Saturday, September 9, 2017

தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு கனமழை
பதிவு செய்த நாள்08செப்
2017
20:33

தமிழகம், புதுச்சேரியில், இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தென்மேற்கு பருவமழை, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில், தீவிரமாக பெய்து வருகிறது. மஹாராஷ்டிரா, குஜராத், ஆந்திரா, கர்நாடகா, மத்திய பிரதேசம், அசாம், மேகாலயா, தெலுங்கானா, கேரளா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், மழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால், தமிழக அணைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
இந்நிலையில், 'மஹாராஷ்டிரா முதல், தமிழகத்தின் வட மாவட்டங்கள் வரை, நில பகுதியில் மேல் அடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. மேலும், வங்கக் கடலில் தென்கிழக்கு பகுதியில், புதிய மேல் அடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. 'அதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்றும், நாளையும் பரவலாக கனமழை பெய்யும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கர்நாடகாவில் வடக்கு, தெற்கு மாவட்டங்கள், கடலோர பகுதி, கேரளா, ஆந்திரா, அசாம், மேகாலயா, மணிப்பூர், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களுக்கும், இரண்டு நாட்கள் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தமிழகத்தில், நேற்று காலை, 8.30மணி நிலவரப்படி, 24 மணி நேரத்தில், கொள்ளிடத்தில், ௯ செ.மீ., மழை பதிவாகி உள்ளது.

- நமது நிருபர் -
ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று நள்ளிரவு முதல்2 மாதங்களுக்கு 144தடை உத்தரவு

பதிவு செய்த நாள்08செப்
2017
20:26




ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று நள்ளிரவு முதல் 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து மாவட்ட கலெக்டர் நடராஜ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: மாவட்டத்தில் இமானுவேல்பூஜை,தேவர் ஜெயந்திவருவதையொட்டி இன்று நள்ளிரவு முதல் 2 மாத காலத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று நள்ளிரவு முதல் வரும் 15-ம் தேதி வரையிலும், அக்டோபர் 25ம் தேதி முதல் 31-ம் தேதி வரையில் மாவட்டத்திற்குள் வாடகை வாகனங்களில் வர தடை விதிக்கப்பட்டுள்ளது . இவ்வாறு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வங்கிகளுக்கு எதிராக பிச்சைக்காரர் வழக்கு



கொல்கத்தா ஐகோர்ட்டில் ஒரு பிச்சைக்காரர் வங்கிகளை குற்றம் சாட்டி வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் பெயர் காஞ்சன் ருய்.

செப்டம்பர் 09, 2017, 03:45 AM

கொல்கத்தா,

கொல்கத்தா ஐகோர்ட்டில் ஒரு பிச்சைக்காரர் வங்கிகளை குற்றம் சாட்டி வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் பெயர் காஞ்சன் ருய்.

அவர் தனது மனுவில், ‘‘ஒரு ரூபாய், 2 ரூபாய் நாணயங்களால் பெரிய பிரச்சினை ஆகிவிட்டது. வங்கிகளில் அந்த நாணயங்களுக்கு பதிலாக ரூபாய் நோட்டுகளை தர மறுக்கிறார்கள். இதனால், என்னிடம் ஏராளமான நாணயங்கள் குவிந்து விட்டன. எனது பிச்சைக்கார தொழிலும் பாதிப்படைந்துள்ளது’’ என்று அவர் கூறியுள்ளார்.

இந்த மனு, தலைமை நீதிபதி (பொறுப்பு) நிஷிதா மாத்ரே தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ரிசர்வ் வங்கி சார்பில் ஆஜரான வக்கீல் சுசிஸ்மிதா சட்டர்ஜி, ‘ஒரு ரூபாயில் இருந்து அனைத்து நாணயங்களும் செல்லும். மனுதாரர், எந்த வங்கியையோ, கிளையையோ குறிப்பிட்டு கூறவில்லை’ என்று கூறினார்.

அதையடுத்து நீதிபதிகள், மனுதாரர் எந்த குறிப்பிட்ட வங்கியையும் பிரதிவாதியாக சேர்க்காததால், இந்த மனுவை திரும்பப்பெற்று, கூடுதல் விவரங்களுடன் புதிய மனு தாக்கல் செய்யுமாறு காஞ்சன் ருய்யுக்கு உத்தரவிட்டனர்.
மாநில செய்திகள்

‘நீட்’ தேர்வுக்கு விலக்கு கோரி போராட்டம்: சென்னையில், கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை



மாணவர்களின் போராட்டத்தை கட்டுப்படுத்த சென்னையில் உள்ள கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 09, 2017, 03:30 AM

சென்னை,

‘நீட்’ தேர்வில் இருந்து நிரந்த விலக்கு அளிக்க கோரி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், மாணவர்களின் போராட்டத்தை கட்டுப்படுத்த சென்னையில் உள்ள கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரியும், அரியலூர் மாணவி அனிதா மரணத்திற்கு நீதி கேட்டும் தமிழகம் முழுவதும் மாணவர்கள் மற்றும் மாணவர்கள் அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 8-வது நாளாக மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.

