Tuesday, August 1, 2017

மருத்துவ படிப்புக்கான கட்டணம் : குழு அமைக்க ஐகோர்ட் உத்தரவு

பதிவு செய்த நாள் 01 ஆக
2017
00:45

 சென்னை: 'நிகர்நிலை பல்கலைகளில், மருத்துவ படிப்புக்கான கட்டண குழுவை இரண்டு வாரத்திற்குள் அமைக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், வி.பி.ஆர்.மேனன், ஜவஹர்லால் சண்முகம் ஆகியோர் தனித்தனியாக தாக்கல் செய்த பொது நல மனு:தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் உள்ள நிகர்நிலை பல்கலைகளில், மருத்துவ கல்லுாரிகள் செயல்படுகின்றன. இந்த கல்லுாரிகளில் நடத்தப்படும், மருத்துவ படிப்புகளுக்கு, 18 லட்சம் ரூபாய் முதல், 40 லட்சம் ரூபாய் வரை, கட்டணம் பெறுகின்றனர்.'நீட்' மருத்துவ நுழைவு தேர்வில், அதிக மதிப்பெண் எடுத்திருந்தாலும், இந்த கல்லுாரிகளின் மருத்துவ படிப்பில் சேர வேண்டும் என்றால், பல லட்சம் ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும். நிகர் நிலை பல்கலைகளில், பணக்கார மாணவர்கள் மட்டுமே படிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டு உள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளுக்கு, கல்வி கட்டணம் நிர்ணயிக்கும்போது, நிகர்நிலை பல்கலைகள் நடத்தும் மருத்துவ படிப்புக்கு, கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என, பல்கலை மானிய குழுவுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில், கோரப்பட்டது.இந்த மனுக்கள் தலைமை நீதிபதி, இந்திரா பானர்ஜி, நீதிபதி, சுந்தர் அடங்கிய முதல் பெஞ்ச் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. 'முதல் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:மருத்துவ படிப்புக்கான கல்வி கட்டணத்தை நிர்ணயிக்க, மத்திய குடும்ப நலம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. இவ்வாறு அமைக்கப்படும் குழு, நிகர்நிலை பல்கலைகள் நடத்தும் மருத்துவ படிப்புக்கான கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும்.

மருத்துவ கல்வி கட்டண நிர்ணய குழுவை, பல்கலை மானியக்குழுவான, யு.ஜி.சி., இரண்டு வாரத்திற்குள் அமைக்க வேண்டும். வழக்கு விசாரணை, வரும், 18ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது. இவ்வாறு, 'முதல் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...