Sunday, September 10, 2017

மருத்துவ நுழைவு தேர்வுக்கு பயிற்சி அலகாபாத் டாக்டர்கள் அசத்தல்

பதிவு செய்த நாள்09செப்
2017
20:46

அலகாபாத்,: உ.பி., மாநிலம், அலகா பாத்தைச் சேர்ந்த, பிரபல டாக்டர்கள் ஒன்றிணைந்து, '21 டாக்டர்கள்' என்ற திட்டத்தின் கீழ், அரசு பள்ளிகளில் படிக்கும், பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய, ஏழை மாணவர்களை தேர்ந்தெடுத்து, மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர்

.21 மாணவர்கள்உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, அலகாபாத்தைச் சேர்ந்த, நரம்பியல் நிபுணர், டாக்டர் பிரகாஷ் கேதான் என்பவர், இரு ஆண்டுகளுக்கு முன், '21 டாக்டர்கள்' என்ற திட்டத்தை துவக்கினார்.அருகில் உள்ள, அரசு பள்ளிகள் மற்றும் குடிசை வாழ் மாணவர்களில், படிப்பில் சிறந்த, 9 - 12ம் வகுப்பு வரை படிக்கும், 21 மாணவர்களை தேர்ந்தெடுத்தார்.

 அவர்களுக்காக, தன் வீட்டில், ஓர் அறையை வகுப்பறையாக மாற்றினார். ஒன்பது மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, அவர்களுடைய பள்ளி பாடங்களுடன், மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. மற்றொரு பிரிவில், 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.தற்போது, டாக்டர் பிரகாஷுடன், அலகாபாத் நகரில், பிரபலமான டாக்டர்கள் இணைந்து, இந்த மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருகின்றனர்.

டாக்டர் பிரகாஷ் கேதான் கூறியதாவது:வறுமையால், தங்கள் கனவுகளை எட்ட முடியாத, நன்றாக படிக்கும், 21 மாணவர்களை தேர்ந்தெடுத்து, அவர்களின் கல்வி உள்ளிட்ட அனைத்து செலவுகளையும், நாங்கள் ஏற்றுஉள்ளோம். அவர்களுக்கு, பள்ளி பாடங்களுடன், மருத்துவ நுழைவுத் தேர்வுக்கும் பயிற்சி அளிக்கிறோம். 4 மணி நேர பயிற்சிஇந்த வகுப்பில், கூலித்தொழிலாளிகள் மட்டுமல்லாமல், கூடை பின்னுபவர்களின் குழந்தைகளும் பயிற்சி பெறுகின்றனர். தினமும், நான்கு மணி நேரம் பயிற்சி அளிக்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.படிப்பதற்கு எந்த உதவியும் கிடைக்காத நிலையில், டாக்டர்களின் உதவியால், தங்களுடைய கல்வித் தரம் உயர்ந்து உள்ளதாகவும், எதிர்காலத்தில், சிறந்த டாக்டர்களாக உருவாக வாய்ப்பு கிடைத்து உள்ளதாகவும், பயிற்சி பெறும் மாணவர்கள் கூறினர்.
புளோரிடாவில், 'இர்மா' பீதி: 50 லட்சம் பேர் வெளியேற்றம்
DINAMALAR

பதிவு செய்த நாள்09செப்
2017
19:51




வாஷிங்டன், : கரீபியன் தீவுகளைப் புரட்டிப் போட்ட அதிவேக, 'இர்மா' சூறாவளி, கியூபாவை கடந்து, அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை நெருங்கியது. இதையடுத்து, புளோரி டாவில் வசிக்கும், ஆயிரக்கணக்கான இந்தியர்கள் உட்பட, ௫௦ லட்சம் பேர், பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை, கடந்த மாத இறுதியில், 'ஹார்வே' புயல் தாக்கியது. இதில், அந்த நாட்டின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான ஹூஸ்டன், சின்னாபின்னமானது.இந்நிலையில், அட்லாண்டிக் பெருங்கடலில், கடந்த, 10 ஆண்டுகளில் இல்லாத வகையில், மிக சக்தி வாய்ந்த சூறாவளி உருவானது. இதற்கு, 'இர்மா' என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

