Thursday, August 31, 2017

நோயால் இறந்த ஆடுகளின் இறைச்சி: 'ஆந்த்ராக்ஸ்' தாக்கும் அபாயம்
பதிவு செய்த நாள்31ஆக
2017
00:19

விருதுநகர்: நோயால் பாதிக்கப்பட்டு இறந்த ஆட்டு இறைச்சியை சாப்பிடுவதால், 'ஆந்த்ராக்ஸ்' நோய் தாக்கும் அபாயம் உள்ளது. செப்டம்பரில் ஆடுகளை பொதுவாக அடைப்பான் எனும் ஆந்த்ராக்ஸ் நோய் தாக்கும். இந்நோயால் இறந்த ஆட்டின் உடலில் இருந்து வெளியேறும் ரத்தம் உறையாமல் இருக்கும். இந்த ரத்தத்தில் ஆந்த்ராக்ஸ் கிருமி இருக்கும். காயம் ஏற்பட்ட மனிதர் களின் காயப்பகுதியில் உறையாத ரத்தம் தெரித்தால், அவர்களையும் கிருமி தாக்கும். மேலும், இந்நோயால் இறந்த ஆட்டுஇறைச்சியை சாப்பிடுபவர்களுக்கு ஆந்த்ராக்ஸ் பாதிப்பு அதிகம்.
விருதுநகர் உட்பட சில மாவட்டங்களில் ஆடு வதைக்கூடம் செயல்படாமல் உள்ளன. பாதுகாப்பு, மருத்துவ சோதனை, கண்காணிப்பு போன்றவை இல்லாமல் நினைத்த இடத்தில் ஆடுகளை வெட்டி, இறைச்சி விற்பனை நடக்கிறது. இதில், நோயால் இறந்த ஆடுகளை விற்கும் அபாயம் இருப்பதால் அசைவ பிரியர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

கால்நடைத் துறை மண்டல இணை இயக்குனர் ஜெகதீசன் கூறியதாவது: விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம், வத்திராயிருப்பு பகுதி யில் மட்டும் கடந்த ஆண்டு செப்டம்பரில் அடைப்பான் நோய் பாதிப்பு இருந்தது. அதற்கான ஊசிகள் போடப்பட்டு கட்டுப்படுத்தப்பட்டது. இந்தாண்டு இப்பாதிப்பு ஏற்படாமல் இருக்க, இரு மாதம் முன்னரே தடுப்பு ஊசி போடப்பட்டுள்ளது.அடைப்பான் நோய் தாக்கப்பட்ட ஆடுகளுக்கு காய்ச்சல் ஏற்படும். கழுத்தில் கட்டி இருக்கும். மூக்கு, ஆசன வாயில் ரத்தம் வெளியேறும். இந்த ரத்தம் உறையாமலும் இருக்கும். இது போன்ற அறிகுறிகள் இருந்து, இறந்த ஆடுகளின் உடலை கால்நடை டாக்டர்கள் ஆலோசனைப்படி புதைக்க வேண்டும். இதுபோன்ற நோய் தாக்கி இறந்த ஆட்டின் இறைச்சியை சாப்பிட்டால், மனிதர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என்றார்.
ரேஷன் கார்டு வகை மாற்றம் : இணையதளத்தில் குழப்பம்

பதிவு செய்த நாள்30ஆக
2017
22:01


ரேஷன் கார்டுகள், வகை மாற்றம் செய்த நிலையில், பொது வினியோக திட்ட இணையதளத்தில், பழைய விபரங்களே இருப்பதால், பொதுமக்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

அரிசி, சர்க்கரை, காவலர், எந்த பொருளும் வாங்காத கார்டு என, பல வகைகளில், ரேஷன் கார்டுகள் இருந்தன. உணவு பாதுகாப்பு சட்டம் அமலுக்கு வந்ததை தொடர்ந்து, தற்போது, ரேஷன் கார்டுகள், 'முன்னுரிமை மற்றும் முன்னுரிமை அல்லாதவை' என, வகைப்படுத்தப்பட்டு உள்ளன. இருப்பினும், ஏற்கனவே இருந்த ரேஷன் கார்டுகளுக்கு ஏற்ப, வழக்கம் போல உணவுப் பொருட்கள் தரப்படுகின்றன. ஆனால், பொது வினியோக திட்டத்தின் இணையதளத்தில், ரேஷன் கார்டுகளின் புதிய வகையை வெளியிடாமல், அரிசி, சர்க்கரை கார்டு என, பழைய விபரங்களே உள்ளதால், மக்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

