Friday, September 15, 2017

ஆண்டாள் கோயிலில் நைவேத்தியம் : படி அளக்கும் அன்னை பட்டினி நிறுத்தம்
பதிவு செய்த நாள்15செப்
2017
06:12


ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில், முக்கிய நைவேத்தியங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. படி அளக்கும் அன்னை பட்டினி கிடப்பதாக பக்தர்கள் குமுறுகின்றனர்.

ஆண்டாள் அவதரித்து பெருமாளுக்கு பாமாலையும் பூமாலையும் சூடிக்கொடுத்த பெருமையுடைய தலம் ஸ்ரீவில்லிபுத்துார்.குளிர்விக்கும் நைவேத்தியங்கள்ஆண்டாள் கோயிலுக்கு சொந்தமான ஆயிரம் ஏக்கர் நிலத்தில் இருந்து கிடைக்கும் வருவாயை கொண்டு காலை 6:00 மணிக்கு விஸ்வரூபம். காலை 8:30 மணி காலசந்தி. மதியம் 12:00 மணி உச்சிக்காலம். மாலை 6:00 மணி சாயரட்சை. இரவு 8:00 மணி அத்தாளம். இரவு 9:00 மணி அரவணை என தினமும் ஆறு கால பூஜைகள். வடபத்ர சயனர் சன்னதியில் காலை 7:00 மணி விஸ்வ ரூபம். காலை 9:00 மணி காலசந்தி.மதியம் 12:00 மணி
உச்சிக்காலம். மாலை 6:00 மணி சாயரட்சை. இரவு 8:00 மணி அத்தாளம். இரவு 8:30 மணி அரவணை என தினமும் ஆறு கால பூஜைகள் நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இதனால் வேளாண்மை செழித்து ஓங்கும் என்பது ஐதீகம்.அரசியலும் ஆண்டாள் கோயிலும்கோயில் நிலங்களை அரசியல் கட்சியினர் அபகரிக்கத்துக்கொண்டு வருவாயை வழங்குவது இல்லை. இதனால் பூஜைக்கான செலவுகளை ஈடுகட்ட தனியார் பங்களிப்பை நிர்வாகம் நாடியது. 

சிறப்பு தரிசனம், கட்டண தரிசனம் என நிர்ணயித்து கிடைக்கும் வருவாயில் நைவேத்தியம், பராமரிப்பு செலவுகளை சரி செய்தனர். கோயில் நிலங்களை மீட்கவும், அதன் மூலம் கிடைக்கும் வருவாயை அதிகரிக்கவும் அறநிலையத்துறை எள் முனையளவு கூட முயற்சிக்கவில்லை.

பல கோடி ஊழல் : அறநிலையத்துறை கோயில்களின் வருவாயை கணக்கிட்டு மூன்று பிரிவுகளாக்கினர். ஆண்டுக்கு 2 லட்சம் ரூபாய்க்கும் குறைவான வருவாய் உள்ள கோயில்கள் தரம் ஒன்று. 2 லட்சம் ரூபாய்க்கு மேல் 10 லட்சம் ரூபாய்க்குள் தரம் இரண்டு. 10 லட்சம் ரூபாய்க்கு மேல் தரம் மூன்று என பிரிக்கப்பட்டுள்ளன. மூன்றாம் தரக் கோயில்களுக்கு அறநிலையத்துறை நிதி வழங்காது. அனைத்து செலவுகளும் கோயில் வருவாய் மூலம் நிவர்த்தி செய்யப்படுகிறது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கோயில்கள் வந்த பின் கோயில்களின் நில வருவாய், முடங்கியது. நன்கொடைகளில் பல கோடி ரூபாய் ஊழல் நடக்கிறது.

