Tuesday, December 12, 2017

இனி இது இல்லாமல் திருப்பதிக்கு செல்ல முடியாது!
   tirupathi
Published on : 11th December 2017 01:11 PM |

திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் இத்தலம் அமைந்துள்ளது.

சேஷாத்திரி, கருடாத்திரி, நீலாத்திரி, அஞ்சனாத்திரி, விருஷபாத்திரி, நாராயணாத்திரி, வெங்கடாத்ரி என ஏழு மலைகள் சூழ்ந்த இடத்தில் இருப்பதால் இத்தலம் ஏழுமலை என்றும், இத்தலத்தின் மூலவர் வேங்கடாசலபதி என்றும் வேங்கடன் என்றும் அழைக்கப்படுகிறார். இத்தலத்தின் தாயார் பத்மாவதி அம்மையார்.

வழக்கமாகத் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வார விடுமுறை நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இந்நிலையில், டிசம்பர் 23-ம் தேதி முதல் பள்ளிகளுக்கு தேர்வு விடுமுறை, அதனைத் தொடர்ந்து கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை வருவதால் 2018 ஜனவரி முதல் வாரம் வரை விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாகவும் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

2018-ம் ஆண்டு ஜனவரி 1 முதல் ஆதார் இருந்தால் மட்டுமே விஐபி தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படும் என்று அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே, 2018-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் திருப்பதியில் விஐபி தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் அனைவருக்கும், தங்களின் ஆதார் அட்டையைக் கட்டாயம் கையில் வைத்திருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், லட்டு உற்பத்தியை அதிகரிப்பதற்காக இயந்திரங்களைப் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் திருப்பதி தேவஸ்தான இணை செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

நன்றியுள்ள ரிக்ஷாக்காரன்…!

By வழக்கறிஞர் சி.பி. சரவணன் | Published on : 09th December 2017 12:45 PM |


சென்னை மவுண்ட்ரோடு தபால்தந்தி அலுவலகம்! மாலை ஆறு மணி, நீண்ட வரிசை, அதில் வியர்வையால் நனைந்து, காய்ந்து விரைத்து நிற்கும் சட்டை, கோடு போட்ட உள் டவுசர் வெளியில் தெரிய மடித்துக் கட்டிய லுங்கி முகத்தில் சோகம், எப்படியும் மீட்டு விடலாம் என்ற நம்பிக்கை இழையோடும் கண்கள், பரபரப்புடன் ஒரு ரிக்‌ஷாகாரர்.

ஒரு வழியாய் மனதை திடப்படுத்திக் கொண்டு உள்டவுசர் பாக்கெட்டில் இருந்த ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், பத்து ரூபாய் என்று கசங்கி சுருண்டு கிடந்த நோட்டுகளை தந்திக் கவுண்டரில் அள்ளிப் போட்டுக் கொண்டே…


”இவ்வளவு தான்யா இன்னிக்கு ரிக் ஷா ஓட்டின கலெக்ஷன், இதை எடுத்துக்க”
“யோவ் நீ என்ன இடம் மாறி வந்துட்டியா, நான் உன் ரிக்‌ஷா ஓனர் இல்ல…!


“அய்ய…துட்டு உன்க்கில்லைபா…தந்தி கொடுக்க”
“எந்த ஊருக்கு?”


அமெரிக்காவிலுள்ள ப்ரூக்ளின் ஆஸ்பத்திரிக்கு” தலைவா கவலைப் படாதே... நாங்கள் உயிருடன் இருக்கும் வரை உன்னை எங்களிடமிருந்து பிரிக்க முடியாது” இதுக்கு எவ்வளவு காசு”

“95 ரூபாய் ஆகுது”


“இந்தா எடுத்துக்க..


அலுவலர் அந்த அழுக்கு நோட்டுகளை எண்ணிப் பார்த்து, 78 ரூபாய் தான் இருக்கிறது, இன்னும் 17 ரூபாய் வேண்டும்.


“மீண்டும் பாக்கெட்டுக்குள் கையை விட்டுத் துழாவுகிறார், 10 பைசா கூட இல்லை.
அவருக்குப் பின்னால் வரிசையில் நின்றவர்கள், ரிக் ஷாக்காரரைப் பார்த்து .
“அண்ணாத்தே, காசு இல்லன்னா எடத்தை காலி பண்ணு, நாங்க தந்தி கொடுக்கணும்.”
“நிலை தடுமாறிய ரிக்ஷாக்காரர், சார் கொஞ்சம் பொறுத்திரு, நாலு சவாரியில நீ கேட்ட துட்டை கொண்டு வந்துடுறேன், நீ வூட்டுக்கு போயிடாத, ஆபீஸ எப்ப மூடுவ?!


