Thursday, August 10, 2017



நெருங்காமலும் நீங்காமலும்


By பாறப்புறத் இராதாகிருஷ்ணன் | Published on : 10th August 2017 02:33 AM | - |

இன்று தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி மக்களிடையே பல தாக்கங்களை ஏற்படுத்தி அவர்களின் வாழ்க்கைப் போக்கையே மாற்றி வருகின்றன. இதில் தொலைக்காட்சி, கணினி, கைப்பேசி இவற்றின் பங்கு மகத்தானது.

உலகின் பல்வேறு நிகழ்வுகளை உடனுக்குடன் துல்லியமாக அறிய ஊடகங்கள் பெரிதும் உதவுகின்றன என்றாலும், இவை குடும்ப வாழ்வையும், தனி மனித வாழ்வையும் சீரழித்து வருகின்றன.

முன்பெல்லாம் செய்திகளை தண்டோரா போட்டு அறிவித்தார்கள். பின்னர் வானொலி வந்தது. பிறகு அரசு தொலைக்காட்சி வந்தது. அதன் பிறகு தனியார் தொலைக்காட்சிகள், கைப்பேசிகள் வந்து உலகச் செய்திகளை உடனுக்குடன் விரல் நுனியில் கொண்டு வந்து விட்டன.

இணையம் வழியாக சமூக வலைதளங்கள் நம் வாழ்வின் ஓர் அங்கமாக மாறி விட்டன. உலகத்தின் நிகழ்வுகளை வீட்டில் அமர்ந்தவாறே காண இணைய பயன்பாடு பெரிதும் உதவுகிறது. உலகம் சுருங்கிவிட்டது.

குறிப்பாக, முகநூல், கட்செவி அஞ்சல், சுட்டுரை போன்ற வலைதளங்கள் இன்று அனைவராலும் பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய சமூக வலைதளங்களினால் குற்றங்கள் பெருகி வருகின்றன என்பதை மறுக்க இயலாது.

பொழுது போக்கிற்கான பல சமூக வலைதளங்கள் மக்களின் நேரக்கொல்லிகளாக மாறி விட்டன. நேரம் கிடைக்கும் போதெல்லாம் இணையத்தைப் பயன்படுத்தும் நிலை மாறி இணையத்திலேயே நேரத்தைக் கழிக்கின்ற நிலை இன்று உருவெடுத்துள்ளது.

சமூக ஊடகங்கள் சுறுசுறுப்பாக இருந்த மக்களை வீட்டிற்குள்ளே கட்டிப் போட்டு சோம்பேறிகளாக்கி விட்டன. ஒரு மனிதன் நல்ல உடல் நிலையில் இருக்க வேண்டுமானால் அவன் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஏழு மணிநேரமாவது தூங்க வேண்டும் என்று மருத்துவ அறிவியல் சொல்கிறது. ஆனால், இந்த சமூக ஊடகங்கள் பலரின் தூக்கத்தை கெடுத்து உடல் நலத்தை பாதித்துவிடுகிறது.

அறிதிறன்பேசி எனப்படும் ஸ்மார்ட் போனை பயன்படுத்துபவர்கள் மூன்று மணி நேரம் தூங்குவது என்பதே அரிதாக உள்ளது.

இவர்கள் இரவு 10 மணிக்கு மேல் முகநூலில் வீடியோ பதிவுகளையும், வதந்திகளையும், அவதூறு செய்திகளையும் அனுப்பி அதில் எவ்வளவு லைக்ஸ் எனப்படும் விருப்பம் வந்துள்ளது, எவ்வளவு பேர் இந்த வதந்திகளை மற்றவர்களுக்கு பகிர்ந்திருக்கிறார்கள் என்பதை இரவு முழுவதும் பார்த்து காலம் போவதே தெரியாமல் பணத்தையும், நேரத்தைதையும் வீணடிக்கிறார்கள்.

டாக்டர் அப்துல் கலாம், இன்றைய இளைஞர்களிடம் கனவுக் காணுங்கள் என்றார். ஆனால், இவர்களுக்கு தூக்கம் வந்தால் தானே கனவு காண்பதற்கு.
இன்றைய இளைஞர்கள் ஒருவித பதற்றம், பய உணர்ச்சி, யாரைக் கண்டாலும் எரிச்சல், பெற்றோர்களை எதிர்த்துப் பேசுவது, கோபப்படுவது, எதிலும் ஆர்வமின்மை, மன அழுத்தம், மனச்சோர்வு, கவனக்குறைவு, மறதி போன்றவைகளால் துன்பப்படுகிறார்கள்.

