Thursday, December 7, 2017

ஆம்பூர் பிரியாணி மாஸ்டர்கள் ஆர்.கே. நகருக்கு படையெடுப்பு

Added : டிச 07, 2017 01:27

ஆம்பூர்: ஆர்.கே. நகரில் இடைத்தேர்தல் நடப்பதால், ஆம்பூர் பிரியாணி மாஸ்டர்கள் பலர், அங்கு சென்றுள்ளனர். இதனால், உள்ளூரில் மாஸ்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

ஆம்பூர் பிரியாணி மாஸ்டர்கள் சங்க தலைவர் அப்துல் ரகீம், செயலர் பீர்முகமது ஆகியோர் கூறியதாவது: ஆம்பூர் பிரியாணி மாஸ்டர்கள் சங்கத்தில், 234 பேர் பதிவு செய்துள்ளனர். இதில், 132 மாஸ்டர்கள், ஆர்.கே., நகர் இடைத்தேர்தலுக்கு, பல்வேறு கட்சிகள் சார்பில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். ஆம்பூரில், இவர்களுக்கு தினமும், 500 முதல், 1,000 ரூபாய் வரை, கூலி வழங்கப்படும். ஆனால், ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்கு செல்லும் இவர்களுக்கு, தினமும், 1,500 ரூபாய் முதல், 3,000 ரூபாய் வரை, கூலி வழங்கப்படுகிறது. இதுதவிர, தங்குமிடம், வாகன போக்குவரத்து, சாப்பாடு வசதி செய்து கொடுத்துள்ளனர். ஏராளமான பிரியாணி மாஸ்டர்கள் சென்று விட்டதால், உள்ளூரில் பிரியாணி மாஸ்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
நெல்லையிலும் கவர்னர் ஆய்வு : 'பார்மாலிட்டி' ஆனது பட்டமளிப்பு விழா

Added : டிச 07, 2017 00:02

திருநெல்வேலி: நெல்லை பல்கலை பட்டமளிப்பு விழாவிற்கு வந்த கவர்னர் புரோஹித், அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை செய்ததோடு, பஸ் நிலையத்தில் துாய்மை பணியிலும் ஈடுபட்டார்.

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில், நேற்று மதியம், 1:00 மணிக்கு, 25வது பட்டமளிப்பு விழா நடந்தது. கவர்னர் புரோஹித் பங்கேற்று, 752 மாணவ - மாணவியருக்கு, பட்டங்களை நேரடியாக வழங்கினார். முன்னதாக, பல்கலை வளாகத்தில், 1 மெகாவாட் சோலார் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டத்திற்கு, கவர்னர் அடிக்கல் நாட்டினார்.
விழா முடிந்து, 2:00 மணிக்கு புறப்பட்ட கவர்னர் புரோஹித், நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்திற்கு சென்றார். அங்கு, மத்திய அரசின் துாய்மை இந்தியா திட்டத்தில் நடந்த துப்புரவு பணிகளை பார்வையிட்டார். கவர்னர் வருகையை முன்னிட்டு, நடைபாதை கடைகள், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, பஸ் நிலையம் பளிச் என இருந்தது. மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள், குப்பை கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கவர்னரும், கைகளில் ரப்பர் உறைகளை மாட்டி, சுத்தம் செய்யும் பணியில்ஈடுபட்டார். பின், அவரே குப்பையை கையால் எடுத்து போட்டார். கலெக்டர் சந்தீப் நந்துாரி உள்ளிட்ட அதிகாரிகளும் குப்பை அள்ளினர்.

