Thursday, December 21, 2017

பெரியார் பல்கலை.யில் கோப்புகள் மாயம்: போலீஸார் விசாரணை தொடக்கம்

By DIN  |   Published on : 21st December 2017 01:22 AM  |

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் 2012 முதல் 2015 வரையிலான காலகட்டங்களில் நடைபெற்ற பணி நியமனங்கள் குறித்த கோப்புகள் காணாமல் போனது தொடர்பாக, சேலம் மாநகர குற்றப் பிரிவு போலீஸார் முதல்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
ஈரோடு மாவட்டம், பெருந்துறையை அடுத்த தோப்புபாளையத்தைச் சேர்ந்தவர் அங்கமுத்து (57). இவர் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் உடற்கல்வி இயக்குநராகப் பொறுப்பு வகித்து வந்தார். இவர் கடந்த 2012 முதல் 2015 வரை, முன்னாள் துணைவேந்தர்கள் முத்துச்செழியன், சுவாமிநாதன் ஆகியோரது பதவிக் காலத்தில் பதிவாளராகப் பதவி வகித்து வந்தார். 2015 -இல் பதிவாளர் பொறுப்பில் இருந்து விலகிய அங்கமுத்து, தொடர்ந்து பல்கலைக்கழகத்தின் உடற்கல்வி இயக்குநராகப் பணிபுரிந்து வந்தார்.
இதனிடையே, 2012 முதல் 2015 வரையிலான காலகட்டங்களில் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாதோர் பணி நியமனம் தொடர்பான ஆவணங்கள் காணாமல் போனது. இதுதொடர்பாக அந்தக் காலகட்டத்தில் பதிவாளராகப் பதவி வகித்த அங்கமுத்து மீது புகார் எழுந்து, பல்வேறு கட்ட விசாரணையும் நடைபெற்றது.

இந்தநிலையில், பெரியார் பல்கலைக்கழகப் பதிவாளர் எம்.மணிவண்ணன், கடந்த டிசம்பர் 16 -ஆம் தேதி, சேலம் மாநகர காவல் ஆணையர் சங்கரிடம் புகார் ஒன்றை அளித்தார்.
அதில், 2012 முதல் 2015 வரையிலான காலகட்டங்களில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாதோர் குறித்த கோப்புகள், ஆவணங்கள் காணாமல்போனது தொடர்பாக அப்போதைய பதிவாளராக இருந்த அங்கமுத்து உள்ளிட்ட நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டது. புகாரை பெற்றுக் கொண்ட மாநகர காவல் ஆணையர் சங்கர், இந்தப் புகாரை மாநகரக் குற்றப் பிரிவு போலீஸில் நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தார். அதன்பேரில், அங்கமுத்து உள்ளிட்ட பல்கலைக்கழக நிர்வாகத்தினர் மீது திங்கள்கிழமை (டிச.18) வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
தற்கொலை: இந்நிலையில், அங்கமுத்து மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட அதே நாளில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊரான தோப்புபாளையத்தில் விஷமருந்தி அவர் தற்கொலை செய்து கொண்டார்.

விசாரணை தொடக்கம்: இதனிடையே, பணிநியமனக் கோப்புகள் காணாமல்போனது தொடர்பான விசாரணையை மாநகரக் குற்றப் பிரிவு போலீஸார் தொடங்கியுள்ளனர். கடந்த 2012 முதல் 2015 வரையில், பதிவாளர் கையொப்பமிட்ட பணி நியமனக் கோப்புகள், ஆவணங்கள் மற்றும் ஆவணப் பதிவேடு விவரங்கள் தொடர்புடைய நிர்வாகப் பிரிவு அலுவலர்கள், பணியில் இருந்தவர்கள் குறித்த விவரங்களைத் தரும்படி பல்கலைக்கழகப் பதிவாளர் எம்.மணிவண்ணனிடம் போலீஸார் கேட்டுள்ளனர்.

