத்துறையின் மெத்தனமான செயல்பாடும் அதிக அளவிலான கட்டுப்பாட்டுடன் கூடிய நிர்வாக முறைகளும் அந்தத் துறைக்கு ஒத்துவராது' என்று தெளிவாகவே தெரிவித்திருந்தது.
நீதிபதி ராஜத்யக்ஷா அறிக்கையைப் புறக்கணித்து, அரசியல் அழுத்தத்தின் காரணமாக விமானப் போக்குவரத்துச் சட்டம் 1953 நிறைவேற்றப்பட்டது. அதன் மூலம் டாடா ஏர்லைன்ஸ், அரசும் டாடா நிறுவனமும் இணைந்து நடத்திய ஏர் இந்தியா இன்டர்நேஷனல், ஏர் சர்வீஸஸ் ஆப்இந்தியா, ஏர்வேஸ் இந்தியா, பாரத் ஏர்வேஸ், டெக்கான் ஏர்வேஸ், ஹிமாலயன் ஏவியேஷன், இந்தியன் நேஷனல் ஏர்வேஸ், கலிங்கா ஏர்லைன்ஸ் ஆகிய நிறுவனங்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு உள்நாட்டு சேவைக்கு இந்தியன் ஏர்லைன்ஸும் பன்னாட்டு சேவைக்கு ஏர் இந்தியாவும் அரசுத் துறை விமானப்போக்குவரத்து நிறுவனங்களாக ஏற்படுத்தப்பட்டன.
போட்டியில்லாத அரசுத் துறை நிறுவனமாக இருந்தது வரை ஏர் இந்தியா லாபகரமாகவும் இந்தியன் ஏர்லைன்ஸ் மிகப்பெரிய இழப்பில்லாத நிலையிலும் தொடர்ந்து வந்தது. 1994-இல் அன்றைய நரசிம்ம ராவ் அரசு விமானப் போக்குவரத்துச் சட்டத்தில் மாற்றங்கள் செய்து தனியார் துறைக்கும் அனுமதி அளித்தது. அப்படி அனுமதியளித்தபோதே வெளிநாட்டு விமானப்போக்குவரத்து நிறுவனங்களுக்கும் விமானப்போக்குவரத்தில் அந்நிய முதலீட்டுக்கும் அனுமதியளித்திருக்க வேண்டும். அப்படி அளிக்காமல்போனதால் அந்தத் துறையைத் திறமையாக நிர்வகிக்கும் சிறப்பறிவுத் திறன் (எக்ஸ்பர்டஸ்) கிடைக்கவில்லை என்பதுடன் போதிய முதலீடும் வராமல் போனது. அப்போதிருந்து ஏர் இந்தியா நிறுவனத்தின் அதிவேக வீழ்ச்சி தொடங்கியது.

நரசிம்ம ராவ் அரசு விமான போக்குவரத்தில் தனியார்துறையை அனுமதித்த ஒரு சில ஆண்டுகளிலேயே ஏர் இந்தியா, இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனங்களை தனியார்மயப்படுத்தியிருந்தால் பல்லாயிரம் கோடி ரூபாய் மக்களின் வரிப்பணம் வீணாகியிருக்காது. 2007-08 நிதியாண்டிலிருந்து தொடர்ந்து ஒவ்வோர் ஆண்டும் ஏர் இந்தியா நிறுவனம் இழப்பில்தான் இயங்கிவருகிறது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் ஏர் இந்தியா நிறுவனத்தின் நிகர இழப்பு ரூ.6,879 கோடி, ரூ.5,879 கோடி, ரூ.3,836 கோடி.

இந்த இழப்பால் பாதிக்கப்படுவது 31 அரசு வங்கிகளின் பங்குதாரர்களும் வைப்புநிதியில் பணம் போட்டு இருப்பவர்களும்தான். இதுபோதாது என்று 2012-இல், பேரிழப்பை சந்தித்துக் கொண்டிருக்கும் ஏர் இந்தியா நிறுவனத்தை மீட்டெடுக்கும் நோக்கத்துடன் அடுத்த 9 ஆண்டுகள் அந்த நிறுவனத்துக்கு ரூ.30,730 கோடி நிதியுதவி அளிப்பது என்று மத்திய அரசு முடிவு செய்தது. இதுவரை ரூ.25,000 கோடி ரூபாய் மத்திய அரசு நமது வரிப்பணத்திலிருந்து ஏர் இந்தியா நிறுவனத்திற்கு வாரிவழங்கியிருப்பதுதான் மிச்சம். நிலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. 31 நிதி நிறுவனங்களுக்கு ஏர் இந்தியா தர வேண்டிய நிலுவையிலுள்ள தொகை ரூ.46,570 கோடி.

