Tuesday, September 5, 2017

சுயநிதி பல் மருத்துவ கல்லூரிகளில் சேர 1122 இடங்களுக்கு இன்று கலந்தாய்வு


தமிழகத்தில் நீட் தேர்வின் மதிப்பெண் அடிப்படையில் மருத்துவப்படிப்பில் சேருவதற்கான மருத்துவ கலந்தாய்வு சென்னையில் உள்ள பல்நோக்கு அரசு சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்று வருகிறது.

செப்டம்பர் 05, 2017, 04:30 AM

சென்னை,

எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு கடந்த 3-ந்தேதி முடிவடைந்து நேற்று வகுப்புகள் தொடங்கின. பல் மருத்துவ இடங்களை பொருத்தவரை , அகில இந்திய ஒதுக்கீட்டில் கலந்தாய்வு நடத்தப்பட்டுஅதில் உள்ள மீதம் 2 இடங்கள் வந்ததால் அரசு பல் மருத்துவக்கல்லூரியில் 87 இடம் இருந்தன .அந்த இடங்கள் நிரம்பி விட்டன. சுயநிதி பல் மருத்துவக்கல்லூரிகள் 18 உள்ளன. இந்த கல்லூரிகளில் இருந்து அரசு ஓதுக்கீட்டுக்கு 1198 இடங்கள் உள்ளன. நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் 715 ஆகும்.

சுயநிதி பல் மருத்துவ கல்லூரிகளில் உள்ள இடங்களுக்கான கலந்தாய்வு நேற்று நடைபெற்றது. மொத்தம் 714 பேர் அழைக்கப்பட்டதில் 650 பேர் வரவில்லை. 64 பேர்தான் கலந்துகொண்டனர். 64 பேர்களில் 31 பேர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. 3 பேர்கள் கலந்தாய்வில் கலந்துகொண்டு அவர்களுக்கு தேவையான கல்லூரி கிடைக்காதால் அவர்களுக்கு ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்ட கல்லூரியே போதும் என்று தெரிவித்தனர். 30 பேர் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர்.

சுயநிதி பல் மருத்துவ இடங்களுக்கான அரசு ஓதுக்கீட்டு இடங்கள் 441 உள்ளன. மேலும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் 681 இருக்கின்றன. இந்த இடங்களுக்கு இன்று (செவ்வாய்க் கிழமை) கலந்தாய்வு நடைபெறுகிறது. நாளையும் கலந்தாய்வு நடைபெறும்.

செப்டம்பர் மாதம் விசேஷங்கள்

செப்டம்பர் மாதம் விசேஷங்கள்
செப்டம்பர் 05 (செ) ஆசிரியர் தினம்
செப்டம்பர் 06 (பு) தினமலர் இதழுக்கு 67 வது பிறந்த தினம்
செப்டம்பர் 06 (பு) மகாளய பட்சம் ஆரம்பம்
செப்டம்பர் 11 (தி) பாரதியார் நினைவு நாள்
செப்டம்பர் 19 (செ) மகாளய அமாவாசை
செப்டம்பர் 21 (வி) நவராத்திரி ஆரம்பம்
செப்டம்பர் 29 (வெ) சரஸ்வதி பூஜை
செப்டம்பர் 30 (ச) விஜயதசமி

Monday, September 4, 2017

1176 மதிப்பெண் 197.50 கட் ஆஃப். நீட்டால் பிரதீபாவிற்கு கனவாகிப்போன மருத்துவம் #NEET

பி.ஆண்டனிராஜ்




பிளஸ் டூ தேர்வில் 1176 மதிப்பெண் பெற்றும் மருத்துவ வாய்ப்பு மறுக்கப்பட்டதால், அரியலூர் மாவட்டம் குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, தமிழகம் முழுவதும் நீட் தேர்வுக்கு எதிராகக் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் தேசம் கட்சியின் நிறுவனத் தலைவரான சாத்தை பாக்கியராஜ் தலைமையில் நீட் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது அங்கு ஒரு தாயும் மகளும் வந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். கட்சியினர் அல்லாத ஒருவர் திடீரென வந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றதால், அவர்களிடம் கட்சியினர் விசாரித்தனர். அப்போது அவர்களும் இதே விஷயத்துக்காக கலெக்டரிடம் மனு அளிக்க வந்த விவரம் தெரிய வந்தது. பிரதிபா என்ற அந்த மாணவி 1176 மார்க் எடுத்த நிலையில் நீட் தேர்வு காரணமாக மருத்துவ வாய்ப்பு பறிபோய் இருக்கும் அதிர்ச்சித் தகவல் தெரிய வந்துள்ளது.



