Tuesday, November 14, 2017


வெடிகுண்டு பற்றி பேசிய விமான பயணி கைது

 நவ 13, 2017 22:45

கொச்சி: கேரளாவில், தனியார் நிறுவன விமானம் புறப்படுவதற்கு முன், அதில் இருந்த பயணி ஒருவர், 'ஹேப்பி பாம்' என கூறியதால், சர்ச்சை ஏற்பட்டது. 

கொச்சி விமான நிலையத்திலிருந்து, 'ஜெட் ஏர்வேஸ்' நிறுவனத்திற்கு சொந்தமான விமானம், மஹாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு புறப்பட தயார் நிலையில் இருந்தது.
அப்போது, அதிலிருந்த பயணி ஒருவர், 'ஹேப்பி பாம்' என கூறியதை கேட்டு, விமான பணியாளர் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து, உயர் அதிகாரிக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து, அந்த நபரிடம், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தினர். மும்பையில் உள்ள தன் நண்பரிடம், விளையாட்டாக பேசியதாக அவர் கூறினார். அந்த நபரை, போலீசார் கைது செய்தனர். விமானத்தில் இருந்த பயணியர் இறக்கி விடப்பட்டு, அவர்களின் உடமைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. வெடிகுண்டு ஏதும் இல்லாதது உறுதி செய்யப்பட்ட பின், விமானம் புறப்பட்டு சென்றது.

பள்ளி தணிக்கை துறையில் 'வசூல் ராஜாக்கள்': அலறும் ஆசிரியர்கள்

 நவ 14, 2017 00:23

தமிழகத்தில் பள்ளிக் கல்வியின் கீழ் செயல்படும் தணிக்கை துறையில், பெரும்பாலான அலுவலர்கள் 'வசூல் ராஜாக்களாக' வலம் வருவதால் தலைமையாசிரியர், ஆசிரியர்கள் புலம்பி தவிக்கின்றனர். 'தொடக்க கல்வி துறையில் உள்ளது போல், உயர் மற்றும் மேல்நிலை பிரிவிலும் தணிக்கை துறையை மாற்றியமைக்க வேண்டும்,' என போர்க்கொடி துாக்கியுள்ளனர்.
அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் நிர்ணயம், சம்பளம் உயர்வு, அரசு நிதி செலவிடல், ஆசிரியர் ஓய்வூதியம் மற்றும் பணப்பலன் ஆவணங்கள் சரிபார்ப்பு உட்பட அனைத்து வகை வரவு செலவினங்களுக்கும் முறையான ஆவணங்கள் உள்ளனவா என்பது குறித்து பள்ளி தணிக்கை துறை சார்பில் தணிக்கை செய்யப்படுகின்றன.

இதற்காக சென்னை, மதுரை, கோவையில் மண்டல கணக்கு அலுவலகங்கள் உள்ளன. இவற்றின் மூலம் 32 மாவட்டங்களிலும் பள்ளிகளில் ஆடிட் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மண்டல கணக்கு அலுவலராக உள்ளாட்சி தணிக்கை துறை அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு கீழ் கல்வித்துறையின் கண்காணிப்பாளர்கள் மாவட்டம் தோறும் நியமிக்கப்பட்டுள்ளனர்.தணிக்கையின் போது பள்ளிகளில் வரவு செலவிற்கான உரிய ரசீது இல்லாதது, விதி மீறி ஊதிய உயர்வு, பதவி உயர்வு வழங்கல், நிதி முறைகேடு இருந்தால் ஆட்சேபனை (அப்ஜெக்ஷன்) தெரிவிக்கப்படும். உரிய ஆவணங்கள் சமர்ப்பித்து அவை சரிசெய்யப்பட்டால் தான் எந்த பணப் பலனையும் ஆசிரியர், அலுவலர்கள் பெற முடியும்.

