Wednesday, December 13, 2017

குடும்பத்தினர் 4 பேர் கொலை- ஜவுளி கடைக்காரர் தற்கொலை முயற்சி

Added : டிச 13, 2017 04:50

தொழிலில் ஏற்பட்ட நஷ்டம், கடன் சுமை காரணமாக, தாய், மனைவி மற்றும் இரு குழந்தைகள் என, நால்வரை கழுத்தறுத்து கொன்று, ஜவுளிக்கடைக்காரர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை, பல்லாவரத்தை அடுத்த பம்மல், திருவள்ளுவர் நகர், நந்தனார் தெருவைச் சேர்ந்தவர், தாமோதரன், 38. அதே பகுதியில் உள்ள, அடுக்குமாடி குடியிருப்பின் முதல் மாடியில், தாய் சரஸ்வதி, 62, மனைவி தீபா, 36, மகன் ரோஷன், 7, மகள் மீனாட்சி, 5 ஆகியோருடன் வசித்தார். தாமோதரன், பம்மல், ஏழுமலை தெருவில், 'பிரகாஷ் கிளாத் ஸ்டோர்ஸ்' என்ற, ஜவுளிக் கடையை நடத்தினார்.ரோஷன், மீனாட்சி ஆகிய இருவரும், மீனம்பாக்கம் மற்றும் பல்லாவரத்தில் உள்ள தனியார் பள்ளிகளில், முறையே இரண்டாம் மற்றும் யு.கே.ஜி., வகுப்பு படித்து வந்தனர். தீபா, வீட்டிலேயே தையல் தொழில் செய்து வந்தார்.
இந்நிலையில், தாமோதரனுக்கு, ஓராண்டாகவே தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. 


உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம், அளவுக்கு அதிகமாக கடன் வாங்கியது மட்டுமல்லாமல், ஐந்து வங்கிகளில் வீட்டுக் கடன், நகை கடனும் உள்ளது. இதனால், அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார்.இந்நிலையில், நேற்று காலை, 7:00 மணிக்கு, தன் அலைபேசியில், மைத்துனர் ராஜாவிடம் பேசிய அவர், 'தனக்கு வாழப் பிடிக்கவில்லை; தற்கொலை செய்யப் போகிறேன்' எனக்கூறி, இணைப்பை துண்டித்துள்ளார். உடனடியாக, தன் பெற்றோரை, தாமோதரன் வீட்டிற்கு, ராஜா அனுப்பியுள்ளார். அவர்கள், காலை, 7:30 மணிக்கு, அங்கு சென்றபோது, கதவு உள்பக்கம் தாழ்ப்பாள் போடாமல் மூடியபடி இருந்துள்ளது.


தாமோதரனின் மாமனார் மற்றும் மாமியாரும், கதவை திறந்து உள்ளே சென்றனர். மகள் தீபா, பேரன் ரோஷன், பேத்தி மகாலட்சுமி மற்றும் தாமோதரனின் தாய், சரஸ்வதி ஆகியோர், கத்தியால் குத்தப்பட்டு, கழுத்து அறுக்கப்பட்டு, ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். தாமோதரனும், கழுத்து மற்றும் கையை அறுத்த நிலையில், சுவரில் சாய்ந்து கிடந்தார்.உடனடியாக, '108' ஆம்புலன்ஸ் வரழைக்கப்பட்டு, தாமோதரன் உள்ளிட்ட, ஐந்து பேரையும், குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவர்கள் பரிசோதனையில், தீபா, சரஸ்வதி ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்ததும், குழந்தைகள், ரோஷன், மீனாட்சி ஆகியோரின் உயிர், மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பிரிந்ததும் தெரிய வந்தது.தாமோதரன், உயிருக்கு ஆபத்தான நிலையில், சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.இச்சம்பவம் குறித்து, சங்கர் நகர் போலீசார் விசாரிக்கின்றனர். சம்பவ இடத்தில், பரங்கிமலை துணை கமிஷனர், முத்துசாமி, பல்லாவரம் உதவி கமிஷனர், தேவராஜ் விசாரணை நடத்தினர்.

