Sunday, December 17, 2017

ஞாயிறு அரங்கம்: வைப்புநிதி காப்பீட்டு மசோதா: அச்சப்பட வேண்டிய விஷயமா?


நிதித் தீர்வு மற்றும் வைப்புநிதிக் காப்பீட்டு மசோதா 2017 என்ற சட்ட வரைவை அறிமுகப்படுத்தியுள்ளது மத்திய அரசு. இந்த மசோதா சட்ட வடிவம் பெற்றால், வங்கியில் மக்கள் டெபாசிட் செய்த பணத்துக்குப் பாதுகாப்பு கிடையாது; டெபாசிட் செய்தவர்களின் பணம் மூழ்கிவிடும் என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது.
திருமணம், கல்வி, வாழ்க்கைத் தேவைகள் என எதிர்காலத்துக்காகச் சேமித்து வைத்த பணத்தை முதலீடு செய்யப் பல வழிகள் உண்டு. பங்குச்சந்தை, பரஸ்பர நிதியம், பத்திரங்கள் போன்றவற்றில் முதலீடு செய்யும்போது சந்தை நிலவரத்துக்கு ஏற்ப லாபமும் கிடைக்கலாம், நஷ்டமும் ஆகலாம். எனவே, சிக்கலுக்கு ஆளாக விரும்பாதவர்கள் டெபாசிட்செய்வது பெரும்பாலும் வங்கிகளில்தான். ஏனென்றால், இந்திய வங்கிப் பரிவர்த்தனையில் 82% பொதுத்துறை வங்கிகளில்தான் நடக்கிறது. எனவே, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு ஏதேனும் சிக்கல் வந்தாலும் அரசு கை கொடுக்கும் என மக்கள் நம்புகிறார்கள். ஆனால், வங்கிகளில் வாராக்கடன் மதிப்பு இப்போது பத்து லட்சம் கோடி ரூபாயைத் தாண்டிவிட்டது என்ற நிலையில், புதிய சட்டம் குறித்து மக்கள் அச்சம் கொள்வது இயற்கைதான்.

பழைய விதி

ஒரு வங்கி திடீரென நிதிச் சிக்கலுக்கு ஆளானால் என்ன செய்வது என்று 60 ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிட்டது மத்திய அரசு. அதற்காக, 1961-ல் டெபாசிட் காப்பீட்டுச் சட்டத்தை இயற்றியது. இதன்படி, ரூ.1 லட்சம் வரையிலான டெபாசிட்டை வட்டியுடன் திருப்பித் தருவதற்கான காப்பீடு வசதி, வங்கிக்குக் கிடைத்தது. இதற்காக, ரிசர்வ் வங்கியின் கீழ் டெபாசிட் காப்பீட்டு வாரியத்துக்கு இந்தியப் பொதுத்துறை வங்கிகள் பிரிமியம் தொகையாக ரூ.3,000 கோடி செலுத்துகின்றன. ஆயினும், இத்தனை ஆண்டுகளில் வங்கி மூழ்கிய சம்பவம் ஏதும் நிகழவில்லை. ஆக, ஒரு வங்கியில் எத்தனை லட்சம் ரூபாய் டெபாசிட் செய்திருந்தாலும், அந்த வங்கி கடனில் மூழ்குமானால், ஒரு லட்சம் மட்டுமே கிடைக்கும் என்ற விதி இன்று புதிதாக வந்ததல்ல, 1961 முதலாகவே இருக்கிறது.

மத்திய அரசு புதிதாக அறிமுகம் செய்திருக்கும் மசோதா, ரிசர்வ் வங்கிக்குக் கீழ் இயங்குகிற டெபாசிட் காப்பீட்டு வாரியம் என்ற அமைப்புக்குப் பதிலாக, தீர்வு வாரியம் என்ற வேறொரு அமைப்பை உருவாக்குகிறது. இந்த வாரியம் வங்கிகளோடு காப்பீட்டு நிறுவனங்கள், பங்குச் சந்தைகள் ஆகியவற்றையும் உள்ளடக்கும்.

வங்கிகளை நெறிப்படுத்த ரிசர்வ் வங்கி இருக்கிறது. காப்பீட்டு நிறுவனங்களை நெறிப்படுத்த காப்பீட்டு நெறிப்படுத்து ஆணையம் (ஐஆர்டிஏ) இருக்கிறது. பங்குச்சந்தை விவகாரங்களைக் கவனிக்க செபி இருக்கிறது. இந்த மூன்று கண்காணிப்பு அமைப்புகளும் ஏற்கெனவே இயங்கிக் கொண்டிருக்கும் நிலையில், அவை செய்துவந்த ஒரு பணியைச் செய்ய இன்னொரு அமைப்பு உருவாக்கப்படுவது தேவையற்றது. ஆனால், ஜி-20 கூட்டமைப்பில் இந்தியா உறுப்பினராக இருப்பதால், அவ்வமைப்பு ஆலோசனை கூறியுள்ளபடி, தீர்வு வாரியத்தை உருவாக்கும் முயற்சியில் அரசு இறங்கியிருக்கிறது.

