Wednesday, September 13, 2017

கடும் எதிர்ப்பு, போராட்டங்களை மீறி தமிழகத்தில் வளர்ந்து வருகிறது இந்தி

Published : 12 Sep 2017 08:12 IST


ஆர்.ஷபிமுன்னாபுதுடெல்லி




கோப்புப் படம்

தமிழகத்தில் நிலவும் கடும் எதிர்ப்பை மீறி அங்கு இந்தி மொழி வளர்ந்து வருவது தெரிய வந்துள்ளது.

கடந்த 1949 செப்டம்பர் 14-ல் இந்தியை அரசு மொழியாக மத்திய அரசு அறிவித்தது. இதற்கு மக்களிடையே எழுந்த எதிர்ப்பை திராவிட கட்சிகள் கையில் எடுத்து கடும் போராட்டத்தில் குதித்தன. மத்திய அரசும் இந்தியை திணிக்கும் முயற்சியை கைவிடவில்லை என்று புகார் நிலவுகிறது. இந்நிலையில், தொலைதூரக் கல்வியில் இந்தி பயில சேர்ந்த மாணவர் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் உயர்கல்வித் துறையின் கீழ் செயல்படும் இந்தி இயக்குநரகத்தின் கீழ் தொலைதூரக் கல்வி மையம் செயல்படுகிறது.

இந்தி மொழி கற்க 2012-ல் சான்றிதழ் பிரிவில் 1,886 பேர் சேர்ந்தனர். இந்த எண்ணிக்கை அடுத்த ஆண்டில் அதிக அளவாக 7,447 ஆக உயர்ந்தது. பட்டயப் படிப்பில் 475 பேர் சேர்ந்தனர். அடுத்த ஆண்டு இது 1,572 ஆக உயர்ந்தது. பொறியியல் மாணவர்கள் இந்தி பயில அந்த ஆண்டில் அதிக விருப்பம் காட்டியதே இந்த உயர்வுக்கு காரணம் ஆகும்.

கொங்கனி, ஒரியா, பெங்காலி, தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, அசாமி ஆகிய மொழிகளில் இந்தி கற்றுத் தரப்படுகிறது. இதில் மற்ற அனைத்து மொழிகளையும் விட தமிழில் இந்தி கற்பவர்கள் படிப்படியாக உயர்ந்து தற்போது சுமார் 70 சதவீதமாக உள்ளது.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் இந்தி இயக்குநரக அதிகாரிகள் கூறும்போது, “வழக்கமாக தொலைதூரக் கல்வியில் இந்தி கற்கச் சேரும் மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதுவதில்லை. அவர்கள் நோக்கம் இந்தி கற்றுக் கொள்வது மட்டுமே. பாடங்களை பெற்று கற்றுக் கொள்வதுடன் நிறுத்திக் கொள்பவர்களில் தமிழர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்களை தேர்வெழுத கட்டாயப்படுத்த முடியாது” என்று தெரிவித்தனர். இதற்கிடையே இந்தி பிரச்சாரத்திற்காக தென் மாநிலங்களை குறிவைத்து மத்திய இந்தி இயக்குநரகம் சார்பில் ஒரு குறும்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இரண்டு பாகங்கள் கொண்ட அந்தப் படத்திற்கு ‘தக் ஷின் பாரத் மே இந்தி (தென்னிந்தியாவில் இந்தி)’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இதில் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் இந்தியால் மக்களிடையே ஒற்றுமை வளர்ந்து அது சுதந்திரப் போராட்டங்களில் அதிக பங்களித்ததாகவும், அதனால் மக்கள் இந்தி கற்பதை ஆங்கிலேயர்கள் தடுக்க முயன்றதாகவும் காட்சி அமைக்கப்பட்டுள்ளன. வயல்வெளி உட்பட பல இடங்களில் மக்கள் ரகசியமாக இந்தி கற்றதாகவும் காட்டப் படுகிறது.
வெளிநாட்டு உயர்கல்வி: கனவு தேசத்தில் படிக்கப் புறப்படுங்கள்!

Published : 12 Sep 2017 10:30 IST


எஸ். ஆர். இராஜகோபாலன்




அயல்நாடுகளில் உயர்கல்வி படிக்கும் கனவு பலருக்கு இருக்கும். தரமான கல்வி, படித்து முடித்தபின் நல்ல வேலைவாய்ப்பு, உயர்ந்த வாழ்க்கைத் தரம், மேலை நாடுகளுக்குச் செல்லும் அனுபவம், அதனால் கிடைக்கும் அங்கீகாரம் இப்படி அதற்குப் பின்னால் பல காரணங்கள் பின்னப்பட்டுள்ளன. ஆனால், நடுத்தர வர்க்கக் குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு இது நிறைவேறாத கனவாகவே கலைந்துபோகிறது. காரணம், சரியான வழிகாட்டுதல் இன்மையே.

வாய்ப்பளிக்கும் டாலர் தேசம்

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், கிழக்காசிய நாடுகள் உட்படப் பல்வேறு உலக நாடுகளில் உங்களுக்கு விருப்பமான படிப்பைப் படித்துப் பிரகாசிக்கலாம்.

கல்வி, மருத்துவம், விண்வெளி ஆராய்ச்சி, பொருளாதார பலம், தொழில் வளம், விவசாய மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி போன்ற பல துறைகளிலும் முன்னணி வகிக்கிறது அமெரிக்கா. நோபல் பரிசுகளையும் வட அமெரிக்க விஞ்ஞானிகள்தான் அதிக அளவில் பெற்றிருக்கிறார்கள்.

