Friday, December 15, 2017

ஆளுமை மேம்பாடு: திட்டமிடல் எல்லாமே எளிதுதான்!


நேரமில்லை என்று சொல்வதைப் பலர் பெருமையாக எண்ணுகின்றனர். ஆனால், உண்மையில் அது அவர்களது குறை என்பதை அவர்கள் உணர்வதில்லை. ஏனென்றால், காலம் யாருக்கும் எந்தச் சலுகையும் அளிப்பதில்லை. 
“பிறகு நான் ஏன் நேரமின்மையால் படிக்க அவதிப்படுகிறேன்?” என்று நீங்கள் கேட்கலாம். உங்களுக்கு நேரத்தை முறையாகப் பயன்படுத்தத் தெரியவில்லை என்பதுதான் அதற்கான பதில். நேரத்தை முறையாகப் பயன்படுத்தத் தெரிந்துகொள்வது மிகவும் எளிது. எளிய வழிமுறைகள் மூலம் நீங்கள் நேரத்தைக் கைவசப்படுத்தலாம்.

நேர மேலாண்மை என்பது என்ன?

நம்முன் இருக்கும் செயல்களை அதன் முக்கியத்துவத்துக்கு ஏற்ப வரிசைப்படுத்த வேண்டும். அதன்பின் ஒவ்வொரு செயலையும் முடிக்க ஆகும் நேரத்தைக் கணித்து, தகுந்த நேரத்தை அவற்றுக்கு ஒதுக்க வேண்டும். பின் அந்தச் செயல்களை அதற்கென ஒதுக்கப்பட்ட நேரத்துக்குள் செய்து முடிக்க வேண்டும். இவ்வாறு ஒரு செயலை அதற்கென ஒதுக்கப்பட்ட நேரத்துக்குள் சரியான முறையில் செய்து முடிப்பதுதான் நேர மேலாண்மை. இந்த நேர மேலாண்மை மாணவர்களுக்குப் படிப்பில் மட்டுமல்லாமல் அவர்கள் வாழ்நாள் முழுமைக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

வாழ்வின் லட்சியம்

உங்கள் வாழ்வின் லட்சியம் எது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். ஒரு நோட்டுப் புத்தகத்தையும் பேனாவையும் எடுத்துக்கொள்ளுங்கள். அதில் நீங்கள் ஐந்து வருடங்கள் கழித்து என்னவாக இருப்பீர்கள் என்று நினைப்பதை எழுதி வைத்துக்கொள்ளுங்கள். ஏனென்றால், எதை அடைய வேண்டும் என்ற தெளிவு இருந்தால்தான் நம் பாதையும் பயணமும் தெளிவடையும்.

படிக்கும் இடத்தை ஒழுங்குபடுத்துதல்

படிக்கும் இடம் சுத்தமாக இருக்க வேண்டும். புத்தகங்களையும் குறிப்பேடுகளையும் அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் முறையாக அடுக்கிவையுங்கள். பேனா, பென்சில், ரப்பர் போன்றவற்றைப் படிக்கும் மேஜை மேல் பரத்தி வைக்காமல், அதற்கான பெட்டியில் அடுக்குங்கள். இவற்றின் மூலம் தேடுவதில் நேரம் விரயமாகாமல் தடுக்கலாம்.

திட்டமிட்டுப் படித்தல்

எந்தப் பாடம் முக்கியமானது, எதை முதலில் படிக்க வேண்டும் என்பதைத் தீர்மானியுங்கள். உங்கள் பாடத்திட்டத்தைக் கவனமாக ஆராயுங்கள். பாடத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் எவ்வளவு மதிப்பெண் என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொள்ளுங்கள். பின், இந்தப் புரிதலின் அடிப்படையில் எப்படிப் படிக்க வேண்டும் என்பதைத் திட்டமிட்டு அட்டவணை தயார்செய்யுங்கள். ஒவ்வொரு பாடத்துக்கும் தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குங்கள். எப்போதும் கடினமான பாடத்தை முதலில் படிக்க ஆரம்பியுங்கள். அதிலிருந்து படிப்படியாக எளிதான பாடத்தைப் படிக்கச் செல்லுங்கள். ஏனென்றால், மூளை சுறுசுறுப்பாக இருக்கும்போது அது கடினமான பாடத்தை எளிதில் கிரகித்துக்கொள்ளும், தினமும் அன்று படித்ததை மீண்டும் வாசிப்பதற்கு என்று சிறிது நேரத்தை ஒதுக்கிக்கொள்ளுங்கள்.

பாராட்டுங்கள்

ஒவ்வொரு நாளும் நீங்கள் படித்து முடித்த பாடங்களை அட்டவணையில் குறித்துக்கொள்ளுங்கள். நீங்கள் திட்டமிட்டபடி அந்த நாளில் படித்து முடித்திருந்தால் உங்களை நீங்களே பாராட்டிக்கொள்ளுங்கள். உங்களை நீங்களே ஊக்குவித்துக்கொள்வது மிகுந்த தன்னம்பிக்கை அளிக்கும்.

நொறுக்குத் தீனி வேண்டாமே!

படிக்கும்போதே சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக பர்கர், பீட்சா, நொறுக்குத் தீனிகள் போன்றவற்றைக் கண்டிப்பாகத் தவிருங்கள். அது உங்கள் எடையை அதிகரிப்பது மட்டுமல்லாமல் தூக்கத்தையும் வரவழைக்கும். அதற்குப் பதில் பழங்கள், சாலட் போன்றவற்றைச் சாப்பிடலாம். இது உங்களைக் களைப்படையாமல் பார்த்துக் கொள்ளும்.

கவனச் சிதறலைத் தவிர்த்தல்

நீங்கள் படிக்கும் அறையில் உங்கள் கவனத்தைத் திசை திருப்பும் எதுவும் இல்லாமல் இருக்குபடி பார்த்துக்கொள்வது அவசியம். குறிப்பாக, பத்திரிகைகள், காமிக்ஸ் புத்தகங்கள், கதைப் புத்தகங்கள், வீடியோ கேம்ஸ் போன்றவை இருக்கக் கூடாது. தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே படிப்பதில் எந்தப் பயனுமில்லை. படிக்கும் நேரத்தில் படிப்பைத் தவிர எதற்கும் இடமில்லை என்பதை உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொள்ளுங்கள்.

கைபேசியைத் தவிர்த்தல்

நண்பர்கள் எங்கும் ஓடிவிடப் போவதில்லை. நீங்கள் சிரத்தையுடன் படித்து நன்றாகத் தேர்வு எழுதிய பின்னும் அவர்கள் இருக்கத்தான் போகிறார்கள். எனவே, படிக்கும் நேரத்தில் படிப்புக்கு மட்டும் முக்கியத்துவம் அளியுங்கள், நண்பர்களுடன் கைபேசியில் உரையாடுவது உங்கள் நேரத்தை வீணாக்கிவிடும் என்பதை மறக்கலாகாது. பாடம் தொடர்பான தவிர்க்க முடியாத உதவிக்கு கைபேசியைப் பயன்படுத்தலாம்.

