Wednesday, November 1, 2017


'ஒரு நகரம் ஒரே டிக்கெட்': ரயில், பேருந்து எல்லாவற்றுக்கும் ஒரே ஒரு டிக்கெட்டா? 

By DIN  |   Published on : 31st October 2017 03:11 PM  | 
ticket_counter


மும்பை: ஒரு நகரம், ஒரு டிக்கெட் என்ற திட்டம், இந்தியாவில் முதல் முறையாக மும்பை மாநகரில் டிசம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இதன் மூலம், அலுவலகத்துக்கோ அல்லது பிற பயணங்களின் போதோ, ஒவ்வொரு போக்குவரத்து சேவைக்கும் தனித்தனியாக டிக்கெட் எடுக்காமல், ரயில் மற்றும் பேருந்துக்கு அல்லது பேருந்து மற்றும் டாக்ஸிக்கு ஒரே ஒரு ஸ்மார்ட் கார்டு வைத்திருந்தால் போதும் என்கிறார்கள் அதிகாரிகள்.
ரயிலில் போக ஸ்டேஷனில் டிக்கெட் எடுத்தாலே குளறுபடி செய்கிறார்களே இது எப்படி சாத்தியம் என்று கேட்பவர்களுக்காக இதோ முழு விவரம்..
பல்வேறு கட்டப் பணிகள் முடிந்து ஒரு வழியாக மும்பை மாநகரம், அனைத்து விதமான போக்குவரத்துக்கும் ஒருங்கிணைக்கப்பட்ட டிக்கெட் வழங்கும் திட்டத்தை முதற்கட்டமாக அறிமுகப்படுத்துகிறது. இது குறித்து மும்பை மாநகர  மேம்பாட்டுக் கழக அதிகாரிகள் கூறுகையில், மும்பைக்கான சிறப்பு திட்டம் டிசம்பர் மாதத்தில் தொடங்கும் என்றனர்.
மும்பை மாநகர் பகுதிக்கான திட்டத்தை வடிவமைக்கும் சிறப்புக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு பல்வேறு நாடுகளில் தற்போது பயன்பாட்டில் இருக்கும் ஒரே டிக்கெட் முறையை எவ்வாறு செயல்படுத்துகிறார்கள் என்பதை ஆராய்ந்து, மும்பைக்கான திட்டத்தைக் கொண்டு வருகிறது.
இந்த திட்டத்தில், புறநகர் ரயில் சேவை, பிரிஹன் மும்பை எலக்ட்ரிக் சப்ளை மற்றும் டிரான்ஸ்போர்ட்-ன்(BEST) பேருந்து சேவை,செம்புர் - வடாலா - ஜேகோப் சர்கிள் மோனோ ரயில் சேவை ஆகியவை இணைக்கப்படும்.
இந்த திட்டத்தில் பயணிகள் ஸ்மார்ட் கார்டு வசதியுடன் அனைத்து போக்குவரத்து சாதனங்களையும் பயன்படுத்த அனுமதிக்கப்படுவார்கள். இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸ் ஆர்வம் காட்டி வருகிறார்.
இந்த திட்டத்தின் படி, அனைத்து மெட்ரோ சேவையையும் முதலில் ஒன்றிணைக்கப் போகிறோம். இந்த சேவையில் ஏற்கனவே தானியங்கி கதவுகள் இருப்பது திட்டத்தை செயல்படுத்த வசதியாகியுள்ளது.
அனைத்து மெட்ரோ சேவைகளையும் ஒன்றிணைத்த பிறகு, அதனுடன் பேருந்து சேவை இணைக்கப்படும். அதற்காக தற்போது பேருந்து டிக்கெட் முறையில் புதிய தொழில்நுட்பத்தை மாற்றும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
அதன்பிறகுதான் ரயில் சேவையை இணைக்க முடியும். ஏன் என்றால் அதிகப்படியான உள்கட்டமைப்புகளை இதற்காக மாற்ற வேண்டும். தானியங்கி கதவு கொண்ட ரயில் நிலையங்கள், ரயில்களைக் கொண்டு வருவது போன்றவை இந்த திட்டத்தின் இறுதி கட்டத்தில் செய்து முடிக்கப்படும்.
டிரான்ஸ்போர்ட் ஃபார் லண்டனில் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு மும்பையில் இந்த திட்டம் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

‘செண்பகமே... செண்பகமே’  பாடல் புகழ் நிஷாந்தி இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்?!


