Wednesday, December 20, 2017

ஆட்டம் காணும் ஆளுமை!

By ப. இசக்கி  |   Published on : 19th December 2017 02:18 AM   

அண்மைக் காலமாக சமூக ஊடகங்களைத் திறந்தால் கேலியும், கிண்டலும் கொந்தளிக்கும் அரசியல் மீம்ஸ்கள் கொட்டுகின்றன. அவற்றில் சிறப்பிடம் பிடிப்பவை அரசியல் தலைவர்களைப் பற்றியவைதான். அதிலும் தமிழக அரசியல் தலைவர்களைப் பற்றிய மீம்ஸ்களுக்கு குறைவில்லை. 

ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற வேற்றுமை இல்லாமல் சகட்டுமேனிக்கு வெளுத்து வாங்கும் இந்த மீம்ஸ்களுக்கு பொதுமக்களிடையே வரவேற்பு அமோகம். அந்த அளவுக்கு மீம்ஸ்களை உருவாக்கும் படைப்பாளிகளுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் "இரை'யாகி வருகின்றனர்.

மீம்ஸ்களைப் பார்க்கும்போதும், அவற்றுக்கான நறுக்கென்ற நாலு வரி கேலி வாசகங்களை படிக்கும்போதும் நகைச்சுவை உணர்வுக்கு பஞ்சப்பட்டவர்கள் கூட வாய்விட்டு சிரிக்க வேண்டியதாகி விடுகிறது. அந்த நகைச்சுவைகள் நம்மை சிரிக்க வைப்பதோடு மட்டுமல்லாமல் சிந்திக்கவும் வைக்கின்றன. ஆமாம், நாம் எப்படிப்பட்ட தலைவர்களால் ஆளப்படுகிறோம் என்ற சிந்தனை மனதை வேதனை கொள்ள வைக்கிறது. 

தலைவனுக்குள்ள தகுதிகள் என்ன? நீதி நூல்கள் கூறுவது: குற்றஞ்சாட்டப்படாதவனாக இருக்க வேண்டும். ஒரே மனைவியை உடையவனாக இருத்தல் வேண்டும். கொடியவன் என்றோ அடங்காதவன் என்றோ பெயர் எடுத்தவனாக இருக்கக் கூடாது. கடவுள் நம்பிக்கை உள்ளவனாகவும், அத்தகைய பிள்ளைகளை பெற்றெடுத்தவனாகவும் இருக்க வேண்டும். தன் விருப்பப்படி செயல்படுபவனாக இருக்கக் கூடாது. முன்கோபம் கூடாது. மதுபானப் பிரியனாக இருக்கக் கூடாது. இழிவான ஆதாயத்தை நாடாதவனாகவும் இருக்க வேண்டும். தெளிந்த புத்தியை உடையவனாகவும், நீதிமானாகவும், இச்சை அடக்கம் உள்ளவனாகவும் இருக்க வேண்டும்.

ஆரோக்கியமானவனாக, நல்ல ஆலோசனை மூலம் புத்தி சொல்பவனாக, எதிர்த்து பேசுபவர்களை கண்டனம் செய்து பதில் அளிப்பதில் வல்லவனாக, தான் கற்றுக் கொண்டதற்கேற்ப உண்மையை பின்பற்றுபவனாக, அதையே பேசுபவனாக, காரிய சமர்த்தனாக இருத்தல் அவசியம் என தலைவனுக்குரிய தகுதிகளாக நீதி நூல்கள் வரையறுக்கின்றன.