படி அளக்கும் ஆண்டாள் பட்டினி : கோயிலில் தினசரி நடக்க வேண்டிய அத்தாளம் இரவு 8:00 மணி பூஜை நடக்கவில்லை. தினமும் ஆறுகால பூஜைக்கு, நித்ய ஆராதனை கட்டணமாக பக்தர்கள் ரூ.5000 வீதம் செலுத்துகின்றனர்.இதில் ஆறு வேளை பூஜைக்கு 36 படி (54கி) அரிசி பிரசாதம் அம்மனுக்கு நைவேத்தியம் செய்ய வேண்டும். ஒரு வேளைக்கு 9 கி., அரிசி பிரசாதம் படையல் செய்ய வேண்டும். அத்தாளம் பூஜை 1990 முதல் நிறுத்தப்பட்டுள்ளதால், இத்தனை ஆண்டுகளாக அத்தொகை எங்கே போயிற்று எனத்தெரியவில்லை. மீதி உள்ள ஐந்து வேளையும் ஒரே பிரசாதம் தான் படையல் செய்வதாக புகாரும் உள்ளது. உச்சிகால பூஜையில் முன்பு வழங்கும் சாப்பாடு தற்போது நிறுத்தப்பட்டது. இப்படி படி அளக்கும் அன்னை பசித்திருக்கிறாள். நித்திய ஆராதனை கட்டணம் ஒரு கோடி ரூபாய், வங்கியில் உள்ளது. நைவேத்தியங்கள் தடையின்றி நடக்க தேவையான வருவாய் ஆதாரங்கள் இருக்கிறது. அதை வைத்து முறையாக பூஜை, நைவேத்தியம் நடக்காதது பக்தர்களுக்கு வருத்தம் தருகிறது. நன்கொடை மூலம் நடக்கும் அன்னதானம் 100 பக்தர்க்கு மட்டுமே வழங்கப்படுகிறது. கோயில் நிதியில் இருந்து அதிக பக்தர்களுக்கு வழங்கலாம்.செயல் அலுவலர் சா.ராமராஜா கூறியதாவது: 1975ல் பஞ்சம் ஏற்பட்டது. நைவேத்தியத்திற்கு அரிசி கூட விலைக்கு வாங்கும் நிலை. இதனால் நைவேத்தியம் முழுமையாக நடக்கவில்லை. தற்போது உப கோயில்களான வடபத்ர சயனர், பெரியாழ்வார், கிருஷ்ணன், திருவண்ணாமலை ஸ்ரீநிவாசன், ஸ்ரீரெங்கர், ஸ்ரீகாட்டழகர் கோயில்களில் தினமும் 30 படி அரிசி மூலம் நைவேத்தியம் செய்வித்து பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. உச்சிக்கால பூஜைக்கு பின் அன்னதானம், நித்திய ஆராதனை கட்டணம் மூலம் கிடைக்கும் வட்டி தொகையில் பூஜைகள், பிரசாதங்கள் வழங்கப்படுகிறது. அத்தாள பூஜை ஏற்பாடுகள் நடக்கின்றன, என்றார்.
பாரதியார் பல்கலை., 'செனட்' தேர்தலில் தொடரும் முறைகேடு! : ஒட்டு மொத்தமாக வாங்கி ஓட்டு போட்டதாக புகார்
பதிவு செய்த நாள்15செப்
2017
01:01


கோவை பாரதியார் பல்கலை, 'செனட்' தேர்தலில், ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் குளறுபடி நடந்திருப்பதாக புகார் இருந்த நிலையில், தற்போது ஓட்டுப்பதிவிலும் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கோவை பாரதியார் பல்கலை ஆட்சி மன்றக் குழு - செனட், உறுப்பினர்களை தேர்வு செய்யும் தேர்தல், 27ம் தேதி நடக்கவுள்ளது.
பல்கலை எல்லைக்குட்பட்ட கோவை, திருப்பூர், நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில், பட்டதாரிகள் தொகுதியின் சார்பில், 'செனட்' உறுப்பினர்கள் தலா இருவர் தேர்வு செய்யப்படுவர். இதில் தேர்வாகும் உறுப்பினர்களே, சிண்டிகேட் தேர்தலில் ஓட்டளிக்கவும், போட்டியிடவும் முடியும்.

