Tuesday, December 19, 2017

'ரூ.6,000 கிடைக்கல':அ.தி.மு.க. அலுவலகம் முற்றுகை

dinamalar
சென்னை: 'ஓட்டுக்கு பணம் கொடுத்த போது, நாங்கள் வீட்டில் இல்லாததால், எங்களுக்கு கிடைக்கவில்லை' எனக்கூறி, அ.தி.மு.க., பணிமனையில், நேற்று வாக்காளர்கள் குவிந்தனர்.



வீட்டுக்கு வீடு ரூ. 6000

சென்னை, ஆர்.கே.நகர் தொகுதிக்கு, 21ல் தேர்தல் நடக்கிறது. இதையடுத்து, வாக்காளர்களை வளைக்க, கட்சியினர் போட்டி போட்டு, பணத்தை வாரி இறைக்கின்றனர். அ.தி.மு.க.,வினர், 16ம் தேதி, ஒரே நாளில் தொகுதி முழுவதும் பணப் பட்டுவாடாவை முடித்தனர். வாக்காளருக்கு, தலா, 6,000 ரூபாய் என, வீட்டுக்கு வீடு பட்டுவாடா செய்தனர்.

இந்நிலையில், 16ம் தேதி பணம் கிடைக்காத வாக்காளர்கள், 100க்கும் மேற்பட்டோர்,

காசிமேட்டில் உள்ள, அ.தி.மு.க., பணிமனையை, நேற்று முற்றுகையிட்டனர். 'பணம் கொடுத்த அன்று, வீட்டில் இல்லாததால், பணம்கிடைக்கவில்லை' எனக் கூறி, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, அங்கிருந்த நிர்வாகிகள், பட்டுவாடா பொறுப்பாளர்களின் மொபைல் போன் எண்களை கொடுத்து, அவர்களை சந்திக்கும்படி கூறி, சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். பணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், அவர்களும் கலைந்து சென்றனர்.

போலீஸ் குடியிருப்பிலும் வினியோகம்

ஆர்.கே.நகரில், தி.மு.க.,வினரின் தேர்தல் பிரசார பணிகளை, துரைமுருகன் தலைமையிலான குழு ஆய்வு செய்தது.சென்னை, ஆர்.கே.நகரில்,தி.மு.க., வேட்பாளர் மருதுகணேஷை ஆதரித்து, சூரியநாராயணா சாலையில் உள்ள சத்தியா நகரில், அண்ணா நுாலகம் பகுதியில் தி.மு.க.,வினர், நேற்று பிரசாரம் செய்தனர்.

அங்கு, முன்னாள் அமைச்சர்கள், துரைமுருகன், பொன்முடி, ஜெகத்ரட்சகன் ஆகியோர், ஒரு காரில் காலை, 11:27 மணிக்கு வந்தனர். அவர்களை, நுாலகத்திற்கு அழைத்து சென்று, தேர்தல் பணிகள் தொடர்பாக, முன்னாள் அமைச்சர், வேலு தெரிவித்தார். அங்கிருந்தவர்களிடம், 'உங்கள் பிரசார பணிகளை, ஸ்டாலின் பார்த்து வர சொன்னார்' என, துரைமுருகன் கூறினார்.

அப்போது, தொண்டர் ஒருவர், 'அ.தி.மு.க.,காரங்க, அருகில் இருக்கிற காவலர்கள் குடியிருப்பில், ஓர் ஓட்டுக்கு, 6,000 ரூபாய் பணப் பட்டுவாடா செய்தனர். அதை, அசிங்கமே இல்லாமல், அவர்களும் வாங்கினர்' என்று புலம்பினார்.
இன்று சனிப்பெயர்ச்சி; கோவில்களில் சிறப்பு வழிபாடு

