Saturday, November 4, 2017

தடம் மாறியது வானிலை:  தடுமாறியது வானிலை மையம்!
மழை கணிப்பில் தடுமாறிய சென்னை வானிலை மையம், வரும் நாட்களில் விழிப்புடன் செயல்படவேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.




சென்னை வானிலை மையம், தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி, தெலங்கானா மற்றும் கேரளாவுக்கான மண்டல மையமாக செயல்படுகிறது. டில்லியில் உள்ள, இந்திய வானிலை மைய பொது இயக்குனருக்கு அடுத்த பதவியான, துணை பொது இயக்குனர் பதவியில், சென்னையில் ஒரு அதிகாரி பணியாற்றுகிறார்.அவருக்கு கீழ், ஒன்பது இயக்குனர்கள் பணியாற்றுகின்றனர்.

இவர்களில், புயல் எச்சரிக்கை மையத்தின் இயக்குனராக இருப்பவரே, தினசரி வானிலை எச்சரிக்கையை, ஊடகங்களுக்கு அளிப்பது வழக்கம். அந்த வகையில், சென்னை வானிலை மைய, புயல் எச்சரிக்கை மைய இயக்குனர், பாலச்சந்திரன், தினமும் ஊடகங்களுக்கு தகவல் தெரிவிக்கிறார். இந்த தகவலே, பொது மக்களை சென்றடைகிறது. இதில், முக்கியமான பருவ மழை காலத்தில், ஒவ்வொரு நாளும், நண்பகல், 12:00 மணி அளவில், மழை தகவல் வெளியிடப்படுகிறது. தற்போது, வட கிழக்கு பருவ மழை தீவிரமான நேரத்திலும், தினமும் ஒரு முறை மட்டுமே தகவல்களை வெளியிடுகின்றனர்.

அதனால், நண்பகல்,12மணிக்கு பின், வானிலையில் ஏற்படும் திடீர் மாற்றங்கள் குறித்து, பொது மக்களுக்கு தகவல் கிடைப்பதில்லை.இந்த ஆண்டு, பருவ மழை துவங்கிய நிலையில், அக்., 29 முதல், சென்னை வானிலை மையத்தின் கணிப்புகள் தவறுகின்றன. குறிப்பாக, அக்., 31ல், 'சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில், கன மழை வரும்' என, அறிவிக்கப்பட்டது. ஆனால், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் வெயிலும், டெல்டா மாவட்டங்களில் மழையுமாக நிலைமை மாறியது.

இந்த குளறுபடியின் உச்சகட்டமாக, நேற்று முன்தினம், வானிலை மையம் சார்பில், தமிழக தெற்கு கடலோர மாவட்டங்களுக்கு, கன மழை எச்சரிக்கை விடப்பட்டது. ஆனால், சென்னை உள்ளிட்ட வடக்கு கடலோர மாவட்டங்களில், மழை வெளுத்து கட்டியது. கன மழை பெய்யும் என, வானிலை மையத்தால் கூறப்பட்ட தென் மாவட்டங்களில், நேற்று முன்தினம், சராசரியாக, 2 செ.மீ.,க்குள் மட்டுமே மழை பெய்தது.

இந்த குளறுபடியால்,சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட மக்கள், வெள்ள பாதிப்பில் சிக்கி, கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். மழை குறித்த கணிப்பு தவறியதற்கு, மேக கூட்டங்கள் நகர வழியின்றி, அங்கும் இங்கும் மாறி வந்ததே காரணம் என, வானிலை மையம் அறிவித்துள்ளது. அப்படி என்றால், இயற்கை மாற்றத்திற்கு ஏற்ப,

நேற்று முன்தினம் பிற்பகலில், முந்தைய அறிவிப்புகளை மாற்றி, புதிய அறிவிப்பு வெளியிட்டு இருக்கலாம். அதன் வாயிலாக, அரசு தரப்பில் அவசர எச்சரிக்கை விடப்பட்டிருக்கும்.

