Wednesday, August 30, 2017

அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தை புரட்டியெடுத்தது ஹார்வி புயல் தாக்கி 9 பேர் பரிதாப சாவு: 1.30 கோடி பேர் பாதிப்பு; 30,000 பேர் மீட்பு

2017-08-30@ 01:25:38




ஹூஸ்டன் : அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஹார்வி புயல் தாக்குதலில் 9 பேர் பலியாகினர். 1.30 கோடி பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை ஆகஸ்ட் 26ல் ஹார்வி என்ற பயங்கர புயல் தாக்கியது. கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் சக்தி வாய்ந்த இந்த புயலால் மணிக்கு 215 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசியது. அத்துடன் தொடர்ந்து கனமழையும் கொட்டுவதால் கோடிக்கணக்கான மக்கள் மிகுந்த இன்னலுக்குள்ளாகி உள்ளனர். வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் மீது மரங்கள் வேருடன் சாய்ந்து பெருத்த சேதத்தை உருவாக்கின. மின்சாரம், தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் ஏராளமான பகுதிகள் இருளில் மூழ்கின. சுமார் 50 அங்குல அளவுக்கு பெய்த மழையால் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. இந்த புயல் மற்றும் வெள்ளத்துக்கு இதுவரை 9 பேர் பலியாகினர். இதில் வெள்ளத்தில் இருந்து தப்பிக்க வேனில் புறப்பட்டுச்சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலியானது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

இதில் 4 பேர் குழந்தைகள். அமெரிக்காவின் நான்காவது மிகப்பெரிய நகரமான ஹூஸ்டன் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 26ம் தேதி தொடங்கி நேற்று வரை அங்கு தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் தேசிய நெஞ்சாலைகள், வீடுகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கி விட்டன. அங்கு வசித்த ெபாதுமக்கள் உயரமான அடுக்குமாடிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். ஹூஸ்டன் தவிர விக்டோரியா, கார்பஸ் கிறிஸ்டி ஆகிய நகரங்களில் பாதிப்பு அடைந்தன. பலத்த மழை காரணமாக ஆற்று தண்ணீர் நகரத்துக்குள் புகுந்ததால் குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதையடுத்து மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில், புயல் பாதித்த பகுதிகளில் 12 ஆயிரம் தேசிய பாதுகாப்பு படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 30 ஆயிரம் பேர் மீட்கப்பட்டுள்ளனர். இந்த பணிகளை மாகாண அதிகாரிகளுடன் இணைந்து அமெரிக்க அரசு முழு வீச்சில் மேற்கொண்டு வருகிறது. மழை காரணமாக பள்ளிகள், அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

200 இந்திய மாணவர்களுக்கு உதவி

ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் படித்த 200 இந்திய மாணவர்கள் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டனர். அவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். அமெரிக்கா வாழ் இந்தியர்கள் 200 மாணவர்களுக்கும் உணவு மற்றும் தேவையான வசதிகளை செய்து கொடுத்துள்ளனர். ஷூஸ்டன் இந்திய பிரதிநிதி அனுபம்ராய் மாணவர்கள் குறித்து தொடர்ந்து விசாரித்து வருகிறார். அதே போல் ஏரி வெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்ட டெக்சாஸ் ஏ அண்ட் எம் பல்கலைக்கழத்தில் படித்த இந்திய மாணவர்கள் ஷாலினி, நிகில்பாட்டியா ஆகியோர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதில் ஷாலினியின் உடல்நிலை நேற்று சிறிது முன்னேற்றம் கண்டது. ஆனால் நிகில் பாட்டியா அதே நிலையில்தான் உள்ளார்.

டிரம்ப் நேரில் ஆய்வு

ஹார்வி புயல் பாதித்த பகுதிகளை அதிபர் டிரம்ப் நேற்று பார்வையிட்டார். புயல் மற்றும் வெள்ள பாதிப்பை பேரழிவு என பிரகடனம் செய்திருந்த டிரம்ப், அங்கு நிவாரண பணிகளை மேற்கொண்டு வரும் அதிகாரிகளை வெகுவாக பாராட்டி னார்.