Updated : டிச 19, 2017 06:45 | Added : டிச 19, 2017 05:56

சென்னை: சனிப்பெயர்ச்சி இன்று(டிச.,19) நடைபெறுவதையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விருச்சிகத்தில் இருந்து தனுசு ராசிக்கு சனிபகவான் இன்று பெயர்ச்சியாகிறார். இன்று காலை 9:59 மணி முதல் 10:02 மணி வரை சனிப்பெயர்ச்சி நடக்கிறது. இதனையொட்டி திருநள்ளாறு, குச்சனூர் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் சிறப்பு வழிபாடுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கார்களில் 'பம்பர்' பொருத்த அரசு தடை : விபத்துகளில் 'ஏர்பேக்' விரியாததால்

Added : டிச 19, 2017 00:51


நிலக்கோட்டை: கார்களில் பொருத்தும் 'பம்பர்'களால் விபத்தின் போது 'ஏர்பேக்' உள்ளிட்ட பாதுகாப்பு சாதனங்கள் வேலை செய்யாமல் போவதால் 'பம்பர்' களை அகற்ற மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. மத்திய அரசின் தரை வழி போக்குவரத்து துறை அமைச்சகத்தில் இருந்து அனைத்து மாநில தலைமை செயலாளர், போக்குவரத்து துறை ஆணையாளர்களுக்கு அனுப்பப்பட்டு உள்ள கடிதம்: கார்களின் முன்புறம் 'பம்பர்' பொருத்துவது வழக்கமாக உள்ளது. இது மோட்டார் வாகன சட்டம் 1988, 52வது பிரிவின் படி தவறு. அவ்வாறு தேவையற்ற பாகங்கள் வாகனங்களில் இணைத்து இருந்தால் மோட்டார் வாகன சட்டம் 1988, பிரிவு 190,191ன்படி தண்டனை வழங்க வேண்டும். இதனை உடனடியாக அமல்படுத்த வேண்டும்'' என கூறப்பட்டு உள்ளது.

இது குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது: சமீபத்திய சாலை
விபத்துகளில் உயர்ரக கார்களில் உள்ள 'ஏர்பேக்' சிஸ்டம் சரியாக வேலை செய்யாமல் உயிர்ப்பலி ஏற்படுவது தெரியவந்தது. விபத்து நடந்த கார் கம்பெனிகளிடம் பாதுகாப்பு முறைகள் வேலை செய்யாதது குறித்து விளக்கம் கேட்கப்பட்டது.அதற்கு அக்கம்பெனிகள் தெரிவித்த கருத்துக்கள் ஒன்றுபோல இருந்ததை, மத்திய அரசு அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
கம்பெனிகள் கொடுத்த விளக்கப்படி, கார்களில் 'பம்பர்' பொருத்தி இருந்ததால் 'ஏர்பேக்' வேலை செய்யாமல் உயிர்ப்பலி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து இருந்தனர். விபத்தில் சிக்கும் கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதினால்தான் 'ஏர்பேக்' வேலை செய்து, உயிரிழப்பை தவிர்க்க முடியும். 'பம்பர்'களால் உராய்வு குறைந்து 'ஏர்பேக்' வேலை செய்யாமல் பலி அதிகரித்ததால், மத்திய அரசு 'பம்பர்'களை அகற்ற உத்தரவிட்டு உள்ளது'' என்றனர்.
அன்பார்ந்த ஆர்.கே.நகர் வாக்காளர்களே..!

the hindu tamil




அன்பார்ந்த ஆர்.கே.நகர் வாக்காளப் பெருமக்களே!

உங்களுடன் பேச வேண்டும் என்பதற்காகத்தான், நீண்டகாலம் கழித்து கடிதமாகவே எழுதுகிறேன். கடிதம் என்பது, மனதின் பிம்பம். மனதின் சாட்சி. மனசாட்சி. ஆகவே, என் மனசாட்சியாகவே இந்தக் கடிதத்தை எடுத்துக்கொண்டு, உங்கள் மனசாட்சியிடம் இதை ஒப்படைத்துவிடுங்கள்.