எப்போதும் சமூக வலைதளங்களையே பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கும், பேசிக் கொண்டிருப்பவர்களுக்கும் வெளியில் அவர்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது தெரியாமல் போகிறது.

விருப்பமானவர்களிடமிருந்து தகவல் வரவில்லையென்றால், மேலும் துயரமடைந்து ஒருவித மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள் என்றும், தூக்கம் வராத வியாதிக்கு உட்படுவார்கள் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
மேலும், கண் எரிச்சல், கண் அழற்சி, கண் பொங்குதல், கண்களைச் சுற்றி கருப்பு நிறத் திட்டுகள் ஏற்பட்டு, அவர்கள் உடல் நலத்தில் மாற்றம் ஏற்படும் எனவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அறிதிறன்பேசிகளின் பயன்பாடுகள் மூலம் ஏற்படும் பாதிப்புகளை நோமோபோபியா (Nomophobia) என்று அழைக்கிறார்கள்.

சமூக ஊடகங்கள் குழந்தைகளையும் விட்டு வைப்பதில்லை. காட்சி ஊடகங்கள் குழந்தைகளை நுகர்வோர்களாக மாற்றி விட்டன.
கலை, அறிவியல், விளையாட்டு என்பது இன்று வசதிபடைத்தவர்களுக்கும், சாதிக்க துடிப்பவர்களுக்குமே என்றாகி விட்டது.

இதனால் பல இளைஞர்கள் அறிதிறன்பேசியிலும், கணினியிலும் விரலசைவுகளினால் விளையாடி, தங்களின் காலத்தை வீணடித்துக் கொள்கிறார்கள். சாதனை படைத்தவர்கள் இவ்வாறு நேரத்தை வீணடிப்பதில்லை என்பதை இளைஞர்கள் உணர வேண்டும்.
தொலைக்காட்சி நெடுந்தொடர்கள் பெண்கள் மனதை சீரழித்து வருகிறது. இந்த நெடுந்தொடர்களில் வரும் கற்பனை கதாபாத்திரங்கள் உண்மையென நம்பி, அந்த கொடூர கதாபாத்திரமாக தங்களையும் மாற்றி தங்களின் வாழ்க்கையில் நிம்மதியை இழக்கிறார்கள்.

பெரும்பாலான தொலைக்காட்சிகள் தங்களது நெடுந்தொடர்களில் பெண்களுக்கு எதிரான விஷயங்களை காட்டிக் கொண்டிருக்கின்றன. சமூக ஊடகங்கள் நட்பு வட்டாரத்தை விரிவுப்படுத்துகிறேன் என்று பல தீய நட்புகளைத்தான் வளர்க்கும்.

இதனால், நமக்கும், சமூகத்திற்கும் எந்த பலனும் இல்லை என்பதை உணர வேண்டும். இந்த தொலைக்காட்சி, கைப்பேசி, கணினி, போன்றவற்றை அளவோடு பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் வாழ்வில் அமைதி நிலவும்.

சமூக ஊடகங்களை பயன்படுத்துவோர் நெருப்பில் குளிர் காய்வதுபோல அதிகமாக நெருங்கி விடாமலும், அதிகமாக நீங்கி விடாமலும் இருக்க வேண்டும்.


நுழைவுத் தேர்வு நுண்ணறிவுத் தேர்வல்ல!

By சா. பன்னீர்செல்வம் | Published on : 10th August 2017 02:32 AM |



மருத்துவம் பொறியியல் முதலிய தொழிற் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கையில் போட்டியாளரை வடிக்கட்டுதற்கும் பலதரப்பினர்க்குச் சமவாய்ப்பு அளிப்பதற்குமாக நேர்முகத் தேர்வு என்பதே சென்ற நூற்றாண்டின் நடைமுறையாக இருந்தது.

நேர்முகத் தேர்வென்பது ஒவ்வொரு மாணவனின் தனிப்பட்ட மனப்பான்மை, பொது அறிவு சிந்தனைத்திறன் என்பவற்றை அவரவரின் குடும்பம் மற்றும் சமூகப் பின்னணி எனும் அடிப்படையில் வெவ்வேறு கேள்விகளால் கண்டறியப்படுவதாக இருந்தது.