தற்போது வரை தமிழக பள்ளிகளில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆட்சேபனைகள் நிலுவையில் உள்ளன. இவற்றை குறைக்க அவ்வப்போது கூட்டு அமர்வு கூட்டங்கள், சிறப்பு தணிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கிடையே ஒவ்வொரு கண்காணிப்பாளர்களுக்கும் மாதத்தில் குறிப்பிட்ட பள்ளிகளில் தணிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்படும். இங்கு தான் பல அலுவலர்கள் 'வசூல் ராஜாக்களாக' கோலோச்சுகின்றனர் என புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து தலைமையாசிரியர், ஆசிரியர்கள் கூறியதாவது: பள்ளிகளில் 'ஆடிட்' என்றால் முன்கூட்டியே சம்மந்தப்பட்ட பள்ளிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விடும். ஆடிட் வருவோருக்கு லாட்ஜில் தங்குவது, சாப்பாடு, தணிக்கை முடிந்து செல்லும்போது 'கவர்' என சகலமும் பள்ளி சார்பில் 'கவனித்து' அனுப்பினால் தான் ஆட்சேபனைகளுக்கு விமோசனம் கிடைக்கும்.

ஆனால் 'கவனிப்பு' இல்லாவிட்டால் 'அது சரியில்லை... இது சரியில்லை...,' என ஏராளமான ஆட்சேபனைகள் தெரிவித்து எழுதிவிடுவர். இதனால் முடிந்தவரை 'கவனித்து' அனுப்பி விடுவோம். இதில் உதவி பெறும் பள்ளிகளில் இஷ்டத்திற்கும் வசூலிப்பு நடக்கும். இதுதவிர ஓய்வு பெறும் தலைமையாசிரியர், ஆசிரியர்களுக்கு ஓய்வூதி பலன் கிடைக்க இத்துறையின் தடையில்லா சான்று (என்.ஓ.சி.,) அவசியம்.

அப்போதும் முடிந்த அளவு 'பணம் கறப்பு' நடக்கும்.பல்வேறு புகார்கள் தெரிவித்தும், இதுவரை பெரிய அளவில் நடவடிக்கை இல்லாததால் இத்துறைக்கு 'டிரான்ஸ்பர்' ஆவதில் கடும் போட்டி ஏற்படுகிறது. முறைகேடு புகாரில் சிக்கி துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்ட பின்னரும் கூட, அரசியல் சிபாரிசால் இத்துறைக்கே பணிக்கு திரும்பும் சம்பவங்களும் நடக்கிறது. இத்துறையை சீரமைத்து மாற்றியமைக்க அரசு முன்வர வேண்டும், என்றனர்.

தொடக்க கல்விமுறை பின்பற்றப்படுமா

தொடக்கக் கல்வித்துறையில் பள்ளிகள், ஆசிரியர்கள் எண்ணிக்கையும் அதிகம். அங்கு அந்தந்த மாவட்டங்களில் தொடக்க கல்வி அலுவலர் கண்காணிப்பின் கீழ் உதவி தொடக்க கல்வி அலுவலர் பொறுப்பிலேயே தணிக்கை பணிகள் மேற்கொள்கின்றன. அதுபோல் உயர் மற்றும் மேல்நிலை பிரிவிலும் முதன்மை கல்வி அலுவலர்களின் கீழ் கண்காணிப்பாளர்களே தணிக்கை மேற்கொள்ளும் வகையில் மாற்றி அமைக்கலாம். உள்ளாட்சி தணிக்கை துறை அதிகாரிகளை அத்துறைக்கே திருப்பி அனுப்ப கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர்.