By சரோஜினி  |   Published on : 31st October 2017 05:45 PM  
000000000_nishanthi
Ads by Kiosked

தமிழ் ரசிகர்களுக்குப் பானுப்ரியாவை ஞாபகமிருக்கக் கூடும். பானுப்ரியாவுக்கு சாந்திப்ரியா @ நிஷாந்தி என்ற பெயரில் ஒரு தங்கை இருந்தாரே அவரை நினைவிருக்கிறதா? அவர் உங்கள்நினைவிலிருந்தாலும் இல்லாவிட்டாலும் கூட அவர் நடித்த திரைப்படங்களில் இடம்பெற்ற நினைவை விட்டு நீங்காத சில சாகாவரம் பெற்ற பாடல்கள் ராஜாவின் இசை உள்ள வரை நம் எல்லோருக்குமே
எப்போதும் நினைவிலிருக்கும். யோசித்துப் பாருங்கள்...
எங்க ஊரு பாட்டுக்காரன் திரைப்படத்தில் ராஜா இசையில், ஆஷா போஸ்லே பாடிய செண்பகமே, செண்பகமே பாடல் யாருக்காவது மறக்குமா என்ன? அதே... அதே!
நிஷாந்தி தமிழில் சில திரைப்படங்களில் நடித்தார், பிறகு டோலிவுட் பக்கம் சென்றவர் அப்படியே பாலிவுட்டுக்குப் பிளைட் பிடித்து சென்று செட்டிலானவர் தான் பிறகு தமிழ் பக்கம் வரவே இல்லை.
பாலிவுட்டில் நடித்துக் கொண்டிருந்த போது பிரபல பாலிவுட் பட அதிபர், தயாரிப்பாளர் கம் நடிகரான வி.சாந்தாராமின் பேரனான சித்தார்த்ராயைத் திருமணம் செய்து கொண்டு நடிப்புக்கு முழுக்குப் போட்டு விட்டு இரு மகன்களைப் பெற்றெடுத்தார் சாந்திப்ரியா @ நிஷாந்தி. வாழ்க்கை அப்படியே சென்று கொண்டிருந்தால் ஒரு தெளிந்த நீரோடையாகத்தான் இருந்திருக்கக் கூடும். ஆனால் வாழ்க்கை எப்போதும் தெளிந்த நீரோடையாக மட்டுமே இருந்து விடுவதில்லையே! நிஷாந்தியின் வாழ்விலும் அப்படியோர் சோதனை வந்தது. தனது கணவர் சித்தார்த் ராயை 2004 ஆம் ஆண்டில் ஒரு ஹார்ட் அட்டாக்கில் பறிகொடுத்தார். இப்போது தன் இரு மகன்களுடன் மும்பையில் வசிக்கும் நிஷாந்தி தனது கணவரது குடும்பத்துக்குச் சொந்தமான ‘ராஜ்கமல்’ ஸ்டுடியோவின் நிர்வாக வேலையில் பங்கெடுத்துக் கொண்டு வருவதாக டோலிவுட் பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்ல, தமிழ், தெலுங்கு, இந்தி எந்த மொழியானாலும் சரி நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்தால் தற்போது அதை ஏற்றுக் கொண்டு செய்ய தனக்கு நிறைய அவகாசம் இருப்பதால் நடிப்பதிலும் ஆர்வம் செலுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.
அக்கா பானுப்ரியா போலவே நிஷாந்தியும் இப்போது அம்மா, அக்கா, அண்ணி, அல்லது சிறப்பு குணச்சித்திர வேடங்கள் என எதில் நடிக்கவும் ஆர்வமாக இருக்கிறார். ஆனால் ஒரே ஒரு கண்டீஷன்... அவருக்கான கதாபாத்திரம் வெறுமே திரையில் வந்து செட் பிராப்பர்ட்டி போல நின்று விட்டுச் செல்வதாக இருக்கக் கூடாது. நடிப்புத் திறனை வெளிப்படுத்த வாய்ப்புள்ள வேடங்கள் எனில் இளம் இயக்குனர்கள் நிஷாந்தியை அணுகலாம். அவர் நடிக்கத் தயார். என நிஷாந்தியே தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.