ஆனாலும், நேர்முகத் தேர்வு ஊழல் மயமாகிவிட்டதெனும் காரணத்தின் பேரில் அதற்கு மாற்றாக, தொழில் முறைப் படிப்புகளுக்கெனத் தனியான நுழைவுத் தேர்வு எனும் முறை தமிழக அளவில் 1984-இல் அறிமுகப்படுத்தப்பட்டு, பலத்த எதிர்ப்பின் காரணமாக 2005-இல் கைவிடப்பட்டது.

அதே சமயம் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள தொழில் முறைக் கல்லூரிகள் ஒவ்வொன்றிற்கும் தனித்தனி நுழைவுத்தேர்வு முறை தொடக்கம் முதல் இன்றளவும் நீடிக்கின்றது. இந்த நிலையில் மாநில அரசின் கட்டுப்பாட்டிலுள்ள தொழில் முறைக்கல்லூரிகளுக்கும் அனைத்திந்திய அளவிலான நுழைவுத்தேர்வு என்பதை காங்கிரசுக் கூட்டணி அரசு கடந்த 2010-இல் அறிமுகப்படுத்தியது.

அது தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் விதித்த இடைக்காலத்தடை 2013-இல் உச்சநீதிமன்றத் தீர்ப்பால் உறுதி செய்யப்பட்டது.
பின்னர் ஆட்சிக்கு வந்த பாரதிய ஜனதா கட்சி செய்த மறு சீராய்வு மனுவின் விளைவாக 2016-இல், நுழைவுத் தேர்வு சரியே என்பது உச்சநீதிமன்றத்தின் மறுதீர்ப்பாயிற்று. மறு சீராய்வு மனுவுக்கும், மறுபடியும் மாற்றுத் தீர்ப்புக்கும், மத்திய அரசு தானாகவே திட்டத்தைக் கைவிடுதற்கும் வாய்ப்பிருப்பதால் நுழைவுத் தேர்வு விவாதம் தொடர்தல் அவசியமாகிறது.

முதலாவது, பள்ளியிறுதித் தேர்வுக்குரிய பாடத்திட்டங்கள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகின்றன. ஒரே மாநிலத்தில் மாநில அரசுப் பள்ளிகள், மெட்ரிகுலேசன் பள்ளிகள், சி.பி.எஸ்.இ., நவோதயா பள்ளிகள், சர்வதேசப் பள்ளிகள் என வெவ்வேறு பாடத்திட்டத்துடன் நடைபெறும், பள்ளிகளாகின்றன.

வெவ்வேறு பாடத்திட்டத்துடன் படிக்கும் மாணவர்களுக்கு சி.பி.எஸ்.இ. என்னும் குறிப்பிட்ட பாடத்திட்டப் படியான தேர்வென்பது எள்ளளவும் நேர்மையற்ற செயலாகிறது.

நுழைவுத் தேர்வு என்பதென்ன? பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வில் தேர்ச்சியும், கூடுதல் மதிப்பெண்ணும் பெற்ற மாணவர்கள் மீண்டும் அனைத்திந்திய அளவிலான ஒரு பொதுத்தேர்வு எழுதுதல். பள்ளிப் பொதுத்தேர்வு எழுத்து முறைத்தேர்வு.

அதாவது வினாவுக்குரிய விடையைத் தான் படித்த பாடத்திலிருந்து சற்று நிதானமாகச் சிந்தித்து முடிவு செய்து எழுதுதல். நுழைவுத் தேர்வாவது, வினாவுக்கெனக் கொடுக்கப்பட்டுள்ள பதில்களில் எது சரியான விடையென்பதை டிக் செய்தல். இது எப்படிக் குறிப்பிட்ட தொழில் படிப்புக்குரிய தகுதியைத் தெரிவு செய்தலாகிறது?
குறிப்பிட்ட தொழிற் படிப்புக்குத் தகுதியாளரைத் தேர்வு செய்ய என்ன செய்ய வேண்டும்? குறிப்பிட்ட தொழிற்படிப்பிற்கும், அதன் வழிக்குறிப்பிட்ட பணிக்கும் தேவையான குணநலன்கள், தனித்திறன்கள் என்னென்ன எனப்பட்டியலிட்டுக் கொள்ள வேண்டும்.