வெளிச்சமும் காற்றோட்டமும்

படிக்கும் அறையை நல்ல காற்றோட்டத்துடனும் வெளிச்சத்துடனும் வைத்து கொள்ளுங்கள். காற்றோட்டம் மூளையையும் மனதையும் புத்துணர்வுடன் வைத்துக்கொள்ளும். கண்கள் எளிதில் களைப்படையாமல் வெளிச்சம் பார்த்துக்கொள்ளும்.

இடை ஓய்வு

படிப்புக்கு இடையே ஓய்வுக்கு என்று தகுந்த நேரத்தை ஒதுக்குங்கள். எந்நேரமும் படித்துக்கொண்டிருந்தால் மூளை ஆற்றல் மங்கிவிடும். மேலும், மனதின் உள்வாங்கும்தன்மை குறையும். இதனால், படிப்பின் மீது வெறுப்பு ஏற்படும் ஆபத்து உள்ளது. ஓய்வு என்பது தொலைக்காட்சி பார்ப்பதோ வீடியோ கேம்ஸ் விளையாடுவதோ அல்ல. ஏனென்றால், அவை மூளையை மேலும் களைப்படையச் செய்யும். சொல்லப்போனால், அதன் தாக்கம் நாம் படிக்கும்போதும் தொடரும். எனவே, முடிந்த அளவு அந்த நேரத்தில் நண்பர்களுடன் சேர்ந்து ஏதாவது விளையாட்டில் ஈடுபடுங்கள். இல்லையென்றால் காலாற நடந்துவிட்டுத் திரும்புங்கள்.

காலம் பொன் போன்றது

‘காலம் பொன் போன்றது, கடமை கண் போன்றது’ என்று ஒரு பழமொழி உண்டு. மாணவப் பருவத்தில் படிப்பதுதான் முக்கியக் கடமை. எனவே, அந்தப் படிப்பை எப்போதும் முதன்மை விருப்பமாக வைத்துக்கொள்ளுங்கள். ஏனென்றால், காலம் யாருக்காகவும் எதற்காகவும் காத்திருக்காமல் நிற்காமல் ஓடிக்கொண்டேயிருக்கும். நேரத்தை முறையாகப் பயன்படுத்தத் தெரிந்தால் காலம் நம்மை வெற்றிக்கு இட்டுச்செல்லும்.

கும்பகோணம் ஸ்பெஷல்



கடப்பா
கும்பகோணம் கடப்பா என்பது சாம்பார்போல இட்லி, தோசை, சப்பாத்தி ஆகியவற்றுக்குச் சேர்த்துக்கொள்ளும் ஒருவகை தொடுகறி. கும்பகோணத்தில் உள்ள ஒரு சில உணவகங்களில் வாரத்துக்கு ஓரிரு நாட்கள் மட்டுமே கடப்பா கிடைக்கும். அதற்காகவே அந்த நாளைத் தேர்வுசெய்து உணவகங்களுக்குச் சென்று சாப்பிடும் பிரியர்கள் உண்டு.

கும்பகோணம் கடப்பாவை வீட்டிலும் செய்யலாம் என்பதோடு அதைச் செய்யக் கற்றுத்தருகிறார் குடந்தை கலைச்செல்வி. இதற்குத் தேவையான பொருட்கள்: கேரட் - 2, பெரிய வெங்காயம் - 2, தக்காளி - 3, உருளைக் கிழங்கு - 3, பச்சைப் பட்டாணி - 100 கிராம், பச்சை மிளகாய் காரத்துக்கு ஏற்றவாறு சேர்த்துக்கொள்ளலாம். இஞ்சி, பூண்டு, தேங்காய், உப்பு ஆகியவை நமக்கு எவ்வளவு தேவைப்படுகிறதோ அதற்கு ஏற்றவாறு சேர்த்துக்கொள்ளலாம்.

உருளைக் கிழங்கு, பச்சைப் பட்டாணியை அவித்துக்கொள்ள வேண்டும். அதேபோல் பூண்டு, தேங்காய், இஞ்சி ஆகியவற்றை மையாக அரைத்துக்கொள்ள வேண்டும். வெங்காயம், தக்காளியை வாணலியில் எண்ணெய் ஊற்றி சிறிது நேரம் வதக்கிக்கொள்ளுங்கள். அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அரைத்துவைத்துள்ள இஞ்சி, பூண்டு, அவித்துவைத்துள்ள உருளைக் கிழங்கு, பச்சைப் பட்டாணி, கேரட் ஆகியவற்றைச் சேர்த்து அடுப்பில் சிறிது நேரம் கொதிக்கவிட்டால் கடப்பா தயார்.

திருமால் வடை
கும்பகோணம் பகுதியில் திருமால் வடை, பிரசித்திபெற்றது. இந்த வடையை ருசிப்பதற்காகவே சனிக்கிழமைதோறும் வடை பிரியர்கள் காந்தி பூங்கா அருகே உள்ள உணவகத்துக்கு வந்து செல்வார்கள். 50, 60 வடைகள்தான் சுடுவார்கள். ஆனால், உடனே விற்றுப்போகும்.

தேவையான பொருட்கள்:

கருப்பு உளுந்து - அரை கிலோ
மிளகு - 20 கிராம்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

உளுந்தை அரைமணி நேரம் தண்ணீரில் ஊறவைத்துப் பின்னர் தண்ணீர் வடித்து அரைத்துக்கொள்ளுங்கள். முழுமையாக உளுந்து மசியக் கூடாது. அரைபதத்துக்கு அரைத்தால் போதும். இதோடு மிளகையும் காரத்துக்கு ஏற்ப சேர்த்துக்கொள்ள வேண்டும். தண்ணீர் அதிகம் இருக்கக் கூடாது. தேவையான அளவு உப்பு சேர்த்து, மாவைச் சூடான எண்ணெய்யில் பெரிதாகத் தட்டிப்போட்டு நன்கு வெந்ததும் எடுத்துவிடுங்கள். அரை கிலோ உளுந்துக்குப் பத்து வடைகள் வரை கிடைக்கும். இவை முறுக்குபோல் மொறுமொறுவென இருக்கும்.
படங்கள்: ரவி
முகம் நூறு: கைகளே மூலதனம்

Published : 10 Dec 2017 10:36 IST




பழம்பெரும் கோயில்கள் நிறைந்த காஞ்சிபுரம் சுவைமிகு அப்பளத்துக்கும் பெயர்பெற்ற ஊராக மாறிவருகிறது. இந்தப் பகுதியில் வசிக்கும் பெண்களாலேயே இது சாத்தியமானது.