இட்டமொழி கிராமத்தைச் சேர்ந்த அந்த மாணவி, 10-வது வகுப்பில் 495 மதிப்பெண் பெற்று உள்ளார். அதனைத் தொடர்ந்து பிளஸ் டூ தேர்வில் தமிழ் மொழியில் படித்து 1176 மதிப்பெண் பெற்றுள்ளார். 197.50 கட்-ஆப் மதிப்பெண் பெற்ற அவர், நிச்சயமாக மருத்துவப் படிப்பில் சேர வாய்ப்புக் கிடைக்கும் என நம்பினார். ஆனால், திடீரென நீட் தேர்வு அறிவிக்கப்பட்ட நிலையில் அவரால் அதில், 200 மதிப்பெண் மட்டுமே பெற முடிந்துள்ளது. இதனால் அவரது மருத்துவக் கனவு தகர்ந்தது.

மருத்துவ கவுன்சலிங்கில் பங்கேற்ற அவருக்கு பல் மருத்துவப் படிப்புக்குத் தனியார் கல்லூரியில் இடம் கிடைத்து உள்ளது. கூலித் தொழிலாலியின் மகளான தன்னால் பணம் கட்டி தனியார் கல்லூரியில் பல் மருத்துவம் படிக்க வாய்ப்பு இல்லாததால் கல்லூரியில் சேராமல் உள்ளார். தனது மதிப்பெண்ணுக்கு மருத்துவக் கல்லூரியில் வாய்ப்புக் கிடைக்கும் என்பதால் பொறியியல் கல்லூரி உள்ளிட்ட பிற கல்லூரிகளில் விண்ணப்பிக்காமல் இருந்து விட்டார். அதனால் தற்போது வேதனையில் உள்ளார். பின்னர் பிரதிபாவும் அவரது தாய் விஜயலட்சுமியும் நெல்லை ஆட்சியர் சந்தீப் நந்தூரியைச் சந்தித்து தங்களின் வேதனையைச் சொல்லி கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

கொடிது கொடிது முதுமையில் தனிமை! - முதியோர் உடல், உள நலம் பேணுவது எப்படி?

இரா.செந்தில் குமார்


மும்பையைச் சேர்ந்தவர் ரித்துராஜ். அமெரிக்காவில் மென்பொருள் பொறியாளர். இவரது தாயார் ஆஷா ஷகானி, மும்பையில் அபார்ட்மென்ட் ஒன்றில் தனியாக வசித்து வந்தார். கடந்த ஒரு வருடமாக தனது தாயுடன் எந்தத் தொடர்பும் இல்லாமல் இருந்த ரித்துராஜ், கடந்த மாதம் தனது தாயைக் காண்பதற்காகச் சொந்த ஊரான மும்பைக்கு வந்தார். பலமுறை காலிங் பெல் அடித்தும் வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. அதனால், அருகில் இருந்த பூட்டுக்கடைக்காரரின் உதவியோடு கதவைத் திறந்து பார்த்த ரித்துராஜுக்குக் காத்திருந்தது அதிர்ச்சி. தாய் ஆஷா ஷகானி இறந்த நிலையில் எலும்புக்கூடாகக் கிடந்தார். ரித்துராஜ் உடைந்து போய்க் கதறினார். ‘என் தற்கொலைக்கு யாரும் காரணமில்லை... இது என் சொந்த முடிவு’ என்று ஆஷா எழுதியிருந்த கடிதம் அந்த அறையின் ஒரு பக்கம் கிடந்தது.



இது மும்பையில் நடந்த சம்பவம்தானே என்று எளிதாகக் கடந்து போக முடியாது. சில வருடங்களுக்கு முன்னர், இதே மாதிரி ஒரு சம்பவம் சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையிலும் நடந்தது. அழுகிய வாடை அடிக்கவே, பக்கத்து வீட்டினர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, வயதான பாட்டி ஒருவர் இறந்து அழுகிய நிலையில் கிடந்தார்.

‘பங்காளி... பக்கத்து வீட்டுக்கும்

சேர்த்துச் சமைக்கிற அன்பு இங்கு வாழும்...’

என்று `சிவாஜி’ திரைப்படத்தில் `பல்லேலக்கா...’ பாடலில், தமிழர்களின் வாழ்வியலை அழகாகச் சொல்லியிருப்பார் மறைந்த கவிஞர் நா.முத்துக்குமார் . அப்படிப் பக்கத்து வீட்டுக்காரர்களுடனும் அண்டை வீட்டுக்காரர்களுடனும் கூட்டுக் குடும்பம்போல ஒற்றுமையாக, வாழ்ந்துவந்தவர்கள்தான் நம் மக்கள். ஆனால், இன்று நிலைமை ஏன் இப்படி மாறி இருக்கிறது?

இதற்கு என்ன காரணம் ?