அவை ஒவ்வொரு மாணவனிடமும், எந்தளவு அமைந்திருக்கின்றன என்பதைக் கண்டறியும் முறையில், ஒவ்வொரு வினாவுக்கும் அவரவர் மனப்பான்மை, சிந்தனைத்திறன் என்பவற்றிற்கேற்ப ஒவ்வொருவரும் வெவ்வேறு வகையாக விடையளிக்கும் முறையிலேயே வினாக்கள் அமைய வேண்டும்.

நேர்முகத் தேர்வின் போது முதலில் மாணவனின் வாழ்வியல் பின்னணி தொடர்பான கேள்விகள் கேட்டுத் தெரிந்து கொண்டு, அவரவர் சூழலுக்கேற்பக் கேள்விகளை எழுப்புவார்கள். அதுதான் சரியான தேர்வுமுறை.
நேர்முகத் தேர்வில் மாணவன் கூறும் விடையை அவனது வாழ்வியற் சூழலொடு பொருத்தி அதன் வழி விடையின் தகுதிப்பாட்டைப் புரிந்து கொள்ளுதல்போல நுழைவுத் தேர்வில் மாணவர்களின் வெவ்வேறு விடைகளின் தகுதிப்பாட்டைப் புரிந்துகொள்ள வாய்ப்பில்லை. எனவே, அனைவரும் ஒரே வகையான விடையளிக்கும் நுழைவுத் தேர்வின் வழி மாணவனின் தகுதியை மதிப்பிடுதல் உண்மையிலிருந்து முற்றிலும் விலகுவதாகிறது.
பொது நுழைவுத் தேர்வு நுண்ணறிவுத் தேர்வு என்கிறார்கள். என்ன நுண்ணறிவு? எழுத்து முறைத்தேர்வில் வினாவுக்குரிய விடையைத் தான் படித்த பாடத்திலிருந்து சற்று நிதானமாகச் சிந்தித்து எழுதுகிறான். நுழைவுத் தேர்வில் அதே வினாவுக்கு அதே விடையை கொடுக்கப்பட்ட பட்டியலில் நொடிப்பொழுதில் இனங்கண்டு டிக் செய்கிறான்.

ஆக நுண்ணறிவுத் தேர்வு என்பது ஏற்கெனவே படித்ததை நொடிப் பொழுதில் நினைவிற்கொணரும் நினைவுத்திறன் வெளிப்பாடன்றிச் சுய சிந்தனைத்திறன் வெளிப்பாடென்பதற்கு என்ன இருக்கிறது? எவ்வளவு கெட்டிக்கார மாணவனாயினும் நுழைவுத் தேர்வுக்கெனத் தனிப்பயிற்சி பெறாமல் நுழைவுத் தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெறுதல் இயலாதென்பது வெளிப்படை.

ஆக, பயிற்சி வகுப்புக்களில் வினா - விடையாக அளிக்கப்படும் பயிற்சியை நினைவிறுத்தி நுழைவுத் தேர்வில் சரியான விடையை நொடிப் பொழுதில் டிக் செய்தல் பழக்கப்படுத்தப்படியே சுற்றுகிற செக்கு மாட்டுத் திறமையன்றிச் சுய அறிவுத் திறனாகாது.

பயிற்சி வகுப்புகளில் இடம் பெறாது நுழைவுத் தேர்வில் இடம் பெறும் வினாக்களுக்கு எத்தனை விழுக்காட்டினர் சரியான விடைகளை டிக் செய்வர்?
தில்லி-எய்ம்சு, புதுச்சேரி - சிப்மர், சண்டிகர் - பி.ஜி.அய், இராணுவக்கல்லூரி ஆகிய மருத்துவக் கல்லூரிகளில் ஒவ்வொன்றிற்கும் தனித்தனியே நுழைவுத் தேர்வின் வழி இடம் பிடித்து, அங்கே தரப்படும் பயிற்சி முடித்துப் பட்டம் பெற்று, அந்த மருத்துவமனைகளிலும், பிற மருத்துவமனைகளிலும் பணியாற்றும் மருத்துவர்கள் அவ்வளவு பேர்களிடமும் வரும் அவ்வளவு நோயாளிகளும் முழுமையாகக் குணமடைகிறார்களா?