காஞ்சிபுரத்தில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அப்பளத் தயாரிப்புத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் 70 சதவீதத்தினர் பெண்கள்.

வருமானத்தை விழுங்கும் இடு பொருட்கள்

அப்பள நிறுவனங்கள், உளுந்து மாவை மட்டும் வாங்கி முகவர்கள் மூலம் இவர்களுக்குக் கொடுத்துவிடுகின்றனர். நிறுவனம் கொடுக்கும் 100 கிலோ மாவுக்கு அரிசி மாவு உள்ளிட்ட துணைப் பொருட்களைச் சேர்த்து அப்பளமாகச் செய்து 120 கிலோ அப்பளத்தை இந்தத் தொழிலாளர்கள் முகவரிடம் கொடுக்கின்றனர். அதைத் தரம்பார்த்து நிறுவனங்கள் விற்பனைக்கு அனுப்புகின்றன.

பல பிரபல நிறுவனங்களின் பெயர்களில் வரும் சுவை மிகுந்த அப்பளங்கள் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பெண்களின் கைவண்ணத்தில் உருவானவைதான். இந்தப் பெண்களுக்கு ஒரு கிலோ அப்பளம் செய்வதற்கு ரூ.70 கூலியாகக் கொடுக்கப்படுகிறது. ஒரு நாளைக்கு 10 முதல் 14 கிலோ அப்பளம் செய்ய முடியும் என்று இந்தத் தொழிலில் ஈடுபடும் பெண்கள் தெரிவிக்கின்றனர்.

“அப்பளம் செய்வதற்கு அரிசிமாவு, உப்பு, தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களைச் சேர்க்க வேண்டியுள்ளது. இந்தப் பொருட்களை எங்களுக்குக் கிடைக்கும் கூலியில் இருந்து நாங்கள்தான் வாங்குகிறோம். 14 கிலோ அப்பளத்துக்கு எங்களுக்கு ரூ.980 கிடைத்தால் அதில் சுமார் 50 சதவீதத் தொகை இந்தப் பொருட்களுக்குச் செலவாகிவிடும்” என்கிறார் ஒலிமுகமதுபேட்டையைச் சேர்ந்த மகேஸ்வரி.


ஒலிமுகமதுபேட்டை பகுதியில் தயாரிக்கப்பட்ட அப்பளத்தைச் சுத்தம் செய்து அடுக்கும் பெண்கள்

தொழிலதிபர்களாகும் விருப்பமும் வாய்ப்பும்

மூலப் பொருட்களை வாங்கி உழைப்பைச் செலுத்தித் தயாரிக்கும் அப்பளங்களை அவர்களே விற்பனை செய்வதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என்று இந்தப் பெண்கள் பலர் விரும்புகின்றனர்.

கூட்டுறவு நிறுவனங்களைத் தொடங்கி அப்பளத் தொழிலுக்கும் விற்பனை வாய்ப்பை உருவாக்கும் யோசனையும் சில பெண்களிடம் உள்ளது.

“ஒரு கிலோ உளுந்து மாவு ரூ.100, ஒரு கிலோவுக்கு கூலி ரூ.70. என ரூ.170 செலவில் இடுபொருட்களுடன் சேர்த்து 1.2 கிலோ அப்பளம் செய்யப்படுகிறது. இந்த அப்பளத்தின் விலை தரத்துக்குத் தகுந்தாற்போல் கிலோ ரூ.400 வரை விற்கப்படுகிறது. எங்களுக்கு விற்பனை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டால் தொழிலாளர்களாக இருக்கும் நாங்கள் தொழிலதிபர்களாகும் வாய்ப்புகள் உள்ளன” என்று அவர்கள் சொல்வதை அரசு கவனத்தில்கொள்ள வேண்டும்.

அப்பளம் தயாரிக்கும் தொழிலுக்கு இயந்திரங்கள் ஏதும் தேவையில்லை. தங்கள் சொந்தக் கைகளை நம்பியே பெண்கள் இந்தத் தொழிலில் ஈடுபடுகின்றனர். முதலீடு என்று பார்த்தால் உளுந்து மாவும் அரிசி மாவும் மட்டும்தான். இவர்களுக்கு அரசு கூட்டுறவு நிறுவனங்களைத் தொடங்க, சிறுதொழில் கடன்களை வழங்கி, விற்பனை வாய்ப்புகளை உருவாக்கினால் அப்பளத் தொழிலாளர்களின் மையமாக இருக்கும் காஞ்சிபுரம் அப்பள உரிமையாளர்களின் மையமாக மாறும் என்று நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றனர்.




காஞ்சிபுரம் ஒலிமுகமதுபேட்டை பகுதியில் அப்பளம் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள பெண்கள்.

கவனம் கோரும் பிரச்சினைகள்

நிறுவனங்களுக்கு அப்பளங்களைச் செய்து கொடுக்கும் பெண்களிடம், சில முகவர்கள் ரூ.50 ஆயிரம், ஒரு லட்சம் எனக் கடன் தந்துவிட்டு அதற்காக மிகக் கடுமையான உழைப்பை வாங்கிக்கொள்வதாகச் சிலர் குற்றம்சாட்டுக்கின்றனர். இதனால் பலர் ஓய்வில்லாமல் பணி செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. மழைக்காலங்களில் அப்பளம் காய வைக்க இடம் கிடைக்காதது உள்ளிட்ட சிக்கல்களாலும் இவர்களது தொழில் பாதிக்கப்படுகிறது. இதையெல்லாம் சரி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.

பெண்ணுக்கு நீதி 13: பெண்களுக்கு எதிரான அக்னிக் குழம்பு

‘நான் உன்னைக் காதலிக்கிறேன் என்றுகூட அல்ல. ‘வேறு யாரையும் நான் காதலிக்கவில்லை’ என்றாவது எழுது எனக்கொரு கடிதம்’என்ற வாட்ஸ் அப் தகவலை உதாசீனப்படுத்தியதுதான் அனிதா செய்த ஒரே குற்றம். அடுத்த நாள் கல்லூரிக்குச் சென்றுகொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞன் அவள் மேல் அமிலத்தை வீசினான். அமிலம் அவளது முகத்தைப் பொசுக்கியது. இமைகள், காது, மூக்கு என்று முகம் முழுவதும் சிதைந்து அவள் உயிர் பிழைப்பதே சிரமமானது.