- நமது நிருபர் -

சி.பி.எஸ்.இ., அவகாசம்

 நவ 14, 2017 01:39 | Added : நவ 13, 2017 23:58




மத்திய இடைநிலை கல்வி வாரியத்தில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பிறந்த தேதி மற்றும் பெற்றோர் பெயர் மாற்றத்துக்கான அவகாசம், ஒரு ஆண்டிலிருந்து, ஐந்து ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தேர்வு முடிவு வெளியான நாளில் இருந்து, ஐந்து ஆண்டுகள் வரை, பிறந்த தேதி மற்றும் பெற்றோர் பெயரை திருத்தம் செய்யலாம்.
இனி வரும் காலங்களில் தேர்வு எழுதுவோருக்கும், ஏற்கனவே, திருத்தம் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கும், இந்த விதி பொருந்தும்.
- நமது நிருபர் -

டாக்டர்களின் சம்பள முரண்பாடு : அரசுடன் நாளை பேச்சுவார்த்தை

நவ 13, 2017 22:02


சேலம்: மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான சம்பளம் உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து, சுகாதாரத் துறை செயலர், ராதாகிருஷ்ணன், தமிழக அரசு டாக்டர் சங்கங்களுடன் நாளை பேச்சு நடத்துகிறார்.

இது குறித்து, தமிழ்நாடு அரசு பட்ட மேற்படிப்பு டாக்டர்கள் சங்க மாநில தலைவர், லட்சுமி நரசிம்மன் கூறியதாவது: மருத்துவ படிப்பை முடித்து, மத்திய, மாநில அரசு மருத்துவமனைகளில், டாக்டர்களாக பணியில் இணைபவர்கள், முதல் நான்கு ஆண்டுகள் வரை, 56 ஆயிரத்து, 100 ரூபாய் அடிப்படை சம்பளத்தில் பணி செய்கின்றனர்.

அதன் பின்னரே, மத்திய, மாநில அரசு டாக்டர்களின் சம்பளத்தில், முரண்பாடு துவங்குகிறது.
ஐந்து முதல், 10வது ஆண்டு வரை, மாநில அரசு டாக்டர்களை விட, மத்திய அரசு டாக்டர்களின் சம்பளத்தில், மாதத்துக்கு, 5,000 ரூபாய் கூடுதல் என்ற வகையில், ஆண்டுக்கு, 60 ஆயிரம் ரூபாய் கூடுதல் வருவாய் ஈட்டுகின்றனர். அதே பணியில், 13 முதல், 20 ஆண்டுகள் முடிக்கும் நிலையில், மாநில டாக்டர்களை விட மத்திய அரசு டாக்டர்கள், மாதத்துக்கு, 39 முதல், 49 ஆயிரம் ரூபாய் வரையிலும், ஆண்டுக்கு ஐந்து முதல், ஏழு லட்சம் ரூபாய் வரை, கூடுதல் சம்பளம் பெறுகின்றனர். எம்.பி.பி.எஸ்., முடித்து, பணியில் உள்ள டாக்டர்களின் சம்பள முரண்பாடு இதுவென்றால், எம்.எஸ்., எம்.டி., உள்ளிட்ட உயர் படிப்பு டாக்டர்களின் சம்பள விகித முரண்பாடுகள் இதைவிட அதிகமாக உள்ளன. தமிழக அரசு டாக்டர்களின் சம்பள முரண்பாடு தொடர்பாக, பிறப்பித்த அரசாணை எண், 354ல் உள்ள சில கருத்துக்களை முன் வைத்து, நாளை சென்னையில், சுகாதாரத் துறை செயலர், ராதாகிருஷ்ணன், டாக்டர்கள் சங்கங்களை பேச்சுக்கு அழைத்துள்ளார். இதில், மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான சம்பளம், சலுகைகள் குறித்த கோரிக்கையை வலியுறுத்த உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

