Saturday, August 26, 2017

காலாவதியான பதிவை புதுப்பிப்பதற்கு வந்தது வாய்ப்பு: போகாது மூப்பு!தவற விட்ட 20 ஆயிரம் பேருக்கு மகிழ்ச்சி!

பதிவு செய்த நாள்
ஆக 25,2017 23:01



அரசு வேலை கிடைக்க வாய்ப்பே இல்லை என்று விரக்தியடைந்து, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் செய்திருந்த பதிவை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு, பதிவு மூப்பை திரும்பப்பெறுவதற்கு அரசு சலுகை வழங்கியுள்ளது. இதற்கான உத்தரவு எதிரொலியாக, கோவை மாவட்டத்தில் பல ஆயிரம் பேர் பயனடைவர்.

ஆரம்பப் பள்ளியில் படிப்பை முடித்தவர் முதல், எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2, பட்டயம், இளங்கலை மற்றும் முதுகலை பட்டம், டாக்டர், இன்ஜினியர், மருந்தாளுனர், டர்னர், வெல்டர், பிட்டர், தையல் கலைஞர் படிப்புகளை நிறைவு செய்தவர்கள், அரசு வேலைக்காக, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கின்றனர். தமிழகம் முழுவதும் பல லட்சம் பேர், அரசு வேலைக்கு உதவுமென்று, இதைப் பதிவு செய்து விட்டு, மறக்காமல் புதுப்பித்தும் வருகின்றனர்.காலியிடங்கள் நிறைய...!இவர்களில், கல்வித்தகுதி, வேலைவாய்ப்பு பதிவு மூப்பு, முன் அனுபவம் ஆகிய தகுதிகளின் அடிப்படையில், அரசு வேலைகள் முன்பு ஒதுக்கப்பட்டு வந்தன. 

ஆனால், சமீபத்திய ஆண்டுகளாக, வேலை வாய்ப்பு அலுவலகம் மூலமாக வேலை வாய்ப்புப் பெறுவோர் எண்ணிக்கை, மிகவும் குறைந்து விட்டது. பெரும்பாலும் போட்டித்தேர்வு அல்லது ஆளுங்கட்சியினரின் பரிந்துரை ஆகியவற்றின் அடிப்படையில் மட்டுமே, அரசு வேலைகள் ஒதுக்கப்படுகின்றன.

உண்மையில், தமிழக அரசின் கீழ் உள்ள, 57 துறைகளில், ஒவ்வொரு மாவட்டத்திலும், பல ஆயிரக்கணக்கான பணியிடங்கள் காலியாகவுள்ளன. ஆனால், அரசின் கஜானா நிலை மோசமாக இருப்பதால், பணியிடங்களை நிரப்புவது, கூடுதல் பணியிடங்களை உருவாக்குவது போன்ற எந்த வேலையும் நடப்பதில்லை. இருப்பினும், கீழ்நிலையில் உள்ள சில பணியிடங்கள், வேலைவாய்ப்பக பதிவு மூப்பின் அடிப்படையில் வழங்கப்படுகின்றன.இதன் காரணமாகவே, ஆரம்பக்கல்வி படித்தவர்கள் முதல், உயர்கல்வி, பட்ட மேற்படிப்பு, ஆராய்ச்சி மேற்படிப்பை நிறைவு செய்தவர்கள் வரை, அனைவரும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கின்றனர். போட்டித்தேர்வில், தேர்வு செய்யப்படுவோர்க்கும், பணி ஒதுக்கீடுக்கு, இந்த வேலைவாய்ப்பு பதிவு உதவுகிறது.அது மட்டுமின்றி, கல்வித் தகுதியின் அடிப்படையில், மாதாந்திர உதவித்தொகையும் அரசால் வழங்கப்படுகிறது. 

