Sunday, December 10, 2017

'நானோ சிகிச்சை முறை'- ரூ.10 ஆயிரத்தில் புற்றுநோய்க்கு மருத்துவம்!

By Raghavendran | Published on : 09th December 2017 07:01 PM



பெங்களூருவில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டவர்களின் ஒரு பகுதி.

புதிய வகை நானோ சிகிச்சை முறையில் ரூ.10 ஆயிரத்தில் புற்றுநோய்க்கு மருத்துவம் மேற்கொள்ளும் முயற்சியில் ஐஐடி, மும்பை பேராசிரியர் டாக்டர். ரோஹித் ஸ்ரீவஸ்தவா மற்றும் கொச்சியைச் சேர்ந்த நானோ தொழில்நுட்ப வளாகத்தின் முதல்வர் ஷாந்திகுமார் வி நாயர் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், 'நானோ மருத்துவமுறை கருத்தரங்கம் - 2017' பெங்களூருவில் நடைபெற்றது. இதில் ஐஐடி, மும்பை பேராசிரியிர் டாக்டர். ரோஹித் ஸ்ரீவஸ்தவா பேசியதாவது:

புற்றுநோயை எதிர்கொள்ளும் விதமாக புதிய மருத்துவ சிகிச்சை முறை தற்போது ஆராயப்பட்டு வருகிறது. இந்த புதிய முயற்சி விரைவில் முழுமையாக்கப்பட்டு வெற்றிகரமாக பரிசோதிக்கப்படும். இந்த நானோ சிகிச்சை முறையின் மூலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அறுவை சிகிச்சை மற்றும் கீமோதெரபி ஆகியவை தவிர்க்கப்படும்.

மேலும் இந்த புதிய முறையால் மருத்துவச் செலவுகளும், சிகிச்சை பெறும் நாட்களும் பெரிய அளவில் குறையும் நிலை ஏற்படும். இப்போதைய காலகட்டத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் சிகிச்சை பெற குறைந்தபட்சம் ரூ.5 லட்சம் வரை செலவு ஏற்படுகிறது. இந்த நிலை முற்றிலும் மாறும்.

இந்த சிகிச்சை முறையானது தங்கத்தின் நானோ பார்டிகலுடன் புற்றுநோய் எதிர்ப்பு மருந்தினை இணைத்து புற்றுநோய் பாதித்துள்ள பகுதிகளில் செலுத்தப்படும். பின்னர் அவை இன்ஃப்ரா ரெட் மூலமாக 50 டிகிரிக்கு வெப்பமாக்கப்படும். இதன்மூலம் செலுத்தப்பட்ட மருந்து நேரடியாக புற்றுநோய் பாதித்த பகுதிகளில் செலுத்தப்படும்.

இந்த சிகிச்சை முறையின் முதல்கட்ட பரிசோதனைகள் வெற்றிகரமாக முடிந்துள்ளது. அடுத்தகட்ட நகர்வுகளாக இதன் 2-ஆம் கட்ட பரிசோதனை முறையினை மேற்கொள்ள இருக்கிறோம் என்றார்.

இதுகுறித்து கொச்சியைச் சேர்ந்த நானோ தொழில்நுட்ப வளாகத்தின் முதல்வர் ஷாந்திகுமார் வி நாயர் தெரிவித்ததாவது:

இந்த நானோ சிகிச்சை முறையின் மூலமாக புற்றுநோயை உருவாக்கும் செல்களை எளிதில் கண்டறிந்து கட்டுப்படுத்த முடியும். மேலும் ஒரே வழியில் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கும் பல்வகை மருந்துகளை செலுத்தும் தன்மை குறித்தும் ஆராய்ந்து வருகிறோம்.

