Thursday, December 21, 2017

வங்கிகள் 'ஸ்டிரைக்' ஒத்திவைப்பு

Added : டிச 21, 2017 00:15

நாடு முழுவதும், வங்கி ஊழியர்கள், வரும், 27ல், மேற்கொள்ள இருந்த, வேலை நிறுத்தம், ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. பொதுத்துறை வங்கிகளுக்கு, 2012ல், ஊதிய உயர்வு தர, நிர்வாகங்கள் சம்மதித்தன. ஆனால், ஐ.டி.பி.ஐ., வங்கி, நஷ்டத்தில் இயங்குவதாக கூறி, அவர்களுக்கு, ஐந்து ஆண்டுகளாக ஊதிய உயர்வு தரப்படவில்லை. அதனால், 27ல், அவர்களுக்கு ஆதரவாக, வேலை நிறுத்தம் செய்யப்போவதாக, அகில இந்திய வங்கி ஊழியர் சங்கமும், அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கமும் அறிவித்தன. இந்நிலையில், டில்லியில் நேற்று நடந்த பேச்சில், ஒரு மாதத்திற்குள், அந்த ஊதிய நிலுவையை தருவதாக, ஐ.டி.பி.ஐ., வங்கி அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதனால், வேலை நிறுத்தம் தற்காலிகமாக, ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது என, வங்கி ஊழியர் சங்கத்தினர் தெரிவித்தனர்.

- நமது நிருபர் -




Wednesday, December 20, 2017

கல்விக்கு கைகொடுக்கும் கணேசன்: இப்படியும் ஒரு அரசுப் பள்ளி ஆசிரியர்

Published : 20 Dec 2017 10:00 IST

எஸ்.கே.ரமேஷ்



உதவிபெற்ற மாணவர்களுடன் கணேசன்



கணேசன்



பெரும்பாலான ஆசிரியர்கள் பள்ளிக்கூட நேரம்போக மீதி நேரத்திலும் மாணவர்களுக்கு தனிப்பாடம் எடுத்து பணம் சம்பாதிக்கிறார்கள். ஆனால், பள்ளியில் தனக்கு அளிக்கப்படும் ஊதியத்திலேயே ஒரு பகுதியை, வறுமைக்கு இலக்கானவர்களுக்காக செலவழித்து வருகிறார் அரசுப் பள்ளி ஆசிரியர் கு.கணேசன்.

படித்த பள்ளியிலேயே வேலை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் ஜே.ஆர்.சி. ஆசிரியர் கணேசன். இங்கேயே படித்து இங்கேயே ஆசிரியராக வந்திருப்பது கணேசனுக்குக் கிடைத்த பெருமை. இயல்பாகவே இரக்க குணம் கொண்ட இவர், தனது வருமானத்தின் ஒரு பகுதியில், பெற்றோரை இழந்ததால் படிப்பை கைவிடும் நிலையில் இருக்கும் பிள்ளைகளுக்கும் மாற்றுத்திறனாளி மாணவர் களுக்கும் உதவி வருகிறார். அப்படி, கடந்த 17 ஆண்டுகளில் பல்வேறு அரசு பள்ளிகளைச் சேர்ந்த சுமார் நான்காயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களின் கல்விக்கு உதவியிருக்கிறார் கணேசன்.

“படிக்கிற காலத்தில் என்னோடு படித்த நண்பர்கள் பலர் வறுமையின் காரணத்தால் படிப்பை பாதியிலேயே விட்டனர். நோட்டுப் புத்தகம் வாங்கக்கூட வழியில்லாமல் படிப்பைக் கைவிட்ட மாணவர்கள் உண்டு. தந்தை இறந்ததால் படிப்பை விட்டுவிட்டு குடும்ப பாரம் இழுக்க கூலி வேலைக்குப் போனவர்கள் இருக்கிறார்கள். சிறுவயதில் விடுமுறை நாட்களில் எங்க அப்பாவுடன் சேர்ந்து நானும் ஜவுளி வியாபாரத்துக்குப் போவேன். அப்ப, அவரு எனக்கு செலவுக்குக் குடுக்கிற காசுல என் நண்பர்கள் படிப்புக்கு கொஞ்சமா உதவியிருக்கேன்.

