Wednesday, August 16, 2017


மருத்துவ படிப்பை கைவிட்டால் ரூ.2 கோடி தண்டம் கட்டணும்

பதிவு செய்த நாள்15ஆக
2017
21:26

சென்னை, :'அரசு கல்லுாரிகளில் சேர்ந்து, உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளை பாதியில் கைவிட்டால், அரசு சாரா டாக்டர்கள், இரண்டு கோடி ரூபாய் செலுத்த வேண்டும்' என, மருத்துவக் கல்வி இயக்ககம்தெரிவித்துள்ளது.அரசு மருத்துவமனைகளில், 'சூப்பர் ஸ்பெஷாலிட்டி' எனப்படும், முதுநிலை உயர் சிறப்பு மருத்துவத்துக்கான, டி.எம்., - எம்.சி.எச்., படிப்புகளுக்கு, தமிழகத்தில், 192 இடங்கள் உட்பட, நாடு முழுவதும், 1,215 இடங்கள் உள்ளன. இதற்கும், 'நீட்' தேர்வு அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடப்பது வழக்கம்.
இதில், மாநிலங்களுக்கு இருந்த, 50 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு உள்ளது. இந்தாண்டு முதல், 100 சதவீத இடங்களுக்கும், மத்திய அரசு மாணவர் சேர்க்கையை நடத்துகிறது. இதற்கான, 'ஆன்லைன்' கவுன்சிலிங், இன்று நடைபெற உள்ளது.

இது குறித்து, தமிழக மருத்துவக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழக அரசு மருத்துவக் கல்லுாரிகளில், உயர் சிறப்பு படிப்பில் சேரும், அரசு டாக்டர்கள் மற்றும் அரசு சாரா டாக்டர்கள் அனைவரும், இரண்டு கோடி ரூபாய்க்கான உத்தரவாத ஆவணங்களை, ஏழு நாட்களில், மருத்துவக் கல்வி இயக்ககத்தில் அளிக்க வேண்டும். டாக்டர்கள், அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் பட்சத்தில், தொகைக்கான உத்தரவாதம், தானாக செயலிழந்து விடும்.

அரசு சாரா டாக்டர்கள், படிப்பை முடித்ததும், 10 ஆண்டுகள், அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும். படிப்பை பாதியில் கைவிட்டாலோ, அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற தவறினாலோ, இரண்டு கோடி ரூபாயுடன், அரசிடம் இருந்து பெற்ற, உதவித்தொகையையும்
சேர்த்து செலுத்தவேண்டும்.தொகையை செலுத்தாவிட்டால், ஏற்கனவே படித்த படிப்புகளுக்கான அசல் சான்றிதழ், திருப்பி தர மாட்டாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
'நர்சிங் ஹோம்'களுக்கு வரித்துறை கிடுக்கிப்பிடி
தமிழகம், புதுச்சேரியில் உள்ள தனியார், 'நர்சிங் ஹோம்'கள், வருமான வரித்துறை, 'கிடுக்கிப்பிடி'யில் சிக்குகின்றன.





நம் நாட்டில், அரசு மருத்துவமனைகள் போது மான அளவுக்கு இல்லாததால், புற்றீசல் போல் தனியார், 'நர்சிங் ஹோம்'களின் எண்ணிக்கை பெருகி வருகிறது.

சமீபத்தில், லோக்சபாவில் தாக்கல் செய்யப் பட்ட கணக்கு தணிக்கை அறிக்கையில்,'பெரும் பாலான,தனியார்,'நர்சிங் ஹோம்'கள், வருமான வரித்துறையின்கண்காணிப்பிற்கு வரவில்லை'

என, சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. மேலும், 2011 - 2013 வரை, 1,500க்கும் குறைவான, 'நர்சிங் ஹோம்' களே, வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளன; அதன் எண்ணிக்கையும், வெகுவாக குறைந்து வருவதாக, குறிப்பிடப்பட்டுஉள்ளது.