விமான நிலையங்கள் மூடல்

அமெரிக்காவை தாக்கிய ஹார்வி புயலால் ஹூஸ்டனில் உள்ள விமான நிலையங்கள் மூடப்படுவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக விமான நிலைய செய்தி தொடர்பாளர் கூறுகையில், புயலால் ஹூஸ்டன் நகரம் முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இங்குள்ள ஜார்ஜ் புஷ் சர்வதேச விமான நிலையம் மற்றும் வில்லியம் ஹாபி விமான நிலையம் ஆகியவற்றின் விமான ஓடுபாதைகள் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளன. வெள்ள நிலைமை சீராகும் வரை இந்த விமான நிலையங்கள் மூடப்படும். அதன் பின்னரே விமான நிலையம் திறக்கப்படுவது குறித்து அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

* ஹூஸ்டன் நகரில் மட்டும் 5,500 பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக மேயர் சில்வெஸ்டர் டர்னர் தெரிவித்தார்.
* வெள்ளத்தில் சிக்கி மக்களை மீட்க 16 விமானங்கள் இரவு, பகலாக பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக டெக்சாஸ் கவர்னர் கிரேக் அபாட் தெரிவித்தார்.
* மழை நேற்றும் இடைவிடாது கொட்டியது. இந்த வார இறுதியில்தான் மழை நிற்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் கவுன்சலிங் செப்டம்பர் 7ம் தேதி வரை நீட்டிப்பு : உச்ச நீதிமன்றம் உத்தரவு

2017-08-30@ 01:26:03




புதுடெல்லி : நீட் தேர்வு அடிப்படையில் நாடு முழுவதும் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சலிங் நடந்து வருகிறது. தமிழகம் தவிர மற்ற மாநிலங்களில் இறுதிக்கட்ட கவுன்சலிங்கை நாளையுடன் முடிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் 5,500 இடங்கள் காலியாக இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் சுகாதார சேவைகள் இயக்குனரகம் தகவல் தெரிவித்தது. இதையடுத்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு நேற்று பிறப்பித்த உத்தரவில், ‘‘இறுதிக்கட்ட கவுன்சலிங் நடத்துவதற்கான காலக்கெடு அடுத்த மாதம் 7ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. இது நிகர்நிலை பல்கலைக்கழகங்களுக்கு மட்டுமே பொருந்தும். மற்ற கல்லூரிகளுக்கு பொருந்தாது. இதே போன்ற காலக்கெடுவை இதர மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிறுவனங்கள் கேட்டால் அது பரிசீலிக்கப்படாது’’ என்றனர்.
ஓணம் பண்டிகைக்காக தித்திக்கும் மலையாள வெல்லம்: திருவில்லிபுத்தூரில் தயாரிப்பு

2017-08-29@ 21:28:56




திருவில்லிபுத்தூர்: ஓணம் பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு திருவில்லிபுத்தூரில் ‘மலையாள வெல்லம்’ தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருவில்லிபுத்தூரை பொறுத்தவரை விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. விவசாயிகள் கடன் வாங்கியாவது விவசாய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். திருவில்லிபுத்தூர் விவசாயிகள் தங்களது நிலங்களில் அதிகளவு கரும்பு பயிரிட்டு வருகின்றனர். அறுவடை செய்த கரும்பு, ஆலைகளில் அரைக்கப்பட்டு வெல்லமாக தயாரித்து பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்காக அனுப்பப்படுகிறது.

அந்த வகையில் திருவில்லிபுத்தூரில் கூம்பு வடிவிலான வெல்லம், உருண்டை வடிவிலான வெல்லம் என இரண்டு வகையான வெல்லம் தயாரிக்கப்படுகிறது. கூம்பு வடிவிலான வெல்லம் நாட்டு வெல்லம் என்றும், உருண்டை வெல்லம் உருட்டு வெல்லம் என்றும் அழைக்கப்படுகிறது. உருட்டுவெல்லத்தை மலையாள மக்கள் விரும்பி பயன்படுத்துவதால் இதனை ‘மலையாள வெல்லம்’ எனவும் அழைப்பதுண்டு. திருவில்லிபுத்தூரில் தயாரிக்கப்படும் மலையாள வெல்லம் கேரளாவின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது.
ஓணம் பண்டிகையை கேரள மக்கள் வெகு விமர்சையாக கொண்டாடுவர்.

