Friday, August 11, 2017

சுமையாக விரும்பாமல் தம்பதி தற்கொலை
பதிவு செய்த நாள்10ஆக
2017
23:56


அவிநாசி: வசதியிருந்தும், உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், பெற்ற பிள்ளைகளுக்கு சுமையாக இருக்க விரும்பாத முதிய தம்பதி, விஷம் குடித்து இறந்தனர்.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி, சீனிவாசபுரத்தை சேர்ந்தவர் கணபதியப்பன், 90; மனைவி வள்ளியம்மாள், 86. இவர்களுக்கு மூன்று மகன்கள், மூன்று மகள்கள் உள்ளனர்; அனைவருக்கும் திருமணமாகி விட்டது.
மகன்களில் ஒருவர், ஊட்டியிலும், ஒருவர், திருப்பூரிலும், குடும்பத்துடன் வசிக்கின்றனர். ஆட்டோ உரிமையாளரான, இளைய மகன் குமாரசாமியுடன், கணபதியப்பன், வள்ளியம்மாள் இருவரும், சீனிவாசபுரம் வீட்டில் வசித்து வந்தனர்.

கடந்த மூன்றாண்டுகளுக்கு முன், வள்ளியம்மாள் தவறி விழுந்து, படுத்த படுக்கையாக இருந்துள்ளார். கணபதியப்பனும், நீண்ட நாளாக மூட்டு வலியால், நடக்க சிரமப்பட்டு வந்தார். குமாரசாமி, பெற்றோருக்கு காலை காபி, டிபன் கொடுத்து செல்வது வழக்கம்.

நேற்று காலை, அவர், காபியுடன் பெற்றோரை எழுப்ப சென்ற போது, இருவரும், மயங்கி கிடந்தனர். அருகே காலி விஷ பாட்டில் கிடந்துள்ளது. அதிர்ச்சியடைந்த அவர், ஆம்புலனசில், இருவரையும் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்; பரிசோதித்த டாக்டர், இருவரும் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

வயதான காலத்தில், பெற்ற பிள்ளைகளுக்கு சுமையாக இருக்க விரும்பாமல், வயதான தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியது.
வேலூர் மாநகராட்சி அதிகாரிகளிடம் சென்னையில் விசாரணை

பதிவு செய்த நாள்10ஆக
2017
22:49


வேலுார்: வேலுார் மாநகராட்சி கமிஷனர் குமாரின் லஞ்ச முறைகேடுகள் குறித்து, மாநகராட்சி அதிகாரிகளை, சென்னைக்கு அழைத்து, நகராட்சி இயக்குனரக அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். வேலுார் மாநகராட்சி கமிஷனராக இருந்தவர் குமார், 54. நேற்று முன்தினம், கான்ட்ராக்டர் பாலாஜியிடம், 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய போது, லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். குமார் வீடு, அலுவலகத்தில் சோதனை நடத்தி, 10.44 லட்சம் ரூபாய், 26 சவரன் நகை, பணம் எண்ணும் இயந்திரம் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர்.

நீதிபதி உத்தரவு : குமாரை, 23ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளதால், அவரை ஜாமினில் எடுக்க, குடும்பத்தினர், சென்னை உயர் நீதிமன்றம் சென்றுள்ளனர். தற்போது, வேலுார் மாநகராட்சி பொறியாளர் பாலசுப்பிரமணியன், பொறுப்பு கமிஷனராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
பாலசுப்பிரமணியன் மற்றும் சில அதிகாரிகள், நேற்று காலை, சென்னை சென்றனர். அவர்களிடம், நகராட்சிகள் இயக்குனரக அதிகாரிகள், குமார் ஊழல்கள் குறித்தும், அதற்கு உடந்தையாக உள்ள அதிகாரிகள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரூ.10 கோடி
அதேபோல், வேலுார் மாநகராட்சியில் வேலை செய்யும் கான்ட்ராக்டர்கள் சிலரும், விசாரணைக்கு சென்னை சென்றுள்ளனர். குமார், 40 சதவீதம் வரை கமிஷன் வாங்கி, 10 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து சேர்த்துள்ளதாக, அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதை கேட்டு, அதிர்ச்சி அடைந்த உயர் அதிகாரிகள், குமாரின் ஊழல்கள் குறித்து முழுமையாக விசாரிக்க, 10 பேர் குழுவை நியமித்துள்ளனர். அந்த குழு, வேலுாரில் விசாரணை நடத்த உள்ளது.

இதற்கிடையில், வேலுார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள குமார், நேற்று மதியம், மட்டன் பிரியாணி, சிக்கன், 65 கேட்டு தகராறு செய்துள்ளார்.
குமார் கைது செய்யப்பட்டுள்ளதால், அவருடன் கூட்டணி அமைத்து, லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் பலர், கலக்கத்தில் உள்ளனர்.
வங்கிகளுக்கு நாளை முதல் 4 நாட்கள் தொடர் விடுமுறை

பதிவு செய்த நாள்11ஆக
2017
05:55



சென்னை: வங்கிகள், நாளை(ஆக., 12) முதல் நான்கு நாட்கள் செயல்படாது.
வங்கிகளுக்கு வழக்கமாக, மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை விடுமுறை நாளாகும். அதனால், வங்கிகள் நாளை செயல்படாது. நாளை மறுநாள், ஞாயிறு விடுமுறை. அதைத் தொடர்ந்து, திங்கட்கிழமை, கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை; செவ்வாய் அன்று, சுதந்திர தினம் என்பதால், வங்கிகள், நாளை முதல், 15 வரை, நான்கு நாட்களுக்கு செயல்படாது.