234 தொகுதியில் ஏதேனும் ஒரு தொகுதியில், இடைத்தேர்தல் நடந்தால், அதுபாட்டுக்கு நடக்கும். நம்பாட்டுக்கு நம் வேலையைப் பார்ப்போம். ஆனால் உங்கள் தொகுதியான ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், தமிழகம் முழுக்கப் பரவியிருக்கிறது. எல்லா சாலைகளும் ரோம் நகரம் நோக்கி என்றொரு வாசகம் உண்டுதானே. அதேபோல் எல்லார் எண்ணங்களும் கேள்விகளும் சிந்தனைகளும் உங்கள் தொகுதி பற்றியதாகத்தான் இருக்கிறது.

ஆனால் இதற்காகவெல்லாம் பெருமைப்படுவதில் அர்த்தமே இல்லை. மகாத்மா காந்தியைத் தெரிந்தவர்களுக்கெல்லாம் கோட்ஸேவையும் தெரியும்தானே. அப்படித்தான்... மிக மோசமான முன்னுதாரணங்களுடன் எல்லோரும் கைகொட்டிச் சிரிக்கும் வகையில் உங்கள் ஆர்.கே.நகர் தொகுதி அதாவது நம் தொகுதி இருக்கிறது என்பது வேதனைக்குரிய விஷயம்... வெட்கித் தலைகுனிய வேண்டிய விஷயம்!


முன்பெல்லாம் எப்படி ஓட்டு போட்டோம். இப்போது எப்படி ஓட்டு போடுகிறோம் என்பதை உங்களுக்குள் ஓட்டுபோட்டுக் கேட்டுக் கொள்ளுங்கள். ‘அட... இவரு நல்ல குடும்பத்துலேருந்து வந்து நிக்கிறாரு’ என்று ஓட்டு போட்டோம். ‘ஆமாம்பா... ரொம்ப நல்ல மனுஷன்’ என்று வாக்களித்தோம். பிறகு, பிடித்த கட்சி, பிடிக்காத கட்சி என்று இரண்டாகப் பிரிந்தோம். நம் கட்சிக்கான வேட்பாளருக்கு கண்ணை மூடிக் கொண்டு ஓட்டளித்தோம்.

அப்புறம்... சாதிகள் சங்கங்களாக இருந்து, கட்சிகளாகவும் வளர்ந்தன. நாமும் நம் அபிமானக் கட்சியைக் கடந்து, சாதிப்பாசத்துடன் , ‘நம்ம சாதிக்காரன் நிக்கிறாருப்பா’ என்று பெருமிதம் பொங்க ஓட்டு போட்டோம்.

இப்போது இவை ரொம்பவே மாறித்தான் போய்விட்டன. அதாவது நாம் மாறித்தான் போய்விட்டோம். யார் காசு கொடுக்கிறார்களோ, அவர்களுக்குத்தான் ஓட்டு என மாறி மாமாங்கமாகிவிட்டது. இதற்கு ‘திருமங்கலம் ஃபார்முலா’ என்று பெயர் இருந்தது. இப்போது 234 தொகுதிகளிலும் இதே கதைதான் என்பதால், இது ‘தேர்தல் ஃபார்முலா’ என்றாகிப் போனது.

அதேபோல், தேர்தலும் திருவிழா போலாகிவிட்டது. தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை, வண்ணாரப்பேட்டை என எல்லாத் தெருக்களிலும் வேடிக்கை பார்க்க வந்ததில், அங்கே நடப்பவை எதுவும் வேடிக்கையானதாகத் தெரியவில்லை. மிகப் பெரிய விபரீதத்துக்கு தூபம் போட்டுக் கொண்டிருக்கிறோமோ என்று பதறித்தான் போனேன். எங்கு பார்த்தாலும் பணம் பற்றித்தான் பேசுகிறார்கள் நம் வாக்காளர்கள். ‘யக்கோவ்.... முந்தா நேத்தே தெருல சரிபாதி வூடுங்களுக்குக் கொடுத்துட்டாங்களாம். நமக்குத் தரக் காணோமே. வாக்கா... அந்தக் கட்சி ஆபீசுக்குப் போய் பாத்தாறலாம்’ என்று கட்சி பேதமின்றி காசு கொடுப்பதும், சாதி பேதமின்றி ஓட்டுப் போட நினைப்பதுமாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதுசரி... காசுக்கு ஏது கட்சி? பணத்துக்கு என்ன சாதி?