இது குறித்து, உணவுத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'தற்போது, 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டுகள் வழங்கும் பணியில் மட்டுமே கவனம் செலுத்தப்படுகிறது. புதிய ரேஷன் கார்டு வகைகள், எதற்காக அந்த பெயர் வந்தது உள்ளிட்ட விபரங்கள், மென்பொருள் வடிவில் தயாராக உள்ளன. அவை, ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணி முடிந்த பின், பொது வினியோக திட்ட இணையதளத்தில் வெளியிடப்படும்' என்றார்.

- நமது நிருபர் -
மாணவருக்கு கல்வி கடன் தந்த வங்கிகள் : ஆபீசுக்கு போன் செய்து மிரட்டும் அவலம்

பதிவு செய்த நாள்30ஆக
2017
22:00

கல்விக் கடன் பெற்றவர்களின் அலுவலகத்திற்கு போன் செய்து, கடனை திருப்பிச் செலுத்த சொல்லி, அவமானப்படுத்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கல்விக் கடன் பெற்ற மாணவர்கள், படிப்பு முடிந்து, ஒன்றரை ஆண்டு வரை, தவணை செலுத்த அவகாசம் தரப்படுகிறது. பலருக்கு, படித்து முடித்ததும் வேலை கிடைப்பதில்லை.

சொற்ப ஊதியம் : சிலருக்கு வேலை கிடைத்தாலும், சொற்ப ஊதியம் தான் கிடைக்கிறது. அதனால், குறித்த காலத்தில், அவர்களால் கடன் தவணை செலுத்த முடிவதில்லை.

இதற்கிடையே, மாணவர்களிடம் கடனை வசூலிக்க, ஒரு தனியார் நிறுவனத்தை, பாரத ஸ்டேட் வங்கி நியமித்துள்ளது. அவர்கள், கந்து வட்டிக்காரர்கள் போல் மிரட்டுவதாக, புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், மாணவர்களை அவமானப்படுத்தும் வகையில், அவர்கள் வேலை செய்யும் அலுவலகத்திற்கு, தொலைபேசியில் தகவல் தெரிவித்து, கடனை செலுத்த சொல்லி, அவமானப்படுத்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

இது குறித்து, பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் கூறியதாவது: அரியலுார், ஸ்டேட் வங்கியில் கல்விக் கடன் பெற்று, சென்னையில், 2011 - 2014 வரை, எம்.சி.ஏ., படித்தேன். சில மாதங்களாக, சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறேன்.

தொல்லை : நான் பணிபுரியும் அலுவலக தொலைபேசி எண்ணை கண்டுபிடித்த, அந்த தனியார் நிறுவன ஊழியர்கள், என் அதிகாரிகளிடம், நான் கடன்பட்டிருப்பதை கூறி, தொல்லை தருகின்றனர்.சில தினங்களுக்கு முன், என் நிறுவன மேலாண் இயக்குனரின் மொபைல் போனில் பேசி, நான் கடன் வாங்கிய விபரத்தை கூறியுள்ளனர். 'அடுத்த முறை அழைப்பு வந்தால், வேலையை விட்டு நீக்கி விடுவோம்' என, அலுவலகத்தில் கூறிவிட்டனர்.இவ்வாறு அவர் கூறினார்.

கடன் கேட்டு நச்சரித்த, கடன் வசூல் தனியார் நிறுவன அலுவலர், நெடுஞ்செழியன் கூறுகையில், ''அந்த இளைஞர், ஒரு தவணை கூட செலுத்தவில்லை. மொபைல் போனை எடுக்காததால், அலுவலகம் வழியாக பேச வேண்டிய நிலை ஏற்பட்டது,'' என்றார்.

- நமது நிருபர் -
இணையதளத்தில்ஆவணங்கள் தொலைந்ததற்கான சான்று

பதிவு செய்த நாள்31ஆக
2017
00:18

ராமநாதபுரம்: தமிழகத்தில் ஆவணங்கள், வாகனங்கள் தொலைந்து போனால், போலீஸ் ஸ்டேஷனில் புகார் தெரிவிக்கப்படும். அதற்கான சான்றுகளை இணையதளத்தில் புகார்தாரர் பதிவிறக்கம் செய்து கொள்ளும் திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது.