நடிகை அமலாபால் கார் வாங்கியதில் துறை ரீதியில் எந்த தவறும் இல்லை: போக்குவரத்து அமைச்சர் ஷாஜஹான்


By பா.சுஜித்குமார்  |   Published on : 31st October 2017 08:17 PM  
புதுச்சேரி:  நடிகை அமலாபால் கார் வாங்கியதில் துறைரீதியில் எந்த தவறும் நடைபெறவில்லை என போக்குவரத்து அமைச்சர் எப்.ஷாஜஹான் தெரிவித்துள்ளார்.

அவர் செவ்வாய்க்கிழமை இரவு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கர்நாடகத்தில் பென்ஸ்கார் வாங்கிய நடிகை அமலாபால் அதற்கு சட்டரீதியாக தற்காலிக பதிவெண் பெற்று புதுச்சேரிக்கு எடுத்து வந்து 8.8.2017ல் விண்ணப்பத்தை  சமர்ப்பித்தார். போக்குவரத்துத்துறை சட்டவிதிகள் படி ஒருவர் ஒரு வாகனத்தை பதிவு செய்ய கீழ்கண்டவற்றை  வாக்காளர் அட்டை, எல்ஐசி பாலிசி, கடவுச்சீட்டு, பள்ளி சான்று, பிறப்புச் சான்று, பிரமாண பத்திரம் ஆதாரங்களாக தாக்கல் செய்யலாம். இது இருப்பிடத்தை உறுதி செய்யும்.

அமலாபால், தனது கையெழுத்துடன் கூடிய பத்திரத்தை தாக்கல் செய்தார். திலாசுபேட்டையில் வாடகை வீட்டில் இருப்பதற்கான இருப்பிடச் சான்று தாக்கல் செய்துள்ளார். அத்துடன் எல்ஐசி பாலிசியும் இம்முகவரியில் இருந்து தந்துள்ளார்.

இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் வாகனம் வாங்கலாம். அதில் போக்குவரத்து விதிப்படி தடையில்லை. கர்நாடகத்தில் வாகனம் வாங்கி தற்காலிக பதிவெண் பெற்று புதுச்சேரியில் நிரந்தர பதிவெண் பெற்றார். இங்கிருந்து வேறொரு மாநிலத்துக்கு சென்றால் அந்த மாநிலத்தில் பதிவெண் பெற ஓராண்டுக்கு கால அவகாசம் உள்ளது.

தற்போது எஸ்எஸ்பி ராஜீவ்ரஞ்சன் தலைமையில் போலீஸôர் அந்த இருப்பிடத்தில் சென்று விசாரித்தனர். அதில் தவறு இல்லை என்று தெரிந்தது. துறை ரீதியாக ஊழல் தவறு நடக்கவில்லை. சட்டரீதியாக நடந்துள்ளது.

கேரள அரசு தகவல் கேட்டால் தர தயாராக இருக்கிறோம். ஆனால் இதுவரை யாரும் கேட்கவில்லை. இதில் தவறே நடக்கவில்லை. விதிமுறைப்படிதான் நடந்துள்ளது. ஓராண்டுக்குள் பதிவெண் பெறாவிட்டால் அந்த மாநிலம் தான் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ஆளுநர் தவறு நடந்ததாக எதை கூறுகிறார். ஆவணங்களை தாக்கல் செய்தவுடன் அதை சரிபார்த்து பதிவு செய்து வருகிறோம். யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் பதிவு செய்யலாம். ஆளுநர் எந்த நோக்கில் குற்றம் சாட்டினார் தெரியவில்லை. அனைத்து ஆவணங்களும் இருக்கின்றன. அமலாபால் வாகனம் பதிவு செய்து இரண்டரை மாதங்கள் மட்டுமே ஆகிறது. மேலும் 8 மாதங்களுக்கு மேல் கால அவகாசம் இருக்கிறது.

புதுச்சேரியில் வரி குறைவு என்பது அந்தந்த மாநிலம் எடுக்கும் முடிவு. பெட்ரúôல், டீசல், மதுபானங்கள் இங்கு விலை குறைவு. மாநில வருவாய்க்காக வரியை குறைத்து வைத்துள்ளோம். அதில் தவறு இல்லை. வரி உள்ளூர், வெளியூர் என்று இல்லை. சாலை வரி ஜிஎஸ்டியில் வரவில்லை. வரியை நிர்ணயிக்க அரசுக்கு சுதந்திரமுள்ளது.