நரகமாகும் வாழ்க்கை

அமில வீச்சு, பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் ஒரு வகை. பெண்களுக்கெதிரான அனைத்து வகை பேதங்களையும் களைவதற்கான உலகளாவிய ஒப்பந்தத்தின்கீழ் (CEDAW) இதுவும் பாலியல்ரீதியிலான பாகுபாட்டின் அடிப்படையிலான குற்றமே.
உலகிலேயே அமில வீச்சு அதிகம் நடக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஆனால், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் எல்லை கடந்து உலகம் முழுவதற்கும் பொதுவானவையாகவே இருக்கின்றன. இந்தக் குற்றங்களைப் பொறுத்தவரையில் வங்கதேசம், கம்போடியா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் இந்தியாவைவிட மோசம். இதில் பாதிக்கப்படுபவர்கள் பெரும்பாலும் 14 முதல் 35 வயது வரையிலான பெண்களாகத்தான் இருக்கிறார்கள். திருமணம் செய்துகொள்ள ஆண் வெளிப்படுத்தும் ஆசையை நிராகரிப்பது, காதலர்களாகப் பழகிய பின் திருமணத்துக்கு ஏதோவொரு காரணத்தால் மறுப்பு சொல்வது, பாலியல் அத்துமீறல்களைத் தடுப்பது/தவிர்ப்பது போன்றவை இதற்குக் காரணங்களாக இருக்கின்றன.

அமில வீச்சுக்களால் பெண்களின் அடையாளம் அழிக்கப்படுகிறது. ஆளுமையும் தன்னம்பிக்கையும் ஒடுக்கப்படுகின்றன. வேலைவாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. அமில வீச்சுக்குப் பிறகு மீண்டும் சராசரி வாழ்க்கையைத் தொடரும் வாய்ப்பே பல பெண்களுக்கு இல்லாமல் போகிறது. அமில வீச்சின் பின்விளைவுகளை அன்றாடம் அனுபவிக்கும் பெண்மனம் தினம் தினம் இறப்புக்கு நிகரான வேதனையை அனுபவிக்கிறது.

டெல்லி கூட்டு வன்புணர்வு வழக்குக்குப் பிறகு அமில வீச்சு உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை வரையறுக்கப்பட்ட குற்றங்களாகக் கருதி, புதிய சட்டப் பிரிவுகள் இந்தியத் தண்டனைச் சட்டத்தில் சேர்க்கப்பட்டன (இ.த.ச 326 ஏ).

வழிகாட்டும் நெறிமுறைகள்

அமில வீச்சில் பாதிப்புக்குள்ளாகும் பெண்களுக்கான உடனடித் தேவைகளைக் கருத்தில் கொண்டு உச்ச நீதிமன்றம் 2015-ல் வழிகாட்டும் நெறிகளை வழங்கியுள்ளது. அதன்படி, ‘தனியார் மருத்துவமனைகள் உள்ளிட்ட அனைத்து மருத்துவமனைகளும் அமில வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு முழுமையான மருத்துவ வசதி அளிக்க வேண்டும். தனியார் மருத்துவமனை என்பதால் மட்டும் இத்தகையவர்களுக்குச் சிகிச்சையளிக்க மறுக்கக் கூடாது. அமில வீச்சால் பாதிக்கப்பட்ட பெண், முதன்முதலில் சிகிச்சைக்குச் செல்லும் மருத்துவமனை நிர்வாகம், அவருக்கு அமில வீச்சுக்கு உள்ளானவர் என்று சான்றிதழ் வழங்க வேண்டும். அந்தச் சான்றிதழை அவர் மேல் சிகிச்சையைத் தொடரவும் மறுசீரமைப்பு அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளவும் இது தொடர்பாக மாநில அரசு வழங்கக்கூடிய ஏனைய திட்ட உதவிகளைப் பெறவும் பயன்படுத்தப்படலாம்’ என்று விரிவான விதிமுறைகளை அளித்தது.

நிவாரணத்துக்கான உத்தரவுகள்

மேலும் மாவட்ட நீதிபதி, மாவட்ட ஆட்சியர், காவல் துறைக் கண்காணிப்பாளர், மாவட்ட முதன்மை மருத்துவ அலுவலர் போன்றோரையும் உள்ளடக்கிய மாவட்ட சட்டப் பணிகள் ஆணையம், அந்த மாவட்டத்துக்கான நிவாரண வாரியமாகச் செயல்பட்டு, அமில வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்குரிய நிவாரண தொகையை அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைத் தவிர அமில வீச்சு குற்றத்துக்கு தண்டனை பெறும் குற்றவாளிக்குத் தண்டனையுடன் சேர்த்து அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்றும் இந்த அபராதத் தொகை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் அந்த அபராதத் தொகையை நிர்ணயிக்கும்போது அந்த பெண்ணுக்கு ஏற்பட்ட மருத்துவ செலவைக் கருத்தில் கொள்ளவேண்டும் என்றும் இந்திய தண்டனைச் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால், அமில வீச்சு மூலம் பெண்களின் எதிர்காலத்தைச் சூறையாடும் குற்றவாளிகளுக்கு எத்தனை வழக்குகளில் தண்டனை கிடைக்கிறது?

பாதுகாப்பு அவசியம்

இத்தகைய குற்றங்களுக்கெதிரான வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்படும் வழக்குகளின் விகிதம் ஏன் குறைவாகவே இருக்கிறது என்பதற்குப் பலவித காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. அவற்றில் ஒன்று, அமில வீச்சுத் தாக்குதல் போன்ற குற்றங்களைப் புலன்விசாரணை செய்யும் காவல் துறையினர் அது பற்றிய முழுமையாக புரிதலோ விழிப்புணர்வோ இல்லாமல் இருக்கிறார்கள். மேலைநாடுகளில் இருப்பது போன்ற சாட்சிகள் பாதுகாப்புச் சட்டம் இல்லாததால் பாதிக்கப்பட்ட பெண், அமிலத்தால் அச்சுறுத்தப்பட்டதன் தொடர்ச்சியாக அமிலம் வீசிய குற்றவாளியாலும் அச்சுறுத்தப்படும் அவலம் நிகழ்கிறது. குறைந்தபட்சம் சாட்சி சொல்லும் சமயத்திலாவது பெண்கள் பாதுகாப்பாக உணர வேண்டும் என்ற அடிப்படையில் உச்ச நீதிமன்றம் ஒவ்வொரு மாவட்டத்திலும் பாதிக்கப்பட்ட பெண்கள் அச்சமின்றி சாட்சியம் அளிக்க உரிய இடத்தைப் பராமரிக்குமாறு வலியுறுத்தியிருக்கிறது

மனத் தடைகளை உடைத்தெறிவோம்

முக அழகு ஒன்றையே பெண்களின் முக்கிய மூலதனமாகக் கருதும் பொதுப் புத்தியும் ஆண்களின் உலகமும் அமில வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களை ஏற்றுக்கொள்வதில் சுணக்கம்காட்டுகின்றன. இத்தகைய பாரம்பரியமான மனத் தடைகளை உடைத்தெறிய வேண்டும். அமில வீச்சால் பெண்களின் அடையாளம் அழிக்கும் ஈனச் செயல்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவது, சட்டத்தின் கையில் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பு மட்டுமல்ல, சமுதாயத்தின் கையில் தரப்பட்ட சாசனமும்கூட. அமிலம் வீச நினைப்பவர்கள் ஒரு விரலால் அதைத் தொட்டுப்பார்த்தாலேகூட, தான் செய்ய நினைக்கும் தவறைச் செய்ய மாட்டார்கள்.

