Friday, September 15, 2017

பாரதியார் பல்கலை., 'செனட்' தேர்தலில் தொடரும் முறைகேடு! : ஒட்டு மொத்தமாக வாங்கி ஓட்டு போட்டதாக புகார்
பதிவு செய்த நாள்15செப்
2017
01:01


கோவை பாரதியார் பல்கலை, 'செனட்' தேர்தலில், ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் குளறுபடி நடந்திருப்பதாக புகார் இருந்த நிலையில், தற்போது ஓட்டுப்பதிவிலும் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கோவை பாரதியார் பல்கலை ஆட்சி மன்றக் குழு - செனட், உறுப்பினர்களை தேர்வு செய்யும் தேர்தல், 27ம் தேதி நடக்கவுள்ளது.
பல்கலை எல்லைக்குட்பட்ட கோவை, திருப்பூர், நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில், பட்டதாரிகள் தொகுதியின் சார்பில், 'செனட்' உறுப்பினர்கள் தலா இருவர் தேர்வு செய்யப்படுவர். இதில் தேர்வாகும் உறுப்பினர்களே, சிண்டிகேட் தேர்தலில் ஓட்டளிக்கவும், போட்டியிடவும் முடியும்.

மொத்தமா போட்டாச்சு : சிண்டிகேட் உறுப்பினர் பதவியைத் தக்க வைக்கவும், மீண்டும் போட்டியிடவும் பலரும் எப்படியாவது, 'செனட்' தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என, தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர். திட்டமிட்டே, சிலரை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதற்காக, வாக்காளர் பட்டியலில் இரட்டைப் பதிவுகள் இருந்ததாக, முதலில் புகார் எழுந்தது. பட்டியலை சரி செய்த பின், தேர்தலை நடத்த வேண்டுமென்றும், தேர்தலை தள்ளி வைக்குமாறும், அனைத்து பல்கலை ஆசிரியர் சங்கம் கோரியது.
அந்த கோரிக்கை ஏற்கப்படவில்லை. இதனால், தேர்தலில் அடுத்தடுத்து முறைகேடுகள் அரங்கேறி வருகின்றன. கோவை மாவட்ட பட்டதாரி தொகுதியில், தற்போதுள்ள சிண்டிகேட் உறுப்பினர்கள் சரவணகுமார், வீரமணி ஆகியோரும், இவர்களை எதிர்த்து சண்முகசுந்தரம், செங்குட்டுவன் ஆகியோரும் போட்டியிடுகின்றனர். இவர்களில், சரவணகுமாரை எப்படியாவது வெற்றி பெற வைக்க, பல்கலை நிர்வாகமே முயற்சி எடுப்பதாக புகார் எழுந்தது. பட்டதாரிகளுக்கு தபாலில் அனுப்பிய ஓட்டுச் சீட்டுகளை மொத்தமாகக் கைப்பற்றி, இவர்கள் இருவருக்கும் ஓட்டு போட்டுள்ளதாக புதிய புகார் எழுந்துள்ளது.

புகார் : தேர்தலுக்கான ஓட்டுச் சீட்டுகள், 7ம் தேதியில் இருந்து வினியோகிக்கப்படுகின்றன. வால்பாறையில் உள்ள பாரதியார் பல்கலை உறுப்புக் கல்லுாரியில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரிகள், 86 பேருக்கு, ஓட்டுச்சீட்டு படிவங்கள், கடிதத்துடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அவற்றை, வால்பாறை கல்லுாரி முதல்வர் ரமேஷ், அலுவலக உதவி யாளர்கள் வித்யா, அருண் விஜய் ஆனந்த் ஆகியோரே வாங்கி, சரவணகுமார், வீரமணிக்கு ஓட்டுப் போட்டு திருப்பி அனுப்பி உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த முறைகேட்டில் ஈடுபட்டோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, பட்டதாரி தொகுதி வாக்காளர் கருணாகரன் என்பவர், துணைவேந்தருக்கு புகார் அனுப்பியுள்ளார். 

வேட்பாளர்களான சண்முகசுந்தரம், செங்குட்டுவன் ஆகியோரும், இந்த முறைகேட்டைக் குறிப்பிட்டு, தேர்தல் அலுவலரிடம் மனு கொடுத்துஉள்ளனர்.

உயர் கல்வித் துறை செயலர் பங்கேற்ற சிண்டிகேட் கூட்டம் நடந்த நிலையில், இந்த புகாரில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதேபோன்று, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான காலக்கெடு முடிந்த பின்னும், ஏராளமான வாக்காளர் பெயர்கள், கோவை மாவட்ட வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டதாகவும் மற்றொரு புகார் உள்ளது.
நீலகிரியில், கூடலுார் உறுப்புக் கல்லுாரியில் மட்டுமே, பல ஆயிரம் மாணவ - மாணவியர் படித்து வெளியேறியுள்ள நிலையில், வெறும், 370 வாக்காளர் பெயர்கள் மட்டும் பட்டதாரி தொகுதியில் பதிவு செய்யப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக பலரும் சந்தேகம் எழுப்பிஉள்ளனர்.

தம்பதி வெற்றி! : நீலகிரி தொகுதியில், தம்பதியான ஜெயபால் - பரமேஸ்வரி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஜெயபால், ஏற்கனவே கவர்னர் நியமனத்தில், சிண்டிகேட் உறுப்பினராகவுள்ளார். அவரது, 'செனட்' பதவிக்காலம் முடிய உள்ளதால், அவர் பட்டதாரி தொகுதியில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பட்டதாரிகளின் பெயர்களை பதிவு செய்ய விடாமல், இருட்டடிப்பு நடந்ததன் பின்னணி, இது தான் என்று குமுறுகின்றனர், நீலகிரி பட்டதாரிகள். இவ்வாறு, பலவிதமான முறைகேடுகளும், 'செனட்' தேர்தலில் அடுத்தடுத்து அரங்கேறி வருவதால், தேர்தலை ரத்து செய்து, மீண்டும் நடத்த வேண்டுமென்ற கோரிக்கை வலுத்து வருகிறது. ஆனால், குறிப்பிட்ட சிலரது, 'சிண்டிகேட்' உறுப்பினர் பதவியைக் காப்பாற்ற வேண்டுமென்ற ஒரே காரணத்துக்காக, பல்வேறு முறைகேடுகளுடன், 'செனட்' தேர்தல் நடந்து வருகிறது. இவற்றை, தமிழக உயர் கல்வி துறை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

- நமது சிறப்பு நிருபர் -

No comments:

Post a Comment

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள...

DINAMANI வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்...