ஓணத்தின் போது வீடுகளில் பல்வேறு வகையான இனிப்பு வகைகளை செய்து அசத்துவர். இனிப்பு பலகாரத்தில் திருவில்லிபுத்தூரில் தயாரிக்கப்படும் வெல்லம் முக்கிய இடம்பிடிக்கும். ஓணம் பண்டிக்கை நெருங்குவதால் திருவில்லிபுத்தூரில் மலையாள வெல்லம் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தயாரிக்கும் வெல்லத்தை நேரடியாகவும், வியாபாரிகள் மூலம் கேரளாவிற்கு விவசாயிகள் அனுப்பி வருகின்றனர்.

பொள்ளாச்சி, உடுமலைபேட்டை, ஈரோடு போன்ற பகுதிகளிலிருந்து வெல்லம் தயாரிக்கும் தொழிலாளர்கள் அதிகமாக வரவழைக்கப்பட்டு மலையாள வெல்லம் தயாரிக்கும் பணி இரவு-பகலாக நடந்து வருகிறது. இதுகுறித்து மலையாள வெல்லம் ஆலை உரிமையாளர் ஒருவரிடம் கேட்டபோது, ‘இங்கு தயாரிக்கப்படும் வெல்லம் சுவையானவை. ஓணம் பண்டிகை நெருங்குவதால் வெல்லத்தின் தேவை அதிகமாக இருக்கும். எனவே வெளியூர்களில் இருந்து தொழிலாளர்களை வரவழைத்து தயாரிப்பு பணியை முடுக்கி விட்டுள்ளோம்’ என்றார்.
திருமணத்திற்கு முன்தினம் இரவு மண்டபத்தில் இருந்து காதலனை தேடி ஓடிய மணப்பெண் ஏமாற்றத்துடன் திரும்பிய அவலம்
2017-08-30@ 01:09:17

DINAKARAN




திண்டிவனம் : திருமணத்திற்கு முன்தினம் இரவு காதலனை தேடி மண்டபத்தில் இருந்து ஓடிய மணப்பெண், குறிப்பிட்ட இடத்தில் அவனை காணாமல் ஏமாற்றத்துடன் திரும்பி வந்தார். அதற்குள் மணமகனும் வெளியேறியதால் திருமணம் நின்றது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள ஒலக்கூர் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை மகள் சிலம்பரசி(24). திண்டிவனம் வண்ணாரபேட்டையை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் முருகன்(24). இருவரும் பள்ளியில் படிக்கும் போதே காதலித்து வந்தனர். பள்ளி படிப்பு முடிந்த பிறகும் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து காதலை வளர்த்து வந்தனர். இவர்களின் காதல் விவகாரம் தெரிந்ததும் கண்டித்த சிலம்பரசியின் பெற்றோர், மகளுக்கு வேறு ஒருவரை திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அதன்படி சிலம்பரசிக்கும், அச்சிறுப்பாக்கத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டது. நேற்று முன்தினம் காலை அச்சிறுப்பாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற இருந்தது.

அதற்கு முன்தினம் மாலை மண்டபத்திற்கு பெண் வீட்டார் வந்து தங்கினர். அன்றிரவு சிலம்பரசிக்கு போன் செய்த அவரது காதலன் முருகன், அச்சிறுப்பாக்கம் மலையடிவாரத்தில் நிற்பதாகவும், நீ உடனே வந்தால் இருவரும் ஊரை விட்டு போய் திருமணம் செய்து கொள்வோம் என்று அழைத்து இருக்கிறார். இதை நம்பி சிலம்பரசியும் நள்ளிரவில் மண்டபத்தை விட்டு வெளியேறி காதலனை தேடி சென்றார். மறுநாள் காலை மணப்பெண்ணை அலங்காரம் செய்ய தேடியபோது சிலம்பரசியை காணவில்லை. இதனால் பெற்றோரும், உறவினர்களும் அதிர்ச்சி அடைந்தனர். திருமண மண்டபமே பரபரப்புக்குள்ளானது. தகவலறிந்து மணமகன் வீட்டார் ரகளையில் ஈடுபட்டனர். பின்னர் கோபத்துடன் மண்டபத்தை விட்டு வெளியேறினர். திருமணம் நின்றதால் உறவினர்களும் கலையத் தொடங்கினர்.