அதற்கும் வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அவசியம்.ஆனாலும், பல காரணங்களால், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போரில் சிலர், தங்களது வேலை வாய்ப்பு பதிவினை, சரியான கால அவகாசத்தில் புதுப்பிக்காமல் தவறவிட்டிருப்பர். அப்படி தவறியவர்களுக்கு கடந்த, 2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், தமிழக அரசு, மீண்டும் புதுப்பிப்பதற்கு, ஒரு சலுகையை வழங்கியது. அதே போல சலுகையை நான்கு ஆண்டுகளுக்குப் பின்பு தற்போது புதிய அரசு உத்தரவு வாயிலாக வழங்கியுள்ளது.

நேரில் வர வேண்டாம்!

கடந்த ஆக., 22ம் தேதி அரசின் வேலை வாய்ப்புப் பயிற்சித்துறை வெளியிட்ட அரசாணையின் படி (எண்:500), 2011 முதல் 2015 வரை உள்ள வேலைவாய்ப்பு அலுவலக பதிவினை புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்கள், இப்போது பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம். அவர்களின் பதிவு மூப்பு, பழைய நிலையில் தொடரவும் இந்த அரசாணை வழி வகுத்துள்ளது. இச்சலுகையை பெற விரும்பும் வேலைவாய்ப்பு பதிவுதாரர்கள், 'ஆன்லைன்' வாயிலாகவும் பதிவுகளை புதுப்பித்துக்கொள்ளலாம்.இதற்கு, tnvelaivaaippu@gov.in என்ற இணையதளத்தில் 'ஆன்லைன்' முறையில் விண்ணப்பிக்கலாம்.
வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு, வேலை வாய்ப்பு பதிவு அடையாள அட்டை மற்றும் ரேஷன் கார்டு, ஆதார்கார்டு உள்ளிட்ட அனைத்து உண்மை சான்றிதழ்களுடன் நேரில் வந்தோ, அல்லது பதிவஞ்சல் மூலமோ வேலைவாய்ப்பு பதிவை புதுப்பித்துக்கொள்ளலாம். இச்சலுகை 2017 நவ., 21 வரை மட்டுமே வழங்கப்படும்.

கோவை மாவட்ட இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் சாந்தி கூறுகையில், ''கோவை மாவட்டத்தில் 3.25 லட்சம் பேர், அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருக்கின்றனர். இவர்களில், 20 ஆயிரம் பேர் பதிவை புதுப்பிக்கவில்லை; இந்த வாய்ப்பைப் பயன் படுத்தி, பதிவை புதுப்பித்தால், இழந்த பதிவு மூப்பை பெறமுடியும்; அரசு வேலை பெறவும் வாய்ப்புண்டு. நேரில் வராமல், 'ஆன்லைன்' முறையில் விண்ணப்பிக்கும்போது, சரியான தகவல்களுடன் விண்ணப்பிப்பது அவசியம்,'' என்றார்.

இந்த உத்தரவு, பதிவைத் தவற விட்டுள்ள, 20 ஆயிரம் பேருக்கு, நிச்சயம் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். இவர்களில் எத்தனை பேர், இழந்திருந்த பதிவு மூப்பைப் பெறப்போகின்றனர் என்பது, வரும் நவ.,22 அன்று தெரிந்து விடும். போட்டித் தேர்வுகளில், ஆசிரியர் மற்றும் பேராசிரியர் பணிக்குத் தேர்ச்சி பெறுவோர், அரசு உதவி பெறும் பள்ளி, கல்லுாரிகளில் பணியில் சேர்வதற்கு, இந்த பதிவு மூப்பு பெரிதும் உதவும். இத்தகைய ஒரு வாய்ப்பை, மறுபடியும் தவற விடாமலிருப்பதே, புத்திசாலித்தனம்.