பெட்ரோல், டீசல் விற்பனை அதிகளவு உள்ளது . வெளிமாநில வாகனங்களும் இங்கு நிரப்பி செல்கின்றனர். அது தவறு என கூற இயலாது. போலி முகவரி என்று ஆதாரம் இருந்தால் நடவடிக்கை எடுப்போம். ஆனால், அமலாபால் விவகாரத்தில் தங்கும் இடத்துக்கான சான்று தரப்பட்டுள்ளது. முகவரி பரிசோதனை போக்குவரத்துத்துறை செய்ய இயலாது.  ஆர்டிஓ வாகனம் பதிவு செய்வோர் முகவரியை ஆய்வு செய்ய வேண்டியதில்லை.

மத்திய அரசின் சட்டப்படியே செயல்படுகிறோம். முகவரியில் ஆதார் இணைக்க வேண்டும் போக்குவரத்து சட்டவிதியில் இல்லை. அவ்வாறு மத்திய அரசு உத்தரவிட்டால் அதை செய்ய தயாராக இருக்கிறோம். மாதம் தோறும் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட 2 சக்கர வாகனங்களும், 650 கார்களுக்கும் பதிவெண் பெறப்படுகிறது. ஆம்னி பஸ்களுக்கு ஒரு இருக்கைக்கு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஒரு இருக்கைக்கு ரூ. 1200 செலுத்த வேண்டும். ஆம்னி பஸ்கள் மாதம் எவ்வளவு பர்மிட் பெறப்படுகிறது என்ற தகவல் தற்போது இல்லை. ஆளுநரிடம் 15 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்வோம்.

தவறு நடந்ததாக மாயை. தவறு நடக்கவில்லை.  தனிப்பட்ட முறையில் அவருடன் மோதலில்லை. இதுதொடர்பான முழு தகவல்கள் கேட்டால் தருவோம் என்றார் ஷாஜஹான்.

உணவின்றி, 96 வயது தாயை வீட்டுக்குள் வைத்துப் பூட்டிவிட்டு சுற்றுலா சென்ற மகன்

By DIN  |   Published on : 31st October 2017 11:40 AM 
oldage


கொல்கத்தா: கொல்கத்தாவை அடுத்த அனந்தாபுர் பகுதியில் வசித்து வந்த பிகாஷ், தனது 96 வயது தாயை 4 நாட்களாக உணவின்றி, வீட்டுக்குள் வைத்துப் பூட்டிவிட்டு அந்தமானுக்கு சுற்றுலா சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அனந்த்புர் பகுதியைச் சேர்ந்த சபிதா நாத் (96) தனது மூத்த மகன் பிகாஷுடன் வசித்து வந்தார். இந்த நிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன்பு சபிதா உறங்கிக் கொண்டிருக்கும் போது, அவரது அறையை பூட்டிவிட்டு மகன் வெளியே சென்றுவிட்டார்.
தொடர்ந்து 4 நாட்களுக்கும் மேல் அவர் உணவின்றி பூட்டிய அறையில் இருந்துள்ளார். கடந்த ஞாயிறன்று சபிதாவின் மகள், தாயைக் காண வீட்டுக்கு வந்த போது வீடு வெளியே பூட்டியிருந்தது. ஆனால், வீட்டுக்குள் இருந்து சத்தம் கேட்டதால், அக்கம் பக்கத்தினர் மற்றும் காவல்துறை உதவியோடு வீட்டுக்குள் நுழைந்தார்.
அங்கு உணவின்றி, சோர்ந்த நிலையில் இருந்த சபிதாவைப் பார்த்ததும் மகள் ஜெயஸ்ரீ கதறி அழுதார். 
அப்போதுதான், கடந்த புதன்கிழமை இரவு, தனது தாயை வீட்டுக்குள் பூட்டிவிட்டு, விடுமுறையைக் கழிக்க பிகாஷ் அந்தமான் - நிக்கோபார் சென்று விட்டது தெரிய வந்தது.
இது குறித்து சபிதா கூறுகையில், நான் உறங்கிக் கொண்டிருந்தேன். அப்போது கதவை வெளியில் இருந்து பூட்டிவிட்டுச் சென்று விட்டான். சாவியை வேலைக்காரியிடம் கொடுத்துவிட்டுச் சென்றான். மறுநாள் வேலைக்காரி வந்து எனக்கு உணவளித்துவிட்டு மீண்டும் வீட்டைப் பூட்டிவிட்டுச் சென்று விட்டார். ஆனால் அதன் பிறகு அவள் வரவேயில்லை. இந்த சிறிய அறைக்குள் இருந்தது எனக்கு மிகவும் மூச்சுத்திணறலை ஏற்படுத்தியது. 2 முறை வாந்தி எடுத்தேன். பிறகுதான் தெரிந்தது. அவன் அந்தமானுக்கு சுற்றுலா சென்றது" என்கிறார்.
வீட்டில் இருந்து மீட்கப்பட்ட தனது தாயை ஜெயஸ்ரீ, தன்னுடன் அழைத்துச் சென்றுவிட்டார். சபிதாவுக்கு 5 மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர்.

    மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனம்: ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய உத்தரவு


    By DIN  |   Published on : 01st November 2017 01:15 AM  
    chennai high court
    மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வரும் 13 பேரை 4 மாத காலத்துக்குள் பணி நிரந்தரம் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
    சென்னையில் கடந்த 2007 -ஆம் ஆண்டு மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் பேராசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் கடந்த 2012 -ஆம் ஆண்டு செம்மொழி தமிழாய்வு நிறுவனம் பேராசிரியர், விரிவுரையாளர் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகப் பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை வரவேற்று அறிவிப்பாணை வெளியிட்டது.
    பணி நிரந்தரம் கோரி... இந்த அறிவிப்பாணையை ரத்து செய்யக் கோரியும், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரியும் ஆரோக்கியதாஸ் என்பவர் உள்பட 13 பேர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
    இந்த வழக்கு நீதிபதி வி.பார்த்திபன் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர், 'இந்த 13 பேரும் தேர்வுக் குழுவினரால் முறையாக தேர்வு செய்யப்பட்டு, கடந்த 2007 -ஆம் ஆண்டு முதல் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களை நீக்கிவிட்டு புதியவர்களை அந்த இடத்துக்குக் கொண்டு வரவே அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. எனவே, 13 பேரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்' என வாதிட்டார்.
    செம்மொழி நிறுவனம் தரப்பில்... செம்மொழி தமிழாய்வு நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், 'மனுதாரர்களைப் பணியில் நியமிக்கும்போது இந்த பணியிடங்களுக்காக ஒப்புதல் பெறவில்லை. மேலும் அப்போது முறையான தேர்வு விதிகளும் வகுக்கப்படாததால், சட்ட அங்கீகாரமும் இல்லை என்பதால் அவர்களைப் பணி நிரந்தரம் செய்ய முடியாது' என வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, 'மனுதாரர்களின் பணி நியமனம் சட்டவிரோதமானது அல்ல. அந்த 13 பேரும் முறையாகத்தான் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். புதிதாக கொண்டு வந்துள்ள பணி நியமன விதிகளைக் காரணம்காட்டி அவர்களின் உரிமையைப் பறிக்க முடியாது. 
    தாற்காலிக பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்வது குறித்து கடந்த ஜனவரி மாதமே மத்திய அரசு, செம்மொழி தமிழாய்வு நிறுவனத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளது. எனவே, இந்த 13 பேரையும் பணி நிரந்தரம் செய்ய எந்தத் தடையும் இல்லை. இவர்களை 4 மாத காலத்துக்குள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்' எனக் கூறி, கடந்த 2012 - ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிவிப்பாணையை ரத்து செய்து உத்தரவிட்டார்.