மொத்தமா போட்டாச்சு : சிண்டிகேட் உறுப்பினர் பதவியைத் தக்க வைக்கவும், மீண்டும் போட்டியிடவும் பலரும் எப்படியாவது, 'செனட்' தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என, தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர். திட்டமிட்டே, சிலரை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதற்காக, வாக்காளர் பட்டியலில் இரட்டைப் பதிவுகள் இருந்ததாக, முதலில் புகார் எழுந்தது. பட்டியலை சரி செய்த பின், தேர்தலை நடத்த வேண்டுமென்றும், தேர்தலை தள்ளி வைக்குமாறும், அனைத்து பல்கலை ஆசிரியர் சங்கம் கோரியது.
அந்த கோரிக்கை ஏற்கப்படவில்லை. இதனால், தேர்தலில் அடுத்தடுத்து முறைகேடுகள் அரங்கேறி வருகின்றன. கோவை மாவட்ட பட்டதாரி தொகுதியில், தற்போதுள்ள சிண்டிகேட் உறுப்பினர்கள் சரவணகுமார், வீரமணி ஆகியோரும், இவர்களை எதிர்த்து சண்முகசுந்தரம், செங்குட்டுவன் ஆகியோரும் போட்டியிடுகின்றனர். இவர்களில், சரவணகுமாரை எப்படியாவது வெற்றி பெற வைக்க, பல்கலை நிர்வாகமே முயற்சி எடுப்பதாக புகார் எழுந்தது. பட்டதாரிகளுக்கு தபாலில் அனுப்பிய ஓட்டுச் சீட்டுகளை மொத்தமாகக் கைப்பற்றி, இவர்கள் இருவருக்கும் ஓட்டு போட்டுள்ளதாக புதிய புகார் எழுந்துள்ளது.

புகார் : தேர்தலுக்கான ஓட்டுச் சீட்டுகள், 7ம் தேதியில் இருந்து வினியோகிக்கப்படுகின்றன. வால்பாறையில் உள்ள பாரதியார் பல்கலை உறுப்புக் கல்லுாரியில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரிகள், 86 பேருக்கு, ஓட்டுச்சீட்டு படிவங்கள், கடிதத்துடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அவற்றை, வால்பாறை கல்லுாரி முதல்வர் ரமேஷ், அலுவலக உதவி யாளர்கள் வித்யா, அருண் விஜய் ஆனந்த் ஆகியோரே வாங்கி, சரவணகுமார், வீரமணிக்கு ஓட்டுப் போட்டு திருப்பி அனுப்பி உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த முறைகேட்டில் ஈடுபட்டோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, பட்டதாரி தொகுதி வாக்காளர் கருணாகரன் என்பவர், துணைவேந்தருக்கு புகார் அனுப்பியுள்ளார். 

வேட்பாளர்களான சண்முகசுந்தரம், செங்குட்டுவன் ஆகியோரும், இந்த முறைகேட்டைக் குறிப்பிட்டு, தேர்தல் அலுவலரிடம் மனு கொடுத்துஉள்ளனர்.

உயர் கல்வித் துறை செயலர் பங்கேற்ற சிண்டிகேட் கூட்டம் நடந்த நிலையில், இந்த புகாரில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதேபோன்று, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான காலக்கெடு முடிந்த பின்னும், ஏராளமான வாக்காளர் பெயர்கள், கோவை மாவட்ட வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டதாகவும் மற்றொரு புகார் உள்ளது.
நீலகிரியில், கூடலுார் உறுப்புக் கல்லுாரியில் மட்டுமே, பல ஆயிரம் மாணவ - மாணவியர் படித்து வெளியேறியுள்ள நிலையில், வெறும், 370 வாக்காளர் பெயர்கள் மட்டும் பட்டதாரி தொகுதியில் பதிவு செய்யப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக பலரும் சந்தேகம் எழுப்பிஉள்ளனர்.

தம்பதி வெற்றி! : நீலகிரி தொகுதியில், தம்பதியான ஜெயபால் - பரமேஸ்வரி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஜெயபால், ஏற்கனவே கவர்னர் நியமனத்தில், சிண்டிகேட் உறுப்பினராகவுள்ளார். அவரது, 'செனட்' பதவிக்காலம் முடிய உள்ளதால், அவர் பட்டதாரி தொகுதியில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பட்டதாரிகளின் பெயர்களை பதிவு செய்ய விடாமல், இருட்டடிப்பு நடந்ததன் பின்னணி, இது தான் என்று குமுறுகின்றனர், நீலகிரி பட்டதாரிகள். இவ்வாறு, பலவிதமான முறைகேடுகளும், 'செனட்' தேர்தலில் அடுத்தடுத்து அரங்கேறி வருவதால், தேர்தலை ரத்து செய்து, மீண்டும் நடத்த வேண்டுமென்ற கோரிக்கை வலுத்து வருகிறது. ஆனால், குறிப்பிட்ட சிலரது, 'சிண்டிகேட்' உறுப்பினர் பதவியைக் காப்பாற்ற வேண்டுமென்ற ஒரே காரணத்துக்காக, பல்வேறு முறைகேடுகளுடன், 'செனட்' தேர்தல் நடந்து வருகிறது. இவற்றை, தமிழக உயர் கல்வி துறை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

