Wednesday, July 5, 2017

இரவில் திடீரென தீப்பிடித்து எரிந்த சிட்லப்பாக்கம் குப்பைக் கிடங்கு

2017-07-05@ 01:52:27



* தீயணைப்பு வீரர்கள் போராட்டம்
* புகை மண்டலத்தால் மக்கள் திணறல்

தாம்பரம்: சிட்லப்பாக்கத்தில் இரவில் திடீரென தீப்பிடித்து எரிந்த குப்பை கிடங்கால் புகை மண்டலம் ஏற்பட்டு பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டனர். தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தாலும் விடிய விடிய புகை மூட்டம் கிளம்பியதால் பரபரப்பு நிலவியது. சென்னை சிட்லப்பாக்கம், 2வது பிரதான சாலையில் சிட்லப்பாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட குப்பை கிடங்கு உள்ளது. குப்பை கிடங்கின் அருகில் பேரூராட்சி அலுவலகம், காவல் நிலையம், அரசு பள்ளிகள், சிட்லப்பாக்கம் பெரிய ஏரி மற்றும் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த குப்பை கிடங்கில் சிட்லப்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குப்பை கழிவுகள் அனைத்தும் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அருகில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் முதல் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் வரை என அனைத்து பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும் அருகில் உள்ள பெரிய ஏரியும் மாசடைந்து வருகிறது. சுற்றுப்புற நிலத்தடி நீரும் கெட்டு விட்டது. இதுதவிர குப்பை கிடங்கில் அடிக்கடி தீவிபத்துகள் ஏற்படுவதால் இப்பகுதி முழுவதும் புகை சூழ்ந்து சுவாச கோளாறு, சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு குப்பை கிடங்கு திடீரென தீப்பிடித்துஎரிய தொடங்கியது. பின்னர் மளமளவென தீ குப்பைக்கிடங்கு முழுவதும் பரவியதால் அப்பகுதி முழுவதும் புகை சூழ்ந்தது. இதனால் வாகன ஓட்டிகள், சுற்றுப்புற குடியிருப்புவாசிகள் என அனைவருக்கும் மூச்சு திணறல், கண் எரிச்சல் உள்ளிட்ட பாதிப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தாம்பரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்ததின் பேரில் அங்கிருந்து 2 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள்
தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இரண்டு வாகனங்களால் அணைக்க முடியாததால் மேலும் தண்ணீர் லாரிகள் வரவழைக்கப்பட்டு சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனாலும், நேற்று காலையிலும் குப்பைக் கிடங்கில் இருந்து தொடர்ந்து புகை வந்து கொண்டிருந்ததால் வாகனஓட்டிகள் அந்த பகுதியை கடந்து செல்வதற்கு மிகவும் சிரமப்பட்டனர்.

அடிக்கடி எரியும் மர்மம் என்ன?

சிட்லபாக்கம் குப்பை கிடங்கு அடிக்கடி தீப்பிடித்து எரியும் மர்மம் பற்றி அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், ‘‘சிட்லபாக்கம் குப்பை கிடங்கில் அடிக்கடி தீப்பிடித்து எரிகிறது. இது, மர்மமாக இருக்கிறது. இதுகுறித்து பேரூராட்சி அலுவலகத்தில் பலமுறை நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளித்தாலும் நடவடிக்கை எடுக்கவில்லை. சமூகவிரோதிகள்தான் இந்த செயலை செய்து வருகிறார்கள் என்கின்றனர். ஆனால், உண்மையில் இந்த குப்பை கிடங்கில் அதிக அளவில் சேரும் குப்பையை யாருக்கும் தெரியாமல் பேரூராட்சி நிர்வாகமே தொடர்ந்து அடிக்கடி தீவைத்து எரித்து விடுவதாக சந்தேகம் எழுகிறது. இதுபோன்று அவர்கள் தொடர்ந்து செய்து வருவதால் சுற்றுப்புற பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறோம்’’ என்றனர்.
ஸ்ரீபெரும்புதூர் - தாம்பரம் வழித்தடத்தில் புறநகர் மக்களுக்காக இயக்கிய மாநகர பஸ் திடீர் நிறுத்தம் 
 
