Tuesday, September 5, 2017

மருத்துவ கல்லூரி பூமி பூஜை கலெக்டர் பங்கேற்காமல் தவிர்ப்பு
பதிவு செய்த நாள்05செப்
2017
01:02

கரூர்: கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி பூமி பூஜையில், கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்காமல் தவிர்த்தனர்.

நீண்ட இழுபறிக்கு பின், கரூர், சணப்பிரட்டியில் மருத்துவ கல்லுாரி அமைக்க, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, சமீபத்தில் உத்தரவிட்டது. இதையடுத்து, நேற்று சணப்பிரட்டியில், பூமி பூஜை நடந்து. இதில், கலெக்டர் கோவிந்தராஜ் உட்பட, அரசு அதிகாரிகள் பங்கேற்கவில்லை. போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நேற்று கரூரில் இருந்த போதும், அவரும் பூஜையில் பங்கேற்றவில்லை.

கரூர், எம்.பி.,யும், லோக்சபா துணை சபாநாயகருமான தம்பிதுரையிடம் கேட்டபோது, “நகரின் மையப் பகுதியாக இருக்க வேண்டும் என்பதால், சணப்பிரட்டிக்கு இடம் மாற்றப்பட்டது. இதற்கு அரசு ஆணை வெளியிட்டு, டெண்டர் விடப்பட்டுள்ளது. அவசர வேலை காரண மாக, அமைச்சர் விஜயபாஸ்கர் சென்று விட்டார். ஒப்பந்ததாரர் மற்றும் கட்சி சார்பில் நடந்த நிகழ்ச்சி என்பதால், அதிகாரிகள் பங்கேற்கவில்லை,” என்றார்.
'ப்ளூ வேல்' கேள்விகளால் அதிர்ச்சி : 104 சேவை மைய அதிகாரிகள் திணறல்
பதிவு செய்த நாள்05செப்
2017
00:50

விபரீத விளைவுகளை ஏற்படுத்தும், 'ப்ளூவேல் கேம்' குறித்த ஆலோசனை வழங்கும், 104 இலவச சேவை மையத்துக்கு, தினமும் ஏராளமான கேள்விகளுடன் போன் அழைப்புகள் வருகின்றன. 'நான் ஏன் ப்ளூவேல் விளையாடக்கூடாது' என்பது போன்ற கேள்விகள், அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைக்கிறது.

ஆலோசனை : உயிரை குடிக்கும், 'ப்ளூவேல் வீடியோ கேம்' தொடர்பாக, மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தமிழக சுகாதாரத் துறை, '104' என்ற இலவச போன் எண் மூலம் பயன்பெறும் வகையில், ஆலோசனை வழங்கும் பணியை மேற்கொண்டுள்ளது. 'ப்ளூவேல்' தொடர்பான சேவை துவங்கியதும், தினமும் ஏராளமான கேள்விகள், சேவை மையத்துக்கு வருகின்றன. குறிப்பாக, 'இந்த விளையாட்டை ஏன் விளையாடக்கூடாது; இதனால் என்ன பாதிப்பு வந்து விடப் போகிறது' என்ற ரீதியில், பலரும் கேள்விகளை துளைத்தெடுக்க, மனநல ஆலோசனை வழங்கும் அதிகாரிகள், திணறிப் போயுள்ளனர்.

ஆர்வம் மிகுதி : இது குறித்து, 104 சேவை மையத்தின் நிர்வாக மேலாளர் பிரபுதாஸ் கூறியதாவது:

எதிர்முனையில் பேசுபவரின் மனநிலையை கண்டறிய, அழைப்புகளை, மூன்று விதமாக பிரிந்து வைக்கிறோம். ஏற்கனவே, ப்ளூவேல் விளையாடி, மீண்டு, வெளியே வர நினைப்பவர்; 'ப்ளூவேல்' விளையாடுபவர், அல்லது அவரது கையில் உள்ள குறியீட்டை பார்த்து, ஆலோசனை மையத்துக்கு தகவல் தெரிவிப்பவர். இதுமட்டுமின்றி, 'நான் ஏன் ப்ளூவேல் விளையாடக்கூடாது' என,ஆர்வ மிகுதியில் கேள்வி கேட்பவர் என, வகைப்படுத்தி வைக்கிறோம்.