நுழைவுத் தேர்வென்பது ஒரு வடிக்கட்டல் முறை - அவ்வளவுதான். பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தரவரிசைப்படுத்துதல் என்பதே வடிக்கட்டலன்றி வேறல்லவே? மீண்டுமொரு வடிக்கட்டல் என்பது அரைத்த மாவையே அரைக்கின்ற வெட்டித்தனமல்லவா?

இவையெல்லாவற்றிற்கும் மேலாகப் பொது நுழைவுத்தேர்வு என்பதன் உள்வயணத்தைப் புரிந்து கொள்ளுதல் அவசியமாகிறது. சுதந்திரப் போராட்டத்தின்போது, சுதந்திர இந்தியா சுயாட்சியுடைய மாநிலங்களின் கூட்டாட்சியாக அமையும் என்று அன்றை தேசியத் தலைவர்கள் கூறினார்கள்.
ஆனால், சுதந்திரத்திற்குப் பின்னர் பாகிஸ்தான் பிரிவினையைக் காரணங்காட்டி இந்திய அரசியலமைப்பை, வலுவான மத்திய அரசுக்குட்பட்ட மாநில அரசுகள் என்னும் முறையில் அமைத்து விட்டார்கள்.
ஒரு விலக்காக, கல்வி என்பது மாநிலப் பட்டியலில் வைக்கப்பட்டது. மனித வாழ்வியலின் அடிப்படையாகின்ற கல்வியை மத்திய அரசின் வரம்புக்குட்படுத்தும் முயற்சியாக, நெருக்கடிநிலை அதிகாரத்தைப் பயன்படுத்தி அன்று பொதுப் பட்டியலுக்கு மாற்றினார் இந்திரா காந்தி.
இன்று கல்வி என்பதை பழையபடி மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வர வேண்டும். மிகப்பெரும்பான்மையான மக்களின் மொழியும், மதமும் ஒன்றாக இருக்கும் அமெரிக்காவில் பள்ளிக்கல்வி முற்றிலும் மாநில அரசின் பொறுப்பாகவும், அதிலும் தொடக்கக்கல்வி உள்ளாட்சி அமைப்புகளின் பொறுப்பாகவும் அமைகின்றன. பலமொழியினங்களைக் கொண்ட இந்தியாவில் பள்ளிக்கல்வியில் மத்திய அரசின் குறுக்கீடு முற்றிலும் தவறானது.

எனவே ஒரு மாநிலத்தில் அந்த மாநில அரசின் வரம்புக்குட்பட்ட பாடத்திட்டப்படியான பள்ளிகள் மட்டுமே இயங்க வேண்டும். சி.பி.எஸ்.இ. - இ.பி.எஸ்.இ. - ஓ.பி.எஸ்.இ. என ஒரே ஊரில் நான்கு விதமான பள்ளிகள் ஆகவே ஆகாது.

மாநிலப் பாடத்திட்டப் படியான தனியார் பள்ளிகள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.

இரண்டாவது, மாநில அரசுத் தொழிற்கல்லூரிகளிலும், மத்திய அரசுத் தொழிற்கல்லூரிகளிலும் மாநில அரசின் ஒதுக்கீடாகும் இடங்கள் மாநில அரசுப் பாடத்திட்டப்படியான பள்ளியிறுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலான தரவரிசைப்படியே நிரப்பப்பட வேண்டும்.
இரு வகையான கல்லூரிகளிலும் மத்திய அரசு ஒதுக்கீடாகும் இடங்களை அந்தந்த மாநில அரசுப்பள்ளியிறுதித் தேர்வுத்தரவரிசைப் பட்டியலில் முதல் வரிசை மாணவர்களுக்கு வழங்கலாம். அல்லது அந்த இடங்களுக்கு மட்டும் பொது நுழைவுத் தேர்வு நடத்தலாம். எல்லா இடங்களுக்கும் மத்திய நுழைவுத் தேர்வென்பது எக்காரணங்கொண்டும் எவ்வகையாகவும் ஏற்கத்தக்கதல்ல.