    தமிழகத்துக்கு 4 விரைவு ரயில்கள் அறிமுகம்


    By DIN  |   Published on : 01st November 2017 01:06 AM  
    தமிழகத்துக்கு 4 விரைவு ரயில்கள் இந்தாண்டு அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. தமிழகத்தில் முன்பதிவில்லா விரைவு ரயில்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளன. புதிய ரயில்கள் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்துக்குள்ளாக பயன்பாட்டுக்கு வரும்.
    புதிய விரைவு ரயில்கள்:
    பகத் கி கோத்தி (ராஜஸ்தான்) - தாம்பரம் வாராந்திர ஹம்சவர் விரைவு ரயில்
    ரயில் எண் 14815/15816: ராஜஸ்தான் மாநிலம் பகத் கி கோத்தி ரயில் நிலையத்தில் இருந்து ஒவ்வொரு புதன்கிழமை பிற்பகல் 3.20 மணிக்குப் புறப்பட்டு வெள்ளிக்கிழமை காலை 10.45 மணிக்கு எழும்பூர் வந்தடையும். அதேபோல, ஒவ்வொரு வெள்ளிக்கிழமை இரவு 7.15 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணிக்கு பகத் கி கோத்தி ரயில் நிலையத்துக்கு சென்றடையும். 
    தாம்பரம் - திருநெல்வேலி தினசரி முன்பதிவில்லா விரைவு ரயில்
    ரயில் எண் 16191: தாம்பரத்தில் இருந்து நள்ளிரவு 12.30 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 3.30 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். 
    ரயில் எண் 16192: திருநெல்வேலியில் இருந்து மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.45 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
    இந்த ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், கொடைக்கானல் சாலை, மதுரை, விருதுநகர், கோவில்பட்டி ரயில் நிலையங்களில் நின்று செல்லும். 
    தாம்பரம் - செங்கோட்டை தினசரி முன்பதிவில்லா ரயில் 
    ரயில் எண் 16189: தாம்பரத்தில் இருந்து காலை 7 மணிக்குப் புறப்பட்டு செங்கோட்டைக்கு இரவு 10.30 மணிக்கு சென்றடையும்.
    ரயில் எண் 16190: செங்கோட்டையில் இருந்து இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
    இந்த ரயில் செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், சங்கரன்கோவில், தென்காசி ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
    சென்னை சென்ட்ரல் - மதுரை ஏசி அதிவிரைவு வாராந்திர ரயில் 
    ரயில் எண் 20601: சென்னை சென்ட்ரலில் இருந்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.20 மணிக்கு மதுரை சென்றடையும்.
    ரயில் எண் 20602: ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மதுரையில் இருந்து இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரலுக்கு மறுநாள் காலை 7.40 மணிக்கு வந்தடையும். இந்த ரயில் காட்பாடி, சேலம், கரூர், திண்டுக்கல், பெரம்பூர் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
    நீட்டிக்கப்படும் விரைவு ரயில் சேவைகளின் விவரம்
    (நவ. 1 முதல் அமல்)
    சென்னை சென்ட்ரல் - பழனி விரைவு பாலக்காடு வரை நீட்டிப்பு
    ரயில் எண் 22651/22652: சென்னை சென்ட்ரல் - பழனி விரைவு ரயில் பாலக்காடு வரை பொள்ளாச்சி வழியாக செல்லும் வகையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நீட்டிக்கப்பட்ட ரயில் சேவைபுதன்கிழமை முதல் தொடங்குகிறது. இந்த ரயில் சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 9.40 மணிக்கு புறப்பட்டு பழனிக்கு காலை 7.15/7.20 மணிக்குச் சென்றடையும். பின்பு, பொள்ளாச்சிக்கு 9/ 9.05 மணிக்கும், பாலக்காட்டுக்கு காலை 11 மணிக்கு சென்றடையும்.
    மறுமார்க்கத்தில் பாலக்காட்டில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு பொள்ளாச்சிக்கு மாலை 4.25/4.30-க்கு, பழனிக்கு மாலை 5.55/ 6 மணிக்கு, பின்பு சென்னை சென்ட்ரலுக்கு மறுநாள் காலை 4.15 மணிக்கு வந்தடையும்.
    திருவனந்தபுரம் - பாலக்காடு அம்ரிதா விரைவு ரயில் மதுரை வரை நீட்டிப்பு 
    ரயில் எண் 16343/16344: திருவனந்தபுரத்தில் இருந்து இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு பாலக்காடுக்கு காலை 7.45/7.50, பின்பு மதுரைக்கு பிற்பகல் 1.10 மணிக்கு சென்றடையும். மறுமார்கத்தில், மதுரையில் இருந்து பிற்பகல் 3.45 மணிக்கு புறப்பட்டு, பாலக்காடுக்கு இரவு 9.15/9.20, பின்பு திருவனந்தபுரத்துக்கு மறுநாள் காலை 6.25 மணிக்கு சென்றடையும்.
    சென்னை எழும்பூர் - திருவனந்தபுரம் 
    அனந்தபுரி விரைவு கொல்லம் வரை நீட்டிப்பு
    ரயில் எண் 16723: சென்னை எழும்பூரில் இருந்து இரவு 7.50 மணிக்கு புறப்பட்டு, திருவனந்தபுரத்துக்கு மறுநாள் காலை 11.40/11.45 மணி, பின்பு கொல்லத்துக்கு பிற்பகல் 1 மணிக்கு சென்றடையும்.
    மறுமார்க்கத்தில் கொல்லத்தில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு திருவனந்தபுரத்துக்கு மாலை 4.05/4.10 மணி, பின்பு சென்னை எழும்பூருக்கு அதிகாலை 8.05 மணிக்கு வந்தடையும்.
    மன்னை விரைவு ரயில் தஞ்சையில் நிற்காது
    ரயில் எண் 16179/16180: சென்னை எழும்பூரில் இருந்து தினசரி மன்னார்குடி செல்லும் மன்னை விரைவு ரயில் இனி தஞ்சாவூரில் நிற்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக நீடாமங்கலத்தில் நிறுத்தப்படும். சென்னை எழும்பூரில் இருந்து இரவு 9.20 மணிக்கு புறப்பட்டு நீடாமங்கலம் அதிகாலை 3.38/3.40 மணி, பின்பு மன்னார்குடி காலை 4.45 மணி. மறுமார்கத்தில், மன்னார்குடியில் இருந்து இரவு 10.25 புறப்பட்டு, நீடாமங்கலம் இரவு 10.38/10.40 மணி, பின்பு சென்னை எழும்பூருக்கு அதிகாலை 5.45 மணிக்கு வந்தடையும்.