யார்யாரோ உங்கள் தொகுதியில் நின்றிருக்கிறார்கள். வென்றிருக்கிறார்கள். வெல்ல வைத்திருக்கிறீர்கள். அவர்கள் அடுத்தடுத்து அரசியல் வானில் பறக்க, கைகொடுத்திருக்கிறீர்கள். ஆனால் ஒவ்வொருமுறையும் நீங்கள் தோற்றுக் கொண்டிருக்கிறீர்கள். அதாவது ஜெயிப்பது அவர்கள்... ஜெயிக்க வைத்த நீங்கள்... தோத்தாங்குளிகள். இதுவே நிதர்சன உண்மை. வலிக்கிற நிஜம்.

‘எல்லாக் கட்சிக்காரங்களும் வருவாங்க சார். வழக்கத்தை விட பத்து, முப்பது லிட்டர் பால் கூடுதலா போவுது. காலைலன்னா டீ, பிஸ்கட், சாயந்திரம்னா டீ, பஜ்ஜி, வடைன்னு நமக்கு செம கல்லா சார்’ என்று உற்சாகத்துடன் சொல்கிற டீக்கடை அண்ணன்களும் பேக்கரிக் கடைக்காரர்களும் சொல்வதில் நியாயம் இருக்கிறது. அது வியாபாரம். ஆனால் அவர்கள், டீ விற்பது போல், காபி விற்பது போல், வடை பஜ்ஜி விற்பது போல், உங்கள் ஓட்டுகளை விற்கலாமா? அது வியாபாரமாகிவிடாதா. நாமும் நாடும் தேறுவதற்குத்தானே, வளர்ச்சி அடைவதற்குத்தானே தேர்தல். அப்படித் தேர்ந்தெடுப்பதற்குத்தானே ஓட்டு. ஆனால் மொத்த ஆர்.கே.நகர் தொகுதியும் சந்தையாகிவிட்டதுதான் கொடுமை. ஏலக்கடை போலாகிவிட்டதுதான் வேதனை.

’சின்னச் சின்ன பொருளெல்லாம் தேர்தல் சின்னமா இனிமே ஒதுக்காதீங்க. ஃபிரிட்ஜ், வாஷிங்மெஷினு, ஏஸின்னு சின்னம் கொடுங்க. அப்பத்தான் எங்க தொகுதில, எல்லா வீடுகளுக்கும் எல்லாப் பொருளும் வந்துசேரும்’ என்று தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை வைப்பது போல், ஆர்.கே.நகர் தொகுதி மக்களை, அதாவது நம்மை, அதாவது வாக்காளர்களை கேலி செய்து, சமூக வலைதளங்களில் தகவல் பரப்புகிறார்கள். அந்த குறைந்தபட்ச சமூக அக்கறையை, ஓட்டு விற்காமல் நாம் காட்டினால், அதுதான் நாளைய சமூக நலனுக்காக மிகப்பெரிய அக்கறை என்பதை நாம் உணரவேண்டிய தருணம் இது.

குற்றம் நிரூபிக்கப்பட்டு, தண்டனை உறுதியாகி, வேறோரு தொகுதியில்... நின்று ஜெயித்ததெல்லாம் செல்லாது என்றாகிவிட்டது. பிறகு, அந்தத் தொகுதிக்குத் தேர்தல். யாரோ நின்றார்கள். வென்றார்கள். பிறகு மேல்முறையீடு செய்து, ‘தப்பு தப்பு... கணக்கு தப்பு’ என்று தீர்ப்பு சாதகமாய் வந்ததும், உங்களின் ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ. அவசரம் அவசரமாய் ராஜினாமா செய்ய , மீண்டும் உங்கள் தொகுதியில் தேர்தல். அங்கே நின்று பதவிபோனவர், இங்கே நின்று ஜெயித்தார். பதவியிலும் அமர்ந்தார்.