“எப்பவும் மூட மாட்டோம், இந்த கவுண்டர் 24 மணி நேரமும் திறந்திருக்கும்”
“அது போதும் இன்னும் அரை அவர்ல வந்துட்றேன்... நேரத்தை வீணாக்காமல் வெளியேறுகிறார்.
“நீங்க எந்த ஊருக்குமா தந்தி கொடுக்கணும்..?”


காலிப் பூக்கூடையுடன் க்யூவில் நின்ற பூக்காரப் பெண்மணியிடம் கேட்கிறார். தந்தி அலுவலர்.
”ப்ரூக்ளின் ஆஸ்பத்திரிக்கு”


ஒரு நாள் முழுக்க வியர்வை சிந்திய காசை வீட்டுக்கு எடுத்துச் செல்லாமல், ஒரு தலைவனின் உயிருக்காக தன்னை வருத்தி தவம் கிடக்கிறார்கள். இப்படிப்பட்ட மனிதர்களை, கொஞ்சம் கேலித்தனத்துடன், பார்க்கிறார் தந்தி அலுவலர்.
அரை மணி நேரத்திற்குள் வருவதாக சென்ற ரிக்ஷாகாரர், ஒரு மணி நேரம் கழித்து வருகிறார்.
“இந்தா சார் நீ கேட்ட 17 ரூபாய்’ என்று


நான்கு ஐந்து ரூபாய் நோட்டுகளை கொடுக்கிறார்...
பரிவுடன் பதிவு செய்து கொண்ட தந்தி அலுவலர்…


ஏம்பா நான் கேட்குறேன்னு தப்பா நினைக்காத. நீ தந்தி கொடுக்கறதுனால என்ன பிரயோஜனம், தலைவர்களெல்லாம் நிறையச் சம்பாதிச்சு ரொம்ப உயர்ந்து இருக்காங்களே, உங்களை மாதிரி தொண்டர்கள் எல்லாம் மூடத்தனமா ஏன் இப்படி செயல்படுறீங்க?


அவுங்க உங்களுக்கு ஒரு டீயாவது வாங்கி கொடுத்திருப்பாங்களா?


வேறு நேரமாயிருந்தால், ரிக் ஷாக்காரர் தாறுமாறாக செயல்பட்டிருப்பார், ஆனால் நல்லவேளை அந்த நேரத்தில் மட்டும் ரிக்ஷாக்காரர் பொறுமையாக செயல்பட்டார்.


“சார் இது வரைக்கும் ஒரு டீயாவது வாங்கி கொடுத்திருப்பாங்களான்னு கேட்டீங்க, மத்த தலைவர்களைப் பத்தி எனக்குத் தெரியாது. ஆனா என் தலைவன் அப்படி இல்லை, எங்களை மாதிரி ஏழை ஜனங்களுக்கு என் தலைவன் என்ன வேணும்னாலும் செய்வான் உங்களுக்குத் தெரியுமா? என் குடும்பம் மூனு வேளை சோறு துண்றதே என் தலைவனால தான்.’
“என்னப்பா சொல்ற..?


“ ஆமா சார்..! இந்த ரிக் ஷா என் தலைவன் வாங்கிக் கொடுத்தது அந்தத் தலைவனுக்காக என் குடும்பம் ஒருநாள் பட்டினி கிடந்தா, செத்தா போயிடுவோம்..
அதிகம் பேச வரவில்லை……பீறிட்டு வந்த அழுகையை அடக்கிக் கொண்டு ரிக்ஷாக்காரர் விருட்டென்று கிளம்பி விட்டார்.


படித்த நமக்கே, படிக்காத ரிக்‌ஷாக்காரர் பாடம் கற்பித்துச் சென்றுவிட்டாரே என்று தந்தி அலுவலர் கலங்கித் தான் போனார்.

தேர்தல் நடத்தி பயனில்லை: லக்கானியிடம் தமிழிசை புகார்

Added : டிச 12, 2017 00:05

 
சென்னை: ''தேர்தலை நேர்மையாக நடத்த முடியாது என்ற சூழல் ஏற்பட்டால், தேர்தல் நடத்தி பயனில்லை,'' என, தமிழக பா.ஜ., தலைவர், தமிழிசை கூறினார்.

சென்னை, ஆர்.கே.நகர் பா.ஜ., வேட்பாளர், கரு.நாகராஜன் மற்றும் நிர்வாகிகளுடன், நேற்று தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி, ராஜேஷ் லக்கானியை, தமிழிசை சந்தித்தார். அப்போது, ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெறும் முறைகேடுகளை பட்டியலிட்டார்.