2017-07-05@ 01:53:39

சென்னை: சென்னை புறநகர் பகுதி மக்கள் வசதிக்காக இயக்கப்பட்டு வந்த மாநகர பஸ் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது தொழிலாளர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் ஏராளமான பன்னாட்டு தனியார் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த தொழிற்சாலைகளில் பிள்ளைபாக்கம், கொளத்தூர், நாவலூர், மலைப்பட்டு, சேத்துபட்டு, மணிமங்கலம், கரசங்கால், முடிச்சூர், தாம்பரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வேலைக்கு சென்று வருகின்றனர். மேலும், மேற்கண்ட பகுதிகளில் இருந்து தாம்பரம் வழியாக குரோம்பேட்டை, கிண்டி, சைதாப்பேட்டை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிக்கும் ஏராளமான மாணவ, மாணவிகளும் சென்று வருகின்றனர். தாம்பரத்தில் இருந்து முடிச்சூர், மணிமங்கலம், சேத்துபட்டு, மலைப்பட்டு, கொளத்தூர், பிள்ளைபாக்கம் வழியாக ஸ்ரீபெரும்புதூருக்கு மாநகர பஸ்கள் (தஎ 583சி, 583 டி) இயக்கபட்டன.

இந்நிலையில் (தஎ 583 சி) ஒரு பஸ் நேற்று முன்தினம் முதல் இயக்குவது திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. ஆலந்தூர் பணிமனையில் இருந்து இயக்கப்பட்ட இந்த பஸ் முன்னறிவிப்பின்றி நிறுத்தப்பட்டுள்ளதால், தினமும் வேலை மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வந்தவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து அப்பகுதியினர் கூறுகையில், தாம்பரத்தில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வரை இயக்கப்பட்ட (தஎ 583 சி) மாநகர பஸ் கடந்த 2 நாட்களுக்கு முன் எவ்வித முன் அறிவிப்பின்றி, நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்லும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம்.

வசூல் குறைவாக உள்ளதாக காரணம் காட்டி பஸ் சேவையை நிறுத்தி உள்ளனர். கிராமங்களில் இருந்து நகர் பகுதிகளுக்கு செல்லவே மாநகர பஸ்கள் இயக்கப்பட்டன. பல பகுதிகளில் இதைவிட குறைவாக வசூல் ஆகிறது. வளர்ச்சி அடைந்து வரும் எங்கள் பகுதியில் இயக்கபட்டு வந்த பஸ் சேவையை திடீர் என்று நிறுத்த என்ன காரணம் என்று தெரியவில்லை. எனவே நிறுத்தப்பட்ட (தஎ 583 சி) மாநகர பஸ்சை மீண்டும் இயக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், சாலை மறியல் உள்பட பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படும் என்றனர்.
வெளிநாட்டவர், என்ஆர்ஐகளுக்கு ரயில் டிக்கெட் முன்பதிவு காலம் 360 நாட்களாக நீட்டிப்பு


2017-07-04@ 00:51:57


புதுடெல்லி: ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது: வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு வசதிகளை மேம்படுத்தவும், வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்ஆர்ஐ) முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்யவும் தற்போது 120 நாட்களாக இருந்த முன்பதிவு காலம் தற்போது 360 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஏறக்குறைய ஓராண்டு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்யலாம். வெளிநாட்டவர்கள் ராஜ்தானி, சதாப்தி, கதிமான், தேஜாஸ் ரயில்களில் ஏசி முதல் வகுப்பு, ஏசி 2ம் வகுப்பு மற்றும் எக்ஸிகியூடிவ் வகுப்பு பெட்டிகளில் மட்டும் முன்பதிவு செய்யலாம். சாதாரண வகுப்பு மற்றும் மூன்றடுக்கு ஏசி வகுப்புகளில் இவர்கள் முன்பதிவு செய்ய அனுமதி கிடைாது.