'இர்மா' சூறாவளி, அட்லாண்டிக் கடலில் அமைந்துள்ள, வட கிழக்கு கரீபியன் தீவுகளில், இரு நாட்களுக்கு முன் கரை கடந்தது. இதனால், கரீபியன் தீவு பெரும் நாசமடைந்துள்ளது.கரீபியன் தீவுகளை புரட்டிப் போட்ட இர்மா புயல், மேலும், வலிமை அதிகரித்து, கியூபாவின் வட கிழக்கு கரையை ஒட்டியுள்ள, கேமாகுவே தீவுக்கூட்டத்தில், கரையை கடந்துள்ளது. அமெரிக்காவை நெருங்கி வரும் இர்மா, புளோரிடா மாகாணத்தை, இன்று தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.அந்த மாகாணத்தில் வசிக்கும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் உட்பட, ௫௦ லட்சம் பேர், பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி, கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர்.''புளோரிடாவில் உள்ள அனைவருமே வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்; அதற்குத் தயாராக இருக்க வேண்டும்,'' என, புளோரிடா மாகாண கவர்னர், ரிக் ஸ்காட் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அவசரகால முகமையின் தலைவர், பிராக் லாங் கூறுகையில், ''புளோரிடாவிலும், அருகில் உள்ள பகுதிகளிலும் சில நாட்களுக்கு, முழுமையாக மின் தடை ஏற்பட வாய்ப்பு உள்ளது. ''நேரம் குறைந்துகொண்டே வருகிறது. வெளியேற வேண்டிய பகுதிகளில் வசிக்கும் மக்கள், தாமதம் செய்யக்கூடாது. ''இர்மாவால் பாதிக்கப்பட்ட வீடுகளைத் திரும்பக் கட்டித் தர முடியும். ஆனால், வாழ்க்கையை திருப்பித் தர முடியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்,'' என்றார்.

ஐந்தாம் எண் சூறாவளி!

புவியின் மேற்குப் பகுதியில் வீசும் வெப்ப மண்டல புயல்கள், சூறாவளி என அழைக்கப்படுகின்றன. இத்தகைய சூறாவளிகள், அவற்றின் வேகத்தை வைத்து, ஒன்று முதல் ஐந்து வரையிலான எண்களால் குறிக்கப்படுகின்றன. அதிவேகம் உடைய சூறாவளிக்கு, ஐந்தாம் எண் வழங்கப்படுகிறது.ஐந்தாம் எண் வழங்கப்பட்டுள்ள, இர்மா தாக்கியதில், கரீபியன் தீவுகளில், ௨௦ பேர் உயிரிழந்தனர். பல ஆண்டுகளுக்கு பின், கியூபாவை, ஐந்தாம் எண் சூறாவளி தாக்கியுள்ளது.
வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்... இன்று தற்கொலை தடுப்பு தினம்

DINAMALAR
பதிவு செய்த நாள்  09செப்
2017
22:33




வாழ்க்கையில் துன்பங்களை கண்டு துவண்டு விடாமல், எதிர்த்து நின்று போராட வேண்டும். அதற்குப் பதிலாக தற்கொலை என்ற பெயரில் உயிரை மாய்த்துக் கொள்வது கோழைத்தனமான செயல். பிரச்னைகள் இல்லாதவர்களே உலகில் இல்லை. ஒவ்வொரு பிரச்னைக்கும் அதற்கான தீர்வுகளும் இருக்கிறது என்பதை மறக்க வேண்டாம். பிரச்னைக்கு தீர்வு தற்கொலை தான் என எண்ணினால், உலகில் யாரும் இருக்க மாட்டார்கள்.
பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு தற்கொலை என தவறாக சிந்திக்கின்றனர். இதனால் அவரை சார்ந்திருப்பவர்கள் எவ்வளவு கஷ்டப்படுவார்கள் என அறிவதில்லை. தற்கொலை அறவே கூடாது என்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, செப்., 10ம் தேதி உலக தற்கொலை தடுப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. 'சில நிமிடம் சிந்தியுங்கள், வாழ்க்கையை மாற்றுங்கள்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.

சமீபத்தில் தனது எம்.பி.பி.எஸ்., கனவு நனவாகாத விரக்தியில் மாணவி அனிதா தற்கொலை செய்தார். இதற்கு பதிலாக அவர் போராடி சாதித்திருக்கலாம். தற்கொலை முடிவை கைவிட்டவர்கள், சாதனையாளர்களாக உருவெடுத்துள்ளனர்.