தற்போது இழுபறியாகும் நுழைவுத் தேர்வுச் சிக்கலுக்கு என்னவழி? மாநிலப் பாடத்திட்டப்படிப் படித்து நுழைவுத் தேர்வெழுதியோரின் விழுக்காட்டிற்கேற்ப அவர்களுக்கான இட ஒதுக்கீட்டை மறுத்தல் இந்திய அரசியல் சட்டம் ஏற்றுக் கொண்டிருக்கும் இட ஒதுக்கீடு எனும் கோட்பாட்டின் அடிப்படையை மறுப்பதாகி, இந்திய அரசியலமைப்பை அவமதிப்பதாகும் அல்லவா?
அண்மையில் 'தினமணி' தலையங்கத்தில் குறிப்பிட்டவாறு, நுழைவுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணையும் பள்ளியிறுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணையும் கூட்டி அவற்றின் சராசரி அடிப்படையில் அனுமதித்தலே தற்போதைய இழுபறிச் சிக்கலுக்குத் தீர்வாக அமையும்!

நீட்' தேர்வு விலக்கு விவகாரம்: விசாரித்து அறிக்கை அளிக்க மத்திய அமைச்சர்களின் மூவர் குழு

தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (நீட்) விலக்கு விவகாரம்
குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்குமாறு மத்திய அமைச்சர்கள் அடங்கிய மூவர் குழுவை பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மருத்துவப் படிப்புகள் சேர்க்கைக்காக நடத்தப்படும் தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வில் ('நீட்') இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரி மத்திய அரசிடம் தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இது தொடர்பாக தமிழக சட்ட ப் பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக மத்திய அரசிடம் அனுப்பப்பட்டது. ஆனால், அதற்கான ஒப்புதல் பெறப்படவில்லை. இந்நிலையில், நீட் தேர்வுகள் முடிகள் வெளியிடப்பட்டன.

தமிழகத்தில் மாநிலப் பாடத் திட்டத்தில் படித்த லட்சக்கணக்கான மாணவர்கள் 'நீட்' தேர்வால் பாதிப்புக்கு உள்ளாவதாக தமிழகத்தில் திமுக உள்ளிட்ட கட்சிகள் போராட்டங்களில் ஈடுபட்டன. இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் அதிமுக, திமுக, மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் எழுப்பினர்.

இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் தருவதற்காக தமிழகத்தைச் சேர்ந்த சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உள்பட ஐந்து துறைகளின் அமைச்சர்கள் இருமுறை தில்லியில் முகாமிட்டு சம்பந்தப்பட்ட துறைகளின் மத்திய அமைச்சர்களைச் சந்தித்து வலியுறுத்தினர். மக்களவைத் துணைத் தலைவர் மு.தம்பிதுரை அமைச்சர்களை அழைத்து சென்று பிரதமரைச் சந்தித்து வலியுறுத்தினார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் தில்லி வந்தபோது இந்த விவகாரம் தொடர்பாக பிரதமரைச் சந்தித்து வலியுறுத்தினார். எனினும், இந்த விவகாரத்தில் எதிர்பார்த்த பலன் கிடைப்பதில் தாமதமானது.

இந்நிலையில், 'நீட்' தேர்வில் இருந்து ஓராண்டுக்கு விலக்கு அளிக்கும் அவசரச் சட்ட முன்மொழிவை மத்திய உள்துறையிடம் தமிழக அரசு அளித்தது. இதைத் தொடர்ந்து, தில்லி நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமரை மீண்டும் அமைச்சர் விஜயபாஸ்கரும், மக்களவைத் துணைத் தலைவர் மு.தம்பிதுரையும் நேரில் சந்தித்து பேசினர்.

இச்சூழலில், இந்த விவகாரத்தில் உள்ள சட்டச் சிக்கல்களை ஆராய்ந்து அறிக்கை அளிக்க மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, பிரதமர் அலுவலக விவகாரங்கள் துறை அமைச்சர் ஜித்தேந்தர் சிங், மத்திய வர்த்தகத் தொழில் துறை இணையமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் ஓரிரு தினங்களில் தங்களது அறிக்கையை பிரதமரிடம் அளிக்க உள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இக்குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த நிர்மலா சீதாராமன் இடம் பெற்றிருப்பதால், அவருக்கு தமிழகத்தின் கல்விச்சூழல், கிராமப்புற மாணவர்களின் நிலைமை ஆகியவை குறித்து நன்கு தெரியும் எனக் கூறப்படுகிறது.

அனைத்து மாநிலங்களிலும் மருத்துவப் படிப்புகளுக்கான கவுன்சிலிங் ஏறக்குறைய முடிந்து விட்டது.