தமிழகத்தில் காவல்துறை சார்பில் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. புகார் கொடுத்தால், எப்.ஐ.ஆர்., நகலை பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது. ஆன் லைனில் புகார் தெரிவிக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் விபத்து வழக்குகளில், காப்பீடு நிறுவனங்களுக்கு போலீஸ் ஸ்டேஷனில்இருந்து வழங்கப்படும் சான்றை பெற்றுத் தர வேண்டும். ஆவணங்கள் தொலைந்து போனால், ஆவணங்கள் தொலைந்தது குறித்து போலீஸ் ஸ்டேஷனில் வழக்குப்பதிவு செய்யப்படும். தற்போது வழக்குப்பதிவு செய்யாமல் புகார் மனு குறித்த ரசீது வழங்கப்பட்டு வருகிறது.

இன்று முதல் புகார்தாரர்கள் தங்களுக்கு தேவையான சான்றுகளை ஆன் லைன் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் இன்று முதல் தமிழகம் முழுவதும் காவல் துறையினரால் அமல்படுத்தப்படுகிறது.இதனால் புகார்தாரர்கள் போலீஸ் ஸ்டேஷனுக்கு அலைய வேண்டியதில்லை.
57 வயசை தாண்டியும் அரசு வேலைக்காக காத்திருப்பு
பதிவு செய்த நாள்30ஆக
2017
22:44

தமிழகத்தில், அரசு வேலை கோரி, 85 லட்சம் பேர், வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருக்கின்றனர். அவர்களில், 5,736 பேர், 57 வயதை தாண்டியவர்கள் என, தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக, தமிழக அரசு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவல்: தமிழகத்தில், 18 வயதுக்கு உட்பட்ட, 20 லட்சத்து, 78 ஆயிரத்து, 728 பேர், அரசு வேலைவாய்ப்பு கேட்டு, பதிவு செய்துள்ளனர். 18 - 23 வயது வரையிலான பிரிவில், 21 லட்சத்து, 6 ஆயிரத்து, 681 பேர் பதிவு செய்துள்ளனர்.
இதேபோல், 24 - 35 வயதுக்கு உட்பட்ட, 31 லட்சத்து, 6 ஆயிரத்து, 154 பேர்; 35 - 56 வயதுக்கு உட்பட்ட, 11 லட்சத்து, 66 ஆயிரத்து, 837 பேர், அரசு வேலை வாய்ப்பகங்களில், பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில், அரசு வேலைக்காக காத்திருக்கும், 84 லட்சத்து, 64 ஆயிரத்து, 136 பேரில், 5,736 பேர், 57 வயதுக்கு மேற்பட்டவர்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

- நமது நிருபர் -


எச்சரிக்கை!தமிழகம் உட்பட 12 மாநிலங்களுக்கு பலத்த மழை...
3 நாள் கொட்டி தீர்க்கும் என ஆய்வு மையம் கணிப்பு

புதுடில்லி: தமிழகம், கர்நாடகா ஆகிய தென் மாநிலங்கள் உட்பட, நாட்டின், 12 மாநிலங் களில், இன்று முதல், மூன்று நாட்களுக்கு, கன மற்றும் மிக கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நீர் நிலைகள் நிரம்பி, வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.



தமிழகம், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட தென் மாநிலங்கள் மற்றும் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்கள் என, நாடு முழுவதும், 12 மாநிலங்களில், இன்று முதல் மூன்று நாட்களுக்கு கனமழை கொட்டித் தீர்க்க வாய்ப்பிருப்பதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வெள்ளப் பெருக்கு

பல மாநிலங்களில், ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, கரையோர மாவட்டங்களுக்கு, வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாநில அரசு கள், முன்னெச்சரிக்கை நடவடிக் கைகளை மேற்கொள்ளும்படி, மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.இது குறித்து, இந்திய வானிமை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள

அறிவிப்பில் கூறப்பட்டுள்ள தாவது: மஹாராஷ்டிரா மாநிலத்தில் பல இடங்களில் பரவலாக மழை தொடரும். சில இடங்க ளில், கன மற்றும் மிக கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.

நீர் நிலைகள்

ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசத்தில், இன்று முதல் மூன்று நாட்களுக்கு கனமழை பெய்ய அதிக வாய்ப்புள்ளது. பெரும்பாலான நதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது.மஹாராஷ்டிரா வின் பல பகுதிகள், கர்நாடகா, மத்திய பிரதேசம், குஜராத் மாநிலங்களில், நேற்று, 19 செ.மீ., வரை மழை பெய்துள்ளது. அந்த மாநிலங்களில் உள்ள பெரும்பாலான நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன.