அங்கிருந்த மாநகராட்சி கமிஷனர் நாராயணன் நாயரிடம், 'குப்பையை போட மக்கும் குப்பை, மக்காத குப்பைக்கு தனித்தனியாக கூடைகள் வைத்துக் கொள்ள கூடாதா... ஒரு அதிகாரிக்கே தெரியவில்லை என்றால், நீங்கள் எப்படி சாதாரண மக்களுக்கு தெரிவிப்பீர்கள்...' என, கவர்னர் கேள்வி எழுப்பினார். பின், துாய்மை பாரத இயக்கத்தின் துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினார். பஸ் ஸ்டாண்டில் நின்ற ஒரு மாணவியிடம் துண்டு பிரசுரத்தை கொடுத்து, சத்தமாக படிக்க சொன்னார். தொடர்ந்து, தெற்கு பஜார் பகுதியில், துாய்மைப் பணி விழிப்புணர்வு மேற்கொண்டார். பின், வண்ணார்பேட்டையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்றார். சுற்றுலா மாளிகையில், 2:00 மணியில் இருந்து, பல்வேறு துறை அதிகாரிகள், பைல்களுடன் காத்திருத்தனர். இதில், சுகாதாரம் உள்ளிட்ட, 15க்கும் மேற்பட்ட முக்கிய துறை அதிகாரிகளுடன், கவர்னர் ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆலோசனை நடத்தினார்.
மாலையில் மக்கள் பிரதி நிதிகள், தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள், எளிய மக்களை சந்தித்து, குறைகளை கேட்டறிந்தார். இரவு, கன்னியாகுமரிக்கு புறப்பட்டு சென்றார்.


அ.தி.மு.க.,வினர் ஓட்டம் : வழக்கமாக பல்கலை பட்டமளிப்பு விழாக்களில், அமைச்சர்கள் பங்கேற்பதால், முதல் வரிசையை, அ.தி.மு.க.,வினர் ஆக்கிரமித்து கொள்வர். ஆனால், நேற்று ராஜ்யசபா, எம்.பி., விஜிலா தவிர அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் - எம்.பி.,க்கள் ஒருவர் கூட, பல்கலை பக்கமே எட்டிப்பார்க்கவில்லை.
சபரிமலை படி பூஜை 2034 வரை முன்பதிவு

Added : டிச 07, 2017 01:36

சபரிமலை: சபரிமலை படி பூஜைக்கான முன்பதிவு, 2034ம் ஆண்டு வரை முடிந்துள்ளது. இதனால், பக்தர்கள் படி பூஜை செய்ய 17 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். சபரிமலையில் அதிக கட்டணம் உடைய பூஜை, படிபூஜை. 18 படிகளிலும் பட்டு விரித்து அதில் குத்து விளக்கு தேங்காய் மற்றும் நிவேத்ய பொருட்கள் வைத்து, தந்திரி பூஜை நடத்துவார். 18 படிகளிலும் 18 மலை தேவதைகளுக்காக இந்த பூஜை நடத்தப்படுகிறது. ஒரு மணி நேரம் இந்த பூஜை நடைபெறும். இந்த நேரத்தில் பக்தர்கள் படியேற முடியாது என்பதால் மண்டல மகரவிளக்கு காலத்தில் படி பூஜை நடைபெறாது. மாத பூஜை, விஷூ, திருவிழா போன்றவற்றுக்காக நடை திறக்கும் போது படி பூஜை நடைபெறும். இதற்கான முன்பதிவு, 2034, நவம்பர் மாதம் வரை முடிந்து விட்டது. இதனால், பக்தர்கள் இனி படி பூஜை நடத்த, 17 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். 75 ஆயிரம் ரூபாய் செலுத்தி தற்போது முன்பதிவு செய்யலாம், படி பூஜை செய்யும் காலத்தில் அப்போதைய கட்டணத்தை கூடுதலாக செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் முன்பதிவு ஏற்கப்படுகிறது.


Wednesday, December 6, 2017

நலம் தரும் நான்கெழுத்து 11: எதிலும் ‘பெர்ஃபெக்ட்’டா நீங்கள்?

Published : 02 Dec 2017 11:11 IST

டாக்டர் ஜி. ராமானுஜம்



கடவுள்தன்மை என்பது நுணுக்கங்களில் உள்ளது

– லுட்விக் மீஸ்

நீங்கள் துல்லியவாதியா?