ரத்த கடிதம் சிக்கியது : தாமோதரன் வீட்டில் ரத்தக்கறை படிந்த, ஐந்து பக்க கடிதத்தை, போலீசார் கைப்பற்றி உள்ளனர். டிச., 12 என தேதியிட்ட, அந்த கடிதம், மைத்துனர், ராஜா மற்றும் பாலகிருஷ்ணன் என்பவருக்கு, எழுதப்பட்டு உள்ளது. அதில், 'ஜவுளி தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், கடன் வாங்கி குடும்பம் நடத்தி வந்தேன். கடன் தொகை தான் அதிகமானது. தொழிலில் வளர்ச்சி ஏற்படவில்லை' என, கூறப்பட்டு உள்ளது. மைத்துனர் ராஜாவுக்கு எழுதிய கடிதத்தில், 'தொழில் சம்பந்தமாக, உன்னிடம் பல முறை பணம் வாங்கினேன்; என்னால் திரும்ப கொடுக்க முடியவில்லை. என்னை மன்னித்து விடு. நான் இருக்கும்போது தான், எனது குடும்பம் சிரமப்பட்டது. இதனால், என்னுடனேயே அவர்களையும் அழைத்துச் செல்கிறேன்' என, தாமோதரன் எழுதியிருப்பதாக, போலீசார் தெரிவித்தனர்.

- நமது நிருபர் குழு -
'குரூப் - 4' விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

Added : டிச 13, 2017 01:40

சென்னை: அரசுத்துறைகளில், 'குரூப் - 4' பதவிக்கான எழுத்து தேர்வுக்கு விண்ணப்பிக்க, இன்றே கடைசி நாள்.

அரசுத்துறைகளில், குரூப் - 4 பதவியில், காலியாக உள்ள, 9,351 பணியிடங்களை நிரப்ப, பிப்., 11ல் எழுத்து தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. கிராம நிர்வாக அதிகாரி பதவிக்கான, 494 இடங்களும், முதன்முதலாக இந்த தேர்வில் இணைக்கப்பட்டுள்ளன. தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில், நவ., 14ல் துவங்கி, இன்றுடன் முடிகிறது.


இது குறித்து, டி.என்.பி.எஸ்.சி., செயலர் விஜயக்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
குரூப் - 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க, இன்று கடைசி நாள். தேர்வு கட்டணத்தை, வரும், 15ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். இதற்காக, சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நிரந்தரப்பதிவுக்கும், விண்ணப்ப பதிவுக்கும், தலா, இரண்டு, 'சர்வர்' இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இணையதள அலைவரிசையும் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது.
இன்று இரவு, 11:59 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும். தொழில்நுட்ப பிரச்னையால் விண்ணப்பிக்க முடியாமல் போனால், அதற்கு தேர்வாணையம் பொறுப்பல்ல. பதிவு கட்டணமாக, 150 ரூபாய் செலுத்தி, நிரந்தரப்பதிவு செய்த பின், விண்ணப்பிக்க முடியும். இதுவரை, 15 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.


இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தாய், குழந்தை மரணம் : டாக்டர் ஆஜராக உத்தரவு

Added : டிச 13, 2017 04:34

மதுரை: ஸ்ரீவில்லிப்புத்துார் அரசு மருத்துவமனையில் தாய் மற்றும் அவரது வயிற்றிலிருந்த குழந்தை இறந்ததற்கு, 50லட்சம் ரூபாய் இழப்பீடு கோரிய வழக்கில், சம்பந்தப்பட்ட டாக்டர் ஆஜராக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்துார் ராஜா தாக்கல் செய்த மனு:எனது மனைவி மரியலில்லி பவுலின். எங்களுக்கு 2 மகன்கள் பிறந்தனர். 2011 ல் மீண்டும் மனைவிகர்ப்பமுற்றார். 2011 செப்.,23 ல் ஸ்ரீவில்லிபுத்துார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அங்கு பணிபுரிந்த ஒரு டாக்டரை அழைக்க, செப்.,26 இரவு அவரது வீட்டிற்குசென்றேன். அங்கு அவர் தனியாக மருத்துவமனை நடத்தி வந்தார். எனது மனைவியை காப்பாற்ற உதவுமாறுகெஞ்சினேன். அவர், 'மனைவி, குழந்தை நன்றாக உள்ளது,' என்றார். பின் மனைவி மற்றும் அவரதுவயிற்றிலிருந்த குழந்தை இறந்துவிட்டதாக கூறினர். இச்சம்பவத்திற்கு காரணமான சம்பந்தப்பட்ட டாக்டர் மற்றும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், 50 லட்சம் ரூபாய்இழப்பீடு வழங்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு ராஜா மனு செய்திருந்தார்.


நீதிபதி ஆர்.மகாதேவன்,'' சம்பந்தப்பட்ட டாக்டர் டிச.,21 ல் ஆஜராக வேண்டும்,'' என உத்தரவிட்டார்.