லக்கானியிடம் தமிழிசை கூறியதாவது: 'காலை, 9:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை, வீடு வீடாகச் சென்று, ஓட்டு சேகரிக்கலாம். அதன்பின், அனுமதி கிடையாது' என, அறிவித்துள்ளீர்கள். ஆனால், மாலை, 5:00 மணியில் இருந்து, இரவு, 10:00 மணி வரை, ஊர்வலம் செல்வதாகக் கூறி, வீடு வீடாகச் சென்று, பணம் பட்டுவாடா செய்கின்றனர்.


அனைத்து தெருக்களிலும், மேஜை, நாற்காலி போட்டு, வௌியூர் ஆட்கள் அமர்ந்துள்ளனர். பணப் பட்டுவாடா தாராளமாக நடக்கிறது. அதை தடுத்து நிறுத்த வேண்டும்.
இவ்வாறு தமிழிசை கூறினார்.

அதற்கு பதிலளித்த ராஜேஷ் லக்கானி, 'உங்களிடம் உள்ள வீடியோ ஆதாரங்களை கொடுங்கள்; உரிய நடவடிக்கை எடுக்கிறேன்' என்றார். பின் தமிழிசை, நிருபர்களிடம் கூறியதாவது:
பிரசாரம் ஆரம்பித்த, முதல் நாளில் இருந்தே, முறைகேடுகள் துவங்கி விட்டன. மிக அதிகமாக, பண நடமாட்டம் உள்ளது. வீட்டுக்கு வீடு ஓட்டு கேட்பதற்கு பதிலாக, ரூபாய் நோட்டு கொடுப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. 'பூத் சிலிப்'பை, தேர்தல் கமிஷன் மட்டும் வழங்கும் என்றனர்; ஆனால், பல கட்சிகள் வழங்குகின்றன. அதை படம் எடுத்து, தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி உள்ளோம். பல இடங்களில், பரிசு பொருட்களாக, சின்னமே வழங்கப்படுகிறது. தேர்தலை நேர்மையாக நடத்த முடியும் என்றால் நடத்துங்கள்; நேர்மையாக நடத்த முடியாது என்ற சூழல் ஏற்பட்டால், தேர்தல் நடத்தி பயனில்லை. அனைத்து ஊடகங்களும், 'பணப் பட்டுவாடா நடக்கிறது' என எழுதுகின்றன. ஆனால், பா.ஜ., தவிர, வேறு எந்த கட்சியும், புகார் கொடுக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
பார் கவுன்சிலில் போட்டியிட நிபந்தனை : ஐகோர்ட் நீதிபதி கிருபாகரன் பரிந்துரை

Added : டிச 12, 2017 00:20

சென்ன: 'மூன்று ஆண்டு தண்டனை விதிக்கக் கூடிய, கிரிமினல் வழக்கு உள்ள வழக்கறிஞர்கள், அரசியல் கட்சிகளில் பதவி வகிக்கும் வழக்கறிஞர்கள், பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கூடாது' என, சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள, அன்னை மருத்துவ கல்லுாரியின் நிறுவன அறங்காவலர்களுக்கும், புதிய அறங்காவலர்களுக்கும் இடையேயான பிரச்னையில், வழக்கறிஞர்கள் எனக்கூறி, சிலர் கட்டப்பஞ்சாயத்து செய்வதாக, உயர் நீதிமன்ற நீதிபதி, கிருபாகரனின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.


இந்த வழக்கை விசாரித்த, நீதிபதி கிருபாகரன், சட்ட கல்வியை ஒழுங்குபடுத்தவும், வழக்கறிஞர்கள் தொழிலை முறைப்படுத்தவும், ௨௫ கேள்விகளுக்கு பதிலளிக்கும்படி, பார் கவுன்சிலுக்கும், மத்திய, மாநில அரசுகளுக்கும் உத்தரவிட்டிருந்தார்.
கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபடும் வழக்கறிஞர்களுக்கு, கண்டனமும் தெரிவித்தார்.
இவ்வழக்கு, நீதிபதி கிருபாகரன் முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பிறப்பிக்கப்பட்ட உத்தரவு:


நீதிமன்றம் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்க, பார் கவுன்சில் தரப்பில் ஆஜரான, வழக்கறிஞர், எஸ்.ஆர்.ரகுநாதன் அவகாசம் கோரினார்.
மிரட்டிய வழக்கறிஞர்களுக்கு எதிராக நடவடிக்கை கோரி, இரண்டு வழக்கறிஞர்கள் சார்பில் ஆஜரான, வழக்கறிஞர் செந்தில்குமார், பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிடுவதற்கு, சில பரிந்துரைகளை தெரிவித்துள்ளார்.