தற்போது காலியாக உள்ள பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தரை தேர்ந்தெடுப்பதற்கு தேடல் குழுவால் தெரிவு செய்யப்பட்ட 10 பேரில், அங்கமுத்துவின் பெயரும் பரிசீலனைப் பட்டியலில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஒட்டன்சத்திரத்தில் தக்காளி கிலோ ரூ.4

Added : டிச 21, 2017 04:29

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் பகுதியில் விளைச்சல் அதிகரித்ததால், தக்காளி விலை வீழ்ச்சியடைந்து கிலோ ரூ.4க்கு விற்கப்படுகிறது. ஒட்டன்சத்திரம், அம்பிளிக்கை, கள்ளிமந்தயம், பாலப்பன்பட்டி, நால்ரோடு உட்பட பல இடங்களில் ஒட்டுரக தக்காளி அதிகமாக விளைவிக்கப்படுகிறது. விளைந்த தக்காளிகள் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டிற்கு கொண்டு வரப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி ரூ.20 க்குவிற்கப்பட்டது. விளைச்சல் அதிகரித்துள்ளதால், விலை சரிந்தபடி உள்ளது. நேற்று ஒருகிலோ தக்காளி ரூ.4 க்கு விற்றது.

இதனால், விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க இப்பகுதியில் ஒரு தக்காளி சாறு பிழியும் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து
உள்ளனர்.
டப்...டப்...டப்... சத்தத்துடன் புல்லட் ஓட்டினால் ரூ.1500 'டப்பு' அழணும்! : ஒலி மாசு ஏற்படுத்துவதால் நடவடிக்கை

Added : டிச 21, 2017 04:37

மதுரை: இன்று புல்லட் ஓட்டுவது 'பேஷனாகி' விட்டது. 1.50 லட்சம் ரூபாய்க்கு வாங்கி, 30 ஆயிரம் ரூபாய் வரை செலவழித்து 'புல்லட் வருகிறது' என சத்தத்தை கேட்டே ஒதுங்கும் வகையில், இனி 'டப்...டப்...டப்...' என 'பந்தாவாக' வந்தால் ஒலிமாசு ஏற்படுத்தியதாக போலீசாரிடம் 1500 ரூபாய் வரை அபராதம் அழ வேண்டும்.

கல்லுாரி மாணவர்கள், பைனான்ஸ் செய்பவர்கள் உள்ளிட்ட சிலர், புல்லட்டில் வலம் வருவதை பெருமையாக கருதுகின்றனர்.

ஷோரூமில் அனைத்து வரிகளும் சேர்த்து 1.50 லட்சம் ரூபாய்க்கு புல்லட்டை வாங்கினால், 'அதிக மைலேஜ்வேண்டும் என்றால் 'ஏர் பில்ட்டருடன் சைலன்சரை' 30 ஆயிரம் ரூபாய்க்கு மாற்றினால் போதும்' எனஷோரூம்காரர்களே மூளைச்சலவை செய்கின்றனர்.

'1.50 லட்சத்திற்கு வாங்கிட்டோம். கூடுதலாக 30 ஆயிரம் ரூபாய்தானே' என புல்லட் வாங்கும் மோகத்தில் 'டப்...டப்...' என ஓசை வரும் 'சைலன்சரை' மாற்ற சம்மதித்து விடுகிறார்கள். இப்படி தமிழகம் முழுவதும் பலர் அதிக சத்தத்துடன் புல்லட்டில் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.

சமீபகாலமாக உச்சநீதிமன்றம் உத்தரவுபடி, சிக்னல் விழுந்த பிறகும் ரோட்டை கடப்பது உள்ளிட்ட 6 போக்குவரத்து விதிகளை மீறினால், கட்டாயம் அபராதம் விதித்து, ஒரிஜினல் டிரைவிங் லைசென்சை பறிமுதல் செய்ய வேண்டும் என போக்குவரத்து போலீசாருக்கு அதிகாரிகள்

அறிவுறுத்தி உள்ளனர். இதன்படி, தமிழகம் முழுவதும் மாதந்தோறும் ஆயிரக்கணக்கானோரின் டிரைவிங் லைசென்ஸ் பறிமுதல் செய்யப்பட்டு, ஆர்.டி.ஓ.,வுக்கு அனுப்பப்படுகின்றன.