புதிய மசோதாவின்படி, தீர்வு வாரியமோ அல்லது ரிசர்வ் வங்கி, ஐஆர்டிஏ, செபி போன்ற நெறிப்படுத்து நிறுவனங்களோ வாராக்கடன் சிக்கலுக்கு உள்ளாகும் நிறுவனங்களை அவற்றின் நிலைமையைப் பொறுத்து தரப்படுத்தும். நிறுவனத்தின் முதலீடு, சொத்துகள், பொறுப்புக் கடன்கள், நிர்வாகத் திறன் ஆகியவற்றைப் பொறுத்து, குறைந்த ஆபத்து, மிதமான ஆபத்து, தீவிர ஆபத்து என வகைப்படுத்தும். அதிக ஆபத்து, தீவிர ஆபத்து நிலையில் இருக்கும் நிறுவனங்கள் என்றால், தீர்வு வாரியம் அதனைச் சரி செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும். சரிசெய்யும் நடவடிக்கையாக, அந்த நிறுவனம் முதலீடு திரட்டக் கூடாது, டெபாசிட் வாங்கக் கூடாது, வர்த்தகத்தை விரிவுபடுத்தக் கூடாது என்று கட்டுப்படுத்தலாம்.

எல்லை கடந்த அதிகாரம்

ஒரு நிறுவனம் தீவிர ஆபத்தில் இருப்பதாக வகைப்படுத்தப்பட்ட தேதியிலிருந்து அதன் நிர்வாகத்தைத் தீர்வு வாரியம் தன் கையில் எடுத்துக்கொள்ளும். பிறகு, கடன் சிக்கலைத் தீர்க்கும் முயற்சிகளாக அந்த நிறுவனத்தின் சொத்துகள் / பொறுப்புக் கடன்களை வேறொரு நிறுவனத்துக்கு மாற்றலாம்; வேறொரு நிறுவனத்துடன் இணைக்கலாம்; இந்த நிறுவனத்தை நிர்வகிக்கப் புதிதாக ஒரு நிறுவனத்தை உருவாக்கலாம்; கடனிலிருந்து மீட்டெடுக்கலாம். நிறுவனத்துக்குப் பணம் கொடுத்தவர்களுக்குத் திருப்பித் தர நிறுவனத்தையே கலைக்கலாம். தீர்வு வாரியத்துக்கு ஓராண்டு கால அவகாசம் உண்டு. தேவைப்பட்டால், மேலும் ஓராண்டு நீட்டிப்பும் கிடைக்கும்.

இந்நடவடிக்கை எடுக்கப்படும் காலங்களில், தீர்வு வாரியத்தின் நடவடிக்கைகள் குறித்து எந்த நீதிமன்றத்திலும் கேள்வி கேட்க முடியாது. இரண்டு ஆண்டுகளுக்குள் சரிசெய்யாவிட்டால், தீர்வு வாரியத்தின்மீது எந்த நடவடிக்கையும் கிடையாது. அது மட்டுமல்ல, தனது செயல்பாடுகளுக்கான கட்டணத்தையும் கடன்பட்ட நிறுவனத்திடமிருந்தே தீர்வு வாரியம் வசூலித்துக்கொள்ளும். ஒரு நிறுவனத்தின் கடன் நிலையை வகைப்படுத்தும் முடிவை எதிர்த்து அந்த நிறுவனம் மேல்முறையீடு செய்வதற்கும் எந்த வழியும் இல்லை.

நிறுவனத்தைக் கலைப்பது என்று முடிவானால், இருக்கிற பணத்தைத் திருப்பித் தருவதில் அந்த நிறுவனத்துடன் தொடர்புடையவர்களில் யாருக்கு முன்னுரிமை கொடுப்பது என்பதைக் குறித்தும் ஒரு பட்டியல் இச்சட்டத்தில் உண்டு. இதன்படி, காப்பீடு செய்யப்பட்ட டெபாசிட்களுக்கு முன்னுரிமை தரப்படும். தீர்வு வாரியக் கட்டணம் இரண்டாவது இடம்பெறும். காப்பீடு செய்யப்படாத டெபாசிட்களுக்கு ஐந்தாவது இடம்தான்! 1961 முதல் நடைமுறையில் உள்ள வைப்புத்தொகை காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள ரூ.1 லட்சம் என்ற வரம்பு இந்த மசோதாவால் நீக்கப்பட்டதா, ஒரு லட்சத்துக்கும் அதிகமான டெபாசிட்களுக்கு இது உத்தரவாதம் அளிக்கிறதா என்று பார்த்தால், அப்படி ஏதும் இல்லை.

அச்சத்தின் பின்னணி

முன்னர் ரிசர்வ் வங்கியின் கீழ் வைப்புநிதி காப்பீட்டு நிறுவனம் இருந்தது. இப்போது அந்தப் பணியைத் தீர்வு வாரியம் எடுத்துக்கொண்டு, வங்கிகளுக்குக் ‘குறிப்பிட்ட வரம்புக்குள்’ளேயே காப்பீடு வழங்கும். அதாவது, வங்கி கடனில் மூழ்குமானால், டெபாசிட் செய்தவரர்ுக்கு ‘குறிப்பிட்ட’ தொகை கிடைக்கும். முந்தைய சட்டத்தின்படி ரூ.1 லட்சம் என்பது உச்சவரம்பு. இந்தச் சட்ட மசோதாவில் ‘ஒரு லட்சம்’ என்றும் குறிப்பிடப்படவில்லை, முழுத் தொகை என்றும் தரப்படவில்லை. திருப்பித் தரப்படுகிற ‘ஒரு லட்சம்’ அல்லது ‘குறிப்பிட்ட’ தொகைக்கு மேலான டெபாசிட் தொகைக்கு நிகராக வங்கியின் பங்குகளாக மாற்றித்தர சட்டத்தில் வழி செய்யப்பட்டுள்ளது. இது சட்டமான பிறகு, ஒருவேளை வங்கி மூழ்குமானால், டெபாசிட் செய்தவர்களுக்கு முழுத் தொகையும் கிடைக்கும் என்ற உத்தரவாதம் சட்ட வரைவில் இல்லை. இதுதான் மக்கள் மத்தியில் அச்சத்தைக் கிளப்பிவிட்டது.