தீவிரவாதி, பயங்கரவாதியெல்லாம் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதென்ன துல்லியவாதி என்கிறீர்களா? எதையுமே துல்லியமாக, மிகவும் முழுமையாக, மிகச் சரியாகச் செய்ய வேண்டும் என எண்ணும் மனப்பான்மையே துல்லியவாதம். இது ஆங்கிலத்தில் ‘பெர்ஃபெக்ஷனிசம்’ என அழைக்கப்படுகிறது.

விடாமுயற்சி, பொறுமை, திட்டமிடுதல் போன்ற பண்புகளின் குடும்பத்தைச் சேர்ந்த , அப்பண்புகளுடன் ஒரே ரேஷன் கார்டில் பெயர் இடம்பெறக் கூடிய உடன்பிறப்புதான், எதிலும் மிகச் சரியாக இருக்க வேண்டும் என எண்ணும் பண்பு. உடனடிப் பலன்களை எதிர்பாராமல், உடனடித் தோல்விகளை கண்டுகொள்ளாமல் முழுமையை நோக்கிப் பயணிப்பதே துல்லியவாதம்.

வெற்றிபெற்ற பெரிய மனிதர்களின் குணாதிசயங்களை ஆராய்ந்தவர்கள், விடாமுயற்சியோடு எதையும் மிகச் சரியாகச் செய்யும் துல்லியவாத குணமும் அவர்களது வெற்றிக்கு மிக முக்கியக் காரணியாக அமைந்துள்ளது என்பதைக் கண்டறிந்துள்ளனர்.

நேரம் தவறாமை முக்கியம்

துல்லியவாதிகள், நூறு சதவீத முழுமையின்றி வேறெதிலும் திருப்தி அடைய மாட்டார்கள். இவர்களிடம் இருக்கும் இன்னொரு முக்கியமான குணம், நேரம் தவறாமை. சில நானோ விநாடிகள்கூடத் தாமதமாக வருவது அவர்களுக்குப் பிடிக்காது.

சில இடங்களில் எல்லாமே மிகச் சரியாக இல்லாவிட்டால், ஆபத்தாகக்கூட முடியும். உதாரணத்துக்கு ஒரு அறுவைசிகிச்சை நிபுணர் மிகத் துல்லியமாக எல்லாவற்றையும் வைத்திருந்தாக வேண்டும். அதேபோல் விமான ஓட்டி விமானம் கிளம்புவதற்கு முன் எல்லாவற்றையும் சரிபார்த்தல் இன்றியமையாதது.

விதிமுறைகளைப் பின்பற்றுதல்

கச்சிதவாதி, கறார்வாதி என்றெல்லாம்கூடத் துல்லியவாதிகளை அழைக்கலாம். அவர்களுக்கு இருக்கும் இன்னொரு முக்கியமான பண்பு, விதிமுறைகளை அப்படியே கடைப்பிடித்தல். இன்று நம்முடைய பிரச்சினைகளில் பலவற்றுக்குக் காரணம் விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதில் நாம் காட்டும் அலட்சியமே. தலைக்கவசம் அணிவதிலிருந்து தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதுவரை விதிமுறைகளைப் பின்பற்றுவதில் நாம் காட்டும் அலட்சியம் பல தீமைகளை நமக்குத் தந்துள்ளது.

சுதந்திரம் அடைந்தபின் தமிழகத்தின் முதல் முதல்வரான ஓமந்தூர் ராமசாமியைப் பற்றி ஒரு சுவையான சம்பவத்தைக் கூறுவார்கள். அவர் தனது மகனை அழைத்துக்கொண்டு ஒரு முறை ரயிலில் பயணம் செய்தாராம். இரவு 12 மணி ஆனபோது டிக்கெட் பரிசோதகரை அழைத்து ‘இன்றுடன் என் மகனுக்கு 18 வயது தொடங்குகிறது. ஆகவே, அவனுக்கு முழு டிக்கெட் எடுக்க வேண்டும். ஆகவே மீதித் தொகையை என்னிடம் வசூல் செய்துகொள்ளுங்கள்’ என்று சொன்னாராம். இதுதான் விதிகளைப் பின்பற்றுவதில் சமரசமற்ற துல்லியம்.

