Tuesday, December 12, 2017

'ஸ்மார்ட் போன்' மறுப்பு : நர்சிங் மாணவி தற்கொலை

Added : டிச 12, 2017 01:25

  பெரம்பலுார்:'ஸ்மார்ட் போன்' வாங்கித் தர பெற்றோர் மறுத்ததால், ரயிலில் பாய்ந்து, தனியார் நர்சிங் கல்லுாரி மாணவி, தற்கொலை செய்து கொண்டார். அரியலுார் மாவட்டம், வேப்பங்குழி கிராமத்தைச் சேர்ந்தவர், நல்லதம்பி மகள், நந்தினி, 17; கீழப்பழுவூரில் உள்ள, தனியார் நர்சிங் கல்லுாரியில், இரண்டாமாண்டு படித்து வந்தார். இவர், தனக்கு ஸ்மார்ட் போன் வாங்கித் தரும்படி, பெற்றோரிடம் அடிக்கடி கேட்டு வந்துள்ளார்; அவர்கள் வாங்கி தரவில்லை.
இதனால், தன் அக்கா வைத்துள்ள ஸ்மார்ட் போனை கேட்டுள்ளார்; அவரும் தர மறுத்து விட்டார். விரக்தியடைந்த நந்தினி, நேற்று முன்தினம் இரவு, 8:00 மணியளவில், கல்லகம் ரயில்வே கேட் அருகே, சென்னையில் இருந்து, திருச்சி சென்ற விரைவு ரயில் முன் பாய்ந்து, தற்கொலை செய்து கொண்டார்.அரியலுார் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்
ரேஷன் பொருட்கள் ரத்து என, 'வாட்ஸ் ஆப்'பில் வதந்தி

Updated : டிச 12, 2017 00:58 | Added : டிச 12, 2017 00:46



'ரேஷன் பொருட்கள் மானியம் ரத்து' என, 'வாட்ஸ் ஆப்' வாயிலாக, மக்களிடம் வதந்தியை ஏற்படுத்தும் விஷமிகள் குறித்து, போலீசில் புகார் செய்ய, உணவு துறை அதிகாரிகள் முடிவுசெய்துள்ளனர்.

பிரச்னை இல்லை

தேசிய உணவு பாதுகாப்பு சட்டம், தமிழகத்தில், அமலுக்கு வந்ததை தொடர்ந்து, ரேஷன் கார்டுகள், பி.எச்.எச்., எனும் முன்னுரிமை கார்டு; என்.பி.எச்.எச்., எனும் முன்னுரிமை அல்லாத கார்டுகள் என, பிரிக்கப்பட்டன. அப்படி பிரிக்கப்பட்டாலும், ஏற்கனவே இருந்தபடியே, ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில், 'வாட்ஸ் ஆப்' செயலியில், 'உங்கள் புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டில், புகைப்படத்திற்கு கீழே, பி.எச்.எச்., என இருந்தால், ஒன்றும் பிரச்னை இல்லை. 'ஆனால், என்.பி.எச்.எச்., என இருந்தால், அதை மாற்ற விண்ணப்பம் பூர்த்தி செய்து, ரேஷன் கடையில் தர வேண்டும். 12ம் தேதி, கடைசி நாள்.

'தவறும்பட்சத்தில், மானியம் ரத்தாகும்' என, தகவல் பரவி வருகிறது. இது, பொது மக்கள் மத்தியில், குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:முன்னுரிமை மற்றும் முன்னுரிமை அல்லாதது என, ரேஷன் கார்டுகள் பிரிக்கப்பட்டாலும், இலவச அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களும், முன் எப்படி வழங்கப்பட்டனவோ, அதே போல் தரப்படுகின்றன.

குறிப்பாக, உணவு பாதுகாப்பு சட்டம் அமலுக்கு வந்த பின், நான்கு பேர் உள்ள குடும்பத்திற்கு, 20 கிலோ இலவச அரிசியும், அதற்கு மேல் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும், கூடுதலாக, 5 கிலோ அரிசி இலவசமாகவும் தரப்படுகிறது.