ஊடகங்களில் இந்தப் பிரச்சினை எழுப்பப்பட்ட பிறகே, இந்த மசோதாவைப் பற்றி மத்திய அரசு வாயைத் திறந்தது. மசோதா இன்னும் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் பரிசீலனையில்தான் இருக்கிறது, இன்னும் நிறைய திருத்தங்கள் செய்யப்பட இருக்கிறது என்றெல்லாம் நிதியமைச்சர் கூறியிருக்கிறார். புதிய சட்டம், டெபாசிட் செய்பவர்களுக்கு நன்மை செய்வதாகவே இருக்கும், பொதுத்துறை வங்கிகளின்பால் அரசின் உத்தரவாதம் தொடரும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளது மத்திய அரசு.

ரிசர்வ் வங்கி, ஐஆர்டிஏ, செபி ஆகிய மூன்று அமைப்புகள் இருக்கும்போது, புதிய தீர்வு வாரியத்துக்கு அவசியமே இல்லை. வாராக்கடன் பிரச்சினைக்குத் தீர்வு கண்டாலே வங்கிகளின் பிரச்சினைகளுக்குப் பெருமளவில் தீர்வு கண்டுவிட முடியும். ஏற்கெனவே இருக்கிற நெறிப்படுத்தும் அமைப்புகளுக்கு இன்னும் சுதந்திரமாகச் செயல்படும் அதிகாரத்தைக் கொடுத்தாலே போதுமானது. ஆக, வங்கியில் டெபாசிட் செய்த பணத்துக்கு எந்த ஆபத்தும் இப்போதைக்கு இல்லை. ஆனால், அவசியமற்ற புதிய அமைப்பை உருவாக்குவதற்கான இந்த மசோதா நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும்போது, எதிர்க்கட்சிகள் கவனமாக இருக்க வேண்டும். ஊடகங்களும் விழிப்பாக இருக்க வேண்டும்!
- ஆர்.ஷாஜஹான், எழுத்தாளர்
தொடர்புக்கு: shahjahanr@gmail.com

காலத்தின் வாசனை: கனவு மீன்களும், ஒரு வேளைச் சாப்பாடும்!

நாற்பது வருடங்களுக்கு முன்னால் நான் சந்தித்த ஒரு நபரை அவருடனான உரையாடலை இன்னும் ஞாபகம் வைத்திருக்கிறேன் என்றால், நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். அவர் ஒரு சாதாரண மனிதர். கண் தெரியாத மனிதர். அபூர்வமானவர்.

தஞ்சாவூரின் சிதிலமடைந்த அரண்மனை வளாகத்தில் தர்பார் ஹாலுக்குப் போகிற வழியில் கையில் சலங்கை கட்டிய கம்புடன் அவர் நின்றுகொண்டிருப்பார். பல வருடங்களாக அங்கே நின்றுகொண்டு சுற்றுலாப் பயணிகளிடம் கையேந்தியபடி அந்த சலங்கைக் கழியைத் தட்டிக்கொண்டிருப்பார். கடைந்தெடுத்த மாதிரியான அந்த முகம், மூக்கு, தாமிர நிறம் எல்லாம் சேர்ந்து ஒரு கிரேக்கச் சிற்பத்தின் சாயல் தெரியும். காலம் செதுக்கிய மனிதர் அவர். ஒரு நாள் அவரிடம் பேச்சுக் கொடுத்தேன்.

“பெரியவரே, எத்தனை வருஷங்களாக உங்களுக்குப் பார்வை இல்லை?”

வெள்ளை விழிகள் உருள அவர் சொன்னார், “அஞ்சு வயசுல ஒரு வைக்கோல் வண்டிக்குப் பின்னாடியே ஓடினேன். வைக்கோல் சரிந்து முகத்தில் விழுந்து கண்ணு ரெண்டும் போச்சு. ஆனா காது நல்லா கேக்கும். சொல்லப்போனா இந்தக் காதாலதான் நான் பாக்கறேன்... இப்பகூட உங்க பின்னாடி ஒரு கார் வந்து நிக்குதே... கவனிச்சீங்களா?”
திரும்பினேன், ஒரு கார் நின்றுகொண்டிருந்தது.

‘‘அந்த கார்லேர்ந்து எறங்குறவங்களைப் பத்திக்கூட நான் சொல்ல முடியும். குண்டா வெள்ளைக்காரன்...ரெண்டு சின்னஞ்சிறுசுக... துரைசாணியம்மா...’’ எனக்கு ஆச்சரியம் தாளவில்லை.

“எப்படி இவ்வளவு துல்லியமா சொல்ல முடியுது?”

“எல்லாம் ஒரு ஊகத்துல சொல்றதுதான். சென்ட் வாசனையை வெச்சு மூக்கு சொல்லிப்புடும். இப்ப மணி நாலு பத்து… சரிதானுங்களா?’’ வாட்ச்சைப் பார்த்தேன். மாலை சரியாக நாலு பத்து!
“கண்கட்டு வித்தை மாதிரில்ல இருக்கு... ஏதாவது யட்சணி வேலையா?”