இந்திய விமானப் போக்குவரத்தில் தனியுரிமை பெற்றிருந்த ஏர் இந்தியா நிறுவனத்தின் இன்றைய பங்கு வெறும் 14 விழுக்காடு மட்டுமே. தனியார் நிறுவனங்கள் 86 விழுக்காடு விமானப் போக்குவரத்து சேவையை ஈடுகட்டுகின்றன. இந்த நிலையில் 14 விழுக்காடு சேவையை மட்டுமே பூர்த்தி செய்யும் ஏர் இந்தியா நிறுவனத்தை மக்களின் வரிப்பணத்தில் ஈடுகட்டிக்கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை நாம் எப்போதோ உணர்ந்திருக்க வேண்டும்.

சக்கரம் மீண்டும் சுழன்று இப்போது ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை வாங்கிக்கொள்ள சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து டாடா நிறுவனம் முன்வந்திருப்பதாக தெரிகிறது. டாடா நிறுவனத்தால் தொடங்கப்பட்ட ஏர் இந்தியா மீண்டும் டாடா நிறுவனத்திற்கே செல்வதும் அதன் மூலம் இந்திய மக்களின் வரிப்பணம் இனியும் வீணாக்கப்படாமல் தடுக்கப்படுவதும் வரவேற்புக்குரியது.
இந்த ஒப்பந்தம் மாருதி சுசுகி பாணியிலான வெளிப்படைத்தன்மையுள்ள, படிப்படியான தனியார்மயமாக இருத்தல் அவசியம். இன்றைய நிலையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் சொத்து மதிப்பு என்ன, அதனுடைய வணிகத் தர மதிப்பு, ஊழியர்களின் நிலை உள்ளிட்டவை வெளிப்படைத்தன்மையுடன் மக்கள் மன்றத்திற்குத் தெரியப்படுத்த வேண்டும். டாடா நிறுவனத்துடன் மட்டுமே பேசி ஒப்பந்தம் செய்யாமல், சர்வதேச அளவில் ஒப்பந்தப் புள்ளி கோரினாலும் தவறில்லை.

வரத்து குறைவால் சின்ன வெங்காயம் விலை உயர்வு: ஆக.15 வரை நீடிக்கும் என தகவல்

By DIN | Published on : 02nd July 2017 12:23 AM |

வரத்து குறைந்ததால் சின்ன வெங்காயம் விலை கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆகஸ்ட் 15 வரை இந்த நிலை நீடிக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

விருதுநகர் மாவட்டம் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் தற்போது சின்ன வெங்காய வரத்து குறைந்துள்ளது. தமிழகத்தில் சத்தியமங்கலம், பொள்ளாச்சி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய கேரளா மற்றும் ஆந்திர பகுதிகளில் ஆண்டு தோறும் அதிகளவு சின்ன வெங்காயம் பயிரிடப்படும். கடந்தாண்டு மழை பொய்த்ததால், இப்பகுதியில் வெங்காய விவசாயம் பாதி அளவிற்கு குறைந்து விட்டது. மேலும், கோடை காலத்தில் அதிகளவு வெப்பம் காரணமாக எதிர்பார்த்த அளவு மகசூல் கிடைக்க வில்லை. இதனால், 100 மூட்டைகள் வர வேண்டிய இடத்தில் 50 மூட்டைகள் மட்டுமே வருகின்றன. இதன் காரணமாக சின்ன வெங்காயம் கிலோ ரூ. 120 வரை விற்பனை செய்யப்படுறது.

அதே சமயம் பல்லாரி வரத்து அதிகரித்துள்ளது. அது கிலோ ரூ. 20-க்கு விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் மட்டுமல்லாது, ஓட்டல் நடத்துபவர்களும் அதை வாங்கி பயன்படுத்த தொடங்கி விட்டனர். மேலும், சின்ன வெங்காயம் விலை உயர்வு ஆகஸ்ட் 15-ஆம் தேதி வரை குறைவதற்கான வாய்ப்பில்லை என விருதுநகர் மொத்த வெங்காய வியாபாரிகள் தெரிவித்தனர்.
காலவரையற்ற வேலை நிறுத்தம் அரசு ஊழியர் சங்கம் எச்சரிக்கை