தற்போது, 'நர்சிங் ஹோம்'களின் ஆண்டு வருவாய், 40 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டிஉள்ளது. அவற்றில், 10 சதவீதத்திற்கு கூட, வருமான வரி கிடைப்பதில்லை.

இதையறிந்த மத்திய அரசு, நேரடி வரிகள் வாரியம் வழியாக, நாடு முழுவதும் உள்ள, வருமான வரித் துறை அலுவலகங்களுக்கு, அது பற்றி தகவல் களை அனுப்பி உள்ளது.இது குறித்து, தமிழக வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது: பெரிய மருத் துவமனைகள், வருமானவரித் துறையினரின் நேரடி பார்வையில் இருந்து தப்ப முடியாது. ஆனால், கண்ணுக்கு தெரியாத இடங்களில் கூட, தனியார், 'நர்சிங் ஹோம்'கள் செயல்படுகின்றன.

இவற்றுக்கு, உள்ளாட்சி அமைப்பு மற்றும் சுகாதாரத் துறையும் அனுமதி அளிக்கின்றன. அத் துறை களிடம், 'நர்சிங் ஹோம்'கள் குறித்த விபரங்கள் உள்ளன. அவற்றில், 10 சதவீதத்திற்கும் குறை வானவை தான், வருமான வரிக் கணக்கு தாக் கல் செய்கின்றன.அதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள, 'நர்சிங் ஹோம்' களின் விபரங்களை சேகரிக்க உள்ளோம். அதன்பின், வரி செலுத்தாதவற்றின் மீது நடவடிக்கை பாயும்.இவ்வாறு அவர்கள் கூறினர். 

- நமது சிறப்பு நிருபர் -

சமூக வலைதளங்களை கலக்கும், 'சராஹா'இணைய உலகின், 'பிக் பாஸ்!'
பதிவு செய்த நாள்15ஆக
2017
21:25

நம்மை அடையாளப்படுத்திக் கொள்ளாமல், ஒருவரை பற்றி, மனதில் தோன்றிய தகவலை, அவர்களுக்கு அனுப்ப உதவும், 'சராஹா' எனப்படும், 'மொபைல் போன் ஆப்' சில வாரங்களாக, இணைய உலகில், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பகிரும் வசதிசமூக வலைதளங்களில், சில நாட்களாக, 'சராஹா' எனப்படும், 'மொபைல் போன் ஆப்' சரளமாக புழங்குகிறது. பொது கழிப்பறைகளுக்கு சென்றால், சுவர்களில், வார்த்தை கிறுக்கல்கள் இருப்பதை காணலாம்; பள்ளி, கல்லுாரி கழிப்பறைகளில், கிசுகிசுக்களை பார்க்க முடியும். அதை யார் எழுதினர் என, தெரியாது.

அந்த அம்சம், இணையத்தில் இருந்தால் எப்படி இருக்கும்... அது தான், 'சராஹா!' இதை, கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிளின், ஐ.ஓ.எஸ்., இயங்குதளங்களில் பதிவிறக்கம் செய்து, உங்கள், 'இ - மெயில்' முகவரி மூலம் பதிவு செய்யலாம். பின், 'பேஸ்புக்' போல், உலகம் முழுவதும், 'சராஹா'வில் பதிவு செய்துள்ள நபர்களை தேடிப் பிடிக்க முடியும்.

நீங்கள் பதிவு செய்த பின், அதை உங்கள், 'பேஸ்புக், டுவிட்டர்' மற்றும் 'வாட்ஸ் ஆப்' கணக்குகளில், பகிரும் வசதி உள்ளது. அதை பார்க்கும் உங்கள் நண்பர்கள், உங்களை பற்றி மனதில் அடக்கி வைத்திருந்த கருத்துக்களை தயக்கமின்றி தெரிவிப்பர். ஆனால், யார் அனுப்பினர் என, தெரியாது.