ஆக, மனிதன் கடைப்பிடிக்க வேண்டிய பண்புகளில் முக்கியமான ஒன்று சமரசமற்ற தன்மை. ஆனால், இந்தத் தொடரைத் தொடர்ச்சியாகப் படிப்பவர்களுக்கு ஒன்று இந்நேரம் தெரிந்திருக்கும். எல்லாப் பண்புகளையும் போன்றே சமரசமற்ற துல்லியவாதமும் அளவுக்கு அதிகமாக இருந்தால், சமநிலைச் சீர்குலைவு ஏற்படும். சரியாக இருப்பது ஒரு குற்றமா என்பவர்கள் அடுத்த வாரம் சரிபார்த்துக் கொள்ளவும்!

கட்டுரையாளர், மனநலத் துறைப் பேராசிரியர்
தொடர்புக்கு: ramsych2@gmail.com
2ஜி அலைக்கற்றை வழக்கில் டிசம்பர் 21-ம் தேதி தீர்ப்பு: சிறப்பு நீதிமன்றம் அறிவிப்பு

Published : 05 Dec 2017 10:52 IST

புதுடெல்லி

முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்டோருக்கு எதிரான, 2 ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கின் தீர்ப்பு டிசம்பர் 21-ம் தேதி அறிவிக்கப்படும் என சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ 2 வழக்குகளை தொடுத்தது.

இந்த வழக்கு மீதான இறுதி வாதம் கடந்த ஏப்ரல் 26-ம் தேதி முடிந்ததையடுத்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த வழக்கில் தீர்ப்பு தயாராக காலதாமதம் ஆனதால் தீர்ப்பு தேதி டிசம்பர் 5-ம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

அதன்படி சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. சைனி தீர்ப்பு தேதியை அறிவித்தார். அப்போது அவர் கூறுகையில், ''2ஜி அலைக்கற்றை வழக்கில் டிசம்பர் 21ம் தேதி காலை 10 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும்'' என தெரிவித்தார்.
சங்கடங்கள் தீர்ப்பார் கணபதி! சங்கடஹர சதுர்த்தியை மறந்துடாதீங்க!

Published : 05 Dec 2017 14:59 IST

வி.ராம்ஜி



எந்தவொரு காரியத்தைத் தொடங்குவதாக இருந்தாலும் பிள்ளையாரை வணங்கிவிட்டுத்தான் காரியங்களில் இறங்குவோம். அப்படித் தொடங்குகிற காரியங்களில் துணையாய் இருந்து தும்பிக்கையான் நம்மைக் காத்தருள்வார் என்கின்றனர் பக்தர்கள். இவரை சங்கடஹர சதுர்த்தி நாளில், ஏராளமான பக்தர்கள் வழிபடுவார்கள்.

விநாயகருக்கு உகந்தது அருகம்புல். சங்கடஹர சதுர்த்தி நாளில், இவருக்கு அருகம்புல் மாலை சார்த்தி வணங்கினால், எல்லாக் கஷ்டங்களும் விலகிவிடும். சந்தோஷம் மனதிலும் இல்லத்திலும் குடிகொள்ளும் என்பது ஐதீகம்.

அதேபோல், வெள்ளெருக்கம்பூவை மாலையாகக் கட்டி, பிள்ளையாருக்கு சார்த்தி பிரார்த்தனை செய்தால், வீட்டில் உள்ள தோஷங்கள் யாவும் நீங்கிவிடும். காரியத்தடைகள் அகலும் என்கிறார் சென்னை நங்கநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் பாலாஜி வாத்தியார்.