(பாதைகள் விசாலமாகும்)
கட்டுரையாளர், முனைவர், நீதியரசர்
தொடர்புக்கு:judvimala@yahoo.com


மனைவியே மந்திரி: தோழியே மனைவி! - நடிகர் பிரசன்னா

Published : 10 Dec 2017 10:26 IST

தொகுப்பு: கா.இசக்கிமுத்து



சினிமா துறையில் இருந்து காதலித்து இணைந்த நானும் சினேகாவும் திருமணத்துக்கு முன்பே இரண்டு குடும்பங்களின் பிரச்சினைகளையும் பேசி முடித்துவிட்டோம். இருந்தாலும் பல குடும்பங்களில் இருப்பதுபோல் உரசல்கள், நெருடல்கள் இருக்கத்தான் செய்தன. அவற்றையெல்லாம் எனக்காகப் பொறுத்துக்கொண்டு தேவைப்படும்போது விட்டுக்கொடுக்கத் தயங்கியதே இல்லை அவர். சமீபத்தில் என் அப்பா, “நாங்களே உனக்குப் பெண் பார்த்துத் திருமணம் செய்துவைத்திருந்தால்கூட, உன் கஷ்ட நஷ்டங்களைத் தாங்கி இவ்வளவு உறுதுணையாக இருந்திருப்பாரான்னு தெரியாது. சந்தோஷமா இருக்கு” என்றார். அந்த அளவுக்குக் குடும்பத்தையும் என்னையும் சினேகா பார்த்துக்கொள்கிறார்.

அம்மா என்பதில் ஆனந்தம்


 

மகன் விஹான் பிறந்த பிறகு அவரை முழுமையான தாயாகவே பார்க்கிறேன். முன்பு நினைத்த நேரத்துக்கு வெளியே சாப்பிடச் செல்வோம், காரில் சுற்றுவோம், வெளிநாடு செல்வோம். ஆனால், மகன் பிறந்த பிறகு அவன் இல்லாமல் சினேகாவால் இருக்க முடியாது. படப்பிடிப்புக்குக்கூட அவனைக் கூட்டிச்சென்று கொஞ்ச நேரம் வைத்துக்கொள்வார்.

வெளியூர் படப்பிடிப்பு என்றால் அரை மணி நேரத்துக்கு ஒருமுறை அழைத்து மகனைப் பற்றி விசாரித்துக்கொண்டே இருப்பார். விஹானுக்கு இரண்டரை வயதாகிறது. மகனை விட்டுவிட்டு சினிமாவுக்குக்கூட வர மாட்டார். அப்படியே வந்தாலும் பத்து நிமிடத்துக்கு ஒரு முறை வீட்டின் சிசிடிவி கேமரா வழியாகப் பையன் என்ன செய்கிறான் என்று பார்த்துக்கொண்டிருப்பார்.

விஹானின் அம்மாவாக இருப்பதுதான் சினேகாவுக்குப் பிடித்த பொறுப்பு.

தளராத நம்பிக்கை

எனது வெற்றி - தோல்வி அவரை ரொம்பவே பாதிக்கும். வெற்றி கிடைக்கும்போது இருந்ததைவிட தோல்விகளின்போது என்னுடன் நின்றிருக்கிறார். என்னை எந்தவொரு இடத்திலும் விட்டுக்கொடுத்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருப்பார்.

திருமணத்துக்குப் பிறகு ஒரு கட்டத்தில், “நான் நடிப்பதை நிறுத்தப் போகிறேன். எனக்கு ஒரு மாற்றம் தேவைப்படுகிறது. உடற்பயிற்சி செய்து என்னை வேறு மாதிரி மாற்றப்போகிறேன். அதுவரை எந்த படத்திலும் நடிக்கப் போவதில்லை” என்றேன். எந்தவொரு கேள்வியுமே கேட்காமல் சரி என்று சொன்னார். 2016-ல் ‘திருட்டுப்பயலே -2’ படத்தில் ஒப்பந்தமாகும்வரை என்னிடம் அவர் எதுவுமே கேட்டதில்லை. நானே, “என்னம்மா, ஒன்றரை வருஷம் படம் எதுவுமே செய்யவில்லை.

ஒரு கேள்விகூடக் கேட்க மாட்டாயா?” என்று கேட்டேன். “உன் மேல் ஒரு நம்பிக்கை இருந்தது. நீ எவ்வளவு ஈடுபாட்டுடன் உடற்பயிற்சி செய்கிறாய் என்பதையும் பார்த்துக்கொண்டுதான் இருந்தேன். சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று கடுமையாக உழைக்கிறாய். அந்த அர்ப்பணிப்பு வீணாகாது” என்றார். அவர் என்றைக்காவது ஒருநாள், “என்னப்பா படம் எதுவும் ஒப்பந்தமாகவில்லையா?” என்று கேட்டிருந்தால்கூட ரொம்ப கஷ்டப்பட்டுப் போயிருப்பேன்.




முழு மகிழ்ச்சியைப் பார்த்த நாள்

திருமணத்துக்கு முன்பு பிறந்தநாளை மற்றொரு நாளாகத்தான் பார்ப்பேன். ஆனால், திருமணத்துக்குப் பிறகு என் ஒவ்வொரு பிறந்தநாளையும் மறக்க முடியாத நாளாக மாற்றிவிடுவார். நான் ஒரு கைக்கடிகாரப் பைத்தியம். ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் அவற்றை வாங்கிக் கொடுப்பார். அவரை எப்படியாவது ஆச்சரியப்படுத்த வேண்டும் என்று நானும் பலமுறை முயன்று தோற்றிருக்கிறேன். அவருக்கு கிறிஸ்தவ முறை திருமணம் பிடிக்கும். 2013-ல் அமெரிக்கா சென்றபோது அங்குள்ள நண்பரின் வீட்டில் எங்களின் கிறிஸ்தவ முறை திருமணத்துக்கு ஏற்பாடுகள் செய்திருந்தேன். இது எதுவுமே அவருக்குத் தெரியாது. அந்தத் திருமணத்துக்காக அவருடைய அக்காவை இங்கிருந்து அவருக்குத் தெரியாமல் வரவழைத்தேன். சினேகாவின் முழுமையான சந்தோஷத்தை அன்று பார்த்தேன்.

சாம்பாரே பெரிய விருந்து

திருமணமான பிறகு வந்த என் முதல் பிறந்தநாளுக்கு வீட்டிலேயே கேக் செய்து கொடுத்து ஆச்சரியமளித்தார். நன்றாகச் சாப்பிட வேண்டுமென்று தோன்றினால் அவரைச் சாம்பார் வைக்கச் சொல்வேன். அதுதான் எனக்குப் பெரிய விருந்து.