தற்போது உள்ள சூழ்நிலையில், வேலைவாய்ப்புகள் வெளியூரிலும், வெளிநாடுகளிலும்தான் அதிகமாக உள்ளன. அதிலும், குறிப்பாக வெளிநாடுகளில் நல்ல சம்பளம் கிடைப்பதால், ஏராளமானோர் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். கிராமங்களில் இருந்தும், நகரங்களில் இருந்தும், பெருநகரங்களில் இருந்தும் வெளிநாடுகளுக்குச் செல்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. கிராமங்களில் இருந்து வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள், தங்களின் பெற்றோரை சொந்தக் கிராமத்தில் விட்டுச் செல்கின்றனர். அவர்களை அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள், உற்றார் உறவினர்கள் கவனித்துக்கொள்கின்றனர். ஆனால், சென்னை, மதுரை, திருச்சி போன்ற பெரு நகரங்களில் தனியாகவிடப்படும் பெற்றோர்களின் நிலைமைதான் மிகவும் பரிதாபம்.

பெரிய பெரிய அபார்ட்மென்ட்கள்தான் முதியவர்களின் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு என்று நினைத்து, அபார்ட்மென்ட்களில் அவர்களை விட்டுச் செல்கின்றனர். ஆனால், அபார்ட்மென்ட் வாழ்க்கை முறை சில நேரங்களில் அவர்களுக்கு ஆபத்தாகவும் மாறிவிடுகிறது. ஏனென்றால், பெருநகரங்களில் பக்கத்து வீட்டில் யார் இருக்கிறார் என்பதுகூட தெரியாமல்தான் பலரும் வாழ்ந்து வருகின்றனர். அதைப் பெருமையாகவும், பாதுகாப்பாகவும் கருதுபவர்களும் உண்டு. இதனால்தான் இது போன்ற மரணங்கள் உண்டாகின்றன. அது மட்டும் அல்ல... இது போன்று முதுமையில் தனியாக வாழ்பவர்கள் பல்வேறு மனநலப் பாதிப்புகளுக்கும் உண்டாகிறார்கள் என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்.

இது பற்றி மனநல மருத்துவர் ஸ்வாதிக் சங்கரலிங்கத்திடம் கேட்டோம். “வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்வது என்பது அவரவர் விருப்பம் சார்ந்த ஒன்று. தங்களின் குடும்ப முன்னேற்றத்துக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் தேவை உண்டாகியிருக்கிறது. அப்படிச் செல்பவர்களில் சிலர் தங்களின் பெற்றோர்களுக்கு முறையான பாதுகாப்புகளைச் செய்யாமல் தனியாக விட்டுச் செல்கின்றனர். அபார்ட்மென்ட்களில் பக்கத்து வீட்டுக்காரர்களுடன்கூடப் பேசாமல் தனிமையிலேயே பொழுதைக் கழிப்பதால், அவர்களுக்குத் தூக்கமின்மை, மனஅழுத்தம், மனப் பதற்றம் ஆகியவை உண்டாகின்றன. அதேவேளையில் பிள்ளைகள் சில நேரங்களில், அதிகமான வேலைப்பளுவின் காரணமாக தங்களின் பெற்றோர்களுடன் தொடர்பில்லாமல் இருந்துவிடுகிறார்கள். இது மிகவும் தவறான போக்கு.

வயதான பலருக்கு (Fear of falling) கீழே விழுந்து விடுவோமோ என்கிற பயம் இருக்கும். இதற்குப் பயந்து வெளியில் கோயிலுக்கோ, மற்ற இடங்களுக்கோகூடச் செல்ல மாட்டார்கள். ஏன், வீட்டுக்குள் நடப்பதையேகூட விட்டுவிடுவார்கள். இதனால் அவர்களுக்கு உடலளவிலும், மனதளவிலும் பல்வேறு பாதிப்புக்கள் உண்டாகும். அவர்களுக்கு நடைப்பயிற்சி மிக அவசியம். அதற்கான வாய்ப்புகளை உருவாக்கவேண்டியது பிள்ளைகளின் கடமை.



வயதானவர்களைப் பாதிக்கும் மற்றொரு முக்கிய வியாதி டிமென்ஷியா. அன்றாடம் ஒவ்வொரு வேளையும் சாப்பிடவேண்டிய மாத்திரைகளைக்கூட சில முதியவர்கள் மறந்துவிடுவார்கள். சில நேரங்களில் சாப்பிட மறந்துவிட்டு மாத்திரையை மட்டும் உட்கொள்வார்கள். இதனால், பல்வேறு உடல்நல பாதிப்புக்களுக்கு உள்ளாவார்கள்.