இதில், 70 சதவீத அழைப்புகள், 'ப்ளூவேல் விளையாடினால் என்ன தவறு' என்ற ரீதியில் கேட்கப்படுகின்றன. இவ்வாறு கேட்பவர்களிடம், 'ப்ளூவேல்' விளையாட்டால் ஏற்படும் விபரீதங்களை விளக்கி, அந்த விளையாட்டு மீதான அவர்களின் ஆர்வத்தை திசை திருப்பி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -
நாளைக்குள் முடிவு; இல்லையேல், 'ஸ்டிரைக்'

பதிவு செய்த நாள்05செப்
2017
00:03

'நாளைக்குள் அரசிடமிருந்து சாதகமான பதில் வராவிட்டால், வரும், ௭ம் தேதி முதல், காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும்' என, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ' அறிவித்துள்ளது.

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஊதிய முரண்பாடுகளைக் களைந்து, எட்டாவது ஊதிய மாற்றத்தை, உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ - ஜியோ, பல கட்ட போராட்டங்களை அறிவித்தது. ஜூலை, 18ல், மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆக., 5ல், சென்னையில், கோட்டையை நோக்கி பேரணி, 22ல், ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெற்றது. அடுத்த கட்டமாக, வரும், 7ம் தேதி முதல், காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில், ஈடுபடப் போவதாக அறிவித்தனர்.

இந்நிலையில், நேற்று பகல், 12:30 மணிக்கு, சென்னை, தலைமை செயலகத்தில், ஜாக்டோ - ஜியோ அமைப்புடன், அரசு தரப்பில், பேச்சு நடத்தப்பட்டது. இதில், அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார், உதயகுமார், நிதித்துறை செயலர் சண்முகம் பங்கேற்றனர். ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கணேசன், இளங்கோ தலைமையில், கூட்டமைப்பு நிர்வாகிகள், 35 பேர் பங்கேற்றனர். மாலை, 3:30 மணிக்கு, பேச்சு நிறைவடைந்தது. பேச்சு விபரத்தை, முதல்வரிடம் தெரிவிக்க உள்ளதாக, அமைச்சர்கள் கூறினர். ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகளோ, 'நாளைக்குள் சாதகமான முடிவு வராவிட்டால், வரும், 7ம் தேதி முதல், திட்டமிட்டபடி காலவரையற்ற வேலைநிறுத்தம் துவங்கும்' என, அறிவித்துள்ளனர்.

போராட்டத்தை கைவிட முதல்வர் வேண்டுகோள்

முதல்வர் பழனிசாமி, நேற்று விடுத்த அறிக்கை: ஜாக்டோ - ஜியோ பிரதிநிதிகளோடு, அமைச்சர்கள் குழு பேச்சு நடத்தியது. பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவது குறித்து அறிக்கை அளிக்க, ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஸ்ரீதர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவின் அறிக்கை, நவம்பர், இறுதிக்குள் கிடைக்கும். அதன்படி, அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். ஊதிய விகிதத்தை திருத்தி அமைத்தல், இடைக்கால நிவாரணம் வழங்குதல், முறையான காலமுறை ஊதியம் வழங்குதல் போன்ற கோரிக்கைகளை, இதற்கென அமைக்கப்பட்ட, ஊதியக்குழு பரிசீலித்து வருகிறது. அந்தக் குழு, இம்மாத இறுதிக்குள் அறிக்கையை சமர்பிக்கும். அதன் மீது, அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். அவசியம் ஏற்பட்டால், இடைக்கால நிவாரணம் குறித்த அறிவிப்பு, உரிய நேரத்தில் வெளியிடப்படும். பொதுமக்கள் நலன் கருதி, ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு, காலவரையற்ற போராட்டத்தை கைவிட்டு, தொடர்ந்து மக்கள் பணியாற்ற வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
பெற்றோருக்கு புளூவேல் விழிப்புணர்வு: போலீசார் முடிவு