இதிலொரு சோகம்... சீக்கிரமே வந்தது பொதுத்தேர்தல். அவரே நின்றார். ஜெயித்தார். பிறகு உடலநலமின்மை, அப்போலோ, சிகிச்சை, மரணம்.. என்பதெல்லாம் அரசியலின் சோக அத்தியாயம். அதற்குப் பிறகு நடந்ததுதான் அரசியல் ஆபாசம். அதன் பிறகு கட்சி இரண்டாக, மூன்றாகப் பிரிந்தது. சின்னம் முடக்கப்பட்டது. உங்கள் தொகுதிக்கு தேர்தல் வந்தது. இடைத்தேர்தல். அதாவது போனமுறையும் இரண்டு தேர்தலைச் சந்தித்தீர்கள். இந்த முறையும் இரண்டாவது முறையாக சந்தித்தீர்கள். ’காசு காசு...’ என்று அவர்கள் கூவ... ‘ஓட்டு ஓட்டு’ என்று நாம் கூவ... தேர்தல் சந்தையில், ஜரூராக நடந்தது ஓட்டு பிசினஸ். பணம் பாதாளம் வரை பாய்ந்தது டில்லி வரை எதிரொலித்தது. தேர்தலை ரத்து செய்த கேவலம், அவலம் நடந்தேறியது.

இப்போது, பாரம்பரியம் மிக்க, எல்லோர் மனதிலும் பச்சை குத்தப்பட்ட சின்னம் கிடைத்துவிட்டது. ஆனால் ஆட்சியின் செயல்பாடுகள், தங்களை தக்கவைத்துக் கொள்வதாகவே இருக்கிறது. அங்கே நீயா நானா உண்டு. கட்சிக்குள்ளேயே இருப்பதுதான் காமெடி.

’சின்னம் முக்கியமில்லை. மக்களின் எண்ணத்தில் இருப்பதே முக்கியம்’ என்று சொல்லி, சுயேச்சையாக நிற்கிறார். கட்சி கைக்குள் வரும் என்கிறார். தன்னை நிலைநிறுத்திக் கொள்ள உங்களைப் பயன்படுத்திக்கொள்ளப் பார்க்கிறார். அதாவது உங்கள் ஓட்டுகளை பயன்படுத்தி, பலம் காட்டப் பார்க்கிறார்.

இன்னொரு பக்கம்... அலைக்கற்றை தீர்ப்பை அந்த நாளில் அறிவிப்பதாக நீதிமன்றம் அறிவித்திருக்கிறது. மறுபக்கத்தில்... வடக்கே ஜெயித்தாலும் இங்கே நான்காமிடம்தான் கிடைக்கிற நிலை. இத்தனை களேபரங்களுக்கு மத்தியில்தான் இங்கே சூடு பறக்க நடந்துகொண்டிருக்கிறது ஓட்டு வியாபாரம்.

இனிய ஆர்.கே.நகர் வாக்காளப் பெருமக்களே! உங்கள் கையில் தான் ஓட்டு இருக்கிறது. உங்கள் கையில்தான் அவர்களின் வெற்றி இருக்கிறது. உங்கள் கையில்தான் ஜனநாயகத்தின் மாண்பு இருக்கிறது. உங்கள் கையில்தான் நாளைய சமூகத்துக்கான வளர்ச்சியே இருக்கிறது.