பதிவு செய்த நாள்01ஜூலை
2017
18:46

சென்னை, 'ஜூலை மாதத்திற்குள், ஊதிய மாற்றம் வராத நிலையில், பேச்சின் போது ஒப்புக்கொண்டபடி, 20 சதவீதம் இடைக்கால நிவாரணம் வழங்காவிட்டால், காலவரையற்ற வேலை நிறுத்தம் உறுதி' என, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சங்க பொதுச் செயலர் அன்பரசு விடுத்துள்ள அறிக்கை:அரசு ஊழியர்களின், ஊதிய மாற்றத்திற்காக அமைக்கப்பட்ட, அலுவலர் குழுவின் பதவிக்காலத்தை, மூன்று மாதங்களுக்கு நீட்டித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசுக்கு இணையான, அனைத்து படிகளையும் வழங்க வேண்டும். தமிழக அரசு ஊழியர்களுக்கான ஊதிய மாற்றத்தை, உடனே அமல்படுத்த வேண்டும்.
ஊதிய மாற்றம் ஏற்படும் வரை, தற்போது வாங்கும் ஊதியத்தில், 20 சதவீதத்தை, இடைக்கால நிவாரணமாக வழங்க வேண்டும் என்பது உட்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏப்., 25 முதல், காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தோம்.

போராட்டம் துவங்கிய இரண்டாம் நாள், அமைச்சர்கள் சங்க நிர்வாகிகளை அழைத்து பேசினர். அப்போது, ஜூலைக்குள், ஊதிய மாற்றம் செய்யப்பட்டு விடும் என, உறுதி அளித்தனர்.
ஜூன், 30க்குள்,அலுவலர் குழு பரிந்துரைகளை அளிக்காவிட்டால், 20 சதவீதம் இடைக்கால நிவாரணம் வழங்குவது குறித்து பரிசீலிப்பதாக தெரிவித்தனர்.

அதை ஏற்று, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், வேலை நிறுத்தப் போராட்டத்தை, தற்காலிக மாக நிறுத்தி வைத்தது. ஆனால், ஜூன், 30க்குள், அலுவலர் குழு, பரிந்துரை களை வழங்கவில்லை. எனவே, அரசு ஊழியர்களுக்கு, இடைக்கால நிவாரணமாக, 20 சதவீத ஊதியத்தை, ஜூலை, 17க்குள் வழங்க வேண்டும்.

இல்லையெனில்,தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட, வேலை நிறுத்தப் போராட்டத்தை, தமிழகம் முழுவதும் தொடர வேண்டிஇருக்கும்.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.




Advertisement
17 ல் ஓட்டு போட வருவாரா கருணாநிதி?

பதிவு செய்த நாள்01ஜூலை
2017
18:38



ஜனாதிபதி தேர்தலில் ஓட்டளிக்க, முன்னாள் முதல்வர் கருணாநிதி வருவாரா என்ற எதிர்பார்ப்பு, அனைத்து தரப்பினரிடமும் ஏற்பட்டுள்ளது.தி.மு.க., தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி, உடல் நலக்குறைவு காரணமாக, வீட்டிலேயே உள்ளார். கட்சிப் பணிகளில் இருந்து ஒதுங்கி உள்ளார். அவரை சந்திக்க, வெளிநபர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. அவரது உடல் நிலையில், முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக, குடும்பத்தினர் கூறி வருகின்றனர்.இந்நிலையில், வரும், 17ம் தேதி, ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஓட்டு அளிக்க, அவர் தலைமைச் செயலகம் வருவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அப்படியே அவர் வந்தாலும், ஜனாதிபதி தேர்தல் விதிமுறை யின் படி, அவருடன் உள்ளே யாரும் செல்ல முடியாது.உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி தான், அவருக்கு ஓட்டளிக்க உதவ முடியும். எனவே, அவர் ஓட்டளிக்க வருவது சிரமம் என்றே கூறப்படுகிறது. தற்போது, சென்னை,
ஆர்.கே.நகர் தொகுதி காலியாக உள்ளது.எனவே, ஜனாதிபதி தேர்தலில், 233 எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டளிக்க முடியும். கருணாநிதி வராவிட்டால், 232 பேர் மட்டுமே ஓட்டளிக்க வாய்ப்புண்டு.
- நமது நிருபர் -
சிவப்பு நிறமாக மாறிய சோறு அரிசியில் கலப்படமா
பதிவு செய்த நாள்01ஜூலை
2017
22:44