தவறான தகவல்

அப்படி இருக்கும்போது, சில சமூக விரோதிகள், விண்ணப்பம் என்ற பெயரில், மக்களிடம் பணம் பறிக்க, முன்னுரிமை கார்டுக்கு மாறவில்லை எனில், மானியம் ரத்தாகும் என, தவறான தகவல் பரப்பி வருகின்றனர்.

இது, முற்றிலும் தவறு; அதை நம்ப வேண்டாம். மக்களிடம் பீதியை ஏற்படுத்தும் வகையில், தவறான தகவல் பரப்பும் விஷமிகளை கண்டறிந்து, போலீசில் புகார் அளிக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -
தேர்தல் பிரசாரமா : மறுக்கும் நடிகர் கவுண்டமணி

Added : டிச 12, 2017 00:09

சென்னை: 'நான் எந்த கட்சியிலும் இல்லை; எந்த கட்சியையும் ஆதரித்து பிரசாரம் செய்யவில்லை' என, நடிகர் கவுண்டமணி விளக்கம் அளித்துள்ளார். ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல், டிச., 21ல், நடக்கிறது. அ.தி.மு.க., வேட்பாளர் மதுசூதனன், தி.மு.க., வேட்பாளர் மருதகணேசிற்கு ஆதரவாக, அக்கட்சிகளை சேர்ந்த நட்சத்திர பேச்சாளர்கள் மற்றும் நடிகர், நடிகையர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர். நட்சத்திர பட்டாளங்கள் ஆதரவு திரட்டினால், வாக்காளர்களை எளிதாக கவர முடியும் என, அரசியல் கட்சிகள் கணக்கு போட்டு, இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளன. அந்த வகையில், ஆளுங்கட்சிக்கு ஆதரவாக, டிச., 14ல், காமெடி நடிகர் கவுண்டமணி, பிரசாரம் மேற்கொள்வார் என்ற தகவல் பரவியது. இது தொடர்பாக, நமது நாளிதழில், நேற்று செய்தி வெளியாகி இருந்தது.

இது தொடர்பாக, நடிகர் கவுண்டமணி நேற்று, வெளியிட்ட அறிக்கை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், ஒரு கட்சிக்கு ஆதரவாக நான் பிரசாரம் செய்யப்போவதாக, செய்தி வந்துள்ளது; அது, உண்மைஅல்ல. நான் எந்தக் கட்சியையும் சாராதவன்; அரசியலிலும் இல்லாதவன். நான் எந்தக் கட்சியையும் ஆதரித்து பிரசாரம் செய்யவில்லை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பெற்றோரை கைவிடும் ஊழியர்களுக்கு அபராதம்

Added : டிச 12, 2017 00:47

போபால்: பெற்றோரை பராமரிக்காத அரசு அதிகாரிகள், ஊழியர்களின் சம்பளத்தில் குறிப்பிட்ட தொகையை பிடித்தம் செய்து, பெற்றோரின் கணக்கில் செலுத்த, மத்திய பிரதேச அரசு முடிவு செய்துள்ளது.மத்திய பிரதேசத்தில், முதல்வர், சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில் பணிபுரியும் அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், தங்கள் பெற்றோரை பராமரிக்காமல், தனியே தவிக்கவிடுவது அதிகரித்து வருகிறது.


இதையடுத்து, மாநில அரசு, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் ஒரு உத்தரவு பிறப்பித்தது; அதில் கூறப்பட்டுள்ள தாவது:பெற்றோரை பராமரிக்காமல் கைவிடும் அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும். அந்த தொகையை, அவர்களது சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்து, பெற்றோரின் வங்கிக் கணக்கிற்கு செலுத்த வேண்டும்.
ஒரு பெற்றோரின் நான்கு பிள்ளைகள் அரசு பணியில் இருந்தால், ஒவ்வொருவரிடமும், தலா, 2,000 ரூபாய் வீதம் வசூலித்து, பெற்றோரின் அடிப்படை தேவைகளுக்கு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.அசாம் மாநிலத்தில், 'பெற்றோர் பொறுப்பு மற்றும் கண்காணிப்பு மசோதா' ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளது.அதன்படி, வயதான பெற்றோர் மற்றும் உடல் ஊனமுற்ற சகோதர,சகோதரியரை பராமரிக்காத ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து, 10 சதவீதம் பிடித்தம் செய்யவும், அந்த தொகையை, பெற்றோரின் வங்கிக் கணக்கில் செலுத்தவும் வகை செய்யப்பட்டுஉள்ளது.
கல்லூரி மாணவர்கள் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்