இந்தத் தகுதிகள் முழுமையாக இல்லாவிட்டாலும், நிரம்பப் பெற்றவர்கள் நாட்டின் தலைவர்களாக இருந்த காலம் இல்லாமல் இல்லை. ஆனால் இன்று நிலைமை தலைகீழாகி விட்டதை எவரும் மறுக்க முடியாது. தலைமைக்கான தகுதி முழுமையாக பெற்றவர்கள்தான் தலைவர்களாக வேண்டும் என்றால் நாட்டில் தலைமைப் பஞ்சம் தலைவிரித்துதான் ஆடும். அந்தக் கால கணக்குப்படி "ஐந்துக்கு இரண்டாவது' (அது இந்தக் கால கணக்குபடி 40 சதவீதம்-35 சதவீதமே தேர்ச்சிதானே) இருந்தால்கூட தலைவராக ஏற்கலாம்.
ஆனால் அதற்கும் தகுதி இல்லை என்பதுதான் இன்றைய நிலை. அதனால்தான் இப்போது சில தலைவர்கள் நாள்தோறும் தங்களது சொல் மற்றும் செயல்களால் மீம்ஸ்ளுக்கு தீனி போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு அமைச்சர் வைகை அணை நீர் ஆவியாகாமல் இருக்க தெர்மகோல் (பாலிஸ்டிரீன்) கொண்டு மூடுகிறார். மற்றொருவர் நொய்யல் ஆற்றுநீர் மாசுபடுவதற்கு மக்கள் சோப்பை பயன்படுத்துவதுதான் காரணம் என கண்டறிந்து கூறுகிறார். தமிழக முதல்வர் புதுதில்லி சென்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசியுள்ளார் என்கிறார் மற்றொரு அமைச்சர்.
தமிழகத்தின் துணை குடியரசு தலைவர் வெங்கய்ய நாயுடு என்கிறார் இன்னொருவர். இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போன்று, கம்ப ராமாயணத்தை எழுதியவர் சேக்கிழார் என்று கூறி அரங்கை அதிர வைக்கிறார் ஒருவர்.

சரி, நாட்டை ஆளும் தலைவர்கள்தான் இப்படி இருக்கிறார்கள் என்றால், ஆளத் துடிக்கும் தலைவர்கள் எப்படி இருக்கிறார்கள்? மீத்தேன் திட்டத்துக்கு, தெரியாமல் கையெழுத்திட்டேன் என்கிறார் ஒருவர்.

வெள்ளித்திரையில் வெகுண்டெழச் செய்யும் வீர வசனங்கள் பேசுவோர், அரசியல் கருத்தைச் சொல்லும்போது தெளிவின்றித் தடுமாறுகின்றனர். ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் முறைகேடு குறித்து மாநில தேர்தல் ஆணைய முகவரிக்குப் புகார் கடிதம் எழுதுகிறார் மற்றொருவர்.
சுதந்திர இந்தியாவின் சிற்பி பண்டித நேரு, இந்தியாவின் இரும்புப் பெண்மணி இந்திரா காந்தி, கர்மவீரர் காமராஜர், ஏன் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் மீது கூட பொதுவெளியில் கடுமையான விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் அவர்களது ஆளுமைகள் குறித்து இன்றும் சிலாகித்துப் பேசப்படுகிறது. அவர்களது காலத்திலும் இப்படிப்பட்ட கேலி, கிண்டல்கள் தனிவெளியில் பரவி இருக்கலாம். இன்றைய சமூக ஊடகங்களின் இருப்பு அன்று இல்லாமல் இருந்திருக்கலாம். 

ஆனாலும்கூட அவர்கள் இத்தனை தூரம் தரம் தாழ்ந்து போனதில்லை. அதற்கான வாய்ப்புகள் இன்றுபோலவே அன்றும் இருந்திருக்கவே கூடும். ஆனால் தலைமைப் பண்பு அவர்களைத் தற்காத்தது. அதனால்தான் அவர்கள் இன்றும் தலைவர்களாக மக்கள் மனங்களில் தலைநிமிர்ந்து நிற்கிறார்கள்.

தலைநிமிர்ந்து நின்ற தலைவர்கள் ஆட்சி செய்த இந்த நாட்டை இன்று ஆளும் தலைவர்கள் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாகி வருவது வேதனை அளிக்கிறது. தலைவர்களுக்கான அந்த பிம்பம் உடைந்து வேடிக்கை மனிதர்களாக வலம் வரத் தொடங்கி இருப்பது நாட்டுக்கு நல்ல அறிகுறி அல்ல.