அதேசமயம் இந்த 6 விதிமீறல்களுடன் ஒலிமாசு ஏற்படுத்தும் புல்லட் மற்றும் மோட்டார்
சைக்கிள் ஓட்டுனர்களிடம் அபராதம் வசூலிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு டிரைவிங் லைசென்ஸ் பறிமுதல் செய்யப்படுவதில்லை.

போலீசார் கூறியதாவது: ஒலிமாசு ஏற்படுத்தும் வகையில் ஷோரூமிலேயே 'சைலன்சரை' மாற்றுகின்றனர். பின்னர் புல்லட்டை ஆர்.டி.ஓ.,வுக்கு கொண்டு செல்லும்போது, அவர்களும் அதை ஆமோதித்து பதிவெண் வழங்குகின்றனர். நாங்கள் ஒலிமாசு ஏற்படுத்துவதாக அபராதம் வசூலிக்கும்போது,'ஆர்.டி.ஓ., அலுவலகத்திலேயே அதை ஏற்றுக்கொண்டு பதிவெண் வழங்கும்போது, அபராதம் வசூலிப்பது எந்த வகையில் நியாயம்' என வாகன உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். தற்போது இந்த ஒலிமாசுக்கு 1000 ரூபாயும், வாகன கட்டமைப்பை மாற்றியதற்காக 500 ரூபாயும் அபராதம் வசூலிக்கிறோம். சில சமயம் இரண்டும் சேர்த்தும் 1500 ரூபாய் அபராதம் விதிக்கிறோம். இப்பிரச்னை குறித்து ஆர்.டி.ஓ.,க்களுக்கு கடிதம் எழுத உள்ளோம், என்றனர்.
அருப்புக்கோட்டையில் மேலும் ஒரு கல்லூரிக்கு 'சீல்'

Added : டிச 21, 2017 04:30

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில், அரசு அனுமதி பெறாத மேலும் ஒரு
பாரா மெடிக்கல் கல்லுாரிக்கு 'சீல்' வைக்கப்பட்டுள்ளது.அரசு அனுமதி பெறாமல் நடத்தப்படும் பாரா மெடிக்கல் கல்லுாரிகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க, மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது.

இதையடுத்து, அருப்புக்கோட்டையில் 2 கல்லுாரிகளுக்கு நேற்று முன்தினம் சீல் வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து அங்குள்ள வெற்றி வேலன் பாரா மெடிக்கல் கல்லுாரிக்கும் சீல்
வைக்கப்பட்டுள்ளது.சுகாதார பணிகள் இணை இயக்குனர் மனோகரன் கூறுகையில், ''அருப்புக்கோட்டையில் 3 கல்லுாரிகளுக்கு 'சீல்' வைத்துள்ளோம். அங்கு படித்த மாணவர்கள்
தங்கள் சான்றிதழ்களை, உரிய ஆதாரங்களை காண்பித்து விருதுநகரில் உள்ள மருத்துவத்துறை இணை இயக்குனர் அலுவலகத்தில் பெற்று கொள்ளலாம்.

அரசு அனுமதியில்லாமல் மாவட்டத்தில் இயங்கும் ேஹாமியோபதி மற்றும் பாரா மெடிக்கல் கல்லுாரிகளில் தொடர் ஆய்வு செய்து வருகிறோம் ,'' என்றார்.
தை அமாவாசைக்கு காசிக்கு சிறப்பு ரயில்