ஏனென்றால், வட அமெரிக்காவில் மட்டும் தரமான கல்வி அளிக்கும் 4 ஆயிரத்துக்கும் அதிகமான பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. இவை தவிர ஆயிரக்கணக்கில் தரச்சான்றிதழ்கள் பெற்ற சமுதாயக் கல்லூரிகளும் (Community Colleges) இருக்கின்றன. வட அமெரிக்கா முழுவதும் ஆங்கில வழிக் கல்விதான். மக்கள் பேசும் மொழியும் ஆங்கிலம்தான். இங்கு தொழில்நுட்பம், பொறியியல், அறிவியல், நிர்வாகவியல், வரலாறு, புவியியல், பொருளாதாரம், மனோதத்துவம், மருத்துவம், சட்டம் போன்ற எல்லாப் படிப்புகளுக்கும் மதிப்பும் அதற்குரிய வேலைவாய்ப்பும் உள்ளன.

இங்குக் கல்விக்கான செலவு ஆண்டுக்கு 35 ஆயிரம் டாலர் முதல் 75 ஆயிரம் டாலர்வரை. இந்தத் தொகை கல்விக் கட்டணம், தங்கும் வசதி, சாப்பாடு, காப்பீட்டுத்தொகை, புத்தகம் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.

சம்பாதித்துப் படிக்கலாம்!

இங்கு படிக்கும்போதே பல்கலைக்கழக வளாகத்தில் பலவிதப் பகுதிநேர வேலைகளைச் செய்து பணம் ஈட்ட வாய்ப்புள்ளது. ஒரு நாளைக்கு அதிகபட்சமாக நான்கு மணி நேரம் வேலை செய்யலாம். வேலைக்கேற்ப ஒரு மணி நேரத்துக்கு ஆறு டாலர் முதல் பதினைந்து அல்லது இருபது டாலர்வரை சம்பாதிக்கலாம். இதைத்தவிர முதல் செமஸ்டர் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றால், உதவித்தொகையும் கிடைக்க வாய்ப்புள்ளது.

பல்கலைக்கழக வளாகத்தில், இளநிலை மாணவர்களுக்குக் கற்பித்தல், ஆராய்ச்சி சம்பந்தமான வேலை, அலுவலக வேலை, கணினி வேலை, உணவு விடுதியில் வேலை போன்ற 15 வகையான வேலைகள் கிடைக்க வாய்ப்புள்ளது.

இவை தவிர ஒரு வருடம் முதுநிலைப் படிப்பு (MS) முடிந்தவுடன் பயிற்சி வேலையும் கிடைக்கும். இந்தப் பயிற்சியைப் பல்கலைக்கழகமே ஏற்பாடு செய்துதரும். இதன்படி 36 மாதங்கள்வரை ஒரு மாணவர் பல்கலைக்கழகத்துக்கு வெளியே உள்ள ஒரு தொழிற்சாலையில் வேலை செய்து சம்பாதிக்கலாம். இது சில சட்டதிட்டங்களுக்கு உட்பட்டது. அதன்பிறகோ முன்போ அந்த மாணவர் அதே பல்கலைக்கழகத்துக்குத் திரும்பி வந்து தன்னுடைய மேல்படிப்பைத் தொடரலாம். இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை மீதமுள்ள படிப்புக்காகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் சிறப்பாகப் பயிற்றுவிக்கும் முறைகள் கையாளப்படுகின்றன. தாங்கள் கற்றவற்றைத் தாங்களாகவே நூலகத்திலும் சோதனைக் கூடத்திலும் ஆய்வு மேற்கொள்ள வலியுறுத்தப்படுகிறது. மாணவர்களே சிறப்பு வகுப்பு எடுக்கும் திட்டமும் கடைப்பிடிக்கப்படுவதால் மனப்பாடத்துக்கு இடமில்லை.

தேவையான தகுதி

வட அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் படிக்க விரும்பும் இந்திய மாணவர்களுக்குத் தேவையான அடிப்படைத் தகுதி:

பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சிபெற்ற மாணவர்கள் முதலில் ஆங்கில அறிவுக்கான சோதனைத் தேர்வுகளான TOEFL, SAT ஆகிய இரண்டு தேர்வுகளிலும் நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டும்.

கனடா, வட அமெரிக்காவிலுள்ள பல்கலைக்கழகங்களில் இளநிலைப் படிப்பானது (BS) நான்கு வருடங்கள். இதன் பிறகு இரண்டாண்டு முதுநிலைப் படிப்பை (MS) மேற்கொள்ளலாம். நேரடியாக முதுநிலைப் பட்டப் படிப்புக்குச் செல்லும் மாணவர்கள் இந்தியாவில் 16 வருடங்கள் கால அவகாசம் கொண்ட பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பை பெற்றிருக்க வேண்டும்.

வேலை அனுபவம் கட்டாயம்

இந்தியாவில் MA., M.Sc., B.E., B.Tech., போன்ற பட்டங்கள் பெறுபவர் நேரடியாக அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில் முதுநிலைப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். அதற்கும் கட்டாயமாக TOEFL, GRE போன்ற நுழைவுத் தேர்வுகளை எழுதி நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டும். உங்களுடைய ஆங்கிலம், கணித அறிவு இந்தத் தேர்வுகளில் சோதிக்கப்படும்.

