Thursday, September 28, 2017


நம்பிக்கை ஊட்டுவோம்!
By தி.வே. விஜயலட்சுமி | Published on : 28th September 2017 01:14 AM

அன்மையில், காலாண்டுத் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்ததால் மனம் உடைந்த சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த இந்துமதி என்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிகழ்ச்சியை நாளிதழில் படித்து மனம் நொறுங்கியது. 

மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்த மாணவி, மதிப்பெண் குறைந்ததற்கு மனமுடைந்து, தற்கொலை முடிவுக்கு வந்ததற்கான காரணங்களை ஆய்ந்து பார்க்க வேண்டும். 

மதிப்பெண்கள் குறைந்ததால் ஆசிரியர் ஏவிய கடுஞ்சொற்கள் மனத்தைப் புண்படுத்தியிருக்கலாம். உடன் பயிலும் தோழிகள் இழித்து பேசி இருக்காலம். பெற்றோர்கள் தன் குறைந்த மதிப்பெண்களை அறிந்து விட்டால் தன்னைத் தண்டிப்பார்களே என்று எண்ணியிருக்கலாம். 

இவற்றையெல்லாம் எதிர்நோக்கி, விலைமதிப்பற்ற உயிரைப் போக்கிக் கொள்ள அம்மாணவி முன்வந்துள்ளாள் என்ற முடிவுக்குத்தான் வர வேண்டும். ஆசிரியர்களே அந்த மணைவியைத் தனியே அழைத்து ஆறுதல் தரும், நம்பிக்கையூட்டும நயவுரைகள் கூறி, தேர்வில் மதிப்பெண் குறைவு பெருந்தவறு அல்ல அதை எளிதாக எடுத்துக் கொண்டு, முயன்றால் நீ முதலாவதாக வரலாம் என்று சொல்லி, தனிச்சிறப்புப் பயிற்சி கொடுக்க ஆரம்பித்திருக்கலாம். 

பெண்ணின் பெற்றோரை பள்ளிக்கு வரவழைத்து, அவர்கள் உளப்பாங்கினை அறிந்து, ஏற்ற முறையில் அறிவுரை சொல்லி, அவர்கள் மனத்திற்கு நம்பிக்கை அளித்திருக்கலாம். தேர்வுக்கு முன்னரும், தேர்வுக்கு பின்னரும், பெற்றோர் - ஆசிரியர் கூட்டம் நடத்தி, மாணவியின் அச்சத்திலிருந்து நீக்கியிருக்கலாம். 

பெற்றோர்களும், குறைவான மதிப்பெண்ணைக் கண்டவுடனே பிள்ளைகளை அடித்து, திட்டி அவமானப்படுத்தக் கூடாது. நன்கு படிக்கும் மற்ற மாணவர்களுடன் ஒப்பிட்டுப் பேசக்கூடாது. வீட்டில் வறுமைச் சூழ்நிலை அமைந்திருந்தால் அதைக் குழந்தைகளுக்கு நாளும் எடுத்துச் சொல்வதாலும் அவர்கள் மனம் புண்பட்டுப் போகும். 

இன்னும் மீதமுள்ள ஆறு மாதங்களில் முயன்று படித்தால், பள்ளியின் அனைத்து மாணவிகளிலும் முதலாவதாக வரலாம் என்ற உள்ள உறுதியை தராமல் இருந்ததால்தான் இந்துமதி இத்தகு கொடிய முடிவை எடுத்திருக்கிறாள். 