இத்தகைய பெற்றோர்களின் பிள்ளைகள், அடிக்கடி பெற்றோருடன் தொடர்பிலேயே இருக்க வேண்டும். தினமும் ஒரு முறையாவது போனில் அழைத்துப் பேசி விடவேண்டும். மேலும், நண்பர்கள், உறவினர்கள் இப்படி தங்களுக்கு நெருக்கமானவர்களை வாரம் ஒரு முறையாவது, தங்களுடைய பெற்றோர்களைச் சந்திக்கச் சொல்ல வேண்டும். தீபாவளி, பொங்கல் போன்ற விழாக்களுக்காகவாவது ஊருக்கு வந்து பெற்றோருடன் நேரத்தைச் செலவழிக்கவேண்டும்.

எப்படிப் பார்த்துக்கொள்ள வேண்டும் ?

உதவிக்கு யாரைத் தொடர்பு கொள்ள வேண்டும், உடல்நிலை சரியில்லாத நேரத்தில் யாரைத் தொடர்புகொள்ள வேண்டும், வெளியே செல்வதற்கு ஆட்டோ டிரைவரின் போன் நம்பர்... இப்படி அனைத்தையும் ஒரு டைரியில் எழுதி வைத்து, அவர்களுக்குக் கொடுத்துவிட வேண்டும். அதுபோல அக்கம்பக்கத்து வீட்டினரிடம் பேசி, தங்கள் பெற்றோரைப் பார்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ள வேண்டும்.

அபார்ட்மென்ட் என்றால், அதன் செகரெட்டரியிடம் சொல்லிப் பார்த்துக்கொள்ளச் சொல்லலாம். பொருளாதாரரீதியாகவும்,

மருத்துவரீதியாகவும், அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தரவேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே முதியவர்களின் பாதுகாப்பை ஓரளவுக்கு நாம் உறுதி செய்யமுடியும்’’ என்கிறார் ஸ்வாதிக் சங்கரலிங்கம்.

மேலும், இதுபற்றி முதியோர் நல மருத்துவர் நடராஜனிடம் பேசினோம்... “பெரும்பாலும் இது மாதிரியான மரணங்கள் ஏற்படுவது இல்லை. ஓரிரு சம்பவங்கள் நடக்கின்றன. அதுவும் நடக்கக் கூடாது என்பதே நம் விருப்பம். வெளிநாடுகளுக்குச் செல்லும் பிள்ளைகள் தங்கள் பெற்றோருக்குத் தேவையான பொருளாதார வசதிகளையும், மருத்துவ வசதிகளையும் ஏற்படுத்தித் தந்துவிடவேண்டும்.

நண்பர்களிடம், உறவினர்களிடம் சொல்லி கவனித்துக்கொள்ளச் சொல்லலாம். அதுபோல வீட்டுக்கே சென்று மருத்துவம் செய்யும் பல மருத்துவர்கள் இருக்கிறார்கள். அவர்களை நியமித்து, வாரம் ஒரு முறை பெற்றோரின் ஆரோக்யத்தைக் கவனித்துக்கொள்ளச் சொல்ல வேண்டும். வெளிநாடுகளில் இருந்து ஊருக்கு வரும் பிள்ளைகள், இங்கே இருக்கும்போது நேரம் முழுவதையும் தங்கள் பெற்றோருடனே கழிக்க வேண்டும். வெளியில் எங்காவது சுற்றுலா சென்றால், அவர்களையும் அழைத்துச் செல்ல வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு ஆறுதலாக இருக்கும்’’ என்கிறார் மருத்துவர் நடராஜன்.

உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும், தங்களுடன் பெற்றோரையும் உடன் அழைத்துச் செல்வதே சாலச்சிறந்தது. முடியாத பட்சத்தில் அவர்களுடன் தினமும் தொடர்பிலேயே இருப்பது நல்லது. நாம் குழந்தையாக இருந்தபோது ஒவ்வொரு நிமிடத்தையும் நமக்காகச் செலவழித்த நம் பெற்றோர்களை, அவர்களின் வயதான காலத்தில் மிகச் சிறப்பாக பார்த்துக்கொள்வது நம் கடமை.