நிர்வாகவியல் (MBA) படிக்க விரும்பினால் TOEFL, GMAT போன்ற தேர்வுகளை எழுத வேண்டும். MBA படிக்கக் குறைந்தது இரண்டு வருட வேலை அனுபவம் கட்டாயம்.

வசந்த காலம், இலையுதிர்காலத்தில்தான் பொதுவாக வட அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் சேர்க்கை நடைபெறுகிறது. வெளிநாட்டு மாணவர்களை ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் அனுமதிப்பதில்லை. குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு முன்பு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப படிவங்களுக்கு 40 அமெரிக்க டாலர் முதல் 150 டாலர்வரை வசூலிக்கப்படும்.

இரட்டை ஏற்பாடு உள்ளது!

குட்டி நாடான சிங்கப்பூரில் உலகத் தரம் வாய்ந்த நான்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், நேஷனல் யூனிவர்சிட்டி ஆஃப் சிங்கப்பூர், சிங்கப்பூர் நிர்வாகக் கல்வி பல்கலைக்கழகம் ஆகியவை உள்ளன. இங்கு இளநிலைப் படிப்புகளில் சேர ஆங்கிலத் திறனைச் சோதிக்கும் IELTS கட்டாயம் எழுத வேண்டும். நிர்வாகவியல் படிக்க விரும்புபவர்கள் GRE, GMAT தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். இவற்றைத் தவிர சிங்கப்பூரில் உரிய அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் கல்வி நிலையங்களும் உள்ளன. இவை ஆஸ்திரேலியா, கனடா, வட அமெரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து போன்ற நாடுகளிலுள்ள சில சிறந்த பல்கலைக்கழகங்களோடு ஒப்பந்தம் செய்துகொண்டு இயங்கிவருகின்றன. சிங்கப்பூரில் ஒரு வருடமும் அவை ஒப்பந்தம் செய்துகொண்டுள்ள பல்கலைக்கழகத்தில் ஒரு வருடமும் என்கிற அடிப்படையில் அளிக்கப்படும் ‘இரட்டை ஏற்பாடு’ (Twinning Program) என்கிற சான்றிதழ் படிப்பைப் படிக்கலாம்.

கட்டணம் குறைவு

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளிலும் தரமான உயர் கல்வி அளிக்கும் பல்கலைக்கழகங்கள் உள்ளன. ஆங்கில வழிக் கல்வி அளிக்கும் இப்பல்கலைக்கழகங்களில் இணைய IELTS எழுத வேண்டும். அதில் 9 மதிப்பெண்ணுக்கு 6.5 மதிப்பெண் பெறுவது நல்லது. இந்த நாடுகளில் இளநிலை மூன்று ஆண்டுகள் படிப்பாகவும், முதுநிலை ஒரு வருடப் படிப்பாகவும் வழங்கப்படுகிறது.

ஐரோப்பிய நாடுகளில் படிக்க அவர்களுடைய பிராந்திய மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம். அங்கும் சமீப காலமாக ஆங்கில வழியில் கற்பிக்கப்படுகிறது. ஆனாலும் பிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலி உள்ளிட்ட அந்தந்த நாட்டு மொழிகளில் பேசும் திறமையையும் புரிந்துகொள்ளும் ஆற்றலும் அவசியம்.

ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகளில் மருத்துவம் படிக்க ஆண்டுதோறும் அதிக எண்ணிக்கையில் இந்திய மாணவர்கள் செல்கின்றனர். சில பல்கலைக்கழகங்களில் ஆங்கில வழியில் கற்பிக்கப்படுகிறது. ஆனால், முதலாமாண்டு முடிவுக்குள் அவர்களுடைய பிராந்திய மொழித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே படிப்பைத் தொடர முடியும். இந்தியாவின் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் கல்விக் கட்டணத்துடன் ஒப்பிடும்போது, ரஷ்யா, சீனாவில் மருத்துவப் படிப்புக்கான கல்விக் கட்டணம் மிகவும் குறைவு.

கடன் உதவி

அயல்நாடுகளில் உயர்கல்வி பெற அதிகம் செலவாகும் என்கிற கவலை பெற்றோர்களுக்கு வேண்டாம். வங்கிகள் கல்விக் கடன் வழங்குகின்றன. அசையாத சொத்து இருந்தால், மாணவரின் பெற்றோர் கணிசமான மாதச் சம்பளம் பெறுபவராக இருந்தால் ரூ.30-35 லட்சம்வரை கல்விக் கடன் பெறலாம். இந்தக் கல்விக்கடனை 84 மாதங்களில் மாணவர் மேற்படிப்பு முடித்து வேலை கிடைத்த பிறகு கடனை அடைக்கலாம். அதுவரை ஆண்டுக்கு 14% வட்டி.

மேல்நாடுகளில் உயர் கல்விக்காக விண்ணப்பிக்கும் முன்னர் அயல் நாட்டு பல்கலைக்கழகங்களின் தரம், அங்கு அளிக்கப்படும் பாடப் பிரிவுகள், உதவித்தொகை பெறக்கூடிய வாய்ப்பு, படித்து முடித்தபின் வேலைவாய்ப்பு, விசா சம்பந்தமான விவரங்கள் உள்ளிட்ட எல்லாச் சந்தேகங்களுக்கும் தேர்ந்த கல்வி ஆலோசகரை அணுகுவது நல்லது.