ஆனால், எந்த அறிவிப்பும் இல்லாமல், அடை மழையை அமைதியாக வேடிக்கை பார்த்தபடி இருந்ததால், பொது மக்கள் அதிர்ச்சியில் தவித்தனர்.இனிவரும் காலங்களில், பருவ மழை, புயல் அல்லது இயற்கை மாற்றங்களின் போது, வழக்கமான முறையில் இயங்காமல், வானிலை மாற்றத்தை, உடனுக்குடன் வெளியிடும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

தேவைப்பட்டால், அவசர தகவல்களை, உடனடியாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மாறாக, மறுநாள் ஊடக சந்திப்பு நேரம் வரும் வரை காத்திருந்தால், அதற்குள் அனைத்து பாதிப்புகளும் ஏற்பட்டு விடும் என்கின்றனர் மக்கள்.

மூன்றாவது முறையாக 'வாட்ஸ் ஆப் அவுட்!'


தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில், 'வாட்ஸ் ஆப்' செயலி நேற்று திடீரென, செயலிழந்தது. நேற்று மதியம், 1:00 மணி முதல், தமிழகம் உட்பட, பல மாநிலங்களில், 'வாட்ஸ் ஆப்' செயலி, ஒரு மணி நேரம் திடீரென செயலிழந்தது. தகவல்களை அனுப்ப முடியாமலும், பார்க்க முடியாமலும், பல ரும் அவதிப்பட்டனர். அந்த வருத்தத்தை, 'பேஸ்புக்' பக்கத்தில், ஒருவர் பின் ஒருவராக பகிர துவங்கியதே, இப்பிரச்னைக்கு காரணம் என, தெரிய வந்தது. பாகிஸ்தான், ஜெர்மனி உள்ளிட்ட உலகின் பல நாடுகளிலும், வாட்ஸ் ஆப் செயல்படவில்லை. ஒருவழியாக, பிற்பகல், 2:00 மணிக்கு பின் செயல்பட துவங்கியதும், 'வாட்ஸ் ஆப்' ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர். இந்த ஆண்டு, மே மற்றும் ஆக., மாதங்களிலும், இது போல், வாட்ஸ் ஆப், திடீரென செயலிழந்தது.

- நமது நிருபர் -


திண்டுக்கல்லில் வெங்காயம் கிலோ ரூ.150


திண்டுக்கல்: வறட்சி, மழை பாதிப்பால் சின்ன வெங்காயம் கிலோ விலை ரூ.150 ஐ எட்டியது. 'இலங்கைக்கு ஏற்றுமதியாவதால் விலை குறைய வாய்ப்பு இல்லை' என, வியாபாரிகள் 
தெரிவித்தனர்.கடந்த ஆண்டு நிலவிய கடும் வறட்சியால் சாகுபடி குறைந்து சின்ன வெங்காயம் விலை கிலோ ரூ.100க்கு விற்றது. நேற்று திண்டுக்கல் மார்க்கெட்டில் கிலோ ரூ.150 ஆக விலை உயர்ந்தது.திண்டுக்கல்லில் வாரம் மூன்று நாட்கள் நடக்கும் வெங்காய மார்கெட்டிற்கு வழக்கமாக 50 கிலோ எடையில் வெங்காயம் 2 ஆயிரம் மூடைகள் வரும். தற்போது 500 மூடைகள் மட்டுமே வரத்து உள்ளது. இதனால் கிலோ ரூ. 150 ஆக உயர்ந்தது. 
மேலும் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு ஏற்றுமதியாவதால் மேலும் விலை உயர வாய்ப்பு 
உள்ளது.

கமிஷன் கடை வியாபாரி சங்கர் கூறுகையில், ''இந்த விலை உயர்வு ஒரு மாதத்திற்கு நீடிக்கும். வரத்து குறைவால் வெங்காய மார்க்கெட் களை இழந்துள்ளது. தற்போது வெங்காய நடவு ஆகிறது. மூன்றுமாதங்களுக்கு பின் விலை குறையும்''
என்றார்.

ரோட்டோரம் வீச்சு

திண்டுக்கல் மாவட்டத்தில் நத்தம், வடமதுரை, செம்பட்டி, ஒட்டன்சத்திரம், வேடசந்துார் உட்பட பல இடங்களில் வெங்காயம் பயிரிடப்படுகிறது. இங்கு கடந்த 4 ஆண்டுகளாக கடும் வறட்சி நிலவுவதால், வெங்காயத்தை சிலர் கிணற்று பாசனம் மூலம் பயிரிட்டுள்ளனர். இவ்வாறு வெங்காயம் அறுவடை நேரத்தில் பெய்யும் மழையால் அழுகியுள்ளன.
இதனால் விவசாயிகள்அவற்றை தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் கொட்டி விட்டு செல்கின்றனர். பூதிப்புரம் விவசாயி மகாலட்சுமி கூறியதாவது: ஒரு கிலோ வெங்காயம் ரூ.120 முதல் ரூ.150ரை விற்கப்படுகிறது. அறுவடை நேரத்தில் மழையால் அழுகி விட்டது, என்றார்.