8 லட்சம்

உலகளவில் 2015 கணக்கின் படி, ஆண்டுதோறும் 8 லட்சம் பேர் தற்கொலை செய்கின்றனர். 40 நிமிடத்துக்கு ஒருவர் தற்கொலை செய்கிறார் என உலக சுகாதார நிறுவன ஆய்வு தெரிவிக்கிறது. இந்தியாவில் 2015 கணக்கின் படி, ஆண்டுக்கு 1,33,623 பேர் தற்கொலை செய்கின்றனர். இதில் முதலிடத்தில் மகாராஷ்டிரா (12.7%), 2வது இடத்தில் தமிழகம் (11.8%) 3வது இடத்தில் மேற்கு வங்கம் (10.9%) உள்ளது.

என்ன காரணம்

கல்வியில் சாதிக்க முடியாத விரக்தியில் மாணவர்கள், வரதட்சனை, பாலியல் உள்ளிட்ட கொடுமைகளால் பெண்களும், வறுமை, கடன் உள்ளிட்ட பிரச்னைகளால் ஆண்களும்; வேலையில் தொந்தரவு, காதல் தோல்வி போன்ற காரணங்களுக்காக இளைஞர்களும் தற்கொலைக்கு முயல்கின்றனர். பிரச்னைகளை சந்திக்கும் பக்குவத்தை பெற்று விட்டால், தற்கொலை எண்ணம் தலை துாக்காது.
ராமச்சந்திரா பல்கலையில் புதிய படிப்புகள் துவக்கம்
பதிவு செய்த நாள்10செப்
2017
00:04

சென்னை:ராமச்சந்திரா மருத்துவ பல்கலையில், நான்கு புதிய துணை மருத்துவ படிப்புகள் துவங்கப்பட்டு உள்ளன.சென்னை, போரூர் ராமச்சந்திரா மருத்துவ பல்கலையில், பி.எஸ்சி., பயோ இன்பர்மேடிக்ஸ், பி.எஸ்சி., ஹெல்த் இன்பர்மேடிக்ஸ், பி.எஸ்சி., டேடா சயின்சஸ் மற்றும், பி.எஸ்சி., என்வயர்மென்டல் ஹெல்த் சயின்ஸ் ஆகிய, நான்கு புதிய துணை மருத்துவ படிப்புகள், இந்தாண்டு முதல் துவங்கப்பட்டு உள்ளன.

இதற்கு, ஆறு மாத பயிற்சியுடன், மூன்று ஆண்டுகள் வகுப்பு நடைபெறும். மேலும், ஹானர்ஸ் படிப்புகள், ஓராண்டு பயிற்சியுடன், நான்கு ஆண்டுகள் வகுப்பு நடைபெறும்.இந்த படிப்புகளில் சேர, பிளஸ் 2வில், இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம், தாவரவியல், விலங்கியல் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்த மாணவர்கள், www.sriramachandra.edu.in என்ற இணையதளத்தில், விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, செப்., 20க்குள், ராமச்சந்திரா பல்கலைக்கு அனுப்பி வைக்க வேண்டும். செப்., 23ல் நேர்முக தேர்வு நடைபெறும்.
எம்.டி., யோகாவிண்ணப்பம் வரவேற்பு

பதிவு செய்த நாள்09செப்
2017
20:27

சென்னை, : சென்னை, அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லுாரியில், மூன்றாண்டு, எம்.டி., படிப்புக்கு, தகுதியான மாணவர்களிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.விண்ணப்பங்களை, சுகாதாரத் துறையின், www.tnhealth.org இணையதளத்தில் இருந்து, பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், செப்., 28க்குள் வந்து சேர வேண்டும். நுழைவுத் தேர்வு, அக்., 21ல் நடைபெறும். மேலும் விபரங்களை, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.





அரசு ஊழியர்கள் 74,675 பேருக்கு, 'நோட்டீஸ்'

பதிவு செய்த நாள்09செப்
2017
20:15

நீதிமன்ற உத்தரவை மீறி, நேற்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட, 35 ஆயிரத்து, 850 ஆசிரியர்கள்; 38 ஆயிரத்து, 825 அரசு ஊழியர்கள் என, மொத்தம், 74 ஆயிரத்து, 675 பேருக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.கோரிக்கைகளை வலியுறுத்தி, செப்., 7 முதல், காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக, அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோ அறிவித்தது.

