Friday, August 18, 2017

போலி பாஸ்போர்ட்டில் மஸ்கட் சென்றுவிட்டு சென்னை திரும்பிய கேரள வாலிபர் கைது
2017-08-18@ 01:49:27




சென்னை : மஸ்கட்டில் இருந்து நேற்று அதிகாலை 5.30 மணிக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், சென்னை விமான நிலைய சர்வதேச முனையத்துக்கு வந்தது. அதில் வந்த பயணிகளின் பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். அப்போது, கேரள மாநிலம் கோழிக்கேட்டை சேர்ந்த ராமகிருஷ்ணன் (39) என்ற பெயரில், பாஸ்போர்ட் வைத்துக்கொண்டு ஒருவர், மஸ்கட்டில் இருந்து திரும்பினார். அவரது பாஸ்போர்ட் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது. அதனை கம்ப்யூட்டர் மூலம் சோதனை செய்தபோது, மற்றொருவரின் புகைப்படத்தை அகற்றிவிட்டு, இவரது புகைப்படத்தை வைத்து போலி பாஸ்போர்ட் தயாரித்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். விசாரணையில், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த லெனின்குமார் (37) என்பது தெரிந்தது. மேலும் கடந்த 6 மாதத்துக்கு முன் இதே பாஸ்போர்ட்டில் மஸ்கட் சென்று வந்தது தெரிந்தது. இதையடுத்து அவரை கைது செய்த அதிகாரிகள், மேல் நடவடிக்கைக்காக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர்
வேலூர் மத்திய சிறையில் இன்று ஜீவசமாதி அடைவதில் முருகன் உறுதி

2017-08-18@ 00:41:58




வேலூர் : வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை கைதி முருகன் இன்று ஜீவசமாதி அடைவதில் உறுதியாக உள்ளதாகவும், அவரை தீவிர கண்காணிப்பின்கீழ் வைத்திருப்பதாகவும் சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோர் வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர். முருகனின் மனைவி நளினி, வேலூர் பெண்கள் தனிச்சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். இவர்களில் முருகன், ஆகஸ்ட் 18ம் தேதியன்று சிறையிலேயே ஜீவசமாதி அடைய தன்னை அனுமதிக்க வேண்டும் என்று கடந்த மாதம் சிறைத்துறை ஏடிஜிபி அலுவலகத்திற்கு மனு அளித்தார்.

இதைத்தொடர்ந்து, பழங்களை மட்டுமே உணவாக உட்கொண்டு வந்தார். அவரிடம் சிறைத்துறை போலீசார் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது முருகன், ஜீவ சமாதி அடைவது உறுதி என்று போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் சிறைத்துறை போலீசார் முருகன் அடைக்கப்பட்டுள்ள உயர்பாதுகாப்பு பிரிவில், அவருடன் தங்கி உள்ள கைதிகள் மூலமும், சிறைத்துறை போலீசாரும் தீவிரமாக கண்காணித்து வருவதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், ஜீவசமாதி அடைவதை தடுக்கும் விதமாக போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
பல்லடம் அருகே போலி டாக்டர் கைது
பதிவு செய்த நாள்18ஆக
2017
01:46

திருப்பூர் : பல்லடம் அருகே போலி டாக்டரை, சுகாதாரத்துறையினர் பிடித்து, போலீசில் ஒப்படைத்தனர்.பல்லடம் - உடுமலை ரோட்டில், மந்திரிபாளையம் உள்ளது. இங்கு, அப்துல் ரசாத் முகமது, 58, என்பவர், இரண்டரை ஆண்டுகளாக, அப்பகுதியில் சித்தா சிகிச்சை மையம் நடத்தி, பொதுமக்களுக்கு சிகிச்சையளித்துள்ளார்.இவர், சித்த மருத்துவத்துக்கு பதிலாக, ஆங்கில மருத்துவ சிகிச்சையை, நோயாளிகளுக்கு அளித்து வந்தார். இதுகுறித்த புகார் கிடைத்ததால், திருப்பூர் மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் சவுந்தரராஜன் தலைமையிலான குழுவினர், நேற்று மந்திரிபாளையத்தில் உள்ள அவரது கிளீனிக்கில் திடீரென, சோதனை நடத்தினர்.அப்போது, அப்துல் ரசாத் முகமது, போலி டாக்டர் என்பது தெரிய வந்தது. அவரை பிடித்து, போலீசாரிடம் ஒப்படைத்தனர். காமநாயக்கன்பாளையம் போலீசார், போலி டாக்டரை கைது செய்தனர்.
5ம் வகுப்பு போலி டாக்டர் ஆத்தூரில் கைது

பதிவு செய்த நாள்18ஆக
2017
01:07

ஆத்துார்: கோல்கட்டாவைச் சேர்ந்த போலி டாக்டரை, ஆத்துாரில், போலீசார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம், ஆத்துார் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் அசோக்குமார் தலைமையிலான அதிகாரிகள், ஆத்துார் பகுதியில், நேற்று, ஆய்வு மேற்கொண்டனர். 