தலைவர்கள் கேலிப் பொருளாகும்போது அவர்களது தலைமைப் பண்பு கேள்விக்குறியாகிறது. தலைமைப் பண்பு கேள்விக்குறியாகும்போது அவர்களது ஆளுமையும் ஆட்டம் காணுகிறது. ஆளுமை ஆட்டம் கண்டால் அவர்களது அதிகாரத்துக்கு என்ன சக்தி இருக்கும்? ஜனநாயகத்தில் சக்தி இல்லாத அதிகாரம் கொண்ட தலைவர்களால் யாருக்கு என்ன பயன்? தலைவர்களும், தலைவர்களாகத் துடிப்பவர்களும் சிந்திக்க வேண்டிய தருணம் இது.
பத்திர பதிவு அலுவலகங்களில் 'விஜிலென்ஸ்' சோதனை

Added : டிச 20, 2017 00:47

சென்னையில் சார் பதிவாளர் அலுவலகங்களில், 'விஜிலென்ஸ்' அதிகாரிகள், திடீர் சோதனை நடத்தினர். தமிழகத்தில், 578 சார் பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இவற்றில், தரகர்கள் ஆதிக்கம் அதிகமாக உள்ளதாக புகார் கூறப்படுகிறது. இதை கட்டுப்படுத்த, பதிவுத்துறை தலைவர் பல்வேறு கிடுக்கிப்பிடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்; ஆனாலும், முறைகேடுகள் தொடர்கின்றன. இந்நிலையில், பதிவுத்துறை விஜிலென்ஸ் பிரிவு, உதவி ஐ.ஜி., ஸ்ரீசித்ரா தலைமையிலான தனி படையினர், சென்னை சார் பதிவாளர் அலவலகங்களில், திடீர் சோதனை நடத்தினர்.

சைதாப்பேட்டை, திருப்போரூர், பல்லாவரம் உள்ளிட்ட சார் பதிவாளர் அலுவலகங்களில், அதிக எண்ணிக்கையில் வெளியாட்கள் நடமாட்டம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், பதிவான பத்திரங்களிலும் ஏராளமான முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. பதிவுத்துறை தலைவருக்கு அறிக்கை அனுப்பப்பட உள்ளது. அதன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட சார் பதிவாளர்கள் மற்றும் ஊழியர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிய வந்துள்ளது.

- நமது நிருபர் -

பல்கலை பதிவாளர் மரணத்தில் அரசியல் பின்னணி
முறைகேடுகளின் புகலிடமானது உயர்கல்வி


உயர்கல்வியில் நடந்த முறைகேடுகளின் உச்சமாக, சேலம் பெரியார் பல்கலை பதிவாளர் தற்கொலை செய்துள்ளார். இதன் பின்னணியில் உள்ள அரசியல்வாதிகள், உயர்கல்வி அதிகாரிகளை விசாரித்து, வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.



சேலம் பெரியார் பல்கலை இணைப்பில், அரசு மற்றும் தனியார் கல்லுாரிகள் என, 95 கல்லுாரிகள் செயல்படுகின்றன. அவற்றில், 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். கல்லுாரிகளில் முதல்வர், பேராசிரியர், பணியாளர்கள் நியமனத்துக்கு, பல்கலையின் சிண்டிகேட் குழு ஒப்புதல் அளிக்க வேண்டும்.இந்நிலையில், பல்கலையின் உடற்கல்வி இயக்குனர், அங்கமுத்து, 2012 ஆக., முதல், 2015 வரை, பதிவாளராக இருந்த போது, பேராசிரியர்கள், பணியாளர்கள் பலர் நியமிக்கப்பட்டனர்.

அங்கமுத்து வீட்டில் சோதனை

இதில், முறைகேடுகள் நடந்துள்ளதாக, 2014ல் புகார் எழுந்தது. மேலும், தேர்வில் பங்கேற்காத மாணவர்களுக்கும், குறைந்த மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கும், அதிக மதிப்பெண் வழங்கி, தேர்ச்சி பெற வைத்ததாகவும் புகார் கூறப்பட்டது.