மேலும் மழை தொடரும் பட்சத்தில், இந்த மாநிலங் களில் வெள்ளப் பெருக்கு ஏற்படும். தமிழகம், கர்நாடகா உட்பட, 12 மாநிலங்களில், இன்று முதல் மூன்று நாட்களுக்கு, கன, மிக கன மழை பெய்ய அதிக வாய்ப்புள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அபாய எச்சரிக்கை!

ஆறுகள், நீர் நிலைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எந்தெந்த ஆறுகளில் வெள்ளம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பது என்பது குறித்தும், ஆய்வு மைய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ள தாவது:

இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு பெய்யும் கன மழையால், ம.பி., ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் பாயும், மாஹி நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, அந்த மாநிலங்களின் பல.

மாவட் டங்களில், கடும் பாதிப்பு ஏற்படவாய்ப்பு உள்ளது.சபர்மதி நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, குஜராத், ராஜஸ்தானில் பேரழிவை ஏற்படுத்தலாம்நர்மதை, தாபி நதியில் ஏற்படும் வெள்ளத்தால், மஹாராஷ்டிராவின், ஏழு மாவட்டங்கள் கடுமையான பாதிப்புக்குள்ளா கலாம்.

குஜராத்தின் வல்சாட், டாமன் பகுதிகளுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
கோதாவரி, இந்திராவதி ஆறுகளில் மிதமான வெள்ளம் ஏற்படும்; இதன் மூலம், ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் உள்ள, 10 மாவட் டங்கள் பாதிக்கப்படலாம்.

கிருஷ்ணா, துங்க பத்ரா ஆறுகளில் ஏற்படும் வெள்ளத்தால், மஹாராஷ்டிராவின், கோலாப்பூர், புனே, சோலாப்பூர் மாவட்டங் களுக்கும், கர்நாடகா வின், 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக் கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

கன மழையால், காவிரியாற்றில், வெள்ளப் பெருக்க ஏற்பட்டு, கர்நாடகாவின் காவிரி கரை யோர மாவட்டங்களில் பேரழிவை ஏற்படுத்தலாம்.
தமிழகத்தின், பவானி ஆற்றில் மிதமான வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது. இங்கு, கன மழை பெய்தாலும், பெரும்பாலான ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப் பில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பெய்வது எங்கே?

ம.பி., ராஜஸ்தான், குஜராத், மஹாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, சத்தீஸ்கர், தெலுங்கானா, ஆந்திரா, தமிழகம், கேரளா ஆகிய மாநிலங் களிலும்,டையூ,டாமன் யூனியன் பிரதேசங் களிலும்,இன்று முதல் கன, மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. மழைப் பொழிவு, 3 நாட் களுக்கு தொடரும் என எதிர்பார்க்கபடுகிறது.
மும்பையில் கனமழை எதிரொலி: விமானிகள் வராததால் விமான போக்குவரத்து பாதிப்பு
பதிவு செய்த நாள்30ஆக
2017
19:29




மும்பையில் பெய்து வரும் கனமழையால் விமானிகள் வர முடியாத நிலை ஏற்பட்டதையடுத்து விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

மராட்டிய மாநில தலைநகர் மும்பையில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வந்தது. நேற்று காலை 8.30 மணி முதல் மதியம் 12 மணி வரை மும்பையின் அனைத்து பகுதியிலும் இடைவிடாமல் கனமழை கொட்டியது. இதனால் நகரில் அனைத்து இடங்களிலும் வெள்ளநீர் சூழ்ந்தது. தாழ்வான பகுதிகளில் இடுப்பளவிற்கு மேல் மழைநீர் தேங்கியதால் சாலை போக்குவரத்து அடியோடு முடங்கியது. இதனால் விமானிகள் குறித்த நேரத்தில் விமான நிலையத்திற்கு வந்து சேர முடியாத காரணத்தால், பெரும்பாலான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சில விமானங்கள் காலதாமதமாக சென்றன. தனியார் விமான நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் 19 விமானங்களை இன்று (ஆக.,30) ரத்து செய்தது. சில சர்வதேச விமானங்களும் இதில் அடங்கும்.

NEWS TODAY 31.01.2026