“காலைல எந்திரிச்சதும் 5.45-க்குப் பாங்கு சத்தம் கேட்ட ஒடனே தலைக்குப் பின்னாடி இருக்கற கடிகாரத்த திருகி வச்சிருவேன்.

அலாரம் வைக்கிற மாதிரிதான். அதுபாட்டுக்கு ஓடிக்கிட்டிருக்கும். நெனச்ச மாத்திரத்துல நேரத்தைச் சொல்லிடுவேன்.”

“பல வருஷமா இங்கே நின்னுக்கிட்டு இருக்கீங்க! அந்தக் காலத்துக்கும் இப்ப உள்ள காலத்துக்கும் என்ன வித்தியாசம் தெரியுது?”

“சத்தம் பெருத்துப் போச்சு தம்பி! காரு வண்டி சத்தம்... சனங்க போடுற சத்தம்… புதுசு புதுசா மோட்டாருங்க போடுற சத்தம்... காதக் கொடையுது! ஆனா, காக்கா குருவி சத்தம் கொறைஞ்சி போச்சு!

எனக்குப் புரிந்தது. உலகத்தோடு சேர்ந்து நாமும் மாறிவருவதால் மாற்றத்தை உணரும் திராணி அற்றுவிட்டது. இவர் மாற்றத்தை உணர்கிறார். “தம்பி! இப்படித்தான் ஒரு நாள் இங்கதான் நிக்கிறேன். திடீர்னு தலையில சூரியன் சுடுறது ஒறைக்குது! நான் எப்பவும் நிக்கிற வாதாமரத்த வெட்டிட்டாங்க! அதான் நிழல் போச்சு!

சற்று தள்ளி ஒரு நாய் படுத்திருந்தது.“அதுதான் என் தோழன்! மத்தியானம் ரோட்டைத் தாண்டி அளச்சிக்கிட்டுப் போய் ஒரு ஓட்டல்ல சாப்பிட்டதும் பத்திரமாக் கொண்டாந்து உட்டுரும்! எம்மேல மட்டும் கை வச்சுடாதீங்க… வந்து கொதறிடும். இப்படித்தான் ஒரு ரவுடிப்பய என்கிட்டேர்ந்து ஜோல்னாப்பையை லவட்டப் பார்த்தான்! அவன்மேல விழுந்து கொதறிடுச்சு!’’ 

ஹெலன் கெல்லர் அம்மையார் தனக்கு மூன்று நாட்களுக்கு மட்டும் பார்வை கிடைத்தால் என்னென்ன பார்க்க ஆசை என்று ஒரு கட்டுரை எழுதியிருப்பார். நான் கேட்டேன்.

“பெரியவரே! மறுபடி உங்களுக்குப் பார்வை கிடைச்சா என்ன பார்க்கணும்னு ஆசை?”
“வெயிலைப் பார்க்கணும் தம்பி... வெயில்லதானே நின்னுக்கிட்டே இருக்கேன். அப்புறம் என் தோழனான நாயைப் பார்க்கணும். அம்மா காட்டிச் சோறு ஊட்ன நெலாவப் பார்க்கணும்.”
“உங்களுக்குக் கனவு வருமா?”

“ஓ வருமே! நெறய்ய மீன் பிடிக்கிற மாதிரி. கனவு வந்தா மறுநாள் என் கைல காசு கொட்டும். எவ்வளவு காசு கெடச்சாலும் ஒரு வேளைதான் சாப்பிடுவேன்!”

“உங்க குடும்பம்?”

“எனக்குத்தான் கலியாணமே ஆகலையே! ஆனா, ஒரு கலியாணம் பண்ணிவச்சேன்?”
“என்ன சொல்றீங்க?”

“ஆமாம் தம்பி! இங்கே குச்சி ஐஸ் விக்கிறவரு நம்ப சிநேகிதரு... ஒரு நாள்... அவம் மகளுக்குக் காசு இல்லாம நிச்சயத்தோட கல்யாணம் நின்னுபோச்சுன்னு சொல்லி அழுதாரு. நான் ராத்திரில ஒரு டெய்லர் வீட்டுத் திண்ணைல ஒண்டிக்குவேன். அவருகிட்டே நான் சேமிச்ச பணத்தைக் கொடுத்துவச்சிருந்தேன். குச்சி ஐஸ்காரருக்கு அந்தப் பணத்தை அப்படியே கொடுக்கச் சொல்லிட்டேன். கல்யாணம் ஜம்முன்னு நடந்தது. அந்தப் பொண்ணு அப்பப்போ வந்து குழந்தையோட என் கால்ல விழுந்து கும்புட்டுட்டுப் போவும்.”
அப்படியே அவர் கையைப் பிடித்துக்கொண்டேன். எங்களைக் கடந்து ஒரு சுற்றுலாக் கும்பல் போயிற்று.

“பெரிய கோயில் பார்த்தாச்சு. அரண்மனை பாத்தாச்சு. வேற என்ன இருக்கு பாக்க?”- யாரோ கேட்டார்கள்.