அதில், 'சொத்து விபரங்கள், நிலுவையில் உள்ள கிரிமினல் வழக்குகளின் விபரங்கள், ௧௦ ஆண்டுகளாக ஆஜரான வழக்குகளின் எண்ணிக்கை, நீதிமன்ற உத்தரவுகள், அரசியல் பதவி விபரங்களை, பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிட விரும்புவர்கள் வெளியிட வேண்டும்' என, அவர் கூறியுள்ளார். 


இந்த பரிந்துரைகள் நியாயமாக இருப்பதாக தெரிகிறது. விபரங்களை வெளியிட்டால், போட்டியிடுபவர்கள் பற்றி, வழக்கறிஞர்கள் புரிந்து கொள்ள முடியும்.
மூன்று ஆண்டுக்கு மேல் தண்டனை விதிக்கக் கூடிய, கிரிமினல் வழக்குகளில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தால், அந்த வழக்கறிஞர்களை, பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக் கூடாது. 


கிரிமினல் வழக்குகளை எதிர்கொள்ளும் வழக்கறிஞர்களை தேர்ந்தெடுத்தால், நியாயமான விசாரணைக்கு பாதிப்பு ஏற்படலாம்.
அரசியல் கட்சியில், முக்கிய பதவி வகித்திருந்தாலோ அல்லது வகித்தாலோ, எம்.பி., - எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்டிருந்தாலோ, அந்த வழக்கறிஞர்களையும், பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக் கூடாது. இதனால், வழக்கறிஞர் தொழிலில், அரசியல் குறுக்கீடு தவிர்க்கப்படும்.


பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிட விரும்பும், வழக்கறிஞர்களின் கல்வி தகுதியையும் சரி பார்க்க வேண்டும். சட்டப் படிப்பை முறையாக படிக்கவில்லை என்றால், அவர்களின் வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும். 


வழக்கறிஞர்களின் குடும்ப அட்டை, 'பான் கார்டு, ஆதார்' அட்டையை சரிபார்க்க வேண்டும்.
இந்த பரிந்துரைகளை, உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நீதிபதி, அனில் தவே தலைமையிலான குழுவின் முன், பார் கவுன்சில் தாக்கல் செய்ய வேண்டும்.
அப்போது தான், அனைத்து பார் கவுன்சில்களுக்கும் உத்தரவு பிறப்பிக்க, நீதிபதி குழுவுக்கு ஏதுவாக இருக்கும்.


விசாரணை, வரும், ௧௩க்கு, தள்ளிவைக்கப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
ஸ்டிரைக் டாக்டர்களுக்கு அரசு நோட்டீஸ்

Added : டிச 12, 2017 06:13

மதுரை: சிறப்பு டாக்டர் நியமனத்தில் விதிமுறை மீறியதாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள முதுநிலை பயிற்சி டாக்டர்களுக்கு விளக்கம் கேட்டு நேற்று நோட்டீஸ் வழங்கப்பட்டது.
மருத்துவ தேர்வு வாரியம் நவ.,18 ல் நேர்முக தேர்வு மூலம் 465 சிறப்பு டாக்டர்களை நியமித்தது. 'எழுத்து தேர்வு, இடஒதுக்கீடு படியே நியமிக்க வேண்டும்' என்பது விதிமுறை. ஆனால், நேர்முகத் தேர்வு அடிப்படையில் மட்டுமே சிறப்பு டாக்டர்கள் நியமித்ததை கண்டித்து, சென்னையில் நவ.,18ல் இருந்து முதுநிலை சிறப்பு டாக்டர்கள் காலவரையற்ற வேலை
நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக கோவை, மதுரை, திருநெல்வேலி உட்பட மருத்துவ கல்லுாரிகளில் முதுநிலை பயிற்சி டாக்டர்கள் 15 நாட்களாக வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர்.


வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள பயிற்சி டாக்டர்களுக்கு விளக்கம் கேட்டு, நோட்டீஸ் வழங்க மருத்துவ கல்வி இயக்குனர் எட்வின் ஜோ உத்தரவிட்டார். இதையடுத்து, 'சிறப்பு டாக்டர் நியமன வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. பயிற்சி டாக்டர்கள் என்ற முறையில் அரசிடம் சம்பளம் பெறுகிறீர்கள். 