சென்னையில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் நேற்று காலையில் கல்லூரிக்கு வந்தனர். ஆனால் வகுப்பிற்கு செல்லாமல் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்திலே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவர்களின் போராட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் சென்னையில் உள்ள சில கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது.

அதன்படி புதுக்கல்லூரி, மாநிலக் கல்லூரி, விவேகானந்தர் கல்லூரி, அம்பேத்கர் சட்ட கல்லூரி உள்ளிட்ட சில கல்லூரிகளுக்கு நேற்று ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டது.

ஆனால் இன்று(சனிக்கிழமை), நாளை(ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 தினங்களும் வழக்கமான விடுமுறை தினம் என்பதால் திங்கட்கிழமை முதல் கல்லூரி வழக்கம் போல் செயல்படும் என்று கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஆனால் மாணவர்கள் தரப்பில் சிலர் கூறும் போது, எங்களது கல்லூரிக்கு விடுமுறை அளித்தாலும், எங்களது போராட்டத்திற்கு விடுமுறை அளிக்க முடியாது. ‘நீட்’ தேர்வில் இருந்து நிரந்த விலக்கு கிடைக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும் என்று கூறினர்.
மாநில செய்திகள்

75 ஆயிரம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைக்கு வரவில்லை கோர்ட்டு அவமதிப்பு வழக்கு பாயுமா?


தமிழகம் முழுவதும் 75 ஆயிரம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

செப்டம்பர் 09, 2017, 03:30 AM

சென்னை,

ஐகோர்ட்டு உத்தரவையும் மீறி தமிழகம் முழுவதும் 75 ஆயிரம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பழைய ஓய்வூதிய திட்டத்தையே தொடர வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ என்ற அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் ஒரு பிரிவு 7-ந் தேதியில் இருந்து தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறது. 20 சதவீத அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் வேலைக்கு வரவில்லை.

இந்த போராட்டத்தில் பங்கேற்கும் அரசு ஊழியர்கள் யார்-யார்? என்பது பற்றி துறைத் தலைவர்களிடம் அறிக்கை அளிக்க வேண்டும் என்று பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை செயலாளர் எஸ்.ஸ்வர்னா உத்தரவிட்டார்.

அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தங்களின் குறைகளை சுட்டிக்காட்டுவதற்காக வேலைநிறுத்தத்தில் ஈடுபடக்கூடாது என்றும், வேறு வழியை தேர்வு செய்யவேண்டும் என்றும் ஐகோர்ட்டு மதுரை கிளை 7-ந் தேதி உத்தரவிட்டது. அதேபோல வேலைநிறுத்தத்தை கைவிட வேண்டும் என்று தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனும் அறிவிப்பு வெளியிட்டார்.

ஆனாலும் வேலைநிறுத்த போராட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது. அதேசமயம் 7-ந் தேதி வேலைநிறுத்தம் செய்த 20 சதவீதம் பேர், நேற்று 11 சதவீதம் பேராக குறைந்தது. இதுபற்றி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் ஆசிரியர்கள் சுமார் 36 ஆயிரம் பேரும், அரசு ஊழியர்கள் சுமார் 39 ஆயிரம் பேருமாக மொத்தம் 75 ஆயிரம் பேர் 8-ந் தேதி வேலைக்கு வரவில்லை. இவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கு ஏற்கனவே அரசு விதிகள் உள்ளன.

ஐகோர்ட்டும் இந்த விஷயத்தில் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதை எதிர்த்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவதால் அவர்கள் மீது கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை பாயுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மாவட்ட செய்திகள்

குரோம்பேட்டையில் 8 மாடி கட்டிடத்துக்கு ‘சீல்’ சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் நடவடிக்கை



குரோம்பேட்டையில் முறையான அனுமதி இன்றி கட்டப்பட்ட 8 மாடி வணிக கட்டிடத்துக்கு சென்னை பெருநகர வளாச்சி குழும அமலாக்க பிரிவு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

செப்டம்பர் 09, 2017, 04:45 AM

தாம்பரம்,

சென்னையை அடுத்த குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள தனியார் இடத்தில் கடந்த சில மாதங்களாக பிரமாண்டமாக அடித்தளத்துடன, தரைதளம் மற்றும் 8 மாடிகள் கொண்ட கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வந்தது. பிரபல துணிக்கடை இந்த வணிக கட்டிடத்தில் வர உள்ளதாக கூறப்பட்டு வந்தது.