உங்களை பற்றி, யாராவது நல்ல கருத்தை அனுப்பினால், அதை, 'பேஸ்புக்' அல்லது 'டுவிட்டரில்' பகிர்ந்து, பெருமைப்பட்டு கொள்ளலாம். இந்தியாவில் மட்டும், சில நாட்களுக்குள், 10 லட்சத்திற்கும் அதிகமானோர், 'சராஹா'வில் பதிவு செய்துள்ளனர்.

பரபரப்புதனியார், 'டிவி'யின், 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில், ஒருவரை பற்றி அவருக்கு தெரியாமல், கருத்துக் கூறும் வசதி, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அது போல, இந்த, 'சராஹா'வை, இணையத்தின், 'பிக் பாஸ்' என, இதை பயன்படுத்துவோர், பெருமிதம் கொள்கின்றனர்.
- நமது நிருபர் -

Tuesday, August 15, 2017


சிகிச்சை அளிக்காமல் சிறுமி, முதியவர் இறந்த விவகாரம் ஆம்பூர் அரசு மருத்துவமனை அலுவலரிடம் விசாரணை


2017-08-15@ 01:49:20




ஆம்பூர் : சென்னை வேங்கைவாசல் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் ராஜ்குமார், அவரது நண்பர் சென்னை தி.நகர் பகுதியை சேர்ந்த சந்தானம் (73) ஆகியோர் நேற்று முன்தினம் சென்னையில் இருந்து பெங்களூருக்கு காரில் புறப்பட்டனர். காரை ராஜ்குமார் ஓட்டி வந்தார். வேலூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த பச்சகுப்பம் அருகே தேசிய நெடுஞ்சாலையில், முன்னால் சென்ற லாரி திடீரென திரும்பியதில் ராஜ்குமார் கார் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த இருவரும் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லாததால் பிற்பகல் 1.10 மணியில் இருந்து இரண்டரை மணி நேரமாக சிகிச்சை அளிக்கப்படவில்லை. இதில் ராஜ்குமார் இறந்தார். இதையடுத்து தனியார் ஆம்புலன்ஸ் மூலம் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சந்தானம் அனுமதிக்கப்பட்டார். இதேபோல ஆம்பூர் தாலுகா ராலகொத்தூரை சேர்ந்த ராஜேஷின் மகள் வைஷ்ணவி(13) மூச்சு திணறலுக்கு சிகிச்சை அளிக்க டாக்டர்கள் இல்லாமல், 2 மணி நேரமாக உயிருக்கு போராடி இறந்தார்.

டாக்டர்கள் இல்லாததால் ஒரே நாளில் 2 பேர் இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து தகவல் தெரிவிக்க ஆம்பூர் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் (பொறுப்பு) ஷர்மிளாவை தொடர்பு கொண்டபோது அவர் போனை எடுக்கவில்லையாம். மேலும் சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் சாந்தியையும் தொடர்பு கொள்ள முடியவில்லையாம். இந்நிலையில், பிரச்னைகள் முடிந்தபிறகு இரவு மருத்துவமனைக்கு வந்த ஷர்மிளா, நோயாளிகளுக்கு சிகிச்ைச அளித்துள்ளார். நேற்று காலை மீண்டும் மருத்துவமனைக்கு வந்த அவர், மருத்துவமனை கண்காணிப்பாளர் (பொறுப்பு) கென்னடியிடம் தனக்கு 15 நாட்கள் லீவு வேண்டும் எனக்கூறி கடிதத்தை கொடுத்துள்ளார். இதை கென்னடி ஏற்க மறுத்துள்ளாராம். இதற்கிடையில் மருத்துவமனையில் நடந்த சம்பவம் தொடர்பாக ஷர்மிளா மற்றும் டாக்டர்கள், ஊழியர்களிடம் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அமைச்சர் பதவி விலக அன்புமணி வலியுறுத்தல்

பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: வேலூர் மாவட்டம் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததால் இருவர் உயிரிழந்ததற்காக தமிழக ஆட்சியாளர்கள் வெட்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் சுகாதாரத்துறை முற்றிலுமாக செயலிழந்து விட்டதையே இது காட்டுகிறது. ஆம்பூர் நிகழ்வுகளுக்கு பொறுப்பேற்று சுகாதார அமைச்சர் பதவி விலக வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இன்ஸ்டண்ட் காஃபி போர் அடிக்குதா? அப்போ ஸ்ட்ராங்கா ஃபில்டர் காஃபி போடக் கத்துக்கலாமே!
By கஸ்தூரி ராஜேந்திரன், தேனி. | Published on : 14th August 2017 04:40 PM |

 சிலருக்கு கடையில் விற்பனையாகிற ப்ரூ, லியோ, நரசுஸ், உள்ளிட்ட காப்பித்தூள்களில் ஒன்றை வாங்கி ஃபில்டர் காஃபி தயாரிப்பதே திருப்தியாக இருக்கும். சிலருக்கோ, தாங்களே நேரடியாக சூப்பர் மார்கெட்டுகளுக்குச் சென்று தரமான காப்பிக் கொட்டைகளும், பீபரியும் வாங்கி தங்கள் கை பட மெஷினில் அரைத்து அதில் பதமாகச் சிக்கரி கலந்து நாசி மணக்க, மணக்க திடமான காப்பித் தூளை தாங்களே தயாரித்து அதில் காஃபி போட்டு அருந்தினால் தான் திருப்தியாக உணர முடியும். இதெல்லாம் அவரவர் மனநிலை சார்ந்த விஷயங்கள் என்றாலும் யோசித்துப் பார்க்கையில் இது கூட சற்று சுவாரஸ்யம் தரக் கூடிய விஷயம் தான் இல்லையா? சரி இப்போது தரமான, திடமான ஃபில்டர் காப்பித் தூள் எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்;
காப்பித்தூள் தயாரிக்கத் தேவையானவை...
  • பிளாண்டேஷன் A - 1/4 கிலோ 
  • பீ பரி - 1/4 கிலோ
  • சிக்கரி - 50 கிராம்
காப்பித்தூள் தயாரிக்கத் தேவையான பொருட்களை நாமே நேரடியாக வாங்கி, வீட்டிலேயே காப்பிக் கொட்டைகளை பதமாக வறுத்து, பீபரியும், சிக்கரியும் தேவையான அளவு சேர்த்து மெஷினில் அரைத்துக் கொள்வது ஒரு வகை... அல்லது சென்னையில் பல இடங்களில் தரமான காப்பித்தூள் அரவை அங்காடிகள் உள்ளன. அவற்றில் ஒன்றில் தரமான, மணமான காப்பித்தூளை சுடச் சுட அரைத்து விலைக்கு வாங்கிக் கொண்டு அதைக் கொண்டும் ஃபில்டர் காஃபி போட கற்றுக் கொள்ளலாம். இரண்டுமே ஒன்று தான். 
ஃபில்டர் காபி போடத் தேவையானவை:
  • மணமான காப்பித்தூள்: 2 முதல் 3 டேபிள் ஸ்பூன்
  • கொதிக்கும் தண்ணீர்: அரை கப்
  • பால்: 2 கப்
  • சர்க்கரை: தேவையான அளவு
  • காஃபி ஃபில்டர்
ஃபில்டர் காஃபி தயாரிக்கும் முறை:
காஃபி ஃபில்டரில் முதலில் தேவையான அளவு காப்பித்தூளைப் போட்டு அதன் மேல், உள்ளிருக்கும் குடை கொண்டு காப்பித்தூளை கெட்டித்து அடைக்கவும். பின்னர் கொதிக்கும் தண்ணீரை அதன் மீது மெதுவாக விட்டு ஃபில்டரை அடைத்து டிகாக்‌ஷன் இறங்கும் வரை 5 நிமிடங்கள் காத்திருக்கவும். கொதிக்கும் தண்ணீர் விடப்பட்டிருப்பதால் வெகு சீக்கிரமாகவே டிகாக்‌ஷன் இறங்கி விடும். காஃபி ப்ரியர்களுக்கு கள்ளிச்சொட்டுப் போன்ற அதிகாலையின் முதல் டிகாக்‌ஷனை கண்ணால் காண்பதைப் போன்ற பேரானந்தம் தரக்கூடிய செயல் வேறில்லை! சூடான டிகாக்‌ஷனில் தேவையானதை ஒரு கப்பில் ஊற்றிக் கொண்டு, தேவையான அளவு சர்க்கரை சேர்த்து அதன் பின்னரே கொதித்து இறக்கிய பாலை அதில் கலக்க வேண்டும்.
இப்போது லோட்டாவில் அந்தக் காஃபியை ஊற்றி ஒரு ஆற்று ஆற்றிப் பாருங்கள். மணக்க, மணக்க நுரை பொங்கும் ஃபில்டர் காஃபி தயார். மனதிற்குத் திருப்தியாக, நிறம், மணம், திடம் மூன்றும் ஒருங்கே அமைந்த ஃபில்டர் காஃபியை மட்டும் நம்மால் தயாரிக்க முடிந்தந்தென்று வையுங்கள் அப்புறம் எப்பேற்பட்ட தலைவலியாலும் நம்மை ஒன்றுமே செய்து விட முடியாது. 
மனச்சோர்வு, உடற்சோர்வு, தலைவலி, தொண்டை வலி எல்லாவற்றுக்குமே மிகச் சிறந்த நிவாரணியாக நாம் இந்த ஃபில்டர் காஃபியை உணரலாம்.
ஃபில்டர் காஃபி தயாரிக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை...
ஃபில்டரில் காப்பித்தூளைப் போட்டு உடனடியாக அதில் கொதிக்கும் தண்ணீரைச் சேர்த்து விடக் கூடாது. முதலில் குடை கொண்டு மூடி காப்பித்தூளை கெட்டிக்கச் செய்து அதன் மீது சிறிது, சிறிதாக நிதானமாகத் தான் கொதிக்கும் தண்ணீர் விடவேண்டும். அப்போது தான் தூள் இறங்காமல் வெறும் டிகாக்‌ஷன் மாத்திரம் ஃபில்டரில் இறங்கும். நமக்கும் கெட்டியான திடமான டிகாக்‌ஷன் கிடைக்கக் கூடும். அதே போல காஃபி போடும் போது முதலில் டிகாக்‌ஷனில் சர்க்கரை சேர்த்த பிறகே பால் சேர்க்க வேண்டும். அப்போது தான் காஃபி மணமாக இருக்கும்.