அன்றாடங்காய்ச்சிகளாக..

இப்ப நான் அரசு வேலையில இருக்கிறேன். ஆனா, என்கூட படிச்ச நண்பர்களில் பலர் இன்னிக்கும் அன்றாடங்காய்ச்சிகளா இருக்காங்க. சின்ன வயசுல எனக்குக் கிடைச்ச வசதி வாய்ப்புகள் அவங்களுக்குக் கிடைச்சிருந்தா அவங்களும் இப்ப நல்ல நிலையில இருந்திருப்பாங்க. இதையெல்லாம் நினைச்சுப் பார்த் துத்தான் இப்ப ஏழைப் பிள்ளைகளுக்கு படிப்புக்கு உதவிட்டு வர்றேன். ஆசிரியர் வேலையில் சேர்ந் தப்பவே நான் எடுத்துக்கிட்ட தீர்மானம் இது.

எனது சேவைக்கு எனது குடும்பத்தினரும் சக ஆசிரியர்களும் சேவையுள்ளம் கொண்ட நல்ல மனிதர்களும் துணை நிக்கிறாங்க. அவங்க சப்போர்ட்டுல இப்ப மாற்றுத்திறனாளி பிள்ளைகள் 43 பேரை தத்தெடுத்து படிப்பு உள்பட அவங்களுக்கான அனைத்து உதவிகளையும் செஞ்சுட்டு வர்றேன்” என்கிறார் கணேசன்.

அவராலதான் படிக்கிறாங்க

இவரது உதவியால் தனது மகளை கல்லூரியில் படிக்க வைத்துக் கொண்டிருக்கும் ரோஜா என்ற பெண்மணி, “ஆட்டோ ஓட்டிட்டு இருந்த எங்க வீட்டுக்காரரு நாலு வருசத்துக்கு முந்தி திடீர்னு இறந்துட்டாரு. அதனால, வருமானத்துக்கு வழியில்லாம போயி, என்னோட முத்த பொண்ணு காலேஜ் படிப்பையே பாதியில விடுற மாதிரியான சூழல் ஏற்பட்டுப் போச்சு. அந்த சமயத்துல, கணேசன் சார் எனக்கு தையல் மிஷின் வாங்கித் தந்து வருமானத்துக்கு வழி சொன்னாரு. அவரோட உதவியாலதான் என்னோட பிள்ளைங்க அத்தனை பேருமே இப்ப காலேஜ் படிச்சுட்டு இருக்காங்க” என்றார்.

ஏழைகளின் கல்விக்காக மட்டுமே உதவி வந்த கணேசன், இப்போது வரியவர்களின் பசிபோக்கும் காரியத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார்.

திருமண மண்டபங்களில் மீதமாகும் உணவுகளைக் கேட்டுப் பெற்று அவற்றை பசியால் வாடும் குடும்பங்களுக்குக் கொண்டுபோய் சேர்த்து வரும் இவர், ஓய்வு நேரங்களில் வீடு வீடாகச் சென்று, பழைய ஆடைகளை கேட்டு வாங்கி தேவையானவர்களுக்கு அவற்றை வழங்கி வருகிறார்.

“பசியால் யாரும் இறக்கக்கூடாது. பணமில்லை என்பதற்காக யாரும் படிப்பை பாதியில் நிறுத்தக் கூடாது. எப்போதும் இந்த லட்சியத்தை நோக்கியே எனது பயணம் இருக்கும்” - இது பேட்டியை முடிக்கும் போது கணேசன் ‘நச்’ என்று சொன்ன நல்ல வார்த்தைகள்!
நெட்டிசன் நோட்ஸ்: சனிப் பெயர்ச்சி- வர்லாம் வர்லாம் வா!

Published : 19 Dec 2017 17:37 IST

க.சே.ரமணி பிரபா தேவி

படம்: ஜெய் முனி கோபிநாத்

இந்து மத நம்பிக்கையின்படி சனி பகவான் இன்று விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்குச் செல்கிறார். இதுகுறித்து நெட்டிசன்கள் கலவையான கருத்துகளை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

Srinivasa Mba

யாரோ சனினு ஒருத்தர் தனுஷ் வீட்டுக்கு போறாராம்... #சனிப்பெயர்ச்சி.