இந்நிலையில், தமிழகம் மட்டும் 'நீட்' தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான மசோதா மற்றும் தாற்காலிக விலக்குப் பெறும் அவசரச் சட்ட மசோதாவைக் கொண்டு வந்திருப்பதால் அது பற்றி மத்திய அரசு பரிசீலிக்க வாய்ப்பிருப்பதாக தகவலறிந்த தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன

வெளியானது மாபெரும் தீபாவளி சலுகை...! "ஜியோ பைபர்" ரூ.5௦௦- கு 100 GB..!




ஜியோ அறிவிக்கும் எந்த அறிவிப்பும் அது சலுகையாக தான் இருக்கும். அதனால் தான் மக்கள் மத்தியில் ஜியோ மாபெரும் இடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில் மீண்டும் ஒரு மாபெரும் சலுகையை வழங்க திட்டமிட்டுள்ளது ஜியோ.

அதாவது, டேட்டா சேவையில் ஒரு மாபெரும் புரட்சியையே உருவாக்கிய ஜியோ தற்போது ஜியோ பைபர் நெட்சேவையை வழங்க உள்ளது. தங்களது வாடிக்கையாளர்களுக்கு தீபாவளிபரிசாக இந்த திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளது ஜியோ என்பது கூடுதல் தகவல்.

திட்டம் விவரம் :இந்த சிறப்பு திட்டத்தின் படி, வெறும் ரூபாய் 5௦௦-கு,1௦௦ ஜிபி டேட்டாவை வழங்க உள்ளது.

1 gbps வேகத்தில் சேவையை வழங்க உள்ள ஜியோ கண்டிப்பாக மக்களிடேயே மீண்டும் நல்ல வரவேற்பை பெரும் என்பதில்எந்த மாற்றமும் இருக்காது.இந்த திட்டமானது ஆரம்பத்தில் 1௦௦ முக்கிய நகரங்களில் தொடங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை இஷா அம்பானி அவர்கள் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

'இதே நிலை நீடித்தால் அரசு ஸ்தம்பிக்கும்': எச்சரிக்கும் அரசு ஊழியர்கள்!
ஜாக்டோ ஜியோ உயர்மட்டக்குழு உறுப்பினரும், தமிழ்நாடுஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சிவகங்கை மாவட்டச் செயலாளருமான முத்துப்பாண்டியன் செய்தியாளர்களிடம் பேசும்போது...

"சுமார் 14 ஆண்டுகளுக்கு பின் அனைத்து ஆசிரியர், அரசு ஊழியர்கள் இயக்கங்களும் இணைந்து ஜாக்டோ ஜியோ என்ற கூட்டமைப்பின் மூலம் புதிய பென்சன் திட்டத்தை கைவிட வேண்டும், ஊதியக்குழு மாற்றத்தை அமுல்படுத்திடவேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முதல் கட்டமாக, கடந்த மாதம் 18-ம் தேதி மாவட்ட தலைநகரில் ஆரப்பாட்டம் நடத்தினோம், அதன் பின் கடந்த 5-ம் தேதி காவல்துறையின் கடுமையான கட்டுப்பாடுகளையும் மீறி, சென்னை புற நகரில் காவல் துறையால் தடுத்து வைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான ஊழியர்களையும் மீறி சென்னையே ஸ்தம்பிக்கும் வகையில் லட்சக்கணக்கான ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் சேப்பாக்கம் மைதானத்தின் முன்பு கூடி இரண்டாம் கட்ட ஆர்ப்பாட்டத்தை நடத்தினோம்.

ஆர்ப்பாட்டம் முடிந்துள்ள நிலையில் மாநில நிர்வாகிகளை தமிழக அரசு அழைத்து பேசாமல் மௌனம் காப்பது என்பது எங்களை அரசே போராட்டக்களத்திற்கு தள்ளுகிறது. மேலும் பழைய ஓய்வூதியத் திட்டத்தினை தொடர்வதற்காக அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவின் காலம் கடந்த மார்ச் 25-ம் தேதியுடன் முடிந்துவிட்ட நிலையில், அக்குழுவிடமிருந்து அறிக்கையை பெறாமல் மீண்டும் நவம்பர் வரை கால நீட்டிப்பு செய்திருப்பது எங்களது போராட்டத்தை தமிழக அரசு கொச்சைப்படுத்தும் செயலாகும்.போராடும் அமைப்புகளோடு பேச்சுவார்த்தை நடத்தாமல் போராட்டக்களத்திற்கே வராத ஆளும் அரசுகளின் ஏவலாளியாக செயல்படும் அமைப்புகளோடு தமிழக முதல்வர் பேச்சு வார்த்தை நடத்துவது என்பது போராட்டக் களத்தில் கோபாவேசத்தோடு போராடிய ஆசிரியர் அரசு ஊழியர்களை கோபப்படுத்தியுள்ளது.