‘இதோ இந்தப் பெரியவர்’ என்றேன் மனதுக்குள்!
- தஞ்சாவூர்க் கவிராயர் தொடர்புக்கு: thanjavurkavirayar@gmail.com

காரைக்கால் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை, நாளை மறுநாள் விடுமுறை

2017-12-17@ 19:00:41
காரைக்கால்: சனிப்பெயர்ச்சி விழா முன்னிட்டு காரைக்கால் மாவட்டத்திற்கு நாளை, நாளை மறுநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருநள்ளாறு  சனி பகவான் கோவில் சனிப்பெயர்ச்சி விழாவே முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை, நாளை மறுநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் கேசவன் தெரிவித்துள்ளார். மேலும் 19ம் தேதி மட்டும் மதுபானக் கடைக்கு விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சனிதோஷ நிவர்த்தி தரும் அனுமன் ஜயந்தி வழிபாடு! 
 மு.ஹரி காமராஜ்

‘அஞ்சனை மைந்தா போற்றி அஞ்சினை வென்றாய் போற்றி

வெஞ்சினைக்கதிர்பின் சென்று பிழுமறையுணர்ந்தாய் போற்றி

மஞ்சன மேனிராமன் மலர்ப்பதம் மறவாய் போற்றி

எஞ்சலில் ஊழியெல்லாம் இன்றென விருப்பாய் போற்றி'

என்று அஞ்சனை மைந்தனின் அருங்குணங்களை வியந்து போற்றுகிறார் கம்பர்.

அஞ்சனையின் மைந்தனாகத் தோன்றியவனும்; ஐம்புலன்களை வென்றவனும், சூரியதேவனிடம் வேதங்களின் பொருள் உணர்ந்தவனும், ராமபிரானின் மலரடிகளை மறவாத மனம் கொண்டவனும், நித்திய சிரஞ்சீவியாகத் திகழ்பவர் என்று அனுமனைப் போற்றுகிறார் கம்பர்.



நித்திய சிரஞ்சீவியாகத் திகழும் அனுமன் இன்றும் நம்மோடு சூட்சும வடிவில் இருக்கும் தெய்வம். மனமுருகிப் பிரார்த்திப்பவர்க்கு பிரத்யட்சமாகத் தோன்றி அருள்புரியும் தெய்வம். எங்கெல்லாம் ராமநாமம் ஒலிக்கிறதோ, அங்கெல்லாம் தோன்றுபவர்.

மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் அவதரித்தவர் அனுமன். அன்றைய தினம் அனுமன் ஜயந்தி அனைத்துக் கோயில்களிலும் சிறப்பாகக் கொண்டாடப்பெறும்.

‘அறிவு, ஆற்றல், இசை ஞானம், உடல் வலிமை, துணிவு, புகழ், அடக்கம், ஆரோக்கியம், சொல்லாற்றல்' என்று அனைத்துக்குமே எடுத்துக்காட்டாக விளங்குபவர் அனுமன் என்று கம்பர் கூறுகிறார்.

அனுமனின் வரலாறு...

திரேதாயுகத்தில் வாழ்ந்த சிவபக்தனான குஞ்சரன் என்பவர் குழந்தை வரம் கேட்டு ஈஸ்வரனை நோக்கித் தவம்புரிந்தார். 'சர்வலட்சணமும் கொண்ட அழகிய மகள் உனக்குப் பிறப்பாள். அவளுக்குப் பிறக்கும் மகன் எனது அம்சமாகத் தோன்றி வலிமையும், வீரமும் கொண்டு சிரஞ்சீவியாக வாழ்வான்’ என்று ஈசன் வரமளித்து மறைந்தார்.

ஈசனின் அருளால் குஞ்சரனுக்குப் பிறந்த மகள், அஞ்சனை என்ற திருநாமம் கொண்டு வளர்ந்தாள். மணப்பருவம் அடைந்த அஞ்சனை, கேசரி என்னும் வானர மன்னரை மணந்துகொண்டாள். திருமணம் முடிந்தும் அஞ்சனைக்குப் புத்திர பாக்கியம் இல்லாமல் இருந்தது. இதனால் எந்நேரமும் ஈசனை எண்ணி கண்ணீர் வடித்தாள் அஞ்சனை. பக்தியும், நற்குணங்களும் கொண்ட அஞ்சனையின் நல்ல குணங்களை மெச்சி தர்மதேவதை அவளின் முன்தோன்றி, ‘அஞ்சனையே நீ மாலவன் வீற்றிருக்கும் திருவேங்கடமலைக்கு உன் கணவருடன் சென்று தங்கி, ஈசனைக் குறித்து தவம்செய். ஈசன் அருளால் எவராலும் வெல்ல முடியாத அழகிய மகனைப் பெறுவாய்’ என்று ஆசி கூறினாள்.



தர்மதேவதை கூறியவாறே திருமலைக்குச் சென்று கடும் தவம் இருந்தாள் அஞ்சனை. பஞ்சபூதங்களும் வியக்கும் வண்ணம் அவள் இருந்த தவம் கண்டு வாயு தேவன் மகிழ்ந்தார். ஈசனின் ஆணைப்படி அஞ்சனையின் தவத்தை மெச்சி வாயுதேவன் ஓர் அற்புதக்கனியைப் பரிசளித்து ஆசிர்வதித்தார். அந்தக் கனியை உண்ட அஞ்சனை கருவுற்றாள். மார்கழி மாத மூல நட்சத்திர நன்னாளில் அனுமன் அவதரித்தார். சிவசக்தி அருளால் தோன்றிய அனுமன், வாயுபுத்திரன், அஞ்சனை மைந்தன், ஆஞ்சநேயன் என்று திருப்பெயர்கள் கொண்டார்.