இதுகுறித்து, லஞ்ச ஒழிப்பு போலீசார், அங்கமுத்துவின் வீட்டில் நடத்திய சோதனையில், 'டம்மி' விடைத்தாள்கள் மற்றும் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதை தொடர்ந்து, பதிவாளர் அங்கமுத்துவின் பதவி காலத்தில் நடந்த, பணி நியமனங்கள் மற்றும் நிர்வாக பணிகள் குறித்து, பல்கலை நிர்வாகம், சிண்டிகேட் கமிட்டி உள்ளிட்டவை விசாரணையை துவக்கின. அப்போது, பணிநியமனம் தொடர்பான ஆவணங்கள் திடீரென மாயமாகின.

அங்கமுத்துவிடம், பல்கலை நிர்வாகம் விசாரித்தபோது, 'ஆவணங்கள் குறித்து, தனக்கு எதுவும் தெரியாது' என, கூறிவிட்டார்.

அங்கமுத்துவிடம் விசாரணை

அதேநேரம், பெரியார் பல்கலைக்கு, புதிய துணைவேந்தரை தேர்வு செய்யும் பணிகள் துவங்கின. இந்த பதவிக்கு, அங்கமுத்துவும் விண்ணப்பித்தார். ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி, ஸ்ரீதர் தலைமையிலான தேடல் குழுவின் பரிசீலனை பட்டியலில், அங்கமுத்துவின் பெயர் இடம் பெற்றிருந்ததாக, கடந்த வாரம் தகவல் வெளியானது.

இதற்கிடையில், ஆவணங்கள் மாயமானதுதொடர்பாக, சேலம், சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில், பல்கலை நிர்வாகம், அங்கமுத்து மீது புகார் அளித்தது. இதுகுறித்து, டிச., 16ல், அங்கமுத்துவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர் மீது, எந்த நேரத்திலும் வழக்கு பதிவு செய்யப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகின.

பணி நியமன முறைகேடு

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன், வீட்டில் விஷம் குடித்து, அங்கமுத்து தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம், உயர்கல்வித்துறையில் அதிர்ச்சியையும், நடுக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது. அங்கமுத்து தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு, அவரது பின்னணியில் இயங்கியவர்கள் யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

எனவே, பணி நியமன முறைகேடு பிரச்னைகளில், பின்னணியில் இருந்த பேராசிரியர்கள் உள்ளிட்ட உயர்கல்வித்துறையினர் யார், 2016 வரை, உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன் பதவியில் இருந்த போது, அங்கமுத்துவுக்கு பின்னணியில் இருந்த அரசியல்வாதிகள் யார் என்ற கேள்வி எழுகிறது.இதுகுறித்து விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது, கிரிமினல் வழக்கு பதிவு செய்து, நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

- நமது நிருபர் -
இன்று விடுதலையாகிறார் நீதிபதி கர்ணன்

Added : டிச 20, 2017 03:41




கோல்கட்டா: தண்டனை காலம் முடிவடைவதை அடுத்து, கோல்கட்டாவில் உள்ள சீர்திருத்த மையத்திலிருந்து நீதிபதி கர்ணன் இன்று(டிச.,20) அவர் விடுதலை செய்யப்படுகிறார்.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த நீதிபதி கர்ணன், கோல்கட்டா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். பணி இடமாற்றத்தை எதிர்த்து, தானாகவே வழக்கு தொடர்ந்த அவர், அந்த உத்தரவை ரத்து செய்தார். நீதிபதிகள் மீது புகார்கள் கூறினார். இதையடுத்து, தலைமை நீதிபதி தலைமையிலான ஏழு நீதிபதிகள் அமர்வு, நீதிபதி கர்ணனுக்கு, ஆறு மாத சிறை தண்டனை விதித்து, இந்தாண்டு மே, 9ல் தீர்ப்பு அளித்தது. தலைமறைவாக இருந்த கர்ணன், ஜூன், 20ல் கைது செய்யப்பட்டு, கோல்கட்டாவில் உள்ள சீர்திருத்த மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தண்டனை காலம் முடிவடைவதை அடுத்து, இன்று அவர் விடுதலை செய்யப்படுகிறார்.