தேனி, தேனி அருகேசங்ககோணாம்பட்டியில், சமைத்து வைக்கப்பட்டிருந்த சோறு சிவப்பு நிறமாக
மாறியது. இதுகுறித்து அரிசிக் கடையில் அலுவலர்கள் ஆய்வு நடத்தினர்.சங்ககோணாம்பட்டியை சேர்ந்த விவசாயி நீலகண்டன். இவரது குடும்பத்தினருக்கு சில நாட்களாக வயிற்றுக் கோளாறு ஏற்பட்டுள்ளது; அதற்கான காரணம் தெரியவில்லை.நேற்று முன்தினம்,மீதமான சோற்றில் தண்ணீர் ஊற்றி வைத்தனர். நேற்று காலையில் பார்த்த போது சோறு சிவப்பு நிறத்தில் மாறி இருந்தது. இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் சுகுணாவிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. அலுவலர்கள் மோகன்தாஸ், சுரேஷ் கண்ணன் ஆகியோர் ஆய்வு செய்து, சிவப்பு நிறத்தில் இருந்த சோறு,அரிசியை பரிசோதனைக்காக எடுத்து சென்றனர்.தேனியில் அரிசி
வாங்கப்பட்ட கடையில் அலுவலர்கள் சோதனை செய்தனர். குறிப்பிட்ட ரகத்தை சேர்ந்த 56 அரிசி மூடைகள் பறிமுதல்செய்யப்பட்டன.உணவு பாதுகாப்புஅலுவலர் சுகுணாகூறுகையில், ''அரிசியில் ரசாயனம் கலந்திருந்தால் மட்டுமே சிவப்பு நிறம்ஏற்படும்.பரிசோதனைக்காக மாதிரி சேகரித்துள்ளோம். சோதனைக்குப் பிறகே
நிறத்திற்கான காரணம் தெரியும்,'' என்றார்.
ஆம்னி பேருந்து சர்வீஸ் திடீர் நிறுத்தம் நடுரோட்டில் பயணியர் தவிப்பு
பதிவு செய்த நாள்01ஜூலை
2017
19:53

சென்னை கோயம்பேட்டில் இருந்து, துாத்துக்குடி செல்ல வேண்டிய ஆம்னி பேருந்தின் சேவை, எந்த அறிவிப்பு மின்றி நிறுத்தப்பட்டதால், நள்ளிரவில் குழந்தைகளுடன் பயணியர் தவித்தனர்.

சென்னையில் இருந்து துாத்துக்குடிக்கு, ஜூன் 24ம் தேதி, 'ரெட் பஸ்' மூலம், 'ரம்யா டிராவல்ஸ்' பேருந்தில், பல பயணியர் முன்பதிவு செய்தனர். ஒரு டிக்கெட், 1,650 ரூபாய். 

நள்ளிரவு

இரவு, 10:25 மணிக்கு, கோயம்பேட்டில் இருந்து புறப்பட வேண்டிய பேருந்து, ஒரு மணிநேரம் தாமதமாக புறப்படும் என, டிராவல்ஸ் நிறுவனம் சார்பில், மொபைல்போன் மூலம் பயணியருக்கு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, 15க்கும் மேற்பட்ட பயணியர், தங்கள் குழந்தை மற்றும் பெட்டிகளுடன், நள்ளிரவு, 11:00 மணி முதல் காத்திருந்தனர்; ஆனால் பேருந்து வரவில்லை.

டிராவல்ஸ் நிறுவனத்தை தொடர்பு கொண்டால், அழைப்பை ஏற்கவில்லை. இதனால், பயணியர் செய்வதறியாது, நள்ளிரவு, 2:30 மணி வரை பேருந்துக்காக காத்திருந்து, நொந்து போய் திரும்பிச் சென்றனர்.

பாதிக்கப்பட்ட பயணியர் தரப்பில் கூறியதாவது:எந்தவொரு தகவலும் இல்லாமல், பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், நள்ளிரவு, 2:30 மணி வரை, கோயம்பேட்டில், குழந்தைகளுடன் தவித்தோம். பணிக்கான நேர்முகத்தேர்விற்கு
செல்ல இருந்த சிலரும்பாதிக்கப்பட்டனர்.

பதில் இல்லை

மறுநாள், ரம்யா டிராவல்சை தொடர்பு கொண்டு கேட்ட போது, 'தவறு நடந்துவிட்டது; உங்கள் பணத்துடன் நஷ்டஈடு வழங்குவோம். சில நாட்கள், பொறுத்துக் கொள்ளுங்கள்' எனக் கூறினர்.
ஆனால், இதுவரை பணம் வழங்கவில்லை. அவர்களை, மொபைல்போனில் தொடர்பு கொண்டால் பதிலளிப்பதில்லை.
எங்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சல், தவிப்பு, பணி பாதிப்பு ஆகியவற்றை முன்வைத்து, உரிய டிராவல்ஸ் மீது நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்கிறோம்.
 
இதுபோன்ற டுபாக்கூர் டிராவல்ஸ்களை, 'ரெட் பஸ்' நிறுவனத்தினர் உறுப்பினர்களாக சேர்க்க வேண்டாம் என்பதே, எங்களின் கோரிக்கை. எங்கள் பாதிப்பிற்கு, 'ரெட் பஸ்' நிறுவனமும் உரிய பதில் அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- நமது நிருபர் -

NEWS TODAY 31.01.2026