 செப்., 5ல், அந்த அமைப்பினருடன், முதல்வர் பேச்சு நடத்தினார். வேலைநிறுத்தம்அவர் அளித்த உறுதியை ஏற்று, சில சங்கங்கள் போராட்டத்தை ஒத்திவைத்தன; சில சங்கங்கள், 'வேலைநிறுத்தம் நடைபெறும்' என அறிவித்தன.போராட்டத்தை கைவிடும்படி, முதல்வர் வேண்டுகோள் விடுத்தார். 'வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால், நடவடிக்கை எடுக்கப்படும்' என, தலைமைச் செயலர், கிரிஜா வைத்தியநாதன் எச்சரித்தார். அதையும் மீறி, நேற்று முன்தினம், வேலைநிறுத்தம் துவங்கியது.இந்நிலையில், உயர் நீதிமன்ற மதுரை கிளை, வேலைநிறுத்தத்திற்கு தடை விதித்து, நேற்று முன்தினம் உத்தரவிட்டது. 

அதைத் தொடர்ந்து, 'அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும், உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும்' என, அரசு தலைமைச் செயலர் கிரிஜா, அறிக்கை வெளியிட்டார்.நீதிமன்ற உத்தரவை மீறி, சில சங்கங்கள் சார்பில், நேற்றும் வேலைநிறுத்தம் தொடர்ந்தது. அதில், 35 ஆயிரத்து, 850 ஆசிரியர்கள்; 38 ஆயிரத்து, 825 அரசு ஊழியர்கள் பங்கேற்றனர். 

நடவடிக்கை    அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, அவர்களிடம் விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' அனுப்ப, அனைத்து துறை அதிகாரிகளுக்கும், தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.இது குறித்து, அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக, அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.அதை மீறி, வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு ஊழியர் நன்னடத்தை விதிகளின்படி, வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோர் மீது, நடவடிக்கை எடுக்கப்படும்.வேலைக்கு வராத நாட்களுக்கு, சம்பளம் வழங்கப்படாது. 

நீதிமன்ற உத்தரவை மீறி, போராட்டத்தில் ஈடுபட்டதால், நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, வேலைக்கு வராதவர் விபரம் சேகரிக்கப்பட்டுள்ளது. முறையாக, மருத்துவ விடுப்பு கொடுத்தவர் மீது, நடவடிக்கை எடுக்கப்படாது. மற்றவர்களிடம் விளக்கம் கேட்டு, நோட்டீஸ் அனுப்பப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.- நமது நிருபர் -
சி.பி.ஐ., பிடியில் ஜெயந்தி நடராஜன்
சென்னை வீட்டில் பல மணி நேரம், 'ரெய்டு'

தனியார் நிறுவனத்திற்கு, சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியதில் செய்த முறைகேடு தொடர்பாக, சென்னை யில் உள்ள, முன்னாள் மத்திய அமைச்சர், ஜெயந்தி நடராஜன், ௬௩, வீட்டில், சி.பி.ஐ., அதிகாரிகள், நேற்று சோதனை நடத்தினர். மேலும், டில்லி உட்பட நான்கு மாநிலங்களிலும் சோதனை நடத்தப்பட்டு உள்ளது.



ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக பதவி வகித்தவர், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெயந்தி நடராஜன். 28 மாதம் அமைச்சராக இருந்த அவர், 2013 டிசம்பரில், பதவியை ராஜினாமா செய்தார்.

வழக்குப் பதிவு

அப்போது, கட்சிப் பணிக்கு செல்வதால், ராஜினாமா செய்ததாக கூறினார்.ஆனால், அடுத்த சில மணி நேரத்தில், டில்லியில் நடந்த, தொழில் பிரதிநிதிகள் மாநாட்டில் பேசிய, காங்., துணைத் தலைவர், ராகுல், 'உங்களில் சிலர், சுற்றுச்சூழல் அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக, புகார் கூறினீர்கள்.'அத்தகைய

தாமதம் தவறு. அத்துறையில் உள்ள ஓட்டைகள், அடைக்கப்பட வேண்டியது அவசியம்' என்றார். அதன்பின், ஜெயந்தி பதவி விலகலுக்கு, இது தான் காரணம் என்பது தெரிய வந்தது.