பள்ளிகளில் நீதி போதனை வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்று ஓயாமல் சொல்கிறோம். வாரம் ஒரு முறையாவது ஒரு வகுப்பை ஒதுக்கி வாழ்வை எதிர்கொள்வது எப்படி? தோல்வியை எப்படி சமாளிப்பது? வாழ்வின் குறிக்கோளைத் தீர்மானிப்பது எப்படி? என்று பல்வகை வினாக்கள் எழுப்பி, பல அறிஞர்கள், தலைவர்கள் வரலாற்றை எல்லாம் எடுத்துரைத்து, உற்சாகப்படுத்த வேண்டியது பள்ளிகளின் இன்றியமையாத கடமை. இதைச் செய்யத் தவறினால், பல மாணவிகளை நாம் இழக்க நேரிடும்.
மனித குலம் உய்த்திட உழைத்த அமெரிக்க நாட்டின் அதிபர் ஆபிரகாம் லிங்கன் ஏழ்மை நிலையில் சிறு வயதில் படிக்க முடியாமல், பதினெட்டு வயதிற்குப் பிறகு, மரப்பட்டைகளில் ஏ, பி, சி, டி எழுதக் கற்றுக் கொண்டு படிப்படியாக உயர்ந்து வழக்குரைஞரானார். 

இப்பேர்ப்பட்ட தன்னம்பிக்கையால் உயர்ந்தோர் வாழ்வை வகுப்புகளில் எடுத்துரைக்கலாம். தோல்விகளை வெற்றியின் படிக்கட்டாகக் கொண்டு முன்னேறிய உயர்ந்த அறிஞர்கள் வாழ்க்கை வரலாற்றைப் பள்ளிகளில் குறும் படங்களாகத் திரையிட்டுக் காட்டி விளக்கலாம்.
பெற்றோர்களும் பிள்ளைகளை தோல்விகளைக் கண்டு அஞ்சாத அளவிற்கு அன்பு காட்டி நடத்த வேண்டும்.

உள்ளத்தில் அஞ்சி நடுங்கும் கோழைகளாக இருப்பவர்கட்குப் பாதுகாப்பு கிடையாது. அஞ்சுவார்க்கு இல்லை அரண் என்பது முதுமொழியன்றோ!
வீரத் துறவி விவேகானந்தர் இளைஞர்களை நோக்கி உம்மால் எதையும் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையும் மனவுறுதியும் இருந்தால் கொடும்பாம்பின் நஞ்சு கூட வலிமையற்றதாகி விடும் என்று முழங்கினார். இவ்வீர உரையை பள்ளிகளில் ஒலிக்கச் செய்ய வேண்டும். உங்களைச் சுற்றிப் பேரிருள் படர்ந்திருந்தாலும் உங்கள் உள்ளத்தில் மட்டும் நம்பிக்கையின் சிறு துளி கீற்றாக இருந்தால் போதும். நீங்கள் என்றாவது ஒரு நாள் வெளிச்சத்திற்கு வந்தே தீருவீர்கள் என்ற வாழ்க்கைப் பாடத்தை அவர்களுக்குக் கற்றுக் கொடுப்போம்.

நம்பிக்கையற்று, பல காரணங்களால் தற்கொலைக்கு முயல்பவர்களும், மாணவ மணிகளும், உறுதியோடு கற்றால், நல்வாழ்வு பெற்று, நல்லோர் போற்ற வாழ்வது திண்ணம். 

மாறி வரும் சூழலுக்கேற்ப கல்வியின் தரத்தை உயர்த்துதல் இன்றியமையாதது. அவ்வாறே, மாணவ மாணவிகள் மன நிலை அறிந்து அதற்கேற்ப அசையா உறுதியும், ஊக்கமும், நம்பிக்கையும் ஊட்டவல்ல கருத்துகளை இனிமையாக எடுத்துரைத்தால் மாணவ மணிகள் வாழ்வில் வளம் பெறுவர். இது போன்ற கோழைத்தனமான செயல்களில் ஈடுபட மாட்டார்கள்.

தன்னம்பிகையுடன் உழைப்பை உயர்த்திப் பிடித்து, விடாமுயற்சியுடன் செயற்பட்டால் வெற்றிச் சிகரத்தில் மாணவ மணிகள் சிறகு விரிக்க முடியும்.
நம்மால் முடியும். நிச்சயம் வாழ்வில் பெற்றி பெறுவோம் என்ற தாரக மந்திரம் அனைவர் மனங்களிலும் காதுகளிலும் எப்போதும் ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment

Fake FB page conducts MU admissions

 Fake FB page conducts MU admissions  13.04.2025 Mumbai : The University of Mumbai has lodged an official complaint with the cyber crime dep...