கட்டுரையாளர் அயல்நாட்டு கல்வி குறித்த ஆலோசகர்,
சென்னை
ஆங்கில​ம் அறிவோமே 176: எதற்கெல்லாம் கண்ணடிப்பார்கள்?

Published : 05 Sep 2017 10:45 IST

ஜி.எஸ்.எஸ்.





கேட்டாரே ஒரு கேள்வி

# என்ற குறியீட்டை ஒருவர் ‘Hound sign’ என்று குறிப்பிட்டார். அகராதியைப் பார்க்கும்போது hound என்றால் நாய் என்று போட்டிருக்கிறது. மேற்படி குறியீட்டுக்கும், நாய்க்கும் என்ன தொடர்பு?

*******************

“Feelers என்கிறார்களே அவர்கள் யார்?”

To put out feelers என்றால் நீங்கள் செய்த அல்லது செய்யப்போகும் ஒரு செயலைப் பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிய நீங்கள் எடுக்கும் முயற்சி.

“I have been putting out a few feelers and it seems that most people are against the committee we have formed” என்றால் நீங்கள் ஒரு குழுவை உருவாக்கி இருக்கிறீர்கள். அது குறித்த மக்கள் கருத்து என்ன என்பதை அறியச் சில முயற்சிகளை எடுக்கிறீர்கள் (இதற்காகச் சில பேரை நீங்கள் நியமிக்கக் கூடும்). இதன் மூலம் மக்கள் அந்தக் குழுவை ஏற்கவில்லை என்பதை அறிந்துகொள்கிறீர்கள்.

கரப்பான்பூச்சி, பட்டாம்பூச்சி போன்றவற்றின் தலைப் பகுதிக்கு அருகே இரண்டு நீளமான கறுப்புக் குழாய்கள் இருக்கும். இவற்றை feelers என்பார்கள் (சில சமயம் antenna என்றும் கூறுவதுண்டு). இவற்றைக் கொண்டு எதிர்ப்படும் பொருள்களைத் தொட்டுப் பார்த்து அவற்றின் தன்மை குறித்து இந்தப் பூச்சிகள் அறிந்துகொள்ளும்).*******************

கேட்டாரே ஒரு கேள்விக்கான பதில் இது. hound sign அல்ல. Pound sign. அதாவது எடையின் அளவீடான பவுண்ட் என்பதற்கான குறியீடுபோலவே இது அமைந்திருப்பதால் அப்படிக் கூறுகிறார்கள்.

இதை octothorpe என்றும் குறிப்பிடுகிறார்கள். Octo என்றால் 8 என்று பொருள். எண்ணிப் பார்த்தால் இந்தக் குறியீட்டில் எட்டு முனைகள் இருக்கும்.

என்றாலும் தற்காலத்தில் இந்தக் குறியீட்டை Hashtag என்றுதான் பலரும் குறிக்கின்றனர். இசைக் கலைஞர்கள் இந்தக் குறியீட்டைப் பயன்படுத்தும்போது அதை sharp என்பதற்கான குறியீடாகப் பயன்படுத்துகிறார்கள். அதாவது அரை ​step அதிகமாக இசைக்க வேண்டும்.

புரூஃப் திருத்தும்போது இரண்டு வாக்கியங்களுக்கு நடுவே இடைவெளி வேண்டும் என எண்ணினால் இந்தக் குறியீட்டைப் பயன்படுத்துகிறார்கள்.

கணினி சங்கேதக் குறியில் இந்தக் குறியீட்டைப் பயன்படுத்தினால் ‘தொடர்வதெல்லாம் கருத்துகள்தானே தவிர ஆணைகள் இல்லை’ என்று பொருள்.

*******************

Invariably என்றால் என்ன பொருள்?

Variation என்றால் மாறுபடுவது. மாறுபடாத தன்மை கொண்டிருந்தால் invariably என்று குறிக்கப்படுகிறது. அதாவது invariably என்பதன் சம வார்த்தை always.

The train is invariably late என்றால் (கிட்டத்தட்ட) எல்லா நாட்களு​மே அது தாமதமாகத்தான் வருகிறது என்று பொருள்.

For a lot of companies the biggest costs are invariably employment costs.

‘Forty winks’ என்று எதைக் குறிப்பிடுவார்கள் என்ற கேட்டிருக்கிறார் ஒரு வாசகர்.

முதலில் wink என்றால் என்ன என்பதைத் தெரிந்துகொள்வோம். வேகமாகக் கண்ணை ​மூடித் திறப்பதை wink என்பதுண்டு. ஒரு நகைச்சுவையைக் கூறிவிட்டு நாம் கண்ணடிப்பதுண்டு. அன்பு காரணமாகவோ அடையாளம் தெரிந்து கொண்டதற்கு அறிகுறியாகவோ கண்ணடிப்பதுண்டு (வேறு எதற்காவது கண்ணடிப்பார்களா என்ன?) இப்படிக் கண்ணடிப்பது என்பதும் winkதான். He winked at them as they passed.

பளபளப்பதையும் சில சமயம் winked என்ற வார்த்தையால் குறிப்பிடுவதுண்டு. The diamond in the necklace winked in the moonlight.