இதுபோல் கடைசி நேரத்தில் டிக்கெட் முன்பதிவு செய்வோருக்கு உறுதி செய்யப்பட்ட டிக்கெட் கிடைக்க சுவிதா ரயில்கள் இயக்கப்படுகின்றன. எனவே, இதிலும் இவர்கள் முன்பதிவு செய்ய முடியாது. வெளிநாட்டவரும், வெளிநாடு வாழ் இந்தியர்களும் பல மாதங்கள் முன்பே தங்கள் விடுமுறை பயணம் அல்லது சுற்றுலாவுக்கு திட்டமிடுகிறார்கள். இதை கருத்தில் கொண்டே முன்பதிவு கால அவகாசம் இவர்களுக்கு நீட்டிக்கப்படுகிறது. டிராவல் ஏஜென்ட்கள் துணையின்றி ஆன்லைனில் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு உதவியுடன் இவர்களே டிக்கெட்களை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

ஐஆர்சிடிசி இணையதளத்தில் விசா, பாஸ்போர்ட், சர்வதேச மொபைல் எண் ஆகிய விவரங்களையும் முன்பதிவின்போது இவர்கள் பதிவு செய்ய வேண்டும். இந்த டிக்கெட்களுக்கு சேவை கட்டணமாக தலா ரூ.200 வசூலி–்க்கப்படும். ரத்து செய்ய ரூ.50 கழித்தது போக எஞ்சிய தொகைக்கு ஏற்கெனவே உள்ள ரத்து விதிகள் கடைப்பிடிக்கப்படும். மேலும் இந்த பயணிகளுக்காக மொபைல் ஆப்சை ரயில்வே வெளியிட உள்ளது. இதில் டிக்கெட் முன்பதிவு மட்டுமின்றி, தங்கும் அறை, டாக்சி, போர்ட்டர், உணவு ஆர்டர் போன்றவற்றையும் மேற்கொள்ளலாம் என்றார்.

ரயில் பயணத்தில் பாடாய்படுத்தும் தடக், தடக் சத்தத்துக்கு விரைவில் ‘குட்பை’

2017-07-04@ 21:07:42
 

வேலூர்: இந்தியாவில் ரயில் சேவை தொடங்கி 160 ஆண்டுகளுக்கு மேலாகிறது. ரயில் சேவை முதன் முதலாக மும்பை-தானே இடையே 1853ம் ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி தொடங்கப்பட்டது. இந்தியா முழுவதும் சுமார் 63 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது. தினமும் 14 ஆயிரத்திற்கும் அதிகமான ரயில்கள் இயக்கப்படுகிறது. வருங்காலங்களில் இந்தியாவில் புல்லட் ரயில்களும், அதிவேக ரயில்களும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த ரயில்களை தற்போதுள்ள தண்டவாளங்களை கொண்டு இயக்க முடியாது. தற்போதுள்ள ஒவ்வொரு தண்டவாளத்தின் நீளம் 13 மீட்டர் கொண்டது. காரணம் ஒரு ரயில் பெட்டியின் நீளம் 13 மீட்டர். எனவே தண்டவாளங்களும் 13 மீட்டருக்கு ஒரு துண்டு என பொருத்தப்பட்டது. இதனால் ரயில்கள் தண்டவாளங்களில் செல்லும்போது ‘தடக், தடக்’ என்ற சத்தம் வரும். இனி இந்த சத்தத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த தண்டவாளங்கள் அனைத்தும் கோரக்பூரில் உள்ள செய்ல் கம்பெனி மூலம் தயாரிக்கப்படுகிறது. அங்கு 26 அடி நீளம் கொண்ட தண்டவாளமாக உருவாக்கப்படுகிறது. இனி வரும் காலங்களில் தண்டவாளங்கள் 26 அடி நீளம் கொண்டதாகவே ெபாருத்தப்படும். அதனால் ரயில்கள் தண்டவாளத்தில் செல்லும்போது தடக், தடக் சத்தம் அதிகம் வராது. இந்த பணிகள் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட உள்ளது. தெற்கு ரயில்வே பிரிவிலும் விரைவில் பணிகள் தொடங்க உள்ளதாகவும் ரயில்வே பொறியியல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் மூலம் பயணிகள் இரைச்சலை அனுபவிக்காமல் பயணிக்கலாம்.
'நீட்' தேர்வுக்கு எதிரான மனு 'டிஸ்மிஸ்' : தமிழக உள் ஒதுக்கீடுக்கும் சிக்கல்

