Saturday, August 26, 2017

காலாவதியான பதிவை புதுப்பிப்பதற்கு வந்தது வாய்ப்பு: போகாது மூப்பு!தவற விட்ட 20 ஆயிரம் பேருக்கு மகிழ்ச்சி!

பதிவு செய்த நாள்
ஆக 25,2017 23:01



அரசு வேலை கிடைக்க வாய்ப்பே இல்லை என்று விரக்தியடைந்து, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் செய்திருந்த பதிவை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு, பதிவு மூப்பை திரும்பப்பெறுவதற்கு அரசு சலுகை வழங்கியுள்ளது. இதற்கான உத்தரவு எதிரொலியாக, கோவை மாவட்டத்தில் பல ஆயிரம் பேர் பயனடைவர்.

ஆரம்பப் பள்ளியில் படிப்பை முடித்தவர் முதல், எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2, பட்டயம், இளங்கலை மற்றும் முதுகலை பட்டம், டாக்டர், இன்ஜினியர், மருந்தாளுனர், டர்னர், வெல்டர், பிட்டர், தையல் கலைஞர் படிப்புகளை நிறைவு செய்தவர்கள், அரசு வேலைக்காக, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கின்றனர். தமிழகம் முழுவதும் பல லட்சம் பேர், அரசு வேலைக்கு உதவுமென்று, இதைப் பதிவு செய்து விட்டு, மறக்காமல் புதுப்பித்தும் வருகின்றனர்.காலியிடங்கள் நிறைய...!இவர்களில், கல்வித்தகுதி, வேலைவாய்ப்பு பதிவு மூப்பு, முன் அனுபவம் ஆகிய தகுதிகளின் அடிப்படையில், அரசு வேலைகள் முன்பு ஒதுக்கப்பட்டு வந்தன. 

ஆனால், சமீபத்திய ஆண்டுகளாக, வேலை வாய்ப்பு அலுவலகம் மூலமாக வேலை வாய்ப்புப் பெறுவோர் எண்ணிக்கை, மிகவும் குறைந்து விட்டது. பெரும்பாலும் போட்டித்தேர்வு அல்லது ஆளுங்கட்சியினரின் பரிந்துரை ஆகியவற்றின் அடிப்படையில் மட்டுமே, அரசு வேலைகள் ஒதுக்கப்படுகின்றன.

உண்மையில், தமிழக அரசின் கீழ் உள்ள, 57 துறைகளில், ஒவ்வொரு மாவட்டத்திலும், பல ஆயிரக்கணக்கான பணியிடங்கள் காலியாகவுள்ளன. ஆனால், அரசின் கஜானா நிலை மோசமாக இருப்பதால், பணியிடங்களை நிரப்புவது, கூடுதல் பணியிடங்களை உருவாக்குவது போன்ற எந்த வேலையும் நடப்பதில்லை. இருப்பினும், கீழ்நிலையில் உள்ள சில பணியிடங்கள், வேலைவாய்ப்பக பதிவு மூப்பின் அடிப்படையில் வழங்கப்படுகின்றன.இதன் காரணமாகவே, ஆரம்பக்கல்வி படித்தவர்கள் முதல், உயர்கல்வி, பட்ட மேற்படிப்பு, ஆராய்ச்சி மேற்படிப்பை நிறைவு செய்தவர்கள் வரை, அனைவரும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கின்றனர். போட்டித்தேர்வில், தேர்வு செய்யப்படுவோர்க்கும், பணி ஒதுக்கீடுக்கு, இந்த வேலைவாய்ப்பு பதிவு உதவுகிறது.அது மட்டுமின்றி, கல்வித் தகுதியின் அடிப்படையில், மாதாந்திர உதவித்தொகையும் அரசால் வழங்கப்படுகிறது. 

அதற்கும் வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அவசியம்.ஆனாலும், பல காரணங்களால், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போரில் சிலர், தங்களது வேலை வாய்ப்பு பதிவினை, சரியான கால அவகாசத்தில் புதுப்பிக்காமல் தவறவிட்டிருப்பர். அப்படி தவறியவர்களுக்கு கடந்த, 2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், தமிழக அரசு, மீண்டும் புதுப்பிப்பதற்கு, ஒரு சலுகையை வழங்கியது. அதே போல சலுகையை நான்கு ஆண்டுகளுக்குப் பின்பு தற்போது புதிய அரசு உத்தரவு வாயிலாக வழங்கியுள்ளது.