Forty winks என்றால் குட்டி ​தூக்கம் என்று அர்த்தம். இதற்கு forty என்ற எண்ணை ஏன் பயன்படுத்த வேண்டும் என்பதற்குத் தெளிவான பதில் கிடைக்கவில்லை.

போட்டியில் கேட்டுவிட்டால்?

இந்த நான்கில் இலக்கணப்படியும், அர்த்தத்​ தின்படியும் சரியான வாக்கியம் எது?

(1) He worked hard yet he failed.

(2) Though he worked hard yet he failed.

(3) Though he worked hard he failed.

(4) He worked hard and failed.

(5) He hardly worked but failed.

இலக்கணப்படி நான்காவது வாக்கியம் சரியானதுதான். ஆனால், கடுமையாக வேலை செய்தும் அவன் தோற்றுப் போனான் என்பது பொருத்தமாக இருக்குமளவுக்குக் கடுமையான வேலை செய்தான், தோற்றுப் போனான் என்பது பொருத்தமாக இல்லை.

Working hard என்றால் கடுமையாக வேலை செய்வது. Hardly worked என்றால் (கிட்டத்தட்ட) வேலையே செய்யவில்லை என்று அர்த்தமாகிறது. எனவே, ஐந்தாவது வாக்கியம் சரியானதல்ல.

இப்போது முதல் மூன்று வாக்கியங்களைப் பார்க்கலாம். Though என்று ஒரு வாக்கியம் தொடங்கினால் yet என்பது அந்த வாக்கியத்தின் பின்பகு​தியில் வர வேண்டும். எடுத்துக்காட்டு - Even though she spoke to me rudely, yet I will be polite to her. இப்படிப் பார்க்கும்போது முதல் இரு வாக்கியங்களுமே சரியானவையாக உள்ளன.

(1) He worked hard yet he failed.

(2) Though he worked hard yet he failed.

சிப்ஸ்

Dumbfound என்பதற்குப் பொருள் என்ன?

வியப்பின் எல்லைக்கே செல்வதை இப்படிக் குறிப்பிடுவார்கள்.

Mac என்றால் என்ன?

பேச்சு வழக்கில் mackintosh என்பதை mac என்று சுருக்கி அழைக்கிறார்கள். தண்ணீர் புகாத ரப்பரால் ஆன உடையை (Rain Coat) mackintosh என்பார்கள்.

தவறுவது மனித குணம். மன்னிப்பது தெய்வ குணம். இதை ஆங்கிலத்தில் எப்படிக் கூறலாம்?

To err is human. To forgive is divine.


தொடர்புக்கு - aruncharanya@gmail.com
ஆங்கிலம் அறிவோமே 177: தப்பிக்க விடாத பொத்தான் துளை!

Published : 12 Sep 2017 10:30 IST


ஜி.எஸ்.எஸ்.






கேட்டாரே ஒரு கேள்வி

Loo என்றால் கழிப்பறையைக் குறிக்கிறது. Waterloo என்பதற்கும், இதற்கும் தொடர்பு உண்டா?

Waterloo என்பது நெப்போலியனுக்குத் தோல்வியை அளித்த இடம். அது பெல்ஜியத்தில் உள்ளது.

பிரெஞ்சு மொழியில் ‘லூ’ (L’eau) என்பது நீரைக் குறிக்கும். (சிறுநீர், பிற நீர் இரண்டையும்தான்!).

I will just go to the loo என்றால் டாய்லெட்டுக்குச் சென்று வரவிருக்கிறார் என்று அர்த்தம். Loo roll என்றால் toilet paper.

பிரிட்டனில் கழிப்பறையை latrine என்பார்கள். அமெரிக்காவில் அதை wash room என்பார்கள்.

Toilet என்பது கழிவறையைக் குறிக்கும். அதே நேரத்தில் குளித்துவிட்டு உடை மாற்றிக்கொண்டு தன் தோற்றத்தை மேம்படுத்திக்கொள்ளும் அறையையும் குறிக்கும். அதனால்தான் சில பேர் toilet என்பதை ஒப்பனை என்று மொழிபெயர்கிறார்கள். பிரெஞ்சு மொழியில் ‘toilette’ என்றால் ‘துணி அல்லது உறை’ என்று பொருள்.

************

He was high என்றால் என்ன பொருள் என்று கேட்கிறார் ஒரு <DP>வாசகர்.

இங்கே high என்பது மனநிலையைக் குறிக்கிறது. அவர் எக்கச்சக்கமான சந்தோஷத்தில் இருக்கிறார் என்பதுடன் மிக மிக உற்சாகப் பெருக்கிலும் இருக்கிறார். இதன் காரணம் அவருக்குக் கிடைத்த ஏதோ மகிழ்ச்சியான செய்தியாக இருக்கலாம் அல்லது மதுவை அருந்தியதாலும் இருக்கலாம்.

He has been on a high ever since his article was published in the magazine.

************

Face value என்றால் என்ன?

ஒரு நாணயத்திலோ அஞ்சல் தலையிலோ அச்சிடப்பட்டிருக்கும் அதன் மதிப்பு. பொதுவாக அச்சிடப்பட்டிருக்கும் மதிப்பைவிட அதன் நிஜ மதிப்பு குறைவாக இருக்கும்.

அதாவது ஒரு நாணயத்திலுள்ள உலோகத்தின் மதிப்பு குறைவாகவே இருக்கலாம். ஆனால் 10 ரூபாய் என்று அச்சிடப்பட்ட நாணயம் என்றால் அதன் face value 10 ரூபாய்.