பதிவு செய்த நாள் 04 ஜூலை
2017
23:02

சென்னை: தமிழகத்தில், மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு விலக்கு கோரிய மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., போன்ற மருத்துவப் படிப்புகளில், மாணவர் சேர்க்கைக்கு, 'நீட்' தேர்வு கட்டாயம் என, உச்ச நீதிமன்றமும், மத்திய அரசும் உத்தரவிட்டு உள்ளன.

தமிழகத்தில், 'நீட்' தேர்விலிருந்து விலக்கு கேட்டு, தமிழக சட்டசபையில் நிறைவேற்றிய மசோதாவுக்கு, ஜனாதிபதி ஒப்புதல் கிடைக்கவில்லை. அதனால், இந்த ஆண்டு, 'நீட்' தேர்வு மதிப்பெண் அடிப்படையில், தமிழக கல்லுாரிகளில் மாணவர்கள் சேர்க்கப்படுவர் என, தமிழக சுகாதாரத் துறை அறிவித்தது.

இந்நிலையில், 'நீட் தேர்வு தமிழக மாணவர்களுக்கு கடினமாக இருந்ததால், இந்த ஆண்டு மட்டும், நீட் தேர்வு மதிப்பெண்ணின்படி, மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த, தமிழகத்திற்கு விலக்களிக்க வேண்டும்' என, ஒரு மாணவரின் தந்தை, முருகவேல் என்பவர், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

'விசாரணைக்கு தகுதி யற்ற வழக்கு' என, தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, நேற்று தள்ளுபடி செய்தது.

இதனிடையே, மருத்துவ சேர்க்கையில் தமிழக பாடத்திட்ட மாணவர்களுக்கு, ௮௫ சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்யக் கோரி, சி.பி.எஸ்.இ.,யில் படித்த மாணவர்கள் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதற்கு, வரும், ௭க்குள் பதிலளிக்க, தமிழக அரசுக்கு, 'நோட்டீஸ்' அனுப்புமாறு, உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
ரூ.570 கோடி யாருக்கு சொந்தம்:
ஐகோர்ட்டில் சி.பி.ஐ., அறிக்கை


சென்னை: மூன்று கன்டெய்னர் லாரிகளில் பிடிபட்ட, 570 கோடி ரூபாய் குறித்த, சி.பி.ஐ., யின் விசாரணை அறிக்கை, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

சீலிட்ட உறையில், அறிக்கை தாக்கல் செய்யப் பட்டதால், அதன் விபரங்கள் தெரியவில்லை. தமிழக சட்டசபை தேர்தலின் போது, திருப்பூர் மாவட்டத்தில், மூன்று கன்டெய்னர் லாரி களை, தேர்தல் அதிகாரிகள் பிடித்தனர். அதில், 570 கோடி ரூபாய் இருப்பது தெரிய வந்தது. கோவையில் இருந்து, ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிக்கு, பணத்தை கொண்டு செல்வதாக தெரிவிக் கப்பட்டது.