“அதிகார வர்க்கத்தின் செவிட்டில் அறைந்திருக்கிறார் அனிதா!” குமுறும் ஊடகவியலாளர்கள் #RIPAnitha
சே.த.இளங்கோவன்

கழுத்தில் ஸ்டெதஸ்கோப் மாட்டி சிகிச்சைப் பார்க்க வேண்டிய மலரின் கழுத்தை தூக்குக் கயிறு சுருக்கியுள்ளது. ‘அனிதா’-வின் மரணம் ஒட்டுமொத்த ஈர நெஞ்சங்களின் இதயங்களையும் நொறுக்கிவிட்டது. வசதியானவர்களால் எளிதில் நிரப்பக்கூடிய மேற்படிப்பை, தனது சிந்தனையைப் பட்டை தீட்டியதன் மூலம் எட்டத் துணிந்த ஏழை கூலித் தொழிலாளியின் மகள் அனிதா. வானத்தை ஜன்னல் வழியாக எட்டிப் பார்க்க வேண்டிய அவசியமில்லை. வீட்டிலிருந்து அண்ணாந்து பார்த்தாலே போதும், ஆங்காங்கே உடைந்த ஓடுகளின் வழியாக வானம், நட்சத்திரங்களாய் சுடும். இரவிலோ, அதிலும் குறிப்பாக மழைக் காலத்தில் ஒழுகும் ஓடுகள் வழியாக வீட்டுக்குள் நுழையும் மழைக்கீற்றுகள், வீட்டையே குளமாக மாற்றிவிடும்.



இந்த இடர்பாட்டுக்கு மத்தியிலும் தனது போராட்டப் பயணத்தின் மூலம் கல்வித் தாமரையாக மலர்ந்தார் அனிதா. ப்ளஸ் டூ தேர்வில் 1176 மதிப்பெண் பெற்றார். அனிதாவுக்கு மட்டும் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்திருந்தால் அவர் பிறந்த குழுமூர் குக்கிராமத்தின் முதல் மருத்துவராக மலர்ந்திருப்பார். ஆனால், இந்தச் சமூக நீதியெல்லாம், ஒரே கொள்கை, ஒரே தேர்வு என்ற 'நீட் '-டின் பார்வையில் படுமா என்ன? இதோ நீட்-டால் தன் மருத்துவக் கனவு நிறைவேறவில்லை என்று தன்னையே சுருக்குக் கயிற்றில் இறுக்கிக் கொண்டுவிட்டார் ஏழை மாணவி அனிதா.

'தாமரை இலை'-களின் தந்திர திணிப்பால், எங்கள் கிராமத்து மலரின் கனவு சிதைக்கப்பட்டுவிட்டதே' என்று உணர்வாளர்கள் கொந்தளிக்கின்றனர். தமிழ்நாடெங்கும் ஆங்காங்கே அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்கும்விதமாக, நீட்-டுக்கு விலக்குக் கேட்டு களமாடிக்கொண்டிருக்கின்றனர். மறுபுறம், வீதிக்கு வர இயலாதவர்கள், தமக்கான தளங்களில் போராடிக் கொண்டிருக்கின்றனர். இந்தநிலையில், செய்திகளை மக்களுக்குக் கடத்தும் பாலமாக இருக்கும் பத்திரிகையாளர்களும், ஊடகவியலாளர்களும் செய்தியைக் கடந்தும் தங்களின் உணர்வுகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

மூத்த ஊடகவியலாளரான கவிதா முரளிதரன் மற்றும் சோனியா அருண்குமார் குரலைக் கேளுங்கள்..

கவிதா முரளிதரன் :

"தமிழகத்தின் மீது திணிக்கப்படும் ஒரு சமூக அநீதிக்கு அனிதா பலியாகியிருக்கிறார். எளிய பின்னணிகளிலிருந்து வரும் கிராமப்புற மாணவர்களை மருத்துவக் கல்லூரி வளாகங்களுக்குள் நுழைய விடாமல் தடுக்கும் பேரவலமும் ஆகப்பெரிய அநீதியும்தான் நீட் என்பதை தனது உயிரைக்கொடுத்து உணர்த்தியிருக்கிறார். கழிப்பறை இல்லாத ஒரு வீட்டில் பிறந்து மருத்துவராகும் கனவை எட்டிப்பிடிக்க அவர் எவ்வளவு தூரம் போராடியிருக்க வேண்டும்? கைக்கெட்டும் தூரத்தில் அந்தக் கனவு நிற்கும்போது இன்னொரு போராட்டம் அனிதா மீது திணிக்கப்படுகிறது.