The coins are sold for the metal they contain rather than their face values.

To accept something at face value என்றால் ஒன்றை அப்படியே ஏற்றுக்கொள்வது. அதாவது அது நிஜம்தானா, எந்த அளவுக்கு நிஜம் என்பதையெல்லாம் யோசிக்காமல் ஏற்றுக்கொள்வது. These threats should not be taken at face value என்பதன் பொருள் “இந்த எச்சரிக்கையை அப்படியே நம்பிவிடத் தேவையில்லை” என்பதாகும். I take her story at face value because I assume that she is not lying.




“Normalcy என்பதற்கும் normality என்பதற்கும் என்ன வேறுபாடு” என்று கேட்டிருக்கிறார் ஒரு வாசகர்.

normality என்றாலும், normalcy என்றாலும் ஒன்றுதான்.

Normality என்றாலும் normalcy என்றாலும் normal ஆக இருக்கும் ஒரு நிலை. அதாவது வழக்கமாக இருப்பது. எதிர்பார்க்கக்கூடியது. “The place gradually returned to normality” என்றால் (இடையில் ஏதோ காரணத்தால் எதிர்பாராத சூழல் உண்டான) அந்த இடம் மெள்ள மெள்ள தன் இயல்பு நிலைக்குத் திரும்பியது” என்று பொருள்.

************

வங்கியில் காசோலைகளை நிரப்பும்போது சிலர் செய்யக்கூடிய தவறுகளைக் கண்டிருக்கிறேன்.

40 என்பதை fourty என்று சிலர் குறிப்பிடுவார்கள். Forty என்பதே சரி.

3005 என்ற தொகையை சொற்களில் எழுதும்போது Three thousand five என்று எழுதுவார்கள். Three thousand and five என்றுதான் எழுத வேண்டும்.

வேறு சிலர் three thousands and five என்று எழுதுவார்கள். இங்கே thousands தவறு - thousandதான்.

************

தொடக்கம் இதுதான்

Buttonhole என்ற வார்த்தையைப் படித்தவுடனேயே அதன் பொருள் உங்களுக்கு விளங்கி இருக்கும், சட்டைகளில் பொத்தான் நுழைப்பதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் துளைதான். ஆனால் Buttonhole என்ற வார்த்தையை verbஆகவும் பயன்படுத்துவதுண்டு.

ஒருவரிடம் பேசுவதற்காக அவரைப் பிடித்து வைப்பதைத்தான் இப்படிக் கூறுவார்கள். தான் சொல்வதை முழுவதுமாக எதிராளி கேட்க வேண்டும் என்று ஒருவர் நினைத்தால் அவரது சட்டை பொத்தானுக்கான துளையை விரல்விட்டுத் தன்னருகே இழுத்தபடி அதைக் கூறும் வழக்கம் 18-ம் நூற்றாண்டில் இருந்ததாம். எதிராளி அவருடைய விருப்பத்துக்கு மாறாக இந்தப் பேச்சைக் கேட்கும்படியாகிறது என்பது வெளிப்படை.

1860-களில் தையல் கலைஞர்கள் கழுத்துப் பகுதியில் பொத்தான் இல்லாமலேயே அதற்கான ஒரு துளையையும் வைத்துத் தைப்பது வழக்கமாம். காரணம் மேலே குறிப்பிட்டதுதான்.

Buttonhold என்ற வார்த்தை நாளடைவில் Buttonhole என்ற verb ஆக மாறியது என்பதுண்டு.

சிப்ஸ்

# In due course என்றால்?

வருங்காலத்தில், சரியான சமயத்தில். பெரும்பாலும் அலுவலகக் கடிதப் போக்குவரத்தில் இதைப் பயன்படுத்துகிறோம். I will let you know my decision in due course.

# Lessen, lesson என்ன வேறுபாடு?

முறையே குறைத்தல், பாடம்.

# Pitiable, Pitiful ஆகிய இரு வார்த்தைகள் ஒரே அர்த்தம் கொண்டவையா?

ஆமாம். பரிதாபப்படத்தக்க.

தொடர்புக்கு - aruncharanya@gmail.com

இணைய உலா: துரத்தும் ஆன்லைன் விளையாட்டு பூதங்கள்!

Published : 08 Sep 2017 09:35 IST

க. ஸ்வேதா





புளு வேல் என்ற விளையாட்டு தற்கொலை செய்யும் அளவுக்கு தூண்டுவதால், அதைப் பற்றியே நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால், புளு வேலைப் போல இன்னும் பல விளையாட்டுகளை இளைஞர்கள் தினமும் விளையாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இவை ஒரே அடியாக மரணத்தைத் தூண்டாவிட்டாலும், ‘ஸ்லோ பாய்சன்’ போல மெதுவாக தீங்கு விளைவித்துக்கொண்டிருக்கின்றன.

‘போக்கிமான் கோ’ என்ற மொபைல் விளையாட்டும் புளு வேல்போல விபரீதமான விளையாட்டுதான். இது ஆஸ்திரேலியா, அமெரிக்காவில் அறிமுகமாகி, பின் உலகம் முழுவதும் பிரபலமடைந்தது. இது 2016-ல் கூகுள் ப்ளே ஸ்டோரில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலி என்ற சாதனையையும் படைத்தது. போக்கிமான் என்னும் கார்ட்டூன் கதாபாத்திரத்தைக் கொண்டு, இந்த விளையாட்டு உருவாக்கப்பட்டுள்ளது.