‘அவங்ககிட்ட இருக்கறது நம்ம காசுதானே. நம்ம காசை அவன் நமக்கே தர்றான். அதை வாங்கிக்கறதுல இன்னா தப்பு’ என்று புத்திசாலித்தனமாகக் கேட்பவர்கள்தான் நம் வாக்காளர்கள். நம் காசுதான். நம்மிடம் இருந்து கொள்ளையடித்த காசுதான். காசை இப்படிக் கேட்காமல், சாலையாகக் கேளுங்கள். நல்ல தண்ணீர் வேண்டும் என்று கேட்போம். பள்ளியாக, கல்வியாக, மருத்துவமனைகளாக, ரேஷன் அரிசி, சர்க்கரைகளாக இன்னும் இன்னும் கேட்போம். நம் காசை, காசாகவே, பணமாகவே வாங்கவேண்டாம் வாக்காளர்களே!

‘எங்க அப்பாரு சுவுரா சொல்லுட்டார்டா. எவன் நெறய்ய துட்டு கொடுக்கறானோ, அவனுக்குத்தான் ஓட்டுன்னு கரீட்டா சொல்லிட்டாரு’ என்று ஏழாம் வகுப்பு, ஒன்பதாம் வகுப்பு படிக்கிற பசங்களெல்லாம் தொகுதிக்கு உட்பட்ட குண்டும்குழியுமான சந்தில் விளையாடியபடி பேசிக்கொண்டிருந்தார்கள்.

ஓட்டுப் போடுகிற வயது வராத அந்தப் பிள்ளைகளின் புத்திக்குள் ‘ஓட்டுக்கு பணம்’ என்பதைத் திணிக்கிற தவறைச் செய்யாமல் இருக்க ஒரே வழி... அந்தத் தவறை நாம் செய்யாமல் இருப்பதுதான்!

நூறு இருநூறு என ஆரம்பித்து ஆறாயிரமாக உயர்ந்திருக்கிறது ஒரு ஓட்டின் விலை. அவர்கள்... நம்மையும் மதிப்பதில்லை; நம் ஓட்டுகளையும் மதிக்கவில்லை. 'நான் ஏன் காசு கொடுக்கணும். இந்தத் தொகுதிக்கு எல்லாமே செஞ்சிருக்கேன்’ என்று அவர்கள் மாறவேண்டும். அவர்களை மாற்ற வேண்டும். முன்னதாக, நாம் மாற வேண்டும். ‘ஓட்டுக்கு துட்டுலாம் வேணாம்’ என்று நாம்தான் மாற வேண்டும்.

உடலோடு இருக்கிற உறுப்புகளை விற்பது சட்டப்படி குற்றம். அதேபோல் உரிமைக்கு அடையாளமான ஓட்டுகளை விற்பதும் அதிபயங்கர குற்றம். சட்டம் ஒருபக்கம் இருக்கட்டும்... நம் மனசாட்சியே நம்மை உறுத்தி, குத்திக்கிழித்து ரணப்படுத்திவிடும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

ஆகவே உங்கள் வாக்குகள் பொன்னானவை. எனவே உங்கள் பொன்னான வாக்குகளை, சில ஆயிரங்களில் விற்றுவிடாதீர்கள். அந்தப் பொன்னான ஓட்டுக்குள்தான் உங்கள் சந்ததியும் இருக்கிறது. ஒட்டுமொத்த தமிழகத்தின் மானமும் எதிர்காலமும் இருக்கிறது.

இப்படிக்கு

உங்களில் ஒருவன்
தலையங்கம்
மோடிக்கு கிடைத்த இரட்டை வெற்றி

குஜராத்தில் 6–வது முறையாகவும், இமாசலபிரதேசத்தில் காங்கிரசிடமிருந்து ஆட்சியை தட்டிப்பறித்தும் பா.ஜ.க. வெற்றிவாகை சூடியுள்ளது.