Added : டிச 21, 2017 00:30

சென்னை: இந்தியன் ரயில்வே உணவு சுற்றுலா கழகமான, ஐ.ஆர்.சி.டி.சி., தை அமாவாசையையொட்டி, காசிக்கு சிறப்பு ரயிலை இயக்குகிறது. இந்த ரயில், மதுரையில் இருந்து, ஜன., 12ல் புறப்பட்டு, திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி மற்றும் சென்னை சென்ட்ரல் வழியாக செல்கிறது. இப்பயணத்தில், ஒடிசா மாநிலம், பூரி ஜெகநாதர் கோவில், கோனார்க் சூரிய நாராயணர் கோவில், புவனேஸ்வர் லிங்கராஜா கோவில்களுக்கு செல்லலாம். பீஹாரின், கயாவுக்கும், உ.பி., மாநிலம், காசிக்கும் செல்லலாம்.
கங்கா ஸ்நானம் செய்வதுடன், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, அன்னபூரணி கோவில்களுக்கும் சென்று வரலாம். அலகாபாத் திரிவேணி சங்கமத்தில் நீராடலாம். ஒன்பது நாட்கள் சுற்றுலாவுக்கு, ஒருவருக்கு, 8,505 ரூபாய் கட்டணம். மேலும் தகவல்களுக்கு, சென்னை சென்ட்ரல், ரயில் நிலையத்தில் உள்ள, ஐ.ஆர்.சி.டி.சி., அலுவலகத்தை, 90031 40681 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
சேலம் எக்ஸ்பிரஸ் ஆத்தூரில் தாமதமாகும்

Added : டிச 21, 2017 00:29

சென்னை: விருத்தாசலம் - சேலம் இடையேயான ரயில் பாதையில், ஆத்துார் அருகே, சுரங்கப்பாதை பணி நடப்பதால், சென்னை எழும்பூர் - சேலம் எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்தில், 30 நிமிடங்கள் தாமதம் ஏற்படும். சென்னை எழும்பூரில் இருந்து, இன்று இரவு, 11:00 மணிக்கு இயக்கப்படும் சேலம் எக்ஸ்பிரஸ், வழியில் உள்ள, ஆத்துார் அருகே சுரங்கப்பாதை பணி நடப்பதால், ஆத்துாரில் தாமதமாகும். இதனால், 30 நிமிடங்கள் தாமதமாக, சேலம் சென்றடையும் என, தெற்கு ரயில்வே தெரிவித்து உள்ளது.
ரேஷன் கடை வேலைக்கு இன்ஜினியர்கள் விண்ணப்பம்

Added : டிச 21, 2017 00:20

ரேஷன் கடை விற்பனையாளர் பணிக்கு, இன்ஜினியரிங் பட்டதாரிகளும் விண்ணப்பித்து உள்ளனர். தமிழக ரேஷன் கடைகளை, கூட்டுறவு சங்கங்களும், நுகர்பொருள் வாணிப கழகமும் நடத்துகின்றன. தற்போது, கூட்டுறவு சங்கங்கள் நடத்தும், 32 ஆயிரத்து, 500 ரேஷன் கடைகளில், விற்பனையாளர், எடையாளர் பணிக்கு, 4,000 ஊழியர்களை தேர்வு செய்யும் பணி துவங்கிஉள்ளது. அதற்கான விண்ணப்பம் அளித்தல், நேர்காணல் போன்ற பணிகள், மாவட்ட கூட்டுறவு சங்க இணை பதிவாளர் அலுவலகத்தில் நடக்கின்றன. ரேஷன் ஊழியருக்கு, பணியில் சேர்ந்தநாளில் இருந்து, ஓராண்டு வரை தொகுப்பு ஊதியமாக, மாதம், 5,000 ரூபாய் வழங்கப்பட உள்ளது. ஓராண்டிற்கு பின், அதிகபட்சமாக, 12 ஆயிரம் ரூபாயும், அதனுடன் ஆண்டுக்கு, 2.5 சதவீதம் ஊதிய உயர்வும் அளிக்கப்பட இருக்கிறது.

இது குறித்து, கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ரேஷன் கடை விற்பனையாளர் பதவிக்கு, பிளஸ் 2 தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வி தகுதி இருந்தால் போதும். அவருக்கு, அரசு ஊழியருக்கு இணையான சம்பளம் கிடையாது. ஆனால், தற்போது, பல மாவட்டங்களில், ரேஷன் வேலைக்கு வந்துள்ள விண்ணப்பங்களில், இன்ஜினியரிங் பட்டதாரிகளும் விண்ணப்பித்து உள்ளதாக, மாவட்ட இணை பதிவாளர் அலுவலகங்களில் இருந்து, தகவல் கிடைத்துஉள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

NEWS TODAY 28.01.2026