கலெக்டர் வேண்டுகோள்!
கலெக்டர் ஹரிஹரன் கூறுகையில், ''நான்குஆண்டுகளுக்கு பின்பு, இச்சலுகையை தமிழக அரசு வழங்கியுள்ளது. இதை, பட்டதாரிகள் உட்பட அனைத்துப் பதிவுதாரர்களும் பயன்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம். காலாவதியான வேலை வாய்ப்பு பதிவு மூப்பை சரிப்படுத்திக் கொள்ளலாம். குறிப்பாக, 35 வயதிற்குள் அரசுப்பணியில் சேரவேண்டும் என்று விரும்புவோர், இந்த வாய்ப்பை தவற விட வேண்டாம்,'' என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-நமது நிருபர்-
பான்- ஆதார் இணைப்புக்கு 31 வரையே அவகாசம்
பதிவு செய்த நாள்26ஆக
2017
02:55




புதுடில்லி: 'பான்' எனப்படும் வருமான வரி நிரந்தர எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க, ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட, வரும், 31ம் தேதி வரையிலான காலக்கெடு நீட்டிக்கப்படாது என, ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது.

தீர்ப்பு :

'பான்' எனப்படும் வருமான வரி நிரந்தர எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசம், 31ம் தேதி வரை வழங்கப்பட்டிருந்தது. ஆதார் தொடர்பான வழக்கில், தனிமனித சுதந்திரம், அடிப்படை உரிமை என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அதனால், ஆதாரை தொடர்ந்து பயன்படுத்த முடியுமா என்ற கேள்வி எழுந்தது.

காலக்கெடு:

இது குறித்து, ஆதார் எண்ணை வழங்கும் ஆதார் ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரி, அஜய் பூஷண் பாண்டே, நேற்று கூறியதாவது: உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கும், ஆதார் எண்ணை பல்வேறு சமூக நல திட்டங்களுக்கு பயன்படுத்துவதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. பான் கார்டுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான உத்தரவு, நிதி மசோதா மூலம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால், பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு, 31ம் தேதியுடன் முடிகிறது; அந்த கால அவகாசம் நீட்டிக்கப்படாது.

செல்லும்:

பல்வேறு அரசு திட்டப் பணிகள், நல திட்ட உதவிகள், மானியங்களுக்கு, ஆதார் பயன்படுத்த எந்தத் தடையும் இல்லை. அதனால், ஆதார் தொடர்ந்து செல்லுபடியாகும். இவ்வாறு அவர் கூறினார்.

Friday, August 25, 2017

GITAM UNIVERSITY....New Indian Express


தேசிய செய்திகள்

காந்தியின் குடும்ப புகைப்படங்களை நீக்க பள்ளி கூடங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பிய அரசு ஊழியர்


காந்தியின் குடும்ப புகைப்படங்களை வலைதளங்களில் இருந்து நீக்கும்படி பள்ளி கூடங்களுக்கு ஷில்லாங் மண்டல அலுவலக ஊழியர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

ஆகஸ்ட் 24, 2017, 09:18 PM
புதுடெல்லி,

கடந்த 16ந்தேதி ஷில்லாங் மண்டலத்திற்கு உட்பட்ட அனைத்து 90 பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டது. அதில், உங்களது வலைதளங்களில் இருந்து காந்தி குடும்பத்தினரின் புகைப்படங்களை நீக்கி விடுங்கள். ஆணையாளர், துணை ஆணையாளர், மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி மற்றும் பிரதமர் புகைப்படங்களை பயன்படுத்துங்கள் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், கடந்த 22ந்தேதி நவோதயா வித்யாலயா சமிதி அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பிய செய்தியில், முந்தைய சுற்றறிக்கை அதிகாரபூர்வமற்றது என தெரிவித்திருந்தது.

இந்த சுற்றறிக்கையை அனுப்பும்படி ஷில்லாங் மண்டல அலுவலக ஊழியருக்கு எந்த அறிவுறுத்தலும் வழங்கப்படவில்லை. அதிகாரபூர்வமற்ற மற்றும் தவறான தகவல் அளித்த அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது என்றும் நவோதயா வித்யாலயா சமிதியின் இணை ஆணையாளர் ராமசந்திரா தெரிவித்துள்ளார்.