'சொத்து வாங்குவதற்கு ஆதார் கட்டாயமில்லை'

Added : டிச 19, 2017 22:03 





புதுடில்லி, 'சொத்துக்கள் பதிவு செய்யும்போது, ஆதார் எண்ணைக் குறிப்பிடுவது கட்டாயமாக்கப்படவில்லை' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.லோக்சபாவில் இது தொடர்பான கேள்விக்கு, மத்திய வீட்டுவசதி மற்றும் ஊரக விவகாரத் துறை இணையமைச்சர், ஹர்தகீப் சிங் புரி, எழுத்து மூலமாக அளித்துள்ள பதிலில் கூறியுள்ளதாவது:சொத்துக்களை பதிவு செய்யும் போது, ஆதார் எண்ணைக் குறிப்பிடுவது கட்டாயமாக்கப்படவில்லை. அதே நேரத்தில், சொத்துக்கள் பதிவு செய்யும்போது, விருப்பத்தின் அடிப்படையில், ஆதார் எண்ணைக் குறிப்பிடுவது குறித்து பரிசீலிக்கும்படி, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஏர்டெல் நிறுவனம் மீதான புகார் காரணமாக, சமையல் எரிவாயு மானியம் வரவு வைக்கும் வங்கிகள், வாடிக்கையாளரின் ஒப்புதலை பெற்ற பிறகே, வேறு வங்கிக்கு மானியத்தை மாற்ற வேண்டும் என்று ஆதார் வழங்கும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 
 
புதுடெல்லி,
அனைத்து வங்கி கணக்குகளுடனும், அனைத்து மொபைல் போன் எண்களுடனும் ‘ஆதார்’ எண் இணைக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சமையல் எரிவாயு மானியம் உள்ளிட்ட மத்திய அரசின் மானியங்கள், ஆதார் இணைக்கப்பட்ட வங்கிக்கணக்கு வாயிலாகவே வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
ஒரு நபர், தனது வங்கிக்கணக்கு ஒன்றில் மானியம் பெற்று வந்தபோதிலும், அவர் தனது மற்றொரு வங்கிக்கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்கும்போது, அவரது சம்மதம் பெறாமலேயே, அவர் புதிதாக இணைத்த வங்கிக்கணக்குக்கு மானியம் மாற்றப்பட்டு விடுகிறது.

இதே பாணியில், பார்தி ஏர்டெல் தொலைத்தொடர்பு நிறுவனம், தனது வாடிக்கையாளர்களிடம் ஆதார் எண்ணை பெற்றபோது, அவர்களுக்கு தெரியாமலேயே தனது ஏர்டெல் பேமண்ட் வங்கியில் அவர்களது பெயரில் கணக்கு தொடங்கியதாகவும், அந்த கணக்குகளில் மானியத்தை வரவு வைத்ததாகவும் தெரிய வந்துள்ளது.
லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களின் கணக்குகளில் மொத்தம் ரூ.190 கோடியை வரவு வைத்துள்ளது. இதை அறிந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், அந்த மானிய தொகையை வாடிக்கையாளர்கள் ஏற்கனவே மானியம் பெற்று வந்த வங்கிக்கணக்குக்கு மாற்றுமாறு உத்தரவிட்டன. ஏர்டெல் நிறுவனமும் அதை ஏற்றுக்கொண்டுள்ளது.
இந்நிலையில், இதுபோன்ற நிலைமை மீண்டும் ஏற்படாதிருக்க ஆதார் எண் வழங்கும் ‘இந்திய தனித்துவ அடையாள அட்டை ஆணையம்’ நேற்று புதிய ஆணை ஒன்றை அரசிதழில் வெளியிட்டது.