முன்அறிவிப்பின்றி வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது தவறு. இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும்' என நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரையில் 227 உட்பட 1,250க்கும் மேற்பட்டோருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
'ஸ்மார்ட் போன்' மறுப்பு : நர்சிங் மாணவி தற்கொலை

Added : டிச 12, 2017 01:25

  பெரம்பலுார்:'ஸ்மார்ட் போன்' வாங்கித் தர பெற்றோர் மறுத்ததால், ரயிலில் பாய்ந்து, தனியார் நர்சிங் கல்லுாரி மாணவி, தற்கொலை செய்து கொண்டார். அரியலுார் மாவட்டம், வேப்பங்குழி கிராமத்தைச் சேர்ந்தவர், நல்லதம்பி மகள், நந்தினி, 17; கீழப்பழுவூரில் உள்ள, தனியார் நர்சிங் கல்லுாரியில், இரண்டாமாண்டு படித்து வந்தார். இவர், தனக்கு ஸ்மார்ட் போன் வாங்கித் தரும்படி, பெற்றோரிடம் அடிக்கடி கேட்டு வந்துள்ளார்; அவர்கள் வாங்கி தரவில்லை.
இதனால், தன் அக்கா வைத்துள்ள ஸ்மார்ட் போனை கேட்டுள்ளார்; அவரும் தர மறுத்து விட்டார். விரக்தியடைந்த நந்தினி, நேற்று முன்தினம் இரவு, 8:00 மணியளவில், கல்லகம் ரயில்வே கேட் அருகே, சென்னையில் இருந்து, திருச்சி சென்ற விரைவு ரயில் முன் பாய்ந்து, தற்கொலை செய்து கொண்டார்.அரியலுார் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்
ரேஷன் பொருட்கள் ரத்து என, 'வாட்ஸ் ஆப்'பில் வதந்தி

Updated : டிச 12, 2017 00:58 | Added : டிச 12, 2017 00:46



'ரேஷன் பொருட்கள் மானியம் ரத்து' என, 'வாட்ஸ் ஆப்' வாயிலாக, மக்களிடம் வதந்தியை ஏற்படுத்தும் விஷமிகள் குறித்து, போலீசில் புகார் செய்ய, உணவு துறை அதிகாரிகள் முடிவுசெய்துள்ளனர்.

பிரச்னை இல்லை

தேசிய உணவு பாதுகாப்பு சட்டம், தமிழகத்தில், அமலுக்கு வந்ததை தொடர்ந்து, ரேஷன் கார்டுகள், பி.எச்.எச்., எனும் முன்னுரிமை கார்டு; என்.பி.எச்.எச்., எனும் முன்னுரிமை அல்லாத கார்டுகள் என, பிரிக்கப்பட்டன. அப்படி பிரிக்கப்பட்டாலும், ஏற்கனவே இருந்தபடியே, ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில், 'வாட்ஸ் ஆப்' செயலியில், 'உங்கள் புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டில், புகைப்படத்திற்கு கீழே, பி.எச்.எச்., என இருந்தால், ஒன்றும் பிரச்னை இல்லை. 'ஆனால், என்.பி.எச்.எச்., என இருந்தால், அதை மாற்ற விண்ணப்பம் பூர்த்தி செய்து, ரேஷன் கடையில் தர வேண்டும். 12ம் தேதி, கடைசி நாள்.

'தவறும்பட்சத்தில், மானியம் ரத்தாகும்' என, தகவல் பரவி வருகிறது. இது, பொது மக்கள் மத்தியில், குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:முன்னுரிமை மற்றும் முன்னுரிமை அல்லாதது என, ரேஷன் கார்டுகள் பிரிக்கப்பட்டாலும், இலவச அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களும், முன் எப்படி வழங்கப்பட்டனவோ, அதே போல் தரப்படுகின்றன.

குறிப்பாக, உணவு பாதுகாப்பு சட்டம் அமலுக்கு வந்த பின், நான்கு பேர் உள்ள குடும்பத்திற்கு, 20 கிலோ இலவச அரிசியும், அதற்கு மேல் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும், கூடுதலாக, 5 கிலோ அரிசி இலவசமாகவும் தரப்படுகிறது.

தவறான தகவல்

அப்படி இருக்கும்போது, சில சமூக விரோதிகள், விண்ணப்பம் என்ற பெயரில், மக்களிடம் பணம் பறிக்க, முன்னுரிமை கார்டுக்கு மாறவில்லை எனில், மானியம் ரத்தாகும் என, தவறான தகவல் பரப்பி வருகின்றனர்.

இது, முற்றிலும் தவறு; அதை நம்ப வேண்டாம். மக்களிடம் பீதியை ஏற்படுத்தும் வகையில், தவறான தகவல் பரப்பும் விஷமிகளை கண்டறிந்து, போலீசில் புகார் அளிக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

NEWS TODAY 27.01.2026