நேரில் வர வேண்டாம்!

கடந்த ஆக., 22ம் தேதி அரசின் வேலை வாய்ப்புப் பயிற்சித்துறை வெளியிட்ட அரசாணையின் படி (எண்:500), 2011 முதல் 2015 வரை உள்ள வேலைவாய்ப்பு அலுவலக பதிவினை புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்கள், இப்போது பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம். அவர்களின் பதிவு மூப்பு, பழைய நிலையில் தொடரவும் இந்த அரசாணை வழி வகுத்துள்ளது. இச்சலுகையை பெற விரும்பும் வேலைவாய்ப்பு பதிவுதாரர்கள், 'ஆன்லைன்' வாயிலாகவும் பதிவுகளை புதுப்பித்துக்கொள்ளலாம்.இதற்கு, tnvelaivaaippu@gov.in என்ற இணையதளத்தில் 'ஆன்லைன்' முறையில் விண்ணப்பிக்கலாம்.
வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு, வேலை வாய்ப்பு பதிவு அடையாள அட்டை மற்றும் ரேஷன் கார்டு, ஆதார்கார்டு உள்ளிட்ட அனைத்து உண்மை சான்றிதழ்களுடன் நேரில் வந்தோ, அல்லது பதிவஞ்சல் மூலமோ வேலைவாய்ப்பு பதிவை புதுப்பித்துக்கொள்ளலாம். இச்சலுகை 2017 நவ., 21 வரை மட்டுமே வழங்கப்படும்.

கோவை மாவட்ட இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் சாந்தி கூறுகையில், ''கோவை மாவட்டத்தில் 3.25 லட்சம் பேர், அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருக்கின்றனர். இவர்களில், 20 ஆயிரம் பேர் பதிவை புதுப்பிக்கவில்லை; இந்த வாய்ப்பைப் பயன் படுத்தி, பதிவை புதுப்பித்தால், இழந்த பதிவு மூப்பை பெறமுடியும்; அரசு வேலை பெறவும் வாய்ப்புண்டு. நேரில் வராமல், 'ஆன்லைன்' முறையில் விண்ணப்பிக்கும்போது, சரியான தகவல்களுடன் விண்ணப்பிப்பது அவசியம்,'' என்றார்.

இந்த உத்தரவு, பதிவைத் தவற விட்டுள்ள, 20 ஆயிரம் பேருக்கு, நிச்சயம் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். இவர்களில் எத்தனை பேர், இழந்திருந்த பதிவு மூப்பைப் பெறப்போகின்றனர் என்பது, வரும் நவ.,22 அன்று தெரிந்து விடும். போட்டித் தேர்வுகளில், ஆசிரியர் மற்றும் பேராசிரியர் பணிக்குத் தேர்ச்சி பெறுவோர், அரசு உதவி பெறும் பள்ளி, கல்லுாரிகளில் பணியில் சேர்வதற்கு, இந்த பதிவு மூப்பு பெரிதும் உதவும். இத்தகைய ஒரு வாய்ப்பை, மறுபடியும் தவற விடாமலிருப்பதே, புத்திசாலித்தனம்.

கலெக்டர் வேண்டுகோள்!
கலெக்டர் ஹரிஹரன் கூறுகையில், ''நான்குஆண்டுகளுக்கு பின்பு, இச்சலுகையை தமிழக அரசு வழங்கியுள்ளது. இதை, பட்டதாரிகள் உட்பட அனைத்துப் பதிவுதாரர்களும் பயன்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம். காலாவதியான வேலை வாய்ப்பு பதிவு மூப்பை சரிப்படுத்திக் கொள்ளலாம். குறிப்பாக, 35 வயதிற்குள் அரசுப்பணியில் சேரவேண்டும் என்று விரும்புவோர், இந்த வாய்ப்பை தவற விட வேண்டாம்,'' என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-நமது நிருபர்-

No comments:

Post a Comment

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது...

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது... தினமணி செய்திச் சேவை Updated on:  26 டிசம்பர் 2025, 5:02 am  ர...