மருத்துவ கவுன்சிலிங் இன்று ரிசல்ட்
பதிவு செய்த நாள்10ஆக
2017
23:56


சென்னை: அகில இந்திய மருத்துவ கவுன்சிலிங்கின் இரண்டாம் கட்ட முடிவுகள், இன்று வெளியாகின்றன. மத்திய மற்றும் தனியார் பல்கலைகளில், இரண்டாம் கட்ட, மருத்துவ கவுன்சிலிங், ஆக., 5 - 8 வரை நடந்தது. இதன் முடிவுகள், இன்று வெளியாகின்றன. 

இந்த கவுன்சிலிங்கில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள், கல்லுாரிகளில் சேர, இன்று வரை அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது. அந்த அவகாசம், 19 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, வரும், 21 முதல், இறுதிச்சுற்றுகவுன்சிலிங் நடக்கிறது.

திருநெல்வேலிக்கு இன்று சிறப்பு ரயில்
பதிவு செய்த நாள்10ஆக
2017
22:27


சென்னை: சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு, 13 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகளுடன், இன்று சுவிதா ரயில் இயக்கப்படுகிறது.
இந்த ரயில், எழும்பூரில் இருந்து, இரவு, 11:45க்கு புறப்பட்டு, நாளை பகல், 12:40 மணிக்கு, திருநெல்வேலி சென்றடையும். செங் கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்துார் மற்றும் கோவில்பட்டியில் நின்று செல்லும்.
டாக்டர்கள் பரிந்துரை இன்றி மருந்து, மாத்திரை வழங்க தடை

பதிவு செய்த நாள்10ஆக
2017
21:52



சேலம்: ''டாக்டர்கள் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்து, மாத்திரைகளை வழங்க வேண்டாம் என, மருந்து கடைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது,'' என்று, தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்க பொதுச் செயலர், செல்வம் கூறினார்.

இது குறித்து, அவர் கூறியதாவது: தமிழகத்தின் முக்கிய நகரங்களில், டெங்கு காய்ச்சலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள, 33 ஆயிரம் மருந்து கடைகளிலும், காய்ச்சலுக்காக மருந்து, மாத்திரைகளை கேட்டு வரும் நோயாளிகளுக்கு, தவிர்க்க முடியாத காரணமாக இருந்தால், ஒரு வேளைக்கு மட்டும் மாத்திரைகள் வழங்கப்படும்.
காய்ச்சலின் தன்மையை கருதி, நோயாளிகள் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சை பெற, தேவையான அறிவுரைகளை எங்களின் சங்க உறுப்பினர்கள் வழங்குவர். நகர, கிராம பகுதியில் உள்ள மக்கள், சுய மருத்துவ சிகிச்சையை தவிர்க்கும் வகையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அது மட்டுமின்றி, குறிப்பிட்ட பகுதிகளில், காய்ச்சலின் தாக்கம் அதிகம் இருப்பின், அது குறித்து சுகாதாரத் துறையின் கவனத்துக்கு எடுத்துச் செல்ல அறிவுரை வழங்கி உள்ளோம்.

டெங்கு காய்ச்சல் பரவுவதையும், அதனால் ஏற்படும் உயிரிழப்பை தடுத்து, மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவுள்ளோம்.
டாக்டர்களின் பரிந்துரைசீட்டு இல்லாமல், மருந்து, மாத்திரைகள் வழங்க வேண்டாம் என, மருந்து கடைகளுக்கு அறிவுறுத்தி உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
நீட் தேர்வு: தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி

பதிவு செய்த நாள்11ஆக
2017
12:41




புதுடில்லி: நீட் தேர்வில், தமிழக பாடதிட்டத்தில் 85 சதவீத உள் ஒதுக்கீடுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க சுப்ரீம் கோர்ட் மறுத்துவிட்டது.
மருத்துவ படிப்பில் சேர மாநில பாட திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் சிபிஎஸ்இ மாணவர்கள் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த கோர்ட், உள் ஒதுக்கீடு வழங்கும் உத்தரவை ரத்து செய்தது. 

இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. அவசர வழக்காக விசாரித்த சுப்ரீம் கோர்ட், மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தது.

அப்போது நீதிபதிகள் கூறுகையில், 85 சதவீத உள் ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதற்கு தடை விதிக்க முடியாது. மாநில பாட திட்டம், சி.பி.எஸ்.இ., பாட திட்டம் என மாணவர்களுக்கு இடையே பாரபட்சம் காட்டுவதை ஏற்க முடியாது. சமநிலை முறை வேண்டும் என்பதற்காக நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. வேறுபாட்டை அதிகபடுத்தும் நீட் விலக்கு மசோதாவை தமிழக அரசு கொண்டு வந்தது ஏன் என கேள்வி எழுப்பினர்.

NEWS TODAY 26.01.2026