சிங்கப்பூருக்கு விமான சுற்றுலா

 நவ 13, 2017 21:45

சென்னை: இந்தியன் ரயில்வே உணவு கழகமான, ஐ.ஆர்.சி.டி.சி., மலேஷியா, சிங்கப்பூர், துபாய், அபுதாபிக்கு, விமான சுற்றுலாவை ஏற்பாடு செய்துள்ளது. மலேஷியா மற்றும் சிங்கப்பூருக்கு, டிச., 9ல், ஏழு நாட்கள் விமான சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒருவருக்கான கட்டணம், 62 ஆயிரம் ரூபாய். துபாய் மற்றும் அபுதாபிக்கு, ஐந்து நாட்கள் சுற்றுலா, 24ல் புறப்படுகிறது. இதில், ஒருவருக்கு கட்டணம், 53 ஆயிரத்து, 700 ரூபாய். மேலும், விபரங்கள் மற்றும் முன்பதிவுக்கு, ஐ.ஆர்.சி.டி.சி., சென்னை அலுவலகத்தை, 98409 02918 - 19; மதுரை அலுவலகத்தை, 98409 02915 என்ற, எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என, ஐ.ஆர்.சி.டி.சி., அறிவித்து உள்ளது.
சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் வாகன ஓட்டிகள் பெரும் அவதி



சென்னையில் நேற்று மாலை ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசலால் சாலையில் வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக ஆமை வேகத்தில் நகர்ந்து சென்றன.

நவம்பர் 14, 2017, 03:30 AM

சென்னை,


சென்னையில் மழை என்றாலே அடுத்தடுத்து வரக்கூடிய 2 முக்கிய பிரச்சினைகளில் ஒன்று பள்ளி விடுமுறை. மற்றொன்று போக்குவரத்து நெரிசல். சென்னையில் நேற்று முன்தினம் இரவு பெரும்பாலான இடங்களில் நல்ல மழை பெய்தது. மழை தொடர்ந்து பெய்யலாம் என்பதால் சென்னையில் பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது.

அதேபோல் நேற்றும் வானில் கரும் மேகங்கள் சூழ்ந்து காலை முதல் பரவலாக மழை பெய்ததால் மாநகர் முழுவதுமே இதமான சூழ்நிலை நிலவியது. மாலை நேரத்தில் குளிரும் அதிகரித்தது.

மேலும் குளிர் நிலவியதால் பலருக்கு உடல்நல பிரச்சினைகள் ஏற்பட்டு பெரும்பாலானோர் அலுவலகத்தில் இருந்து மாலை 5 மணிக்கே வீடு திரும்பத் தொடங்கினர். பொதுவாக வாரத்தின் முதல் வேலைநாள் என்பதால் திங்கட்கிழமை அன்று சென்னை மாநகரில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படும். அதுமட்டுமல்லாமல் நேற்று மாலையிலும் மழை கொட்டியது. இதனால் சென்னையில் உள்ள முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்றது.

அண்ணா சாலை முதல் ஆலந்தூர் வரையிலான சாலைகள், எல்டாம்ஸ் சாலை, பாரதிதாசன் சாலை, அவ்வை சண்முகம் சாலை, கிரீம்ஸ் சாலை, வாலாஜா சாலை, சுவாமி சிவானந்தா சாலை என அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து மிக மந்தமாகவே காணப்பட்டது. கோடம்பாக்கம் ஹைரோடு முதல் வடக்கு உஸ்மான் சாலை வரையிலும், மகாலிங்கபுரம் சாலை, எம்.எம் சாலை, நுங்கம்பாக்கம் ஹைரோடு முதல் கோடம்பாக்கம் சாலை வரையிலும் வாகனங்கள் நத்தை போல் ஊர்ந்து சென்றன.

கதீட்ரல் சாலை, பல்லவன் சாலை, பேப்பர் மில்ஸ் சாலை, பெரம்பூர் பேரக்ஸ் ரோடு, எழும்பூர் பாந்தியன் சாலை, அசோக் நகர் மெயின் ரோடு, பெசன்ட் நகர் பிரதான சாலை, தியாகராயநகர் உஸ்மான் சாலை உள்ளிட்ட பகுதிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டதால் வாகனங்கள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து ஆமை வேகத்தில் நகர்ந்து சென்றன. இதனால் வாகன ஓட்டிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள்.

Monday, November 13, 2017

கடன் அட்டை இனி கடந்த காலம்?


