Tuesday, August 1, 2017

வரவிருக்கும் விசேஷங்கள்
dinamalar
  • ஆகஸ்ட் 03 (வி) ஆடிப்பெருக்கு
  • ஆகஸ்ட் 04 (வெ) வரலட்சுமி விரதம்
  • ஆகஸ்ட் 05 (ச) மகா பிரதோஷம்
  • ஆகஸ்ட் 07 (தி) ஆவணி அவிட்டம்
  • ஆகஸ்ட் 11 (வெ) மகா சங்கடஹர சதுர்த்தி
  • ஆகஸ்ட் 14 (தி) கிருஷ்ண ஜெயந்தி
அனாதையாக கிடந்த 60 சவரன் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர்

பதிவு செய்த நாள் 31 ஜூலை
2017
22:06




கோவை: ரோட்டில் கிடந்த, 60 சவரன் நகைகளை மீட்டு கொடுத்த ஆட்டோ டிரைவரின் நேர்மையை, பலரும் பாராட்டினர். கோவை, பனைமரத்துாரைச் சேர்ந்தவர் முனியப்பன், 45; ஆட்டோ டிரைவர். நேற்று காலை, வழக்கம் போல், ஸ்டாண்டில் சவாரிக்காக காத்திருந்தார்.

அப்போது, ரோட்டில் ஒரு மஞ்சள் பை கிடந்தது. எடுத்து பார்த்த போது, உள்ளே, 20 தங்க நாணயங்கள், நகைகள் என, மொத்தம், 14 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 60 சவரன் நகைகள் இருந்தன.உடனடியாக, மற்ற டிரைவர்களுடன் இணைந்து, ஆர்.எஸ்.புரம் போலீஸ் ஸ்டேஷன் சென்று, நகை பையை ஒப்படைத்தார். அப்போது, ஸ்டேஷனுக்கு போனில் ஒரு புகார் வந்தது.

அதில் பேசிய சாமிநாதன் என்பவர், 'அவசர தேவைக்காக, 60 சவரன் நகையை அடமானம் வைக்க, என் மேலாளர் பழனிசாமியிடம் கொடுத்து அனுப்பினேன். அவர் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது நகையை தொலைத்து விட்டார்' என, தெரிவித்தார். சாமிநாதனை வரவழைத்து, விசாரித்த போது, அவர் தெரிவித்த நகைகளின் அடையாளங்கள் சரியாக இருந்தன.
இதையடுத்து, நகைகளை, அவரிடம் கமிஷனர் அமல்ராஜ் ஒப்படைத்தார்.

ஆட்டோ டிரைவர் முனியப்பனின் நேர்மையை பாராட்டி, போலீஸ் கமிஷனர் ரொக்க பரிசு வழங்கினார். சாமிநாதனும், ஆட்டோ டிரைவரை பாராட்டி, 10 ஆயிரம் ரூபாய் வழங்கினார்.

ஆக., 4ல் வர மஹாலட்சுமி பண்டிகை : இணையதளம் மூலம் விரதம் குறித்து விளக்கம்


பதிவு செய்த நாள் 31 ஜூலை
2017
23:01

பெங்களூரு: ஆடி மாதத்தின் மூன்றாம் வெள்ளியன்று, 'வர மஹாலட்சுமி பண்டிகை' கொண்டாடப்படுகிறது. இதற்காக, இப்போதிருந்தே பெண்கள் தயாராகி வருகின்றனர்.

இன்றைய பரபரப்பான வாழ்க்கையில், எந்த விஷயத்துக்கும் நேரம் கிடைப்பதில்லை. அனைவரும் ஒன்றாக வீட்டில் நேரத்தை செலவிடுவது கஷ்டம்.

பண்டிகை காலங்களில் தான், வீட்டில் அனைவரும் ஓய்வாக இருப்பது வழக்கம். இதற்காகவே, பலரும் உற்சாகத்துடன் பண்டிகையை வரவேற்பர்.
இம்மாதம், 4ம் தேதியன்று, ஆடி மூன்றாம் வெள்ளி வருகிறது. அன்றைய தினம் வர மஹாலட்சுமி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதற்காக, பெண்கள், தயாராகி வருகின்றனர்.

பண்டிகை நாளில், பூ, பழங்கள் விலை அதிகம் இருக்கும் என்பதால், முன் கூட்டியே, தேவையான பொருட்களை வாங்கி வருகின்றனர்.
வர மஹாலட்சுமி பண்டிகை கொண்டாடும் பலரும், புகைப்படம் எடுத்து, 'பேஸ் புக், வாட்ஸ் ஆப், ட்விட்டர்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவேற்றி, மகிழ்ச்சியை நண்பர்களுடன் பகிர்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.