இவ்வகை சிகிச்சை முறையின் பரிசோதனைகளுக்கு ரூ.7 கோடி வரை நிதி தேவைப்படுகிறது. அதற்காக www.impactguru.co என்ற இணையதள பக்கத்தினை உருவாக்கி அதில் க்ரௌட் ஃபன்டிங் முறையில் நன்கொடை பெற்று வருகிறோம். இந்த நன்கொடை முறையை துவக்கி இந்த 45 நாட்களில் இதுவரை ரூ.63,000 க்ரௌட் ஃபன்டிங் முறையில் நன்கொடை பெற்றுள்ளோம் என்றார்.
சபரிமலை சிறப்பு ரயில்கள் இன்று முதல் மாவேலிக்கரையில் நிறுத்தப்படும்

By DIN | Published on : 10th December 2017 04:16 AM |

சென்னை எழும்பூர், சென்ட்ரலில் இருந்து கொல்லத்துக்கு செல்லும் சபரிமலை சிறப்பு ரயில்கள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை (டிச.10) முதல் மாவேலிக்கரை ரயில் நிலையத்தில் பக்தர்களின் வசதிக்காக 2 நிமிஷம் நிறுத்தப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மாவேலிக்கரையில்


நிறுத்தப்படும் சிறப்பு ரயில்கள்


1. ரயில் எண் 06045/06046: சென்னை சென்ட்ரல் - கொல்லம் - சென்னை சென்ட்ரல்
2. ரயில் எண் 06051/06052: சென்னை சென்ட்ரல் - கொல்லம் - சென்னை சென்ட்ரல்
3. ரயில் எண் 06047/06048: சென்னை சென்ட்ரல் - கொல்லம் - சென்னை சென்ட்ரல்
4. ரயில் எண் 06049/06050: சென்னை எழும்பூர் - கொல்லம் - சென்னை எழும்பூர்
5. ரயில் எண் 06041/06042: சென்னை சென்ட்ரல் - கொல்லம் - சென்னை சென்ட்ரல்
6. ரயில் எண் 06043/06044: சென்னை சென்ட்ரல் - கொல்லம் - சென்னை சென்ட்ரல்
விளம்பரத்தை விரும்பாதவர்

   k2
Published on : 10th December 2017 12:00 AM |

1967-இல் தமிழகத்தில் காங்கிரஸ் தோல்வியடைந்து திமுக அரியணை ஏறியது. அப்போது ஒரு காங்கிரஸ்காரர் காமராஜரிடம், "அய்யா! மக்களுக்காக நீங்கள் எவ்வளவோ செய்திருக்கிறீர்கள்.

அப்படியும் தேர்தலில் நமக்கு வாக்குகள் விழவில்லை. திமுகவினர் ஓயாத பிரசாரத்தின் மூலம் நம்மை வீழ்த்திவிட்டார்கள். நீங்களோ மக்களுக்கு என்னவெல்லாம் செய்தோம் என்பதைக் கூட பிரசாரத்தில் விவரமாய்த் தெரிவிக்கவே இல்லையே'' என்றார் வேதனையுடன். அதற்கு காமராஜர், "அட போய்யா! பெத்த தாய்க்கு சேலை வாங்கிக் குடுக்கிற மகன், "எங்கம்மாவுக்கு நான் சேலை வாங்கிக் குடுத்தேன், எங்கம்மாவுக்கு நான் சேலை வாங்கிக் குடுத்தேன்'னு தம்பட்டம் அடிக்கலாமான்னேன்! நம்ம கடமையைத்தானேய்யா செஞ்சோம்? அதில பீத்திக்கிறதுக்கு என்ன இருக்குன்னேன்?'' என்றார்.


மு.பெரியசாமி
தபால் சேமிப்பு கணக்குகளுடன் ஆதார் இணைப்பு காலக்கெடு நீட்டிப்பு வராததால் நுகர்வோர் கலக்கம்

By DIN | Published on : 10th December 2017 01:29 AM |

தபால் சேமிப்பு கணக்குகளுடன் ஆதாரை இணைப்பதில் காலக்கெடு நீட்டிப்பு தொடர்பான உத்தரவு ஏதும் இதுவரை வரவில்லை என்று தபால் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால், தபால் துறையில் சேமிப்புக் கணக்கு வைத்துள்ளோர் கலக்கம் அடைந்துள்ளனர்.
உச்சநீதிமன்றத்தில் ஆதார் தொடர்பான வழக்கு ஒன்றில், பல்வேறு நலத்திட்டங்கள், சேவைகளுக்கு ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடுவை மார்ச் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கத் தயாராக உள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 