- நமது சிறப்பு நிருபர் -
சிக்னலில் நீண்ட நேரம் நிற்பதா? : மறியலில் ஈடுபட்ட பயணியர்
பதிவு செய்த நாள்15செப்
2017
00:50




அரக்கோணம்: சிக்னலில் நீண்ட நேரமாக ரயில் நிற்பதை கண்டித்து, மறியலில் ஈடுபட்ட பயணியரை, ரயில்வே போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். ஆந்திரா மாநிலம் திருப்பதியில் இருந்து, அரக்கோணம் வழியாக, சென்னைக்கு தினமும் காலை, 7:40 மணிக்கு, பாசஞ்சர் ரயில் இயக்கப்படுகிறது. அதே போல், காலை, 6:25 மணிக்கு சென்னையில் இருந்து திருப்பதிக்கு சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது.

நடவடிக்கை இல்லை : இந்த, இரண்டு ரயில்களும், வேலுார் மாவட்டம், அரக்கோணம் அடுத்த மங்கம்மாபேட்டையில் உள்ள சிக்னலில், தினமும், 40 நிமிடம் வரை நிறுத்தப்படுகிறது. 

இதனால் வேலைக்கு செல்வோர், கல்லுாரி, பள்ளி மாணவ - மாணவியர் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து ரயில்வே நிர்வாகத்திடம் பயணியர் பல முறை புகார் செய்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.இந்நிலையில், நேற்று காலை, 7:40 மணிக்கு, மங்கம்மாபேட்டை சிக்னலில், வழக்கம் போல், இரண்டு ரயில்களும் நிறுத்தப்பட்டன. 

இதனால் ஆத்திரம் அடைந்த பயணியர், காலை, 8:00 மணிக்கு, இரண்டு ரயில்களையும் மறித்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது சிலர், ரயில் இன்ஜின் மீது ஏறி, ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து கோஷமிட்டனர். அரக்கோணம் ரயில்வே போலீசார், மறியல் செய்த பயணியரிடம் பேச்சு நடத்தினர். இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த பேச்சில், பயணியர் ஏற்க மறுத்து, ரயில் மறியலில் தொடர்ந்து ஈடுபட்டனர்.

3 மணி நேர தாமதம் : இதனால் ரயில்வே போலீசார், தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். பின், இரண்டு ரயில்களும், மூன்று மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றன. 

இதனால் திருத்தணி - சென்னை மார்க்கத்தில் சென்ற மின்சார ரயில்கள் தாமதமாக சென்றன.
ஆறு மருத்துவ கல்லூரிகளுக்கு ஆயுஷ் அமைச்சகம் அனுமதி
பதிவு செய்த நாள்15செப்
2017
01:32

சென்னை: மதுரை, அரசு ஓமியோபதி மருத்துவக் கல்லுாரி உட்பட, ஆறு இந்தியமுறை மருத்துவக் கல்லுாரிகளுக்கு, இந்தாண்டு மாணவர் சேர்க்கைக்கு, ஆயுஷ் அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது.

 தமிழகத்தில், சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவ படிப்புகளை நடத்தும், ஆறு அரசு மருத்துவக் கல்லுாரிகள், 22 சுயநிதி மருத்துவக் கல்லுாரிகள் உள்ளன. 

இதில், ஐந்து அரசு மருத்துவக் கல்லுாரிகள் மற்றும், 15 சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளுக்கு, ஆயுஷ் அமைச்சகம் ஏற்கனவே அனுமதியளித்துள்ளது. அதேநேரத்தில், மதுரை, அரசு ஓமியோபதி மருத்துவக் கல்லுாரி உட்பட, எட்டு மருத்துவக் கல்லுாரிக்கு அனுமதி வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள கட்டமைப்பு மற்றும் பேராசிரியர் வசதிகள் அடிப்படையில், மதுரை அரசு ஓமியோபதி மருத்துவக் கல்லுாரியில், 50 இடங்களுக்கான மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி கிடைத்து உள்ளது. மேலும், ஐந்து சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளில், 300 இளநிலை; 21 முதுநிலை படிப்புகளுக்கும், இந்தாண்டு மாணவர் சேர்க்கைக்கு, நிபந்தனையுடன் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.கோவையில் உள்ள, இரண்டு சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளில், இந்தாண்டில், மாணவர் சேர்க்கை நடத்த அரசு தடை விதித்து உள்ளது.
சிலம்பு எக்ஸ்பிரஸ் வேகம் அதிகரிப்பு