ஈசனின் அம்சமாகப் பிறந்த அனுமன், எல்லாக் கலைகளிலும் சிறந்து விளங்கி ராமாயணக் காவியத்தில் ஒரு சிறந்த படைத்தளபதியாக விளங்கினார். ஸ்ரீராமரின் குலத்தையே காத்த கடமை வீரராக விளங்கினார். எண்ணிய காரியங்களை வெற்றியாக மாற்றும் ஆற்றல் மிக்க தீரனாக விளங்கினார். இதனால் சகல கடவுளர்களின் ஆசியோடும், வரத்தோடும் நித்ய சிரஞ்சீவி பட்டமும் பெற்றார். எவர் ஸ்ரீராமரையோ, ஆஞ்சநேயரையோ மனமுருகி வேண்டினாலும் அவர்களைக் காக்கும் பெரும் பொறுப்பை ஏற்றார். வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் அனுமன் விரதம் இருப்பது சிறப்பானது. எல்லா நாள்களை விடவும் அனுமன் ஜனித்த இந்த அனுமன் ஜயந்தியில் அவரை வேண்டி விரதம் இருப்பது சகல சௌபாக்கியங்களையும் பெற்றுத் தரும் என்பது நம்பிக்கை.

அனுமன் ஜயந்தி அன்று விரதம் இருப்பவர்கள் பிரம்ம முகூர்த்த வேளையிலேயே குளித்து, ராம நாமம் சொல்லி வணங்கி உபவாசம் தொடங்க வேண்டும். அருகில் இருக்கும் ராமர் அல்லது அனுமன் கோயிலுக்குச் சென்று, அனுமனுக்குத் துளசி மாலை சாத்தி வழிபட வேண்டும். வசதி இருந்தால் வெற்றிலை மாலை, வெண்ணெய்க் காப்பு சாத்தியும் வணங்கலாம். அன்று ஸ்ரீராமஜெயம் எழுதுவது நல்ல பலன்களை அளிக்கும். பொரி, பழம், அவல், கடலை, சர்க்கரை, வெண்ணெய், தேன், பானகம், இளநீர் போன்றவைகளை நைவேத்தியமாக படைக்கலாம். காலையில் துளசி தீர்த்தம் மட்டுமே பருகி உபவாசம் இருக்க வேண்டும். மதிய வேளையில் உணவு எடுத்துக்கொள்ளலாம். இரண்டு நாள்களில் சனிப்பெயர்ச்சி நடைபெற உள்ளது. சனிபகவானை வெற்றிகொண்ட வீர ஆஞ்சநேயரை அனுமன் ஜயந்தி நாளில் வணங்கினால் சனிதோஷங்களிலிருந்து பாதுகாப்பினைப் பெறலாம். சகல ஆனந்தங்களையும் அள்ளித்தருபவர் ஆஞ்சநேயர் என்று புராணங்கள் கூறுகின்றன. சிவனையும் திருமாலையும் ஒன்றிணைக்கும் தெய்வமாக விளங்குபவர் ஆஞ்சநேயர், எனவே இவரை வணங்கி அளவில்லாத ஆனந்த நிலையினைப் பெறலாம்.



‘ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே,

வாயுபுத்ராய தீமஹி, தந்தோ

ஹனுமன் ப்ரசோதயாத்’

என்ற இந்த அனுமன் காயத்ரி மந்திரத்தை உச்சரித்து சகல பாவங்களில் இருந்தும், கஷ்டங்களில் இருந்தும் நிவர்த்தி பெறலாம்.
ஆர்.கே.நகர்.. வேட்பாளர்களே தேர்தலில் கொஞ்சம் நேர்மை ப்ளீஸ்

! #RKNagarAtrocities

வெங்கட சேது.சி



“மாற்றம் என்பது நம் வீட்டில் இருந்து தொடங்க வேண்டும்” என்பார்கள். அது, சமுக மாற்றமானாலும், ஜனநாயக நெறிமுறைகளானாலும், லஞ்ச, லாவண்யத்திற்கு எதிரான நிலைப்பாடானாலும் சரி. “மக்களாகிய நாம் ஒவ்வொருவரும் இதுபோன்ற தீமைகளை எதிர்த்துப் போராட வேண்டும்” என்று பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் பேசியும் எழுதியும் வருகிறோம். ஆனால், இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் ஆர்.கே.நகரில் தற்போது நடப்பது என்ன? கொஞ்சம் சிந்தியுங்களேன்.

ஒரு ஓட்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் என்று விலை பேசப்படுகிறது. ஒரு வீட்டில் வாக்களிக்கத் தகுதியுடையோர் ஐந்து பேர் என்றால், முப்பதாயிரம் ரூபாய் என்று கணக்கிட்டு ஆளும் தரப்பிலும், வேறு சிலரும் ஓட்டுக்கு பணம் வழங்குவதாகத் தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. ஆர்.கே. நகர் தொகுதியைப் பொறுத்தவரை, தொழிலாளர்கள் அதிகளவில் வசிக்கும் பகுதி என்பதால், சாதாரணமாக சராசரி நபரின் மாத வருவாய் என்பது சுமார் 10 ஆயிரத்தில் இருந்து 15 ஆயிரம் ரூபாய் வரை. இந்த நிலையைத்தான், அரசியல்கட்சிகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, வாக்காளர்களுக்கு பணம் வழங்கி அவர்களின் ஓட்டுகளைப் பெற்று விடலாம் என்று நினைக்கின்றன. தொகுதிக்குட்பட்ட சில இடங்களில் பணம் மற்றும் அவற்றை வழங்குவது தொடர்பான ஆவணங்கள் அடங்கிய ஆதாரங்கள் வீடியோக்களாகவும், புகைப்படங்களாகவும் வெளியாகி இருப்பது தேர்தல் ஆணையத்தையும், அரசியல் நடுநிலையாளர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.