Latha Swaathi

சனி பகவான் மூலம் கர்மாவை கழித்த திருப்தியில்... இனி சாதகமாக இருப்பார் என்ற நம்பிக்கையில் புது வருடத்திற்கு வெயிட்டிங்.....

குருபிரசாத் தண்டபாணி

வெற்றிக்கொடி கட்டு

பகைவரை முட்டும் வரை முட்டு

லட்சியம் எட்டும் வரை எட்டு

படையெடு படையப்பா

#டெடிகேட்டட் டூ கும்ப ராசி @ சனிபெயர்ச்சி

Vijay Sivanandam

சனி எந்த வீட்ல இருந்தாலும் நமக்கு மட்டும் வாழ்க்கை எப்பவும் அடியும் மிதியும் உதையும்தான் குடுக்குது.....

அதனால பெயர்ச்சியெல்லாம் பழகிடுச்சி..


Mano Red

துலாம் ராசி அன்பர்களே - 7.5 வருஷம் ஒண்ணுமண்ணா பழகிட்டு இன்னொருத்தர் வந்ததும் விட்டுட்டு போறார் சனி. #துரோகி

விஷ்வா விஸ்வநாத்

சோதிடக்காரங்க முக்காவாசிப் பேர் தமிழ் டிவி சீரியல் டயலாக் ரைட்டர்கள் போலத்தான் இருக்காங்க.

காட்டுமிராண்டியாக வாழ்ந்த மனித குலம் நேர் மறை எண்ணங்களால்தான் உயர்வு பெற்று இன்றளவு மனித உயரத்தை எட்டியிருக்கிறது. எந்த விதமான எதிர்மறை எண்ணங்களையும் விதைக்காமல் நேர்மறை எண்ணங்களை ஏற்படுத்தாத எவராக இருந்தாலும், அவரை அலட்சியப்படுத்துவதும் நிராகரிப்பதுமே நம் முன்னேற்றத்தின் முதல் படி. பகுத்துணர்வில் தொகுத்துணர்வது, பகுத்தறிவது. மற்றபடி இறை வழிபாடு என்பது அவரவர் விருப்பம் சார்ந்தது.

Praveen Kumar L

அடுத்த இரண்டரை வருடம் எங்கள் ராசியில் ஜென்மசனியாக வசிக்க இன்று வருகை தந்திருக்கும் சனி பகவானை வாழ்த்தி வரவேற்கிறோம். - தனுசு ராசிக்காரர்கள்.

Sathish Sangkavi

சனிபெயர்ச்சி யாருக்கு நல்லா இருக்கோ இல்லையோ, பரிகாரம் செய்பவர்களுக்கு நல்லா இருக்கு. அவர்களுக்கு சனி வாரி வழங்கி விட்டார் இந்த வருடம். இப்போது எல்லாம் சனிப் பெயர்ச்சி, குருபெயர்ச்சி, வருட ராசி, மாத ராசி பலன்கள், பரிகாரங்கள் என்று சம்பாரிக்க நல்ல வழி.

Shalini Chandra Sekar

வெல்கம் பேக் மிஸ்டர்.சனி பகவான்.

#தனுசு_ராசி #ஏற்கனவே_ஜென்மசனி #முடியல


Vasantha Raja Padaiyatchi

சனி பிடித்திருக்கும் போது எமனும் நெருங்குவதில்லை. துன்பம் வரும்; ஆனால் ஆயுள் தீர்க்கம்.

Arun Kumar

வாட் ஈஸ் த ப்ரொசீஜர் டூ ஓபன் அக்கவுண்ட் இன் ஸ்விஸ் பேங்க்...

#சனிப்பெயர்ச்சி #ஆஹாஓஹோ.

Krishna Kumar

மகர ராசிக்கு ஏழரை சனி ஆரம்பிக்குது ஏற்கனவெ நிலைமை டாப் லெவல்ல இருக்கு. இப்போ இதுவேற. வர்லாம் வர்லாம் வா சனீஸ்வரா!

Ezhumalai Venkatesan

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2017: ரிஷப ராசிக்காரர்கள் வாயை மூடி பேசவும்..