இதையடுத்து, நிரந்தரக் கணக்கு எண்ணுடன்(பான் எண்ணுடன்) ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடு அடுத்த ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுபோல, வங்கி கணக்கு, தபால் சேமிப்பு கணக்கு உள்பட பல்வேறு சேவைகளுக்குடன் ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தபால் துறையில் சேமிப்பு கணக்கு உள்பட பல்வேறு சேமிப்புத் திட்டக் கணக்குகளுடன் ஆதாரை இணைப்பது தொடர்பாக காலக்கெடு நீட்டிப்பு பற்றி இதுவரை அதிகாரப்பூர்வ உத்தரவு ஏதும் வரவில்லை என தபால் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுகுறித்து தபால்துறை உயரதிகாரிகள் கூறியதாவது:-


தபால் சேமிப்பு கணக்கு உள்பட பல்வேறு சேமிப்பு திட்ட கணக்குகளுடன் ஆதார் எண்ணை வரும் 31-ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக தபால் வட்டத்தில் 2 கோடியே 59 லட்சம் சேமிப்பு கணக்குகள் உள்ளன. 


இந்த கணக்குகளில், 28 லட்சத்து 70 ஆயிரம் கணக்குகளுடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தபால் சேமிப்பு கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க காலக்கெடுவை நீட்டித்து எந்தவொரு உத்தரவும் தபால் துறைக்கு இதுவரை வரவில்லை. அப்படி அறிவிப்பு வரும் பட்சத்தில் உடனடியாக மக்களுக்கு தெரிவிக்கப்படும் என்றனர் அவர்கள். ஆதார் எண்ணை சேமிப்புக் கணக்குடன் இணைக்க காலக்கெடு நீட்டிப்பு குறித்த அறிவிப்பு ஏதும் வராத சூழலில், தபால் அலுவலகங்களில் கணக்கு வைத்துள்ளோர் கலக்கம் அடைந்துள்ளனர்.
வகுப்பறை சிறைச்சாலையல்ல!

By கிருங்கை சேதுபதி | Published on : 08th December 2017 04:01 AM |


நான்கு சுவர்களுக்கு நடுவில் கிடக்கும் வெற்றிடமென்று பார்க்கத் தெரிந்தாலும், வகுப்பறை என்பது நான்கு திசைகளையும் அளக்கத்துணிந்த இளந்தலை
முறையினரின் பயிற்சிக்கூடம். 


எத்தனைதான் பயின்றாலும் பயிற்றினாலும், நாளும் பொழுதும் கற்போரும் கற்பிப்போரும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்தான் வாழ்க்கை. அதற்கான பயிற்சிக்கூடம்தான் வகுப்பறை.
கரும்பலகையில் வெண்சுண்ணக் கட்டி கொண்டு எண்ணையும், எழுத்தையும் இன்னபிற கோடுகளையும் வளைவுகளையும் புள்ளிகளையும் தீட்டிக்காட்டிப் புரியவைக்கும் சாமர்த்தியம் கைவரப்பெற்றவர்களால், வகுப்பறை ஒரு பல்கலைக்கூடமாகப் பரிணாமம் பெற்றெழுகிறது!
கரும்பலகை வசதிகள்கூட இல்லாத இடங்களில் உச்சரிப்பின் மூலமாகவும், மெய்ப்பாடுகளின் வாயிலாகவும் தனி நடிப்பு எனத் தக்க வகையில், கற்போரின் கவனங்களை ஈர்த்து, கருத்துகளைச் செரித்துக் கொள்ளும் வகையில் ஊட்டிவிடுகிறதாய் ஒத்து உயர்கின்றனர், தனித்துவமிக்க ஆசான்கள்.