மனுதாக்கல்:

வாகனங்களின்ஆவணங்கள்,

அதில் வந்தவர்கள் அளித்த தகவல்கள், முன்னுக்கு பின் முரணாக இருந்ததால், இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி யது.கன்டெய்னர் லாரிகளில் பணம் பிடிபட்ட விவகாரம் குறித்து, சி.பி.ஐ., விசாரணை கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், தி.மு.க., - எம்.பி., யான, டி.கே.எஸ்.இளங்கோவன் மனு தாக்கல் செய்தார்.

மனுவை, நீதிபதி ஆர்.சுப்பையா விசாரித்தார். 'ஆரம்பகட்ட விசாரணையை, சி.பி.ஐ., நடத்த வேண்டும்; விசாரணையில் முகாந்திரம் இருந்தால், வழக்குப் பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க வேண் டும்' என, நீதிபதி உத்தரவிட்டார்

.உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், சி.பி.ஐ., விசாரணை நடத்தியது. சீலிட்ட உறையில், சி.பி.ஐ.,யின் அறிக்கை, உயர் நீதிமன்ற பதிவுத்



துறையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

3 மாதம்:

இது குறித்து, சி.பி.ஐ., தரப்பில் கேட்ட போது, 'மூன்று மாதங்களுக்கு முன், உயர் நீதிமன்ற பதிவுத்துறையில் அறிக்கை தாக்கல் செய்யப் பட்டு விட்டது; சீலிடப்பட்ட உறையில், இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது' என, தெரிவிக்கப்பட்டது.
செல்லாத நோட்டு 'டிபாசிட்' செய்ய மீண்டும் வாய்ப்பு அளிக்க உத்தரவு

பதிவு செய்த நாள் 04 ஜூலை
2017
22:19

புதுடில்லி: செல்லாததாக அறிவிக்கப்பட்ட, 500 - 1,000 ரூபாய் நோட்டுகளை, தவிர்க்க முடியாத காரணத்தால், வங்கிகளில், 'டிபாசிட்' செய்யத் தவறியவர்களுக்காக, மீண்டும் ஒரு வாய்ப்பு அளிப்பதற்கான திட்டத்தை பரிசீலித்து சமர்ப்பிக்க, மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கிக்கு, சுப்ரீம் கோர்ட், நேற்று, இரண்டு வார அவகாசம் அளித்து உத்தரவிட்டுள்ளது.

கறுப்புப் பணத்தையும், கள்ள ரூபாய் நோட்டுகளையும் ஒழிக்கும் நோக்கில், கடந்தாண்டு, நவ., 8ல், மத்திய அரசு, செல்லாத ரூபாய் நோட்டு திட்டத்தை அறிவித்தது. அதன்படி, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டு, புதிய, 500 - 2,000 ரூபாய் நோட்டு கள் வெளியிடப்பட்டன.செல்லாத நோட்டுகளை வங்கிகளில் சமர்ப்பித்து, புதிய நோட்டுகளை பெற்றுக் கொள்ள, அவகாசம் அளிக்கப்பட்டது.இந்நிலையில், மிகவும் தவிர்க்க முடியாத சூழ்நிலையில், செல்லாத நோட்டு களை, வங்கிகளில் டிபாசிட் செய்ய முடியாத பலர், தங்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, ஜே.எஸ்.கேஹர், நீதிபதி சந்திரசூட் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில், சொலிசிட்டார் ஜெனரல், ரஞ்சித் குமார் ஆஜரானார்.விசாரணையின் போது, 'எவ்வித தவறும் இல்லாமல், பணத்தை இழக்கக் கூடிய சந்தர்ப்பம் சிலருக்கு ஏற்படலாம். இதுபோன்ற நபர்கள், தங்களிடம் உள்ள செல்லாத நோட்டுகளை, டிபாசிட் செய்வதற்கு தடை விதித்ததற்கான காரணத்தை அறிய விரும்புகிறோம். 'அவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிப்பதற்கான திட்டத்தை, இரு வாரத்தில், மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் அளிக்க வேண்டும்' என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

NEWS TODAY 25.07.2026