மருத்துவ கல்வி இயக்குனர் நியமனம் ரத்து : பணிமூப்பின் படி பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு

Added : டிச 13, 2017 00:58

மதுரை: மருத்துவக் கல்வி இயக்குனராக, எட்வின் ஜோவை நியமித்த, தமிழக அரசின் உத்தரவு மற்றும் அவருக்கு பதில், ரேவதியை நியமிக்கும் தனி நீதிபதியின் உத்தரவை, உயர் நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்தது. 'தகுதி, திறமை, பணிமூப்பு அடிப்படையில் பரிசீலித்து, தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என, தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

கோவை அரசு மருத்துவக் கல்லுாரி டீனாக இருந்த, எட்வின் ஜோவை, மருத்துவக் கல்வி இயக்குனராக நியமித்து, ஏப்., 25ல், தமிழக சுகாதாரத் துறை அரசாணை வெளியிட்டது.
இதை எதிர்த்து, மதுரை, தபால் தந்தி நகர், ரேவதி, 'கரூர் மருத்துவக் கல்லுாரி டீனாக உள்ளேன்; பணிமூப்பு அடிப்படையில், மருத்துவக் கல்வி இயக்குனராக நியமிக்க தகுதிகள் உள்ளன.
'எட்வின் ஜோவிற்கு தகுதிகள் இல்லை; அவரது நியமனத்தில் விதிமறல் உள்ளது. நியமன அரசாணையை ரத்து செய்ய வேண்டும். எனக்கு பதவி உயர்வு அளித்து, மருத்துவக் கல்வி இயக்குனராக நியமிக்க வேண்டும்' என, உயர் நீதிமன்ற மதுரை கிளையில், மனு செய்தார்.
இதை விசாரித்த தனி நீதிபதி, 'எட்வின் ஜோவை, மருத்துவக் கல்வி இயக்குனராக நியமித்த அரசாணையை ரத்து செய்கிறேன். 


'மனுதாரருக்கு பதவி உயர்வு அளித்து, மருத்துவக் கல்வி இயக்குனராக நியமிக்க வேண்டும்' என, செப்., 20ல் உத்தரவிட்டார். 


இதை எதிர்த்து, சுகாதாரத் துறை முதன்மை செயலர் மற்றும் எட்வின் ஜோ மேல்முறையீடு செய்தனர்.


நீதிபதிகள், எம்.வேணுகோபால், அப்துல் குத்துாஸ் அமர்வு விசாரித்தது. இதற்கிடையில், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லுாரி டீன், மீனாட்சிசுந்தரம், 'மருத்துவக் கல்லுாரி இயக்குனர் பதவி உயர்வில், என் பெயரையும் பரிசீலிக்க வேண்டும்.
'என்னையும், ஒரு எதிர் மனுதாரராக இணைத்துக் கொள்ள உத்தரவிட வேண்டும்' என, மனு செய்தார்.


நீதிபதிகள் உத்தரவு:


அரசின் நிர்வாக ரீதியான முடிவுகளில் தலையிட்டு, ஒருவருக்கு பதவி உயர்வு அளிப்பது தொடர்பாக, நீதிமன்றம் நேரடியாக உத்தரவு பிறப்பிக்க முடியாது. எட்வின் ஜோவை, மருத்துவக் கல்வி இயக்குனராக நியமித்த அரசாணையை ரத்து செய்கிறோம்.
ரேவதிக்கு பதவி உயர்வு அளித்து, மருத்துவக் கல்வி இயக்குனராக நியமிக்க வேண்டும் என்ற, தனி நீதிபதியின் உத்தரவையும் ரத்து செய்கிறோம்.


எட்வின் ஜோ, ரேவதி, மீனாட்சிசுந்தரம் ஆகியோரின் தகுதி, திறமை, பணிமூப்பு அடிப்படையில், சட்டத்திற்கு உட்பட்டு, மறு பரிசீலனை செய்து, சுகாதாரத் துறை முதன்மை செயலர், ஆறு வாரங்களில் தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்; வழக்கை பைசல் செய்கிறோம்.
இவ்வாறு உத்தரவில் கூறினர்.
சபரிமலை வரும் பெண்கள் பம்பையில் விரட்டி பிடிப்பு

Added : டிச 13, 2017 00:45

சபரிமலை: சபரிமலைக்கு கடந்தாண்டை விட இந்தாண்டு அதிகளவில் வந்த, 10 - 50 வயதுடைய
பெண்களை, பம்பையில் போலீசார் தடுத்து வருகின்றனர். போலீசாருக்கு, 'டிமிக்கி' கொடுத்து ஓடும் பெண்களை, பம்பையில், போலீசார் விரட்டி பிடிக்கின்றனர்.

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற, சபரிமலை அய்யப்பன் கோவிலில், 10 - 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள், சன்னி தானம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து, உழைக்கும் பெண்கள் அமைப்பு சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவில், இன்னும் தீர்ப்பு வரவில்லை.