Added : டிச 12, 2017 00:13



சென்னை: சென்னையை சேர்ந்த பல்வேறு கல்லுாரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள், 4,000 பேர் நேற்று, அ.தி.மு.க.,வில் இணைந்தனர். சென்னை, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான பழனிசாமி ஆகியோர் முன்னிலையில், இணைப்பு நிகழ்ச்சி நடந்தது. இளைஞர் அணி முன்னாள் செயலர், ஆதி ராஜாராம் ஏற்பாட்டில், கல்லுாரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள், கட்சியில் இணைந்தனர்.

இந்நிகழ்ச்சியில், பன்னீர் செல்வம் பேசியதாவது: உங்களுக்கு மிகப்பெரிய பொறுப்பு உள்ளது. தமிழகத்தின் முன்னேற்றம், உங்கள் கையில் உள்ளது. இந்தி எதிர்ப்பு போராட்டத்தில், மாணவர்களின் பங்கு தான் முக்கியமாக இருந்தது. அதன் காரணமாக, ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, 50 ஆண்டுகளாக, காங்கிரசால் ஆட்சிக்கு வர முடியாத நிலையை உருவாக்கியது. உங்கள் சக்தி, அ.தி.மு.க., வளர்ச்சிக்கு வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

இணை ஒருங்கிணைப்பாளர், பழனிசாமி பேசியதாவது: நாங்கள் எல்லாம், கல்லுாரியில் படிக்கும்போதே, அ.தி.மு.க.,வில் இணைந்தோம். பல ஆண்டுகள் உழைத்து, இந்த நிலைக்கு வந்துள்ளோம். உழைப்புக்கும், விசுவாசத்திற்கும், பதவி கிடைக்கக் கூடிய, ஒரே இயக்கம் இது. வேறு எந்த கட்சியிலும், இது கிடைக்காது. மற்ற கட்சிகளில், வாரிசு அடிப்படையில் தான், பதவி கிடைக்கும். தொழில் அதிபர், மிட்டா மிராசுதாரர்கள் தான், அந்த கட்சிகளில் பதவிக்கு வர முடியும்.சாதாரண தொண்டனும், உயர்ந்த பதவிக்கு வரக்கூடிய கட்சி, அ.தி.மு.க., மட்டுமே. அ.தி.மு.க.,வில் இணைந்து உள்ளதால், உங்களுடைய வருங்காலம் பிரகாசமாக இருக்கும். கட்சிக்கு உழைத்து, விசுவாசமாக இருந்தால், நீங்கள் நினைக்கும் பதவி, உங்களை தேடி வரும்.
இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில், துணை ஒருங்கிணைப்பாளர்கள், கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
சவுதியில் 2018 முதல் சினிமாவுக்கு அனுமதி

Added : டிச 12, 2017 02:19 |



  ரியாத்: வளைகுடா நாடான, சவுதி அரேபியாவில், சினிமா திரையிட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. '2018 மார்ச் முதல், திரைப்படங்கள் ஒளிபரப்பாகும்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

முஸ்லிம் நாடான, சவுதி அரேபியாவில், பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் உள்ளன; ஆண்களுக்கும் கட்டுப்பாடுகள் உள்ளன. சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசராக, முகமது பின் சல்மான், 32, பதவியேற்ற பின், பல்வேறு சமூக சீர்த்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. 2018 ஜூன் முதல், பெண்கள் கார் ஓட்டுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

இதைத் தொடர்ந்து, கலாசார நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. சமீபத்தில், தேசிய தினத்தில், ஆண்களும், பெண்களும் இணைந்து பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில், 35 ஆண்டுகளாக தடை செய்யப்பட்டிருந்த, சினிமா ஒளிபரப்புக்கு, மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 2018 மார்ச் முதல், படங்கள் திரையிடப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு, முஸ்லிம் மதத் தலைவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
வங்கிகளில் பொதுமக்களின் பணத்தை முழுமையாக பாதுகாப்போம் மத்திய அரசு அறிவிப்பு



வங்கிகள் திவால் ஆகும் நிலைமை ஏற்பட்டாலும், பொதுமக்களின் பணத்தை முழுமையாக பாதுகாப்போம் என்று மத்திய அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது.