தொழில்நுட்பம் வளர்ந்த பிறகு மொட்டைக் கடுதாசி அனுப்ப முடியலையா? 'சரஹா' இருக்குங்க!
By DIN | Published on : 14th August 2017 04:01 PM |




நேர்மை என்ற பெயருடன் துவங்கப்பட்டுள்ள 'சரஹா' என்ற சமூக தளம் சமீபத்தில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. தன்னைப் பற்றி தெரிவிக்காமல், ஒரு நபருக்கு தான் சொல்ல வேண்டிய விஷயத்தை மட்டும் கொண்டு சேர்க்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ்-அப் போன்ற சமூக தளங்களை தொடர்ந்து 'சரஹா' புதிதாக கால் பதித்துள்ளது.

சரஹா-வில் என்ன புதுமை என்று கேட்டால், தமிழில் நம்ம பாஷையில் சொல்வதாக இருந்தால் மொட்டைக் கடிதாசுதான். தகவல் தொழில்நுட்பம் வளர்ந்த பிறகு, மொட்டைக் கடிதாசுகள் அனுப்ப முடியாமல், நேருக்கு நேர் திட்டவும், தனது ஆழமான அன்பை வெளிப்படுத்தவும் முடியாமல் தவித்த பல ஆத்மாக்களுக்கு இது வரப்பிரசாதம்தான்.