இதற்கிடையில், சமூக வலைதளங்களில், பெண்கள், சபரிமலைக்கு செல்ல சுப்ரீம் கோர்ட் அனுமதித்துள்ளதாக, தகவல் பரப்பப்பட்டு வருகிறது; இதை தேவசம் போர்டு மறுத்து வருகிறது. ஆனாலும், இந்த சீசனில் அதிகமான பெண்கள் வருவதாக,
பம்பையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள பெண் போலீசார் தெரிவித்தனர்.
இப்படி வரும் பெண்களை கண்காணிக்க, பம்பை கணபதி கோவிலின் கீழ் பகுதியில்,
தேவசம் போர்டு பெண் ஊழியர்கள் மற்றும் பெண் போலீசார் நியமிக்கப்
பட்டுள்ளனர். இந்த சீசனில் இதுவரை, 1,000 பெண்கள் வந்துள்ளதாகவும், அதில் பெரும்பகுதியினர், ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.பம்பைக்கு, தங்கள் உறவினர்களுடன் வரும் பெண்கள், போலீசாரின் கையை தட்டி விட்டு, சன்னிதானம் நோக்கி ஓடுகின்றனர். இவர்களை, பெண் போலீசார் விரட்டி பிடிக்கின்றனர். இவ்வாறு தடுக்கப்படும் பெண்கள், தேவசம்போர்டு பெண் ஊழியர்கள் பாதுகாப்பில் பம்பையில்தங்கவும், உணவு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நீட்' தேர்வு வினாத்தாள் : சி.பி.எஸ்.இ., திட்டவட்டம்

Added : டிச 13, 2017 01:40

புதுடில்லி: 'அடுத்த ஆண்டு முதல், நாடு முழுவதும், 'நீட்' தேர்வுக்கு ஒரே மாதிரி வினாத்தாள் வழங்கப்படும்' என, மத்திய கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும், மருத்துவக் கல்வி சேர்க்கைக்காக, 'நீட்' எனப்படும், தேசிய அளவிலான தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை, மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த தேர்வை, சி.பி.எஸ்.இ., நடத்துகிறது. கடந்த ஆண்டு, ஒவ்வொரு மாநிலத்துக்கும் வெவ்வேறு வினாத்தாள்கள் வழங்கப்பட்டன; இதனால், பெரும் சர்ச்சைகள் எழுந்தன.


இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு, நேற்று விசாரணைக்கு வந்த போது, சி.பி.எஸ்.இ., சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு:
'நீட்' தேர்வை, ஹிந்தி மற்றும் ஆங்கில வழியில் தான், பெரும்பாலோர் எழுதுகின்றனர். மாநில மொழிகளில், குறைவானவர்கள் தான் எழுதுகின்றனர். அதனால் தான், சில பிரச்னைகள் ஏற்பட்டன. இதை தவிர்க்க, அடுத்த ஆண்டு முதல், 'நீட்' தேர்வுக்கு, நாடு முழுவதும், ஒரே மாதிரியான வினாத்தாள் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மலேஷியா, சிங்கப்பூருக்கு விமான சுற்றுலா

Added : டிச 13, 2017 00:25

சென்னை: இந்தியன் ரயில்வே உணவு சுற்றுலா கழகமான, ஐ.ஆர்.சி.டி.சி., மலேஷியா, சிங்கப்பூர் மற்றும் இலங்கைக்கு, விமான சுற்றுலாவை அறிவித்துள்ளது.

* மலேஷியா மற்றும் சிங்கப்பூருக்கு, ஏழு நாட்கள் சுற்றுலா, 24ல், திருச்சி; 25ல், சென்னையில் இருந்து, ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான கட்டணம், ஒருவருக்கு, திருச்சியில் இருந்து, 63 ஆயிரம் ரூபாய், சென்னையில் இருந்து, 62 ஆயிரம் ரூபாய்


* இலங்கைக்கு, ஆறு நாட்கள் சுற்றுலா, சென்னை மற்றும் மதுரையில் இருந்து, ஜன., 23ல், தனித்தனியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான கட்டணம், ஒருவருக்கு, மதுரையில் இருந்து, 39 ஆயிரத்து, 200 ரூபாய், சென்னையில், இருந்து, 41 ஆயிரம் ரூபாய்


* மேலும் விபரங்களுக்கு, சென்னை, ஐ.ஆர்.சி.டி.சி., அலுவலகத்தை, 90031 40682; மதுரை அலுவலகத்தை, 98409 02915 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

NEWS TODAY 27.01.2026