மேலும் தமிழக அரசு ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை அழைத்து பேசி கோரிக்கைகளுக்கு தீர்வு காணவில்லையென்றால் திட்டமிட்டபடி வருகிற ஆகஸ்டு 22ம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெறும். மீண்டும் இதே நிலை தொடர்ந்தால் செப்டம்பர் 7ம் தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம். இதில் நூறு சதவிகிதம் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் பங்கேற்பார்கள். இவ்வேலை நிறுத்தத்தின் மூலம் தமிழக அரசின் ஒட்டுமொத்த செயல்பாடும் ஸ்தம்பிக்கும்' என அவர் எச்சரித்தார்.

Posted by kalviseithi.net
ஏர் இந்தியா விமானம் டெக்ரானில் தரையிறக்கம்
2017-08-10@ 00:10:15


புதுடெல்லி: பிராங்பர்டிலிருந்து டெல்லிக்கு 249 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், அதன் முன்பகுதி ஜன்னலில் ஏற்பட்ட விரிசல் காரணமாக, அவசர அவசரமாக டெக்ரானில் தரையிறக்கப்பட்டது.ஏர் இந்தியா விமானம் பிராங்பர்டிலிருந்து நேற்று காலை டெல்லிக்கு புறப்பட்டது. அப்போது, விமானத்தின் முன்பகுதி ஜன்னலில் விரிசல் இருந்ததை விமானி கவனித்தார். அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் இருக்க விமானத்தை உடனே டெக்ரானில் தரையிறக்கினார். காலை 6.20 மணிக்கு 249 பயணிகளும் பத்திரமாக விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். பின்னர் மும்பையிலிருந்து மாற்று விமானம் வரவழைக்கப்பட்டு, பயணிகள் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர். செல்லப்பட்டனர்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் பரவும் காய்ச்சல் : உஷாராகுமா சுகாதாரத்துறை

பதிவு செய்த நாள்09ஆக
2017
23:54


ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துாரின் பல்வேறு பகுதிகளில் குழந்தைகளுக்கு காய்ச்சல் பரவுகிறது. எனவே தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்.

இந்நகரில் கோவிந்தன் நகர் காலனி, ரைட்டன்பட்டி, அசோக்நகர் பகுதிகளை சேர்ந்த சில குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டு, டெங்கு அறிகுறியாக காணப்பட்டது. இதையடுத்து சிவகாசி தனியார் மருத்துவமனைகளில் அவர்கள் சிகிச்சை பெறுகின்றனர்.

இந்நிலையில் அரசு மருத்துவமனைக்கு காய்ச்சல் ஏற்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. 

நகரில் நிலவும் சுகாதாரக்கேடு ஒருபுறம் இருந்தாலும், 15 முதல் 18 நாட்களுக்கு ஒருமுறை நடக்கும் குடிநீர் சப்ளையால், அவற்றின் பாதுகாப்பு கேள்விக்குறியாகவே உள்ளது.

பிளாஸ்டிக் டிரம்களில் பிடித்து வைக்கும் தண்ணீரில், சில நாட்களிலேயே ஒருவித வாடை வீசுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே நகராட்சி நிர்வாகம் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைந்து எடுத்து, தொடர் கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும்
என்பது ஸ்ரீவில்லிபுத்துார் மக்களின் எதிர்பார்ப்பாகும்.

இதற்கிடையில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சேமிக்கும் தண்ணீரை பாதுகாப்பாக மூடி வைக்க வேண்டும். நன்றாக கொதிக்க வைத்து ஆறிய பின் குடிக்க வேண்டும். பிளாஸ்டிக் டிரம்களை நன்றாக சுத்தம் செய்து, அதில் தண்ணீரை சேமித்து மூடி வைக்க வேண்டும் என சுகாதாரத் துறை பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கி
உள்ளது.

NEWS TODAY 26.01.2026