சனி விட்டு விட்டு புடிச்சாதான் ஏதாவது வித்தியாசம் தெரியும்...நமக்குதான் பொறந்ததுல இருந்தே ஒரு மாற்றமும் தெரியலையே..

சனீஸ்வரா, மாற்றுப்பாதையில் போய் மற்றவரை பயமுறுத்தவும்.

KR Athiyaman

வரும் சனிப்பெயர்ச்சியில், விஜயகாந்த்தின் துலாம் ராசிக்கு ஏழரை சனி முடியுது. ரஜினியின் மகர ராசிக்கு ஏழரை சனி ஆரம்பிக்குது.

கணக்கு கரெக்டாதான் இருக்கும் போல!

Thiruvengimalai Saravanan

எல்லாத்தையும் போலவே இதுலயும் பாதி மிகைப்படுத்தல், வியாபாரம், பணம் பண்றது எல்லாம் கலந்திருக்கு...

ஆன்மீகமும் இப்போ வியாபாரமாயிடுச்சு. ஜனங்களோட பயத்தை பணம் பண்றாங்க.

பக்தியோட இல்லை... இப்பல்லாம் பாதி பேர் பயத்தோடதான் கோவிலுக்குப் போறாங்க.


Amudhan Shanthi

சனிப் பெயர்ச்சி பலன்களை ஒய்ஃபுக்கு படிச்சு காமிச்சிட்டு இருந்தேன்.. முடிக்கறப்போ, 'கணவனுக்கு கேட்டதை செய்யவும், கணவன் சொல் மதிக்கவும்' அப்படி இப்படின்னு நாலஞ்சு பிட்ட சேர்த்து வாசிச்சு முடிச்சேன்...

கரெக்டா கடைசில வாசிச்சது மட்டும் என் சரக்குன்னு புரிஞ்சுகிட்டு அவங்க கொடுத்த லுக்குல எனக்கு சனி பிடிச்சது புரிஞ்சிடுச்சு...

கவிஞர். மணி பாரதி

எனக்கு துலாம் ராசி!

ஏழரை முடிந்தது!

எட்டும் இடத்தில் எனது

எண்ணங்கள் யாவும்!

தமிழன்டா @hai2pandian

சனி வந்துட்டு போறவங்கதான் சனிப்பெயர்ச்சி பார்ப்பாங்க; நான்லாம் சனி கூடவே வாழ்றவன், இதப்பத்திலாம் கவலை இல்லை.

Nironjanee T Niraj

கடைசியா ஒன்னு சொல்வாய்ங்க.. எவ்வளவு கெடுதல்கள் வந்தாலும் ராசி அதிபதி சனியேன்பதால் ஓரளவுக்கு நன்மை பயக்கும்னு. இப்படியாவது மனசை தேத்திப்போம்.

Tomorrow @abinesh

சனி பகவானுக்காச்சும் நம்மல புடிச்சிருக்கே அதுபோதும் எனக் கூறியபடி நகர்ந்தார் அந்த தனுசு ராசிக்காரர்... #சனிப்பெயர்ச்சி


இளங்கோ

எனக்கொரு சந்தேகம். இந்த சனி ஏன் மற்ற மதத்தினரை பிடிப்பதில்லை.

மாடசாமி முருகன் @Madas_1984

இப்போ பாத சனியாம்..

நமக்கென்னவோ இன்னும் வாயிலதான் சனி இருக்கு..

சசி

''இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய் அன்பே அன்பே...!''- திஸ் சாங் டெடிகேட்ஸ் டூ மை டியர் சனி பகவான்.

ரிட்டயர்டு ரவுடி @rittyardurowdy

இன்னிக்கு டூட்டில இருக்குற ஐயருக்கும் வெளில சூடம் சாம்புராணி கடை போட்டவருக்கும்தான் இந்த சனிப்பெயர்ச்சி அதிக பலன் தரும்...