டிசம்பர் 19 2017, 03:30 AM

ஒட்டுமொத்த இந்தியாவும் குஜராத், இமாசலபிரதேச மாநில சட்டசபை தேர்தல் முடிவுகளை ஆர்வத்தோடு கவனித்துக்கொண்டிருந்தது. ரூபாய்நோட்டு செல்லாது என்று அறிவிக்கப்பட்டபிறகும், சரக்கு சேவைவரி அமலுக்கு வந்தபிறகும் நடந்த தேர்தல்கள் என்பதால், மக்களின் தீர்ப்பு எப்படி இருக்குமோ? என்ற எதிர்பார்ப்பு இருந்தது. குஜராத்தில் பட்டேல் இனத்தவரின் இளம்தலைவரான ஹர்திக் பட்டேல், தலித் தலைவரான ஜிக்னேஷ்மேவானி, இதரபிற்படுத்தப்பட்டோர் இனங்களின் தலைவரான அல்பேஷ்தாக்கோர் ஆகியோர் காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்ததால், காங்கிரஸ் வெற்றிபெறவும் வாய்ப்பு இருக்கிறதோ? என்ற கருத்தும் அரசியல் உலகில் நிலவியது. மேலும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் பல கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் இருந்தன. பா.ஜ.க. தேர்தல்அறிக்கையில் வளர்ச்சி, நலத்திட்டங்கள் தொடரும் என்று மட்டும் இருந்தது.


குஜராத் மாநில தேர்தலில் 2012–ல் 115 இடங்களில் வெற்றிபெற்ற பா.ஜ.க., இப்போது அந்த இடங்களைவிட குறைவானஇடங்களில் வெற்றிபெற்றாலும் ஆட்சியை இழக்கவில்லை. 61 இடங்களில் வெற்றிபெற்ற காங்கிரஸ் அணி முன்பைவிட கூடுதலான இடங்களை பெற்றுள்ளது. இமாசலபிரதேசத்தில் 2012–ல் 26 இடங்களை மட்டும் பெற்றிருந்த பா.ஜ.க., இப்போது 40–க்கும் மேற்பட்ட இடங்களிலும், 36 இடங்களில் வெற்றிபெற்று 2012–ல் ஆட்சியைப்பிடித்த காங்கிரஸ், தற்போது ஏறத்தாழ 20 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளன. இருமாநிலங்களிலும் மோடியின் அலையால் பா.ஜ.க. வெற்றிபெற்றுள்ளது. 22 ஆண்டுகளாக ஆட்சிசெய்த குஜராத்தில் 6–வது முறையாகவும், இமாசலபிரதேசத்தில் காங்கிரசிடமிருந்து ஆட்சியை தட்டிப்பறித்தும் பா.ஜ.க. வெற்றிவாகை சூடியுள்ளது. நிச்சயமாக இந்தவெற்றி பா.ஜ.க.வுக்கு உற்சாகத்தை அளிக்கும் என்றாலும், காங்கிரஸ் கட்சிக்கும் நம்பிக்கையை இழக்கும் தோல்வி இல்லை. தோல்வியிலும் வெற்றிதான்.


பா.ஜ.க., காங்கிரஸ் இருகட்சிகளுமே தங்களை சுயபரிசோதனை செய்யவேண்டிய கட்டாயம் இந்ததேர்தல் முடிவுகளில் ஏற்பட்டுள்ளது. தற்போது பா.ஜ.க. தனியாகவும், கூட்டணிகட்சிகளோடு சேர்ந்தும் 18 மாநிலங்களில் ஆட்சி நடத்திவருகிறது. இப்போது கிடைத்த வெற்றியினால் மொத்தமுள்ள 29 மாநிலங்களில், 19 மாநிலங்களில் பா.ஜ.க.வின் கொடிபறக்கும். காங்கிரஸ் கட்சியை பொறுத்தமட்டில், 5 மாநிலங்களிலிருந்து ஒரு மாநிலத்தை இழந்து 4 மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சிநிலவும். அடுத்து 2018–ம் ஆண்டில் சத்தீஷ்கர், கர்நாடகம், மத்தியபிரதேசம், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, ராஜஸ்தான், திரிபுரா ஆகிய 8 மாநிலங்களில் தேர்தலை சந்திக்கவேண்டிய நிலையிருக்கிறது. 2019–ல் பாராளுமன்ற பொதுத்தேர்தல் வருகிறது. இருகட்சிகளின் இலக்குமே, இதைநோக்கித்தான் இருக்கும். இந்ததேர்தல் ஒருபாடத்தை காட்டியிருக்கிறது. மக்கள் இலவசங்கள், மானியங்களைவிட வளர்ச்சியை அதிகம் விரும்புகிறார்கள். பொதுவாக ஆளும்கட்சி மீது சலிப்பு ஏற்பட்டு, எதிர்க்கட்சிக்கு ஒரு வாய்ப்பு கொடுப்போமே என்ற உணர்வு எப்போதும் வாக்காளர்களுக்கு இருக்கும் என்ற ஒரு கருத்து நிலவுகிறது. மக்கள் விரும்பும் ஆட்சியை நடத்தினால் எத்தனை ஆண்டுகளானாலும் அந்தநிலை ஏற்படாது என்பதை குஜராத் தேர்தல் முடிவு காட்டிவிட்டது.