ராகுல் மீது அதிருப்தியில் இருந்த ஜெயந்தி, கட்சியை விட்டு, 2015ல் வெளியேறினார். அப்போதே, ஜார்க்கண்ட் மாநிலத்தில், ஜிண்டால் நிறுவனத்திற்கு அளிக்கப்பட்ட, சுரங்க அனுமதி
தொடர்பாக, அவர் விசாரிக்கப்படலாம் என்ற தகவல் வெளியானது.இந்நிலையில், மூன்று ஆண்டுகள் கழித்து, அவர் மீது, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்துள்ளது.

அதைத் தொடர்ந்து, சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள ஜெயந்திவீட்டில், சி.பி.ஐ., அதிகாரிகள், நேற்று மாலை அதிரடி சோதனை நடத்தினர். அந்த சோதனை, பல மணி நேரம் நீடித்தது; சில ஆவணங்களும் சிக்கின.

5 இடங்களில் சோதனை

இது குறித்து, சென்னையில் உள்ள, சி.பி.ஐ., அதிகாரிகளை கேட்டபோது, 'டில்லியில் இருந்து வந்த அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர். எங்களுக்கு தகவல் இல்லை' என்றனர்.

டில்லி, சி.பி.ஐ., அதிகாரிகள் கூறும்போது, 'சென்னையில், ஜெயந்தி நடராஜனின் வீடு, ஒடிசா மாநிலம், சுந்தர்கரில் உள்ள, 'எலக்ட்ரோஸ்டீல் காஸ்டிங்' நிறுவனத்தின் பதிவு அலுவலகம், ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் உள்ள, அதன் பிராந்திய அலுவலகம் மற்றும் டில்லியில் உள்ள ஒரு வீடு உள்ளிட்ட ஐந்து இடங்களில் சோதனை நடந்துள்ளது' என்றனர்.தற்போது, ஜெயந்தி நடராஜன் வெளிநாட்டில் உள்ளார். சி.பி.ஐ., பதிவு
செய்து உள்ள வழக்கில், ஜெயந்தி நடராஜன், எலக்ட்ரோஸ்டீல் காஸ்டிங் நிறுவனத்தின், முன்னாள் மேலாண் இயக்குனர் உமங் கேஜ்ரிவால் மற்றும் சிலர்குற்றம் சாட்டப்பட்டு உள்ளனர். ஜெயந்தி மீது, குற்றச் சதி மற்றும் பதவியை தவறாக பயன்படுத்துவது போன்ற பிரிவுகளில், வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டு என்ன?

ஜெயந்தி நடராஜனுக்கு முன், அத்துறைக்கு பொறுப்பேற்றிருந்த ஜெய்ராம் ரமேஷ், இந்த நிறுவனத்துக்கு, சுற்றுச்சூழல் அனுமதி தர மறுத்துள்ளார். அந்த நிறுவனத்துக்கு, ஜெயந்தி நடராஜன் முறைகேடாக ஒப்புதல் அளித்து உள்ளதாக, குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு உள்ளது.ஜார்கண்ட் மாநிலம், சிங்பம் மாவட்டத்தில், 136 ஏக்கர் வனப் பகுதியைக் கொடுக்க, சட்டத்தை மீறி,அந்த நிறுவனத்திற்கு, 2012ல், ஜெயந்தி நடராஜன் ஒப்புதல் வழங்கியுள்ளார். அது தொடர்பாக, வனத்துறை டைரக்டர் ஜெனரல் கருத்தை, அவர் கேட்கவில்லை என கூறப்படுகிறது.

இந்த வழக்கு தொடர்பாக, விரைவில், ஜெயந்தி நடராஜன், விசாரணைக்கு அழைக்கப்படுவார் என, சி.பி.ஐ., வட்டாரம் தெரிவித்தது.

ராகுலிடம் விசாரணை?

அமைச்சராக இருந்த ஜெயந்தி,சில தனியார் நிறுவனங்களுக்கு, சுற்றுச்சூழல் அனுமதி அளிக்க, தாமதம் செய்ததாக, பிரதமர் அலுவலகம் மற்றும் கட்சித் தலைமைக்கு புகார்கள் வந்ததால் தான், அவர் பதவி விலக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். ஆனால் அவரோ, தாம் ராகுல் சொன்னபடி தான் செயல் பட்டதாக கூறியிருந்தார்.அதனால் ராகுலிடமும் விசாரணை நடக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

NEWS TODAY 15.07.2026