அண்ணா பல்கலை தேர்வு ரத்து இல்லை

சென்னை: 'ஏற்கனவே அறிவித்தபடி, இன்று தேர்வுகள் நடக்கும்' என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.
அண்ணா பல்கலையின் இணைப்பில், தமிழகம் முழுவதும் உள்ள, ௫௦௦க்கும் மேற்பட்ட, இன்ஜி., கல்லுாரிகளில், செமஸ்டர் தேர்வு நடந்து வருகிறது. மழை ஒருபுறம் இருந்தாலும், இதுவரை திட்டமிட்டபடி தேர்வுகள் நடந்து வந்தன.
நேற்று முன்தினம் பெய்த தொடர் கனமழையால், நேற்று தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில், 'இன்று திட்டமிட்டபடி தேர்வுகள் நடக்கும்' என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.

பி.எஸ்சி., நர்சிங் 9ல் கவுன்சிலிங்


சென்னை: தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டில் உள்ள, பி.எஸ்.சி., நர்சிங் படிப்பில், 759 இடங்கள் காலியாக உள்ளன. அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில், பி.எஸ்சி., நர்சிங்., - பி.பார்ம்., உட்பட, ஒன்பது துணை மருத்துவ படிப்புகளுக்கு, அரசு ஒதுக்கீட்டிற்கு, 8,381 இடங்கள் உள்ளன. இதற்கு, இரண்டு கட்ட கவுன்சிலிங் நடந்து முடிந்துள்ளது.
இதில், 759 காலி இடங்கள் உள்ளன. இதற்கான, மூன்றாம் கட்ட கவுன்சிலிங், சென்னை அரசு பல்நோக்கு மருத்துவமனையில், நவ., 9, 10ல், நடக்கும் என, மருத்து கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

திருமலை தேவஸ்தான இணையத்தில் ஆர்ஜித சேவா டிக்கெட் வெளியீடு

திருப்பதி: திருமலை தேவஸ்தான இணையதளத்தில் 52 ஆயிரம் ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள் வெளி யிடப்பட்டுள்ளன. திருமலை தேவஸ்தானம் மாதந்தோறும், முதல் வெள்ளிக்கிழமைகளில், காலை, 10:00 மணிக்கு தேவஸ்தான இணையதளத்தில் ஆர்ஜித சேவா டிக்கெட்டை 
வெளியிட்டு வருகிறது. நேற்று காலை 10:00 மணிக்கு, 2018, பிப்., மாதத்திற்கான, 52,190 ஆர்ஜித சேவா டிக் கெட்டுகள் தேவஸ்தானம் இணையதளத்தில் வெளியிடப்பட்டன. 
இந்த டிக்கெட்டுகளை, பக்தர்கள் முன்பதிவு செய்து, ஏழுமலையானை ஆர்ஜித சேவையில்
தரிசிக்கலாம்.இதில், சுப்ரபாதம் உள்ளிட்ட சில முக்கிய ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள், குலுக்கல் முறையில் வழங்கப்படுகின்றன. இதை பெற விரும்பும் பக்தர்கள், தங்கள் பெயர், ஆதார் எண், டிக்கெட் எண்ணிக்கை, அைலபேசி உள்ளிட்டவற்றை குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும். கிடைக்க பெற்ற விண்ணப்பங்கள், அனைத்தும் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, அலைபேசிக்கு குறுந்தகவல் அனுப்பப் படும்.தகவல் கிடைத்த பக்தர்கள், மூன்று நாட்
களுக்குள் தங்கள் டிக்கெட்டுகளுக்கு, ஆன்லைனில் பணம் செலுத்தி பெற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறு, பெற்றுக் கொள்ளாத டிக்கெட்டுகளை, விண்ணப்பித்த மற்ற பக்தர்களுக்கு,குலுக்கல் முறையில் வழங்கப்படுகிறது. நேரடி முன்பதிவில் உள்ள மற்ற ஆர்ஜித சேவா டிக்கெட்டை, பக்தர்கள், நேரடியாக ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.டிக்கெட் விவரங்கள்குலுக்கல் முறையில் உள்ள டிக்கெட்கள்: சுப்ரபாதம், -7,300, தோமாலை, -120, அர்ச்சனா-, 120, அஷ்டதளபாத பத்மாராதனை, -240, நிஜபாதம்,- 2300.
மற்ற சேவா டிக்கெட்கள்: கல்யாண உற்ஸவம்,-10,500, ஆர்ஜித பிரம்மோற்ஸவம், -5,590, விசேஷ பூஜை, -1,500, வசந்தோற்ஸவம், -10,320, ஊஞ்சல்சேவை, -2800, சகஸ்ர தீபாலங்கார சேவா, -11,400.
தற்போதைய,மழையால்,பாதிப்பில்லை,'அச்சம் வேண்டாம்!