வேலை நிமித்தமாக, சொந்த ஊரிலிருந்து வேறு ஊருக்கு சென்றிருப்பவர்கள், இப்பண்டிகைக்காக காத்திருக்கின்றனர். இது போன்ற நேரத்தில் தான், அவர்கள், தங்கள் வீடுகளுக்கு வந்து, சொந்த, பந்தங்களுடன் இருக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

வர மஹாலட்சுமி விரதம் கடைபிடிக்க வேண்டுமென, பெண்களுக்கு ஆசை இருந்தாலும், அதை எவ்வாறு கடைபிடிப்பது என்பதை அறியாதவர்கள் இன்னமும் உள்ளனர்.

இதற்கு தீர்வு காணும் வகையில், பெங்களூரை சேர்ந்த மமதா, சூடாமணி ஆகிய இரு பெண்கள், 'யு டியூப்' மூலம் ஆலோசனை கூறுகின்றனர்.
பண்டிகையின் போது, லட்சுமி விக்ரஹத்துக்கு, எவ்வாறு சேலை அணிவிப்பது, அலங்காரம் செய்வது பற்றி, வீடியோ மூலம் இவர்கள் கற்று தருவர்.

லட்சுமியாக கருதி, வைக்கப்படும் தேங்காய் கலசத்துக்கு, எப்படி சேலை அணிவது, அலங்காரம் செய்வது என்பதை, இந்த வீடியோவை பார்த்து, தெரிந்து கொள்ளலாம்.

இதை தெரிந்து கொள்ள விரும்புபவர்கள், https://www.youtube.com/watch?v=D2E45jhf0Hs என்ற முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.
வருமான வரி செலுத்துவோருக்கு ரேசன் பொருட்கள் கிடையாது? தமிழகத்திற்கு பொருந்தாது என அமைச்சர் அறிவிப்பு

பதிவு செய்த நாள் 31 ஜூலை
2017
17:42




ரேஷன் பொருட்கள் விவகாரம்: அமைச்சர் விளக்கம்

சென்னை: வருமான வரி செலுத்துபவர்களில் ஒருவர் இருந்தாலும் அந்தக் குடும்பத்தினருக்கு ரேசன் பொருட்கள் கிடையாது என மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

ரேசன் பொருட்கள் வழங்கிட முன்னுரிமை பெறுவோரை தேர்வு செய்யப்பட வேண்டியுள்ளது. இதனால் 2017 ம் ஆண்டுக்கான உணவு பாதுகாப்பு புதிய விதிகள் மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி பொதுவிநியோக திட்டத்தை சீரமைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்க வேண்டியுள்ளது. எனவே இனி வரும் காலங்களில் வருமான வரி செலுத்தும் நபர் ஒருவர் இருக்கும் குடும்பத்தினருக்கு ரேசன் பொருட்கள் கிடையாது. தொழில் நிறுவன வரி செலுத்தும் குடும்பத்தினருக்கும் , ஆண்டுக்கு ஒரு லட்சத்திற்கு மேல் வருமானம் கொண்ட குடும்பத்தினர், 5 ஏக்கருக்கு மேல் நிலம் உள்ள விவசாய குடும்பத்தினருக்கும் , மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கும், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கும், 4 சக்கர வாகனம் கொண்டவர்களுக்கும், ரேசன் பொருட்கள் வழங்கப்பட மாட்டாது.

மேலும் யார் யாருக்கு ரேசன் பொருட்கள் வழங்கப்படும் என்ற விவரமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள், மாற்றுத்திறனாளியை தலைவராக கொண்ட குடும்பம். அன்னபூர்ணா திட்டத்தில் உறுப்பினராக கொண்ட குடும்பத்தினர், ஆகியோருக்கு ரேசன் பொருட்கள் வழங்கப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

இந்த விஷயம் தமிழகத்தின் அரசிதழில் வெளியிடப்பட்டது. தமிழகத்திலும் பலருக்கும் ரேசன் பொருட்கள் கிடைக்காது எனறு அனைத்து மீடியாக்களிலும் காட்டுத்தீ போல் பரவியது. இதனையடுத்து தமிழக உணவு துறை அமைச்சர் காமராஜர் நிருபர்களை அவசர, அவசரமாக சந்தித்தார்.