Srinivasan Rahul @Srinivtwtz

சனி நமக்கு எதாவது கெடுதல் தந்திடுவாரோனு கோயிலுக்கு ஓடுற பயலுக முக்கால்வாசி பேர் ஊர அடிச்சி உலையில போட்டவங்கதான். #பாவக்கணக்கு

Thiyagarajan Saran

சனிப்பெயர்ச்சி பலன்கள்

1.மேஷம் பாசமாகும். 2.ரிஷபம் மோசமாகும். 3.இருவர் பகையாகும். 4.நண்டு சுவையாகும். 5.சிங்கம் ராஜாவாகும். 6.கன்னி கூஜாவாகும். 7.தராசு தங்கமாகும். 8.தேள் விஷமாகும். 9.தனுசு தினுசாகும். 10.மகரம் தகரமாகும். 11.கும்பம் கோபுரமாகும். 12.மீனம் ஞானமாகும்.

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக எம்பில், பிஎச்டி பட்டங்கள் பணி நியமனத்துக்கு ஏற்புடையது

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக எம்பில், பிஎச்டி பட்டங்கள் பணி நியமனத்துக்கு ஏற்புடையது

நெல்லை : தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக முழுநேர, பகுதி நேர எம்பில், பிஎச்டி பட்டங்கள் அரசு பணி நியமனம், பதவி உயர்வுக்கு ஏற்புடையது என உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர் சுனில் பாலிவால் வெளியிட்ட அரசாணையில் (எண். 355) கூறியிருப்பதாவது: அஞ்சல் வழிக்கல்வி, தொலைதூரக் கல்வி, திறந்தவெளி பல்கலைக்ழகம் மூலம் பெறப்பட்ட எம்பில், பிஎச்டி பட்டம் அரசு பணிகளில் நியமனம் செய்வதற்கும், கல்லூரி, பல்கலைக்கழகம் மற்றும் சுயநிதிக் கல்லூரிகளில் ஆசிரியராக நியமனம் செய்வதற்கும் தகுதியற்றவை என தெரிவித்து கடந்த 2009ம் ஆண்டு உயர் கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் பதிவாளர், தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் நேரடி முறையில் முழுநேர, பகுதிநேர எம்பில், பிஎச்டி படிப்புகளை நடத்த அனுமதி அளித்துள்ளது. தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக சட்டத்தில் ஆய்வுப்படிப்பு வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக நிதி நல்கைக்குழு புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளின் படி உதவி பேராசிரியர்கள் 4 பிஎச்டி, ஒரு எம்பில் மாணவர்களுக்கும், இணை பேராசிரியர் 6 பிஎச்டி, 2 எம்பில் மாணவர்களுக்கும், பேராசிரியர்கள் 8 பிஎச்டி, 3 எம்பில் மாணவர்களுக்கும் வழிகாட்டியாக செயல்பட முடியும். 

தற்போது திறந்தநிலை பல்கலைக்கழகத்திற்கு பல்கலைக்கழக நிதி நல்கைக்குழு ஆய்வுப்படிப்பு நடத்துவதற்கு அனுமதி அளித்துள்ளது. 

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் பல்வேறு கல்விப்புலங்கள் வழியாக நேரடி முறையில் பல்லைக்கழக நிதி நல்கைக் குழுவின் விதிமுறைகளின்படி, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் நிரந்தர உதவி பேராசிரியர், இணை பேராசிரியர், பேராசிரியர்களின் மேற்பார்வையில் பகுதி நேர, முழு நேர முறையில் எம்பில், பிஎச்டி ஆய்வு படிப்புகளை நிறைவு செய்து பட்டம் பெற்றவர்களின் ஆய்வு பட்டங்களை அரசு, அரசு சார் நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பணி நியமனம் மற்றும் பதவி உயர்வுக்கு ஏற்புடையதாக அங்கீகரித்து ஆணை வெளியிட வேண்டும் என கூறியுள்ளார்.

பதிவாளரின் கருத்துருவை கவனமுடன் ஆய்வு செய்த அரசு, பள்ளி இறுதித் தேர்வு, மேல்நிலை கல்வித் தேர்வு தேர்ச்சி பெற்ற பின்னர் பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் பெறப்படும் பட்டங்கள் மற்றும் அதைத் தொடர்ந்து பெறப்படும் முதுகலை பட்டங்களைத் தொடர்ந்து தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் நேரடி முறையில் முழு நேரம், பகுதி நேரத்தில் சேர்ந்து பெறப்பட்ட எம்பில், பிஎச்டி பட்டங்களை அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பணி நியமனம் மற்றும் பதவி உயர்வுக்கு ஏற்புடையது என அங்கீகரித்து ஆணையிடப்படுகிறது.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