போராளி என்று விகடன் அவரை அடையாளம் காட்டுகிறது. குழுமூரிலிருந்து உச்ச நீதிமன்றம் வரை நீள்கிறது அவரது போராட்டம். ஆனால், அதிகார மையங்களுக்கு எதிரான போராட்டத்தில் அந்தச் சின்னப் பெண் என்ன வெற்றியை பெற்றுவிட முடியும்? அவர் இன்னும் இரண்டுமுறை தேர்வு எழுதியிருக்கலாம், இன்னும் தன்னம்பிக்கையோடு அணுகியிருக்கலாம் என்றெல்லாம் சொல்பவர்கள், இந்த அரசுகள் இவ்வளவு பெரிய அநீதியை அவர் மீதும் அவர் போன்ற எண்ணற்ற எளிய மாணவர்கள் மீதும் திணிக்காமல் இருந்திருக்கலாம் என்றும் சொல்ல வேண்டும். என்னைப் பொறுத்தவரையில் அனிதா ஒரு போராளியாகதான் இறந்திருக்கிறார். அவரது மரணம், சமூக நீதிக்கு விடப்பட்ட சவால். எந்த சமத்துவமின்மைக்கு எதிராக அனிதா போராடி வந்தாரோ அந்த சமத்துவமின்மையை ஒன்றுமே செய்ய முடியாது என்று உணர்ந்து அதன் மீது தனது குருதியை சிந்திச் சென்றிருக்கிறார். ஜல்லிக்கட்டுக்காகப் போராடிய நாம், நீட் பற்றி மௌனமாக இருப்பதன் கையாலாகாதனத்தின் மீது காறி உமிழ்ந்திருக்கிறார்.

அவரது மரணம், ஒரு சமூகமாக நமக்கு மிகப்பெரிய அவமானம்".

சோனியா அருண்குமார்:

" 'ஒரு குலத்துக்கு ஒரு நீதி' என்ற ஒடுக்குமுறைக்கு எதிரான நீண்ட நெடிய போராட்டத்தின் விளைவாகத்தான் ஒடுக்கப்பட்ட, பின்தங்கிய

கிராமப்புற, ஏழை, எளியவர்கள் கைக்கு, 'கல்வி' கிட்டியது. இன்று அதையும் பறிக்கும் செயலை 'நீட்' செய்கிறது. ஒரு படிப்புக்குத் தேவையான கல்வியை ஏற்கெனவே ப்ளஸ் டூ -வில் படித்து தேர்ச்சி பெற்றவர்கள், எதற்காக மீண்டும் இன்னொரு தகுதி தேர்வு எழுத வேண்டும்? அப்படியென்றால் ஏற்கெனவே படித்த ப்ளஸ் டூ-வை படிப்பாக மதிக்கவில்லையா? இந்த நீட் திணிப்புக்குப் பின், வசதியானவர்கள், உயர் வகுப்பினர்கள் நலன் மட்டுமே இருப்பதாக சந்தேகங்கள் எழுகின்றன. ஒடுக்கப்பட்ட, பின்தங்கிய கிராமத்தைச் சேர்ந்தவர் என்பது மட்டுமல்ல, ஒரு பெண்ணாகவும் கல்வியால் உயரப் பறக்க வேண்டிய ஒரு பறவையை, நீட் நிர்மூலமாக்கிவிட்டதே. ஏனெனில், பெண்கள் மீது திணிக்கப்பட்ட அடிமைச் சங்கிலியை உடைக்கும் அற்புதக் கருவிகளில் கல்வி முதன்மையானது. அப்படி, மருத்துவராக அனிதா மலர்ந்து வந்திருந்தால், பெண் குலத்துக்கும் எவ்வளவு பெருமை. அனைத்தையும் பொசுக்கி விட்டார்களே! இதில், மற்றொரு கொடுமை, ஒருசிலர், அனிதா தற்கொலை செய்து கொண்டது சரியா? என்று விவாதிக்கின்றனர். எந்தப் பிரச்னைக்கும் தற்கொலை தீர்வல்ல. அழுத்திச் சொல்கிறேன், நான் அதை ஏற்கவில்லை. இருந்தாலும் திரும்பத் திரும்ப இதை மட்டுமே பேசுவதன் மூலம் பாதிக்கப்பட்டவரையே குற்றவாளி ஆக்கும் செயலை செய்துவருவதாகவே எனக்குத் தோன்றுகிறது. இதன் பின்னுள்ள நுட்பமான அரசியலையும் ஆய்வுக்குட்படுத்த வேண்டும். தற்கொலை சரியா? தவறா? என்ற விவாதத்தின் மூலம், பிரச்னையின் மூல காரணத்திலிருந்து கவனத்தைத் திசை திரும்புகின்றனர். எனவே, அனிதாவை தற்கொலைக்குத் தூண்டிய காரணிகளைக் களைந்து நிரந்தரத் தீர்வுக்காகப் போராட வேண்டும். அனிதாவின் தற்கொலை, ஏனைய ஒடுக்கப்பட்ட, பின்தங்கிய மாணவ, மாணவிகளின் கல்விக் கனவுகள், நனவாவதற்கான திறவுகோலாக அமையட்டும்." என்கிறார்.