ஒரு சொல், கற்பிப்பவரின் இதழிலிருந்து உதிர்ந்து, கற்போரின் செவி சேர்கிறபோது எய்துகிற பரிமாணங்கள் பற்பல. சான்றாக, மரம் என்று அவர் சொல்வதை செவியேற்கும் நெஞ்சங்களில் விரியும் மரமும், கிளைகளும், மலர்களும் நிழலும் ஒற்றைத்தன்மை உடையது இல்லை.
எல்லார்க்கும் பொதுவான அனுபவத்திலிருந்து தொடங்கி, அவரவர்க்கான தனித்தனி அனுபவங்களுக்குள் ஆழ்த்தி, மீண்டும் பொதுவான அனுபவத்திற்குக் கொண்டுவந்து நிறுத்துகிற பாடம் எதுவாயினும் அது சுவாரஸ்யமானது; சமூகப் பயன்மிக்கது.


அதுபோல் ஒரு கருத்து, கற்பிப்போர் - கற்போர் ஆகிய இருதரப்பிலிருந்தும் எழுப்பப்படுகிறபோது, அது ஜனநாயகத்தன்மை பெற்றுவிடுகிறது. தன் கருத்து இது என்று கற்பிப்பவர் சொல்வது


போலவே, கற்போரும் தத்தம் உளக் கருத்துகளை உரைக்கும் வாய்ப்பை வழங்க வேண்டும். பயம் களையப்படுகிற இடத்தில்தான் நல்ல பாடம் கிடைக்கும். அச்சுறுத்தி அடிமைத்தனத்தை வளர்க்கலாமே ஒழிய, அறிவை வளர்க்க இயலாது. 


"குழந்தைகளுடைய மனதின் ரகசியத்தையும், ஆசிரியர் பயிற்சி என்னும் கலையையும், ஆசிரியரின் திறமையையும், அறிய முற்படுகையில், ஒவ்வொரு குழந்தையிடமும் நான் எனது ஆசிரியரை, ஆசானைக் காண்பேன்' என்கிறார், சோவியத் நாட்டுப் பேராசிரியரும் கல்வியாளருமாகிய ஷ. அமனஷ்வீலி. 


இந்த இடத்தில் இன்னொன்றையும் புரிந்து கொள்கிறோம். எந்தக் குழந்தையும் அறியாமையின் சொரூபம் அன்று; அதனதன் அறிவோடு, சூழலியல் தன்மையோடுதான் பள்ளிக்கு வருகிறது. அதன் செவியிலும் சிந்தையிலும் - வரையறுக்கப்பட்ட கருத்தை அல்லது பாடத்தைத் திணித்தால் அது திமிறும்; மறுதலிக்கும்; எதிர்ப்புணர்ச்சிக்கும் வெறுப்புணர்ச்சிக்கும் அதுவே வழிவகுக்கும். அதற்குப் பதிலாக அதன் தன்மை இன்னதென அறிந்து தன் பாடத்தைத் தொடங்காமல், தன்பாட்டுக்குத் தொடங்குபவர்களிடமிருந்து விலகிப்போகிறது, கவனம்!
கவனத்தை ஈர்த்துத் தன்வசப்படுத்தியபின் வகுப்பறை ஒரு மாயாஜாலக் கூடமாகி விடுகிறது! எண்களும் எழுத்துகளும் நிறைந்து வாழ்வின் ருசிகரமான அனுபவங்களை உணர்த்திவிடுகிறபோது, கற்றல் சுகமாகிவிடுகிறது! அண்டா நிறைய இருக்கிற நீரை, குறுகிய வாயினை உடைய ஒரு குடுவைக்குள் கொள்ளும் அளவிற்கு ஊற்றுகிற நேர்த்தி கைவரப்பெற்றவர்கள் நல்லாசிரியர்கள். அதற்குப் பாடப்புத்தகம் என்பது ஒரு கையேடு; அவ்வளவே! அது வேதப்புத்தகம் அன்று. 