ஊழியர்கள் பற்றாக்குறையால் செங்கல்பட்டு ஜி.ஹெச்சில் மாத்திரை கிடைக்காமல் நோயாளிகள் தவிப்பு

ஊழியர்கள் பற்றாக்குறையால் செங்கல்பட்டு ஜி.ஹெச்சில் மாத்திரை கிடைக்காமல் நோயாளிகள் தவிப்பு

செங்கல்பட்டு : செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தினமும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் புறநோயாளியாகவும், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள் நோயாளியாகவும் சிகிச்சை பெறுகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் மட்டுமின்றி திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்தும் நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

இதய சிகிச்சை, காசநோய், வலிப்பு நோய், மனநலம், இளம்பிள்ளை வாதம், சர்க்கரை நோய் உள்பட பல்வேறு நோய்களுக்கு மாதந்தோறும் மாத்திரைகள் வழங்கப்படுகிறது. இந்த மாத்திரைகள் பெறுவதற்கு ஏராளமான பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் அதிகாலையிலேயே வந்து, நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
காலை 7. 30 மணிக்கு துவங்க வேண்டிய மாத்திரை வழங்கும் கவுன்டர் காலை 8. 30 மணிக்கு துவங்கப்பட்டு 11 மணிக்கு மூடப்படுகிறது. இதனால் நீண்ட வரிசையில் காத்திருக்கும் குறித்த தேதியில் மாத்திரை பெற முடியாமல் நோயாளிகள் கடும் அவதிப்படுகின்றனர்.

இதுகுறித்து நோயாளிகள் கூறுகையில், ‘’ புதன், வியாழன், சனி ஆகிய 3 நாட்கள்தான் மாத்திரை வழங்கப்படுகிறது. 

நோட்டில் எழுதி தரும் தேதியில் அதிகாலையிலேயே வந்தாலும் மாத்திரை கிடைப்பதில்லை. மறுவாரம் வந்து மருந்து கேட்டால் ‘‘கடந்த வாரம் ஏன் மாத்திரை வாங்கவில்லை’’ என மெத்தனமாக கேட்கின்றனர்.   மன நல பிரிவில் வழங்கப்படும் மாத்திரைகள் குறித்த நேரத்தில் நோயாளிகள் பயன்படுத்தவில்லையென்றால் மன நலம் மேலும் பாதிப்படையும்.
சர்க்கரை, இதயம் உள்ள பல்வேறு நோயகளுக்கும் இதே நிலைதான். சிலர் வேறு வழியின்றி வெளியிடங்களில் மருந்து வாங்குகின்றனர்’ என்றனர்.

மருந்தாளுநர்கள் கூறுகையில், ‘’ ஒரு நாளைக்கு 12,000 பேருக்கு மாத்திரைகள் வழங்கப்படுகிறது. 

உள் நோயாளிகளுக்கு தனியாகவும், புறநோயாளிகளுக்கு தனியாகவும், மாதந்தோரும் மாத்திரைகள் வழங்குவதற்கு தனியாகவும் என 3, 4 பிரிவுகளுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுகிறது. 

நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் ஊழியர்கள், கவுன்டர்கள் திறக்காததால் எங்களால் உடனுக்குடன் மாத்திரை வழங்குவதில் சிரமம் ஏற்படுகிறது’ என்றனர்.
2018ல் எப்போ டூர் போகலாம்னு இப்பவே ப்ளான் பண்ணுங்க - லீவு நிறைய இருக்கு மக்களே! 

Posted By: Mayura Akilan Published: Wednesday, December 20, 2017, 17:13 [IST]
 
 சென்னை: 2018 ஆம் ஆண்டு 23 விடுமுறை நாட்களை அரசு அறிவித்துள்ளது. இதில் சில விடுமுறை நாட்கள் ஞாயிறு கிழமை வந்தாலும் பல விடுமுறை நாட்கள் வார விடுமுறையை ஒட்டியே வருகிறது. ஆடி ஓடி சம்பாதிப்பது அனுபவிக்கத்தான். ஆண்டிற்கு சில நாட்கள் விடுமுறையை உற்சாகமாக கழிக்க திட்டமிடலாம். புத்தாண்டு தொடங்கி ஆயுத பூஜை விடுமுறை வரை 2018ஆம் ஆண்டு வார விடுமுறை நாட்களை ஒட்டியே விஷேச தினங்கள் வருகின்றன. எனவே விடுமுறை நாட்களை சந்தோசமாக கழிக்க இப்போதே திட்டமிடுங்கள் மக்களே!