தனது மரணத்தின் மூலம், மருத்துவர் கனவைச் சிதைத்த அதிகார வர்க்கத்தின் செவிட்டில் அறைந்திருக்கிறார் அனிதா! 'நீட்' நிரந்தர விலக்குக்கான போராட்டங்களுக்கு உயிர் கொடுத்துக் கொண்டிருக்கிறது அனிதாவின் மரணம்.
விஜயகாந்த் மனசு போல் எந்த தலைவர்களுக்கும் வராது’ - அனிதா இறுதிசடங்கில் நெகிழ்ந்த மக்கள்!

எம்.திலீபன் கே.குணசீலன்

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் பக்ரித் விழாவிற்கு ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு ஊருக்கு செல்வது வழக்கம். இது கட்சி நிகழ்ச்சி. அந்த வகையில் நேற்றுவாணியம்பாடியில் பக்ரித் நிகழ்ச்சியை முடித்துவிட்டு அனிதாவின் இறுதி சடங்கில் கலந்துகொள்வதாக இருந்துள்ளார் கேப்டன். ஆனால் அங்கிருந்து அவர் கிளம்பவே நேரமாகயிருக்கிறது.




சில நிர்வாகிகள் விஜயகாத்திடம், ”இங்கேயே மணி 7 ஆகிவிட்டது இனிமேல் சென்றால் அங்கு செல்லமுடியாது நீங்கள் போவதற்கு அந்திநேரமாகிவிடும். நாளை அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் சொல்லிகொள்ளமே” என்று சொல்ல, அதற்கு விஜயகாந்த் ”என்ன ஆனாலும் பரவாயில்லை. வண்டியை எடு அனிதாவை பார்த்துவிட்டு வருவோம் எப்படியும் அனிதாவின் இறுதி சடங்கில் கலந்து கொள்ளவேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

அவர்கள் அரியலூர் வந்த போது பார்த்தசாரதி அரியலூர் மாவட்டசெயலாளர் ராமஜெயவேலிடம் விஜயகாந்த் போனில் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். அதற்கு அவர் ”அனிதாவின் உடலை எடுத்துவிட்டனர்” என்று சொல்லியிருக்கிறார். அதற்கு விஜயகாந்த் “ டாக்டர் ஆகமுடியவில்லையே என்று மனவிரக்தியில் இறந்திருக்கும் சிறுமி அனிதாவை பார்க்காமல் சென்றால் நாம் எல்லாம் என்ன தலைவன். ஆயிரகணக்கான அனிதாக்களின் மனகுமுறலை வெளிபடுத்தியிருக்கிறார் இந்த அனிதா. இறுதி ஊர்வலத்திற்கு செல்லாமல் இருந்ததால் எப்படி. அவுங்க தூக்கினா தூக்கிட்டு போகட்டும் சுடுகாட்டிலாவது அஞ்சலி செலுத்திவிட்டு போவோம்” என்று சொல்லியிருக்கிறார் விஜயகாந்த்.

பின்பு அனிதாவின் உடலை சுடுகாட்டிற்கு எடுத்துவந்து எரிப்பதற்கான வேலைகளும் தொடங்கிகொண்டிருந்த நேரத்தில் சரியாக 10.45 க்கு குழூமுர் வந்தார். அவரை பார்த்ததும் தொண்டர்கள் சத்தமிட ”டேய் சும்மா வாங்க எங்க வந்திருக்கோம்னு தெரியாதா” என்று விஜயகாந்த் சொல்ல அந்த இடமே கப்சிப் ஆனது.

பின்பு அனிதாவின் உடலுக்கு மாலை அணிவித்துவிட்டு அனிதாவின் முகத்தையே மூன்று நிமிடம் கண் அசராமல் பார்த்த போது அவரது கண்கள் கலங்கியது. பின்பு அவர் திரும்பிகொண்டு அவரது கண்ணை துடைத்துகொண்டு வெளியே வந்த போது பத்திரிக்கையாளர்கள் பேட்டி எடுக்க முயற்சி செய்தனர். அதற்கு அவர் ”நான் இந்த இடத்தில் பேசவில்லை” என்று கூறிவிட்டு காரில் ஏறி சென்றார். அங்கிருந்த மக்கள் விஜயகாந்தின் செய்கையை பார்த்து ”விஜயகாந்த் மனசு போல் எந்த தலைவர்களுக்கும் வராது” என்று நெகிழ்ந்துள்ளனர்.