கடந்த ஏப்ரல் மாதம், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, பிரசாரம் நடைபெற்ற போது, ஒரு ஓட்டுக்கு நான்காயிரம் ரூபாய் டி.டி.வி. தினகரன் அணியினர் வழங்கியதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, வாக்குப்பதிவுக்கு இரு நாள்கள் முன்பாக தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. இதில் வேடிக்கை என்னவென்றால், அப்போது தினகரனுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அமைச்சர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள் அனைவரும், இப்போது அவருக்கு எதிராக உள்ளனர். அரசு எந்திரம் தற்போது அவர்கள் பக்கம் உள்ளதால், சில இடங்களில் காவல்துறையினர் கண்டும் காணாமல் இருப்பதாக பரவலாகப் புகார் எழுந்துள்ளது.



ஏப்ரல் மாதத்தில் தலா 4 ஆயிரம் ரூபாய் வழங்கியவர்கள்தான் இப்போது, தினகரன் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இரட்டை இலை சின்னம் கிடைத்த பின்னர், ஒரு ஓட்டுக்கு கூடுதலாக இரண்டாயிரம் ரூபாய் அளிப்பதாகப் புகாரகள் வருகின்றன. ஒருசில இடங்களில் வாக்காளர்களின் பெயர்களுடன் கூடிய பேப்பர்களில் அவர்களுக்கான தொகை விவரம் குறிப்பிடப்பட்டு, பணம் வழங்கப்படுவதற்கு முன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையம் என்னதான் விழிப்புஉணர்வை ஏற்படுத்தினாலும், வாக்காளர்கள் “இது நம் வாக்கு, நம் உரிமை; எங்கள் வாக்குகளை விற்பனை செய்ய மாட்டோம்” என்ற உறுதியுடன் செயல்பட்டால் மட்டுமே பணப்பட்டுவாடாவைத் தடுக்க முடியும். தொகுதிக்கு சரியான பிரதிநிதிகளைத் தேர்வு செய்ய முடியும். ஒரு ஓட்டுக்கு இவ்வளவு பணம் என்று நிர்ணயித்து செலவிடும் வேட்பாளர், வெற்றிபெற்றால் அவரிடம் எப்படி தொகுதிக்கான நன்மைகளை எதிர்பார்க்க முடியும்? விட்டதைப் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில், “எவ்வளவு செலவு செய்தோமே அதற்கு வட்டியும், முதலுமாக சம்பாதிக்க வேண்டும்" என்ற அடிப்படையிலேயே அந்த வேட்பாளர் எதிர்காலத்தில் செயல்படுவார் என்பதை அறிவார்ந்த மக்கள் சிந்தித்து செயல்பட வேண்டும்.

“ஜனநாயகம் பணநாயகமாக” மாறிக்கொண்டிருப்பது எதிர்கால சந்ததியினரின் வளர்ச்சிக்கு உகந்ததல்ல என்பதை மக்கள் உணர வேண்டும். அ.தி.மு.க., தி.மு.க. அல்லது தினகரன் என எந்தக் கட்சியானாலும், எந்த வேட்பாளரானாலும் வாக்குக்கு பணம் வழங்க முற்பட்டால், உடனடியாக அவர்கள் குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்க மக்கள் முன் வரவேண்டும். நமக்குத் தேவை தொகுதிக்கு முன்னேற்றம் அளிக்கக்கூடிய, தொகுதி மக்களின் பிரச்னைகளை சட்டசபையில் எடுத்துரைத்து, திட்டங்களைப் பெற்று செயல்படுத்தக்கூடிய நல்லதொரு பிரதிநிதியே தவிர, வியாபார நோக்குடன் பணம் வழங்கும் வியாபாரி அல்ல என்பதை ஒவ்வொரு வாக்காளரும் உணர வேண்டும்.

ஆனால், ஆர்.கே.நகர் தொகுதியில் இருந்து அன்றாடம் வெளியாகும் கள நிலவரத் தகவல்களைப் பார்க்கும்போது, பணப் பட்டுவாடா பல்வேறு நிலைகளிலும் தொடர்வதாகத் தெரிய வருகிறது. ஒரு சில இடங்களில் காவல்துறை மற்றும் தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்குத் தெரியாமலும், வேறு சில இடங்களில் அதிகாரிகளுக்குத் தெரிந்தாலும், கண்டுகொள்ளாமலும் பணப்பட்டுவாடா நடைபெறுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. ஜனநாயகம் பற்றிய புரிதல் ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டும்; பணம் வாங்கிக் கொண்டு நம் ஜனநாயகக் கடமையை மறந்து விட்டால், இனி எப்போதும் தொலைந்து விட்ட ஜனநாயகத்தை தேடிப் பிடிக்க முடியாத நிலை உருவாகும்.