சரஹா என்றால் அராபிய மொழியில் நேர்மை என்று பொருள். பேசுவதற்குக் கட்டுப்பாடுகள் இருக்கும் அரேபியாவில் உருவாக்கப்பட்ட இந்த சரஹா சமூக தளம் இப்போதுதான் இந்தியாவில் அறியப்படுகிறது.

தாங்கள் நினைத்ததை இந்த உலகத்துக்கே எளிதில் கொண்டு செல்ல வழி வகுக்கும் பேஸ்புக், டிவிட்டர் பக்கங்களுக்கு நேர் எதிராக, தான் யாரிடம் ஒரு விஷயத்தை சொல்ல நினைக்கிறோமோ, அவர்களிடம் அந்த விஷயத்தை நச்சென்று கொண்டு சேர்த்துவிடும். நம் பெயரைக் கூட சொல்லாது.

ஒரே ஒரு விஷயம், ஒரு கருத்தை அனுப்ப நினைப்பவருக்கும், பெறுபவருக்கும் சரஹாவில் அக்கவுண்ட் இருக்க வேண்டும். இதைத் தவிர வேறு எந்த நிபந்தனையும் இல்லை. இதில் ஆச்சரியம் என்னவென்றால், தனிப்பட்ட முறையில் சரஹா மூலம் அனுப்பப்படும் செய்திகளை, பலரும் தங்களது பேஸ்புக் பக்கங்களிலும் பகிர்ந்து வருகின்றனர்.

எல்லாம் நல்ல விஷயமாகவே இருக்கும். சிலது கிண்டல் கேலியாக இருக்கும். நறுக்கென்று இருக்கும் எதுவும் இதுவரை சமூக தளங்களை அலங்கரிக்கவில்லை.

முகத்துக்கு நேராக பேசாமல் முதுகுக்குப் பின்னால் பேசும் சமுதாயத்துக்கு இதுபோன்ற சரஹா தேவையான ஒன்றுதான் என்றாலும், சொல்ல வேண்டிய மிக முக்கியமான விஷயங்களை எளிதாக சொல்லிவிடலாம் என்றும் கூறிக் கொள்ளலாம்.

தமிழகத்தில் எங்கெல்லாம் மழை பெய்து கொண்டிருக்கிறது : இங்கே அறியலாம்!

By DIN  |   Published on : 14th August 2017 04:58 PM
rains5

சென்னை: தமிழகத்தில் இன்று பிற்பகலில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் வெயில் வெளுத்து வாங்கினாலும், புறநகர்ப் பகுதிகளிலும் மழை பதிவாகியுள்ளது.
அதன்படி, தமிழகத்தில் தேனி, ஆண்டிப்பட்டி கண்டமனூர், கடமலைக்குண்டு உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஆன்டிப்பட்டியில் கன மழை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
அதே போல, திருப்பூர், அவிநாசி, கைகாட்டி புதூர், சூளை, மங்களம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது.
திருவாரூர், திருத்துறைப்பூண்டி, கட்டிமேடு,  வேளாங்கண்ணி, கீழையூர், திருக்குவளை, வாழக்கரை உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.
சென்னையைச் சுற்றியுள்ள தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், பட்டாபிராம், ஒரகடம், மணிவாக்கம், முடிச்சூர், ஊரப்பாக்கம் ஆகிய பகுதிகளிலும் 15 நிமிடம் முதல் 45 நிமிடம் வரை மழை பெய்துள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூர், சிவகிரி, பெரம்பலூர் மாவட்டத்தில் பரவலாக, திருவண்ணாமலை, திருச்செங்கோடு, ஈரோடு மாவட்டத்தில் விஜயமங்கலம், குன்னத்தூர், பெருந்துறை, நாமக்கல் மாவட்டம் சோலசிராமணி, காங்கேயம், பள்ளக்கௌண்டன்பாளையம் பகுதிகளில் கன மழை பதிவாகியுள்ளது.

NEWS TODAY 28.01.2026