பதிவு செய்த நாள்05செப்
2017
01:26

திண்டுக்கல்: மதுரை, திருப்பரங்குன்றத்தை சேர்ந்த இளைஞர் 'புளூவேல்' இணைய விளையாட்டில் ஈடுபட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். பள்ளிகளில் உள்ள பெற்றோர்-, ஆசிரியர் கழகம் மூலம் பெற்றோரை போலீசார் வரவழைப்பர். பின்னர் குழந்தைகளை கணினி, அலைபேசி விளையாட்டுகளில் ஈடுபட அனுமதிக்க கூடாது. அவர்களை தனிமையில் அமர வைக்காமல், முடிந்தவரை நண்பர்களுடன் தெருக்களில் விளையாட அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட ஆலோசனைகளை பெற்றோருக்கு போலீசார் வழங்குவர். திண்டுக்கல் எஸ்.பி., சக்திவேல் கூறியதாவது: 'புளூவேல்' விளையாட்டின் விபரீதம் குறித்து மாணவர்களை விட, அவர்களின் பெற்றோரிடம் கூறினால்தான் தீர்வு காண முடியும். போலீசாரின் தற்போதைய நடவடிக்கையால், புரோசிங் மையங்களில் இருந்து இந்த விளையாட்டை டவுன்லோடு செய்ய முடியாது என்றார்.
மருத்துவ பல்கலையில் நாளை பட்டமளிப்பு விழா
பதிவு செய்த நாள்04செப்
2017
23:52

சென்னை: தமிழ்நாடு, எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையின், 29வது பட்டமளிப்பு விழா, சென்னை பல்கலை நுாற்றாண்டு விழா அரங்கில், நாளை நடைபெற உள்ளது. காலை, 11:00 மணிக்கு நடைபெறும் விழாவிற்கு, கவர்னர் வித்யாசாகர் ராவ் தலைமை தாங்குகிறார். தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக தலைமை இயக்குனர், சவுமியா சாமிநாதன் உட்பட, பலர் பங்கேற்கின்றனர். விழாவில், 2,925 மாணவ மாணவியருக்கு, நேரடியாக பட்டம் வழங்கப்பட உள்ளது. மீதமுள்ள, 16 ஆயிரத்து, 270 மாணவ மாணவியருக்கு, கல்லுாரிகள் வாயிலாக பட்டம் தரப்படும். அதிக மதிப்பெண்கள் பெற்ற, 139 மாணவ மாணவியருக்கு, 166 தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை, கவர்னர் வழங்கி சிறப்பிக்க உள்ளார். துணைவேந்தர் கீதாலட்சுமி மற்றும் பல்கலை நிர்வாகிகள், விழாவிற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.



எம்.பி.பி.எஸ்., முதலாமாண்டு வகுப்புகள் துவங்கின : புதிய மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு
பதிவு செய்த நாள்04செப்
2017
23:46




தமிழகம் முழுவதும், அரசு மருத்துவ கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, நேற்று வகுப்புகள் துவங்கின. 'நீட்' தேர்வு அடிப்படையில், இடம் பெற்ற மாணவர்கள், உற்சாகத்துடன் வகுப்புகளுக்கு சென்றனர். 'நீட்' தேர்வில் இருந்து, தமிழகத்திற்கு விலக்கு பெறும், மாநில அரசின் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. இதனால், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, 'நீட்' தேர்வு மதிப்பெண் அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடந்தது. கவுன்சிலிங் முடிந்த நிலையில், அரசு மருத்துவ கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., முதலாம் ஆண்டு வகுப்புகள் நேற்று துவங்கின. சென்னையில், ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. பூங்கொத்து கொடுத்து, முதலாம் ஆண்டு மாணவர்களை, சீனியர் மாணவர்கள் வரவேற்றனர். பல இடங்களில், மரக்கன்றுகள் நட்டும், வரவேற்பு அளித்தனர். 'ராகிங் செய்ய மாட்டோம்' என, சீனியர் மாணவர்கள் வாக்குறுதி அளித்தனர்.

சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சியில், டீன் வசந்தா மணி பேசியதாவது: சேவை சார்ந்த துறை மருத்துவம். உங்கள் உணர்வுகளை தியாகம் செய்ய வேண்டி இருக்கும்.குறிக்கோளுடன் பயில வேண்டும்; நல்லொழுக்கத்துடன், மற்ற துறையினருக்கு, முன்மாதிரியாக திகழ வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

அரசு ஸ்டான்லி மருத்துவ கல்லுாரியில், டீன் பொன்னம்பல நமச்சிவாயம் பேசுகையில், ''இந்த பருவத்தில், மாணவர்களுக்கு கவன சிதறல் ஏற்படும். அதில், சிக்கி விடாமல், கவனத்துடன் படிக்க வேண்டும். அவ்வப்போது, பிள்ளைகளை பெற்றோர் சந்தித்து அவர்களிடம் ஏற்படும் மாற்றத்தை கண்காணிக்க வேண்டும்,'' என்றார்.

தமிழகம் முழுவதும் உள்ள, பெரும்பாலான அரசு மருத்துவ கல்லுாரிகளில், நேற்று வகுப்புகள் துவங்கின. அரசு ஓமந்துாரார் மருத்துவ கல்லுாரியில் இன்றும், சென்னை மருத்துவ கல்லுாரியில், 7ம் தேதியும், வரவேற்பு நிகழ்ச்சி நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

உடை கட்டுப்பாடு : மாணவர்கள், ஜீன்ஸ், டி - சர்ட் அணியக்கூடாது; பேன்ட், முழுக்கை சட்டை, ஷூ அணிய வேண்டும்

மாணவியர் சேலை, சுரிதார் என, இரண்டு விதமான உடைகள் அணியலாம்; மேற்கத்திய உடைகளுக்கு அனுமதி இல்லை. தலை முடியை விரித்து போடக்கூடாது இதை, பின்பற்றாத மாணவர்கள், வகுப்பறைக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பது உட்பட, பல கட்டுப்பாடுகளை, மருத்துவ கல்வி இயக்ககம் விதித்துள்ளது.
இதே நாளில் அன்று

பதிவு செய்த நாள்04செப்
2017
18:53




1888 செப்டம்பர் 5

சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், திருத்தணியில், சர்வபள்ளி வீராசாமி - சீதம்மா தம்பதிக்கு மகனாக, 1888 செப்., 5ல் பிறந்தார். சென்னை பல்கலையில், முதுகலை பட்டம் பெற்றார். சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சி கல்லுாரியில், பயிற்சி பெற்றார்.சென்னை மாநில கல்லுாரியில் துவங்கி, மைசூரு, கோல்கட்டா, வாரணாசி மற்றும் ஆக்ஸ்போர்டில், தத்துவ பேராசிரியராக பணியாற்றினார். முழுமையாக சுதந்திர போராட்டத்தில் ஈடுபடாவிட்டாலும், மனமார ஆதரித்தவர்களுள் ஒருவராக விளங்கினார்.கடந்த, 1938ல், அவருக்கு, 'சர்' பட்டம் கொடுத்து, பிரிட்டிஷ் அரசு கவுரவித்தது. சென்னை மாகாண முதல்வராக இருந்த ராஜாஜி, உயர்நிலைப் பள்ளிகளில், ஹிந்தி மொழிப்பாடம் கட்டாயம் என, அறிவித்தார். அந்த அறிவிப்பை வலுவாக எதிர்த்த, சென்னை மாகாண காங்., தலைவர்களில் ஒருவராக, ராதாகிருஷ்ணன் திகழ்ந்தார். நாட்டின் துணை ஜனாதிபதியாகவும், ஜனாதிபதியாகவும் பணியாற்றினார். நாட்டின் உயரிய, 'பாரத ரத்னா' விருது பெற்றவர்.இவர் பிறந்த தினமான, செப்., 5, ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. அவர், பிறந்த தினம் இன்று.

NEWS TODAY 31.01.2026