மாற்றம் ஆர்.கே.நகர் தொகுதி மக்களிடம் இருந்து ஏற்படட்டும்... அதுவே எதிர்காலத்தில் ஜனநாயகம் தழைத்தோங்க வழிவகுக்கும்!
லஞ்ச வழக்கில் சார் பதிவாளருக்கு 8 ஆண்டு சிறை

Published : 17 Dec 2017 11:23 IST

ஈரோடு

ரூ.500 லஞ்சம் வாங்கிய வழக்கில் கோபி சார் பதிவாளருக்கு ஈரோடு முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் 8 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் பாஸ்கரன் வீதியைச் சேர்ந்தவர் புஷ்பராஜ். முதியோர் காப்பக ஆலோசகர். இவர் கடந்த 2004-ம் ஆண்டு காப்பகத்தின் ஆண்டு அறிக்கையை பதிவு செய்ய கோபியில் உள்ள மாவட்ட பதிவாளர் அலுவலகத்துக்கு சென்றுள்ளார். அப்போது சீட்டு மற்றும் சங்கங்கள் பிரிவின் சார் பதிவாளராகப் பணியாற்றி வந்த தங்கவேல், ஆண்டு அறிக்கையில் உள்ள தவறை மறைத்து பதிவு செய்ய ரூ.500 லஞ்சம் பெற்றுள்ளார். இதை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கையும் களவுமாக பிடித்தனர்.

இந்த வழக்கு ஈரோடு முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கின் மீது நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. லஞ்சம் வாங்கிய தங்கவேலுக்கு 8 ஆண்டு சிறையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். லஞ்சம் பெற்ற புகார் தொடர்பாக கடந்த 2007-ம் ஆண்டு தங்கவேல் பணி நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
பட்டுக்கோட்டை அருகே திருச்சிற்றம்பலத்தில் தமிழகத்தில் முதன்முறையாக எமனுக்கு கோயில்: ஜனவரி 22-ல் கும்பாபிஷேகம்

Published : 17 Dec 2017 11:22 IST

தஞ்சாவூர்



பட்டுக்கோட்டை அருகே திருச்சிற்றம்பலத்தில் எமன் கோயிலில் பிரதிஷ்டை செய்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள 6 அடி உயரம், 2 டன் எடையிலான எமதர்மன் சிலை.



பட்டுக்கோட்டை அருகே திருச்சிற்றம்பலத்தில் கட்டப்பட்டுள்ள எமன் கோயில்.

தமிழகத்தில் தனி சன்னதியாக இல்லாமல், ரூ.3 கோடியில் தனிக் கோயிலாகவே அமைந்துள்ள எமதர்மராஜன் கோயிலின் கும்பாபிஷேகம் ஜன.22-ம் தேதி நடைபெற உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே அமைந்துள்ளது திருச்சிற்றம்பலம் கிராமம். தேவர்கள், சிவபெருமானை வேண்டுவதற்காகச் சென்றபோது, அவர் நிஷ்டையில் இருந்தார். அப்போது, மன்மதனை வரவழைத்து சிவனின் தவத்தை தேவர்கள் கலைத்தனர். இதனால் கோபம் கொண்ட சிவன், மன்மதனை அழித்தார்.

பின்னர், ரதிதேவியின் வேண்டுதலுக்காக மன்மதனை உயிர்ப்பித்தார். அப்போது எமதர்மன், சிவனிடம் தனக்கு அழிக்கும் பணி கொடுக்கப்பட்டு இருக்கும்போது, அதைச் செய்ய தனக்கு உத்தரவிடும்படி வேண்டினார். சிவனும் அவ்வாறே அவருக்கு அருள்புரிந்ததாக புராண வரலாறு கூறுகிறது.

அவ்வாறு அழிக்கும் பணியைச் செய்துவரும் எமதர்மனுக்கு திருச்சிற்றம்பலத்தில் மண்ணால் ஆன சிலையை வைத்து வழிபாடு செய்துவந்துள்ளனர். பின்னர் சிறிய கூரை வீடு போல அமைத்து அங்கு எமதர்மனை வழிபட்டனர். தற்போது அங்கு ரூ.3 கோடி மதிப்பீட்டில் புதிதாக கோயில் கட்டப்பட்டுள்ளது. இக் கோயிலின் கும்பாபிஷேகம் ஜனவரி 22-ம் தேதி நடைபெற உள்ளது.

இதுகுறித்து கிராம மக்கள் கூறும்போது, “உயிரைப் பறிக்கும் எமனுக்கும் சிறு கோயில் அமைத்து 1,300 ஆண்டுகளாக வழிபட்டு வருகிறோம்.

முதலில் மண்ணால் ஆன எமன் சிலையை வைத்து வழிபாடு நடத்தி வந்தோம். தற்போது, ரூ.3 கோடி மதிப்பீட்டில் புதிதாக கோயிலைக் கட்டி உள்ளோம். 2 டன் எடையில் சுமார் 6 அடி உயரத்தில் எமனுக்கு கற்சிலையை வடிவமைத்து பிரதிஷ்டை செய்ய உள்ளோம்.

இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்களின் ஆயுள் நீடிக்க வேண்டிக்கொள்கிறார்கள். சனிக்கிழமைகளில் எமகண்ட நேரத்தில் இங்கு ‘ஆயுள்விருத்தி ஹோமம்’ செய்யப்படுகிறது” என்றனர்.

NEWS TODAY 28.01.2026