 குடியரசு தினம்
 குடியரசு தினம் 2018ஆம் ஆண்டு புத்தாண்டு திங்கட்கிழமை பிறக்கிறது. எனவே டிசம்பர் 30 முதல் ஜனவரி 1 முடிய 3 நாட்கள் வார விடுமுறையை மகிழ்ச்சியாக கழிக்கலாம். அதேபோல குடியரசு தினம் ஜனவரி 26 வெள்ளிக்கிழமை வருகிறது. அப்போ வெள்ளி, சனி, ஞாயிறு 3 நாட்கள் என்ஜாய் பண்ணலாம்.

அறுவடை திருநாள்
அறுவடை திருநாள் பொங்கல் பண்டிகை ஞாயிறு வந்தாலும் சனிக்கிழமை தொடங்கி செவ்வாய்கிழமை ஜனவரி 16ஆம் தேதி வரை நான்கு நாட்கள் விடுமுறை காலமாகும். ஜல்லிக்கட்டு, காணும் பொங்கல் என்று களைகட்டும் இடங்களுக்கு பயணிக்கலாம்.

 மார்ச் மாதம்

 மார்ச் மாதம் பிப்ரவரி மாதம் மகாசிவராத்திரி பண்டிகை வருகிறது. அது தமிழகத்தில் விடுமுறை வேண்டும் என்பவர்கள் எடுத்துக்கொள்ளலாம். மார்ச் மாதம் 29.3.2018 மகாவீர் ஜெயந்தி வியாழக்கிழமை 30.3.2018 புனித வெள்ளி, சனி, ஞாயிறு என நான்கு நாட்கள் விடுமுறை வருகிறது

. ரம்ஜான், மொகரம் ரம்ஜான், மொகரம் 15.6.2018 ரம்ஜான் பண்டிகை வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்தோடு சனி, ஞாயிறு விடுமுறை நாளாகும். அதே போல 21.9.2018 மொகரம் பண்டிகை வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. அதோடு வெள்ளி சனி, ஞாயிறு என விடுமுறையை கழிக்க திட்டம் போடலாம்.

 பண்டிகை நாட்கள்
 பண்டிகை நாட்கள் 18.10.2018 ஆயுத பூஜை வியாழக்கிழமை தொடங்கி 19.10.2018 விஜயதசமி வெள்ளிக்கிழமை விடுமுறை நாளாகும் தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறை கொண்டாட்டமாக வருகிறது. அதே போல 6.11.2018 தீபாவளி திருநாள் செவ்வாய்க்கிழமை வருகிறது. சனி, ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் என 5 நாட்கள் விடுமுறை நாட்களாகிவிடும். இப்போதே திட்டமிடுங்கள்,விமானம், ரயில், ஹோட்டல்களில் புக் பண்ணுங்க.

Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/long-weekends-india-2018-305724.htmlarticlecontent-pf282996-305724.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=104.121.156.45&utm_campaign=client-rss
புத்தாண்டு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை - செங்கல்பட்டு இடையே சிறப்பு ரயில்: ரயில்வே

 
சென்னை: புத்தாண்டு, தைப்பூசம் மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை - செங்கல்பட்டு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி டிச.30, ஜன.2, 6, 16 ஆகிய தேதிகளில் மாலை 5.20 மணிக்கு செங்கல்பட்டு - மதுரை சிறப்பு கட்டண சிறப்பு ரயில் இயக்கப்படும் என்றும் மறுமார்க்கத்தில் மதுரை - செங்கல்பட்டு சிறப்பு கட்டண சிறப்பு ரயில், டிச.29, ஜன.1, 5, 15 ஆகிய தேதிகளில் மாலை 3.55 மணிக்கு இயக்கப்படும் என்றும் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயில் தஞ்சை - கடலூர் மார்க்கத்தில் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NEWS TODAY 28.01.2026