''சென்னை உட்பட தமிழகத்தின் எந்த பகுதிக்கும், தற்போதைய மழையால் வெள்ள அபாயம் இல்லை. அதனால், மக்கள் அச்சப்பட வேண்டாம். இப்போதைக்கு புயலும் இல்லை; சுனாமியும் வர வாய்ப்பில்லை,'' என, 'தமிழ்நாடு வெதர்மேன்' என அழைக்கப்படும், பிரபல தனியார் வானிலை ஆய்வாளர், பிரதீப் ஜான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.



சென்னையில், 2015ல், கன மழை பெய்தபோது, நகரின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளை, செம்பரம்பாக்கம் ஏரி வெள்ளம் கபளீகரம் செய்தது.அந்த கசப்பான நினைவுகள் அகலாத நிலையில், 2016ல், வட கிழக்கு பருவ மழை, போக்கு காட்டியது. அதனால், நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்தது. குடிநீர் ஏரிகள் வறண்டதால்,தண்ணீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.

அதனால் இம்முறை, வட கிழக்கு பருவ மழையை, மக்கள் பெரிதும் எதிர்பார்த்து இருந்தனர். மக்கள் எதிர்பார்த்தபடி, அக்., 31 இரவு முதல், கன மழை பெய்து வருகிறது. இந்த சூழலில், 'சென்னையில் மீண்டும் பெருவெள்ளம் ஏற்படும்; செம்பரம்பாக்கம் ஏரி உடைப்பெடுத்தது; மீண்டும் சுனாமி தாக்கப் போகிறது' என, பல்வேறு வதந்திகள் பரவ துவங்கி உள்ளன.

கடும் மழையை எதிர்கொண்டுள்ள மக்கள் மத்தியில், இது பீதியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சந்தேகங்களை எல்லாம், பல லட்சம் மக்களால் நம்பப்படும், 'வெதர்மேன்' பிரதீப் ஜான் தெளிவுபடுத்தி உள்ளார்.கடந்த, 2015 வெள்ளத்தின்போது, இவர் தந்த மழை தொடர்பான தகவல்கள், அப்படியே பலித்தன. அதனால், 'பேஸ்புக்' வலைதளத்தில், அவரை

பல லட்சம் பேர் தொடர்கின்றனர். இம் முறையும்,அவர் கணித்தபடியே மழை பெய்கிறது.

நமது நாளிதழுக்கு, அவர் அளித்த பேட்டி:

சென்னையில், நேற்று முன்தினம், மழை மேகங்கள், கடலோரமான இடத்தில் இணைந்ததால், கடற்கரைக்கு சற்று அருகில் உள்ள பகுதிகளில் மழை கொட்டியது. அதனால், எழும்பூரில் துவங்கி கேளம்பாக்கம் வரை, மிக அதிக அளவில் மழை பெய்தது. டி.ஜி.பி., அலுவலகம் அருகில், 28.6 செ.மீ., மழை பதிவானது. ஆனால், வளசரவாக்கம், பெரம்பூர், செங்குன்றம் என, பல பகுதிகளில் மழை குறைவாகவே பெய்தது.

சென்னையில், தற்போது பெய்து வரும் மழை இயல்பானது. அது, மேலும் சில நாட்கள் தொடரும். எனினும், நேற்று பெய்ததை போல், பல மணி நேரம் தொடர்ந்து, கன மழை பெய்யாது.சென்னை நகரில், தாழ்வான சில இடங்களில், மழைநீர் தேங்கியிருப்பது, உண்மை தான். ஆனால், வரலாற்றின் அடிப்படையிலும், சென்னையின் தேவை அடிப்படையிலும், இந்த மழை போதாது.