எந்தப் பாடமாயினும் அதனோடு தொடர்புடைய கவிதை, கதை, வரலாறு, உள்ளூர் நிலவியல் மற்றும் சூழலியல் தன்மைகளை இணைத்துச் சொல்லி, அப்  பாடம் குறித்த சித்திரத்தைக் கற்போர் மனங்களில் நிலைப்படுத்தி விடுகிற ஆசான்கள், பயில்வோருக்கு மிகச்சிறந்த முன்னோடிகள். உலகின் எந்த உண்மையும் தனது ஆசிரியருக்குத் தெரியாமல் இருக்காது என்ற நம்பிக்கையைப் பிள்ளைகள் பெறுவது இந்தக் கணத்தில்தான்.


வறுமை சூழ்ந்த கிராமத்துப் பழைய பள்ளிக் கூடங்களில் ஆசிரியர்கள் நடத்திய பாடங்கள் இன்னும் மனச்சித்திரங்களாகப் பலரின் சிந்தைகளை நிறைத்திருப்பதற்கும் இதுதான் காரணம். அப்படித்தான் நமது ஆசான்கள் பலரும் நமக்குக் கற்பித்தார்கள்; வாழ்ந்தும் காட்டினார்கள்.
துறைதோறும் சிறந்து விளங்கிய அறிஞர்களாக அவர்கள் உருவாக, முறையோடு எழுத்தறிவித்த கலைக்கோயில்கள் பள்ளிகளே! முக்கால உண்மைகளைத் தற்கால உணர்வுகலந்து தெளிவுபடுத்துகிற இடம் வகுப்பறை!


குழந்தைகள் கற்கும் எந்திரங்கள் அல்லர். கற்பவரும் கற்பிப்பவரும் இணைந்து பெறும் இனிய அமுது கல்வி. அது அறியாமையில் இருந்து அறிவிற்கும், மரணத்திலிருந்து மரணமற்ற பெருவாழ்விற்கும் இட்டுச் செல்லும் ஞானரதம். 


"வித்து முளைத்திடும் தன்மைபோல் கற்றது கைகொடுக்கும்' என்பதைப் பெற்றோரும் மற்றோரும் புரிந்துகொள்ள வேண்டும். கற்றலில், சில மாதங்களில் பயன்தரும் கடலைச் செடியும் உண்டு; தலைமுறைக்கும் பயன் தருகிற ஆலமரமும் உண்டு.
"கல்வி ஒரு மூட்டை நூல்களை வாசிப்பது அன்று; அடக்கம், ஒழுங்கு, அறம், நீதி இவற்றின் முன்மாதிரியாகும்!' என்கிறார் எட்மண்ட்பர்க். அதனை நடைமுறைப்படுத்த வேண்டிய இடம் வகுப்பறை.


வாழ்வியல் விழுமியங்களை உள்ளடக்கிய கல்விமுறை வழங்கும் கலைக்கூடங்களாக, என்று நமது பள்ளிகள் உயர்கின்றனவோ, அன்றுதான் வளரும் தலைமுறையினர் தகுந்த குடிமகன்களாக உருவாவார்கள் என்பது உறுதி. 


தனித்தன்மை சிதையாமல், பொதுத்தன்மை குலையாமல் மனிதத்துவத்தோடு குழந்தைகள் வளரத் துணைபுரியும் வகுப்பறை என்பது சிறைச்சாலையன்று; கனவுகளின் தொழிற்சாலை கூட இல்லை. கருதியது இயற்றக் கற்றுக்கொடுக்கும் தவச்சாலை; அதுவே மனிதப் பயிர் வளர்க்கும் இனிய நாற்றங்கால்.
35 ஆண்டுகளாக ஓய்வூதியத்துக்காக போராடிய தியாகி: 2 மாதங்களுக்குள் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு
By DIN | Published on : 10th December 2017 02:26 AM |

ஊழலுக்கு எதிரான அடுத்த சுதந்திர போராட்டத்தை தொடங்க வேண்டிய நேரம் வந்துள்ளதை மத்திய- மாநில அரசுகள் உணர வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தேச விடுதலைக்காக நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தொடங்கிய இந்திய தேசிய ராணுவத்தில் தனது 14 வயதில் சேர்ந்தவர் முனுசாமி. 


பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டவரை கைது செய்த பிரிட்டிஷ் அரசாங்கம் ரங்கூன் சிறையில் வைத்துள்ளது. அதன்பின்னர் 1950-ஆம் ஆண்டு சிறையிலிருந்து விடுதலையாகி நாடு திரும்பினார்.


தியாகிகளுக்கான ஓய்வூதியம் கோரி கடந்த 1982-ஆம் ஆண்டு முதல் மத்திய மாநில அரசுகளை அணுகிய அவரது கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன. இதனையடுத்து, அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் கடந்த 2008-ஆம் ஆண்டு ஓய்வூதியம் வழங்குவது குறித்து பரிசீலிக்க உத்தரவிட்டது. 


இந்த வழக்கில் போதிய ஆதாரங்கள் சமர்ப்பிக்கவில்லை, 14 வயதில் ராணுவத்தில் சேர்ந்ததை ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனக் கூறி அவரது கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன.
இதனை எதிர்த்து முனுசாமி மீண்டும் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ஆவணங்களைப் பார்க்கும் போது அவர் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் என்பது தெளிவாகிறது. எனவே தகுதி பெற்ற நாளில் இருந்து இதுவரை அவருக்கு வழங்க வேண்டிய ஓய்வூதியத் தொகையை இரண்டு மாதங்களில் வழங்க வேண்டும். இனிவரும் நாள்களில் ஒவ்வொரு மாதமும் 5 ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் ஊழலுக்கு எதிரான அடுத்த சுதந்திர போராட்டத்தை தொடங்க வேண்டிய நேரம் வந்துள்ளதை மத்திய மாநில அரசுகள் உணர வேண்டும். மேலும் தேச விடுதலைக்கான போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நாம் அனைவரும் வணங்க வேண்டும் என்றார்.
போதை பொருள் பயன்பாட்டை தடுக்க கல்லூரிகளுக்கு உத்தரவு

Added : டிச 10, 2017 00:30 |

 
போதை பொருள் பயன்பாட்டை தடுக்க, பொறியியல், மருத்துவக் கல்லுாரி முதல்வர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

நடவடிக்கை

அனைத்து மாநிலங்களிலும், கல்லுாரிகளில் போதை பொருள் பயன்பாடு அதிகரித்து உள்ளதால், அதை கட்டுப்படுத்த, உயர் கல்வி நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதன்படி, அனைத்து, பொறியியல், மருத்துவக் கல்லுாரிகள், பாலிடெக்னிக்குகள், கலை, அறிவியல் கல்லுாரிகளின் முதல்வர்களுக்கு, உயர் கல்வி செயலர், சுனில் பாலிவால் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

அதவ் விபரம்:

அனைத்து கல்லுாரிகளிலும், போதை பொருள் பயன்பாடு இல்லாமல், முதல்வர்கள் விதிகள் வகுக்க வேண்டும்.

அறிவிப்பு பலகை

தங்கள் நிறுவனத்தில் இருந்து, 100 மீ., சுற்றளவில், புகையில்லா பகுதி என, அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். புகையில்லா பகுதியை உறுதி செய்து கையெழுத்திட்டு, மேல் அதிகாரி
களுக்கு கடிதம் அனுப்ப வேண்டும். புகையிலை பொருளால் ஏற்படும் தீமை குறித்து, மாணவர்கள் வழியே, விழிப்புணர்வு பேரணி, கருத்தரங்கம் நடத்த வேண்டும். எந்த கல்லுாரியிலும், மாணவர்கள் போதை பொருளுக்கு அடிமையாகாமல், நிர்வாகத்தினர் கண்காணிப்புடன் இருக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

- நமது நிருபர் -

NEWS TODAY 26.01.2026