அவர் வெளிப்படையானவர். யாராக இருந்தாலும் மனதில் பட்டதை அப்படியே சொல்லிவிடுவார். ஆனால், யாரிடம் எதைச் சொன்னாலும் அதில் தேன் தடவியதுபோல மனம் வலிக்காத மாதிரி சொல்வார். அதுதான் அவரது சிறப்பு. வீட்டை மிகவும் சுத்தமாக வைத்துக்கொள்வார். எந்தப் பொருள் எங்கு இருக்க வேண்டுமோ, அங்குதான் இருக்க வேண்டும். இந்த இரண்டையும் அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள நினைப்பேன்.




புரிதலும் பிணைப்பும்

என்னைப் பற்றித் தவறான செய்திகள் பெரிதாக வந்ததில்லை. சில நேரம் காயப்படுமளவுக்கு ஏதாவது கிசுகிசுக்கள் வரும். அவற்றையெல்லாம் பெரிய விஷயமாக நானும் அவரும் எடுத்துக்கொள்வதில்லை. என்னைவிட வதந்திகளால் பெரிதாக அவர்தான் பாதிக்கப்பட்டிருக்கிறார். அதனால், திரையுலகம் எப்படி என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். எங்களுக்குள் அப்படி ஒரு புரிதலும் பிணைப்பும் உண்டு. நான் எந்த ஊரில் படப்பிடிப்பில் இருந்தாலும் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை அவரை அழைத்துப் பேசிவிடுவேன்.


நட்பே பிரதானம்

விழாக்களில் எங்கள் இருவரையும் சேர்த்துப் பார்க்கும்போது திரையுலகில் அனைவரும் சந்தோஷப்படுகிறார்கள். உதாரணத் தம்பதியாகப் பார்க்கப்படுவது பெருமையளிக்கிறது. ‘நமக்குள் வரக்கூடிய எந்தவொரு பிரச்சினையாக இருந்தாலும் மூன்றாவது நபரிடம் போகாக் கூடாது, அன்றைய பிரச்சினையை அன்றைக்கே முடித்துவிட வேண்டும், எவ்வளவு பெரிய பிரச்சினை என்றாலும் பிரிவு பற்றி யோசிக்கக் கூடாது’ என்று பேசி உறுதியெடுத்துக்கொண்ட பின்தான் நாங்கள் திருமணம் செய்துகொண்டோம். முதலில் நாங்கள் இருவரும் நண்பர்கள், பிறகுதான் கணவன்-மனைவி.
இளமை .நெட்: வேகத்தை அதிகரிக்கும் ஜிமெயில் ரகசியங்கள்!

Published : 24 Nov 2017 11:32 IST

சைபர்சிம்மன்




கூகுள் வழங்கும் ஜிமெயில் சேவை பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஜிமெயில் லேப்ஸ் தெரியுமா? அது வழங்கும் உப சேவைகளைப் பற்றி தெரியுமா? இந்த சேவைகளைப் பயன்படுத்துவதன் மூலம் இமெயில் செயல்திறனை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.

‘சுவாரசியமான சோதனை விஷயங்கள்’ என்று ஜிமெயில் லேப்ஸ் பற்றி கூகுள் குறிப்பிடுகிறது. இது புதிய சேவைகளுக்கான சோதனைக்களம் எனப் புரிந்துகொள்ளலாம்.அனுப்பிய இமெயிலைத் திரும்பப் பெற வழி செய்யும், ‘அன்சென்ட்’ (Unsent) வசதி உள்ளிட்ட சேவைகள் இந்தச் சோதனைக்கூடத்தில் உதயமானவைதாம். எல்லா சேவைகளும் ஜிமெயில் வசதிகளாக அறிமுகமாவதில்லை என்றாலும், சோதனைக்கூட சேவைகளை முயன்று பார்ப்பது பயனுள்ளதாகவே இருக்கும்.

எப்படி அணுகுவது?

ஜிமெயில் லேப்ஸ் சோதனை வசதியை ஜிமெயிலின் ‘டெஸ்க்டாப்’ வடிவில் மட்டுமே அணுக முடியும். ஜிமெயில் லேப்ஸ் வசதியைப் பெற, ஜிமெயில் கணக்குக்குள் நுழைந்து கியர் ஐகானை கிளிக் செய்து, செட்டிங்ஸ் பகுதியை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் லேப்ஸ் பகுதியை கிளிக் செய்தால், அதற்கான தனிப் பக்கத்தை அடையலாம். அதில் வரிசையாகக் காணப்படும் சேவை அம்சங்களிலிருந்து தேர்வு செய்து, மாற்றத்தைச் சேமித்துக்கொண்டால் அந்த வசதியைப் பயன்படுத்தலாம். இந்த சேவை தேவையில்லையென்றால், அதை எளிதாக நீக்கிவிடலாம்.

இன்பாக்ஸ் பல

ஒரே ஒரு இன்பாக்ஸுக்குப் பதில் பல இன்பாக்ஸை உருவாக்கிக்கொள்ள முடிந்தால் வசதியாக இருக்கும் அல்லவா? ‘மல்பிட்பிள் இன்பாக்ஸ்’ அம்சம் மூலம் இதை ஜிமெயில் லேப்ஸ் சாத்தியமாக்குகிறது. இதன் மூலம் இமெயில்களைப் பல்வேறு தலைப்புகளின் கீழ் தனித்தனி இன்பாக்சாகப் பிரித்துக்கொள்ளலாம். மெயிலை வகைப்படுத்தி தொகுப்பதன் மூலம் பல இன்பாக்ஸ்கள் இருப்பதுபோன்ற தோற்றம் கிடைத்தாலும், நடைமுறையில் இது பயனுள்ளதாகவே இருக்கும்.

இந்த வசதியைத் தேர்வு செய்த பிறகு மெயிலைப் பயன்படுத்தும்போது, செட்டிங்ஸ் பகுதிக்குச் சென்று பல இன்பாக்ஸ் அமைப்பை ஏற்படுத்திக்கொள்ளலாம். அதன் பிறகு குறிச்சொல்லுக்கு ஏற்ப மெயில்களை வகைப்படுத்திக்கொள்ளலாம்.

