Wednesday, September 13, 2017

கண்களால் ‘ஒளி’ செய்!

Published : 09 Sep 2017 09:57 IST

பெ. ரங்கநாதன்





தேசிய கண் தான இரு வாரம்: ஆகஸ்ட் 25 - செப்டம்பர் 8

‘துள்ளாத மனமும் துள்ளும்’ திரைப்படத்தில் ஒரு காட்சி. ஆய்வகத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது, சிம்ரனின் கண்களில் அமிலம் பட்டுத் தன் இரண்டு கண் பார்வையையும் இழந்து விடுவார். அவருக்குக் கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுப் பார்வை கிடைப்பதாகக் கதை.


இந்த சினிமா பார்த்தவர்களுக்கு மட்டுமல்ல, பலருக்கும் சந்தேகம், கண்ணை தோண்டி எடுத்துவிட்டு இறந்தவர்களின் முழு கண்களையும் வைத்து விடுவார்களா என்பதுதான்.

அப்படியல்ல. கருவிழி நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரின் கருவிழியை அகற்றிவிட்டு, இறந்தவர்களின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட கண்ணின் கருவிழியை எடுத்துப் பொருத்தும் அறுவை சிகிச்சைதான் ‘கருவிழி மாற்று அறுவை சிகிச்சை’ (கார்னியல் டிரான்ஸ்பிளான்டேஷன்).

அவசர சிகிச்சை

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 30 வயது இளைஞர் ஒருவர், தன் கண் சிவப்பாக இருக்கிறது என்றும், வலி இருக்கிறது என்றும் சொல்லி, மருந்துக் கடையில் தானாகச் சென்று மருந்து வாங்கி ஊற்றியுள்ளார்.

ஒரு வாரத்துக்குப் பிறகு வலி தாங்க முடியாமல் கண் மருத்துவரை அணுகியபோது, அவருடைய கண் கருவிழி முழுவதும் பூஞ்சைக் கிருமியால் பாதிக்கப்பட்டு, கண்ணுக்குள் கிருமி பரவத் தொடங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்குக் காரணம் அவர் பயன்படுத்திய ஸ்டீராய்டு கலந்த மருந்துதான் என்று மருத்துவர் கூறினார்.

தற்போது கிருமி பாதிப்பைக் கட்டுப்படுத்த அவருடைய பாதிக்கப்பட்ட கருவிழியை எடுத்துவிட்டு கண்தானமாகப் பெற்ற கருவிழியைப் பொருத்தியதால் அவருக்குப் பார்வை கிடைத்துள்ளது. இப்படிப்பட்ட நேரத்தில் அவசரமாகக் கருவிழி மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். இதற்கு மண்ணில் மறையும், தீயில் கருகும் கண்களைத் தானமாகக் கொடுத்தால் பாதிக்கப்பட்டவர்களின் பார்வையைக் காப்பற்றலாம்.



கண்தானம்: தெரிந்ததும் தெரியாததும்

ஒருவர் இறந்தவுடன் 6 மணி நேரத்துக்குள் கண்களை எடுத்துப் பாதுகாக்க வேண்டும்.

கண்தானம் செய்ய உங்கள் ஊருக்கு அருகில் உள்ள கண்தான வங்கியை உடனடியாக அணுக வேண்டும்.

உங்கள் ஊருக்கு அருகில் உள்ள கண்தான வங்கியின் தொலைபேசி எண், முகவரி ஆகியவற்றை அறிய தமிழக அரசின் 104 என்ற இலவச தொலைபேசி எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.

கண்தான வங்கியிலிருந்து மருத்துவர்கள் வரும்வரை இறந்தவர்களின் கண் இமைகளை மூடி வைக்க வேண்டும். மூடிய இமைகளின் மீது ஈரப் பஞ்சை வைத்திருக்க வேண்டும். இறந்தவர் உடல் உள்ள அறையில் மின்விசிறியை அணைத்துவிட வேண்டும்.

கண்தானம் கொடுக்க வயது வரம்பு கிடையாது.

நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் உள்ளவர்கள்கூட கண்தானம் செய்யலாம். கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களும் கண்தானம் செய்யலாம்.

புற்றுநோய், எய்ட்ஸ், மஞ்சள் காமாலை, நச்சுக் கிருமித் தொற்று, கிருமி பாதிப்பினால் இறந்தவர்கள் மற்றும் காரணம் தெரியாமல் இறந்தவர்களின் கண்களைத் தானமாகப் பெற முடியாது.

இறந்த ஒருவரிடம் இருந்து எடுக்கப்படும் ஒரு ஜோடி கண்களைக்கொண்டு இரண்டு பார்வையிழந்தவர்களுக்குப் பார்வை கொடுக்க முடியும்.

பார்வையின்றித் தவிக்கும் 50 சதவீதம் பேர்

இந்தியாவில் கருவிழி பாதிப்பினால் பார்வையிழந்து வருபவர்களில் பெரும்பாலோர் இளம் வயதினரே. அவர்கள் வாழ்நாள் முழுவதும் பார்வையற்றவர்களாக வாழ்வது வேதனையானது.

நாட்டில் விபத்து, கிருமி பாதிப்பு, பிறவிக் குறைபாடு போன்ற காரணங்களால் பார்வையிழந்த சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் வாழ்ந்து வருகிறார்கள். ஒவ்வோர் ஆண்டும் 30 ஆயிரம் பேர் கருவிழி பாதிப்பினால் பார்வையிழந்து வருகிறார்கள்.

கருவிழி பாதிப்பால் ஒரு கண்ணில் பார்வையிழப்பவர்களின் எண்ணிக்கை 2020-ம் ஆண்டில் 10 லட்சமாக இருக்கும் என ஓர் ஆய்வு கூறுகிறது.

தற்போது இந்தியாவில் கருவிழி மாற்று அறுவை சிகிச்சைக்குத் தேவையான கண்களில் சுமார் 50 சதவீதக் கண்களை மட்டுமே தானமாகப் பெற முடிகிறது. மீதமுள்ள 50 சதவீத மக்கள், பார்வையிழந்தவர்களாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு பார்வை கொடுக்க நம்மால் நிச்சயம் முடியும். எப்படி?

உங்கள் ஊரிலோ, உங்கள் உறவினர் வீட்டிலோ, உங்கள் குடும்பத்திலோ யாராவது இறக்க நேரிட்டால், கண்தானம் செய்வதன் அவசியம் குறித்து அவர்களுக்கு எடுத்துக்கூறி கண்களைத் தானமாகக் கொடுத்து உதவ வேண்டும்.

மண்ணில் புதைந்தவரை மீண்டும் இந்த உலகத்தைப் பார்க்க வைக்க, கண் தானத்தைத் தவிர வேறு மிகச் சிறந்த வழி ஏது?

கட்டுரையாளர், கண் மருத்துவர்
தொடர்புக்கு: kpranganathan83@gmail.com

No comments:

Post a Comment

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...