கடந்த மாதம் 3–ந் தேதி சென்னை பெருநகர வளர்ச்சி குழும அதிகாரிகள், அந்த கட்டிடம் கட்டும் இடத்தில் சோதனை செய்தனர். அப்போது அனுமதி பெறாமல் அந்த கட்டிடம் கட்டுவது தெரிந்தது.

இதையடுத்து கட்டிடம் கட்டும் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என கட்டிட உரிமையாளருக்கு சென்னை பெருநகர வளர்ச்சி குழும அமலாக்க பிரிவு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினர்.

அதற்கு கட்டிட உரிமையாளர் பதில் அனுப்பியதில், அனுமதி பெற்ற பிறகே கட்டிடம் கட்டும் பணிகளை செய்வதாக தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் மீண்டும் கடந்த மாதம் 21–ந் தேதி அதிகாரிகள் அங்கு சோதனை செய்தனர். அப்போது 4 மாடிகள் கட்டப்பட்டு 5–வது மாடி கட்டும் பணி நடைபெற்று வந்தது தெரிந்தது. முறையான அனுமதி பெற்ற பிறகு கட்டிடம் கட்டும் பணியை மேற்கொள்வதாக கூறி விட்டு கட்டுமான பணியை நிறுத்தாமல் தொடர்ந்து செய்து வந்தது தெரிந்தது.

கடந்த 6 மற்றும் 7–ந் தேதிகளில் அதிகாரிகள் மீண்டும் சோதனை செய்த போது 8 மாடிகள் கட்டப்பட்டது தெரிய வந்தது.

இதையடுத்து சென்னை பெருநகர வளர்ச்சி குழும அமலாக்க பிரிவு அதிகாரிகள் நேற்று காலை 20–க்கும் மேற்பட்ட ஊழியர்களுடன் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை நடத்தினர்.

அனுமதி இல்லாமல் கட்டிட பணிகள் செய்யக்கூடாது என முறையாக நோட்டீஸ் வழங்கிய பிறகும் அதை செயல்படுத்தாமல் தொடர்ந்து கட்டிட பணிகள் செய்து 8 மாடிகள் கட்டியது தெரிய வந்ததால் அந்த கட்டிடத்துக்கு ‘சீல்’ வைத்தனர். அங்கு எந்த பணிகளும் நடைபெறக்கூடாது என அறிவிப்பு செய்து நோட்டீசும் ஒட்டினர்.
தலையங்கம்

வேலைநிறுத்தம் வேண்டாமே!

செப்டம்பர் 09 2017, 03:00 AM




பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தவேண்டும், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்யவேண்டும், 7–வது ஊதியக்குழுவின் அடிப்படையில்  பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தவேண்டும், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்யவேண்டும், 7–வது ஊதியக்குழுவின் அடிப்படையில் புதிய ஊதியம் நிர்ணயிக்கவேண்டும், அவ்வாறு புதிய ஊதியம் நிர்ணயிக்க காலதாமதம் ஏற்படும் நிலையில், இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்பதுபோன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கங்களில் 79 சங்கங்களைக்கொண்ட ஒரு பிரிவான ஜாக்டோ–ஜியோ என்று கூறப்படும் தமிழக அரசு ஊழியர்கள்–ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு கடந்த சில தினங்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தியது. அதிகாரிகள் தரப்பில் பேச்சுவார்த்தை நடந்தது. மேலும், முதல்–அமைச்சரே ஈரோட்டில் இந்த சங்கங்களை அழைத்து பேசினார். இதில் ஒருபிரிவினர் முதல்–அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த் தையை ஏற்று வேலைநிறுத்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கலாம் என்றனர். ஆனால், மற்றொரு பிரிவினர் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கினார்கள். 