தமிழக அரசு மறுப்பு;

மத்திய அரசின் வழிகாட்டுதல்கள் தமிழகத்திற்கு பொருந்தாது என மாநில உணவுத்துறை அமைச்சர் காமராஜர் நிருபர்களிடம் தெரிவித்தார். பொதுவிநியோக திட்டத்தில் நடைமுறையில் எள்ளளவும் மாற்றமில்லை என்றும் கூறியுள்ளார். பொது விநியாக துறையில் அனைவருக்கும் உணவு பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். மத்திய அரசின் சட்டம் என்றாலும் நாங்கள் விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம் என்றும் குறிப்பிட்டார்.


மருத்துவ படிப்புக்கான கட்டணம் : குழு அமைக்க ஐகோர்ட் உத்தரவு

பதிவு செய்த நாள் 01 ஆக
2017
00:45

 சென்னை: 'நிகர்நிலை பல்கலைகளில், மருத்துவ படிப்புக்கான கட்டண குழுவை இரண்டு வாரத்திற்குள் அமைக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், வி.பி.ஆர்.மேனன், ஜவஹர்லால் சண்முகம் ஆகியோர் தனித்தனியாக தாக்கல் செய்த பொது நல மனு:தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் உள்ள நிகர்நிலை பல்கலைகளில், மருத்துவ கல்லுாரிகள் செயல்படுகின்றன. இந்த கல்லுாரிகளில் நடத்தப்படும், மருத்துவ படிப்புகளுக்கு, 18 லட்சம் ரூபாய் முதல், 40 லட்சம் ரூபாய் வரை, கட்டணம் பெறுகின்றனர்.'நீட்' மருத்துவ நுழைவு தேர்வில், அதிக மதிப்பெண் எடுத்திருந்தாலும், இந்த கல்லுாரிகளின் மருத்துவ படிப்பில் சேர வேண்டும் என்றால், பல லட்சம் ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும். நிகர் நிலை பல்கலைகளில், பணக்கார மாணவர்கள் மட்டுமே படிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டு உள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளுக்கு, கல்வி கட்டணம் நிர்ணயிக்கும்போது, நிகர்நிலை பல்கலைகள் நடத்தும் மருத்துவ படிப்புக்கு, கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என, பல்கலை மானிய குழுவுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில், கோரப்பட்டது.இந்த மனுக்கள் தலைமை நீதிபதி, இந்திரா பானர்ஜி, நீதிபதி, சுந்தர் அடங்கிய முதல் பெஞ்ச் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. 'முதல் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:மருத்துவ படிப்புக்கான கல்வி கட்டணத்தை நிர்ணயிக்க, மத்திய குடும்ப நலம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. இவ்வாறு அமைக்கப்படும் குழு, நிகர்நிலை பல்கலைகள் நடத்தும் மருத்துவ படிப்புக்கான கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும்.

மருத்துவ கல்வி கட்டண நிர்ணய குழுவை, பல்கலை மானியக்குழுவான, யு.ஜி.சி., இரண்டு வாரத்திற்குள் அமைக்க வேண்டும். வழக்கு விசாரணை, வரும், 18ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது. இவ்வாறு, 'முதல் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.
திருமணத்துக்கு வந்த 'மாஜி' காதலன் : கட்டிய தாலியை பறித்த மாப்பிள்ளை

பதிவு செய்த நாள் 31 ஜூலை
2017
21:06

குருவாயூர்: கேரள மாநிலம், குருவாயூர் கோவிலில் நடந்த திருமணத்திற்கு, மணப்பெண்ணின் முன்னாள் காதலன் வந்ததால் மோதல் ஏற்பட்டது. இதனால், திருமணமே நின்று போனது.

கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், மார்க்.கம்யூ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. திருச்சூரைச் சேர்ந்த மணமக்களுக்கு, குருவாயூர் கோவிலில், நேற்று முன்தினம் திருமணம் நடந்தது. மாப்பிள்ளை, தாலி கட்டிய சிறிது நேரத்தில், தன்னுடைய முன்னாள் காதலன் திருமணத்திற்கு வந்திருப்பதை, மணமகள் பார்த்தார். இதை, மாப்பிள்ளை காதில் மணமகள் முணுமுணுக்க, அவரது முகம் மாறியது. கோவிலில் இருந்து, மண்டபத்துக்கு வந்த பின், உறவினர்களிடம் விஷயத்தை மாப்பிள்ளை கூற, பரபரப்பு ஏற்பட்டது. 'போட்டோ, வீடியோ' எடுப்பதையும் நிறுத்த உத்தரவு பறந்தது. அடிதடியால் திருமண மண்டம் ரணகளப்பட்டது. மணமகளுக்கு கட்டப்பட்ட தாலி, பட்டு சேலை, நகைகளை, மாப்பிள்ளை வீட்டார் திரும்ப வாங்கினர்.
இந்த களேபரம் முடிந்த போது, பெண்ணின் முன்னாள் காதலனையும் காணவில்லை. தங்களுக்கு, 15 லட்சம் ரூபாயை, பெண் வீட்டார் தர வேண்டும் என, மாப்பிள்ளை தரப்பினர் புகார் செய்துஉள்ளனர். திருமணத்தை நிறுத்துவதற்காக, முன்னாள் காதலன் பற்றிய விஷயத்தை மணப்பெண் சொன்னாரா அல்லது பயத்தின் காரணமாக வெளிப்படுத்தினாரா என்பது புதிராக
உள்ளது.

வாட்ஸ் ஆப்'-க்கு மாறிய வெற்றிலை பாக்கு அழைப்பு

பதிவு செய்த நாள் 31 ஜூலை
2017
23:44

காரைக்குடி:மஞ்சு விரட்டு, மாட்டு வண்டி பந்தயத்துக்கு வெற்றிலை பாக்கு வைத்து அழைத்த நடைமுறை, வாட்ஸ் ஆப் தகவலாக சுருங்கி வருகிறது.தமிழகத்திலேயே அதிக அளவில் மஞ்சு விரட்டு, மாட்டு வண்டி பந்தயம் நடக்கும் இடமாக திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை மாவட்டங்கள் திகழ்கிறது. சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை சிராவயல், சிங்கம்புணரி, கண்டிப்பட்டி, நெடுமரம், புதுார், அரளிப்பாறை உள்ளிட்டவை பிரசித்தி பெற்றவை.

ஊரே திருவிழா கோலம் பூணுவதால், மஞ்சு விரட்டு நடத்த தனி விழா கமிட்டியார் நிர்ணயிக்கப்படுகிறார்கள். இவர்கள் மாடு வளர்ப்பவர்களின் வீட்டிற்கு சென்று, வெற்றிலை பாக்கு வைத்து, அதற்கான அழைப்பிதழையும் கொடுத்து அழைப்பார்கள். இதற்கு 'பாக்கு வைத்தல்' என்று பெயர்.இடைப்பட்ட காலங்களில் காளைகள் காட்சிப்படுத்தப்பட்ட விலங்குகள் பட்டியலில் சேர்த்ததால், போட்டிகளுக்கு தடை ஏற்பட்டது. மாணவர் போராட்டம் எதிரொலியாக மஞ்சு விரட்டு மீண்டும் களை கட்ட தொடங்கியுள்ளது.
பிரசித்தி பெற்ற ஊர்களில் மட்டுமே நடந்த இந்த விளையாட்டுகள் தற்போது அனைத்து ஊர்களிலும் நடத்தப்படுகிறது. வீடுதோறும் காளைகள் வளர்ப்பு அதிகரித்துள்ளது. தகவல் தெரிவிக்கும் முறை மட்டும் வாட்ஸ் ஆப்-ஆக சுருங்கி விட்டது.காரைக்குடியை சேர்ந்த கோபால் கூறும்போது: தலைமுறை தலைமுறையாக மஞ்சு விரட்டு மாடு வளர்த்து வருகிறோம். விழா நடத்துபவர்கள் உரிய மரியாதையுடன் வீடு தேடி வந்து அழைப்பார்கள். எங்களுக்கும் ஒரு கவுரவம் இருந்தது. தற்போது ஒரு சிலரை தவிர பலர் வாட்ஸ் ஆப்பில் தகவல் தெரிவித்து விட்டு இருந்து விடுகின்றனர்.திருமண அழைப்பிதழே வாட்ஸ் ஆப்பில் தான் அனுப்புகின்றனர். அதை கணக்கில் கொள்ளும்போது, இதற்கான அழைப்பிதழை அனுப்புவதில் தவறில்லை. ஆனால் நேர்முகமாக பார்த்து அழைக்கும்போது ஏற்படும் நட்பு மறைந்து விடுகிறது. கலாசாரம் அழியாமல் பாதுகாக்க நம் முன்னோர்கள் வகுத்த பழமையான நடைமுறைகளை நாம் பின்பற்றி வந்தால் தான் உறவு மேம்படும், என்றார்.

NEWS TODAY 25.01.2026