பதிவு செய்த நாள்14செப்
2017
23:44

சென்னை: சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலின் வேகம் அதிகரிக்கப்பட்டு உள்ளதால், வழக்கமான நேரத்தை விட, 50 நிமிடங்கள் முன்னதாக, செங்கோட்டை சென்றடையும்.

சென்னை எழும்பூரில் இருந்து, புதன் மற்றும் சனி தோறும், செங்கோட்டைக்கு, சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. நாளை முதல், இதன் வேகம் அதிகரிக்கப்பட்டு உள்ளது. அதனால், எழும்பூரில் இருந்து, இரவு, 8:20 மணிக்கு புறப்படும் ரயில், செங்கோட்டைக்கு, காலை, 10:10 மணிக்கு செல்வதற்கு பதிலாக, 50 நிமிடங்கள் முன்னதாக, காலை, 9:20 மணிக்கு சென்றடையும்.
அதே நேரத்தில், செங்கோட்டையில் இருந்து, எழும்பூருக்கு இயக்கப்படும் சிலம்பு எக்ஸ்பிரஸ் நேரத்தில் மாற்றமில்லை என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.



தூய்மையான கல்லூரிகள் தமிழகம் புதிய சாதனை

பதிவு செய்த நாள்
செப் 14,2017 22:43



புதுடில்லி: தேசிய அளவில் தேர்வு செய்யப்பட்ட, துாய்மையான உயர் கல்வி நிறுவனங்கள் பட்டியலில், முதல், 25 இடங்களில், 12 இடங்களை தமிழகத்தைச் சேர்ந்த கல்லுாரிகள் பெற்றுள்ளன.

துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், 2017ம் ஆண்டுக்கான, துாய்மையான தனியார் பல்கலை, கல்லுாரி, தொழில் நுட்ப கல்வி நிறுவனங்களை, மத்திய அரசின், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை தேர்வு செய்துள்ளது. நாடு முழுவதும் இருந்து, 3,500 கல்வி நிறுவனங்கள் விண்ணப்பித்தன.
இதில், துாய்மையான, முதல், 25 உயர் கல்வி நிறுவனங்கள் பெயர் பட்டியலை, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, பிரகாஷ் ஜாவடேகர், டில்லியில் நேற்று வெளியிட்டார். இதில், 12 இடங்களை தமிழகத்தைச் சேர்ந்த, உயர் கல்வி நிறுவனங்கள் பிடித்துள்ளன.

துாய்மையான கல்லுாரிகள் பட்டியலில், ஈரோட்டிலுள்ள, கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, முதலிடம் பிடித்தது. தொழில் நுட்ப கல்லுாரிகள் பட்டியலில், கோவை, அம்ரிதா விஷ்வா வித்யாபீடம், முதலிடம் பிடித்தது.
வியட்நாமில் இன்று புயல் எச்சரிக்கை
பதிவு செய்த நாள்15செப்
2017
06:35




ஹனாய்: வியட்நாமில் 'டோக்சுரி' என்ற சக்தி வாய்ந்த புயல் இன்று(செப்.,15) கரையைக் கடக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு ஆசிய நாடு வியட்நாம். இங்குள்ள ஹா டிங் மாகாணத்தில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவில், 'டோக்சுரி என்ற புயல் மணிக்கு 155 கி.மீ., வேகத்தில் இன்று கரையைக் கடக்கும்' என அந்நாட்டு பேரிடர் மேலாண்மை மையம் எச்சரித்துள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, புயலால் ஏற்படும் மழையால் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் இருந்து 47 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடத்துக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

மீனவர்கள் கடலுக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. மீட்பு பணிக்காக 2,50,000 வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மே முதல் அக்டோபர் வரை ஆண்டுதோறும் வியட்நாம், புயலால் பாதிப்புக்குள்ளாகிறது.

NEWS TO DAY 16.07.2026