அரசு நிர்வாகத்தில் பெரியளவில் பாதிப்பு இல்லா விட்டாலும், பல அலுவலகங்களில் பொதுமக்களுக்கு இன்றியமையாத பணிகளில் தொய்வு ஏற்பட்டது. ஆசிரியர்களும் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால், பல பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்கள் வரவில்லை. சேலம் மாவட்டம், கருத்தராஜாபாளையம் என்ற ஊருக்கு வேறொரு பணியாக சென்ற மாவட்ட கலெக்டர் ரோகிணி, அங்குள்ள ஊராட்சி தொடக்கப்பள்ளியில் ஆசிரியர்கள் பணிக்கு வராததால், பள்ளி வளாகத்தில் மாணவர்கள் வெளியே நின்றுகொண்டிருந்ததை பார்த்து, உடனடியாக அவர்களை பள்ளிக்கூடத்திற்குள் அழைத்துச்சென்று, தானே ஆங்கில பாடம் நடத்தினார், போர்டில் ஒரு திறமைமிக்க ஆசிரியரைப்போல் பாடங்களை எழுதிக்காட்டி விளக்கம் அளித்தார். மாணவர்கள் மகிழும் வண்ணம் ஆசிரியரான கலெக்டர் ரோகிணியை தமிழ்நாடே பாராட்டு கிறது. இந்தநிலையில், மதுரை ஐகோர்ட்டு கிளையில் இதுதொடர்பாக வழக்கு தொடரப்பட்டதில் நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர், ஜாக்டோ–ஜியோ நடத்தும் இந்த வேலைநிறுத்தப் போராட்டம் பணி விதிமுறைகளை மீறியதாகும். இது போன்ற வேலைநிறுத்தத்தால் பொதுமக்கள் எந்தவித இன்னலையும் அனுபவிக்கக்கூடாது. அரசு ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேலைநிறுத்தத்தை ஒரு ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது. ஆசிரியர்கள் போராட்டம், மாணவர்களின் கல்வியை பாதிக்கக்கூடாது. ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் டி.கே.ரங்கராஜனுக்கும், தமிழக அரசுக்கும் இடையே நடந்த ஒரு வழக்கில் அளிக்கப்பட்ட ஒரு தீர்ப்பில், ‘அரசு ஊழியர்களுக்கு வேலைநிறுத்தம் செய்வது என்பது அடிப்படை உரிமையோ, சட்டபூர்வ உரிமையோ, தார்மீக உரிமையோ இல்லை. தங்கள் கோரிக்கைகளுக்காக வேறுவழிகளை பின்பற்ற லாம்’ என்று வழங்கப்பட்ட தீர்ப்பை நீதிபதிகள் சுட்டிக் காட்டினர். இப்போது ஜாக்டோ–ஜியோவை சேர்ந்தவர்கள் இது காலவரையற்ற போராட்டம் இல்லை என்றுகூறி, நேற்றும் பணிக்குச் செல்லாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் தங்கள் கோரிக்கைகளை அரசுக்கு தெரிவிப்பது தவறு இல்லை. ஆனால், அவர்களுடைய கோரிக்கைகளுக்காக வேலை நிறுத்தம் செய்து பொதுமக்களின் அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டால், மாணவர்கள் பள்ளிக்கூடங்களில் கல்வி கற்பதில் பாதிப்பு ஏற்பட்டால் நிச்சயமாக பொதுமக்களும், மாணவர்களும் அதை வரவேற்கமாட்டார்கள். அவர்களின் அதிருப்தியைத்தான் சம்பாதிக்கவேண்டும். ஜப்பான் நாட்டில் தங்கள் கோரிக்கைக்காக போராட்டம் செய்பவர்கள் வழக்கமான பணிகளைவிட, கூடுதலாக தங்களை வருத்திக் கொண்டு வேலைசெய்து, உற்பத்தியை பெருக்கிக்காட்டி, அதன்மூலம் அனுதாபத்தை சம்பாதித்துக்கொள்வார்கள். அதுபோல, பொதுமக்களின் ஆதரவு இருந்தால்தான் எந்த போராட்டமும் வெற்றிபெறும் என்றவகையில், அரசு பணி களிலோ, பொதுமக்களுக்கான பணிகளிலோ, மாணவர் களின் கல்வி பணிகளிலோ பாதிப்பு ஏற்படாமல் வேறு பலவழிகளில் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்துவதுதான் சாலச்சிறந்ததாகும். அரசும் இதுபோல அரசு ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தும்போது, வேலை நிறுத்தம் வரை செல்லவிடாமல் சுமுகமான முடிவுகளை பேச்சுவார்த்தை மூலம் எடுக்க வகை செய்யவேண்டும். மொத்தத்தில், அரசும், அரசு ஊழியர்களும் வேலை நிறுத்தத்துக்கு இடம் கொடுக்கக்கூடாது.

NEWS TODAY 15.07.2026