By DIN  |   Published on : 13th November 2017 12:00 AM  | 
credit

கடன் அட்டை, பற்று அட்டை என்கிற கிரெடிட்-டெபிட் கார்டுகள் பயன்பாடு பரவலாகி வருகிறது என்று பலரும் நினைத்துக் கொண்டிருப்போம். ஆனால் இந்த "அட்டை' முறை காணாமல் போகும் காலம் வெகு தூரத்தில் இல்லை.
 இன்னும் நான்கு ஆண்டுகளில் டெபிட்-கிரெடிட் கார்டுகள், ஏடிஎம் இயந்திரங்கள் ஆகியவற்றுக்கான தேவை அதிக அளவில் இருக்காது என தெரிகிறது. மொபைல்போன் வாயிலாகவே நிதி பரிவர்த்தனைகளை மேற்கொண்டு விடுவதால் இந்த நிலை விரைவில் ஏற்படவுள்ளதாக நீதி ஆயோக் அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் காந்த் ஆணித்தரமாக தெரிவித்துள்ளார்.
 இந்தியாவில் 3 கோடிக்கும் அதிகமான கிரெடிட் கார்டுகளும், 88 கோடிக்கும் மேலான டெபிட் கார்டுகளும் புழக்கத்தில் உள்ளன. இதுதவிர, பொது, தனியார் துறை வங்கிகளுக்குச் சொந்தமாக 1 லட்சத்துக்கும் அதிகமான ஏடிஎம்கள் மக்களின் வசதிக்காக மாநகரங்களில் மட்டும் வீதிக்கு வீதி நிறுவப்பட்டுள்ளன. இருப்பினும், தற்போது ஆறாவது விரலாக அனைவரின் கைகளில் ஒட்டிக் கொண்டே இருப்பது மொபைல்போன். இதனை பயன்படுத்தி நிதி பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் போக்கு மக்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை மனதில் வைத்தே அமிதாப் காந்த் இந்த கருத்தை கூறியிருக்கிறார் என்பது புலனாகிறது.
 அமெரிக்கா, ஐரோப்பாவுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் 72 சதவீதம் பேர் 32 வயதுக்கும் கீழானவர்கள். 2040ஆம் ஆண்டில் அமெரிக்கா, ஐரோப்பாவில் பெரும்பான்மையான சதவீதத்தினர் மத்திய வயதைக் கடந்த இளம் வயோதிகர்கள்தான். இந்தநிலையில், இளம் தலைமுறையினர் அதிக அளவில் நம்முடன் இருப்பது பெரும் சாதகமான அம்சமாகவே பார்க்கப்படுகிறது. உலக சராசரியுடன் ஒப்பிடும்போது, இந்தியாவில்தான் ஏராளமான மொபைல்போன் பயன்பாடும், வங்கி கணக்குகளும், கோடிக்கணக்கான பயோமெட்ரிக் பதிவுகளும் உள்ளன. இந்த நிலையில், அதிக நிதி பரிவர்த்தனைகளும் மொபைல்போன் மூலமாகவே செய்து முடிக்கும் பழக்கம் இளம் வயதினரிடையே கணிசமாக அதிகரித்து வருகிறது. இது, மேலும் விரிவடையும்பட்சத்தில், அடுத்த 3-4 ஆண்டுகளில் டெபிட், கிரெடிட், ஏடிஎம்களுக்கான தேவை சுருங்கிவிடும். அது முற்றிலும் வழக்கொழிந்து போக வாய்ப்புள்ளதா என்றால் அப்படியும் கூற முடியாது. அவற்றுக்கென ஒரு சில பயன்பாடுகள் இருக்கலாம். ஆனால், ஸ்மார்ட்போன் யுகத்தில் அட்டை, ஏடிஎம்கள் ஓரங்கட்டப்பட்டு விடும் என்றே தோன்றுகிறது!

NEWS TODAY 05.07.2026