முதலில் இந்த விளையாட்டு வரவேற்பை பெற்றது. ஆனால், பிறகுதான் இதன் விபரீதங்கள் தெரிய ஆரம்பித்தன. அமெரிக்காவில் 17 வயது பெண் விடியற்காலையில், வெகு தூரம் சென்று, யாரும் இல்லாத இடத்தில் போக்கிமானை பிடிப்பதற்கு பதில் சவத்தை கண்டுபிடித்தார். அப்போதுதான் இந்த விளையாட்டின் விபரீதங்களைப் பலரும் உணர ஆரம்பித்தார்கள்.

இந்த விளையாட்டை பயன்படுத்தி பல திருட்டு சம்பவங்களும் கொலைகளும்கூட நடந்துள்ளன. வாகனம் ஓட்டிச் செல்லும்போது இதை விளையாடியதால் பல விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இந்த விளையாட்டுக்கு அடிமையாகி, மக்கள் சுடுகாடுகள், அனுமதி மறுக்கப்பட்ட பல இடங்களுக்கு அத்துமீறி நுழைந்த சம்பவங்களும் பதிவாகியுள்ளன. இந்தியாவில் இதுவரை எந்த விபரீதமும் இந்த விளையாட்டால் நடக்கவில்லை.

இதேபோல் பல ஸ்மார்ட்போன் கேம்களும் வீடியோ கேம்களும் நமக்கே தெரியாமல் தீங்கு விளைவிக்கின்றன. ‘கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ’ போன்ற வீடியோ கேம்ஸ் மக்களிடம் வன்முறையைத் தூண்டும் விதத்தில் இருப்பதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். இதில் ஒரு கட்டத்தில், விளையாடுபவர் ஒருவரை துன்புறுத்தி கேள்விகள் கேட்பதுபோல் விளையாட வேண்டும். அதில் சரியான விதிமுறைகள் எதுவும் இல்லாததால், ஆடுபவர் தன் விருப்பத்துக்கு அந்த நபரை துன்புறுத்த ஆரம்பித்தார். இந்த விளையாட்டும் மிகுந்த விமர்சனத்துக்குள்ளான விளையாட்டுதான்.

பல ஆண்டுகளாக ஏதோ ஒரு ஆன்லைன் விளையாட்டால் இளைஞர்கள் அடிமைப்பட்டுகொண்டுதான் இருக்கிறார்கள். கேண்டி க்ரஷ், மினி மிலிடியா போன்ற விளையாட்டுகளை விளையாட்டாக மட்டும் பார்க்காமல், அதை ஒரு நாளைக்கு 5 மணி நேரம் விளையாடுவது, நம்மை அதற்கு அடிமையாக்கி விடுகிறது.
கண்களால் ‘ஒளி’ செய்!

Published : 09 Sep 2017 09:57 IST

பெ. ரங்கநாதன்





தேசிய கண் தான இரு வாரம்: ஆகஸ்ட் 25 - செப்டம்பர் 8

‘துள்ளாத மனமும் துள்ளும்’ திரைப்படத்தில் ஒரு காட்சி. ஆய்வகத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது, சிம்ரனின் கண்களில் அமிலம் பட்டுத் தன் இரண்டு கண் பார்வையையும் இழந்து விடுவார். அவருக்குக் கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுப் பார்வை கிடைப்பதாகக் கதை.


இந்த சினிமா பார்த்தவர்களுக்கு மட்டுமல்ல, பலருக்கும் சந்தேகம், கண்ணை தோண்டி எடுத்துவிட்டு இறந்தவர்களின் முழு கண்களையும் வைத்து விடுவார்களா என்பதுதான்.

அப்படியல்ல. கருவிழி நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரின் கருவிழியை அகற்றிவிட்டு, இறந்தவர்களின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட கண்ணின் கருவிழியை எடுத்துப் பொருத்தும் அறுவை சிகிச்சைதான் ‘கருவிழி மாற்று அறுவை சிகிச்சை’ (கார்னியல் டிரான்ஸ்பிளான்டேஷன்).

அவசர சிகிச்சை

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 30 வயது இளைஞர் ஒருவர், தன் கண் சிவப்பாக இருக்கிறது என்றும், வலி இருக்கிறது என்றும் சொல்லி, மருந்துக் கடையில் தானாகச் சென்று மருந்து வாங்கி ஊற்றியுள்ளார்.

ஒரு வாரத்துக்குப் பிறகு வலி தாங்க முடியாமல் கண் மருத்துவரை அணுகியபோது, அவருடைய கண் கருவிழி முழுவதும் பூஞ்சைக் கிருமியால் பாதிக்கப்பட்டு, கண்ணுக்குள் கிருமி பரவத் தொடங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்குக் காரணம் அவர் பயன்படுத்திய ஸ்டீராய்டு கலந்த மருந்துதான் என்று மருத்துவர் கூறினார்.

தற்போது கிருமி பாதிப்பைக் கட்டுப்படுத்த அவருடைய பாதிக்கப்பட்ட கருவிழியை எடுத்துவிட்டு கண்தானமாகப் பெற்ற கருவிழியைப் பொருத்தியதால் அவருக்குப் பார்வை கிடைத்துள்ளது. இப்படிப்பட்ட நேரத்தில் அவசரமாகக் கருவிழி மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். இதற்கு மண்ணில் மறையும், தீயில் கருகும் கண்களைத் தானமாகக் கொடுத்தால் பாதிக்கப்பட்டவர்களின் பார்வையைக் காப்பற்றலாம்.