பிஸியாக இருப்பவர்கள்! மகிழ்ச்சியாகவும் இருக்கிறார்கள்!
2017-08-31@ 15:25:51




நன்றி குங்குமம் டாக்டர்

‘நான் ரொம்ப பிஸி...’ என்று ‘சூரியன்’ கவுண்டமணி மாதிரி உதார் விடாமல், நிஜமாகவே பிஸியாக இருக்கிறவர்கள் மகிழ்ச்சியாகவும் இருக்கிறார்கள் என்று கண்டுபிடித்திருக்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று. பிஸியாக இருப்பதற்கும், மகிழ்ச்சியாக இருப்பதற்கும் என்ன சம்பந்தம் என்று கொஞ்சம் குழம்புகிறர்வகளுக்காக, ஆராய்ச்சியை மேற்கொண்ட சிகாகோ பல்கலைக்கழக ஆராய்ச்சிக்குழுவின் தலைமை ஆய்வாளரான கிரிஸ்டோபர்ஹிசி நான்கு காரணங்களைப் பட்டியலிட்டிருக்கிறார்.

அந்தக் காரணங்களைத் தெரிந்துகொண்டால் இனி சும்மா இருக்கவே விரும்ப மாட்டீர்கள் என்பது நிச்சயம்.மன நிறைவு அடிப்படையில் மனிதன் ஒருபோதும் தன் ஆற்றல் வீணாவதை விரும்பாதவன். அதனால், பரபரப்பாக வேலை செய்வது உளவியல் ரீதியாகவே ஒருவருக்கு தன்னிறைவைக் கொடுக்கக்கூடியதாக இருக்கிறது. நீங்கள் ஒரு வேலையைச் செய்யும்போது, அதற்கான தொடர் சிந்தனையில் இருக்கும்போது உங்கள் மூளையும் சுறுசுறுப்படைகிறது. ஒரு நோக்கம் நிறைவேறுவதற்காக நீங்கள் உழைத்துக் கொண்டிருப்பது உளவியல்ரீதியாக மகிழ்ச்சியையே தரும்.

வார இறுதிநாட்களிலும்கூட நீண்ட தூக்கம், சினிமா, பார்ட்டி என்று நேரத்தை வீணடிக்காமல் மளிகைப் பொருட்கள் / காய்கறிகள் வாங்குவது, வீட்டை சுத்தம் செய்வது, தோட்டப்பராமரிப்பு என பயனுள்ள வகையில் அந்த நாளை செலவிடும்போதும், அதன்பிறகு அதை நினைத்துப் பார்க்கும்போதும் உங்களுக்கே பெருமையாக இருக்கும். முன்னேற்றம்‘வியாபார முன்னேற்றத்துக்கான சிந்தனை, வேலை சார்ந்து புதிதாகக் கற்றுக்கொள்வது, சமூக பங்களிப்பு அல்லது உடற்பயிற்சிகள் செய்வது’ என எப்போதும் பிஸியாக இருக்கிறீர்கள் என்றால் உங்கள் இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறீர்கள் என்றே பொருள்.

இப்படி பிஸியாக இருப்பதன் மூலம் உங்களை அறியாமலேயே உங்கள் மூளையானது, இந்த வேலையை இன்னும் எவ்வளவு வேகமாகவும், சிறப்பாகவும் செய்ய முடியும் என்பதற்கான வழிகளை சிந்திக்க தொடங்கிவிடுகிறது. இதனால் உங்கள் செயல்திறன் மேலும் மெருகேறும்.
தன்னம்பிக்கை கற்றலும், முன்னேற்றமும் தன்னம்பிக்கையை வளர்க்கிறது. தொடர்ந்து ஏதாவது ஒன்றை செய்துகொண்டே இருப்பதால் கற்றல் மற்றும் செயல் வளர்ச்சி உண்மையிலேயே உயர்ந்த நம்பிக்கைக்கு வழிவகுக்கும்.

வாழ்க்கையின் பல அனுபவங்களைக் கற்றுக்கொள்ளும் நீங்கள், உங்கள் வேலைகளை மற்றவர்களின் வேலைகளோடு ஒப்பிட்டுப்பார்த்து மேலும் எப்படி திறமையாக செய்ய முடியும் என்று சிந்திக்கத் தொடங்குவீர்கள். உங்கள் தன்னம்பிக்கையும் வளரும். நேர்மறை அணுகுமுறை வேலையில்லாமல் இருக்கும்போதுதான் எதிர்மறை எண்ணங்கள் தோன்றும். சுறுசுறுப்பாக இருந்தால் மற்றவைகளைப்பற்றி சிந்திக்க நேரம் இருக்காது. நீங்கள் என்ன செய்ய நினைக்கிறீர்களோ அதை நல்லவிதமாக செய்வதையே சிந்தியுங்கள். முக்கியமான விஷயம்... எப்போதும் பிஸியாக இருக்கும்போது உங்களைச் சுற்றியிருப்பவர்கள் மத்தியிலும் ஒரு சூப்பர்மேன்/சூப்பர் உமன் இமேஜ் உருவாகும் என்பது உங்களுக்கு எக்ஸ்ட்ராகிஃப்ட்!

- உஷா நாராயணன்

NEWS TODAY 31.01.2026