    அரசு ஊழியருக்கு புதிய ஊதிய அறிவிப்பு: நவம்பர் 30 -இல்தான் அமல் 


    By DIN  |   Published on : 01st November 2017 04:45 AM  
    அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டாலும், ஊதிய உயர்வானது நவம்பர் மாதத்தில் இருந்தே நடைமுறைக்கு வருகிறது. இதனால், உயர்த்தப்பட்ட மாத ஊதியத்தை நவம்பர் 30 -ஆம் தேதிதான் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பெற முடியும். மேலும், அக்டோபர் மாதத்துக்கான நிலுவைத் தொகை, 20 நாள்களில் அளிக்கப்படும் என நிதித் துறை தெரிவித்துள்ளது.
    தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த பரிந்துரைகளின்படி, ஒவ்வொரு ஊழியருக்கும் மாத ஊதியமானது உயர்த்தி அளிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்த்தப்பட்ட ஊதியமானது, அக்டோபர் 30 -ஆம் தேதியே வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில். தமிழக அரசின் நிதித் துறையானது புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
    நவம்பர் இறுதியில் முழுமையாக... இந்த உத்தரவுப்படி, புதிய ஊதிய விகிதம், நவம்பர் மாத இறுதியில் இருந்து (நவ.30) நடைமுறைக்கு வரும். ஊதியம் வழங்குவதற்கான மின்னணு சம்பளப் பட்டியலானது, உயர்த்தப்பட்ட ஊதிய விகிதத்துக்கு தகுந்தாற்போன்று திருத்தம் செய்யப்பட வேண்டும். இதற்காக, தேசிய தகவலியல் மையம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் முடிந்ததும், நவம்பர் 30 -இல் உயர்த்தப்பட்ட ஊதியம் அளிக்கப்படும். அக்டோபர் 30 -ஆம் தேதியன்று, பழைய ஊதியமே அளிக்கப்பட்டுள்ளது. இதனால், அக்டோபர் மாதத்துக்கான உயர்த்தப்பட்ட ஊதியமானது நிலுவைத் தொகையாக நவம்பர் 20 -ஆம் தேதிக்குள் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
     

    கார்த்திகையில் அணைந்த தீபம்!

    கார்த்திகையில் அணைந்த தீபம்!  பிறருக்கு சிறு நஷ்டம்கூட ஏற்படக் கூடாது என்று மின் விளக்கை அணைக்கச் சொன்ன பெரியவரின் புதல்வர் சரவணன் என்கிற வி...