இதனிடையே மதியம் வரை காதலனுக்காக காத்திருந்த சிலம்பரசி, அவர் வராததால் ஏமாற்றம் அடைந்து, மீண்டும் திருமண மண்டபத்துக்கு வந்து பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் நடந்த சம்பவத்தை கூறி கதறியழுதார். இதையடுத்து திண்டிவனம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் சிலம்பரசி தன்னை ஏமாற்றிய காதலன் மீது புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மளிகை கடை உரிமையாளர் கைது

2017-08-29@ 19:18:27

சென்னை: சென்னை கேளம்பாக்கம் அடுத்த படூரில் 2 குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாக முகமது அபுபக்கர் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் டேவிட் பால் அளித்த புகாரின் பேரில் மளிகை கடை உரிமையாளர் முகமது அபுபக்கரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அசல் ஓட்டுநர் உரிமம் இல்லையெனில் 3 மாதம் சிறை : காவல் துறை எச்சரிக்கை
2017-08-29@ 21:19:39

சென்னை: செப்டம்பர் 1ம் தேதி முதல் வாகன ஓட்டுநர்கள் அனைவரும் அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும் என சென்னை காவல்துறை அறிவித்துள்ளது. அசல் ஓட்டுநர் உரிம்ம இல்லை என்றால் ரூ.500 அபராதம் அல்லது 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
'நீட்'விண்ணப்பத்தை தவறாக பூர்த்தி செய்த விவகாரம் : உயர்நீதிமன்றம் உத்தரவு
பதிவு செய்த நாள்30ஆக
2017
00:50


மதுரை: 'நீட்' தேர்வு விண்ணப்பத்தில் அறியாமையால் செய்த தவறை சரிசெய்து, மருத்துவ மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கில் அனுமதிக்க தாக்கலான வழக்கில், மருத்துவக் கல்வி இயக்குனரக தேர்வுக்குழு இயக்குனர் பரிசீலிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை வள்ளுவர் காலனி சுபிக் ஷா தாக்கல் செய்த மனு:பிளஸ் 2 தேர்ச்சியடைந்து, மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான 'நீட்' தேர்வு எழுதினேன். நான் இதர பிற்பட்டோர் பிரிவை (ஓ.பி.சி.,) சேர்ந்தவள். தேர்வு விண்ணப்பத்தில், அறியாமையால் ஓ.பி.சி.,க்கு பதிலாக யு.ஆர்.,எனப்படும் இட ஒதுக்கீடு அல்லாதவர்களுக்குரிய பிரிவை தேர்வு செய்துவிட்டேன்.விண்ணப்பத்துடன் ஓ.பி.சி.,சான்று இணைத்திருந்தேன். உரிய 'கட்-ஆப்' மதிப்பெண் பெற்று, மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கிற்கு தகுதியடைந்தேன். ஆனால், தகுதிப் பட்டியலில் ஓ.பி.சி.,பிரிவில் எனது பெயர் இல்லை. ஓ.பி.சி.,பிரிவு கவுன்சிலிங் தகுதிப் பட்டியலில் எனது பெயரை சேர்க்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு சுபிக்ஷா மனு செய்திருந்தார்.நீதிபதி கே.கல்யாணசுந்தரம், “மருத்துவக் கல்வி இயக்குனரக தேர்வுக்குழு இயக்குனர், மனுதாரரின் மனுவை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்,” என்றார்.

NEWS TODAY 11.07.2026