கீபோர்ட் குறுக்குவழிகள்

இணைய பயன்பாட்டில் பிரவுசர் குறுக்கு வழிகள் மிகவும் பிரபலமானவை. ஒன்றுக்கும் மேற்பட்ட கிளிக் தேவைப்படக்கூடிய இடங்களில் அவற்றை உடனே அணுக குறுக்குவழிகள் கைகொடுக்கின்றன. ஜிமெயில் செயல்பாடுகளை விரைவுப்படுத்திப் பிரத்யேகக் குறுக்குவழிகளும் இருக்கின்றன. இவற்றோடு உங்களுக்கான குறுக்குவழிகளை அமைத்துக்கொள்ள கூகுள் வழி செய்கிறது. செட்டிங்ஸ் பகுதியில் ‘கீபோர்ட் ஷார்ட்கட்ஸ்’ எனும் பகுதிக்குச் சென்றால், தேவையான குறுக்குவழிகளை அமைத்துக்கொள்ளலாம்.


ஒரே பதில்

இமெயில்களின் தன்மைக்கு ஏற்ப அவற்றுக்கான பதில்கள் மாறும். சில மெயில்களுக்கு ஒரே விதமான பதில்களை அனுப்பும் நிலையும் இருக்கலாம். இதுபோன்ற சூழலில் ஒரே விதமான பதிலை மீண்டும் அடிப்பது அலுப்பூட்டும். இதைத் தவிர்க்க ‘கேண்ட் ரஸ்பான்ஸ்’ வசதியைப் பயன்படுத்தலாம். நிர்ணயிக்கப்பட்ட பதில்கள் தேவைப்படும் மெயில்களுக்கு, அவற்றை மீண்டும் டைப் செய்யாமல் இந்த வசதியை கிளிக் செய்து அதே பதிலை அனுப்பிவிடலாம். இந்த வசதியை உருவாக்கிகொண்ட பிறகு கம்போஸ் பகுதிக்கு அருகே இதற்கான பட்டனைக் காணலாம்.

ஸ்மார்ட் லேபில்கள்

மெயில்களைப் பிரிக்க அவற்றுக்கான ஸ்மார்ட்லேபிள்களை உருவாக்கிக்கொள்ளலாம். நிதி, சமூகம், பயணம், அலுவலகம் என லேபிள்களுக்கு ஏற்ப இன்பாக்ஸில் வரும் மெயில்கள் தானாக வகைப்படுத்தப்படும். எந்த வகையான மெயில் தேவையோ அதை மட்டும் கிளிக் செய்து பார்க்கலாம். ஸ்மார்ட் லேபிள் தலைப்பின் கீழ் இந்த வசதியைப் பெறலாம்.

பலரும் கூகுள் காலாண்டரைப் பயன்படுத்தலாம். நிகழ்ச்சிகளைத் திட்டமிட, சந்திப்புகளை ஏற்பாடு செய்ய எனப் பலவற்றுக்கும் நாட்காட்டி வசதியைப் பயன்படுத்தலாம். ஆனால், நாட்காட்டி வசதியை ஒவ்வொரு முறையும் தனியே அணுகுவதைத் தவிர்க்க, ஜிமெயிலுக்குள்ளேயே அதைக் கொண்டுவரும் வசதியை லேப்ஸ் சேவையிலிருந்து அமைத்துக்கொள்ளலாம். ஜிமெயிலிலிருந்து வெளியேறாமலே நாட்காட்டியில் தகவல்களைச் சேர்க்க இது உதவுகிறது. இந்த வசதியை உருவாக்கிக்கொண்ட பிறகு, நாட்காட்டி சேவைக்கான வசதி இன்பாக்ஸ் இடப்பக்கத்தில் மூன்று புள்ளிகளாகத் தோன்றும்.

இமெயில்களில் இன்னமும் திறக்கப்படாமல் இருக்கும் மெயில்கள் எத்தனை என்பதை உடனடியாக அறியும் வசதியை அன்ரெட் மெசேஜ் சேவை மூலம் பெறலாம். மெயில்களை நட்சத்திரக் குறியிட்டு அடையாளப்படுத்துவது போலவே இன்னும் பலவற்றுக்கான ‘குவிக் லிங்க்ஸ்’ இணைப்புகளையும் உருவாக்கிக்கொள்ளலாம்.

ஜிமெயில் லேப்ஸ் பகுதிக்குச் சென்று கொஞ்சம் பொறுமையாக அலசி ஆராய்ந்தால், உங்கள் ஜிமெயில் பயன்பாட்டை இன்னும் மேம்படுத்திக்கொள்ள முடியும்.
வாய்ப்புண் வருவது ஏன்?

Published : 13 Dec 2014 15:32 IST

டாக்டர் கு. கணேசன்



வாய்ப்புண் வருவது மிகவும் சாதாரண விஷயம்தான். ஆனால், அதைக் கவனிக்காமல் விட்டாலோ, அடிக்கடி வந்தாலோ பிரச்சினை பெரிதாகிவிடும். தொடக்கத்தில் உதடு, கன்னம், நாக்கு, அண்ணம் ஆகிய பகுதிகளில் கடுகளவு தோன்றும் கொப்புளங்கள், சில நாட்களில் உடைந்து, உளுந்து அளவுக்குக் குழிப்புண்களாக மாறி வலியை ஏற்படுத்தும்; சாப்பிடும்போதும் பேசும்போதும் வலி அதிகமாகும். கழுத்தில் நெறிகட்டும்; காய்ச்சல் வரும்; உடல்வலி, தலைவலி எனத் தொல்லைகள் தொடரும்.

யாருக்கு வரும்?


குழந்தை முதல் முதியோர்வரை இது எல்லோருக்கும் வரலாம். பொதுவாக, ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளவர்களுக்கு வாய்ப்புண் வரும் வாய்ப்பு அதிகம். அடுத்து, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கும், இரைப்பையில் புண் உள்ளவர்களுக்கும் இதன் தாக்கம் அதிகம்.

தவிர வெற்றிலை, புகையிலை, பான்மசாலா போடுபவர்கள், புகை பிடிப்பவர்கள், மது அருந்துபவர்கள், நீரிழிவு நோயாளிகள் ஆகியோருக்கு அடிக்கடி வாய்ப்புண் வரலாம். எந்த நேரமும் வேலை, வேலை என்று பரபரப்பாக இருக்கிறவர்களுக்கும், மன அழுத்தம் உள்ளவர்களுக்கும் வாய்ப்புண் மீண்டும் மீண்டும் வந்து தொல்லை கொடுக்கும்.

காரணம் என்ன?

நீண்ட நாட்களுக்குச் சரிவிகித உணவைச் சாப்பிடாதவர்களுக்கு இரும்புச் சத்து, ஃபோலிக் அமிலம், வைட்டமின் பி6 மற்றும் பி12 குறைபாடு ஏற்படும். இதனால் ரத்த வெள்ளை அணுக்கள் குறைந்துவிடும். இதன் விளைவாக உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து வாய்ப்புண் வரும்.

ஆண்களைவிடப் பெண்களுக்கு இந்தத் தொல்லை அதிகம். காரணம், பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுவது இயல்பு. இதனால் இவர்களுக்கு வாய்ப்புண் வருகிறது. அடுத்து, இவர்கள் சாப்பிடும் கருத்தடை மாத்திரைகளும் வாய்ப்புண் ஏற்படக் காரணமாகின்றன.