Monday, December 18, 2017

பெரியாா பல்கலைக்கழகத்தின் முன்னாள் பதிவாளர் அங்கமுத்து தற்கொலை

ஈரோடு: பணி நியமன முறைகேடு புகாரில் சிக்கிய பெரியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளராக இருந்த அங்குமுத்து அவரது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

பெரியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளராக அங்கமுத்து, கடந்த 2012-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை பொறுப்பேற்றார். அந்தக் காலகட்டத்தில் பல்கலைக்கழகத்தில் அலுவலகப் பணியாளர் முதல் பேராசிரியர்கள் வரை பலர் நியமிக்கப்பட்டார்கள்.

அந்த நியமனத்தில் பல்வேறு முறைகேடுகள் நிகழ்ந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக அவர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்திருந்தது. முறைகேடு வழக்கு தொடர்பாக அவர் பதிவாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில் பெரியார் பல்கலையின் உடற்கல்வி துறை இயக்குநராக பணியாற்றி வந்தார். இன்று பெருந்துறையில் உள்ள அவரது வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் இருந்தார். உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

அங்கமுத்து பதிவாளராக இருந்தபோது பல்கலைக்கழக வரவு செலவு கணக்குகள் ஆவணங்கள் தொலைந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பல்கலைக்கழக உயர்மட்டக்குழு விசாரணை நடத்தி வரும் நிலையில் அங்கமுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

source: oneindia.com
Dailyhunt
தினகரனுக்கே ஓட்டு போடுங்கள்.... பாஜக தலையில் குண்டை போடும் 
சு.சாமி

சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரனுக்கே வாக்களியுங்கள் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பிரசாரம் செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்கே நகருக்கு வரும் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக, திமுக, பாஜக, நாம் தமிழர், தினகரன் அணி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

தங்களுக்கு உள்ள மக்கள் செல்வாக்கை அறிந்து கொள்ள அதிமுகவும், ஆளும் கட்சிக்கு எதிரான மக்களின் எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் என்று திமுகவும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தினகரனை தோற்கடிக்க அதிமுகவும், மதுசூதனனை தோற்கடிக்க தினகரன் அணியும் கடுமையாக போராடி வருகின்றனர். பணப்பட்டுவாடா என்று பாஜகவும், திமுகவும் புகார் அளித்து வருகின்றன.

ஆர்கே நகர் இடைத்தேர்தல் குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், ஆர்கே நகர் இடைத்தேர்தல் நிலவரம் குறித்து அங்குள்ள பாஜக நிர்வாகிகளிடம் கேட்டு தெரிந்து கொண்டேன். அங்கு திமுகவுக்கும், தினகரனுக்கும் போட்டி நிலவுகிறதாம். எனவே தமிழர்கள் டிடிவி தினகரனுக்கு வாக்களியுங்கள் என்று கருத்தை பதிவு செய்து பாஜகவின் தலையில் குண்டை போட்டுள்ளார் சுப்பிரமணியன் சுவாமி.

source: oneindia.com
Dailyhunt

NEWS TODAY 28.01.2026