இது வழக்கமான மழை தான். 2015ல், இதை விட இரு மடங்கு நீர், சென்னை சாலைகளில் ஓடியது. அதை ஒப்பிட்டால், இது ஒன்றும் பெரிது கிடையாது.'வெள்ள அபாயம் ஏற்படும்' என சிலர், தகவல் பரப்புகின்றனர். செம்பரம்பாக்கம் ஏரியில், 15 சதவீதம் தான் தண்ணீர் வந்துள்ளது. அதனால், இப்போதைக்கு வெள்ளம் ஏற்பட வாய்ப்பே இல்லை.

சென்னையில் மழை பெய்தாலும், செங்குன்றம், பூந்தமல்லி போன்ற ஏரிகளின் நீர்பிடிப்பு பகுதிகளில், குறைவான அளவே மழை பெய்துள்ளது. அதனால், வதந்திகளை நம்ப வேண்டாம்.

இதேபோல், 'டிசம்பருக்குள், 11 நாடுகளை, சுனாமி தாக்கும்; தமிழகம், கேரளா அருகே பூகம்பம் உருவாகும்; 2004ம் ஆண்டை விட, பாதிப்பு பன்மடங்கு அதிகமிருக்கும்' என, சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவுகின்றன.

அதனாலும், மக்களிடம் கலக்கம் ஏற்பட்டு உள்ளது. உலகில் எந்த மனிதனாலும், பூகம்பத்தை முன்கூட்டியே கணிக்க முடியாது. அதற்கான தொழில்நுட்பமும், யாரிடமும் இல்லை.

தற்போது பரவும் தகவலில், எந்த நாளில் அதை, சம்பந்தப்பட்ட விஞ்ஞானி எழுதினார் என்ற, விபரம் இல்லை. அதில், பூகம்பத்தின் மையப் பகுதி, எங்கு உருவாகும் என குறிப்பிட வில்லை. கடவுளால் தான், பூகம்பத்தை கணிக்க முடியும். கண்டிப்பாக, சமூக வலைதளத்தில் பரவும் கடிதத்தை, கடவுள் எழுதியிருக்க முடியாது. எனவே, மக்கள் பயப்படத் தேவையில்லை. பலத்த மழை பெய்யும்போது, வீட்டுக்குள் பாதுகாப்பாக இருங்கள்; அது போதும்.இவ்வாறு அவர் கூறினார்.

நான் விஞ்ஞானி அல்ல!பிரதீப் ஜான் கூறியதாவது:

குமரி மாவட்டம், மார்த்தாண்டம், சொந்த ஊர். சென்னை, அண்ணா நகர், எஸ்.பி.ஓ.ஏ.,வில் பள்ளி படிப்பு. தற்போது, 'டுபிசில்' எனும், தமிழ்நாடு நகர்ப்புற கட்டமைப்பு நிதி சேவை கள் நிறுவனத்தில் பணி. சிறு வயது முதல், மழையை பார்த்தால், கவலை மறப்பேன். பி.இ., கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தாலும், வானிலை மீதான காதல் தொடர்ந்தது.

பல்வேறு நாடுகளின், வானிலை ஆய்வு மையங்கள், 25க்கும் மேற்பட்ட வானிலை மாடல்களை ஆய்ந்து, 2003ல் எழுத துவங்கி னேன். 2014ல், 'பேஸ்புக்'கில், மக்கள் எதிர்பார்க் கும் தகவல்களை எழுத துவங்கினேன். 2015 வெள்ளத்தின்போது, நம்பகமான தகவலை பதிவிட்டதால், லட்சக்கணக்கானோர், என்னை தொடர்கின்றனர்.

நான் விஞ்ஞானி அல்ல. ஆனால், மக்களுக்கு என்ன தேவை; மழை, புயல் குறித்து, என்ன தெரிந்து கொள்ள விரும்புவர் என்பதற்கேற்ற தகவல்களை, நம்பகமான விபரங்களுடன், மழைக் காலங்களில், தினசரி, மூன்று முறை பதிவிடுகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்

- நமது சிறப்பு நிருபர் -

NEWS TO DAY 29.04.2026