டிசம்பர் 12, 2017, 05:30 AM

புதுடெல்லி,

நிதி தீர்வு மற்றும் சேமிப்பு காப்பீடு (எப்.ஆர்.டி.ஐ.) என்ற புதிய மசோதாவை மத்திய அரசு உருவாக்கி உள்ளது. கடந்த ஆகஸ்டு மாதம், பாராளுமன்றத்தில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், நிறைவேற்றப்படவில்லை. தற்போது, பாராளுமன்ற கூட்டுக்குழு இம்மசோதாவை ஆய்வு செய்து வருகிறது.

விரைவில் தொடங்க உள்ள பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இந்த மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அதே சமயத்தில், இதில் உள்ள சில அம்சங்கள், பொதுமக்களின் சேமிப்பு கணக்கில் உள்ள பணத்துக்கு ஆபத்து விளைவிக்கக்கூடியவை என்று பொருளாதார நிபுணர்களும், எதிர்க்கட்சியினரும் அச்சம் தெரிவித்துள்ளனர்.

வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், வங்கி அல்லாத நிதி சேவை நிறுவனங்கள், பங்குச்சந்தை நிறுவனங்கள் போன்றவை திவால் ஆகும் நிலைமை ஏற்படும்போது, அதை சரி செய்வதற்காகவே இந்த மசோதா கொண்டுவரப்படுகிறது.

இதற்காக, ‘தீர்வு கழகம்’ என்ற ஒரு அமைப்பு உருவாக்கப்படும். இது, வங்கிகளின் வாராக்கடன்களை குறைத்து எழுதி, வங்கிகள் திவால் ஆகாமல் தடுக்கும். தற்போது, ரூ.1 லட்சம் வரையிலான அனைத்து சேமிப்பு தொகையும் ‘சேமிப்பு காப்பீடு மற்றும் கடன் உத்தரவாத கழக சட்டம்‘ மூலம் பாதுகாக்கப்படுகின்றன. ஆனால், இந்த புதிய மசோதா, மேற்கண்ட சட்டத்தை ரத்துசெய்ய வழிவகுக்கிறது.

இதனால், பொதுமக்களின் சேமிப்பு தொகைக்கு ஆபத்து நேருமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. வங்கிகள் திவால் ஆவதை தடுக்க, பொதுமக்களின் பணம் எடுத்து பயன்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

இந்த விதிமுறையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இந்நிலையில், பொதுமக்களின் அச்சத்தை போக்கும் வகையில், மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி நேற்று இதுபற்றி விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:–

எப்.ஆர்.டி.ஐ. மசோதா குறித்து வதந்தி பரப்பப்படுகிறது. பொதுத்துறை வங்கிகளையும், நிதித்துறை நிறுவனங்களையும் பலப்படுத்த உறுதி பூண்டுள்ளதாக மத்திய அரசு ஏற்கனவே தெளிவுபடுத்தி உள்ளது. வங்கிகளை பலப்படுத்துவதற்காகவே, வங்கிகளில் ரூ.2 லட்சத்து 11 ஆயிரம் கோடி முதலீடு செய்ய உள்ளோம்.

இது, வங்கிகளை பலப்படுத்துவதற்குத்தான். இதற்காக, வங்கிகள் திவால் ஆகும் நிலைமை ஏற்படும் என்று அர்த்தம் அல்ல.

ஒருவேளை, வங்கிகள் திவால் ஆகும் நிலைமை ஏற்பட்டாலும், வங்கிகளில் பொதுமக்கள் போட்டு வைத்துள்ள பணத்துக்கு மத்திய அரசு முழு பாதுகாப்பு அளிக்கும். அதில் மத்திய அரசு மிகத்தெளிவாக உள்ளது.

மேலும், இந்த மசோதாவை பாராளுமன்ற கூட்டுக்குழு ஆய்வு செய்து வருகிறது. அக்குழு என்ன சிபாரிசு செய்தாலும், அதை பரிசீலிக்க மத்திய அரசு தயாராக இருக்கிறது.

இவ்வாறு அருண் ஜெட்லி கூறினார்.

NEWS TODAY 26.01.2026