அதில், வாடிக்கையாளர்கள் ஏற்கனவே மானியம் பெற்று வரும் வங்கிக்கணக்கில் இருந்து வேறு வங்கிக்கணக்குக்கு மானிய வரவை மாற்றுவதாக இருந்தால், வாடிக்கையாளர்களின் வெளிப்படையான ஒப்புதலை பெற்ற பிறகே அப்படிச் செய்யவேண்டும் என்று அனைத்து வங்கிகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.

வங்கிகள் இதுபோன்ற மாற்றத்தை செய்வதற்கு முன்பு, 24 மணி நேரத்துக்குள், வாடிக்கையாளர்களுக்கு எஸ்.எம்.எஸ். அல்லது இ–மெயில் அனுப்பி, அவர்களது ஒப்புதலை பெற வேண்டும். இந்த வசதி இல்லாத வாடிக்கையாளர்களிடம், ஒரு படிவத்தை நிரப்பச்செய்து ஒப்புதல் பெற வேண்டும்.

தணிக்கையின்போது காண்பிப்பதற்காக, இந்த ஆவணங்களை வங்கிகள் 7 ஆண்டுகளுக்கு தங்கள் கைவசம் பத்திரமாக பராமரித்து வரவேண்டும். இந்த ஒப்புதல் இருந்தால்தான், தேசிய பணப்பட்டுவாடா கழகம், வேறு வங்கிக்கணக்குக்கு மானியத்தை மாற்ற வேண்டும். மானியம் வரவு வைக்க வேண்டிய வங்கிக்கணக்கை வாடிக்கையாளர்களே மாற்ற விரும்பினால், அதற்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
‘‘‘வாடிக்கையாளர்களுக்கு தகவல் தெரிவிக்காமல், மானியம் வரவு வைக்க வேண்டிய வங்கிக்கணக்கை மாற்றுவதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக இந்த பாதுகாப்பான நடைமுறை கொண்டுவரப்படுகிறது’’ என்று இந்திய தனித்துவ அடையாள அட்டை ஆணைய தலைமை செயல் அதிகாரி அஜய் பூ‌ஷண் பாண்டே தெரிவித்தார்.
வங்கி டெபாசிட்டுகளுக்கு பாதுகாப்பு




மக்கள் எப்போதும் பணம் போடுவதற்கும், எடுப்பதற்கும் வங்கி டெபாசிட்டுகள்தான் பாதுகாப்பானது, வங்கி டெபாசிட் என்றால் அரசாங்கத்தின் அங்கீகாரம் இருக்கிறது என்ற பெரிய நம்பிக்கையோடு இருக்கிறார்கள்.

டிசம்பர் 20 2017, 03:00 AM 


மக்கள் எப்போதும் பணம் போடுவதற்கும், எடுப்பதற்கும் வங்கி டெபாசிட்டுகள்தான் பாதுகாப்பானது, வங்கி டெபாசிட் என்றால் அரசாங்கத்தின் அங்கீகாரம் இருக்கிறது என்ற பெரிய நம்பிக்கையோடு இருக்கிறார்கள். அதிலும், நிரந்தர டெபாசிட் என்றால் வங்கியில் வட்டி குறைவாக கிடைக்கும் என்றாலும், போட்ட பணத்திற்கு ஆபத்து இல்லை என்ற உணர்வு மேலோங்கியிருப்பதால்தான், வங்கிகளின் நிரந்தர டெபாசிட்டுகளில் மட்டும் ரூ.1 கோடியே 6 லட்சம் கோடியை மக்கள் முதலீடு செய்துள்ளனர்.