சங்கடஹர சதுர்த்தி நாளில், அருகில் உள்ள விநாயகர் கோயிலுக்கு மாலையில் சென்று, விநாயகருக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனைகளை தரிசிப்பது நன்மைகளைத் தரும்.

முடிந்தால், அபிஷேகப் பொருட்களை வழங்கலாம். அதேபோல், சங்கடஹர சதுர்த்தி நன்னாளில், அருகம்புல் மாலையோ வெற்றிலை மாலையோ வெள்ளெருக்கம்பூ மாலையோ சார்த்தி வேண்டிக் கொள்வது வினைகள் அனைத்தையும் தீர்க்கும்.

இன்னும் இயலும் என்றால், பிள்ளையாருக்குக் கொழுக்கட்டையோ சுண்டலோ நைவேத்தியமாகப் படைக்க உதவுங்கள். உங்கள் வாழ்க்கை இன்னும் வளமாகும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

நாளை 6.12.17 புதன்கிழமை அன்று சங்கடஹர சதுர்த்தி. மறக்காமல், விநாயகரைத் தரிசியுங்கள். நம் சங்கடங்களையெல்லாம் தீர்த்தருள்வார் மகா கணபதி!
ரூ.1 கோடி வரதட்சணை கேட்டதால் கடைசி நிமிடத்தில் திருமணத்தை நிறுத்திய டாக்டர் மணப்பெண்

Published : 06 Dec 2017 09:21 IST

கோட்டா



திருமண நாளில் ரூ.1 கோடி வரதட்சணை கேட்டதால் பெண் பல் மருத்துவர் ஒருவர் தனது திருமணத்தை கடைசி நிமிடத்தில் நிறுத்தினார்.

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் உள்ள மருத்துவக் கல்லூரியில் முதுநிலை பேராசிரியராக பணியாற்றி வரும் அனில் சக்ஸேனா என்பவரின் மகள் ரஷி. பல் மருத்துவரான ரஷிக்கும் உ.பி.யின் மொராபாத் மருத்துவக் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வரும் சாக்ஷம் மாதோக் என்பவருக்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை திருமணம் நடைபெறவிருந்தது.

கடந்த சனிக்கிழமை திருமணம் நிச்சயம் செய்யப்பட்டபோது மணமகனுக்கு காரும் 50 கிராம் தங்க நாணயங்களும் பரிசாக வழங்கப்பட்டன. கார் தவிர வரதட்சணை மற்றும் பிற ஏற்பாடுகளுக்காக ரூ.35 லட்சம் வரை செலவிடப்பட்டுள்ளது என மணமகள் தரப்பில் தெரிவிக்கின் றனர்.

இந்நிலையில் திருமணத்துக்கு முன்பு மணமகன் குடும்பத்தினர் திடீரென பரிசுப் பொருட்கள், பணம், நகை என கூடுதலாக ரூ.1 கோடி வரதட்சணை கேட்டதால் அனில் சக்ஸேனாவும் அவரது மனைவியும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவர்கள் தங்கள் மகள் ரஷியிடம் பேசினர். ரஷி தொலைபேசியில் மணமகனிடம் பேசினார். ஆனால் அவர் வரதட்சணையில் பிடிவாதமாக இருந்ததால் அவரை திருமணம் செய்துகொள்ள ரஷி மறுத்துவிட்டார்.

என்றாலும் திருமண விருந்து பரிமாறப்பட்ட பிறகே இந்த விஷயத்தை உறவினர்களிடம் அனில் சக்ஸேனா குடும்பத்தினர் தெரிவித்தனர். திருமணத்துக்கு மறுத்த ரஷியின் முடிவை விருந்தினர்கள் பாராட்டினர்.

இதுதொடர்பாக மணமகன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக நயாபுரா காவல் நிலையத்தில் சக்ஸேனா புகார் அளித்தார். இதன் பேரில் போலீஸார் விசாரணை மேற் கொண்டுள்ளனர்.- பிடிஐ

NEWS TODAY 25.01.2026