நவோதயா வித்யாலயா பள்ளிகள் சி.பி.எஸ்.ஈ. பள்ளிகளுடன் இணைந்து நடத்தப்படுபவை. இவற்றில் 6 முதல் 12 வரை வகுப்புகள் உள்ளன. நாட்டில் இதுபோன்று 590 பள்ளி கூடங்கள் உள்ளன.
கோரக்பூரில் குழந்தைகள் பலியான விவகாரம்: மருத்துவக்கல்லூரி முன்னாள் முதல்வர் உள்பட 9 பேர் மீது வழக்கு


உத்தரபிரதேசத்தின் கோரக்பூரில் உள்ள பாபா ராகவ்தாஸ் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 70–க்கும் மேற்பட்ட குழந்தைகள் சமீபத்தில் உயிரிழந்தன.

ஆகஸ்ட் 25, 2017, 04:45 AM

லக்னோ,

உத்தரபிரதேசத்தின் கோரக்பூரில் உள்ள பாபா ராகவ்தாஸ் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 70–க்கும் மேற்பட்ட குழந்தைகள் சமீபத்தில் உயிரிழந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக மாநில தலைமைச் செயலாளர் தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தி முதல்–மந்திரி யோகி ஆதித்யநாத்திடம் அறிக்கை அளித்தனர்.

இந்த நிலையில் குழந்தைகள் உயிரிழப்பு தொடர்பாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் ராஜீவ் மிஸ்ரா, அவரது மனைவி டாக்டர் பூர்ணிமா சுக்லா, டாக்டர் கபீல் கான், மருத்துவமனைக்கு ஆக்சிஜன் வழங்கும் புஸ்பா சேல்ஸ் நிறுவன உரிமையாளர்கள் உள்பட 9 பேர் மீது ஹஸ்ரத்கஞ்ச் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

பின்னர் இந்த வழக்கு கோரக்பூருக்கு மாற்றப்பட்டு உள்ளது. அவர்கள் அனைவர் மீதும் குற்றச்சதி, கொடூர கொலை உள்ளிட்ட இந்திய தண்டனைச்சட்ட பிரிவுகளின் கீழும், ஊழல் எதிர்ப்புச்சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இதற்கிடையே மாநில கூடுதல் தலைமைச்செயலாளர் (மருத்துவக்கல்வி) அனிதா பட்நாகர் ஜெயின் மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக வருவாய்த்துறை முதன்மை செயலாளரான ரஜ்னீஸ் துபே புதிதாக நியமிக்கப்பட்டு உள்ளார்.
மாநில செய்திகள்

‘நீட்’ தேர்வினால் பாதிக்கப்பட்டவர்கள் தற்கொலை முடிவு எடுக்கக்கூடாது மாணவர்களுக்கு, ஐகோர்ட்டு நீதிபதி அறிவுரை



‘நீட்’ தேர்வினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தற்கொலை என்ற கோழைத்தனமாக முடிவை எடுக்கக்கூடாது என்று ஐகோர்ட்டு நீதிபதி என்.கிருபாகரன் அறிவுரை கூறி உள்ளார்.

ஆகஸ்ட் 25, 2017, 04:30 AM

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில், உடுமலைப்பேட்டையை சேர்ந்த கிருத்திகா தாக்கல் செய்த மனுவில், ‘மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்த நான் பிளஸ்–2 தேர்வில் 1,184 மதிப்பெண் பெற்றுள்ளேன். ‘நீட்’ தேர்வில் 154 மதிப்பெண் பெற்றுள்ளேன். ‘நீட்’ தேர்வு முடிவின் அடிப்படையில் தேர்வு நடக்குமா? என்ற குழப்பத்தில் மருத்துவ படிப்புக்கான விண்ணப்பத்தை வாங்காமல் இருந்து விட்டேன். எனவே, பிளஸ்–2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றுள்ள எனக்கு, மருத்துவ படிப்பில் ஒரு இடம் வழங்க உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன் நேற்று பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:–

இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளின்படி நடத்தப்பட்ட ‘நீட்’ தேர்வுக்கு முறையான பயிற்சியினை தமிழக மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்கவில்லை. இதனால் பிளஸ்–2 பொது தேர்வில் ஆயிரத்து 184 மதிப்பெண் பெற்று, டாக்டராக வேண்டும் என்ற மனுதாரரின் கனவு, கனவாகவே ஆகிவிட்டது. ‘நீட்’ தேர்வில் 720 மதிப்பெண்ணிற்கு, அவர் 154 மதிப்பெண் மட்டுமே எடுத்துள்ளார்.

இந்த நீட் தேர்வில் மாநில பாடதிட்டத்தின் கீழ் படித்த மாணவர்களை விட சி.பி.எஸ்.இ. மாணவர்கள் அதிகம் பேர் மருத்துவ படிப்புக்கு தேர்வாகியுள்ளது பத்திரிகைகளில் வெளியான செய்தியின் மூலம் தெரியவந்துள்ளது.

மொத்தம் 3,382 எம்.பி.பி.எஸ். படிப்புக்கான இடங்களில், சி.பி.எஸ்.இ. மாணவர்கள் 1,310 இடங்களை தட்டிச் சென்றுவிட்டனர். வெறும் 2,220 இடங்கள் மட்டுமே மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்து மாணவர்களுக்கு கிடைத்துள்ளது. அதிலும், 943 மாணவர்கள், கடந்த கல்வி ஆண்டில் பிளஸ்–2 தேர்ச்சி பெற்றவர்கள். அவர்கள் ஓர் ஆண்டாக ‘நீட்’ தேர்வுக்கு பயிற்சி பெற்றுள்ளனர்.

‘நீட்’ தேர்வு விவகாரத்தில் தமிழக அரசின் கோரிக்கையை, மத்திய அரசு ஆரம்பத்திலேயே நிராகரித்து இருந்தால், இவ்வளவு பெரிய குழப்பமும், பிரச்சினையும் ஏற்பட்டு இருக்காது. இந்த வி‌ஷயத்தில் மத்திய அரசின் செயல் ஏற்புடையதல்ல. இதனால் தமிழக மாணவர்கள் கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

தமிழக அரசும், ‘நீட்’ தேர்வுக்கு விலக்கு கோரிய அதேநேரம், அந்த தேர்வுக்காக தமிழக மாணவர்களை தயார்படுத்தி இருக்கலாம். கடந்த 10 ஆண்டுகளாக கல்வித்தரத்தை உயர்த்தாமல், கடைசி நேரத்தில் தான் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டது.

‘நீட்’ தேர்வு அடிப்படையில் தான் மருத்துவ மாணவர்கள் சேர்க்கை நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டும் உத்தரவிட்டுள்ளதால், அந்த உத்தரவை மீறி வேறு எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது.

எனவே, மனுதாரரின் கோரிக்கை நியாயமாக இருந்தாலும், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மீறி இந்த ஐகோர்ட்டு உத்தரவிட முடியாது. அதனால், இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன்.

அதேநேரம், ‘நீட்’ தேர்வில் தோல்வியடைந்து விட்டோம் என்பதற்காக வாழ்க்கையே முடிந்து போய்விட்டது என்று எந்த ஒரு மாணவரும் கருதக்கூடாது. இதற்காக தற்கொலை எனும் கோழைத்தனமான, முட்டாள் தனமான முடிவை மாணவர்கள் எடுக்கக்கூடாது.

எனவே தமிழக அரசு இனிமேலாவது ‘நீட்’ தேர்வினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உரிய ஆறுதல் அளிக்கும் வகையில் பிரபலங்களைக் கொண்டு விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளவும், மனுதாரர் கூறியுள்ளது போல மருத்துவ படிப்பில் அரசு ஒதுக்கீட்டு இடங்களை அதிகரிக்கவும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

NEWS TODAY 10.07.2026