இப்போது மக்கள் வங்கிகளில் நிரந்தர டெபாசிட்டுகளாக போட்டுவைத்திருக்கும் பணத்தை முழுமையாக எடுக்க முடியுமா? என்றபயம் வந்துவிட்டதால், நிறையபேர் நிரந்தர டெபாசிட்டுகளை திரும்ப வாங்கிக்கொண்டு இருக்கிறார்கள். இதற்கு காரணம், மத்திய அரசாங்கம் கடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் கடைசிநாளில் தாக்கல் செய்த நிதித்தீர்வு மற்றும் வைப்புநிதி மசோதாதான். இந்த மசோதாவில் ‘பெயில்இன்’ என்று ஒரு விதி இருக்கிறது. அதாவது, ஏதாவது ஒரு வங்கி நிதி நெருக்கடிநிலையில் தவிக்கும்நேரத்தில், வங்கியில் டெபாசிட் செய்தவர்களின் பணத்தை வாடிக்கையாளர் ஒப்புதல் இன்றி, மூலதனமாக வைத்து வங்கியை தொடர்ந்து நடத்தலாம் என்று இருக்கிறது. அதாவது, ஒருவர் எவ்வளவு பணம் முதலீடு செய்திருந்தாலும், அந்த வங்கிக்கு நிதி நெருக்கடி வரும்நேரத்தில் டெபாசிட் செய்த தொகையில் காப்பீடு செய்யப்பட்ட ரூ.1 லட்சம்தான் கிடைக்கும். அதற்குமேல் உள்ள தொகையை வங்கிகள் பங்கு மூலதனமாகவோ அல்லது பத்திரங்களாகவோ மாற்றிக்கொள்ளமுடியும். இதற்காக ‘‘தீர்வு வாரியம்’’ என்ற ஒரு புதிய அமைப்பு ஏற்படுத்தப்பட இருக்கிறது. இந்த சட்டம் இப்போது புதிதாக திட்டமிடப்பட்டது அல்ல. ஏற்கனவே 1961–ல் இதுபோல டெபாசிட் காப்பீட்டுச்சட்டம் நிறைவேற்றப்பட்டு அமலில் இருக்கிறது. அந்தச்சட்டத்தின்கீழ் அதிகபட்சம் ரூ.1 லட்சம் என்று இருக்கிறது. ஆனால், இந்தச்சட்டத்தில் குறைந்தபட்சம்தான் ரூ.1 லட்சம் என்றும் ஒருசாரார் கூறுகிறார்கள். மேலும் எல்லா வங்கிகளின் டெபாசிட்டுகளுக்கும் பாதிப்பு வராது. ஏதாவது ஒரு வங்கி திவாலாகும் சூழ்நிலை வரும்போதுதான் இப்படிப்பட்ட நிலைமை ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.

எந்த வங்கி திவாலாகும் என்று யாருக்கும் தெரியாது. ஏனெனில், வங்கிகளில் வராக்கடன்கள் மட்டும் ரூ.10 லட்சம் கோடியை தாண்டிவிட்டது. இந்த மசோதா இப்போது அமலுக்கு வந்துவிடவில்லை. பாராளுமன்ற கூட்டுக்குழுவின் ஆய்வில் உள்ளது. இந்தக்குழு தன் அறிக்கையை பட்ஜெட் கூட்டத்தொடரில் கடைசி நாள்வரை தாக்கல் செய்ய சபாநாயகர் அனுமதி வழங்கி உள்ளார். இதுகுறித்து பிரதமர் ஒரு கூட்டத்தில் பேசும்போது, ‘வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களின் நலன்களை அரசு பாதுகாக்கும்’ என்று கூறி இருக்கிறார். நலன்கள் பாதுகாக்கப்படும் என்று கூறியிருப்பது போதாது. வங்கியில் போட்டு வைத்திருக்கும் டெபாசிட்டுகளுக்கு ஆபத்து இல்லை என்ற உத்தரவாதத்தை பிரதமரும், மத்திய அரசாங்கமும் தரவேண்டும். கூட்டுக்குழுவிலுள்ள தமிழகத்தை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் வங்கியில் நிரந்தர டெபாசிட் செய்தவர்களின் பணத்துக்கு நிச்சயம் பாதிப்பு வராது என்றவிதியை இந்த மசோதாவில் சேர்ப்பதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

NEWS TODAY 28.01.2026