உடையார்பாளையத்தில், வாடகை வீட்டில், கிளினிக் நடத்தி வந்த கிஷோர் ராய், 36, போலி டாக்டர் என, தெரியவந்தது. அங்கிருந்த, மயக்க மருந்து, ஊசி, மருந்துகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.விசாரணையில், மேற்கு வங்க மாநிலம், 24 பர்கானாஸ் மாவட்டத்தைச் சேர்ந்தவன் கிஷோர் ராய் என்பதும், ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த இவன், மூன்று ஆண்டுகளாக, உடையார்பாளையத்தில் வைத்தியம் செய்து வந்ததும் தெரியவந்தது. போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அரசு ஊழியர் ஆசிரியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம்

பதிவு செய்த நாள்

18ஆக
2017
00:12


வேடசந்துார், தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் சார்பில், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்துசெய்யக்கோரி, ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்பட உள்ளனர்.

தமிழக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் சார்பில், தற்போது நடைமுறையில் உள்ள புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய பென்ஷன் திட்டத்தையே நடைமுறைப்படுத்த வேண்டும், 8-வது ஊதியக்குழுவை விரைந்து அமுல்படுத்த வேண்டும், அதுவரை, 20 சதவீத இடைக்கால நிவாரணம் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.

இதில் 70 க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஒன்று சேர்ந்து ஜாக்டோ ஜியோ என்ற பெயரில் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஏற்கனவே ஆக.5 ல் சென்னையில் ஒன்னறை லட்சம் பேர் பங்கேற்ற ஆர்பாட்டம் நடத்தப்பட்டது. அரசு தரப்பில் இருந்து எந்தவித பதிலும் இல்லாததால், போராட்டக்காரர்கள் அடுத்த கட்ட போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர்.

இதை தொடர்ந்து ஆக.22-ல் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதற்கும் மாநில அரசு செவி சாய்க்காவிட்டால், அடுத்த கட்டமாக ஆக.26, 27 தேதிகளில் ஆயத்த மாநாடு, செப்.,7 முதல் திட்டமிட்டபடி காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யவும் தயாராகி வருகின்றனர்.

ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில தலைவர் மோசஸ் கூறுகையில், “மேற்கண்ட கோரிக்கைகள் நிறைவேறும் வரை, அனைத்து அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்” என்றார்.
வெளிநாட்டுக்கு அழைத்து சென்று மோசடி
பதிவு செய்த நாள்17ஆக
2017
22:21


காரைக்குடி, அரியக்குடி கண்ணப்பனார் தெருவை சேர்ந்தவர் விஜயாள்,45. இவரது மகன் விஜய் என்பவரை கடந்த 2016 அக்டோபரில் துபாய்க்கு ஆறாவயல் பாப்பான் வயலை சேர்ந்த கருப்பையா மகன்கள் ரகுலிங்கம், பிரபு இருவரும் ரூ.80 ஆயிரம் பெற்று அழைத்து சென்றுள்ளனர்.

அங்கு சொன்ன வேலையை வாங்கி கொடுக்காமல் கட்டட வேலைக்கு அனுப்பியுள்ளனர். அதுமட்டுமன்றி வேலை பார்த்ததற்கான சம்பளம், பாஸ்போர்ட்டை வழங்கவில்லை. இதை தொடர்ந்து அங்குள்ள இந்திய துாதரக அதிகாரிகளிடம் விஜய் புகார் செய்தார். 

அவர்கள் புகாரை காரைக்குடிக்கு அனுப்பினர்.விஜயாள் புகாரின் பேரில், தெற்கு எஸ்.ஐ.அரவிந்தராஜன் வழக்கு பதிந்தார்.

புகாரில் கூறியிருப்பதாவது: எவ்வித உரிமமும் இன்றி போலியாக தன் மகனை வெளிநாட்டுக்கு அழைத்து சென்று ஏமாற்றி விட்டனர், எனவே கருப்பையா, அவரது மகன்கள் ரகுலிங்கம், பிரபு ஆகிய மூவர் மீது நடவடிக்கை எடுத்து, தனது மகனை இந்தியா அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
கலைந்தது மருத்துவ கனவு : அரியலூர் மாணவி வழக்கு

பதிவு செய்த நாள்18ஆக
2017
00:18


பெரம்பலுார்: 'நீட்' வழக்கில், பிளஸ் 2 தேர்வில், 1,176 மதிப்பெண் பெற்ற, அரியலுார் மாவட்டத்தை சேர்ந்த மாணவி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துஉள்ளார்.

அரியலுார் மாவட்டம், குழுமூர் கிராமத்தைச் சேர்ந்தவர், அனிதா, 17. இவர், மூட்டைத் துாக்கும் தொழிலாளி, சண்முகம் என்பவரின் மகள். பிளஸ் 2 தேர்வில், 1,176 மதிப்பெண்கள் பெற்ற மாணவி அனிதாவின் மருத்துவ, 'கட் - ஆப்' 196.75. எஸ்.சி., பிரிவைச் சேர்ந்த அனிதா, நீட் தேர்வில், 86 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றார். பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடந்தால், அனிதாவிற்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்கும். ஆனால், 'நீட்' தேர்வு அடிப்படையில் நடந்தால், அவருக்கு வாய்ப்பில்லை.நீட் தேர்வில் விலக்கு பெறுவதற்காக, தமிழக அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டத்தை எதிர்த்து, நளினி சிதம்பரம் உள்ளிட்டோர், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இவ்வழக்கில், எதிர்மனுதாரராக தன்னை சேர்க்க, மாணவி அனிதா, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இதற்காக, அவர் டில்லி சென்றுள்ளதாக, அவரது தந்தை சண்முகம் தெரிவித்தார்.

NEWS TODAY 28.01.2026