வாய்ப்புண் வருவதற்கு ஒவ்வாமையும் முக்கியக் காரணம்தான். உணவு ஒவ்வாமை - குறிப்பாகச் செயற்கை வண்ண உணவுகள் - மருந்து ஒவ்வாமை, பற்பசை ஒவ்வாமை போன்றவற்றை உதாரணங்களாகக் கூறலாம். அதிகமாகக் கவலைப்பட்டாலும் வாய்ப்புண் வரும். உதாரணம், மாணவர்களுக்குத் தேர்வு நேரங்களில் மன அழுத்தம் அதிகரிப்பதால் வாய்ப்புண் வருவது.

வைட்டமின் பி2 குறைபாடு இருந்தால், வாயின் இரண்டு ஓரங்களிலும் வெள்ளை நிறத்தில் வெடிப்புகள் தோன்றும். இரைப்பையில் புண் உள்ளோருக்கு, அங்கே சுரக்கிற அதீத அமிலம் தூக்கத்தில் உணவுக்குழாயைக் கடந்து வாய்க்கு வந்துவிடும். அப்போது தொண்டையிலும் வாயிலும் புண் ஏற்படும்.

கூர்மையான பற்கள் இருந்தால், அவை உள் கன்னத்தைக் குத்தி, புண்ணை உண்டாக்கும். கவனக்குறைவாகச் சாப்பிடும்போது கன்னம் கடிபட்டு வாய்ப்புண் ஏற்படலாம். பல் துலக்கும்போது பிரஷ் குத்துவதால் புண் உண்டாகலாம். செயற்கைப் பற்கள் சரியாகப் பொருந்தவில்லை என்றால், அடிக்கடி வாய்ப்புண் வரும். மிகச் சூடாக காபி/டீ குடித்தால்கூட வாய்ப்புண் வருவதுண்டு. சிலர் வாயின் ஒரு பக்கத்தில் மட்டுமே உணவை மெல்லுவார்கள். இது நாளடைவில் வாய்ப்புண்ணுக்கு வழியமைக்கும்.

கிருமிகளின் தாக்குதல்!

பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகளின் தாக்குதல் காரணமாக வரும் கிரந்தி நோய், வின்சன்ட் நோய், சின்னம்மை, தட்டம்மை, வாயம்மை, எய்ட்ஸ் போன்ற நோய்கள் ஏற்படும்போது வாயில் புண் வருவது வழக்கம்.‘கான்டிடா ஆல்பிகன்ஸ்' (Candida albicans) எனும் பூஞ்சைக் கிருமிகளின் பாதிப்பால் நாக்கில் ‘கட்டித் தயிர்’ போல வெண்படலம் உருவாகிப் புண் ஏற்படும். அடிக்கடி ‘ஆன்ட்டிபயாட்டிக்’ மருந்துகளை எடுத்துக் கொள்பவர்களுக்கும் அஜீரணக் கோளாறு இருப்பவர்களுக்கும், இது நிரந்தரத் தொந்தரவாகிவிடும். பல் ஈறு கோளாறுகள், சில மருந்துகளின் பக்கவிளைவு காரணமாகவும் வாய்ப்புண் வருவதுண்டு.

என்ன சிகிச்சை?

பெரும்பாலான வாய்ப்புண்கள் சரியான உணவு மூலமே குணமாகி விடும். அதேநேரத்தில், வாய்ப்புண் வெகு நாட்களுக்கு ஆறாமல் இருந்தால், அது புற்றுநோயாக மாறுவதற்கும் வாய்ப்புண்டு. ஆகவே வாய்ப்புண்தானே என்று அலட்சியமாக இருக்காமல், காரணம் அறிந்து சிகிச்சை பெற வேண்டியது அவசியம்.

மருத்துவரின் ஆலோசனைப்படி ஆன்ட்டிசெப்டிக் திரவத்தைப் பயன்படுத்தி வாய் கொப்பளித்தால் வாய்ப்புண் சீக்கிரத்தில் குணமாகும். ஸ்டீராய்டு மற்றும் வலி மரத்துப் போகச் செய்யும் களிம்புகளை வாய்ப்புண்ணில் தடவலாம். இவற்றோடு வலி நிவாரணி மாத்திரைகளையும் ஒரு வாரம் சாப்பிட வேண்டும். லாக்டோபேசில்லஸ் (Lactobacillus) மருந்து கலந்த மல்ட்டி வைட்டமின் மாத்திரை மற்றும் இரும்புச்சத்து, ஃபோலிக் அமிலம் மாத்திரைகளை ஒரு மாதம் சாப்பிட வேண்டும். அப்போதுதான் வாய்ப்புண் மீண்டும் வராது. பூஞ்சையால் வரும் வாய்ப்புண்ணுக்குக் காளான் கொல்லி மருந்தைத் தடவினால் நல்ல பலன் கிட்டும்.

தடுப்பது எப்படி?

வாய்ச்சுத்தம் காப்பது வாய்ப்புண்ணைத் தடுப்பதற்கான முதல் படி. ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பல் மருத்துவரிடம் காண்பித்து ‘ஸ்கேலிங்’ முறையில் பற்களைச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும் கூரான பற்களைச் சரி செய்ய வேண்டும். செயற்கைப் பல்செட்டால் பிரச்சினை வருகிறது என்றால், அதை மாற்றிவிடுவது நல்லது. ‘சோடியம் லாரில் சல்பேட்’(Sodium lauryl sulphate) கலந்திருக்கும் பற்பசையைப் பயன்படுத்தக் கூடாது. புகை பிடிக்கக் கூடாது. வெற்றிலை, புகையிலை, பான்மசாலா போடக் கூடாது. மது ஆகாது. நீரிழிவு நோயாளிகள் நோயைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். உணவு ஒவ்வாமை/மருந்து ஒவ்வாமை இருந்தால் தவிர்க்க வேண்டும்.

எந்த உணவு முக்கியம்?

பால், தயிர், முட்டை, இறைச்சி, ஈரல், மீன், நண்டு, கீரை, பச்சையிலைக் காய்கள், வெல்லம், தேன், பேரீச்சை, முளை கட்டிய பயறுகள், கொண்டைக் கடலை, பச்சைப் பட்டாணி, கோதுமை, கேழ்வரகு, சோயாபீன்ஸ், தக்காளி, முருங்கைக்காய், சுண்டைக்காய் ஆகியவற்றை அடிக்கடி சாப்பிட்டால் ஊட்டச்சத்துக் குறைபாடு காரணமாக வாய்ப்புண் ஏற்படுவதை நிச்சயம் தடுக்கலாம்.

- கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்

தொடர்புக்கு: gganesan95@gmail.com

NEWS TODAY 27.01.2026