கண்தானம்: தெரிந்ததும் தெரியாததும்

ஒருவர் இறந்தவுடன் 6 மணி நேரத்துக்குள் கண்களை எடுத்துப் பாதுகாக்க வேண்டும்.

கண்தானம் செய்ய உங்கள் ஊருக்கு அருகில் உள்ள கண்தான வங்கியை உடனடியாக அணுக வேண்டும்.

உங்கள் ஊருக்கு அருகில் உள்ள கண்தான வங்கியின் தொலைபேசி எண், முகவரி ஆகியவற்றை அறிய தமிழக அரசின் 104 என்ற இலவச தொலைபேசி எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.

கண்தான வங்கியிலிருந்து மருத்துவர்கள் வரும்வரை இறந்தவர்களின் கண் இமைகளை மூடி வைக்க வேண்டும். மூடிய இமைகளின் மீது ஈரப் பஞ்சை வைத்திருக்க வேண்டும். இறந்தவர் உடல் உள்ள அறையில் மின்விசிறியை அணைத்துவிட வேண்டும்.

கண்தானம் கொடுக்க வயது வரம்பு கிடையாது.

நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் உள்ளவர்கள்கூட கண்தானம் செய்யலாம். கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களும் கண்தானம் செய்யலாம்.

புற்றுநோய், எய்ட்ஸ், மஞ்சள் காமாலை, நச்சுக் கிருமித் தொற்று, கிருமி பாதிப்பினால் இறந்தவர்கள் மற்றும் காரணம் தெரியாமல் இறந்தவர்களின் கண்களைத் தானமாகப் பெற முடியாது.

இறந்த ஒருவரிடம் இருந்து எடுக்கப்படும் ஒரு ஜோடி கண்களைக்கொண்டு இரண்டு பார்வையிழந்தவர்களுக்குப் பார்வை கொடுக்க முடியும்.

பார்வையின்றித் தவிக்கும் 50 சதவீதம் பேர்

இந்தியாவில் கருவிழி பாதிப்பினால் பார்வையிழந்து வருபவர்களில் பெரும்பாலோர் இளம் வயதினரே. அவர்கள் வாழ்நாள் முழுவதும் பார்வையற்றவர்களாக வாழ்வது வேதனையானது.

நாட்டில் விபத்து, கிருமி பாதிப்பு, பிறவிக் குறைபாடு போன்ற காரணங்களால் பார்வையிழந்த சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் வாழ்ந்து வருகிறார்கள். ஒவ்வோர் ஆண்டும் 30 ஆயிரம் பேர் கருவிழி பாதிப்பினால் பார்வையிழந்து வருகிறார்கள்.

கருவிழி பாதிப்பால் ஒரு கண்ணில் பார்வையிழப்பவர்களின் எண்ணிக்கை 2020-ம் ஆண்டில் 10 லட்சமாக இருக்கும் என ஓர் ஆய்வு கூறுகிறது.

தற்போது இந்தியாவில் கருவிழி மாற்று அறுவை சிகிச்சைக்குத் தேவையான கண்களில் சுமார் 50 சதவீதக் கண்களை மட்டுமே தானமாகப் பெற முடிகிறது. மீதமுள்ள 50 சதவீத மக்கள், பார்வையிழந்தவர்களாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு பார்வை கொடுக்க நம்மால் நிச்சயம் முடியும். எப்படி?

உங்கள் ஊரிலோ, உங்கள் உறவினர் வீட்டிலோ, உங்கள் குடும்பத்திலோ யாராவது இறக்க நேரிட்டால், கண்தானம் செய்வதன் அவசியம் குறித்து அவர்களுக்கு எடுத்துக்கூறி கண்களைத் தானமாகக் கொடுத்து உதவ வேண்டும்.

மண்ணில் புதைந்தவரை மீண்டும் இந்த உலகத்தைப் பார்க்க வைக்க, கண் தானத்தைத் தவிர வேறு மிகச் சிறந்த வழி ஏது?

கட்டுரையாளர், கண் மருத்துவர்
தொடர்புக்கு: kpranganathan83@gmail.com
தேசியக்கொடி அவமதிப்பு வழக்கு: மருத்துவருக்கு நூதன நிபந்தனையுடன் முன் ஜாமீன்

Published : 12 Sep 2017 17:16 IST

சென்னை





தேசியக்கொடியை அவமதிப்பு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஆம்பூர் மருத்துவர் கென்னடிக்கு ஒருவாரம் தினமும் தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்பட்டது.

வேலூர் மாவட்டத்திலுள்ள ஆம்பூர் நகரில் அமைந்துள்ள அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் கென்னடி சுதந்திர தினத்தன்று தொலைபேசியில் பேசியப்படி தேசியக்கொடி ஏற்றியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து தேசியக்கொடியை அவர் அவமதிப்பு செய்துவிட்டதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் முன் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கின் விசாரணை நிதிபதி பி.என் பிராகாஷ் முன் இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி மருத்துவர் கென்னடி ஒரு வாரத்துக்கு தினமும் காலை பணிக்கு வரும்போது தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

NEWS TO DAY 16.07.2026